இணக்கக் கொள் முதல்.
தூறலைத் துடைத்துவிட்டு
தூவானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்
சமீபித்திருந்த வானம்
சட்டையாக
அணியச் சொன்னது
சாகா வரம் பெற.
****
மசிவின் இணைவுகள்.
காலச்சக்கரத்திடம் ஒப்புக்கொடுத்தபோது வாகாக மசிய வைத்துக்கொண்டது தூசுகளற்று
இணக்கமாக.
துப்பிய சக்கைகள்தான் தான்
வாழ்வதாகவும்
தாழ்வதாகவும் பிதற்றுகிறது அறியாக்கூத்தின் மெய்யில்.
***
இயலாமையின் தவிப்பு.
கண்டுகொண்டதான
யாதொரு சமிக்ஞையும்
உன்னிடம் விழையாதபொழுது
இந்த வாழ்க்கை
அர்த்தமற்றதாக
கழிகிறது
எப்பொழுதும்
ரணம் கூட்டி.
எனைத் தாண்டிய
ஏதாவதொன்றை
பார்ப்பதான பாவனையாவது செய்துவிடு
பரிதவிப்படங்கிய
இதயத்தோடு
எனக்கானதென
எடுத்து
எஞ்சிய நாளை
அர்த்தமாக்கி
கழித்தடங்கிவிடுகிறேன்
பொய்யின் மெய்யில்.
***
ஈரத்தின் குளிர்மை.
எங்கோ சொட்டிய நேசத்தை
எதன் பொருட்டாகவோ
சுவைத்துப் பார்த்தேன்.
எனக்குள் பரவியதில்
நான் வசமிழந்தேன்.
திரும்பிய திசையெல்லாம் வேறாகத் தெரிந்தது
பொங்கும் கருணையாக
அந்த
சுவை இருக்கும்வரை.
***
களைப்பின் முடங்காமை.
வறளும்
நெடும் பயணத்தில்
புதை மணலுக்குள்
பொங்குகிறது
அனல்.
மீட்சியின்
மிடறு நீருக்கு
உமிழ் சுரப்பிகள்
உதவவில்லை.
நிதானித்து
வழியும்
கண்ணீர்
ஏனோ கறிக்கவில்லை
வினோதமாக.
விடாது
மொண்டு குடிக்கிறேன்
வாழ்வை
மீண்டுவிடும்
பிரயத்தனத்தில்
விடாது முயன்று.
***
பருகலின் அழைப்பு.
நீங்கள்
எறிந்தக் கற்களைக் கொண்டுதான்
தங்குமிடமாக்கினேன்.
வியாபித்திருக்கும்
வாஞ்சையில்
நிரம்பி
வழிகிறது
நேசம்
கதவுகளற்ற
காத்திருப்பாக.
இறுதி மூச்சிற்கிடையில்
ஏதொன்றுமில்லை
எனக்குள்
கையளிக்கும்
பூரித்தலைத் தவிர.
***
இடறிவிழும் இக்கணங்கள்.
முகமறியாத அவதிக்குள்
நிரம்பி வழிகிறது
சொற்கள்.
எதை எடுத்தாலும்
காலத்தை தான்
அது
காவு வாங்குகிறது.
என்ன செய்ய.
பானை உடைத்து
பறந்துவிடும்
ஆசையில்
சாவியைக் கேட்கிறேன்
சற்றேப் பதட்டத்துடன்.
பூட்டே
இல்லையென
புலம்ப வைக்கிறது
தருணம்
களைப் பாக்கி.
***

