பற்றிய காதல்.

சிறகசைத்து

சென்றுவிட்ட பின்பும்

சலனமேகி கிடக்கிறது

மௌனம் தத்தளித்து

தடுமாறி.

நிகர் செய்ய முடியாது

இங்கெவையும்

அரிதெனவான

உன்

தரிசணத்தின் ஆயாசத்தை.

தவப் பாடுகளின்

ஆற்றாமையில்

விழித்திருக்கிறது

வேண்டுதலாகவே

உயிர்த்து

தருணங்களை வெல்ல.

சொல்லொன்றை

உதிர்க்காமல்

சுடரேற்றுமுன்

பார்வையொன்று போதும்

இப்பிறப்பு

பாவ விமோசனமடைய.

நீ பார்க்கும்

திசையில்

நின்றுவிட

நினைக்கின்றேன்.

பார்வையற்ற

பைத்தியமாகவே

உன்னைச் சுற்றி.

நீ இழுக்கும்

சுவாசத்தில்

நெடியடித்ததொரு

நோவினையைக் கண்டால்

நிச்சயமாக

இங்கெனது

மூச்சு முராரி இசைப்பதாக

நீ

நினைக்க.

என்னைத் தெரியவேண்டுமே

உனக்கு.

இப்பொழுது

நான்

என்ன செய்ய.

***

சம வெளியின் பள்ளத்தாக்குகள்.

இங்கு நாங்கள்

வாழ்ந்தோமென்பதற்கான

எவ்வித அடையாளங்களும் இல்லை

சமன் செய்யப்பட்ட

இவ்விடத்தில்.

மூன்று

கூரைவீடுகளில்

ஒன்று மாட்டுக்கொட்டகை.

பெரு வாசல் ஒதுங்கியதொரு

மாமரம்.

பின்னால்

கேணி.

அதனையடுத்து

மாமரங்கள்

பலா மரங்கள்

நார்த்த மரம்

வேலிகளைச் சுற்றியிருந்த

மலைப்பூவரசும்

கிளேரியா மரங்களும்

அரிதென

இருக்கும்

அந்த மருதாணி செடிகள்

யாவும்

அழிக்கப்பட்டு.

நேர்த்தியாக

கம்பி வேலியிடப்பட்டிருந்தது

வண்ணம் தீட்டி அழகாக.

சினிமாவைப் போல

காட்சியாக மனதில் தோன்றி மறைந்தது

உயிர்ப்பான வாழ்க்கையொன்று

பெரு மூச்சினூடாக

அயர்ச்சியில்.

நினைவடுக்குகள்

சரியத்தொடங்கியது

ஒவ்வொரு இடமும்

ஒன்றை

நினைவுபடுத்தி.

யாவையும்

புதைத்து

இப்பெருநகரத்திற்குள்

நுழையும் பொழுது

தூங்கும் மகளின்

கையிலிருந்த

சிதிலமான

தாயக்கட்டை

துளிர்க்கவிட்டது

கண்ணீரை

துயரமாக.

அடம்பிடித்து

அக்கா

ஆசாரியிடம்

தாயக்கட்டையின் உச்சியில்

என் பெயரின் முதல் எழுத்தை எழுதச்சொன்னது

ஒட்டி இருந்த

மண்ணை

உரசி எடுத்ததும்

உடல் குழுங்கியது

யாருமறியாத

சத்தமற்ற கேவலாக.

வீட்டார்களின் கைரேகைகள் சுமந்த கட்டையை காத்து வைத்து

கையளித்த

பூமியிடம்

கேட்கவேண்டும்

மூடி வைத்திருக்கும் முன்னோர்களின் கதையை.

பணம் தின்னும்

இவ்வாழ்க்கையை விட்டு

ஒதுங்கி.

***

நிகழ்தகவு நிசம்.

ஒட்டி

உறவாடி

பேசி மகிழும்

இளைஞனையும்

இளைஞியையும்

பற்றி

யாதொரு

பொல்லாப்பும் இல்லையெனக்கு

பிறர்

பேச்சாகாமலிருக்க

கவலை கொள்கிறது

தகப்பனான மனம்

தயங்கி.

***

நிம்மதிகள் தராத நேசித்தல்.

பொக்கிசமாக

காக்கிறேன்

எனக்கும் மனைவிக்குமான

உலகத்தில்

அம்மாவை பவித்திரம்

மாறாது.

மாறாது

வியாபித்தல்

இருக்கிறது

அம்மாவுக்கும்

எனக்குமான

உலகில்

மனைவியுடனான

அன்பின் பிரவாகம்.

கேட்கலாமென

நினைக்கின்றேன்

நேரம் கூடிடும்

தருணத்தில்

என்னை

இருவரும்

எப்படி வைத்திருக்கிறீர்கள்

பெண்களேயென.

ரவி அல்லது

பட்டுக்கோட்டையைச் சார்ந்த ரவிச்சந்திரன் பி.இ., எம்.பி.ஏ ஆகிய கல்வி பட்டங்கள் பெற்றவர். கம்ப்யூட்டர், கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருபவர். ரவி அல்லது எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *