வானப்படுதல்.

.

பீராய்ந்தெடுத்த

சொற்களிலொன்று

வரவழைத்த

கண்ணீர்

விட்டெறிய மறந்துபோன

குப்பைக் கூடையின்

வீச்சமாக

முகம் சுளிக்க வைக்கிறது

கடந்த நாட்களின்

காட்சிகளை.

 ,

சிறை தப்பிய

வார்த்தைகளை

சென்று பிடிக்க

வலுவில்லா

அவல

தொண தொணப்பின்

புற ஏற்பாடுகளில்

விழ வேண்டியதாகிறது

இயலாமையின் மௌனத்தில்.

,

சிக்கிடாத வானம்

சிறகுகளை

பலி கேட்கிறது

வட்டமிடும்

வாழ்க்கையில்

வல்லுருவால்

குதறிய

நம்பிக்கையில்

கசியும்

ரணமாக.

,

அவ்வப்பொழுது

சூழும்

ஆறுதல் மேகங்கள்

தரும்

நீர்ம நிழலின்

ஆசுவாசம்

நிம்மதியைத்

தருகிறது.

இதோ

இருக்கிறது

யாவுமென

எம்பிவிட்டு

எப்பொழுதும்

இயல் தழுவலில்

உற்சாகித்து.

*****

புலரும்

நடுச்சாமக் கசிவுகள்.

பிரிதல் வாதையின்

கட்டுண்டத் தவிப்பு

அருவியாக வழிகிறது.

கன்னத்தில்

நீரோடையாக

நெஞ்சினில்

கொட்டிக்

குழி பறித்து.

,

துடைத்தெடுத்த

கைத்துணிதான்

துணையாக

இருக்கிறது

ஈரமெய்கிய

வாசனையின்

குளிர்மை

சொத சொதப்பில்

துடைக்க முடியாத

துயரமாக

முகர வைக்கும்

வெள்ளப் போக்கில்

கிட்டிய

விருப்பக் குடிநீராக.

,

அமர்தலும்

நிற்றலும்

ஆயாசம் கூட்டிய

படுத்தலில்

தலையணை

நுழைந்த

நேசம்

முதுகு நனைக்கிறது

கதகதப்பு மாறாத

கண்ணீர் ஆறாக

படுக்கவிடாமல்

பார்க்க வேண்டுமென்ற

பாரமேற்றிப் படுத்தி.

வினோத மாயமாக

விழி திறக்கும்பொழுது

உன் மடியில்

விழுந்து கிடக்கும்

ஏக்கத்தில்

நகர்கிறது

இரவு

நடு சாமமென

பித்து நிலையில்

பேரவதியின்

பிராணவஸ்தையென

துடிக்க விட்டு.

,

துயரத்தை

சொல்லிடாத

சொற்களின் சோரமென்னை

மோசம் செய்கிறது

மோனத்தில் தள்ளி

அந்தகரணம்

யாவும்

நீயாகிய கேவலில்

வலி கூடி.

,

அருகாமை

வாய்ப்பதன்

பிரிதலுக்கு

பெருங்காரணமொன்றுமில்லை

இவர்களிடம்

இரவு பகலென்ற

பேதமையைத் தவிர.

***

இறுதிச் சுற்றின் முதற்பொருள்.

நேரம் காலம்

தெரியாமல்

உதிர நினைக்கும்

இந்த வார்த்தைகள்

அற்ப சுகத்திற்கானது.

,

மென்று கொண்டே

நடக்கும்

எனக்கு

உங்களைப்போல

நிறைவேறாத

ஆசைகளும்

ஏக்கங்களும்

கனவுகளும்

கலிவிரக்கங்களும் கூடியதாகவே

கழிகிறது

தருணங்கள்

யாவும்

எப்பொழுதும்.

,

வெள்ளிப் பனியில்

மேல் உலாவ

நேரம் பார்க்கும்

எச்சரிக்கை

கம்பிகள்

வெளுத்துவிட்டது

தலை

அயர்ச்சியில்

வெண்மையாக

எச்சரிக்கை மணியென.

,

இப்பொழுது

சொல்லுங்கள்

அற்ப சுகத்திற்கு

நேரம் காலம்

தெரியாமல்

உதிர நினைக்கும்

இவ்வார்த்தைகளை

தடுத்திடாமல்

என்ன செய்ய முடியும்

இச் சிறுவனால்

சோர்வடைவதான

தவிப்பின்

பெரும்பொழுதில் .

***

தழுவலின் பொருட்டான பிரயாசம்.

,

என்னை

எப்பொழுதும்

உங்களுக்கு

தெரிய

வாய்ப்பதில்லையென்பது

எனது

பொய்ப் பிரகடனம்தான்

இம் மெய்க்கூத்தின்

அணுக்கத்தில்.

,

சதா நேரமும்

உங்களோடு

பயணிப்பதில்

அலுப்பெனக்கு

வந்ததாக

தெரியவில்லை

முட்களின் நகர்வு

உங்களுடையதானதால்.

,

ஆழ் துயில்

பொழுதின்

திடுக்கிட்டெழும்

மிரட்சியில்

திசைகளற்றதாகவே

இருக்கின்றேன்

வெறுண்டோடாமல்.

,

அவ்வப்பொழுது

செய் நேர்த்தியின்

பிம்பம் பார்க்கும்

தருணங்களில்

தவறவிடும்

உங்களை

தழுவி நிற்கின்றேன்

என்பதைவிட

தாகித்துக்கிடக்கின்றேன்

என்பதே

சரியானது

நம் இருப்பின்

இயல் கூடலுக்காக.

***

சாமானியக் கடத்தலின் சந்திரோதயம்.

இறுதி வாரத்தின்

சுமைகளுக்கு

ஈடில்லை

இங்கெதுவும்

மன்றாடும்

மனக் கிலேசத்தின்

சோர்விற்கு.

,

முகூர்த்த நாளற்ற

வாரத்தில்

முடியாமல்

படுத்துவிடக்கூடாதென்ற

கவலை

முட்டிக் கொண்டே இருக்கும்

கழிக்க முடியாத

கழிவு நீராக

மூச்சு முட்டி.

,

வேலையென

வருவதாக

சொன்ன

வெளியூர் உறவினருக்கு

நோகாத

பதிலொன்று

தயாராகவே

இருக்கும்

நம்பி வருந்துமாறு.

,

அலைபேசியில்

பெயர் தேடி

கடன் கேட்கும்

அவலமானதைவிட

ஏதுமில்லை

நம்ப வைக்கும்

பொய்க்காரணத்தின்

போராட்டத்திற்கு முன்னாள்.

,

தள்ளாடித்

தத்தளிக்கும்

தனியார்

ஊழியருக்கு

முதலாளி

முதல் தேதியில்

ஊருக்குச் செல்லாமல்

இருக்கவேண்டும்

யாவற்றையும்

கடந்தாலும்

சம்பளம் பெற்று

ஆசுவாசம் கொள்ள.

***

நோதலின் பூத்தல் வாசனை.

எதிர்படும்

சிலரிடம்

பேசுகிறேன்.

சிலரிடம்

தலையை ஆட்டுகிறேன்.

அறி முகமற்ற

சிலரை

சலனமற்று

கடந்துவிடுகிறேன்

அவர்களுக்கு

ஏதுவாக.

,

திரும்பி

வீடு வரும்பொழுது

அறிமுகமற்ற

அதே

நபர்களை

ஆச்சரியமென வாய்த்த

கடக்கும்

சந்தர்ப்பத்தில்

சிரிக்கலாமென

நினைக்கின்றேன்

தெரிந்த முகமென

ஆனதால்

அவர்கள்

பாறையாகி

பறந்தாலும்.

,

ஒரு முறை

பார்த்திருந்தால்

சிரிக்கூடாதென

இ. பி. கோவின்

எந்தப் பிரிவிலிருந்து

கற்றாய் நண்ப.

மலராத

இப் பூத்தலின்

தருணத்தை

வாடலாக்கி

கருகவிட.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *