இரா.சேனா 

அன்று இரவு பத்து மணி சுமாருக்கு ராசாத்தி ஒரு தலையாக தெருவில் இறங்கி நடக்க தொடங்கினாள். ஐந்து, ஆறு உருப்படி துணிமணிகளை ஒரு மஞ்சள் பையில் போட்டு எடுத்து வந்திருந்தாள். தினமும் போய் வரும் வீதிதான் ஆனால் இத்தனை இருட்டில் அவுதி அவுதியாக அவள் சென்றது கிடையாது. செருப்பு அணிந்த கால்களை நன்றாக நிலத்தில் ஊணி  நடந்தாள், அது அவள் எடுத்திருந்த தீர்க்கமான முடிவை போல அழுத்தம் நிறைந்து இருந்தது. வீதியில் இருந்த வீடுகளில் பெரும்பாலும் விளக்குகள் அணைக்கப்பட்டு வாச கதவுகள் உள் தாழிடப்பட்டு இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் திண்ணையில் வயசாளிகள் அமர்ந்து இருந்தாலும் அப்போதைக்கு யார் அழைத்தாலும் பேச்சு கொடுக்கும் மன நிலையில் அவள் இல்லை.

செங்காட்டூரின் கடைசி நடை பஸ் நின்று இருந்தது. இனி அதிகாலையில் தான் பஸ் ஊருக்குள் வரும். கடைசி நிறுத்தம் இதுதான், பிறகு பெரும்பள்ளம் வந்துவிடும் அதை நிரவி விட்டு ஒரு பாலம் கட்டி தந்து இருந்தால் பக்கத்து டவுனுக்கு போகவர சுலபமாக இருந்து இருக்கும். பஸ்ஸில் வந்தவர்களை இறக்கி விட்டுவிட்டு  சாவகாசமாக டிரைவர், கண்டக்டர் இருவரும் புளியமரத்தடியின் கீழ் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு பஸ்ஸில் இருவரும் ஏறிக் கொண்டார்கள். இப்படி ஒரு நாளும் கடைசி நடையில் எந்த பெண்ணும் இந்த ஊரில் தனியாக ஏறியது இல்லையே என்ற குழப்பத்துடன் இருந்த கண்டக்டர் மெல்ல  ராசாத்தியின் அருகில் வந்து

“எங்கம்மா போகனும்…?

“கோயந்தூர்”

“எங்க இன்னேரத்திக்கி? கூட ஆரும் வர்லியா மா?“

“இல்ல” என்று வெடுக்கென பதில் வந்ததால் மேற்கொண்டு ஏதும் பேசவேண்டாம் என்று முடிவெடுத்து டிக்கெட் சீட்டை கொடுத்து விட்டு நகர்ந்து சென்றார். பின்புறம் கடைசி இருக்கையில் ஓர் ஆள் தலைத்துண்டில் முக்காடு போட்டு முகத்தையும் மூடி அமர்ந்து இருந்தான். தனது  கோயமுத்தூர் டிக்கெட் சீட்டை வாங்கி கையில் நாம்பிப் பிடித்து  இருந்தான்.

ராசாத்தியின் கணவன் பெயர் செல்லப்பன் சிறுவயதிலே தனது தந்தையை இழந்தவன், தனது ஆத்தாகாரி ஆடு, மாடு மேய்த்து தான் அவனை வளர்த்து ஆளாக்கி விட்டாள். செல்லப்பன் அருகில் இருக்கும் அரங்கசாமி மில்லில் கடந்த பதினைந்து வருடங்களாக வேலை செய்கிறான். மூன்று ஷிப்ட்கள் ஓட்டம் இருக்கும். சாரை சாரையாக தொழிலாளர்கள் போய் வந்து கொண்டு இருப்பார்கள். மில் தொழிலாளர்கள் மத்தியில் அவனுக்கு தனி மரியாதை உண்டு மில்  யூனியனில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் நேரம் காலம் பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்ய முன்னே போய் நிற்பான். சில வருடங்களுக்கு முன்பு தான் செல்லப்பனுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த  உறவுக்கார பெண்ணான ராசாத்தியை கலியாணம் செய்து வைத்தார்கள். அந்த நாளே அவனது ஆத்தாகாரி தனது ராத்திரி கிடக்கையை ஆட்டுப்பட்டிக்கு மாற்றிக் கொண்டாள்.  அடுத்த சில வாரங்களுக்கு பிறகு ஒரு ராத்திரி நேரம் ராசாத்தி சோறு ஆக்கி கொடுக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால், பொறுத்து பொறுத்து பார்த்து பசி தாங்காமல் மருமகளை வார்த்தைகளால் “புடி” “புடி” என்று பிடித்துவிட்டாள்.

ராசாத்தி அன்றைக்கு இரவே செல்லப்பனிடம் குசலம் வைத்து விட்டாள். அவனும் ஆத்தாகாரியிடம் ஏனென்று கேட்க போக முடிவில் ஆத்தாள் வேகமாக வீட்டுக்குள் சென்று சில பண்டபாத்திரங்களை எடுத்து வந்து ஆட்டுச்சாளைக்குள் வைத்து இரண்டு கற்கள் கூட்டி சோறு ஆக்கிக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

செல்லப்பனுக்கு ஊர் நியாயங்கள் கேட்க போக வர இருப்பது தான் வாழ்க்கை என்று நினைத்தானோ தெரியவில்லை. நல்ல முறையில் மில் சம்பளம் வந்துவிடுகிறது. அதனால்   ராசாத்தியை கூலி வேலைக்கு கூட எங்கேயும் அனுப்ப  விரும்பவில்லை. தனது ஆத்தாகாரியை குறை சொன்னால் மட்டும் தாங்கிக்கொள்ள மாட்டான். பல்லை வெறு வெறு என்று கடித்துக் கொண்டு கோவமாக போய் கை ஓங்கி விடுவான்.

நல்ல கனமான  சைக்கிள் கேரியரில் ரீப்பர் கட்டைகளை குறுக்கும் நெடுக்குமாக அடித்து அதனை மரப் பொட்டி போல செய்து அதனுள் வீட்டுச் சமையலுக்கு தேவைப்படும் சிலுவர் பாத்திரங்களான வட்டல்கள், தட்டுகள், கரண்டிகள், தம்பளர்கள், அடுக்கு போசிகள், தீர்த்த குடங்கள் என அனைத்தையும் குவித்து வைத்து ஊர் ஊராக போய் வியாபாரம் செய்யும் பாத்திரக்காரன் ஒருவன் இருந்தான்.

நன்றாக தலை கிராப்பு வெட்டி முழுச்சட்டை, முழுகால் பேண்ட், கழுத்தில் வெயிலுக்கு இதமாக  கர்சிப் கட்டு எப்போதும் இருக்கும். அவன் நல்ல பேச்சு சாமர்த்தியக்காரன். கொடுக்கல் வாங்கலில் சூட்டிகையாக இருந்தான். ஊருக்குள் பித்தளை, ஈய பாத்திரங்களின் உபயோகம் அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து கொண்டிருந்தது. எத்தனை தான் மண்ணும், புளியும் போட்டு வெளக்கி எடுத்து வைத்தாலும் பித்தளை பாத்திரங்கள் ஒரு நாள் தான் நருவசாக காட்சியளிக்கும். இரண்டு நாட்கள் காற்றுபட வைத்து இருந்தால் பாசி பிடித்து ஏடு ஏடாக அப்பி கிடக்கும்.

பாத்திரக்காரன் செங்காட்டூருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து கொண்டு இருந்தான். ஊர் பெண்கள் கண் முன்னே பளிச்சென்று இருக்கும் எவர்சிலுவர் பாத்திரங்களை ஆசை காட்டி “இந்தாப்பாருங்க” “அந்தா எடுங்க” என்று கூவி கூவி பாத்திரங்களை எடுத்து காட்டுவான்.

ராசாத்தி தனது சிலுவான காசுகளை சேகரித்து வாரம் ஒரு பொடி பாத்திரமாவதை வாங்குவதை வழக்கமாக்கி கொண்டாள்.

“இது எந்த புள்ளைக்கு சோறு ஊட்டனும்னு கிண்ண சாமானா வாங்கித் தள்ளுறா” என்றாள் செல்லப்பனின் சின்னாத்தா ஒருத்தி, ராசாத்திக்கு இன்னும் குழந்தை இல்லை என்பதை சொல்லி காட்டியதற்கு எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்துவிட்டால்.

“வரக்காட்ல விழுந்த விதை நாள் பட்டுக் கூட முளைக்கும்”, “பாற கல்லுல எதை வகுந்து போட்டாலும் அந்த கல்லு தான் திங்கும்” இந்த பேச்சு ஒரு முறை மாமியார்காரி ராசாத்தியை பார்த்து சொன்னது.

தனது கணவனிடம் தனக்கு தேவைப்படும் அன்பை கேட்டுப் பெறுவதில் இருக்கும்  நெடிய  பயணம் அவளை சோர்வடைய வைத்துவிட்டது. சிறிதும் கூட ஏற்றுக் கொள்ளப்படாத பாராட்டுகள் பெறாத, தனது அன்பை  கொட்டி வாழும் இந்த வாழ்க்கையில் தனக்கு திரும்ப கிடைத்த பேச்சுக்களை எண்ணி கண்ணீர் வடித்தாள். அவளை காலம் கடத்திக் கொண்டு போய்  மதிக்கப்படும் ஓர் இடத்திற்கு நகர்த்தி கொண்டு இருப்பதாக உணர்ந்தாள். இந்த வாழ்வில் அவள் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த தான் பேச நினைத்த ஒவ்வொரு வார்த்தையின் பாரம் தாங்காமல் வெம்பிக்கிடந்தாள்.  தான் பேச விரும்பிய பொழுதெல்லாம் கேட்பார் யாருமில்லாமல் தனித்து இருந்த  ஒவ்வொரு தருணங்களும் ரணங்களாக அவள் நெஞ்சில் தைத்துக் கிடந்தது.

பாத்திரக்காரன் பேச்சுகள் சாடை நிரம்பியதாக இருக்கும். அவனது ஊரை பற்றி பாத்திரம் விற்க போன இடத்தில  நடக்கும் களேபரங்கள், பெரும் பள்ளம் வழியாக சைக்கிளில் வந்து கொண்டு இருந்தபோது பேய்களின் நடமாட்டம், என என்ன பேசினாலும் அதில் சுவாரஸ்யமும் தமாசுகளும் நிரம்பி இருக்கும்.

ராசாத்தி வீட்டில் தனியாக இருக்கும் போது அவன் கொடுத்த ஒவ்வொரு பாத்திரமும் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டால். ஒரு நாள் பாத்திரக்காரன் ராசாத்தியை தனது வீடு இருக்கும் மலைக்கிராமத்திற்கு அழைத்து சென்று  காட்டுவதாக வாக்கு கொடுத்தான்.

“அதோ …அங்கிருக்கு” என்று ஊருக்கு வடக்கில் இருக்கும் மலைபிரதேசத்தை கை காட்டினான். அங்கே எப்போதும் குளிருமாம், அங்கிருந்து பார்த்தால் இந்த கிராமம் நன்றாக தெரியுமாம். ஆட்கள் எறும்பு போல ஊர்ந்து செய்வதை காணலாம் என்று கூறினான். ராசாத்திக்கும் அப்படித்தான் போனால் என்ன என்று எண்ணம் வந்துவிட்டது. எப்படியும் தனது வீதியில் இருப்பவர்களுக்கு எப்போதெல்லாம் அவள் நினைவு வருமோ அப்போது  குறை சொல்லி பேச போவது இல்லை, மாறாக  அன்றைய பொழுதுக்கு கூடி பேச ஏதும் இல்லாத போனால் இவள் நினைவு வரும்.

அன்று இரவும் யூனியன் வேலையாக சென்ற செல்லப்பன்  சைக்கிளில் ராத்திரி 11 மணி சுமாருக்கு வீடு வந்து சேர்ந்தான் வீடு வெளிப்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. எப்போதும் வீடு உள்பக்கமாக தாளிடப்பட்டு தான் இருக்கும். ராசாத்தி வழக்கம் போல அம்மா வீட்டுக்கு சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டால் என்று முக வாட்டத்துடன் சிறிது நேரம் வீட்டு திண்ணையிலேயே அமர்ந்து விட்டான். அவள் பிறந்த ஊர் இங்கிருந்து மேற்கே ஒரு மைல் தொலைவுதான்.   இனி காலையில் சென்று  சமாதனம் சொல்லி கூப்பிட்டு வரலாமா? அல்லது எப்போதும் போல இரண்டு நாட்கள் கழித்து போகலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தான். வயதான தாயை கவனித்துக் கொள்ள அத்தனை சலிப்பு காட்டுகிறவளை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் அமர்ந்து இருந்தான்.

பெரியசாமி ஐயன் அந்த வட்டாரத்திற்கு மணியகாரராக இருந்தவர் நியாயஸ்தர் ஒரு வகையில் ராசாத்திக்கு  உறவுக்காரர்.  அவரது வீட்டில் ஐயன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தார். வயதானாலும் குரலில் அதே கம்பீரம் இருந்தது. அருகில்   இருந்த மரப்பெஞ்சில் ராசாத்தி தனது தாய் தகப்பனுடன் முகம் வாடி அமர்ந்து இருந்தாள்.

 “அண்ணா அறியா புள்ள தெரியாம தப்பு பண்டிபோடுச்சுங்க அந்த நாசமா போனவன் மருந்து வெச்சு என்ற புள்ளய இழுத்துட்டு போயிட்டாங்க, ரெண்டே நாள்ள அவன் வண்டவாளந்தெரிஞ்சு தப்புச்சு வந்துட்டாளுங்க, எங்க மாப்பிளையெல்லாம் என்னைக்குமே குத்தஞ் சொல்றதுக்கு இல்லீங்க நல்ல மனுஷங்க எப்படியாவது நீங்க தா எங்க மாப்பிள்ளைகிட்ட பேசி மன்னுச்சு இவளை ஏத்துக்க வைக்கனுங்க” என்று மனம் வெதும்பிப் போய் கரம் கூப்பி சொல்லி அழுதாள்.

ராசாத்தியின் தாய் அவளது தகப்பன் ஒன்றும் பேசுவதற்கு இல்லை என்பது போல ஒரு சவம்போல அமர்ந்து இருந்தான். ஐயனுக்கு ஊர் விசயங்கள் அனைத்தும் அத்துபுடி தான். ராசாத்தியின் முகத்தை உற்றுப் பார்த்து விட்டு பின்பு தொடர்ந்தார்.

“எல்லாஞ்சரி தா செல்லப்பன சமாதானஞ் சொல்ல நம்ம கிட்ட என்ன நியாயம் இருக்குது ?

“தப்பு பண்ணுது உன்ற புள்ளதா “

“தப்பு உணந்து வந்து நிக்கிறாளுங்கண்ணா நீங்கதா நல்ல வழி காட்டனுங்க” என்றாள்.

“கட்டுன புருசன் நா இருக்கும் போது இன்னொருத்தங்கூட அந்த ராத்திரியில பஸ் ஏறி போயிருக்கினா அப்படி என்ன குறை வெச்சுட்ட உனக்கு?”

“இப்படி இருக்குறவ நாளைக்கு தூங்கும் போது குழவிக்கல்ல தூக்கி என்ற தலை மேல போட்டுட்டு போயிற மாட்டியா?”

 “அத்தாச்சோடு கம்பெனில என்ன நிக்கவெச்சு நாலு பேரு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது ? உனக்கு என்ன குறை வெச்சுப் போட்ட ? “

இப்படி கேள்விகளை அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் செல்லப்னிடம் என்ன பதில் சொல்லி தேற்றுவது என்று தீவிர யோசனையில் ஆழ்ந்து அமர்ந்து இருந்தார் ஐயன். ஆள் அனுப்பி செல்லப்பனை வீட்டுக்கு வரவழைத்தார். அடுத்த சில மணிநேரஙகளில் செல்லப்பன் ஐயன் வீட்டை அடைந்தான்.

“வா செல்லப்பா”

“….”

“உட்காருப்பா”

“………”

சுவர் ஓரமாக நின்று இருந்த ராசாத்தி செல்லப்பனை பார்த்ததும்  நின்ற நிலையில்  கண்ணீர் வடித்து விசும்பினாள். கண் கொண்டு ராசாத்தியை ஆழமாக பார்த்தான். “சரி நெட வூட்டுக்கு போலா” என்றான் செல்லப்பன். அங்கிருந்த ஐயனும் மற்றவர்களும் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து போயினர். அவன் முன்னே நடக்க ராசாத்தி பின்தொடர்ந்தால், அவன் தனது வலது பக்க தோளில் நிறம் மங்கி கிடந்த சிகப்புத் துண்டை உதறி இடது பக்க தோளுக்கு மாற்றிக் கொண்டான். அவன் உறுதியாக கேட்பான் என்று ஏனையோர் நினைத்த அத்தனை கேள்விகளும் மெல்ல மெல்ல காற்றில் கரைந்து கொண்டு இருந்தது.

00

இரா.சேனா 

கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்தவர், தற்போது கரூரில் வசிக்கிறார். மென்பொருள் துறை வல்லுநராக பணியாற்றுகிறார். சிறிய வயதில் செவிவழிச் செய்தியாக கேட்ட மற்றும் பார்த்த நிகழ்வுகளை கொண்டு சிறுகதைகள் எழுதி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *