அந்தப் பெரிய மாளிகையின் தோட்டத்தில் பெரிய பெரிய மரங்களின் கிளைகளும் இலைகளும் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன. பனிக் காலத்து இளங்காலையின் வெய்யில் இதமாக அடித்துக் கொண்டிருந்தது. ராஜகுமாரி இன்னும் எழுந்திருக்கவில்லை. அவள் துயிலெழ இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. ஆனால் அதற்கு முன்னாலேயே வேலைக்கு வந்த குதிரையோட்டி மாளிகையின் பின்புறமிருந்த லாயத்தில் நுழைந்து, அந்த வெள்ளைக் குதிரையைப் பார்த்தான். மின்னும் வெண்மை நிறத்தில் இருந்த குதிரை அவனைக் கண்டதும் லேசாகக் கனைத்தது. ‘சரி, சரி குளிப்பாட்டி விடுகிறேன்’ என்று அதனிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த தண்ணீர்த்தொட்டியைப் பார்த்தான். நீர் பாதித் தொட்டிக்கும் கீழாக இருந்தது. அருகிலிருந்த சுவிட்ச் போர்டைத் தட்டி விட்டான்.
ராஜகுமாரிக்கு வயது இருபதாகிவிட்டது. அவள் இன்னும் எழாமல் தூங்கிக் கொண்டிருப்பதை நினைத்து அவளுடைய அம்மா சுப்புலட்சுமி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். சுப்புலட்சுமி அடுக்களையில் காலை உணவுக்கு இட்லி அவித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவர் ஜெகதீசன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார். மகளை மட்டும் குறைசொல்லிப் பிரயோசனமில்லை. அப்பா இப்படி இருந்தால்…
ராஜகுமாரி காலை நேரத்துக் கனவு கண்டு விழித்துக் கொண்டாள். அந்தக் கனவு அப்படியே நடந்துவிடக் கூடாதா என்று தோன்றியது. அந்தக் கனவில் அவள் விமானத்தில் ஏறி பாராசூட்டில் குதித்துக் கொண்டிருந்தாள். கீழே வருவதற்குள் பாராசூட் காணாமல் போய்விட்டது. ஆனால் அவள் கீழே விழவில்லை. நின்றவாக்கிலேயே பறந்து கொண்டிருந்தாள். மின் கம்பங்கள் அவளுக்குக் கீழே தெரிந்தன. சின்னச் சின்னதாய் வீடுகள், மரங்கள். சாலைகளில் கார்கள் தடித்த புள்ளியாக நகர்ந்து கொண்டிருந்தன. அவள் அப்படியே பறந்து ஒரு மலையின் உச்சத்திற்குப் பறந்தே போனாள். அங்கே போனால், அம்மாவும் அப்பாவும் அவளுக்கு முன்னே அங்கே இருந்தார்கள். அருகில் இருந்தது ஏதோ பரிச்சயமான நடிகரின் சாயலில் இருந்த இளைஞர் ஒருவர். அவரை நெருங்குவதற்குள் விழிப்பு வந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. அழகான இளைஞனின் அருகில் செல்லும் போது அம்மாவும் அப்பாவும் இருப்பதால் அவளுக்குத் தயக்கம் வந்து விடுகிறது. படுக்கையை விட்டு எழுந்து, கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளைப் போன்ற அழகிக்கு ஒரு ராஜகுமாரன் கிடைக்க வேண்டும். கிடைப்பான்.
அவள் பெரும்மாளிகையின் அரசியாக இருப்பாள். ஏகப்பட்ட பணிப்பெண்கள் அவளுக்குச் சேவை செய்வார்கள். எங்கும் பூந்தோட்டம். ஒரு வேலையும் கிடையாது. எப்போது விடியோவில் சினிமாக்களில் வரும் காதல் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ராஜகுமாரனுடன் ஆடிப் பாடிக் கொண்டிருப்பாள். அவள் ஆணையிட்டால் எதுவும் நடக்கும். அது ஒரு இன்ப லோகம்.
அன்றைக்குக் கல்லூரிக்குப் போனபிறகு அந்தக் கனவைப் பற்றித் தன் தோழியான சுபாவிடம் பேசினாள். அவளுக்கும் அப்படித்தான் கனவு வருகிறதாம். முதல் பிரியட் முடிவதற்குள் அவளிடம் பேசிய ஏழுபேருக்கும் அதேபோலக் கனவுகள் வருகின்றனவாம். அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. ஆனாலும் அவளுடைய அப்பாவின் வசதிக்கும் வாழ்வுக்கும் அவளுக்கு மட்டுமே ராஜகுமாரன் கிடைப்பது சாத்தியம். மற்றவர்களெல்லாம் அவளுக்கு ஈடாகிவிட முடியாது. அவள்தான் உண்மையில் ராஜகுமாரி. அது அவளுக்கு மட்டுமே தெரியும். அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.
மாலையில் கல்லூரி விட்டு வந்ததும் உடைகளை மாற்றிவிட்டு, அம்மாவிடம் கொஞ்ச திட்டு வாங்கியபின், குதிரை லாயத்துக்குச் சென்றாள். அவளுடைய சிறுவயதிலேயே அவளுக்காக அப்பா வாங்கிய குட்டிக் குதிரை. அதுவும் அவளைப் போலவே வளர்ந்து பெரிதாகிவிட்டது. முழுவது வெண்மை நிறம் மின்ன, பக்கச் சாயலில் ஒருவிதச் செந்நிறம் ஒளிவிடும் உடல். முடியில் கூட அந்தச் செந்நிறம் மினுங்கும். நெற்றியில் கண்களுக்கு மத்தியில் ஒன்றரை அங்குலத்துக்கு ஒரு கருப்புப் கோடு இருக்கும். குதிரையைப் பார்க்கிறவன் எங்கே போனான்? ‘பிச்சாண்டி, பிச்சாண்டி’ என்று கூப்பிட்டாள்.
ஒரு ஐந்து நிமிடம் கழித்து அவன் வந்தான். ‘எங்க போயிருந்தே? சாயந்தரம் ஐந்தரை மணிக்கு ரெடியா இருக்கணும்ல. அப்பத்தான் இருட்டறதுக்கு முன்னால் சுற்றிவர முடியும்! இருண்ட பிறகு ஊரைச் சுற்றிக் குதிரையில் வந்தால் என்ன வெறும்காலில் நடந்து வந்தாலென்ன?’ என்று சத்தம் போட்டாள். பகல் வெளிச்சத்தில் போனால் தான் எல்லோருக்கும் ராஜகுமாரி பவனி வருகிறாள் என்பது தெரியும். அவளும் ஏதாவதொரு ராஜகுமாரனை பார்க்க முடியும். அவசர அவசரமாகக் குதிரையை லாயத்திலிருந்து வெளியே கொண்டுவந்த பிச்சாண்டி அதில் சேணங்களையும், முகமறைப்பையும் மாட்டிவிட்டான். அவளருகில் குதிரை வந்ததும் அவள் சின்ன குதி போட்டு ஏறிக் கொண்டாள். இனி அவள் உண்மையிலேயே ராஜகுமாரிதான். தெருவை வலம் வரத்தொடங்கியது.
முதலில் எக்காளமாக ராஜநடை போட்டுச் சென்றது. ராஜகுமாரி மிகப் பெருமிதத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து, தன்னைப் பார்க்கிறவர்களையும் கவனித்து, அவர்களில் அழகான இளைஞர்கள் இருந்தால் அவர்களையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். இப்படிச் சென்று கொண்டிருந்த ராஜகுமாரியின் வெள்ளைக் குதிரை திடீரென்று அவளது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்துவங்கியது. முதலில் போக்குவரத்து மிகுந்த பாதைகளில் இடையில் நுழைந்து நுழைந்து ஓடிய அது அந்தச் சிறு நகரின் எல்லைக்கு அப்பாலும் ஓடத்தொடங்கியது. பின்னால் மிகவும் பயந்து போன பிச்சாண்டி ஓடி வந்து கொண்டிருந்தான். ஊரின் எல்லையைத் தாண்டும் போது அவன் எங்கே வருகிறான் என்று பார்பதற்காகத் திரும்பிய ராஜகுமாரி கண்ணில் அவன் படவே இல்லை. எங்கோ பின் தங்கிவிட்டான். அவள் என்னென்னவோ செய்து பார்த்தும் குதிரை வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ‘இதற்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?’ என்று பயத்தில் கத்தினாள் ராஜகுமாரி. இப்போது வண்டிப்பாதையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வண்டி போய்க்கொண்டிருந்தது. பின்னால் பெரும் புழுதிப்படலம் அவர்களைத் தொடர்ந்து வந்தது. பின்புறம் திரும்பிப்பார்த்தால் எதுவும் தெரியவில்லை. இப்போது சாலையில் அவளையும் குதிரையையும் தவிர வே்று யாருமில்லை. குதிரை இன்னும் இன்னும் ஓடிக் கொண்டே இருந்தது.
விவகாரம் ராஜகுமாரியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்து அவர்கள் ஒரு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி, பிச்சாண்டியையும் பின்னால் ஏற்றிக் கொண்டு குதிரை ஓடிய பாதையில் காரில் சென்றனர். அந்த நேரம் பார்த்து, வேகமாக குளிர்காற்றுச் சில்லென்று வீசியது. அவர்கள் கொஞ்ச நேரம் செல்வதற்குள் மழை பெய்யத் தொடங்கியது. காரை மெல்ல ஓட்டிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இருள் கவிந்துவிட்டது. மூன்று பாதைகள் பிரியும் ஓரிடத்தில் எதில் செல்வது என்று குழப்பம் அடைந்த அவளுடைய அப்பா காரை நிறுத்தினார். மழை ஓங்கிப் பெய்து கொண்டிருந்தது.

உதவி செய்வதற்கு யாரும் இல்லாமல் தறிகெட்டு ஓடிய குதிரையில் பல மைல்கள் தூரம் போய்விட்டாள் ராஜகுமாரி. ஒரு மலையின் ஒற்றையடிப் பாதையில் சென்ற குதிரையின் நெற்றி மீது ஏதோ பட்டு முட்டியதும் குதிரை தடுமாறிக் கீழே விழுந்தது. அவளும் குதிரையிலிருந்து தூக்கி எறியப்பட்டாள். உடலெல்லாம் அடிபட்டுக் கிடந்த அவள் எதில் குதிரை முட்டியது என்று தலையை மெல்லத் தூக்கிப் பார்த்தாள். அவளிடமிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு ஆள் கிடப்பது தெரிந்தது. ‘ஐய்யய்யோ! என்று கத்திக் கொண்டே எழுந்திருக்க முயன்றாள். அவளாள் எழ முடியவில்லை. ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து, ஒரு இளைஞன் அவன் முன்னே நின்றான். அவன் தான் அன்று அவள் நேரில் அருகில் பார்த்த ஒரே இளைஞன். அதற்கு முன்னால் அவள் எந்த இளைஞனையும் இவ்வளவு நெருக்கத்தில், செதுக்கிய அவனுடைய சதுர முகத்தின் மீசையும், உதடுகளும் துடிப்பது தெரியும் நெருக்கத்தில் பார்த்ததே இல்லை. அவன் கைகளை நீட்டி அவளை எழுந்து நிற்கவைத்தான். அந்த இளைஞனின் மண்டையிலும் முகத்திலும் கைகளிலும் சிராப்புகளில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில்தான், குதிரை தட்டுத் தடுமாறி எழுந்து ஓட ஆரம்பித்துவிட்டது. அவள் ‘ஐயோ! குதிரை போய்விட்டது! குதிரை போய்விட்டது’ என்று உரக்கக் கூச்சலிடத் தொடங்கினாள். கொஞ்ச தூரம் அதன் பின்னால் சென்றாள். கூச்சலிட்டும் எதுவும், யாரும் பதில் சொல்லவில்லை. அப்பொழுது அந்த இளைஞன் குதிரையின் பின்னால் ஓடத் தொடங்கினான். வெகுதூரம் ஓடிவிட்டு, அதனுடன் போட்டி போட முடியாதென்று தெரிந்து, மூச்சிரைப்பது தாங்காமல் நின்றுவிட்டான். ஒரு முறை குதிரை போன திசையைப் பார்த்துவிட்டு, களைத்துத் திரும்பி நடந்து ராஜகுமாரியிடம் வந்தான்.
ராஜகுமாரிக்கு தன் உடலில் ஏதோ எடை குறைவது போலிருந்தது. அவள் கைகளுக்குக் கீழே இரண்டு இறக்கைகள் முளைத்துவிட்டிருந்தன. அந்த இளைஞன் வந்து அவளைப் பார்த்தான். வினோதமாக இருந்தது. அவன் உடைகள் அவன் ஒரு ஏழை என்பதைப் பறை சாற்றின. அவனுக்கும் அது அவமானமாக இருந்திருக்க வேண்டும். இப்படி ஒரு தேவதையைப் போலத் தெரிந்த, ராஜகுமாரிக்கும் அவனுக்கும் என்ன உறவு? ஓரிரு நிமிடங்களில் அவனுக்கும் இறக்கைகள் முளைத்தன. ராஜகுமாரி அவனுடைய இறக்கையைத் தொட்டதும் இருவரும் பறக்கத் தொடங்கிவிட்டனர். கீழே இறங்க முயற்சி செய்தும் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. மேலே மேலே பறந்து கிழக்கு திசை நோக்கிப் பறந்து கொண்டிருந்தனர். ராஜகுமாரியின் வீடு இருப்பதோ தென் திசையில் அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர்கள் பறந்து போய்க்கொண்டே இருந்தனர்.
அன்று இரவு, அவர்கள் தரையிறங்கிய போது அவர்கள் முன்னால் ஒரு குடிசை இருந்தது. இப்போது நன்றாகவே மழை பெய்யத் தொடங்கியது. இருவரும் குடிசைக்குள் சென்றனர். எல்லா ராஜகுமாரிகளின் கதைகளும் இப்படித்தான் எங்கோ தொடங்கி எங்கோ ஜீரணிக்க முடியாத வகையில் முடிந்துவிடுகிறது. மீதியை நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
000

வேலு இராஜகோபால்
இதுவரை சுமார் பதினைந்து கதைகள் இணைய, அச்சுப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, நவீன விருட்சம், அம்ருதா, அமுத சுரபி, மயிர் இணைய இதழ் கல்கி ஆன்லைன்.