1.
பொழுதுபோகாத நேரங்களின் விளையாட்டாய்
வலிக்காத வண்ணம் கீறிக்கொள்வதாய் கூறி
பீறிடும் குருதி கண்டு குதூகலிக்கிறாய்.
சிறு சிறு கோடுகள் ஒன்றுகூடி
பெருவேலியான சுபதினத்தில்
உன்னைக் கூர்நகங்களோடு காத்திருக்கவைத்தேன்
பழகிய பூனையின் எதிர்ப்பாக..
‘நீயில்லா வாழ்வு சுவாரசியமற்றது‘
என்றபோது பளிச்சிட்ட கோரைப்பற்களை
மறைக்க மறந்துவிட்டாய்..
மீண்டும் இரையாகாமல் இருக்க
என்னாலான எல்லாமும் செய்கிறேன்
வலிக்குப் பழகிய கையின்
கீறலற்ற பகுதிகளை
பச்சைக்குத்தி அழகாக்குகிறேன்
இதுபோதும் உன்னை காலத்துக்கும்
ஞாபகத்தில் மட்டும் இருத்திக்கொள்ள!
2.
பேசிக்கொண்டிருக்கும் போதே காணாமல் போகிறாய்
சட்டென நீரினின்று துள்ளி மறையும் மீனைப் போல
ஒரு துள்ளல் போதும் நீரிலிருக்கும் மீனை அறிய!
நான் இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன்
நீ திரும்பி வரும்பொழுதும் உம் கொட்டினால் போதும்.
3.
‘அப்பாலே போ சாத்தானே ‘
கோபத்தில் வார்த்தைகள் கனன்றபோது
உன்னை விட்டால் யாரெனக்கென்றாய்.
கொஞ்ச காலம் தேவரூபம் கொள்கிறாய்
வெயில் பட பட
தேய்ந்து போகும் பாசியென
கொஞ்சம் கொஞ்சமாய்
களைபடும் நின் சுயம்
குருதியின் நிறத்தில்
குளமெங்கும் படர்கிறது.
நரி நாயைப்போல தோன்றினாலும்
இரண்டும் ஒன்றில்லை என்ற ஒப்பீட்டை செய்து தோற்கும்
என் புத்திக்கு யாராவது உரக்கச் சொல்லுங்களேன்
சாத்தான் ஒருநாளும் தேவனாகமுடியாதென..
இப்போது கெஞ்சிக்கொள்கிறேன்
‘அப்பாலே போ சாத்தானே’.
4.
பேசிடாத கோபத்தை
சுமந்தலையும் யட்சி
காடுமேடென கால்போக்கில் அலைகிறாள்
கால்சிலம்பதிர நடக்கும்
வெப்பத்தில் பூமி விரிகிறது
கணன்ற கண்களின் செவ்வொளி
அந்தியைப் போல வானில் விரிகிறது
முடிந்திராத கூந்தல் அலையென ஆடித்தீர்க்கிறது கரைகளில்
குங்குமமாய் சிவந்த நாசியின்
வெப்பத்தில் வெப்பநோய் கசியத்துவங்குகிறது
இன்னமும் ஆறிடாத ஆங்காரத்தை
என்னசெய்வதென திகைத்தாள்
தவதாயப்பட்டவன் கையெடுத்துக் கும்பிட்டான்
‘நீ என்னை தண்டித்துவிடு’ என.
000
ராணி கணேஷ்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசிப்பவர். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.
தமிழ் இலக்கியம் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும் உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள்,
நாவல் என்று பலவகை முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.