எந்த ‘நான்’ அவனுக்குப் பிடிக்கும்?

பிடித்தவை எவை? பிடிக்காதவை எவை?

பட்டியல் இட்டேன் – பதில் இதோ…

அவனுக்குப் பிடித்தது ‘நான்’,

ஆனால்… அவனுக்குப் பிடிக்காதது என் ‘அருகாமை’.

என் விரல் தீண்டும் தீண்டல் கசக்கிறது,

என் தோள் சாயும் அணைப்பு வலிக்கிறது,

என் இதழ் சிந்தும் முத்தம் கசக்கிறது,

நான் பேசும் பேச்சும் அவனுக்குப் பாரமாகிறது.

இத்தனை தூரங்கள்… இத்தனை விலகல்கள்…

ஆனாலும் சொல்கிறான், “உன்னை மட்டுமே பிடிக்கும்” என்று!

புரியாமல் தவிக்கிறேன்…

தீண்டல் பிடிக்காதவனுக்குத் தேகம் எப்படிப் பிடிக்கும்?

பேச்சு பிடிக்காதவனுக்குப் பிரியம் எப்படிப் பிடிக்கும்?

இந்தத் தடைகளையும் தாண்டி அவனுக்குப் பிடித்த அந்த ‘நான்’…

அவன் கற்பனையில் வாழும் நானா?

அல்லது அவனிடமிருந்து விலகி நிற்கும் நானா?

எந்த நான் என்றுதான் தெரியவில்லை!

0000

நிழலாய் உன் முடிவில்…

ஒவ்வொரு முடிவிலும் நான் இருக்க வேண்டும் – அது

உன் ஆசை என்றே நானும் நினைத்தேன்…

“இதைச் செய்யவா?” என்று நீ கேட்கும் போதெல்லாம்

உன் அன்பின் பிடியில் நான் வீழ்ந்து கிடந்தேன்!

பதிலுக்கு நான் ஒரு வழி சொன்னால் – அதை

ஆமென்று கேட்டுப் புன்னகைப்பாய்…

ஆனால் முடிவில் உன் மனம் சொன்னதை – நீ

அடம் பிடித்து ஏனோ செய்திடுவாய்!

“உன்னைக் கேட்காமல் எதுவும் செய்யேன்” – என

உறுதி மொழி நூறு நீ தருவாய்…

உண்மை அதுவல்ல என நான் அறிந்தும் – என்

ஊமை நெஞ்சில் ஏனோ சிரிப்பாய்!

கேட்கும் கேள்வியில் நான் இருக்கிறேன்,

ஆனால்…

செய்கின்ற செயலில் நான் எங்கே?

உன் பிடிவாதம் புரியும் கவிதை இது – என்

மனம் மட்டும் அறியும் மௌனம் இது!

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *