மைக்கேல் அண்ணன் நெடுநாளைக்குப் பிறகு குடும்பத்தோடு ஊருக்கு வந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், காலம் அவர்களுக்கு ‘உங்களுக்கு நானிருக்கிறேன். நன்றாக உறங்கி எழுந்த பிள்ளைகள் போல எல்லாவற்றையும் மறந்து விட்டு என்னை நம்பி வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என தைரியமூட்டி அழைத்து வந்தது போல் தோன்றியது.
ஊரில் சில வருடங்களாக ரெஜினாப் பற்றிய பேச்சுக்களும் இல்லைதான். கிட்டத்தட்ட எல்லோரும் அவளை மறந்தே போனார்கள் எனச் சொல்லலாம். ஆனால் நான் மறப்பேனா? மறக்கும்படியானதா எனக்கும் அவளுக்குமான உறவு? ஆனால் அந்த உறவை எந்த வகைமையில் சேர்ப்பது என்றுதான் தெரியவில்லை.
அவளைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாலே உதிர்ந்த இறகொன்று தனது கதைகளை எழுத ஆரம்பித்துவிடுவது போல அசைபோட எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லைதான்.
என்னதான் இருந்தாலும் சொந்த ஊரைப் பார்க்காமல் எத்தனை காலம்தான் பிழைக்கச் சென்ற ஊரிலியே நாளை நாளை என்று ஒடுங்கிக் கிடக்க முடியும்? மூச்சு முட்டாதா? இங்கே எல்லோரும் ஒரே ரத்தம்தானே அதில் ஈரம், கருணை எல்லாம் கொஞ்சமேனும் ஒவ்வொருவருக்குள்ளும் கடத்தப்பட்டிருக்காதா?
என்னைப் போல் வேறு யாரும் கூட அவர்களுடைய வருகையை சிலாகித்து இந்நேரம் கட்டிப்பிடித்துக் அழுதுக் கொண்டாடியிருக்கலாம் அல்லவா? ஏன் அப்படியே அங்கேயேத் தங்கிவிட்டீர்கள் என குறைப்பட்டுக் கொண்டவாறு, வந்தவர்களின் மனதையும் தங்களின் மனதையும் ஆற்றிக்கொண்டிருக்கலாம் அல்லவா?
‘பார்க்க சந்தனச் சிலை போல இருப்பாள்..! சந்தனச் சிலை போல் இருப்பாள்!’ எனக் குறிப்பிட்டு சிலரைச் சொல்லி அங்கலாய்த்துக் கொள்வார்களே..! அப்படியொரு பட்டியலிட்டால் அதில் ரெஜினாவும் இருப்பாள். பக்கத்து வீடு என்றாலும் எங்கள் தெருவிற்கே அவள்தான் பேரழகி!
கஞ்சா போதையிலிலேயேக் கிடக்கும் மச்சு வீட்டு ஆரோக்கியம் முதல் சதா கர்த்தரையேத் துதித்துக் கொண்டிருக்கும் சாமுவேல் வரை அத்தனை பேரையும் தாவணிக்கு மாறியப் பின்னரே தன் வசம் இழுத்துக் கொண்டிருந்தாள் என்றாலும் எனக்கு நாலைந்து வயதிலிருந்தே அந்த மயக்கம் பழக்கம். பார்க்க ஒத்த வயது போலத் தெரிந்தாலும், என்னை விட ஒரு வயது மூத்தவள். பின் நாட்களிலேயே அது எனக்குத் தெரிய வந்தது.
அப்போது பள்ளிக்கூடமில்லாத நாட்களில் எங்கள் வீட்டிற்கு விளையாட வந்துவிடுவாள் அல்லது நான் அங்கேச் சென்றுவிடுவேன். அந்த வயதிலேயே எங்களுக்குளிலிருந்த அந்த நெருக்கம் எப்படி அம்மாவை விவரிக்க முடியாத பிரளயமாக அச்சுறுத்தியது எனத் தெரியவில்லை. அம்மா ஒருநாள் அவளைப் பார்த்து கொக்கரிக்கும் சேவலைப்போல கழுத்தை விடைத்துக் கொண்டு, பத்து வீட்டிற்கு காதில் விழும் சத்ததில் என்னை தம்பி என அழைக்கச் சொன்னாள். அதெல்லாம் எங்கள் காதுகளில் ஏறவில்லை அல்லது அவள் எதற்காக அப்படி சத்தம் போட்டாள் எனவும் விளங்கவில்லை.
அந்த நொடியில் கொஞ்சம் பயந்திருந்தாலும், அடுத்த நாளே சேர்ந்து திண்ணையில் படுத்தபடி, நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் கிள்ளிக்கொண்டும், கக்கக்கன்னுச் சிரித்துக்கொண்டும் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த அம்மா, இனி எங்கள் வீட்டுப் பக்கம் வராதே என்று பலமாய் முதுகில் ஒரு பூசை வைத்து அவளை விரட்டிவிட்டாள்.
அது எதிர்பாராத ஒரு பெரும் சண்டையாகி, அதிலிருந்து இரண்டு வீட்டு அம்மாக்களும் பேசிக்கொள்வதில்லை. ஜென்ம எதிரிகளானார்கள். அப்புறம் நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது, அவள் எங்கள் ஊர் டாக்டர் செல்வராஜ் பையன் திரவியத்தை காதலிப்பதாக ஒரு செய்திப் பரவி ஊரே ரெண்டாகிக் கொண்டிருந்தது.
என் காதுக்கு எட்டியவரை இவள் பள்ளிக்கூடம் விட்டு வந்துக்கொண்டிருப்போது, அவன் தனது தோப்பிலிருந்து கையசைத்து ஜாடையில் ஏதோ சொல்லியிருக்கிறான். இவளும் சிரித்திருக்கிறாள். அதை அச்சமயம் டாக்டர் மனைவி எங்கிருந்தோ கவனித்துவிட்டார். அது மாதிரி டாக்டரும் சில முறைப் பார்த்திருந்தாலும், அதைப் பெரிதாக்கும் அளவிற்கு அதில் தீவிரம் காட்டவில்லை. அதனால் யாரையும் கண்டிக்கவுமில்லை. ஆனால் சும்மாவே தான் டாக்டர் பொண்டாட்டி, டாக்டர் பொண்டாட்டி என்று பகட்டுக் காட்டும் திரவியம் அம்மா சும்மா இருப்பாளா? அன்று தெருவையேத் திரட்டிவிட்டாள்.
விசாரணைகள் தீவிரமடைந்து இருவர் தரப்பிலும் தவறுகள் இருந்ததை விளங்கிக் கொண்ட ஊர் பெரியவர்கள், பொதுவாக கண்டித்து, இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படி இரண்டு வீட்டாரையும் சமாதானமும் செய்து வைத்தனர். ஆனால் அதெல்லாம் கதைக்கு ஆகவில்லை.
கொஞ்ச நாளில், ரெஜினாவும் தனது தாய் வழிப் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். திரவியம் காதல் பிரிவுத் துயரில் தளர்ந்து, உழன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கிவிட்டான். பின்னர் நல்வழிப்படுத்தும் பொருட்டு பெற்றோர் சிங்கப்பூரிலிருந்த தங்களது உறவினர்கள் மூலம் அவனை நாடு கடத்தினர்.
அதையொட்டி வீட்டின் அடுத்த டாக்டர் இவன்தான் என்றிருந்த எதிர்பார்ப்பு, வெறும் டாக்டர் மகன் என்ற அடையாளத்தோடேயே நின்றுப் போயிற்று. இங்கே இன்னொரு குறிப்பையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன். திரவியம் அப்பா செல்வராஜ் ஒரு ஹோமியோபதி டாக்டரென்று பிறகொரு நாள் என்னுடைய அம்மா வைத்திருந்த மருந்துச் சிட்டையைப் பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன். வரலாறு முக்கியமல்லவா!
நான் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ரெஜினாக்காற்று எங்க ஊர்ப்பக்கம் வீச ஆரம்பித்திருந்தது. ஒரு நாள் வழியில் அதுவும் தன்னந்தனியாக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு எதிர்பாராமலேயே அமைந்தது. அந்த சந்தனச்சிலை, தங்கச்சிலையான அதிசயங்களை புதிய வனப்புகள் எடுத்துக் காட்டின. கண்டதும் காட்டுமல்லிக் கொட்டுவது போல் அதே பளீர் சிரிப்பு! கைகொடுத்தெல்லாம் பேசினாள். கைகள்தான் எவ்வளவு குளுமை! அப்படியே மிருதுவான தந்தத்தைப் பற்றியிழுத்ததுப் போலிருந்தன.
ஓவியர் ஸ்யாம் தீட்டி வந்த தேவதைகளிள் சாயல்கள் கொண்டு இளமையின் கூத்தாட்டங்கள் அங்கமெல்லாம் துள்ளிக்கொண்டிருந்தன. அன்று அவள் அணிந்திருந்த லெவெண்டர் பூப்பூட்ட பிராக் கூட ஒரு பளிங்கு மாளிகைக்கு அணியப்பட்ட மெல்லிய திரைப் போல, இருந்தும் இல்லாதது போல் அந்த காற்றையே அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த தருணத்தில் அழகிய லைலா ரம்பாவெல்லாம் ஆரம்ப இசையோடு இடையை ஆட்டிவிட்டு மறைந்தாள்!
“ஜேம்சு..! பஜார் வரை போகணும் கொஞ்சம் இறக்கி விட முடியுமா..?” எனக் கேட்க, கரும்பு தின்ன கூலியா என்பது போல் ஏறு! ஏறு! என எனது ஸ்பிளெண்டரில் ஏற்றிக்கொண்டேன். அந்த பெருமை மிகு காட்சியை யாரோப் பார்த்துவிட்டு என் அம்மா மேரி மாதாவிடம் சொல்லிவிட, திரும்பியபோது வீட்டிற்குள் நுழைய முடியவில்லை! அன்று அவ்வளவு திட்டு. நல்ல வேளை இந்த முறை அவளிடமோ அவளுடைய அம்மாவிடமோ சண்டைக்கெல்லாம் செல்லவில்லை! வெளியூர்க்காரியான அவளுடைய அத்தையும் என்னுடைய அம்மாவும் நன்றாகப் பேசிக்கொள்வார்கள் என்பதால், “அவ சரியான ஊர் மேயிற கழுதையாச்சே அங்கே வந்து எப்படி இருக்கிறா? ஒழுங்கா இருக்காளா?” என தன் போதைக்கு சுதி சேர்ப்பது போல பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள்.
சுதாரிப்போடு ரெஜினாவின் அத்தை சுற்றும் முற்றும் தன்னுடைய புருஷன் இருக்கிறானா என்று மின்னல் வேகத்தில் ஒரு பளிங்குப் பார்வையை ஃபிளாஷ் லைட் போல் சுழல விட்டாள். நானும் கவனித்தபோது அந்த ஆளு எங்கோ கொல்லைப்பக்கம் நின்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் மிகவும் கிசுகிசுக்குரலில், “காலேஜ்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னே தெரிய மாட்டுக்குது! நைட்டு நேரத்துல கூட அப்பப்ப போனு வரும். நான் போயி எடுத்தா மட்டும் உடனேக் கட்டாயிரும். அவ எடுத்தா எதுவும் ஆகாது! ஃபிரண்டுக்கிட்டேர்ந்து போனுனு நடுத்திண்ணைனு கூட பாக்காம மணிக்கணக்காக சிரிச்சிப் பேசிக்கிட்டு நிப்பா! மாமன்காரர் வந்தா மட்டும் போனை வச்சுடுவா! எல்லாம் எனக்கு வாய்ச்ச விதியை நொந்துக்கிட்டு கண்டுக்காம இருந்திருவேன். அப்படியே என்ன ஏதுன்னுக் கேட்டாலும் அக்காளும் தம்பியும் அவங்க வீட்டு பிள்ளையை எப்படி நான் சந்தேகப்படலாம்னு என் மேலதானே குதிச்சிக்கிட்டு வருவாங்க!”
யாராவது எப்போது கேட்பார்கள், தன்னுடைய ஆதங்கத்தையெல்லாம் சொல்லித் தீர்த்துக்கொள்ளலாம் என காத்திருந்தவள் போல, என் அம்மா சும்மா பேச்சுக் கொடுத்ததற்கே ஒன்று விடாமல் மனசுக்குள் இருந்ததெல்லாம் கொட்டிவிட்டாள்.
“இன்னைக்கு கூட பாரேன் இவனோட பைக்கில போயிருக்கா! பொம்பளப்புள்ளன்னா ஒரு கூச்ச நாச்சம் வேணா!” என்னையும் விமர்சித்து, குறைப்பட்டுக் கொண்டவளாய் அம்மாவும் அவளிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவள் அத்தை சொன்னதையெல்லாம் கேட்டப்பின்னர் ரெஜினா மீதான ஈர்ப்பு சற்றுக் குறைந்துவிட்டது போல் உணர்ந்தேன். மேலும் சில நாட்களில் இன்னொரு செய்தி வந்து அதை முற்றிலும் உறுதிப்படுத்தியது. ரெஜினாவின் பின்னாடி யாரோ ஒருவன் சுற்றிக்கொண்டிருக்கிறான் என்ற துருப்பு அவளது மாமா டேனியல் காது வரை போக, சம்பந்தப்பட்டவனை உண்டு இல்லை என செய்வதற்கு ஆக்ரோசம் கொண்டவராக கல்லூரிக்குச் சென்றவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்திருக்கிறது!
ரெஜினா ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்து வந்திருக்கிறாள். குழம்பி விசாரிக்கத் தொடங்க அவனா இவனா என்ற அடுத்தடுத்த கட்டங்கள் நகர்ந்திருக்கிறது. இரண்டும் உண்மையென்று தெரியவர, மாமன்காரர் தலையைத் தொங்கவிட்டபடி தன்னையே குறைப்பட்டுக்கொண்டு மனைவியிடம் வந்துச் சேர்ந்திருக்கிறார். விளைவு? படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ரெஜினாவை எங்க ஊருக்கே அனுப்பி வைத்துவிட்டார்கள். அதைக் கேட்டு என் அம்மா மிகவும் சந்தோசப்பட்டாள், நான் வருத்தப்பட்டேன்.
கிராமமாயிற்றே..! விசயம் வதந்தி போல சொந்த பந்தங்ளுக்கிடையில் தீயாய் பரவியது. உடனே கல்யாணம் செய்து வைப்பதுதான் சிறந்து என்று அவளது பெற்றோர் முடிவு செய்தனர். நாலாபுறத்திலும் மாப்பிள்ளைத் தேடியும் ஒருவனும் அமையவில்லை. கர்த்தரின் புண்ணியத்தால் கடைசியில் மைக்கேல் அண்ணன் மாட்டினார். நல்ல மனிதர் என்றாலும் ரெஜினாவின் பேரழகிற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் பார்க்க மிகவும் சுமாராக இருப்பார் என்பதை விட மிக மிக சுமாராக இருப்பார்.
பாலி டெக்னிக் முடித்துவிட்டு உள்ளூரிலேயே எலெக்ட்ரிஷியனாக இருந்த மைக்கேல் அண்ணனுக்கு, ரெஜினா குடும்பத்தின் செல்வாக்கால் வெளிநாடு செல்லும் யோகமும் அமைந்தது. மூன்று நான்கு வருடங்களில் மெல்வின், மெர்சி என இரண்டு பிள்ளைகளுக்கு இருவரும் டாடி மம்மியாயினர். குழந்தைகள் பார்க்க ரெஜினா சாயலில் இருந்தாலும், சந்தன மரத்தில் பூத்த சாக்லேட் பூக்கள் போல கலரில் தந்தையையும் நினைவுப்படுத்துவார்கள்.
மைக்கேல் அண்ணனை உண்மையிலேயே அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்ற சந்தேகங்கள் அவர்களை ஒரு சேர காணும் நேரங்களில் இயல்பாக என்னுள் எழும். இவளுக்கு போய் இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்படுவேன். இருந்தாலும் வெளியிலிருந்துப் பார்க்க இருவரும் அன்யோனியமாகத்தான் தெரிந்தார்கள். அதை வைத்து ‘மகிழ்ச்சி!’ என்று என்னை நானேத் தேற்றிக் கொண்டேன். ஆனால் அந்த நிறைவு அவ்வளவு நாள் நீடிக்கவில்லை.
மைக்கேல் அண்ணன் மலேசியாவிலிருந்து ஊர் பக்கம் வந்து இரண்டு மூன்று வருடங்களாயிற்று. என்ன வேலையாக இருந்தாலும் குடும்பஸ்தன் என்பவன் மனைவி பிள்ளைகளைப் பார்க்க வருடத்திற்கு ஒரு முறையாவது வர வேண்டாமா? அந்த இடைவெளிகளில் ரெஜினாவைப் பற்றிய வதந்திகளும் அவ்வப்போது கிளம்பி அடங்கிக்கொண்டிருந்தன. மற்றவர்கள் காதுபட பேசும்போது, கேட்க கஷ்டமாக இருந்தது. அவள் யாருடனோ தொடர்பிலிருக்கிறாள் என்ற செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. ஊருக்கு செல்லும் நேரங்களில், நான் கூட பார்த்திருக்கிறேன் தனியாளாக சம்பந்தமில்லாத நேரத்தில் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்.
என்ன எதற்கு எனக்கும் என்று விசாரிக்க தோன்றும். ஆனால் ஏனோ தயங்கினேன். அப்போது அவளுடைய அழகும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சற்று என்னவோ போல் காட்சியளித்தும் வந்தாள். மைக்கேல் ஏன் இவளை இப்படி விட்டுவிட்டு வெளிநாடே கதியென்று கிடக்கிறார் என்ற வழக்கமான கோபமும் எழுந்து அடங்கும். அவளும் என்ன செய்வாள் என்று நெறிமுறைகளுக்கு மீறி அவளுக்காக வருத்தப்பட ஆரம்பித்தேன் அல்லது அவள் செய்து வந்ததை நியாயப்படுத்துவது போல் நினைக்கத் தொடங்கினேன். ஏன் அவளுக்காக இப்படி அநியாயதிற்கு பரிவுக் காட்டுகிறேன் என்பது இதுவரை எனக்கே விளங்காத ஒன்று.
இவளைப் போல அந்த ஆளும் அங்கே சுற்றலாம் அல்லவா என்று கற்பனைகளால், ரெஜினாவிற்கு வரிந்துக் கட்டிக் கொண்டு மைக்கேலை குற்றவாளியாக்கினேன். எல்லாம் அவள் மீதிருந்த விவரிக்க முடியாத உறவோ அக்கறையோதான் காரணம். மீண்டும்.. இதுவரை சரியாக அந்த தவிப்பிற்கு ஒரு பேர் வைக்க முடியவில்லை!
அந்தா இந்தா என்று எப்படியோ ஒரு நல்ல நாளில் மைக்கேல் அண்ணன் ஊரு வந்துச் சேர்ந்தார். பலரும் பல விதமாய் அவரைச் சீண்டிப்பார்த்தும், குழப்பியும் தனது மனைவி ஒழுக்கமானவள் என்றே நம்பினார். இருந்தாலும் இனி வெளிநாடு சென்றால் வேலைக்காகாது, வளரும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு நல்ல தகப்பனாக ஊரிலேயே தொழில் செய்வதுதான் உத்தமம் என்றும் முடிவு செய்யலானார்.
அதைத் தொடர்ந்து ஒரு நாள் சென்னை வரை சென்று வரலாம் எனப் புறப்பட்டுச் செல்ல, அதற்காகவே அத்தனை நாள் காத்திருந்தது போல அவளுடைய காதலன் போனில் தொடர்பு கொண்டிருக்கிறான். குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லியிருக்கிறான். அந்த குறிப்பிட்ட இடம் எங்கள் பக்கத்து நகரத்திலுள்ள ஒரு தங்கும் விடுதி என்று அவளைத் தேடிச் சென்றபோதே அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன்.
மைக்கேல் வந்ததிலிருந்து, அவர்களைப் பிரிக்க அவனுடைய குடும்பத்தில் சிலருக்கு எப்படா வாய்ப்பு கிடைக்கும் காத்துக் கிடந்தனர். அதற்கேற்றாற் போல அன்று ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன் என்று பிள்ளைகளை தனது பெற்றோரிடத்தில் விட்டுவிட்டு வீட்டை பூட்டிச் செல்லவே, வாய்ப்பிற்காக காத்திருந்தவர்கள் மோப்பம் பிடிக்க தொடங்கினர். அந்த கூட்டத்தில் என் நண்பனும் ஒருவன். இருவரையும் கையும் களவுமாக பிடித்து மைக்கேலிடம் ஒப்படைப்பதென்பது அவர்களது நெடுங்கால முயற்சி, அன்றைய வியூகம்!
எனக்கும் வீட்டு பணிகள் நடந்துக் கொண்டிருந்ததால், அன்று கொஞ்சம் சாமான்கள் வாங்க குறிப்பிட்ட நகரத்திற்கு நானும் சென்றிருந்தேன். அச்சமயம் என் நண்பன் சூசை தனது மனைவியின் உபயோகத்திற்கு சுமாரான ஃபோன் ஒன்று வாங்கி வருமாறு சொல்லியிருந்ததால், பணம் செலுத்தும் முன் விலை விபரங்களைச் சொல்லி ஒரு முறை ஊர்ஜிதம் செய்துகொள்ள அவனுக்கு போன் செய்தேன். அப்போதுதான் அவனும் அங்கே வந்துக் கொண்டிருப்பதாக பரபரப்பாகச் சொன்னான்.
என்ன சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று கிளம்பியிருக்கிறாய் என்றதற்கு விசாரித்ததற்கு பொறிந்து தள்ளுவது போல் விபரங்களை ஒன்றுவிடாமல் சொன்னான். ஆனால் ஆஸ்பத்திரி என்று சொல்லி வந்தவள், இறங்கி எங்கே செல்வாள் என்று மட்டும் யாருக்கும் தெரியவில்லை. எப்படியும் அலைந்து திரிந்தாவது இன்று கையும் களவுமாகப் பிடித்துவிடுவோம் என சூளுரைத்தபடி போனை வைத்துவிட்டான்.
எனக்கு மனசு அடித்துக் கொள்ளத் தொடங்கியது. ரெஜினாவை அப்படி ஒரு கோலத்தில், எல்லோருமுன் நிலைக்குலைந்து நிற்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவள் மீது கட்டுப்படுத்த முடியாத கோபத்தைத் தாண்டி இனம் புரியாத இரக்கமும் கூடவேப் பிறந்தது. அந்த பிள்ளைகள், மைக்கேல் அண்ணன் எல்லோரும் ஒரு அழகிய கனவு போல என் கண்முன் வந்துப்போனார்கள். உறவுகளுக்கு அவளைப் பிடித்து கூண்டில் நிறுத்திவிட்டால் போதும். ஆனால் அவளது கணவனும் பிள்ளைகளும் என்ன பாவம் செய்தார்கள்? அவமானங்களையும், தண்டனைகளையும் எல்லோரும் சேர்ந்து காலத்திற்கும் சுமக்க வேண்டுமே!
வாங்கியப் பொருள் அனைத்தையும் தொப்பென அங்கேயே போட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினேன். அந்த குறிப்பிட்ட பஸ் வந்துவிட்டிருந்தது, ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாலாபுறமும் கூட்ட நெரிசல்கள் இழைத்துக் கொண்டிருந்தாலும் விதிமுறைகளை மீறி, அவளுக்காக அங்கிருந்து வண்டியின் வேகத்தை கூட்டினேன். வியர்வையில் உடல், ஆடையென எல்லாம் தொப்பல் தொப்பலாக நனைய ஆரம்பித்தது. தவிப்பும் பதற்றமும் அதிகமானது.
அவள் பெயரைச் சொல்லி எங்கடி போய் தொலைஞ்சேன்னு கத்த தோன்றியது. அந்த பிள்ளைகளும் மைக்கேல் அண்ணனும்.. ஏன் அவளும் காலத்திற்கும் சுமக்க போகும் அந்த வலியை நினைக்க நினைக்க என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த பொறுப்பும் கவலைகளும் ஏன் அவளுக்கு இருக்கவில்லை என்று அவளுடன் பிறந்தவன் போன்று கோபப்பட்டேன். அவளுடைய நல்வாழ்க்கைக்காக சத்தமாகப் பிரார்த்தித்தேன். பிரார்த்தனை வீண் போகவில்லை!
யாரோ ஒருவன் பின்னால் ஒரு குறிப்பிட்ட தங்கும் விடுதிக்குள் நுழைந்துக் கொண்டிருந்ததை கண்டு ஆத்திரப்படுவதா இல்லை அவளை கண்டுபிடித்துவிட்டோமே, தடுத்து காப்பாற்றிவிடலாம் என சந்தோசப்படுவதா என தெரியவில்லை. பைத்தியம் பிடித்தவன் போல அங்கே விரைந்தேன். அலங்கோலமான எனது வேகத்தையும் சீற்றத்தையும் பார்த்துவிட்டு “ரோட்டிலிருந்து வர்றது கண்ணுக்குத் தெரியல! மெதுவா போ! மெதுவா போடா!” என்று எதிர்பட்டவர்களும், இடையில் கடந்துக் கொண்டிருந்தவர்களும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள்.
நான் இடத்தை அடைந்தபோது, அவர்களைக் காணவில்லை. அறைக்குச் சென்றுவிட்டது போல் தெரிந்தது. ரிஷப்ஷனில் இருந்தவனிடம் விபரம் கேட்டேன். அவன் என்னை கேள்விகள் கேட்டான். அப்படியெல்லாம் யாரும் இங்கே வரவில்லை என்று என் கண் முன்னாடியே பொய் சொன்னான். கோபம் எல்லை மீறிச் சென்றுக் கொண்டிருக்க, ஆவேசமாகி பைக் சாவியால் அவன் முகத்தில் குத்த கையை ஓங்கினேன். பயத்தில் பின்வாங்கியவன், வெலவெலத்துப் போய் அறையைக் காட்டினான்.
தட்டினேன். திறக்கவில்லை. திறக்கச் சொல்லி சத்தம் போடலாமா வேண்டாமா என்று சற்று நேரம் ஒரே குழப்பம். அவனோ, அவளோ தட்டிய மாத்திரத்தில் உடனே திறந்திருந்தாலும் வந்த ஆத்திரத்திற்கு பலமாக ஒரு அறை விட்டிருப்பேன்தான். என்னை நிதானப்படுத்திக் கொண்டு என் பெயரைச் சொல்லி வந்திருக்கிறேன், தயவு செய்து வெளியில் வா என்றேன். என் குரல் உடைவது போலிருந்தது. மேலேப் பேச முடியவில்லை.
ஐந்து நிமிட நிசப்தத்திற்கு பிறகு மெதுவாகக் கதவுத்திறக்கப்பட்டது. உடன் இருந்தவன் என்னை உள்ளேக் கூப்பிடுவது போல் அவன் கையசைவுகள் இருந்தாலும், அவள் முகத்தையோ அவன் முகத்தையோ நான் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. திரும்பிக் கொண்டு என்னுடன் வா என்று மட்டும் சொன்னேன். அவள் வருவது போல் தெரியவே, அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பித்தேன். அவள் காலடிச் சத்தம் கேட்க கேட்க நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். வெளியில் வந்தவுடன் வண்டியில் ஏறச்சொன்னேன். ஏறினாள்.
எல்லோரும் உபயோகிக்கும் வழியில் போகாமல் சுற்றிச் செல்லும் புதிய ரூட்டைத் தேர்ந்தெடுத்தேன். நகரத்தைத் தாண்டியவுடன் நான் வந்த, நடந்த விபரங்களைச் சொன்னேன். என்னைப் பார்த்த அதிர்ச்சிலிருந்தே முழுவதும் அவள் மீளாதிருந்திருக்க வேண்டும். எந்த பதிலும் பேசவில்லை. எப்படி பேசுவாள்? என்னவென்று சொல்வாள்? ஆனால் அவளுக்காக அன்று நான் சினிமா கதாநாயகனைப் போல் உருமாறியிருந்தேன். அசாதாரண அந்த சூழ்நிலையிலும் கூட என்னை நானேக் கேட்டுக் கொண்டேன் அவளுக்காக ஏன் இவ்வளவு பறந்துக் கொண்டிருக்கிறேன் என்று!
திடுக்கத்தில் உறைந்தவள் போல் அப்படியே கொஞ்ச நேரம் வந்தவள், சிறிது தூரத்தில் மெல்லிய சத்தத்தில் விசும்ப ஆரம்பித்தாள். அவள் மீது கோபம், அக்கறை, பரிவு, கருணை எல்லாம் கலந்துக்கட்டி என்னை உள்ளுக்குள் ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தது.
ஏன் இப்படி நடந்துக் கொள்கிறாய் என்று அங்கேயே நிறுத்தி வைத்துக் கேட்க வேண்டும் போலிருந்தது. அந்த விசும்பல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தளர்ந்து, சக்தி இழந்தவள் போல ஒரு கையால் என் தோளைப் பற்றிக்கொண்டவள், அரைநொடியில் சட்டென தனது கையை எடுத்துக்கொண்டாள்.
நாங்கள் ஊருக்குள் சென்றபோது, விசயம் கசிந்து வழியில் நின்றவர்கள் எங்களை கவனித்தபடி கிசுகிசுப்பாய் ஏதேதோப் பேசிக்கொண்டார்கள்.
“என்னப்பா ஜேம்சு.. சூசை ஏதேதோ சொல்லிக்கிட்டு இவளைத் தேடிக்கிட்டு வந்தானே.. இவளை எங்கப் புடிச்ச?” என்று பக்கத்து வீட்டு அண்ணன் அந்தோணி விசாரிப்பது போல, எதுவும் சொல்கிறேனா என்று போட்டுப்பார்த்தார்.
“அண்ணே..! நீங்க சொல்ற மாதிரியெல்லாம் ஒண்ணுல்ல, ரெஜினா ஆஸ்பத்திரி செல்லும் வழியில முடியாம மயங்கி விழுந்துருக்கா; நான் எதார்த்தமாக அந்த பக்கம் போய்க்கிட்டு இருந்தப்ப, கூட்டம் கூடியிருந்ததைக் கண்டு என்னன்னு எட்டிப் பார்த்து விசாரித்தேன். அப்பதான் இவளும் மயக்கத்திலிருந்து தெளிஞ்சிருப்பா போல, குரலைக் கேட்டதும் ‘ஜேம்சு..!’னு கூப்பிட்டா! நல்ல வேளைக்கு நான் அங்கிருந்தேன். இல்லேன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா!” என்று இயல்பாகச் சொல்லி எல்லோரையும் நம்ப வைக்க முயன்றேன். ஆனால் அப்போதும் சிலர் நம்பாமல் சந்தேகத்தோடயேதான் அவளையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தனர்.
அவளை அங்கே தேடிச்சென்ற வெறுங்கையோடு திரும்பி வந்த என் நண்பன் சூசை வெறிக்கொண்டவனாய் இதெல்லாம் நாடகம் என்று பாய்ந்துக் கொண்டு கோபத்தில் கழுத்தை நெறிப்பது போல கைகளை கொண்டு வந்தான். அருகிலிருந்தவர்கள் பின்னாலிருந்து ஒரு மடக்காக அவனை மடக்கி, பிடித்து நிறுத்திவிட்டனர். திமிறியபடி நான்தான் அவளுக்கு உதவியது என்று திரும்ப திரும்ப கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். இதெல்லாம் உனக்கு தேவையா என்று என் அம்மா வழக்கம் போல என்னைத் திட்டிக்கொண்டே வீட்டிற்கு தரதரவென இழுத்து வந்தாள்.
தன்னுடைய மனைவியை அப்படி நாலு பேர் நாலு விதமாய் பேசுவதையும், பேசியதையும் மைக்கேல் அண்ணனால் தொடர்ந்து ஜீரணிக்க முடியவில்லை. சில நாட்களிலேயே குடும்பம் சகிதமாய் சென்னை சென்றுவிட்டனர். அதற்கப்புறம் அவர்கள் ஊர் பக்கமும் வரவேயில்லை. ஊரில் எத்தனையோ நடந்திருக்கின்றன. எந்த தேவைகளிலும் கலந்து கொண்டதுமில்லை.
அவர்களுடைய பெற்றோர்கள் தான் இருந்தவரை அவ்வப்போது அவர்களைச் சென்றுப் பார்த்து வந்தனர். வருடங்கள் செல்ல செல்ல ரெஜினாவைப் பற்றிய கதைகளும் பேச்சுகளும் சொந்தங்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துப் போனது. ஆனால் எல்லாவற்றையும் மறந்திருப்பார்களா என்ன?
காலங்கள் எப்படி உருண்டோடி விட்டன! மெர்சிக்கு அதாவது அவர்களுடைய மகளுக்கு கல்யாணமாம், அதற்காக வேண்டிதான் சொந்தங்களுக்கு மட்டும் சொல்ல வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு அவளைப் பார்க்க வேண்டும் போலத்தான் இருந்தது. அதே நேரம் நான் சென்று, அன்று நடந்த விசயங்களை யாரும் நினைவுக் கூர்ந்து, மீண்டும் அவளுடைய கடந்த காலத்தை மனதளவில் கூட அசைப்போட்டுப் பார்க்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நான் விரும்பவில்லை.
மேலும் அவர்கள் சென்னை சென்றுவிட்ட பின்னர் அவளைப் பற்றி புதிய எந்த ஒரு தவறான செய்திகளும் வராமலும், பரவாமலும் இருந்தததே மனதிற்கு அவ்வளவு நிம்மதியாகயிருந்தது. வந்தவர்கள், வந்த வேலை முடிந்து நல்லபடியாக ஊர்ப் போய் சேரட்டும்; இப்போதைக்கு புதிய பிரச்சினைகளென ஏதும் எழாமல் இருந்தாலே போதுமானது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில்தான் பக்கத்தில் ரெஜினாவின் குரல் கேட்க ஆரம்பித்தது.
இப்போது ரெஜினாவின் பூர்வீக வீட்டில் அதாவது பக்கத்து வீட்டில் அவளது தாய்மாமன் மகள் ஜெனிஃபர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறாள். அவளுடனோ அல்லது வேறு யாருடனோ பேசியபடி ரெஜினா வெளியே வந்துக் கொண்டிருப்பது போல மனக்கண்ணில் குரலை வைத்து காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.
இப்போது முன்பு சொன்னது போல் பதுங்க மனமில்லாமல், அவளுடைய சந்தோசமான முகத்தை ஒரு முறை தரிசிக்க வேண்டும் போலிருந்தது. சட்டெனத் துளிர்த்த ஒரு குறும்புன்னகையுடன் நிலைப்பக்கமே நின்றுக் கொண்டிருந்தேன்.
தனது கணவனுடன்தான் பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் போலும், மைக்கேல் அண்ணன் பார்க்க மிகவும் களையாகத் தெரிந்தார். சிலர் வயதானால்தான் அழகாய் தெரிவார்கள் போலும். அதோ அவரை உரசியபடி நாற்பது வயதை தாண்டிய தேவதை ரெஜினா எதையோ விளக்கிக் கொண்டிருக்கிறாள். அது யார் யார் வீட்டிற்கு செல்வதென்ற விபரங்களாகக் கூட இருக்கலாம். நின்றுக்கொண்டிருந்தபடி எதார்த்தமாக அவர்கள் முகங்கள் மலர்ச்சியோடு எங்கள் வீட்டுப் பக்கம் திரும்புகின்றன. கதிர்கள் பட்ட சூரிய காந்தியாய் நானும் மலர்கிறேன். அதோ வாய்க்காலில் வரும் ஆறு வெள்ளமாய் அவர்கள் பொங்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள்..!
“வாங்க வாங்க..!” என்று வரவேற்றபடி என் கைகளும் கால்களும் இங்குமங்கும் ஓடுகின்றன. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டன. மனைவி கருணை மேரி சத்துணவுக் கூடத்தில் வேலை முடிந்து இன்னும் திரும்பவில்லை. நான் கத்தாரில் வேலைப் பார்க்கிறேன். ஆண்டவர் புண்ணியத்தில் நானும் இந்த நேரத்தில் ஆண்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறேன். பேச்சுகளினூடே பார்வைகளால் தத்தம் பூரிப்புகளைப் பரிமாறிக் கொண்டோம்.
“அப்ப வீட்ல நீ மட்டும்தா இருக்கியா? எல்லாரையும் பாத்துல சொல்லலாம்னு வந்தோம்!” மைக்கேல் அண்ணன் சொன்னாலும் அது ரெஜினாவின் குரல் போலக் கேட்டது. அவள் முகமெல்லாம் புன்னகையாக மைக்கேல் பேச்சுக்கு தலையாட்டியதே நூறு அழைப்பிதழ்கள் கொடுத்து என்னை அவசியம் கலந்து கொள் என்று கூப்பிடுவது போலிருந்தது.
“அம்மா இல்ல?” ரெஜினாதான் விசாரித்தாள். அம்மா கொல்லைப்பக்கம் இருக்கிறாள் கூப்பிடுகிறேன் என்றேன். இல்லை நானே சென்றுப் பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே அம்மா வந்துவிட்டாள்.
“ரெஜினா..! நல்லாருக்கியா? பாத்து எம்புட்டு வருசமாச்சி! என்ன மவளுக்கு கல்யாணமா? மாப்பிள்ளைக்கு எங்க வேல? மைக்கேலு..! நல்லாருக்கியாப்பா? மொகமெல்லாம் தெளிச்சயா இருக்கே! மவளுக்கு கல்யாணமாவுற சந்தோசமா? பாக்க சினிமாக்காரனாட்டம்ல ஜம்மு இருக்க! மெட்றாசுல கிரேனேட்டு பிசினஸ் பண்றீயளாமே..! நல்லாருங்க! நல்லாருங்க!” அம்மா முன்பு போல இல்லை! எனக்கு கல்யாணமானதிலிருந்து எனது மனைவியைத் தவிர அவளுக்கு எல்லோரும் நல்லவர்களாகவும் குற்றம் குறையற்றவர்களாகவும் தெரிகிறார்கள்.
நானும் ரெஜினாவும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம்.
***
நான் இத்ரீஸ் யாக்கூப். புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி எனது ஊர். நுண்ணுயிரியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தற்சமயம் அமீரகத்தில் வேளாண்மைச் சார்ந்த நிறுவனமொன்றில் தரக்கட்டுப்பாடு பிரிவு மேலாளராக பணிப் புரிந்து வருகிறேன். எழுத்து, இசை மற்றும் ஓவியத்தில் பள்ளிக்காலங்களிலிருந்தே ஆர்வங்கள் உண்டு என்றாலும் முகநூல் நண்பர்கள் தந்த ஊக்கத்தில் சமீபத்திலேயே கதைகள் எழுத தொடங்கியிருக்கிறேன். இந்த வருடம் பிப்ரவரியில் எனது முதல் நூலான “ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்” என்ற நாவலை கோதை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் எனது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை மற்றும் கலகத்தில் இதுவரை வெளிவந்துள்ளன.