ரோஸியும் வெள்ளையம்மாவும் –

சரிதா ஜோ

000

வீட்டின் மதில் சுவரில் பதுங்கி அமர்ந்திருப்பவர்கள் போல் மதில் சுவரின் வெளியே மதில் சுவரை ஒட்டியுள்ள எலிவங்கையே பார்த்தபடி கிட்டத்தட்ட அரைமணி நேரமாக கண்ணை சிமிட்டாமல் அதே இடத்தை பார்த்து அமர்ந்து கொண்டு இருந்தாள் டயானா. நானும் காம்பவுண்ட் கதவுக்கு அருகே படுத்து சற்று கண்ணயருவதாகவும் அவளைப் பார்ப்பதுமாகவே இருந்தேன். திடீரென்று தாவிக் குதித்தாள் டயானா. நான் வெளியே ஓடி சென்று பார்த்த பின் தான் தெரிந்தது அதன் வாயில் அது ஒரு கொழுத்த எலியோடு ஓடிக்கொண்டிருந்தது. அட இதற்கு தான் இப்படி வெறிச்சு பாத்துக்கிட்டு இருந்தாளோ என்று எண்ணிக்கொண்டே மீண்டும் பழைய இடத்தில் வந்து படுத்துக்கொண்டேன்.

முதலில் வீட்டு மதில் சுவரின் மேல் மட்டும் அமர்ந்து கொண்டு எலிகளைப் பிடித்து படிப்படியாக வீட்டு அப்பாவின் அபிமானம் பெற்று உள்ளே வந்து தைரியமாக உலவ ஆரம்பித்தாள் டயனா. கொஞ்சம் கொஞ்சமாக வந்தவள் பெரும்பான்மையான நேரம் இங்கேயே இருக்க ஆரம்பித்தாள். தினமும் காலை மாலை இரு நேரமும் டயானாவிற்குப் பால் சோறு போட்டார்கள்.

எனக்குப் பெரும்பாலும் தயிர் சாதம் தான். வாரத்தில் ஒரு நாள் அசைவம் அதுவும் அப்பாவின் மூத்த மகன் அசைவம் சாப்பிடும் நேரங்களில் கொடுப்பான். மற்ற மூவரும் சைவம் என்பதால் சைவம் தான். எப்படியும் தினமும் இரவு முட்டை தோசையோ முட்டை சாதமோ கிடைத்துவிடும். அதுவும் இல்லை என்றால் எனக்கு கஷ்டம் தான். ஏனென்றால் எனக்கு அசைவம் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் தயிர் சாதத்தையும் சாப்பிடுவது ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது எனக்கு.

சரி டயானாவின் கதைக்கு வருவோம்.

டயானா அப்பாவின் அபிமானம் பெற முக்கியக் காரணம் வீட்டைச் சுற்றி மதில் சுவரின் கீழே ஏராளமான எலிகள் வங்கு போட்டு வாழ்கின்றன. அந்த வங்கு கட்டிடத்திற்கு சேதம் விளைவிப்பதாக அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் டயானா வந்தாள். டயானா வந்தபின் அந்த எலிகளைப் பிடிக்க ஆரம்பித்தாள். அதனால் அப்பாவிற்கு என்னைவிட அவள் மீது சற்றே பிரியம் அதிகம்.

 நாட்கள் நகர்ந்தன. இடையில் ஒருமுறை டயானா குட்டிகள் போட்டாள். டயானா இப்போது தன் குட்டிகளோடு உலவ ஆரம்பித்திருந்தாள். எப்போதாவது இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்வோம். அப்பொழுது கூட முறைத்துக் கொண்டேதான் இருப்பாள். எனக்கு போடும் தயிர் சாதம் கூட டயானா சாப்பிட ஓடுவாள் நானும் விட்டுவிடுவேன். எனக்கு எப்பவுமே அவள் மீது ஒரு தனி பிரியம் உண்டு. அவள் சாப்பிட்டு முடித்த பின்பு தான் சாப்பிடுவேன்.

அந்த நேரத்தில் வீட்டின் இரண்டாவது மகன் நகுல் அவன் அம்மாவை அழைத்து “அம்மா பாரும்மா நம்ம ரோஸி நல்ல ரோஸி. நம்ம ரோஸிக்கு வைத்த சாப்பாட்டை டயானா சாப்பிட்டுட்டு இருக்கிறதைப் பார்த்தும் கூட நம்ம ரோஸி டயானா சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் சாப்பிடுது” என்று கூறும் நேரத்தில் எனக்கு சற்றே பெருமையாக இருக்கும். அவளுக்காக என்னுடைய சாப்பாட்டை பெரும்பாலான நேரங்களில் விட்டுக்கொடுத்து இருக்கிறேன்.

ஒருநாள் நல்ல குளிர்கால மாலை நேரம் காற்று விசுவிசுவென்று வீசிக் கொண்டிருந்தது. நான் வீட்டின் முன்னால் முசுமுசு வென்று போடப்பட்டிருந்த கால்மிதி மீது என்னுடைய வாலை உடம்போடு சேர்த்து சுருட்டிப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த டயானா ஒரு மூலையில் பதுங்கி அமர்ந்து கண்ணயர ஆரம்பித்தாள்.

நீண்ட நாட்களாகவே டயானாவிடம் ஏதாவது பேசவேண்டும் என்று எண்ணி பேச ஆரம்பித்தவுடன் வெளியே ஓடி விடுவாள். அல்லது நான் பேசுவதை கேட்டு உள்ளிருந்து வந்த அம்மாவோ அல்லது நகுலோ “என்ன ரோஸி சும்மா லொள்ளு லொள்ளுன்னு கத்திட்டு என்னாச்சு சும்மாயிரு” என்று ஒரு செல்ல அதட்டல் போடுவார்கள் நான் உடனே அமைதியாகி விடுவேன்.

இன்று வீட்டில் யாரும் இல்லை இதுதான் சரியான நேரம் என்று மெதுவாக “டயானா” என்று அழைத்தேன்.

மாறாக டயானா எதுவும் பேசாமல் என்ன என்பது போல் முறைத்து பார்த்தாள்.

“உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்” என்றேன். அதன்பின்னும் எந்தப் பேச்சும் இல்லை. அதே முறைப்பு. “நீ பயப்படாத நான் உன்னோட ஃப்ரண்ட் தான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்” என்று எனது வலது கையை தூக்கி பிராமிஸ் என்றேன்.

மெதுவாக வாய் திறந்தாள் டயானா.

“என் பெயர் டயானா என்று யார் சொன்னது” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“இல்லே அம்மா தான் டயானா என்று உன்னைக் கூப்பிடுவாங்க நீ வெள்ளையா புசுபுசுன்னு இருக்கிறயா அதனால அந்தப் பேரு வச்சிருப்பாங்கன்னு நினைத்தேன்” என்று நான் சொன்னவுடன்,

“என் பெயர் வெள்ளையம்மாள். என்ன போயி டயானா குயானான்னு எனக்குப் பிடிக்கவே இல்லை” என்றாள் கோபத்தோடு.

அடடா உன் பேரு வெள்ளையம்மாவா ? இத்தனை நாளாக டயானா என்று அழைத்ததுக்குதான் கோவமா? சொன்னால் தானே தெரியும் எங்களுக்கு” என்றேன் நான்.

உர்ர்ரென்ற முகம் மாறி சகஜமானாள் டயானா இல்லை இல்லை வெள்ளையம்மாள்.

“உனக்கு யார் இந்தப் பெயரை வைத்தது? நீ எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டேன் நான்.

“அதுவா அதோ எதிரில் இருக்கிற அபார்ட்மெண்ட்ல். மூன்றாவது மாடியில் இருக்கிற ஆடிட்டர் வீட்டில்தான் வளர்ந்தேன். ஆடிட்டர் பொண்ணு நிஷாதான் எனக்கு வெள்ளையம்மாள் என்று பெயர் வைத்தார். அங்கே நான் ரொம்ப சொகுசாக இருந்தேன். எனக்கு என்றே தனியாகக் குட்டி வீடு, குட்டித் தலையணை, குட்டிப் படுக்கை, சாப்பிட எனக்குன்னு தனியாக குட்டி பவுல். அதுமட்டுமா எனக்கே எனக்குன்னு தனியாக சோப்பு, சீப்பு,டவல்,ஷாம்பு கூட இருந்தது. இப்படித்தான் ரொம்ப மகிழ்வாக என்னோட வாழ்க்கை இருந்தது. ஆடிட்டருக்குப் பணிமாற்றம் கிளம்ப வேண்டிய நாள் வந்தது.

எல்லோரும் வண்டியில் ஜாமான்களை ஏத்திட்டு இருந்தாங்க. அந்த நேரம் பார்த்து என்னோட பிரண்டு போண்டா அங்கு வந்தான். எப்பவுமே வீட்டுக்குள்ளேயே இருந்த எனக்கு புது உலகத்த காட்டியவன் அவன் தான். அவனோட விளையாடிட்டே வெளியே போனேன். அவன் அன்று எனக்காகக் காட்டு எலியை வேட்டையாடி வைத்திருந்தான். ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுவிட்டு அசதியில் அங்கேயே ஒரு தூக்கம் போட்டுவிட்டேன் நேரம்போனதே தெரியவில்லை. திரும்பி வந்து பார்த்தபோது நான் இருந்த வீட்ல யாருமே இல்லை”என்றாள் வெள்ளையம்மாள்.

“அச்சச்சோ அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டேன் நான்.

“அப்போதான் எதிர் வீட்டு அம்மா என்ன வெள்ளே இப்போ வந்திருக்கிறாய். இவ்வளவு நேரம் வரை காத்திருந்து காத்திருந்து நிஷா கூட அழுதுக்கிட்டே இப்பொழுதுதான் கிளம்பிப் போனாங்க, என்று என்னைத் தூக்கி செல்லம் கொஞ்சினார். அதன் பிறகு கீழே விட்டுவிட்டார். நாட்கள் நகர்ந்தன ஓரிரு நாட்கள் எதிர் வீட்டு அம்மா சாதம் வைத்தார். பிறகு அதுவும் நின்று போனது”என்றாள் வெள்ளையம்மாள்.

“பிறகு சாப்பாட்டுக்கு என்ன செய்தாய்?” என்று கேட்டேன் நான்.

“என்னுடைய தோழன் போண்டாவோடு சேர்ந்து எங்கெங்கயோ சுற்றித் திரிந்தேன். ஒரு நாள் நல்ல தீனி கிடைக்கும். ஒரு நாள் இருக்காது. இப்படித்தான் நாட்களை நகர்த்தினேன். அவனோடு இருந்த நாட்களில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்” என்றாள் டயானா.

“அப்படி என்ன கற்றுக்கொண்டாய்?” என்று டயானாவிடம் கேட்டேன்.

“முதலில் எந்த மனிதரைக் கண்டாலுமே ஓடிச் சென்று அவர்களின் காலின் அடியில் நின்று அவர்களைப் பாவமாகப் பார்த்து என்னைச் செல்லம் கொஞ்சுங்கள் என்று அவர்களின் காலில் சென்று என் முதுகை உரசுவேன். கெஞ்சுவது போலப் பார்ப்பேன். பெரும்பாலான மனிதர்கள் என்னை தூரத்துவதிலேயே குறியாக இருப்பார்கள். சிலர் என்னை உதைத்தார்கள். வீட்டில் இருக்கும்போது மனிதர்கள் மீது இருந்த அபிப்ராயம் தெருவுக்கு வந்ததும் எனக்கு மாறியது. பிறகு மனிதர்களைப் பார்த்ததும் ஓடவும் ஆரம்பித்தேன். இதை எனக்குப் போண்டாதான் கற்றுக் கொடுத்தான்” என்றாள் டயானா.

“இங்கு எப்படி வந்து சேர்ந்தாய்?” என்று நான் கேட்டேன்.

 “ஒருநாள் எதேச்சையாக உள்ளே வந்தேன். ஒரு தட்டில் தயிர் சாதம் வைக்கப்பட்டிருந்தது. வயிறு முட்ட சாப்பிட்டேன். பிறகு தான் தெரிந்தது அது உனக்காக போட்டு வைத்த சாப்பாடு என்று. பிறகு இங்கேயே தங்க ஆரம்பித்தேன்”என்றாள் டயானா.

“சரி உன் நண்பன் போண்டா என்ன ஆனான்?”என்று வெள்ளையம்மாவைப் பார்த்து நான் கேட்டேன்.

“நான் இங்கு வந்து சேர்ந்த நாட்களில் தான் என் நண்பன் போண்டாவைத் தொலைத்துவிட்டேன். போண்டவைக் காணவில்லை. எங்கு தேடியும் இன்றுவரை கிடைக்கவில்லை. தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். அப்பொழுது நான் என் வயிற்றில் என் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருந்தேன். இந்த இடம் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று இங்கேயே இருக்க ஆரம்பித்தேன்”என்றாள் டயானா.

“உன் நண்பன் உன்னை போல் பூனையா? அல்லது என்னைப்போல் நாயா?” என்று வேள்ளையம்மாவிடம் கேட்டேன்.

“பூனைதான்” என்றாள் மகிழ்வோடு.

“எல்லாம் சரி இவ்வளவு நாள் ஆகிவிட்டது தினமும் சாதம் வைக்கிறார்கள் அப்படியிருந்தும் இந்த வீட்டில் இருக்கும் ஆட்கள் யாரைப் பார்த்தாலும் சீறிக் கொண்டே தான் இருக்கிறாய் ஏன்?” என்று நான் கேட்டேன்

“அதுவா? அது என்னதான் பழகினாலும் சில நேரங்களில் யாராவது மீது இருக்கும் கோபத்தில் நம்மை அடித்து விடுவார்கள் நான் என்னைக் காத்துக் கொள்ள அடிக்கடி சீறுவேன் ஆனால் கடிக்க மாட்டேன்” என்றாள் வெள்ளையம்மாள்.

“பரவாயில்லையே! இது கூட உன் நண்பன் போண்டா கற்றுக்கொடுத்ததோ” என்று நான் கேட்டேன்.

“ஆமாம் ஆமாம்” என்றாள் வெள்ளையம்மாள்.

“ஆனால் இங்கே இருக்கிறவர்கள் யாரும் அடிக்க மாட்டார்கள். நம்மை மிகவும் பாசமாகப் பார்த்துக் கொள்வார்கள். இத்தனை நாள் இங்கிருந்தும் அது கூட உனக்குத் தெரியலையா?” என்று வெள்ளையம்மாவிடம் கேட்டேன் நான்.

“தெரியுது என்ன செய்வது பழக்க தோசம் கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு வருகிறேன்” என்றாள் வெள்ளையம்மாள்.

  “அது சரி உன் குழந்தைகள் எங்கே?”அப்பப்போ எப்பொழுதாவது கூட்டிட்டு வந்து இருக்கிறாய்” என்று நான் கேட்டேன்.

 “அதோ புதிதாகக் கட்டிட வேலை நடக்குது இல்லையா” என்று பக்கத்தில் புதிதாக கட்டிக் கொண்டிருந்த அப்பார்ட்மெண்டை நோக்கி காண்பித்தாள் வெள்ளையம்மாள்.

 “உன்னோட குழந்தைகள் அங்க தான் இருக்கறாங்களா?” என்று நான் கேட்டேன்.

 “ஆமாம் இப்பதான் வளர ஆரம்பிச்சு இருக்காங்க. அப்படியே வெளியிலயும் வர ஆரம்பிச்சிருக்காங்க” என்றாள் வெள்ளையம்மாள்.

 “வெள்ளையம்மா எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. ரொம்பப் பிடிச்சிருக்கு என்னை உன்னோட நண்பனாக ஏற்றுக் கொள்வாயா?” என்று வெள்ளையம்மாவிடம் கேட்டேன்.

 “சரி ஏற்றுக்கொள்கிறேன். என்று கூறிவிட்டு.. “நீ எப்படி இங்க வந்தாய்?” என்று என்னை பார்த்துக் கேட்டாள் வெள்ளையம்மாள்.

“அது ஒரு பெரிய கதை என்னோட பிறந்தவங்க மொத்தம் ஆறு பேர். நான் இருந்த இடம் ஒரு அப்பார்ட்மெண்ட்டின் எதிரில் இருக்கும் காருக்கு அடியில். அந்தக் காரின் ஓனர் எங்களுக்காக அந்த காரை வெகு நாட்களாக அதே இடத்தில் நிறுத்தி வச்சுட்டாங்க” என்றேன் நான்.

“அதிசயமாக இருக்கே எதுக்கு நிறுத்தி வெச்சாங்க? இந்த காலத்தில்கூட இப்படி மனுஷர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டாள் வெள்ளையம்மாள்.

“ஏன்னா நாங்க ஏழு பேரும் ரொம்ப குட்டியா இருந்தோம். அப்போதான் பிறந்து இருந்தோம். அதனால் அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டார். அந்தக் காருக்கு அருகிலேயே ரோடு ஒன்று இருந்தது. அங்கே வண்டிகள் அதிகமாக வந்து சென்றுகொண்டே இருக்கும். காருக்கு அடியிலிருந்து வெளியில் வந்த என்னோட தங்கை ஒருத்தி ரோட்ல வந்த பஸ்சில் அடிபட்டு இறந்துவிட்டாள்” என்றேன் நான்.

“அச்சச்சோ அதுக்கப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டாள் வெள்ளையம்மாள்.

“அதன்பிறகு என்னோட அண்ணன் ரெண்டு பேரையும் யாரோ வந்து எடுத்துட்டு போயிட்டாங்க. பிறகு என்னோட தம்பியை அந்தக் காரின் ஓனரே எடுத்துட்டு போயி அவரோட தோட்டத்தில் பாதுகாப்புக்காக விடரதா பேசிக்கிட்டு இருந்தாங்க. அடுத்த நாளே என் தம்பியும் எடுத்துட்டு போயிட்டாங்க. நானும் ரெண்டு தங்கைகளும் அம்மாவும் பயந்து பயந்துதான் அங்க இருந்தோம். ஹாரன் சத்தம் கேட்டாலே ரொம்பப் பயமா இருக்கும் எனக்கு”என்றேன் நான்.

பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து “ஹாரன் சத்தம் கேட்டால் இன்னும் உனக்கு பயமாக இருக்குமா?” என்று கேட்டாள் வெள்ளையம்மாள்.

“இல்லை இல்லை இப்போதெல்லாம் எனக்கு பயம் இல்லை அப்போது நான் குழந்தையாக இருந்ததால் அப்படி இருந்திருக்குமோ என்னவோ” என்றேன் நான்.

“சரி சரி அப்புறம் என்ன ஆச்சு கதையைச் சொல்லு” என்றாள் வெள்ளையம்மாள்.

“தினமும் சாயங்கால நேரம் அந்தக் கார் ஓனரோட குழந்தைங்க வர்ஷாவும் தர்ஷனும் எங்களோட வந்து விளையாடுவாங்க, சாப்பாடு கொடுப்பாங்க, பிஸ்கட் கொடுப்பாங்க தூக்கி கொஞ்சுவாங்க இப்படித்தான் நாட்கள் போயிட்டிருந்தது” என்றேன் நான்.

“அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டாள் வெள்ளையம்மாள்.

“ஒரு நாள் எங்க அபார்ட்மெண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற கார் ஒர்க் ஷாப்புக்கு முன்னாடி நின்று கொண்டிருந்த காருக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டேன். திடீரென்று அந்தக் காரை எடுக்கும்போது கார் ஹாரன் சத்தம் கேட்டு ரொம்ப பயமா இருந்தது. வெளியில் ஓடி வந்த எனக்கு எந்த பக்கம் போவது என்று தெரியாமல் நடுங்கியபடி அங்கேயே நின்று கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் ஒரு சிறுவன் என்னைப் பார்த்து ஓடி வந்து என்னைத் தூக்கினான். அந்த சிறுவன்தான் அம்மாவோட பெரிய மகன் வினய். அப்பொழுதிருந்து தான் நான் இங்க இருக்கிறேன்” என்றேன் நான்.

“அப்போ இருந்து இங்கே வந்து ஜாலியா இருந்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லு” என்றாள் வெள்ளையம்மாள்.

“அப்படியெல்லாம் சொல்லிட முடியாது. என்னைப் பார்த்ததும் அப்பாவுக்கு முதலில் பிடிக்கலை”என்றேன் நான்.

“ஏன்? ஏன் பிடிக்கலை?” என்று கேட்டாள் வெள்ளையம்மாள்.

“ஏன்னா நான் ஒரு பொம்பளை நாய்க்குட்டியாம். நாளை கொண்டு போய் எடுத்த இடத்திலேயே விட்டுவிட்டு வா என்று வினயிடம் சொன்னாரு” என்றேன் நான்.

“அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டாள் வெள்ளையம்மாள்.

“ஆனால் நகுலும் வினயும் கொண்டு போய்விட மாட்டேன் என்று சொல்லிட்டாங்க. அப்புறம் அந்தன்னைக்கு நைட்டு அப்பா என்னைக் கொண்டு வந்து எடுத்த அதே இடத்துல விட்டுட்டு போயிட்டாரு யாருக்குமே தெரியாமல்”என்றேன் நான்.

“அடடா! அப்புறம் என்ன ஆச்சு எப்படித் திரும்ப நீ இங்க வந்தாய்? என்று கேட்டாள் வெள்ளையம்மாள்.

“மறுபடியும் அடுத்த நாள் அம்மாவும் வினயும் என்னைத் தேடி வந்து எடுத்து திரும்பவும் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க” என்றேன் நான்.

“அப்போ அப்பா ரொம்ப மோசம்னு சொல்றியா?” என்று கேட்டாள் வெள்ளையம்மாள்.

“அப்படியெல்லாம் சொல்லிட முடியாது முதல்ல கோபப்பட்டாலும் இப்ப அம்மாவையும் நகுலையும் வினயையும் விட அப்பாதான் நல்லாப் பாத்துக்கராரு” என்றேன் நான்.

“ஆமா ஆமா நானும் கூடக் கவனிச்சேன். வந்த நாளிலிருந்து எல்லாரையும்விட அப்பா என் மேலே ரொம்பப் பாசமா தான் இருக்காரு” என்றாள் வெள்ளையம்மாள்.

“அதுக்கப்புறம் வந்த கொஞ்ச நாளிலேயே ஊசி போட்டாங்க. மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு ஊசி போட்டாங்க. இங்க பக்கத்துல வீட்ல இருக்குற பூச்சி நாய் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்றேன் நான்.

“அதான் தெரியுமே அடிக்கடி பூச்சி இங்கு வருவதும் நீ அங்கே போவதும் விளையாடுவதும் நான் வந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்” என்றாள் வெள்ளையம்மாள்.

“அடிக்கடி நகுலும் வினயும் நம்ம ரோஸி மாதிரி பிறந்திருக்கணும் என்று என்னை கட்டிப்பிடித்து செல்லம் கொஞ்சுவார்கள்”என்றேன் நான்.

வெள்ளையம்மாள் வாய்விட்டு சிரித்து விட்டாள்.

“எதற்காகச் சிரிக்கிறாய்?” என்று கேட்டேன்.

“நம்ம படுகின்ற கஷ்டம் தெரிந்தால் நம்மளை மாதிரி பிறக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டாங்க. சரி சரி மீதிக் கதையைச் சொல்லு” என்றாள் வெள்ளையம்மாள்.

“கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி எனக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. அந்த ஐந்து குழந்தைங்களும் கொஞ்ச நாளில் இறந்துவிட்டன”. என்றேன் நான்.

“அச்சச்சோ ஐந்தும் செத்துப் போச்சா? எப்படி?” என்று பரிதாபத்தோடு கேட்டாள் வெள்ளையம்மாள் .

“அது எப்படினே தெரியலை. எல்லாருமே வருத்தப் பட்டாங்க . ஏதோ டாக்டர் போட்ட ஊசில இப்படி நடந்துவிட்டது என்று அதைப் பற்றி இங்கே எல்லோரும் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்போது மறுபடியும் என்னோட வயிற்றில் குழந்தைகள் இருக்கு” என்றேன் நான்.

“அட என் கதையை விட உன்கதை பெருகதையா இருக்கும் போல இருக்கே”என்றாள் வெள்ளையம்மாள்.

“இது மட்டும் இல்ல இன்னைக்கும் இந்த வீட்டுக்கு புதுசா யாராவது வந்தா எதுக்கு பொட்டை நாயை வளர்க்கறீங்க நீங்க? என்றுதான் கேட்பாங்க” என்றேன் நான்.

அந்த நேரம் பார்த்து ஹாரன் சத்தம் கேட்டது. “ஆஹா வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க” என்று நான் கூற இருவரும் அவரவர் இடத்தில் சென்று அமைதியாகப் படுத்துக் கொண்டோம்.

000

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிளும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *