சில முஸல்மானின் கண்ணீர் கவிதைகள்

+

பிஸ்மி சொல்லிட்டு சாப்பிடுடா

பஷீர் என்றாள் பூவா

சாப்பிடும் போது ஒரு பருக்கையை கூட

வீணாக்கிட  கூடாது

சிந்தாம சாப்பிடுவதே நன்மை என்றாள் தாதி 

முகம்மதுவே தூதர்

குரானே வேதம் 

ஐந்து வேலை தொழுகையே சொர்க்கம் என்றார் தாதா

வட்டி வாங்காதே ,விடாதே

குடி,பெண், பிறர் உயிர் கொல்லுதல் பாவம்

ஹலாலான காரியமே

அல்லாஹ்வுக்கு பிடிக்குமென

மதரஸாவில் அஜிரத் ஹதீஸ் வாயிலாக

அறிவுரை சொன்னார்

சினிமா கூடாது

கலை கூடாது

பாடல்,நடனம் கூடாது

ஐ வேலை தொழு, உண்மையாய் உழை

உறவுகளை நேசி,

இயலாதவர்களுக்கு உதவி செய்

இவ்வுலகம் நிரந்தரமில்லாதது

மறுமைக்காக அல்லாஹ்வுக்காக

அஞ்சி வாழ்

இப்படி தொட்டதுக்கெல்லாம்

இறைவனின் ஏக வசனங்கள்

குடும்பத்தாரின் வாய்மொழியில்

செவிவழியே சென்று பயமுறுத்தி

அவனை போல் பலரை

ஒழுங்காய் வாழ செய்தது. 

இப்படி உலகை அறியா 

இது மாதிரியான

கடவுள் பற்று கொண்ட கூட்டத்திற்கு

வளர்ந்த  நாடுகள் உருவாக்கிய

சியா -சன்னி இன சண்டைகளின்

உலக அரசியல் தெரியாது

சுன்னத்துல் ஜமாத் -தவ்ஹீத் -தப்லீக்-நஜாத் என்று

இன்னும் தெருக்கு

மூன்று, நான்கு தினம் தினம் தோன்றி

ஒரு குடும்பத்துக்குள்ளயே விரோதியாக்கும்

உள்ளூர் அரசியல்வாதிகளின்

சீட்டு அரசியலை

அவனை போல,

அவன் கூட்டத்தாரும் உணரவே இல்லை

குழு,குழுவாய் பிரிந்து

ஒற்றுமையில்லாமல் திரியும்

அவனும்,அவர்களும்

பெரும்பான்மைகளின் பார்வையில்

சிறுபான்மை தான்

படிப்புக்காக கவலைப்படாதவன்

பக்கத்து தெரு  நானி

மைத்தா போகவும் 

அழுது கொண்டே பாத்தியா ஓதினான்

தன் வீட்டில் வேலைபார்த்த

ஏழை வளர்மதி மகளுக்கு

ஐந்து சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைத்தான்

ரோட்டில் அடிப்பட்ட பூனையை

அருவெறுப்பில்லாமல்

மருத்துவமனை தூக்கி சென்று காப்பாற்றினான்

ஒரு நாள் ஆசையோடு

கருப்பு சட்டை போட்டு சென்றவன்

காவல்துறையிடம் அடி வாங்கி வந்தான்

அவன் துரதிஷ்டம்

அன்று டிசம்பர் ஆறாம்

ஏதோ ஒரு  நாள்

அவன் ஆபிஸில் அதிகம் வேலையாம்

கொஞ்சம் இரவு

அதிகமே இருட்டி விட்டது

ஊர் செல்ல

ரயில்வே ஸ்டேஷன் வந்தவனுக்கு

சரமாரி கேள்விகள்

தாடி வைத்திருக்கிறாயே

நீ எந்த இயக்கத்தை சேர்ந்தவன்?

சுதந்திரதினம் அதுவுமா

உங்களுக்கு இங்க என்ன வேலை?

இவனுங்களை நம்ப முடியாது

துலுக்கனுங்க

இப்படிதானே இருப்பானுங்க

நல்லா சோதனை செஞ்சிட்டு அனுப்புங்க என்றார்

ஒரு போலீஸ் அதிகாரி

சுற்றியிருந்த கூட்டம்

அவனை வித்தியாசமாய்

ஒரு தீவிரவாதியை போல் பார்த்தது

மாடு திங்குற பசங்க

எது வேணும்னாலும் செய்வானுங்க என்று

காது படவே

அருகிலிருந்த ஒரு கூட்டம் பேசியது

சந்தேகத்தின் அடிப்படையில்

விசாரிக்க கொண்டு சென்ற

மைதீன் அத்தா குற்றம் நிரூபிக்கப்படாமலே

பதினான்கு வருடம் சிறையில் கிடந்தே

செத்து போன கதை

அவன் கண் முன்னே வந்து போனது

அந்த நிமிடம்

அவன் முகம் பயத்தில் வெளிறி போனது

கழுத்தோரம் வியர்க்க தொடங்கியது

முதுகுத்தண்டில் யாரோ அடிப்பது போன்ற உணர்வு

சார் நீங்க நினைக்குற மாதிரியான பையன்

நானில்லை

பிராய்லர் சிக்கனை தவிர எதுவும் சாப்பிட மாட்டேன்

வீட்டுக்கு போனதும் தாடியை எடுத்திடுறேன்

ஆபிஸ்ல லேட் ஆயிடிச்சு

இனிமே லேட்டா ரயில்வே ஸ்டேஷன் வர மாட்டேன்

ப்ளீஸ் சார் என்னை விட்டிடுங்க

பூவா தேடுவாங்க என்றான்

பல சோதனைக்கு பிறகும்,

பல அவமானங்களுக்கு பிறகும்

மதக் குறி ஊர்ஜிதம் செய்யப்பட்டு

அவன் அனுப்பப்பட்டான்

வீடு சென்றதும்

முதல் வேலையாய் தாடி மழித்தான்

கவலை தோய்ந்த மகன் முகம் கண்டு

என்ன பசீரு ஏதாவது பூவாகிட்ட சொல்லணுமா என்றாள் ?

பூவா நான் வேணா

தாய்மதம் மாறிடட்டுமா???

தாய் மதம் மாறுன்னா

என்னை எதுவுமே செய்ய மாட்டாங்களே??

என அப்பாவியாய் கேட்டான்.

யா அல்லாஹ் என்றாள் பூவா !!

+++

நீங்க என்ன ஆளுங்க ??

பச்சை பசேல் புல்வெளி

சிவந்த கண்கள்

பெரிய நீளமான அழகான காது

எதையோ கொரித்து கொண்டிருந்தது

அந்த மொசு ,மொசு பிராணியின்

பெயரென்ன?

முயல் என்றனர்.

என்னை பார் யோகம் வரும்

ஏதோ ஒரு மளிகை கடை

புகைப்படத்தில் பார்த்ததாய் ஞாபகம்?

துணி துவைக்கும் தொழிலாளர்கள்

பொதி சுமக்க

அழைத்து செல்வதுண்டு

சாம்பல் நிறமுடைய

அந்த விலங்கின் பெயரென்ன ?

கழுதை என்றனர்

வேகமாய் சீறி கொண்டு ஓடும்

கடிவாளம் இதற்கு உண்டு

சதுரங்க விளையாட்டிலும் கண்டதுண்டு

பழைய ராஜாக்கள் பெருமையாய்

வளர்த்ததாய் வரலாறுண்டு

யானைக்கும் அடிசறுக்கும்

இவனுக்கு சறுக்கினால் கூட

துள்ளி குதித்து ஓடிடுவான்

கம்பீரமாய் இருக்கும்

கால்களுக்கு காலணி அணிந்த

அவன் பெயர் என்ன?

குதிரை என்றனர் . 

பாலைவன கப்பல் என்றனர்

முதுகில் கூனோடு சுமந்த

அந்த ஷேக் நாட்டில்

அதிகமாய் காணப்படும்

அந்த விலகின் பெயரென்ன ?

ஒட்டகம் என்றனர்

கா ,கா என கரைந்தான்

இவன் கரைவது

விருந்தாளி வருவதற்கு அடையாளமாம்

திதி ,படையல் கூட

இவன் உண்டே பிறகே

நமக்கு கிடைக்கும்

ஒற்றுமையின் மறுபெயர்

கரெண்ட் கம்பிகளில்

சில நேரம் மரண ஊஞ்சலாய்

இவன் வாழ்க்கை ?

நம் மூத்தோர்களின் முன்னோடியான

இவன் பெயரை

காக்கா என்றனர்.

அது வாலாட்டியது

உண்ட சோத்துக்கு அது

ரெண்டகம் பார்க்காது

ஜாக்கிரதை என்று போர்டு வைத்தாலும்

நம்மிடமிருந்து தான்

அவனை பாதுக்காக்க வேண்டும்

நன்றியின் மறுஉருவமான

அவன் பெயரை நாய் என்றனர்

இரண்டு கால் ,இரண்டு கை

கண் ,காது ,மூக்கு இன்னும்

சில உறுப்புகள் இருந்தது

வித ,விதமாய் உடையணிந்து இருந்தார்கள்

கலர் பூச்சு பூசியிருந்தார்கள்

சிலர் கருப்பாகவும் ,வெள்ளையாகவும் இருந்தனர்

பட்டை போட்டவனை இந்து என்றனர்

சிலுவை போட்டவனை கிருத்துவன் என்றனர்

குல்லா போட்டவனை முல்லா முஸ்லீம் என்றனர்

ஏனோ எவனும்

அவர்களை மனிதனாகவே சொல்லவில்லை

சாதி ,மதம் எதுவும் வேண்டாம் என்று

ஒதுங்கிய கூட்டத்தை பார்த்து

மனிதம் செத்த கடைசி உலகத்தில் இருந்து

கடைசியாய் ஒருவன் கேட்டான்

நீங்க என்ன ஆளுங்க என்று ?!!

++

லி.நௌஷாத் அலி 

என்கிற நான் முதுநிலை மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவன் .கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவன், வந்தாரை வாழ வைக்கும் வந்தவாசியில் வளர்ந்தவன்.

இதுவரை கவிதை -கதை என என்னுடைய படைப்புகள் நூற்றுக்கும் மேற்பட்டவை பல தினசரி நாளிதழிலும், வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது .

கவிதை -கதை என இதுவரை  இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்…

என்னுடைய படைப்புகளை  மணிமேலை பிரசுரம் 11 புத்தகங்களையும் , காகிதம் பதிப்பகம் மூன்று புத்தகங்களையும், ஓவியா பதிப்பகம் ஒரு புத்தகத்தையும் – PGK  ஆர்ட்ஸ் ஒரு புத்தகத்தையும் , நண்பர்கள் பதிப்பகம் நான்கு புத்தகத்தினையும் வெளியிட்டு உள்ளது. .மதி பதிப்பகம் வெளியிட்ட ஐம்பது படைப்பாளிகளின் இரண்டு கவிதை தொகுப்பு நூல்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *