பீனா உன்னிகிருஷ்ணனின் The whispers of the unseen நூலை முன்வைத்து ,

யோகினிகள் பற்றி நான் அதிகம் அறிந்ததில்லை. நண்பி ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு நூலை வாசித்தேன். அது பற்றி ஒரு குறிப்பு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்காக சில தகவல்களை தேடிப்படித்தேன். மேலும் தேடுகையில் 64 யோகினிகள் மர்மங்கள்-வரலாறு-வசியம்-வழிபாடு (வேணுஶ்ரீனிவாசன்) நூல் கிடைத்தது. வாசிக்க முடியாமல் விட்டுவிட்டேன். ஆங்கிலத்தில் இதுபற்றின நிறைய நூல்கள், கட்டுரைகள், தகவல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலனவற்றில் அடிப்படைத் தகவல் ஒரே மாதியாகத் தான் உள்ளன. சிறு கட்டுரை ஒன்று  64 யோகினிகளைப் பற்றியும், அவர்களின் பெயர்களையும் அறிந்து கொள்ள உதவியது.

யோகினிகள் யோகம் கொண்ட புனித பெண்கள், சக்தியின் வடிவம் அல்லது சிவனின் பெண் உதவியாளர்கள் அல்லது துர்கா என அறியப்படுகிறார்கள். பொதுவாக யோகினிகள் குழுக்களாகவே அறியப்படுகிறார்கள். எட்டு முக்கிய யோகினிகள் மங்கலா, பிங்கலா, தன்யா, பிராமரி, பத்ரிகா, உல்கா, சித்தி மற்றும் சங்கதா. இவர்கள் எட்டின் இருமடியாக 64 யோகினிகளாக செயல்படுகின்றனர். சப்த மாத்ரிங்கள் என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட ஏழு தாய் தெய்வங்கள் (இந்த ஏழு தாய் தெய்வங்கள் ஏன் உருவாக்கப்பட்டார்கள் என்பது பற்றி தனியான ஒரு காரணம் இருக்கிறது). தாய்மை அம்சத்தை அடையாளப்படுத்துகின்றன. இவர்கள் தர்க்கரீதியாக ஆழ்ந்த கருத்தியல் வரிசையை கொண்டவர்கள். சில நேரங்களில் சப்தமாத்ரிகள் பிரபஞ்சம் மற்றும் உயிர் வாழ்வினங்களின் வெவ்வேறு வடிவங்களின்  உருவாக்கத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறார்கள்.

பிராமி அல்லது பிராமணி -பிரபஞ்சத்தை உருவாக்கியவர்.

வைஷ்ணவி- பிரபஞ்சத்திற்கு ஒரு திட்டவட்டமான வடிவத்தைத் தந்தவர்.

மகேஸ்வரி- படைக்கப்பட்ட ஓவ்வொரு உயிரினத்திற்கும் தனிப் பண்புகளை அளித்தவர்.

கெளமரி- அபிலாஷைகளுக்கான சக்தியை வழங்குபவர்.

வாராஹி- சக்தியை ஒருங்கிணைத்து மகிழ்ச்சியை வழங்குபவர்

இந்திராணி- மகத்தான சக்தியின் வடிவம். பிரபஞ்ச விதிகளை மீறுபவர்களை அழிப்பவர்.

சாமுண்டா- ஆன்மீக விழிப்பிற்கான சக்தியை வழங்குபவர்.

இம்மதிப்புகளின் நீட்சியாகவே  64 யோகினிகள் குறிப்பிடுகின்றன. தாந்த்ரீகத்தில் இந்த 8, 64 என்ற எண்கள்  மிக முக்கியமானவை. மனதின் 16 நிலைகள், ஜந்துவகை உட்கூறுகள், பத்து உணர்வு உறுப்புகளையும் குறிப்பிடுகிறது. எ. கா. நிலவிற்கு 16 நிலைகள் உள்ளன. 15 நிலைகள் கண்ணிற்குத் தெரியும். 16வது கண்ணுக்குத் தெரியாது. அதேபோல் 16 நித்திய தேவதைகள், 16 சித்திகள் உள்ளன. யோகினிகள் இயற்கையெங்கும் வியாப்பித்துள்ள சக்தியின் பிரதிநிதிகள்.

ஒடிசாவில் ஹிராப்புரில் உள்ள 64 யோகினி கோவில் இந்தியவின்  தாந்தரீக வேர்களை நமக்கு காட்டுகிறது. வட்டவடிவில் அமைந்த பிரகாரம். மேற்கூறையில்லாத வானம் பார்த்த திறந்தவெளி அமைப்பு. 64 பீடங்களில் தங்கள் சுயத்தினை வெளிப்படுத்தும் வகையில் யோகினிகளின்  உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அமைக்கப்பட்டுள்ள விதம் வாழ்வின் முடிவின்மையை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. முடிவற்ற வட்ட வடிவம். மண்டலா(அ) யோகினி சக்கரம் ஆன்மீக சின்னமாக அறியப்படுகிறது.

பொதுவாக யோகினி கோவில்கள் தாந்தரீக சடங்குகள் மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக எளிதில் அணுகமுடியாத இடங்களில் உள்ளன. வானந்தரங்களில், மலைக்காடுகளில் தனித்து விளங்குகின்றன. இந்த நிலை ஆன்மீக ஆர்வலரான ஓர் சாதகன் தாந்த்ரீகத்தை இலக்காக கொள்வதில் உள்ள தடைகள், சிரமங்களை உருவகமாக வெளிப்படுத்துவதாகவும் கொள்ளலாம்.

64 யோகினிகளை 64 நிலைகள்(kalas), 64 ரதிபந்தங்கள், 64 பைரவர்கள், 64 நாயக்கிகள் மற்றும் 64 மனித உணர்வு நிலைகள் என தொடர்புபடுத்தலாம்.

முக்கிய கோவில்கள் கஜூரோஹா, சண்டல், மாரீனா மித்தவலி, கேதர்மால் மத்ரு மந்திர், துஹாஹை, ராணிப்பூர் மற்றும் ஹீராப்பூர் ஆகிய இடங்களில் உள்ளன. யோகினிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள முக்கிய புராணங்கள் அக்னி புராணம், மார்க்கண்டேயா புரணம், காளிகா புராணம், பாகவத புராணம், மத்ஸ்ய புராணம், கருட புராணம் , ஸ்கந்த புராணம், தேவு பாகவத புராணம். மாயதீபிகை, பிரதிஸ்த லக்‌ஷண ஸரஸமுஸ்தய்ய. சதுர்வர்க சிந்தாமணி, மற்றும் மதோத்ர தாந்த்ரா.

பல உருவ வடிவங்களில் யோகினிகள் சித்தரிக்கப்படுகின்றனர். பாலுட்டிகளாக, பறவைகளாக, விலங்கு முகம் கொண்டவர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர்.

+++

கேரளாவின் பழமைவாய்ந்த கொல்லம் நகரில் பிறந்தவர் பீனா உன்னிகிருஷ்ணன். இயல்பிலேயே தெய்வ நம்பிக்கை நிறைந்த குடும்பம். கேரளம் தாந்த்ரீகத்திற்கு புகழ்பெற்றது. பகவதி அம்மன் அவர்களது பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் பெரும் பங்கு வகிக்கும் தெய்வம்.

ஒருமுறை அவர்களது குடும்ப ஜோதிடர் கிருஷ்ணன் போத்தியை  சந்திக்கச் செல்கையில் அவர் இவரின் தாயாரிடம் பீனாவிற்கு காளியின் மீது பக்தி உண்டா என வினாவுகிறார் .இளவயது பீனாவிற்கு காளி மீது பெரிய நாட்டமில்லை. இந்த சந்திப்பிற்குப்பின் அவருள் அந்த கேள்வி வட்டமிடத் துவங்குகிறது. கிருஷ்ணன் நம்பியை தொடர்ந்து சந்தித்து  உரையாடுகிறார். அந்த தொடர் உரையாடல் அவரை காளியின் பக்கம் மெல்ல மெல்ல நகர்த்துகிறது. யந்தரா, மந்தரா, தந்தரா என தாந்த்ரீக   செயல்பாடுகளைப்பற்றிய அறிதலில் கவனம் திரும்புகிறது. காளியின் பல்வேறு அவதாரங்களை முன்வைத்து, சக்தியின் வடிவம், பகவதி, யோகினி என ஆர்வம் அதிகரிக்கிறது. அவரது சிந்தனை முழுக்க பகவதி ஆக்கிரமித்துக் கொள்கிறாள்.

கிருஷ்ணன் போத்தி இவரது நாக்கில் யந்தர சக்கரம் ஒன்றை வரைந்து இனி சிவபெருமானே உன்னை வழிநடத்திச் செல்வார் என ஆசிர்வதிக்கிறார்.

சில ஆண்டுகளுக்குப்பின் 2012ல் டெல்லியில் வசிக்கையில் Dr. டேவிட்டின் நட்பு கிடைக்கிறது. Dr. டேவிட் ஆன்மீகத் தத்துவங்கள் மீது மிகுந்த ஆர்வமும் புரிதலும் கொண்டவர். தாந்த்ரீக செயற்பாடுகள் பற்றி ஆழ்ந்த ஞானம் கொண்டவர். மதநம்பிக்கைகள், சடங்குகள் மீது தாந்த்ரீகத்தின் பாதிப்பைப் பற்றி விரிவாக ஆராய்ந்து வருபவர். அவரது தொடர்பு தாந்த்ரீகம், சக்தி உபவாசம் போன்றவற்றின் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது. நீண்ட பல உரையாடல்கள்,  ஆன்மீக பயணங்கள் பற்பல அனுபவங்களைத் கற்றுத்தருகிறது.

ஒருமுறை திருச்சூரில் உள்ள புகழ்பெற்ற கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்கையில் அவரைச்சுற்றி அமானுஸ்ய சக்தி பரவுவதையும், யாரோ தன்னுடன் உரையாடுவது போலவும் உணர்கிறார். இந்நிகழ்வு அவருள் பெரும் திறப்பை நிகழ்த்துகிறது.

நல்ல ஓவியரான பீனா, சக்தியின் ஓர் வடிவமான யோகினிகள் குடியிருக்கும் 64 ஆலயங்களுக்குச் சென்று அந்த யோகினிகளைச் சித்திரமாக வரையத் துவங்குகிறார். யோகினி சண்டிகாவில் துவங்கி யோகினி மஹாமாய (லலித திரிபுர சுந்தரி) வரை 64 யோகினிகளையும் சித்திரங்களாகப் படைக்கிறார். அப்போது அவருள் ஏற்படும் நிகழ்வுகளை  Wishpers of The unseen என்ற நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார்.

அவ்வாறு யோகினிகளை வரையத் துவங்குகையில் அதற்கான வண்ணங்களைத் அவர் தேர்ந்தெடுப்பதில்லை. அது தானகவே அந்தந்த யோகினிகளாலே முடிவு செய்யப்படுகிறது. அதன்பின் நிகழ்வதெல்லாம் மாய யதார்த்தம் தான்.

ஒவ்வொரு யோகினியைப் பற்றி கூறும்போது யோகினியின் அவதாரச் சிறப்பு, அதற்கான காரண காரியங்கள் என்ன, அந்த யோகினிகள் நிகழ்த்திய விஷயங்கள் தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி என விரிவாக பதிவு செய்துள்ளார்.

யோகினிகள் பெரும்பாலும் பயம் மற்றும் பிரமிப்பு உணர்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் வெளிப்பாடுகள், குணாதிசயங்கள் பழக்க வழக்கங்களை விவரிக்கும் போது இருண்மையான பண்புகளால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

காளி எல்லா வடிவங்களிலும் இருக்கிறாள். அவளது 64 நாமவளியை உச்சரிக்கும் போது அவளது பிரபஞ்ச ஆளுமையின் நீட்சியாகி சாதகனுக்கு எல்லையற்ற சாத்தியங்களை வழங்குகிறாள்.

யோகினி கோவில்கள் கூரையின்றி இருக்க வேண்டும். ஏனெனில் யோகினிகளால் பறக்க முடியும். அவற்றின் கோவில்கள் திறந்தவெளி அமைப்பு கொண்டவை. இரு யோகினி சிற்பங்கள் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. ஹிராப்பூர் கோவிலில் உள்ள எல்லா யோகினிகளும் விலங்கு வாகனத்துடன் காட்சியளிக்கின்றன. ரானிப்பூர்-ஷரிஹால் கோவில்களில் நடனமாடும் நிலையில் உள்ளன. அதேசமயம் பெத்தாகாட் கோவிலில் லலித்ஆசனத்தில் காட்சியளிக்கின்றன. யோகினிகளின் உடலமைப்பு, காலடியில் வீழ்ந்து கிடக்கும் அரக்கன், கண்களின் உணர்ச்சி வெளிப்பாடு, கைகளில் ஏந்தியுள்ள ஆயுதங்கள், அமர்ந்திருக்கும் விதம் என எல்லாவற்றையும் மிகத் தெளிவாக இதிகாச நிகழ்வுகளின்  பின்னணிகளோடு விளக்கமாக கூறுவதால் அந்த இடத்தில் நேரிடையாக நாம் பார்ப்பது போல், கேட்பது போல் ஓர் உணர்வினை இப்படைப்பின் மூலம் நமக்கு தருகிறார்.

யோகினிக்கான கோவில்கள் 9 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே கட்டப்பட்டுள்ளன. இரண்டு கோவில்கள் ஒரிசாவின் ஹிராப்பூரிலும், ரானிப்பூரிலும் உள்ளது. மத்தியபிரதேசத்தில் மூன்றும், மாரீனா மாவட்டத்தில் மாதாலி குன்றின் மேல் ஒன்றும் உள்ளது. இதைத் தவிர்த்து வேறு சில இடங்களிலும் யோகினி கோவில்கள் உள்ளன.

தொடர்ந்து 30 ஓவியங்களைப்படைத்தபின் ஓர் மாற்றம் வேண்டி தளர்ந்துட்ட மனதின் ஆற்றலை மீட்டெடுக்கும் விதமாக ஆதி சக்திபீடங்களில் ஒன்றான ஒரிசாவின் பூரி ஜெகநாத்ர கோவிலில் இருக்கும் விமலா கோவிலுக்கும், பேராம்பூரில் இருக்கும் தாரா தாரணி கோவிலுக்கும், அஸ்ஸாமின் கொளஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கும், மேற்கு வங்கத்தின் பிரபலமான கல்கத்தா காளிகட் காளி கோவிலுக்கும் ஆன்மீக பயணம் செல்கிறார். இத்தலங்களின் முக்கியத்துவம் பற்றியும் பதிவு செய்துள்ளார். இது அனைவரும்  அறிந்திருக்க வேண்டியது.

விஷ்ணு சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தி சக்தியின் உடலை 108 துண்டுகளாக்குகிறார். அந்த 108 உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் புண்ணியமானவை. சக்தியின் பாதம் விமலாவிலும், மார்பகங்கள் தாரா தாரணியிலும், யோனி காமாக்யாவிலும், கழுத்துடன் முகம் விழுந்த காளிகாட்டும் ஆதி சக்தி பீடங்கள் ஆகும்.

ஒவ்வொரு சக்தி பீடம் செல்லும்போதும் ஏற்பட்ட உணர்வுகளை , அமானுஸ்யங்களை, மனதில் ஏற்பட்ட அமைதியை, உடல் திரும்ப பெற்ற ஆற்றலை அழகாக சொல்லியுள்ளார். இப்பயணம் பல அரிய நிகழ்வுகளை, தகவல்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. நம்மையும் உடன் அங்கே செல்ல தூண்டுகிறது. அதன்பின் தனது ஓவியப்பணிக்குத் திரும்பி மீதமுள்ள 34 யோகினிகளையும் வரைந்து முடிக்கிறார்.

எது தன்னை யோகினிகளை வரையத் தூண்டியது?, அவ்வாறு வரைகையில் தனக்குள் ஏற்பட்ட அனுபவங்களை நேர்காணல் ஒன்றில், ’என்னைப் பொருத்தவரை ஓவியம் ஆன்மீக வெளிப்பாட்டிற்கான நான் தேர்ந்தெடுத்த வழித்தடமாக செயல்படுகிறது. கலை இயல்பாகவே தெய்வீகமானது மற்றும் எல்லையற்ற படைப்பாற்றுடலுடன் பிரபஞ்சத்தை ஊடுருவிச் செல்லும் ஆன்மீக ஆற்றலின் சாரத்தை உள்ளடக்கியது’ என்கிறார்.

`ஆன்மீகம் ஒரு உருமாறும் பயணத்தை உள்ளடக்கியது. அறிவொளியை நோக்கிய பாதை. எண்ணற்ற பிரதிபலிப்புகள் மற்றும் ஆற்றல்களை  வெளிக்கொணர்ந்து என்னை உள்நோக்கி கவனிக்கச் செய்தது’ என்கிறார்.

இந்த நூலின் மூலம் ஆன்மீகம் என்பது வெறும் மதச் சடங்குகளைக் கடந்தது, நமது இருப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி நமது செயல்களில் அசைக்க முடியாத சமர்ப்பணத்தை கோருகிறது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மேலும் ஓவியம் வரைவதில் மூழ்கியிருக்கும்போது வெளி உலகத்தின் கவனச் சிதறல்களில் இருந்து விலகி தியானத்தின் நிலைக்கு சிரமமின்றி இழுக்கப்படுவதைக் காண்கிறேன். இத்தகைய தியானத்தில் மூழ்குவது அவசியம் என வலியுறுத்துகிறார்.

நூலின் பிற்பகுதியில் “Whispers of unseen“ என்ற குறும்படம் பற்றி விரிவாக பதிவு செய்துள்ளார். பூரி ஜெகநாதர் ஆலயத்தில் துவங்கும் படம் ஹிராப்பூர், ரானிப்பூர், ஜபல்பூர் என யோகினிகளின் கோவில்கள் உள்ள இடங்களை எல்லாம் தொடர்ந்து பயணித்து மாரீனிகாவில் நிறைவுறுகிறது. 12 நாட்களில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜெயின் ஜோசப் இயக்கியுள்ள  இப்படத்தில் பீனா உண்ணிகிருஷ்ணனின். எண்ணங்கள், அனுபவங்கள், ஆன்மீகப் பயணத்தில் அவர் மேற்கொண்ட பரிசோதனைகளை விவரித்துள்ளார். இந்த ஆவணப்படம் அறுபத்து நான்கு யோகினிகளை  மிக நுணுக்கமாக வர்ணிக்கும்போது கதைசொல்லியின் உருமாற்றப் பயணத்தை அழகாக காட்டுகிறது. யோகினிகளைப்பற்றி அறிந்துக் கொள்ள இந்த நூலும், இந்தப்படமும் முக்கிய ஆவணங்களாகும். மிக எளிய மொழியில் இதை சாத்தியப்படுத்தியுள்ள பீனா உன்னிகிருஷ்ணன் பாராட்டுதலுக்குறியவர்.

For Reference:.

Origin of Tantricisam and sixty four yogini cults in Odisha – Dr. Janmejoy .

Yogini: The shady side of Devi- Guido zanderigo

++

அ.முனவர் கான்

முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *