யாத்ரிகன் க்ருபயா த்யான் தீஜே,
காடி சங்கயா ஏக் தோ ச்சார் நௌவ் சாத்.. நவி தில்லி சே ஜல்கர் திருப்பதி கே ராஸ்தே ஹைதராபாத் கோ ஜானே வாலி டெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் குச் தேர் மே பிளாட்பார்ம் நம்பர் தீன் சல்னே வாலி ஹை.
May I Have your attention please, Train No.12497 from New delhi via tripati to Hyderavad Delhi super fast express is about to depart from platform number 3. Thank you.
பயணிகளுக்கு வணக்கம் வண்டி எண் 12497 புது தில்லியிலிருந்து திருப்பதி வழியாக ஹைதராபாத் செல்லும் டெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் எண் மூன்றில் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட தயாராக இருக்கிறது. நன்றி
இரவு 8 மணி (28-11-2008)
-சாப்பாடு வாங்கிட்டு வரேன் இங்கயே இருந்துட்டு இரும்மா
-ஏப்பா கணேஷா இங்கியே சோறு விக்கிறாங்களே அப்புறம் ஏன் வெளியே போறங்கிற அதெல்லாம் நல்லா இருக்காதுமா.
-நீ இரு. உடனே வந்தறேன். ஏன்பா நம்ம ட்ரெயின் எத்தனை மணிக்கு வரும்.
-அது பத்து மணிக்கு தான் வரும் .
-சரி பரோட்டா வாங்கிட்டு வரேன். சாப்பிடு.. சரி தம்பி சீக்கிரம் வா.
கடையில் சாப்பிட்டுவிட்டு தன் அம்மா பழனிக்கு பரோட்டா கட்டிக் கொண்டு வந்தான்.
அம்மா சாப்பாட சாப்பிட கொஞ்சம் கொஞ்சமா குழம்பை ஊற்றினான். பொட்டலத்தில் இருந்து ஆம்லெட் வாசனை வந்தது.
-ஏங் கன்னு கோயிலுக்கு போயிட்டு ஊட்டுக்கு போற வரைக்கும் கவிச்சி திங்க கூடாதுன்னு உனக்கு தெரியாதா.
-அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா. சாப்பிடு.
-எனக்கு வேணாம்பா. நீ வேணா சாப்பிடு.
கையைப் பிடித்து கூட்டிச்சென்று ரயில்வே டிராக்கில் கை கழுவி விட்டான். சேலை முந்தானையில் வாயை துடைத்துக்கொண்டே தம்பி கணேசா, வேற பக்கம் போய் ஒக்காறலாம். பாத்ரூம் நாத்தம் தாங்க முடியல என சொல்ல.. இருவரும் வேறு ஒரு பக்கம் சென்றமந்தனர்.
நள்ளிரவு 3.15 (29.11.2008)
தன்னை தீண்டுவது என்னவென்று தெரியாமல் அயர்ந்து பயணிகள் அமரும் பலகையில் கை கால்களை குறுக்கி குளிருக்கு அஞ்சி கிடப்பவர் போல் கிடந்தார் பழனியம்மா.
ரோந்து பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர் லத்தியை கொண்டு பழனியின் கையைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
-எப்பா கணேஷா…. ட்ரெயின் வந்துருச்சா… போலாமா….கணேசா
-யாருமா நீங்க? நாங்க ரயில்வே போலீஸ்காரங்க. பார்த்தா தெரியலையா.
-ஐயா மன்னிச்சிடுங்க எனக்கு பார்வை தெரியாதுங்க.
-சரி யாரு நீங்க ரொம்ப நேரமா படுத்து இருக்கீங்க,யாரு கூட இங்க வந்தீங்க?. எந்த ஊருக்கு போறீங்க?.
-ஐயா என் மகன் கணேசனும் நானுந்தாங்க வந்தோம். இங்கதான் பக்கத்துல இருந்தான். எங்க போனான்னு தெரியல.
-அம்மா நீங்க ஆறு மணி நேரமா தனியா தான் படுத்து இருக்கீங்க. யாரும் உங்க பக்கத்துல இல்ல.
அழுகை முட்டிக்கொண்டு வந்தது பழனிக்கு.
அப்போது பணியில் இருந்த வேறொரு காவலர் அங்கே வந்தார்.
-என்ன சார்… என்ன சொல்றாங்க…
-வேற என்ன சார். எப்பயும் போல தான். கூட வச்சுக்க முடியாம இதை ஏதோ அனாதை ஆசிரமம் மாதிரி விட்டுட்டு போயிடறாங்க. நாம தான் இவிங்களோட அல்லோலபட்டு திரிய வேண்டியதா இருக்குது. கண்ணு தெரியாத அம்மா. எப்படி தான் மனசு வருதோ இந்த நாய்களுக்கு.
-சார் நீங்க சொல்லறது எதுவும் புரியலைங்க, என் மவன் இங்க தான் எங்கயாச்சும் இருப்பான். அலுப்புல தூங்கி போயிருப்பான். வந்துருவான் சார் .
-சரி நீங்க எந்த ஊருக்கு போறீங்க
-ஜோலார்பேட்டை சார். வந்துருவான் சார்.
-என்னமோ சொல்லுறீங்கம்மா, ஆனா உங்கள பாத்தா பாவமா இருக்கு,
-சிக்ஸ் நாட் செவென் இந்தம்மாவ பயணிகள் ஓய்வறையில படுக்க வெய்ங்க.
-சரிங்க சார். இங்க பாருங்கம்மா ,காலைல நான் வருவேன் அப்பையும் உங்க பையன் வரலய்னா, ட்ரைன் வெச்சுவிடறேன், ஊருக்கு போயுருங்க.
உறக்கம் வராமல் தனக்கு நேர்ந்த துரோகத்தை நினைத்து கண்ணீர் விட்டார் பழனி. அதும் தன் ஒரே மகன் கணேசனால் நேர்ந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. உள்ளே இருக்க முடியாமல் தட்டு தடுமாறி வெளியே வந்து ஒரு பலகையில் அமர்ந்தார்.
அவரின் கண்களில் வழிந்த கண்ணீரை அந்த நள்ளிரவில், ரயில் நிலையத்தை கடந்து சென்ற ஒவ்வொரு ரயிலும் கவனிக்க தவறவில்லை.
விடியற்காலை 4.30 (29-11-2008)
மொட்டை தலையுடன் கட்டம் போட்ட சட்டையோடு லுங்கி கட்டி இருந்தான் கணேசன். பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த துணிக்கடை வாசலில் தன்னந்தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தான். தான் எப்பேர்பட்ட தவறை செய்துவிட்டு வந்திருக்கிறோம் என நினைத்து வருந்தினான். அடுத்து என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் தன் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டான். என்ன இருந்தாலும் பெத்த அம்மாவுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்யலாமா! என மனசு அவனை நோண்டி நோண்டி துருவிக் கொண்டே இருந்தது.
பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான். பக்கத்தில் இருப்பவர்களிடம் அடுத்த பஸ் எப்ப வரும் என்ற விவரத்தை கேட்டுக் கொண்டிருந்தான். கைவிரல்களின் நகங்களை கடித்துக் கொண்டே பேருந்தை எதிர்பார்த்து இருந்தான்.
பொறுக்க முடியால் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து சாலையில் போகின்ற வண்டிகளில் லிப்ட் கேட்டான். ஒருவரும் அவரின் தோற்றத்தைக் கண்டு வண்டியை கூட நிறுத்தாமல் அவனை மனநோயாளி என நினைத்து கடந்து சென்றனர்.
தலை தலையாக அடித்துக் கொண்டான். அந்த புடுங்கி பேச்ச கேட்டதுக்கு எங்க வந்து நிக்கிறோம்னு வருத்தப்பட்டான். பேருந்து வருவதாக தென்பட்டது. வேக வேகமாக பஸ் நிறுத்துவதற்குச் சென்றான்.
பேருந்து வந்தது ஆனால் வேறு மார்க்கமாக போக வேண்டிய பேருந்தாக இருந்தது. தன் தவறை உணர்ந்து கொண்டு வருந்தினான். தன் அம்மாவிற்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என வேண்டிக் கொண்டான். மார்கழி மாதம் என்பதால் குளிர் வெளுத்து வாங்கியது.
திரும்பி அருகில் இந்த பெட்டிக்கடையைப் பார்த்தான். கடையில் தொங்கிக் கொண்டிருந்த நாளிதழ் போஸ்டரை பார்த்தான். நாளிதழ்களில் வெளியாகிய முக்கிய செய்திகளை கொட்டை எழுத்துக்களில் அதில் அச்சிடப்பட்டிருக்கும். “பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி மரணம்” என்பதை படித்ததும் அவனுக்கு பக்கென்றது. 13-ஆம் எண்கொண்ட பேருந்து வந்தது ஏறி அமர்ந்து ரயில் நிலையத்திற்கு பயணச்சீட்டு எடுத்துக் கொண்டான்.
காலை பனி இதமாக இருந்தும் அவனுக்கு படபடப்பாக இருந்தது. பேருந்து ரயில் நிலையத்தை அடைந்ததும் வேக வேகமாக இறங்கி தன் தாயை தேடினான். மூன்றாவது ப்ளாட்பாரத்தை தேடி அலைந்து அதை நோக்கி ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சியை கண்ணீரால் வெளிப்படுத்தினான்.
நவம்பர். 10.2008
’பெத்த பாவத்துக்கு நீ பொறுத்துக்கோ நான் ஏன் பொறுத்து போகணும்’. கணேஷ்க்கும் அவன் மனைவி ரதிக்கும் இடையே நடந்த சண்டையில் பேசியவை இந்த வார்த்தைகள். பழனிக்கு பார்வை இல்லாமல் இருந்தும் தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டார். மகன் கணேசன் மேல் பேரன்பு. கணவர் தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த அவரின் மேல் லாரி ஒன்று ஏறி விபத்தில் மரணம் அடைந்து விட்டார். விபத்தின் காரணமாக கிடைத்த காப்பீட்டு தொகையிலிருந்து வந்த வட்டி பணம் பேருதவியாக இருந்தது பழனிக்கு.
வட்டி பணம் வந்து கொண்டிருந்ததால் பழனியின் இருப்பு ரதிக்கு உறுத்தல் இல்லாமல் இருந்து கொண்டிருந்தது. கணேசன் -ரதி அவர்களின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருந்தது. வரதட்சனை மற்றும் திருமணச் செலவு திட்டமிட்டதை விட அதிகமாக கூடியதால் அம்மாவின் பெயரில் வங்கியில் இருந்த டெபாசிட் தொகையை எடுத்தனர்.
ஒரு சில மாதங்கள் வரை எந்தவிதமான பொருளாதார நெருக்கடியும் ஏற்படாமல் இருந்தது. கணேசன் -ரதி இருவரும் கூலி வேலைகளுக்கு சென்றாலும் கிடைத்த வருமானம் எல்லாம் சிறு சிறு கடன்களை அடைப்பதற்கும் மாதத்தை ஓட்டுவதற்குமே போதுமானதாக இருந்தது. நாளாக நாளாக பழனியின் இருப்பு சற்று உறுத்தலாக இருந்தது ரதிக்கு
ரதியை கணேசன் திருமணம் முடித்த பின்பு அவளின் கைப்பாவையாக மாறி போனான். அவள் சொல்வதுதான் வேதவாக்கு. இதற்கிடையே பழனியை வீட்டை விட்டு அனுப்பு வேண்டும் என முடிவு செய்தனர் ரதியும் கணேசனும்.
கண்ணு தெரிஞ்சாவது எதோ வேலைக்கு போக சொல்லலாம் .இந்த கண்ணு தெரியாதத வச்சுட்டு நான் ஏன் ஓரியாடனும் என வாய்குள் முனகினாள் ரதி.
நவம்பர் 11
-ஏப்பா உன் பொண்டாட்டி வரலைன்னு சொல்லிட்டாளா
-ஆமாம்மா
-நீங்க இரண்டு பேர் மட்டும் போயிட்டு வரலாம்ல நான் எதுக்குப்பா வீண் சிரமம்.
-நீங்க ரெண்டு பேரும் போயிட்டு சுருக்கா வந்துடுங்களேன்.
-அவ வரமாட்டம்மா. நாம போயிட்டு வந்துடலாம் சரியா.
-சரிப்பா நீ சொல்லிட்ட இல்ல போலாம் வுடு.
காலை 5:45 (29-11-2008)
பலகையில் அமர்ந்திருந்த தன் அம்மாவை கண்டதும் தான் உயிர் போய் உயிர் வந்தது அவனுக்கு. தான் செய்த தவறை எண்ணி சுவரில் முட்டிக்கொண்டான். ’அம்மா’ என குரல் கொடுத்தான்.
-கணேசா எங்கப்பா போன? ஏன் என்ன தனியா விட்டுட்டு போன? போலீஸ்காரங்க வந்தாங்க என்னென்னமோ கேட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியலபா. எனக்கு ஒரே பயமா போச்சு.
-அம்மா வெளியே போய் படுத்தேன் அப்படியே தூங்கிட்டேன் மன்னிச்சிடுமா. இதுக்கு ஏம்பா மன்னிப்பு கேக்குற அலுப்பா அங்கேயே தூங்கி போயிருப்ப. சரிப்பா நாம ஏற வேண்டிய ட்ரைன் போயிருச்சா
-ஆமா போயிடுச்சு அப்ப இந்த டிக்கெட் செல்லாதப்பா.
-ஆமா செல்லாது.
-நீ போயி இப்ப வேற டிக்கெட் எடுப்பா. வீட்டுக்கு போகலாம்.
கணேசன் ஜோலார்பேட்டைக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்தான்.
-ஏப்பா கணேச ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரியா.
-இரும்மா இதோ வந்துடறேன்.
-சரிப்பா நமக்கு எப்ப ட்ரெயின்
-8.45 மணிக்குமா.
நேரம் கடந்தது. நடந்தவற்றையெல்லாம் அந்த ரயில் நிலையம் கண்டது. இது போன்ற எத்தனையோ செயல்களை அந்த ரயில் நிலையம் கண்டிருக்கும் அல்லவா.
யாத்ரிகன் க்ருபயா த்யான் தீஜே.. காடி சங்கயா ஏக் தோ ச்சே ஆட் சூன்ய கோயம்புத்தூர் சே ஜல்கர் காட்பாடி கே ராஸ்தே எம்.ஜி .ஆர். சென்னை சென்ட்ரல் ஜானே வாலி மாஸ் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் குச் தேர் மே பிளாட்பார்ம் நம்பர் பான்ச் பர் ஆயேகி.
May I Have your attention please, Train No.12680 from Coimbatore via Katpadi to M.G.R Chennai Central mas interctiy express is arrive shortly in platform number 5. Thank you.
பயணிகளுக்கு வணக்கம்! வண்டி எண் 12680 கோயம்புதூர்லிருந்து காட்பாடி வழியாக எம்.ஜி .ஆர். சென்னை சென்ட்ரல் செல்லும் மாஸ் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தடம் எண் ஐந்தில் இன்னும் சற்று நேரத்தில் வந்தடையும். நன்றி.
ட்ரைன் அருகே வர வர கட்டை பையை ஒரு கையிலும் அம்மாவை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டான்
-கணேசா.
-சொல்லும்மா
-ட்ரெயின் முன்னாடி என்ன தள்ளி விட்டு கொன்ற மாட்டலப்பா! என கேட்கவும்,
’அம்மா………’ என்ன கத்திக் கொண்டே பழனியின் பாதத்தைப் பற்றிக் கொண்டான் கணேசன்.
000

எனது பெயர் கார்த்திக் வாசன். சேலம் மாவட்டத்தில் GST Practitioner ஆக பணி புரிந்து கொண்டிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே வாசிப்பின் மேல் ஏற்பட்ட சிறு ஆர்வம் என்னை கடந்த 2016 -ல் இருந்து நிரந்தர வாசிப்பாளனாக மாற்றி இருக்கிறது. மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களிலும் நான் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகம் செய்யும் விதமாக அறிமுக கட்டுரைகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். தீவிர வாசகனாக இயங்கி கொண்டே சிறுகதை, கவிதை, சிறார் கதைகள் போன்றவற்றை எழுதி கொண்டிருக்கிறேன்.