வண்ணதாசன் புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்கள்

புத்தகம்: தீரா நதி

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

வெள்ளி மதியம் தான் புத்தகங்கள் வந்து சேர்ந்தது. வேலைப் பளு காரணமாக பிரிக்கவும் நேரமில்லை. வெள்ளி மாலை நேரம் பிரித்தேன். புத்தக வாசனையை ஆழ்ந்து நுகர்ந்தேன்.

அருமையான புகைப்படத்துடன் கூடிய அட்டைப்படம். ஆறும் படித்துறையும் வண்ண தாசன் அய்யாவும்.

ஒரு நெடுங்கதையும் ஐந்து சிறுகதைகளும்.

நேற்று இணையரின் பெரியப்பா சப்போட்டா பழங்கள் கொண்டு வந்து கொடுத்தார். பெரிய பழங்கள். நல்ல சதைப் பற்று. வழுவழுப்பான கறுப்பு நிறத்தில் நான்கைந்து கொட்டைகள். வாயில் போட்டு மென்றால் அப்படி ஒரு இனிப்பு.

அப்படித்தான் இருந்தது இந்தக் கதைகளை வாசிக்கும் போதும்.

தீரா நதியில் வரும் சுடலைத்தேவர் எப்பேர்ப்பட்ட மனுஷன். வடிவும் கனகும் சாதாரணமானவர்களா என்ன. பேங்க் ஆபிசர் சண்முகத்தை (வண்ணதாசன்) மறக்க முடியுமா என்ன.

சுடலைத்தேவரின் ஆறும் மணலும் நிலாவும் மறக்க முடியாத ஒரு சித்திரமாக மனதில் பதிகிறது. என்ன ஒரு ரசனையான மனுஷன். நாதஸ்வரம், ஆறு, மணல், நிலா, பெண்கள். அவர் இறப்பில் சண்முகம் அவர் கால்களுக்கு ஆற்று நீரால் அபிஷேகம் செய்வது அன்பின் உச்சம்.

சின்னு முதல் சின்னு வரை எழுதிய வண்ணதாசன் அப்படியே அற்புதமாக இக்கதையில், நடையில்.

அடுத்து எனக்கு மிகவும் பிடித்த கதை தாண்டவம். வெங்குப் பெரியப்பாவும் அனவிரதம் அம்மையும் தாண்டு மாமாவும் மறக்க முடியாத மனிதர்கள். ஆசிர்வாதம் வாங்குவதை இவ்வளவு அழகாக எழுத இயலுமா. வார்த்தைகளில் எத்தனை பேரன்பு.

வண்டு கூடுவிட்டு கூடு பாயும் வித்தை. இன்னும் பல விசயங்கள் நம் அறிவுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது.

‘சுத்தம்’ சிறுகதை மொத்தமும் மயிலம்மையின் கடைசி வார்த்தைகளில் தான் இருக்கிறது. ‘எல்லாத்தையும் தொடச்சிப் போட்டுட்டா நல்லதுதானே. இனிமே ஒண்ணுமில்லாம சுத்தம் ஆயிரலாம்லா’. நம் எல்லோருக்கும் இது வாய்க்குமெனில் வாழ்க்கை எவ்வளவு இலகுவாக இருக்கும்.

‘கூடுவிட்டு’ சிறுகதையில் சிறுவன் சத்தமிட்டு பறவைகளை வரவழைக்கும் மாயாஜாலம். இப்படித்தான் பலர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் வாழ்க்கையை வண்ணமயமான ஒன்றாக மாற்றுகிறார்கள்.

ஒரு புகைப்படம், சில வாசனைகள் சிறுகதை, வேணியும் ராமையா அண்ணாச்சியும் சோமுவும் சுந்தரமும். சுந்தரத்தின் நினைவுகள் புகைப்படம் பார்த்ததும் பின்னோக்கி செல்வதே கதை. கடைசியில் சுந்தரத்தின் கையில் வரும் எலுமிச்சை/நாரத்தை வாசனையுடன் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி.

வண்ணதாசன் அய்யாவின் வாக்குமூலம் அவரின் எழுத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது:

‘யாரைப் பற்றியோ அல்லது என்னைப் பற்றியோ அல்லாமல் எப்படி ஒரு கதையை எழுத முடியும்?’

படித்தது முடித்ததும், வண்ணதாசன் அய்யாவின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறேன். ‘கண்ணன், என்ன இப்படிப் பண்ணிட்டிய’ எனப் பதறியபடி, கைப் பற்றி எழுப்பி விடுகிறார். நெற்றியில் திருநீறு பூசி, நல்லா இருங்க என ஆசிர்வதிக்கிறார்.

தாமிரபரணி ஆறு, நாம் கால் நனைக்க, முங்கிக் குளிக்க, ஒரு கூழாங்கல் எடுத்து வர, எல்லாம் பார்த்தபடி தீராமல், கால காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அற்புதமான வாசிப்பு அனுபவம்.

புத்தகம்: ஒளியிலே தெரிவது

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

2010 ஆண்டு வெளிவந்த தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள்.

சிநேகிதிகள் – மாறாத நட்பும், பழைய ஞாபகங்களும்.

இமயமலையும் அரபிக்கடலும் – வழிதவறிய தங்கத்தின் மறக்க இயலா வறுமையும், கைநழுவும் பால்யமும். ஆனாலும் அவள் உலகில் அவள் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறாள்.

சில ராஜா ராணிக் கப்பல்கள் – வண்ணதாசனே சுந்தரத்து மாமாவாகி கரும்பும் சூரியனும் வரைகிறார். எல்லாத்துக்கும் எல்லாம் தெரியணும்னு என்ன இருக்கு? என ஆசிரியர் கேட்பது எவ்வளவு சரியான ஒன்று. எனக்கு சாதாக் கப்பல் தான் செய்யமுடியும் எனில் அதுவே பெரிய விஷயம் தானே.

யாரும் இழுக்காமல் தானாக – ஒன்று முடிந்தால், இன்னொன்று தொடங்குவது இயல்புதானே. நிலாவின் கனவில் வருவது போல, நிஜத்திலும் நடந்தால் நல்லது தானே. வாழ்க்கை யாரும் இழுக்காமல் தானாக நகரும் தேர்போல, வாழ்க்கையும் இருந்தால் நல்லது தானே.

ஒரு கூழாங்கல்-

பக்கத்து வீட்டில் குடியிருந்த சிநேகிதிகளைப் பார்த்து, மகளின் திருமணப் பத்திரிகை கொடுக்கச் செல்பவரின் நினைவலைகள், கூழாங்கல் மீது நழுவும் நீர் போல. மடங்கி அமர்ந்து அழுபவரின் நினைவுகள், நமக்கு எல்லோருக்கும் உண்டு தானே.

சுலோச்சனா அத்தை, ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு –

பெண்களுக்கே உண்டான பொஸிஸவ் இயல்பு, ஒரு சிறு நிகழ்வின் மூலம் சொல்லப் படுகிறது. எப்போதும் ஒரு சிறு இடைவெளி எல்லா உறவுகளுக்கும் தேவைப்படுகிறது தானே.

காணாமல் போகும் வாய்க்கால்கள்-

பக்கத்து வீட்டில் குடியிருந்த, நீந்தத் தெரியுமா எனக்கேட்டு அல்லி மலர் கொடுத்த குட்டி என அழைத்த , சிந்தாமணி அக்காவை விழாவில் சந்திப்பவனின் உணர்வுகள், அருமையான நடையில். யாருக்குத்தான் பிடிக்காது வீட்டின் பின்புறம் ஓடும் வாய்க்காலையும், நெல்லையப்பர் கோயில் யானையையும், ஈறு தெரிய சிரிக்கும் சிந்தாமணி அக்காவையும்.

ஒரு போதும் தேயாத பென்சில்-

கதையின் மொத்தமும் முடிவில் ராஜி சொல்லும் வரிகளில் தான் இருக்கிறது:

‘ஒரு போதும் எழுதாத பென்சில் இல்லையா இது. எழுதினா தானே தேயும்?’.

ராஜி மாதிரி வாழ்க்கையை/சோகங்களை, கழிவிரக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஒளியிலே தெரிவது –

சோமுவும், முத்துவும். சேகரும், பவானியும்.

ஒரு நிறைவேறாக் காதலும், புண்பட்ட வாழ்க்கையும். ஒரு கணத்தில் எல்லாமே மாறலாம்.

கத்தி மேல் நடப்பது போல ஒரு கதை. ஆனால், கவிதையாக முடிகிறது.

இன்னொன்றும் –

தொகுப்பில் மிகவும் பிடித்த சிறுகதை.

சுந்தரி சின்னம்மை மனம் முழுக்க ஆக்கிரமிக்கிறார். அருமையான வர்ணனைகள், சிறந்த நடை ஆகியவற்றால், தனித்துவமான சிறுகதை.

‘அபூர்வமா உங்களை மாதிரி யாராவது வந்தால், தூரத்தில் இருந்தே மானசீகமாக கன்னத்தில் போட்டுக் கொள்ளலாம்’.

‘ஒரு தம்பளரில் பூ வரைந்த மாதிரி, கொத்தமல்லி இலை அப்பியிருந்ததும் மறக்க வில்லை.’

‘பார்த்துக்கிட்டு இருக்கும் போதே பார்க்க முடியாமலும் போயிருது’.

‘அத்தானையும் பார்த்தாச்சி’ என சின்னம்மை சொல்லும் போது, எல்லோருக்கும் எல்லாமும் புரிந்து விடுகிறது.

‘ஒரு வார்த்தை பேசாம, மோர் கொடுக்கும்போதே சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டிருக்கணும்.’

சௌந்தர்ய உபாசனை.

துரு –

தினசரி அம்மாவின் துரு வண்ண சேலை ஒரு குறியீடாக எனக்குத் தெரிகிறது. செல்லமாக அழைக்கப்படுவதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தானே.

முத்தையா வழியாக நாமும் நமது தெருவை நினைத்துக் கொள்கிறோம், எங்கிருந்தாலும்.

மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை –

எவ்வளவு அருமையான வரிகள்: ‘முதல் முதல் செதுக்கத் தொடங்கின கையும், உளியும், ஒரு பெரும் தாகத்தில், இப்படி கல்லுக்குள் ஓடுகிற நதியைத் திறந்து விடத்தான் ஒவ்வொரு பாறையாக அலைந்து அலைந்து சுனை தேடியதா?’.

தேநீர் குடிப்பது ஒரு தியானம் என்றால், மீன்கள் பார்ப்பதும் தியானம் தான்.

‘முதலில் தொட்டிக்குள் நீந்தும் மீனைப் பழகுங்கள் சுந்தரம். கொஞ்ச நாள் ஆகட்டும்.’

‘தொட்டியில்லாமல் நீந்துகிற மீன்களை உங்களால் பார்க்க முடியும். அதே போல, மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களைக் கூட’.

இப்படித்தான் சுந்தரம், கதையின் முடிவில், மீன் தொட்டியில் மகேஸ்வரி நீந்துவதைப் பார்ப்பதும்.

ஒளியிலே தெரிவது, பேரன்பு.

அற்புதமான வாசிப்பு அனுபவம்.

புத்தகம்: மனுஷா மனுஷா

பதிப்பகம்: அமேசான் கிண்டில்

இத்தொகுப்பில் பத்து சிறுகதைகள் உள்ளன.

மனுஷா மனுஷா: ஒரு மனிதனின் ஷண நேர வீழ்ச்சியும் அதன் விளைவுகளும் தான் இக்கதை. நாமெல்லோரும் மனிதர்கள் தானே. மனித பலவீனங்கள் அனைவருக்கும் உண்டு தானே.

சிறுகச் சிறுக:

மலையப்பனின் சின்ன பிழையும், அதைப் பார்த்து விட்டாரே எனத் தாங்க முடியாமல், அவனின் மரணமும்.இருக்கம்யா என் திருப்தியுடன் சொன்ன மலையப்பனா இப்படி செய்தது, மனசு கஷ்டமாக இருக்கிறது.

சொல்ல முடிந்த கதை;

குன்னங்குளம் டொமினிக் நம் மனசு பூராவும் வியாபித்து விடுகிறார்.

அற்புதமான வரிகள்:

’வலியை உள்ளடக்கியது தான் எல்லா எழுத்தும்’.

‘நீதான் அவனிடமிருந்து, அவன் சாப்பாட்டுத் தட்டிலிருந்து’.

என்றைக்கும் உள்ள வெய்யில்:

சமுத்திரக்கனி போலவே நாம் ஒவ்வொருவரும் ஒரு பெயரை சுமந்து கொண்டு தான் திரிந்து கொண்டிருக்கிறோம். தெய்வானை யின் கால் கொலுசு, படித்த பின்னும், கண்களில் நிற்கிறது.

சிறிது வெளிச்சம்:

எல்லா கதைகளையும் அப்படியே எழுத முடிகிறதா என்ன?

எனது தாத்தா அவர் பட்ட வேதனையை இப்படிச் சொல்வார்: சொல்லமுடியாத வேதனை.

கிளைகள் இலைகள்:

மனித மனம் எவ்வளவு விசித்திரமான ஒன்று. அதுவே விளைவுகளை கற்பனை செய்து கொண்டு, தனது நிலையை மாற்றிக்கொள்கிறது. பாரம் சுமக்கும் மாடு, சுமையைப் பார்த்ததும் பின்வாங்குதல் போன்ற ஒரு கதை.

அப்பால் ஆன:

ராஜி எதுவும் சொல்லாமல் நிறையச் சொன்னாள் – இவ்வரிகள் தான் இக்கதை.

காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது கச்சிதமாக.

செடிகளுக்கு:

வீடு மாறுதல் அவ்வளவு எளிதானதல்ல. வெளியே வந்து விட்டால், மீண்டும் பார்க்கத் தோணாது. துள்ளத் துடிக்க விற்ற தோட்டத்தை இன்று வரை சென்று பார்க்க மனசில்லை.செடிகளுக்குத் தெரியுமா அவ்வீட்டில் வாழ்ந்தவர்களின் வேதனை.

மதில் மேல் சேவல்:

அழகின் ஆராதனை.

அவனுடைய நதி அவளுடைய ஓடை:

கவித்துவமான தலைப்பு. வெகு நுணுக்கமான பார்வை. ஒரு சாதாரண நிகழ்வு எவ்வளவு அழகான சிறுகதையாக எழுதப்பட்டுள்ளது.

சின்னச் சின்ன மலர்களால் கட்டப்பட்ட அழகான ஒரு மாலை இந்த சிறுகதைத்தொகுப்பு.

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *