’’என்ன நெனைச்சுக்கிட்டு இருக்க’’

’’இப்டி கேட்டா நா என்ன சொல்ல’’

‘’இல்லடா வயசு ஆயிகிட்டே போகுதுல்ல, கல்யாணம் பண்ண வேணாமா’’

‘’பண்ணனும்தான்.. பொண்ணு பாத்துகிட்டு தானே இருக்கு’’

‘’எவ்வளவு நாளைக்கு பாத்துகிட்டே இருப்ப.. சட்டுபுட்டுனு பாத்து முடிக்க வேணாமா’’

’’முடிச்சுடலாம் முடிச்சுடலாம்’’

‘’ஒரு தடவ திருமணஞ்சேரிக்கு போய்ட்டு வாடா’’

’’இல்லண்ணே அது வேணாம்..’’

’’ஏன்.. என்ன பிரச்சன’’

’’பிரச்சன ஒண்ணுமில்ல கல்யாணத்துக்கு அப்புறம் வேணும்னா போய்ட்டு வரேன்’’

’’கல்யாணம் ஆக லேட்டாகுதுன்னுதானே இப்போ போய்ட்டு வாடாங்கறேன்,, அப்புறம் போறங்கற .. நீ சொல்லறத கேக்கமாட்டே ஒன்ன நாலு வருசத்துக்கு முன்ன அந்த கம்பெனி வேலைல இருக்கப்பவே கல்யாணம் பண்ணிக்கடானு சொன்னேன்.. எம் பேச்ச கேட்டியா’’

’’என்ன பண்ண அப்ப வீடு கட்டுன கடன் இருந்தது, பாப்பாவுக்கும் கல்யாணம் ஆகல..’’

’’பொல்லாத கடன்.. வீடுனு இருந்தா கடன் இல்லாம இருக்குமா..’’

’’கம்பெனிய இப்படி திடீர்னு மூடுவாங்கனு யாருக்கு தெரியும், எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்தது என்னமோ இப்படி ஆயிடுச்சு..’’

’’சரி போனது போச்சு.. ஒனக்குனு ஒருத்தி இனிமே பொறக்க போறதில்ல சீக்கிரம் கல்யாணம் பண்ற வழிய பாரு’’

’’சரிண்ணே..’’

‘’நீங்க எப்பண்ணே மறுபடியும் வெளிநாட்டுக்கு போறீங்க..’’

‘’ரெண்டு மாச லீவுலதான் வந்திருக்கேன். அடுத்த மாச கடைசில போகனும்’’

அடுத்து என்னபேசுவது என தெரியாமல் இருவரும் அமைதியாக நின்றோம். திருப்பத்தில் பேருந்து வரும் சத்தம் கேட்டது.

‘’சரிண்ணே பஸ் வருது பாத்து போங்க.. வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணுங்க’’ என்று சொன்னேன். அதற்குள் பேருந்து எங்கள் அருகே வந்து நின்றது.

’சரிப்பா நா வரேன்’ என்று சொல்லிவிட்டு அண்ணன் பேருந்தில் ஏறிக்கொண்டு கையசைத்தார். நானும் கையசைத்தபடி போகும் பேருந்தையே பார்த்தேன். அண்ணன் பெரியம்மா பையன், எனக்கு நெனவு தெரிஞ்ச நாள் முதல் வெளிநாட்டில்தான் இருக்கார். அண்ணனுக்கு சித்திமேல அதாவது எங்கம்மா மேல பாசம் அதிகம். அதனால நாட்டுக்கு வரும்போதெல்லாம் எங்க வீட்டுக்கு கட்டாயம் வருவார். என்னையும் வெளிநாட்டு வேலைக்கு கூப்பிட்டார். நான்தான் போகல. சென்னையில ஒரு வெளிநாட்டு கம்பெனில நிரந்தர வேலையில்தான் இருந்தேன். திடீரென ஒரு நாள் கம்பெனிய மூடிட்டாங்க, எனக்கு வேலையில்லாமல் போச்சு. வேலைபோன பின்னால் வாழ்க்கை வேறமாதிரி ஆகிப்போச்சு. இப்போ சம்பாதிக்கறது வாய்க்கும் வவுத்துக்குமே சரியா இருக்கு.

அண்ணன் வந்து போன இரண்டு நாள் கழிச்சு போன் பண்ணினார்..‘’தொளாரில் ஒரு பொண்ணு இருக்கு, அந்தபொண்ணோட அத்த நம்ம ஊருல தான் வாக்கப்பட்டு இருக்கு. நீயும் அம்மாவும் உடனே கிளம்பி வாங்க நாம போய் பாத்துட்டு வரலாம்னு’’ சொன்னார்.

’என்ன வயசு, என்ன படிச்சுயிருக்கு’ என கேட்டதுக்கு ’’எல்லாம் நேர்ல சொல்லுறேன் வாடா’’ என்றார். அண்ணன் இப்படிதான் எதையுமே முழுசா சொல்ல மாட்டார்.

அம்மாகிட்ட சொன்னதும் மிக சந்தோசமா ‘’சரிடா போயி பாத்துரலாம்’’னு சொன்னது.

ஒரு ஞாயிற்றுகிழமை காலை பெண் பார்க்க போனோம். அண்ணன், அண்ணி, பொண்ணோட அத்த, அம்மா என ஐவராக சென்றோம். பெண்ணின் ஊர் பிரதான சாலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி உள்ளே இருந்தது. சாலையின் இருபுறமும் நெல் வயல்களில் நெற்கதிர்கள் நல்லா விளைந்து தலை சாய்ந்து அறுவடை நாளை எதிர் நோக்கி நின்றது.

ஊரை நெருங்க பள்ளி மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் கிளை நூலகம் பூட்டியிருந்தது. ஊருக்குள் புதிதாக நுழையும் எங்களை விநோதமாக பார்த்தார்கள்.

பெண்ணின் வீடோ அரசின் பசுமை வீடுகட்டும் திட்டதில் கட்டப்பட்ட புதிய வீடு. பச்சை வண்ணத்தில் மிளிர்கிறது. வீட்டு வாசலில் தயக்கத்தோடு நிற்கும் எங்களை பெண்ணின் அத்தை ’உள்ளவாங்க’ என உரிமையோடு வீட்டினுள் அழைத்து சென்றார். பெண்ணின் அம்மாவும் அப்பாவும் எங்களை ’வாங்க வாங்க’ என வரவேற்றனர். ’வரோம்’ என்றபடியே அண்ணன் முன் செல்ல நாங்கள் அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்றோம். விரித்து வைக்கப்பட்டு இருந்த பாயில் உட்கார சொன்னார்கள், என்னை மட்டும் அங்கிருந்த ஒரு பிளாஷ்டிக் சேரில் உட்கார சொன்னார்கள்.

தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர் ஒடிக்கொண்டிருந்தது. கர்ணன் தன் அம்மா யாரென தெரிந்து கொள்ள போகும் தருணத்தில் விளம்பர இடைவேளை விழுந்தது.

எல்லோருக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். பெண்ணின் அம்மாவிடம் ஒரு தாம்பாளம் கேட்டது அம்மா, ஒரு பித்தளை தாம்பாளம் கொண்டு வந்து கொடுத்தார்கள். அண்ணி கொண்டு வந்த பூ, பழங்களை பாலித்தீன் பையிலிருந்து எடுத்து தட்டில் பரப்பி வைத்தது. அண்ணன் பெண்ணின் அத்தையிடம் ஏதோ சைகை காட்டினார்.

பெண்ணின் அத்தை பெண்ணின் அப்பாவை பார்த்து, என்னை கை காட்டி “அண்ணே இவருதான் மாப்பிள்ளை, சென்னையில வேலையில் இருக்காரு ஒரே பையன் சொந்த வீடு நெலம்லாம் இருக்கு நல்ல குடும்பம்’’னு சொன்னார்.

பெண்ணின் அப்பா என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிளாஷ்டிக் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்த படியிருந்தேன். என் எதிரே இருக்கும் இரு அறைகளில் எந்த அறையில் பெண் இருக்கும், என்ன கலர் சேலை கட்டியிருக்கும் என தீவிரமான யோசனைகள் என்னுள் ஓடிக்கொண்டு இருந்தது.

பெண்ணின் அப்பா என்னை பார்த்து ’’என்ன படிச்சு இருக்கீங்க’’ என்றார்.

’’நா ஐ.டி.ஐ படிச்சு இருக்கேன்’’.

’’ஐ.டி.ஐ ல என்ன படிச்சு இருக்கீங்க’’

எனக்கு எல்லாம் தெரியும் நீ சொல்லு எனும் தோரணையில் பார்த்தார். வேளைக்கு ஆளு எடுக்குற மாதிரி இருக்கே என நினைத்துக் கொண்டேன்.

“நா பிட்டருக்கு படிச்சு இருக்கேன்’’ என்றேன்.

”ம்.. எம் பையன் என்சீனிருக்கு படிக்கிறான்’’ என்றார். எதையோ நினைத்துக் கொண்டவர் திடுமென எழுந்து என் எதிரேயிருக்கும் இடதுபுற அறைக்குள் போனார்.

தொலைக்காட்சியில் கர்ணன் அம்மாவைக் கட்டிக்கொண்டு பாசத்தில் அழுகிறான். அண்ணி பெண்ணின் அத்தையிடம் ஏதோ கிசுகிசுக்கிறது. அந்த ஹாலில் உள்ள பெஞ்சின் மீது ஆண் பெண் ஆடைகள் கலைந்துகிடந்தன.

பெண்ணின் அப்பா சென்ற அறையில் வேறு யாரும் இருப்பது மாதிரி தெரியவில்லை. அப்படினா என் எதிரேயுள்ள வலதுபக்க அறையில்தான் பெண் இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கும்போது பெண்ணின் அப்பா ஒரு பாலித்தீன் பையுடன் வந்து என் எதிரே உட்கார்ந்தார். பையிலிருந்து சில சான்றிதழ்களை வெளியே எடுத்து என்னிடம் கொடுத்தார்.  அவரது மகன் கட்டிட பொறியாளனாக உருவாகி வருவதற்கான தடயங்கள் அதில் தெரிந்தது. அவர் மேலும் எதையோ தேடினார்.

‘’நீங்க சொன்னா சரிதான் இதுலாம் எதுக்கு இப்போ’’ என்றபடி அண்ணன் என் கையிலிருந்த சான்றிதழ்களை வாங்கி பெண்ணின் அப்பாவிடம் கொடுத்தார். பெண்ணின் அம்மா என் எதிரேயுள்ள அறைக்குள் சென்று வந்தார். அந்த அறைக்குள்தான் பெண் அலங்காரம் செய்து கொண்டிருக்கலாம் என தோன்றியது, அந்த அறைக்குள் கேஸ் அடுப்பும் இருக்கிறது. அடுப்பில் ஏதோ சூடாகிறது டீ அல்லது காபியாக இருக்கலாம்.

திடீரென பெண்ணின் அப்பா ‘’உங்க சாதகத்துல தோசம் ஏதும் இருக்கா இல்ல சுத்த சாதகமா’’ என கேட்டார்.

‘’எங்க தம்பி சாதகத்துல தோசம் எதும் இல்ல, சுத்த சாதகம்தான்’’ என்றார் அண்ணன்.

அடப்பாவமே பெண்ண எப்போ காட்டுவாங்க அதுக்குள்ள சாதகத்த பத்தி பேசுறாங்களே என யோசித்தபடியே நிமிர்ந்து உட்கார்ந்தேன். வாசலில் யாரோ இருவர் வந்து எட்டி பார்த்தனர்.

‘’என்னண்ணே’’ என்றபடி பெண்ணின் அப்பா எழுந்து வெளியே சென்றார். இருவரும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டனர்.

தொலைக்காட்சியில் கர்ணன் அழுதபடியே தன்னை அழிக்கப் போகும் வரத்தை தந்ததாக அம்மாவுக்கு வாக்கு தருகிறான். குந்தவை அழுதபடியே அரண்மனையை விட்டு வெளியே செல்கிறாள்.

பெண்ணின் அப்பா உள்ளே வந்தார். அவருடன் இருவர் உள்ளே வந்தனர். அவர்கள் என் வயதையொத்தவர்கள். பெண்ணின் அப்பா என்னருகே பாயை விரித்து அவர்களை உட்கார சொன்னார். உடனே நா எழுந்து என்னருகே வந்தவனிடம் இதுல ‘’உட்காருங்க’’ என்று சொன்னாலும் ’இல்லை வேணாம்’ என்றபடி அவன் பாயில் உட்காருந்துகொண்டான். இவன் யாராக இருக்கும்? பொண்ணுக்கு ஏதும் சொந்தகாரனா இல்லை நம்மள மாதிரியே பொண்ணுபாக்க வந்திருப்பவனா? என குழம்புகிறேன்.

பெண்ணின் அப்பா விளம்பரம் ஒடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியை அணைத்தார். மனைவியை பார்த்து, ’ரெடியா’ என கேட்டார். மனைவி ரெடியென தலையாட்டினார். வாசலில் வயசான பாட்டி ஒருவர் எட்டி பார்த்துவிட்டு சென்றார். பெண்ணின் அத்தை என் எதிரேயுள்ள அறைக்குள் சென்றார். தட்டில் டம்ளர்களை எடுத்து வைக்கிறார். நானும் என் பக்கத்தில் உள்ளவனும் அந்த அறையையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். கதவு கொஞ்சமாக சாத்தப்பட்டிருந்ததினால், உள்ளேயிருப்பது எதுவும் தெரியவில்லை. நானும் அவனும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக்கொண்டோம்.

சில கணங்களில் அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. பெண்ணின் அத்தை முதலில் வந்தார். அவர் பின்னாடியே சுடிதார் அணிந்த பெண் கையில்  டம்ளர்கள் உள்ள தட்டை ஏந்தியபடி எங்களை நோக்கி வந்தாள்.

பெண்ணைப் பற்றி என்னுள் இருந்த அனைத்து எதிபார்ப்புகளும் நொறுங்கி விழுந்தன. டீயை யாருக்கு முதலில் கொடுக்க என தயங்கினாள். என்னருகே அமர்ந்து இருப்பவனை கை காட்டி அவருக்கு முதலில் கொடுங்க என முனகுகிறேன். அவன் என்னை கை காட்டுகிறான். அதற்குள் அண்ணன் ’நீ எடுத்துக்கப்பா’ என்கிறார். இது நவீன சுயம்வரமோ என நினைத்தபடி முதலில் நானே டீ யை எடுதுக்கொண்டேன்.

எல்லோருக்கும் டீயை கொடுத்துவிட்டு அதே அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். ஒரு கனத்த மெளனம் அங்கு நிலவியது. டீயை வாயில் வைத்து குடித்தேன். சுரீரென நாவை சுட்டது. அருகில் அமர்ந்து இருப்பவனை பார்த்தேன். அவன் நிதானமாக டீயை ரசித்து குடித்துக் கொண்டிருந்தான் இதற்காகவே வந்தது போல. அம்மாவிடம் அண்ணி ஏதோ ரசியமாக சொன்னது. பெண்ணின் அத்தை அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். என் அருகே இருந்தவன் டீயை குடித்து முடித்ததும் பெண்ணின் அப்பாவிடம் ’சரி வரேங்க’ என்றபடி வாசலை நோக்கி வெளியே சென்றான். அவரும் உடன் சென்று வழியனுப்பி விட்டு உள்ளே வந்தார்.

”கோழியூர் வாத்தியார் கிட்ட பொண்ணு சாதகத்த கொடுத்து இருக்கேன். தெனமும் அவரு சொன்னாருனு ஆட்கள் வந்துகிட்டே இருக்காங்க. நீங்க வரதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட ஒரு மாப்புள வந்துட்டு போனாரு, இப்போதான் நீங்க வந்தீங்க அதுக்குள்ள இன்னொரு ஆள்” என்றார். இவரு பெருமை படுறாரா இல்லா சலிப்படைகிறாரா என கணிக்க முடியவில்லை.

இந்த பெண்ணுக்கே இவ்வளவு போட்டியா, உயரமும் இல்லாத குள்ளமும் இல்லாத ஒரு உயரம், செவப்புனும் சொல்ல முடியாத கருப்புனும் சொல்ல முடியாத ஒரு நிறம், வயசுகேத்த வளர்ச்சியுமியில்லை. நோய்யுண்ட முகதோற்றம், அந்த பொண்ண பார்த்ததும் ஈர்ப்புக்கு பதிலா கோவம்தான் வந்தது. இதை எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அணைக்கப் பட்ட தொலைக்காட்சிப்பெட்டி கண்ணாடியில் தெரியும் எங்கள் பிம்பங்களையே வேடிக்கை பார்த்தப்படி உட்கார்ந்து இருந்தேன்.

அம்மாவிடம் சைகை மூலம் என் நிலையை சொல்லலாமென அம்மாவையே பார்க்கிறேன். ஆனா அம்மாவிடம் அண்ணி ஏதோ தீவிரமாக பேசிக்கிட்டே இருக்காங்க.

அண்ணன் மெதுவாக ‘’அடுத்து என்ன.. பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சு இருக்கானு கேட்டு சொல்லுங்க’’ என்றார்.

’’எங்க பொண்ணு நா சொல்லுறத கேட்கும், நீங்க மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிச்சு இருக்கானு கேட்டு சொல்லுங்க’’ என்றார் பெண்ணின் அப்பா.

அண்ணன் நம்மள தனியா கூட்டிட்டு போய் கேட்பார் பொண்ணு பிடிக்கலனு சொல்லிவிடலாம் என நினைத்துக்கொண்டு இருக்கும்போதே,

’’எங்க தம்பியும் அப்படிதான், நா சொன்னா போதும்’’ என்றார்.

என் நெஞ்சுக்குள் ஏதோ உடைந்து விழுவது என் காதுக்கு மட்டுமே கேட்டது. நா அப்படி இல்லனு சொன்னா அண்ணனுக்கு அவமான போகுமே இத எப்படி தடுத்து நிறுத்துவது என யோசிக்கிறேன்.

’’சரிங்க அப்படினா பையனோட சாதகத்த கொடுத்துட்டு போங்க.. நாளைக்கு வாத்தியார்கிட்ட காட்டி பொருத்தம் பாத்துட்டு என்னனு சொல்லுறேன்’’

அப்பாட தப்பிச்சேன். வீட்டுக்கு போய் விசயத்த சொல்லிவிடலாம்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

‘’எதுக்கு நாளைக்கு தள்ளிபோடுவானேன்.. இப்பவே கெளம்புங்க போய் பாத்துடலாம்’’ என அண்ணன் ஆர்வமாக சொன்னார்.

அய்யோ அண்ணன் மறுபடியும் கல்லை தூக்கி தலைல போடுறாரே இப்போ என்ன செய்வது என குழம்பி போனேன்.

’’வாத்தியார் இருப்பாரோ மாட்டாரோ’’ என பெண்ணோட அப்பா தயங்கினார்.

‘’வாத்தியார் நம்பர் குடுங்க பேசிப் பாப்போம்’’ அண்ணன் வழி சொன்னார்.

இந்த பெண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம விடமட்டார் போலிருக்கே. அவர் நம்பர் கொடுக்க, என் மொபைலில் நானே போன்செய்து கொடுத்தேன். பெண்ணின் அப்பா பேசினார். வாத்தியார் இல்லாமல் இருக்க வேண்டுமென எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

’’வாத்தியார் வீட்டுலதான் இருக்காரு’’ என்றார்.

அப்பறம் என்ன நேர்ல போய் பாத்துடலாம்,…. சரி… சீக்கிறமா கிளம்புங்க’’ என்றபடி அண்ணன் ஆர்வமாக அனைவரையும் கிளம்ப சொன்னார்.

அம்மாவிடம் பெண்ணின் அம்மா அந்த பித்தளை தட்டை மறுபடியும் கொண்டு வந்து கொடுத்தார். அதில் கொஞ்சம் பழம், பூ இருந்தது. அம்மா அதையெல்லாம் தட்டிலிருந்து எடுத்து பையில் வைத்தது.

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வெளியே வந்தோம். வாசலில் நின்ற பாட்டி “நீதான மாப்ள” என விசாரித்தது. ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.

’’நல்லா இருக்கியா ஆச்சி’’ என அம்மா ஆவலாக விசாரித்தது. யாரும்மா இவுங்க என அம்மாவிடம் கிசுகிசுத்தேன். ’நம்ம ஊருதான் இங்க வாக்கப்பட்டுருக்கு’ என்றது அம்மா. மூவரும் பேசியபடியே தெருவில் இறங்கி நடக்க தொடங்கி விட்டோம்.

எங்களுக்கு பின்னால் அண்ணனும் அண்ணியும் பெண்ணின் அத்தையிடம் எதோ தீவிரமாக பேசிக்கொண்டுயிருந்தனர்..

பாட்டி படபடனு ஏதுஏதோ கேக்குது. தன் அண்ணன பத்தி விசாரிக்குது. தன் பிள்ளைகள் பற்றி சொல்லுது. கொஞ்ச நேரம் பொறுத்து அம்மா பாக்க வந்த பொண்ண பத்தி விசாரித்தது. ’’தங்கமான பொண்ணு காடுண்டு ஊடுண்டுனு இருப்பா, பொண்ணு தந்தா கட்டிக்கடா, நல்ல வேலக்காரி காட்டு வேல ஊட்டு வேல எல்லாத்திலேயும் கெட்டிக்காரி, அதந்து ஒரு வாத்த பேசமட்டா’’ என பொண்ணை பத்தி ஏகத்துக்கும் புகழ்ந்து சொல்லிக்கிட்டே போனது பாட்டி.

’’பொண்ண பாத்தா வயசுக்கேத்த வளர்ச்சியா தெரியலையே, ஒடம்புக்கு ஏதும் பிரச்சனையா பாட்டி’’ என்றேன்.

”அப்படி சொல்லாதப்பா.. அவ ஒடம்புக்கு முடியலனு படுத்து நா பாத்ததேயில்ல.. அவ தம்பி தங்கச்சி எல்லாம் படிக்க போகுது இவ மட்டும் தான் எல்லா வேலையும் பாக்கனும் அதனால அப்படி தெரியுறா வேற ஒண்ணுமில்ல” என பாட்டி சமாதானம் கூறியது.

’’தம்பி நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா சாப்பிட வச்சி அவள பொண்ணா மாத்தறது என் பொறுப்பு நீ கவல படாதடா’’ என்றது அம்மா. அப்படினா அம்மாவுக்கு பொண்ண புடிச்சிருக்கு என தோன்றியது.

இப்போது எனக்குள் குழப்பம் அதிகமாகிவிட்டது. உடல் அழகு மட்டுமுள்ள பொண்ணு போதுமா குணமுள்ள பொண்ணு வேணாமா. இந்த மாதிரி சூழலில் இருந்து வரும் பொண்ணுதானே நம்ம ஊட்டுக்கு சரியா வரும் என்று என்னுள் யோசிக்க தொடங்கி விட்டேன்..

அதற்குள் பொண்ணுடைய அப்பா, அம்மா, அத்தை அனைவரும் கிளம்பி வந்துவிட்டனர். அவர்களுக்கு பின்னால் அண்ணனும் அண்ணியும் ஏதோ விவாதித்தபடியே வந்தனர். என்னருகே வரும்போது அண்ணி சொன்னாங்க..

’’முக்கியமான பொருத்தம் மட்டும் சரியா இருக்கானு பாக்க சொல்லுங்க’’

’’நீ சும்மா வா என்னதான் சொல்லுறாருன்னு பாப்பமே’’ என்றார் அண்ணன்.

’’இழுத்து புடிச்சு முடிக்க பாருங்க’’னு அண்ணி சொன்னவுடனே நான் சொன்னேன்.

’’அண்ணி அப்படிலாம் இழுத்து புடிச்சு ஒண்ணும் பண்ண வேணாம்’’

‘’ஆமா ஒனக்கு இப்பத்தான் பதினாறு வயசுனு நெனைப்பா’’

அய்யோ அவங்க விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போலிருக்கே. என்ன செய்யலாம் என யோசித்தபடியே அவர்களிடம் சொன்னேன்.

‘’சரி நீங்க போயி சாதகம் பாத்துட்டு வாங்க நா வீட்டுக்கு கெளம்பறேன்’’

‘’ஏன் நீயும் வாடா’’ என்றார் அண்ணன்.

‘’அதான் அம்மா இருக்கு, நீங்க இருக்கீங்க அப்பறம் நா எதுக்கு நீங்களாம் பாத்துட்டு சொன்னா சரிதான்’’

‘’அதும் சரிதான் நீ கிளம்பு நா பாத்துகிறேன்’’

விட்டாபோதும் என உடனே புறப்பட்டு விட்டேன்.

வீட்டுக்கு வந்த பின்னும் அதே நினைப்பு தான். சாதகம் பொருந்தலனு சோசியர் சொல்லிட்டா பிரச்சன இல்லை. ஒருவேளை சோசியர் சரியா இருக்குனு சொல்லிட்டா என்ன பண்ணுறது. சோசியர் சரியா இருக்குனு சொன்ன பின்னாடி பொண்ணு பிடிக்கல வேணாம்னு சொன்னா அண்ணன் கோவிச்சுக்குவாரு, அப்பறம் வேற பொண்ணு பாக்கவும் வரமாட்டாரு. அதுக்கா மனசுக்கு பிடிக்காத பொண்ண கட்டிக்க முடியுமா, அந்த பாட்டி வேற பொண்ணபத்தி ரொம்ப நல்ல மாதிரி சொல்லுது. இல்ல இந்த பொண்ணையே கட்டிக்கலாமா…அழகு மட்டும் போதுமா ரொம்ப சிரமபடுற வீட்டுல இருந்து நம்ம வீட்டுக்கு வந்தா நம்ம அப்பா அம்மாவ நல்லா பாத்துக்குவா. பாட்டி சொல்லுறத பாத்தா நம்மளுக்கு ஏத்த பொண்ணாதான் தெரியுது, இன்னும் கொஞ்சம் அழகா இருந்து இருக்க கூடாதா.. அழகா குணமா என என்னுள் ஒரு பெரிய பட்டிமன்றமே நடக்குது யாரு தீர்ப்பு சொல்லுவாங்க..

இனி இதைபத்தி யோசிக்க கூடாதுனு தீர்மானிச்சு விட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு வாசலில் வந்து உட்கார்ந்தேன். அம்மாவும் அண்ணனும் எப்போ வருவாங்க… என்ன செய்தி கொண்டு வருவாங்க என வாசலையே பார்த்துக்கொண்டிருக்கேன்.

000

என் இயர்பெயர் மணிவில்லன். சொந்த ஊர் கீழப்பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம். 

இதற்கு முன் “செய்தி அலை” என்ற இணைய இதழில் “மயக்கம்” என்ற சிறுகதையும் நடுகல் இணைய இதழில் “நம்பிக்கை” என்ற சிறுகதையும் வெளியாகியுள்ளது. 

“சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது” மற்றும் “சீதக்காதி” ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். இப்போது இரண்டு திரைக்கதைகள் எழுதிவிட்டு திரைப்படம் இயக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *