1
மதுரையிலிருந்து நாங்கள் ஏறிய ரயில் திருநெல்வேலி சந்திப்பிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு அங்கிருந்து தற்போது புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. ஒரு பரபரப்பான ரயில் நிலையம் தான். மக்கள் கூட்டம் சாரை சாரையாய் அங்குமிங்கும் அலை மோதிக்கொண்டிருந்தனர்.
அந்நேரம் சூரியன் முழுவதுமாய் விலகிக் கொண்டு நிலவிற்கு வழி விட்டிருந்தான். நிலவு வந்த மாத்திரம் தான் ஒரு சிலர் அப்பொழுதே படுக்கைகளை போட ஆரம்பித்து விட்டனர்.
“கொஞ்சம் நகண்டுக்கிறிங்களா நான் தூங்க போறேன்”…
இப்பவேயா ?
எனக்கு தூக்கம் வருதுங்க நான் தூங்க போறேன் என மிடில் பெர்த்தை எடுத்து மாட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்.
கொஞ்ச நேரம் பொறுத்துக்கப்பா நீ மிடில் பெர்த்த மாட்டுனா கீழ் பெர்த்ல உக்காரும்போது கழுத்து இடிக்குமுல்ல எனக்கு…
அவன் எதையும் காதுகளில் வாங்கியவனாய் தெரியவில்லை. சட்டென அவன் தோள் பையை எடுத்து பெர்த்தின் ஒரு மூலையில் போட்டு கப்பென ஏறி படுத்துக் கொண்டான். இவர் வாய் புலம்ப ஆரம்பித்தது, ஒருவாராக தன்னையே குறுக்கிக் கொண்டு கீழ் பெர்த்த்தில் உட்கார்ந்து விட்டார்…சைட் பெர்த்தில் உட்கார்ந்து அவர்கள் பேசியதை கவனித்துக் கொண்டிருந்த நான் இவரை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
“சாய் சாய் சாய்…. மசாலா சாய் மசாலா சாய்”… என்று சொல்லிக்கொண்டே வந்த அவரின் கையில் வைத்திருந்த டீப்பாத்திரம் என் காலின் மீது இடித்து விட்டது…
வலுவான இடி…
பாத்து வரக்கூடாதாப்பா இப்புடி வந்து இடிச்சிட்ட? என அப்பா கேட்க,
அந்த வட மாநிலத்தவர் நாங்கள் பேசுவதெல்லாம் கேட்க நேரமில்லாதவராய் இடித்ததற்கு வேகமாக அவருடைய மொழியில் மன்னிப்பு கேட்டுவிட்டு மறுபடியும் பட்டன் தட்டியதைப் போல “சாய் சாய் சாய்…மசாலா சாய் மசாலா சாய்”… என கத்திக் கொண்டே அடுத்த பெட்டிக்கு போய் விட்டிருந்தார்.
இடிச்சுப்புட்டு எப்புடி ஒட்றயான் பாரு…என அம்மா.
விடும்மா நாந்தா கால வெளிய நீட்டி ஒக்காந்துருந்தே அவரு என்ன பண்ணுவாரு என்று அம்மாவை சமாதானப்படுத்தினேன்…என் கால், வலி எடுக்க ஆரம்பித்தது. என் சொந்தங்களில் ஒருவர் சொன்னது இப்போது எனக்கு நியாபகம் வந்தது. “பட்ட கால்லயே” ம்ம்ம்…இந்தக் கால் இதால்தான் இவ்வளவும். இந்தக் காலுக்கு ஒன்றுமாகாமல் இருந்திருந்தால் இந்தப் பயணமே அவசியப்பட்டு இருக்காது…
அரிசி ஆலையில் டிரைவராக வேலை செய்து கொண்டிருக்கிறேன். தேனியிலிருந்து கம்பத்திற்க்கு அரிசிலோடு இறக்கப் போன இடத்தில் வண்டியின் மீதேறி மூடைகளை புரட்டி விடப்போய் கால் இடறி கீழே விழுந்திருந்தேன். அது நிகழ்ந்து ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகிறது அதற்கும் ஒரு மாதம் முன்னே தான் என் தாத்தாவிடம்…
“நான் வந்து ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டுப் போறேன் சாய்ங்காலம் அது வரைக்கும் வீட்ல இரு என்ன, என லேசாக கேட்காத காதுக்குள் சத்தமாக எனது வார்த்தைகளை வீசிச் சென்றேன். வேலை முடிந்து வீடு வர காலில் கட்டை போட்டபடி தாத்தா வீட்டிற்குள் அமர்ந்திருந்தார்”…
என்னாச்சு தாத்தா ? கால்ல கட்டு போட்டுருக்க
ம்ம்ம்…இந்த டிவியையும் நாலு செவுத்தையும் பார்த்துகிட்டு ஒங்க தாத்தாவால இருக்க முடியலயாம். இந்த காச்ச வந்து ஒரு வாரமா ஆள மொடக்கி போட்ருச்சுல்ல. அதான் நீ வார வரைக்கும் பொறுக்க முடியல நாமளே போயிட்டு வருவோம்ன்னு கெளம்பிட்டாரு…
நா சொல்லீட்டு தான போனே ஒன்ன கூப்ட்டுப் போறே நீயா போகாதன்னு அப்பறோ ஏன் ?
அதில்லடா….
சரி எப்புடி அடி பட்டுச்சு ?
ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல போயி ரோட கிராஸ் பண்றப்ப கரெக்ட்டா பைக்காரன் வந்துட்டானாம். நெல தடுமாறி கீழ விழுந்துட்டாராம். விழுகுறப்ப சைக்கிள் பெடலு கிழிச்சு ரத்தம் வந்துருச்சு அங்கனக்குள்ள நம்ம செல்லத்தொர அண்ணே பாத்துருக்காப்ல. அவர்தான் சைக்கிள அவரு மயங்கிட்ட குடுத்து விட்டுட்டு இவர ஆஸ்பத்திரிக்கி கூப்ட்டுப் போயி கட்டப் போட்டு வந்து விட்டுட்டு போனாரு, என பாத்திரங்களை உருட்டிக்கொண்டே அம்மா சொன்னது…
இப்ப பரவால்லயா தாத்தா ?
கட்டப் பாத்தா தெரியலையாக்கும் ? என மறுபடி அம்மா.
தாத்தா சைகையிலேயே ஒன்றும் இல்லை என்று நெஞ்சில் கைவைத்து காட்டினார்.
ஒரு பெருமூச்சுடன் என் பேச்சை முடித்துக் கொண்டேன். தாத்தாவிற்கு அடிபட்ட ஒரு மாதத்திற்கு பிறகு தான் எனக்கு அடிபட்டது. அடிபட்டதிலிருந்து இப்போது வரை எத்தனை பெருமூச்சு விட்டேன் என்று நினைக்கும் போதே இன்னும் ஒரு பெருமூச்சு வருகிறது.
அப்போது என்னை பார்த்து நலம் விசாரிக்க வந்தவர்கள் எல்லாம் கிளம்பும் முன்னே என் அம்மாவிடம் சென்று.
“பட்ட கால்லயே படும்பாங்களே அது மாதிரி ஒன்னுக்கு மேல ஒன்னு வெனையா நடக்குதே. மோகனுக்கு இப்பதான் கல்யாண பேச்சையே ஆரம்பிச்சுருக்கோம் இப்ப போயி” என அவர்கள் இழுக்க, அம்மா உடனே கண்கலங்கி விடும். சேலையை எடுத்து கண்ணை துடைத்துக் கொண்டே“எனக்கு படுத்தா தூக்கமே வர மாட்டேங்குதுக்கா எப்புடியோ கடன உடன வாங்கி ஒன்ன கர சேத்தாச்சு இவனுக்கும் நல்லபடியா முடிஞ்சுச்சுன்னா அது போது எனக்கு”…
நீ அழுகாத அதெல்லா நல்லபடியா முடியும் நீ அவெ ஜாதகத்த எங்கிட்ட குடு எனக்கு தெரிஞ்ச ஜோசியர் ஒருத்தர் இருக்காரு எல்லாத்தையும் கரெக்டா சொல்லுவாரு நான் அவர்கிட்ட குடுத்து என்னான்னு பார்க்குறேன்…
இப்படி ஐந்தாறு பேர் என் ஜாதகத்தின் நகலை வாங்கிக் கொண்டு சென்றனர். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு கோவில், ஒவ்வொரு பரிகாரம், என்று பதில்கள் வந்திருந்தது.
அம்மாவிற்கு எந்த ஊர் எந்த கோவில் என்றெல்லாம் முக்கியமில்லை அவர்கள் எவ்வளவு தகவல்கள் சொன்னாலும் அம்மாவிற்கு தேவையானதோ,
“எங்க பக்கத்து வீட்ல
எங்க எதிர்த்த வீட்ல
எங்க வீட்டுக்கு மேற்குப் பக்கமா
எங்க வீட்டுக்கு கிழக்குப் பக்கமா
எங்க தெருவு ஆரம்பத்துல
எங்க தெருவு முக்குல
எங்களுக்கு அடுத்த தெருவுல”
இப்படி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த ஒரு வீட்டுக்காரர்களையேனும் உதாரணமாகச் சொல்லி “அவங்களுக்கு இந்த கோயில்ல போயி தரிசனம் பண்ணிட்டு வந்தப்பறந்தே ஒரு கொறையும் இல்லாம கல்யாணமாகி நல்லா இருக்காங்க” என அவர்கள் சொல்ல வேண்டும், அப்படி எவரெல்லாம் சொல்கிறார்களோ அந்த கோவில் தான் தேர்வு செய்யப்பட்டது என்று அர்த்தம் மத்ததெல்லாம் அவுட்…
அம்மா கோவிலை முடிவு செய்த பிறகு ஒவ்வொரு தடவை என்னிடம் பேசும்போதும் இந்த பேச்சு அவர் பேச்சின் ஊடே வந்து கொண்டே இருந்தது…
போலாமா?…
அடுத்த வாரம் ?
அடுத்த மாசோ ?
என்னைக்கி போகலாம்னு முடிவு பண்ணிருக்க?
நா வரல எங்கயு என்ன ஆள விட்ரு. இப்பதான் எனக்கே கால் சரியாகி நல்லா இருக்கு அங்கயும் இங்கயுமா அலஞ்சு இன்னும் வென இழுத்து வெய்க்க என்னால முடியாது. அப்படியே போகணும்னாலும் அவ்வளவு தூரம்லா போக வேணா பக்கத்துல இருக்க வேட்டவராயன் கோயிலில்ல போயி பொங்க வெச்சு சாமி கும்புட்டு வந்தாலே போதும்…
நீ பாட்டுக்கு எதையாச்சும் பேசாதரா இங்கனக்குள்ள இருக்க கோயிலுக்கு போறதுக்கு எனக்கு என்ன தெரியாமையா கெடக்கு. அந்த கோயிலுக்கு தான் போகணும்னு ஜோசியர் சொல்லிருக்காரு. குடும்பத்தோட போயிட்டு வாங்க அப்புறம் எல்லாம் நல்லா போயிரும்னு சொன்னப்புறம் போகாம இருக்க முடியுமா?
காலில் சின்ன அடி என்றாலும் பரவாயில்லை கிட்டத்தட்ட ஆபரேஷன் வரை சென்று பின் வேண்டாம் என முடிவாகி இப்போதுதான் சரியாகி இருக்கிறது. என் வைத்திய செலவுக்கே அப்பா அவரிடமிருந்த இருப்பு பணத்தை எல்லாம் முழுவதுமாகவே செலவு செய்துவிட்டார். அதை வைத்து தான் அக்காவின் கல்யாணத்துக்கு வாங்கிய கடனில் கொஞ்சத்தை அடைக்கலாம் என எண்ணி இருந்தார்.
ஏம்மா அக்கா கல்யாணத்துக்கு வாங்குன கடன இன்னும் அடைக்க முடியல, அதுக்கு வேற மாசந்தவறாம வட்டி கட்டிக்கிட்டு கெடக்குறோ, அடுத்த மாசோ அடகு வச்ச நகைக்கி வட்டி கட்டி அத திருப்பி வைக்கணும், உனக்கும் அப்பாவுக்குமே அடிக்கடி உடம்புக்கு முடியாம போயி மாத்தர செலவே அந்தா இந்தான்னு வந்து நிக்கிது, இதுல இன்னியுஞ் செலவ இழுத்து வைக்கணுங்குறியே என்னம்மா இது. என வீட்டின் நிலைமையை மொத்தமாக அடுக்கி அம்மாவின் முன்னே வைத்தேன்.
அம்மாவிடம் இருந்து வந்த பதில்,”கடவுளுக்கு செய்றதுக்கெல்லாம் கணக்கு பாக்கக் கூடாதுப்பா .செலவோட செலவா இதையும் செஞ்சிடலாம்டா” என்ன?
என நான் அடுக்கி வைத்ததை எல்லாம் இந்த பதில் மூலமும், சில துளி கண்ணீரின் மூலமும் கவிழ்த்து விட்டார். அப்பாவுமே இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் சொல்லாமல் எப்படி இருக்கிறார் என்று குழப்பம் வேறு. அம்மாவின் பேச்சுக்களில் நானே பிரதானமாக இருக்கும் காரணமோ இல்லை வார்த்தைக்கு வார்த்தை “இது பையனோட வாழ்க்கை விஷயம்” நாம பண்றத பண்ணித்தான ஆகணும் என்ன சொல்றீங்க? என்று அழுத்திச் சொல்லும் அம்மாவின் வார்த்தை காரணமோ தெரியவில்லை அப்பா தன் புதிய கடனுக்கான கதவுகளை திறந்து விட தயாராகி விட்டார். அப்புதிய விருந்தாளியை இனி நானும் சேர்த்துத் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.
பின் இதைப் பற்றியான பேச்சுக்கள் எழும் போதெல்லாம் எனக்கும் அம்மாவுக்குமான இடைவெளிகள் அதிகரித்துக் கொண்டே போனது. நானும் அதை உணர்ந்தேன். அம்மாவும் கூட. ஒருமுறை வெளிப்படையாகவே என்னிடம் தன்னை ஒப்புவித்து விட்டார்.
“நீ சொல்றதெல்லா எனக்குப் புரியிது இதெல்லாம் பண்ணாத்தே எல்லாம் சரியாகும்னு இல்ல அப்புடிங்குற ஆனாலும் இதெல்லாஞ் செஞ்சா உனக்கு நல்லதுன்னு சொல்றாங்க. அப்புடி சொல்றப்ப நான் பண்ணாம எப்புடி இருக்க முடியும். எனக்கு உன் வாழ்க்கதே முக்கியோ வேற எதப் பத்தியும் நா யோசிக்கல. நான் இப்புடித்தா வளந்தே இதெல்லாம் பாத்து பார்த்துத் தான் வளந்தே. அதனால நான் இதையெல்லாம் நம்புறவளாவே இருந்துட்டு போறே விட்ரு”…
தான் செய்வது தனக்கு மேலும் கடனையும் அதன் மூலம் கஷ்டத்தையும் தரும் என்று தெரிந்த போதிலும் அதை செய்து கடவுளிடம் சென்று என் கஷ்டத்தை நிவர்த்தி செய் என வேண்டுவது எந்த விதத்தில் சரி எனத் தோன்றியது. இச்சுழற்சி சென்றடைவது எங்கே என்ற யோசனை எல்லாம் என் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்தது… இது ஆகாது என அப்பாவிடம் சென்றேன்.
என்னப்பா அம்மா போயே ஆகனுங்குது நீயும் ஒன்னும் சொல்ல மாட்ற?
நான் என்னத்தடா சொல்ல கடன் ஒடன வாங்கி போயிட்டு வந்துர வேண்டியத்தே, உன்னால எங்கயாச்சும் ஏற்பாடு பண்ண முடியுமா?
ம்க்கும்…ஏற்கனவே வாங்கி வச்ச எடத்துலயே பதில் சொல்லிக்கிட்டு இருக்கே இப்போ அப்போன்னு. இதுல காசு வேணும்னு மறுபடி எப்புடி போய்க் கேக்க…
அருணகிரி கிட்ட கேட்டுப் பாப்போமா ?
அவெ கொள்ள வட்டியில போடுவியா, லேட்டாப் போச்சுன்னா மொதலுக் கேத்த வட்டி வரும்… அவெங்கிட்டல்லா ஆகாது… இப்ப அவசியம் போயே ஆகணுமா ?
அவசியம்னு இல்ல போனா நல்லாருக்கும்ன்னு தோணுது…
என்னப்பா நீயுமா ?
அவர் பதிலேதும் சொல்லவில்லை என் தோள்களை தட்டி விட்டு நகர்ந்து விட்டார்.
2
வரவேண்டிய இடத்தை வந்தடைந்து விட்டது நாங்கள் வந்த ரயில். கடவுள்களின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவிற்கு தான் வந்திருக்கிறோம்.
நான்,அப்பா,அம்மா,தாத்தா,என நால்வரும் வந்திருக்கிறோம். அக்காவும்,மாமாவும் ஏதோ விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.
ஒரு பெருங்கூட்டம் இங்கும் அங்குமாக அலை மோதிக் கொண்டிருந்தது. நாங்களும் அக்கூட்டத்தில் கலந்து விட்டோம். அடிக்கொருமுறை போடி மெட்டுக்கும், மூணாறுக்கும் போய் வந்தாலுமே மலையாளம் எனக்கு தகுடுதித்தோம் தான். அங்கு இருப்பவர்களுக்கு தமிழ் நன்றாக புரியும், பேசுவார்கள் என்பதால் அவர்களிடம் தமிழிலேயே பேசிப் பேசி மலையாளம் கற்றுக் கொள்ளாமல் போய்விட்டது, ஆனால் அம்மாவோ ஓரளவுக்கு மலையாளம் பேசும். முந்தியெல்லாம் பூப்பாறைக்கு எஸ்டேட் வேலைகளுக்கெல்லாம் சென்ற அனுபவம் இருக்கிறது.
இந்த மலையாளம் ஓரளவேனும் ரயில் நிலைய வாசலில் நின்றிருந்த ஆட்டோ காரர்களை சமாளிக்க போதுமானதாக இருந்தது. அவர்கள் கேட்டதற்கெல்லாம் பதில் அளித்துவிட்டு என்னையும் அப்பாவையும் பார்த்து அம்மா ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டது.
ஒரு வழியாய் கோவிலை அடைந்தோம். ரயில் நிலையத்தில் இறங்கிய மொத்த பேரும் அந்த கோவிலுக்கு தான் வந்திருக்கிறார்கள் என்பது போல ரயில் நிலையத்தை ஒத்த சனக்கூட்டம் அங்கே தென்பட்டது. கட்டிடங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பார்க்கும் கோயில்களைப் போல் அல்லாமல் சற்றே வித்தியாசமாக இருந்தது. அது ஒரு நல்ல வகையான வித்தியாசம் தான்.
நேரத்தை கடத்த விரும்பவில்லை. கோவிலுக்குள்ளேயே குளிப்பதற்கான வசதி எல்லாம் இருந்தது ஒவ்வொருவராய் குளித்து முடித்துவிட்டு வந்தோம். கொண்டு வந்திருந்த பேக், போன்,எல்லாம் வாங்கி வைக்க ஒரு இடமும் அமைத்திருந்தனர். அதற்கு ஒரு வரிசை நின்றிருந்தது. நானும் அவ் வரிசையில் இணைந்து கொண்டு வந்ததை எல்லாம் ஒப்படைத்து விட்டு அதற்கான காசை கொடுத்து டோக்கனை பெற்றுக் கொண்டேன்…
கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே நுழைந்தால் அங்கு கோயிலுக்கு செல்வதற்கான வரிசை எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அதை பார்த்ததுமே சற்று கிறுகிறுத்து விட்டது எனக்கு.
இவ்வளோ பெரிய வருசயத் தாண்டி எப்புடி போறது. அதுவரைக்கும் நின்னுகிட்டே இருக்க முடியுமா? என் காலு போக போகுது போ…
இதுலா ஒரு வருசயாக்கும் கொஞ்சோ பொறுத்துக்கடா வருச வேகமாத்தே நகருது. சீக்கிரோ சாமிய பாத்துரலாம் என்று அம்மா சொல்லச் சொல்ல என் கண்கள்,கால்களைப் பரிதாபமாக பார்க்க ஆரம்பித்தது .”இன்னிக்கி கூட்டம் கம்மி நாங்க இதுக்கு முன்னாடி வந்திருக்கப்ப சரியான கூட்டம்” என எங்களுக்கு முன்னே நின்றிருந்த ஒருவர் மலையாளமும் தமிழும் கலந்து அவர் பின்னே நின்றிருந்த என் அம்மாவிடம் சொன்னார் எனக்கும் அது நன்றாகவே புரிந்தது…
சரி அப்ப நானும்,உங்க அப்பாவும் இந்த வருசைல வாரோ. நீயுந் தாத்தாவும் வேணும்னா சிறப்பு தரிசனத்துல வாரீங்களா?
சிறப்பு தரிசனமா ?
அங்க போட்ருக்காங்க பாரு, என அம்மா சொன்ன பக்கமாக திரும்பிப் பார்த்தேன். தமிழிலும் தான் எழுதப்பட்டிருந்தது. “என்னது ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாயா?
அடப் போம்மா அங்க இருந்து இங்க வாரதுக்கே ஒரு ஆளுக்கு முன்நூறு தான் ட்ரெயின்ல, இங்கனகுள்ளக்கி ஐநூறு குடுத்து போறதா? இது என்ன காசுக்கு புடிச்ச கேடா? நான் இப்புடியே வந்துகுறே ஆள விடு. தாத்தாவ வேணும்ன்னா அதுல வரச் சொல்லுவோம். “நீ போ தாத்தா அதுல”.
அவரும் போக மாட்டேன் என மறுத்து விட்டார்.
ஒரு மணி நேரம் ஆகிவிட்டது இதே வரிசையில் தான் பயணித்து கொண்டிருக்கிறோம். இடையிடையே தண்ணீர் வண்டி ஒன்று சுற்றி வருகிறது. ஒரு பக்கம் இசைக் கச்சேரி,இன்னொரு பக்கம் பரதநாட்டியம் என நடைபெறுகிறது. நின்றிருந்த வரிசை எல்லாம் முடிந்து போக ஒரு சிறிய கம்பி அடுக்கிற்குள் நிற்கவைக்கப்பட்டோம். உட்கார அந்த கம்பி அடுக்கினுள் இடம் இருந்தது ஆன போதிலும் அது உட்கார ஏதுவாக இல்லை. கிட்டத்தட்ட இந்த கம்பி அடிக்கிற்குள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. அதே தண்ணீர் வண்டி மட்டும் சுற்றிச் சுற்றி வந்தது தண்ணீரை குடித்துக் குடித்து நான்கைந்து முறை போய் விட்டிருந்தோம். பசி அனைவரின் வயிற்றையும் ஏக கேள்விகள் கேட்டது. கோயிலுக்கு வரும் முன்னே சாப்பிடாமல் வந்தது எவ்வளவு பெரிய தவறென இப்போது உணர்கிறேன்.
3
பின் ஒவ்வொரு அடுக்காய் திறந்து விட மக்கள் கூட்டம் சந்நிதானத்தை நோக்கி ஓட்டம் எடுத்தது. ஒருவரையொருவர் முண்டி அடித்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர். சிலர் ஓங்கிய சத்தத்துடன் பக்தி கூப்பாடுகளிட்டுக் கொண்டே முன்னேறினர் என் கால்களோ மரணித்தே போய்விடுகிறேன் என்பது போன்றொரு வலியை அனுபவித்துக் கொண்டிருந்தது. தாத்தா இறுக்கப்பட்டு வேர்வை வடிய சுணங்கிப் போய்விட்டார், அம்மாவும் அப்பாவும் இடிபாடுகளில் சிக்குண்டவர்களை போல் இருந்தனர். கைக் குழந்தைகளையும் அக்கூட்டத்தில் வைத்திருந்தனர். அக்குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது. என் தாத்தா வயதையொத்தவர்கள் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். திரும்பிப் பார்த்தால் சிறிதாய் பிசகக் கூட வழியில்லை என இருக்க..
எதிரே ஒரு வரிசை இருந்தது .ஒருவரை ஒருவர் சிறிதாய் உரசக் கூட இல்லை ஒருவருக்கும் இன்னொருவருக்குமான இடைவெளி என்பது போதும் போதும் என்கிற அளவில் இருந்தது. அவர்களின் உடல் வேர்வையை சுரக்கவில்லை, தலைமுடி வேர்வையால் உலர்ந்து தலையில் தேய்த்து இருந்த எண்ணெய்யுடன் கலந்து ஒரு வகையான நாற்றத்தை வெளிப்படுத்தவில்லை. எந்தவிதமான சலசலப்புமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தனர். அந்த சிறப்பு தரிசன பக்தர்கள்.
இரு வரிசையுமே ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டது. இங்கே கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் திறந்து விடப்பட்டு கொண்டிருந்தனர். அங்கே எவருக்கும் எந்த விதமான தடுப்பும் இல்லாமல் உள்ளே போய்க் கொண்டிருந்தனர். எங்களை “நகரு நகரு போ போ” என சத்தமிட்டவர்கள் அவர்களிடம் அவ்வளவு பவ்யமாக நடந்து கொண்டனர். ஒரு சின்ன சத்தம் கூட எழுப்பவில்லை.
சரியாக நான்,அம்மா,அப்பா தடுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டோம். தாத்தா வெளியே வருகையில் தடுப்பு மறுபடி போடப்பட்டது. எங்களையோ போ போ என உரக்க கத்திக் கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன், நாங்கள் பேசியது அவருக்குப் புரியவும் இல்லை,எங்களை நிமிர்ந்து பார்க்க யோசிக்கக் கூட இல்லை. அவர்களிடமிருந்து வந்த ஒரே வார்த்தை “போ போ” என ப்ரோக்ராம் செய்யப்பட்ட மெஷினைப் போல அதையே சொல்லிக் கொண்டிருந்தனர்.
தாத்தாவோ கசக்கப்பட்ட காகிதச் சுருள் போல் ஆகிவிட்டார். நிற்கவும் முடியவில்லை அங்கிருந்து நகரவும் முடியவில்லை. தாத்தாவின் கண்களோ என்னையும் கூட்டிப் போ என்று சொல்வதைப் போலவே இருந்தது. அம்மாவும் அப்பாவும் என் தோள்களை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தனர்.
போ போ வென கத்திக் கொண்டிருந்த அவர்களை அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் அழைக்க இருவரும் அங்கிருந்து ஓடினர். சட்டென தடுப்பை தூக்கி தாத்தாவை எங்கள் பக்கமாக இழுத்துக் கொண்டேன்…
அப்போது எதிர் வரிசையில் இருந்து ஒரு குரல்.”டோன்ட் டு லைக் திஸ்”. என்ன இந்தப் பையன் டிசிப்ளின் இல்லாம இப்படியெல்லாம் பண்றான்,எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா, இந்த ரூல்ஸ் எல்லாம் இவங்க பாலோ பண்ண மாட்டாங்களா எப்படி இருக்காங்க பாருங்க. என ஒரு தம்பதியர்,தடுப்பை தூக்கி என் தாத்தாவை என் பக்கமாக கொண்டு வந்ததற்கு இவ்வாறு கூறிக் கொண்டிருந்தனர்.
நாங்கள் வந்த வரிசையின் நிலையை அவர்கள் ஏறெடுத்தும் பார்த்தார்களா,இல்லை அவர்கள் அதைப்பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை, எதிர் வரிசையில் இருந்த ஒருவருக்கும் அவர்களுக்கு ஐந்தடிக்கு முன்னே நடந்த இந்த விஷயம் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நான் இப்படி செய்தது என்னவோ நாங்கள்தான் ஒட்டுமொத்த ஒழுங்கீனத்தையும் சொந்தம் கொண்டாடுவதைப் போல அவர்கள் பார்த்த பார்வை இருந்தது.
அந்தப் பார்வை என்னை முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது. அவர்களுக்கு ஏன் இது பெரிதாய் தெரியவில்லை என்ற எண்ணமே மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் நான் சுற்றி இருந்த அனைத்தையுமே மறந்து விட்டேன். கூட்டம்,கூப்பாடு,என் காலின் வலி என அனைத்தையும் மறந்து போய் விட்டேன்.
டேய் எங்கடா பாக்குற என அம்மா என்னை ஒரு உலுக்கு உலுக்கி நினைவுக்கு கொண்டு வந்து சாமி பக்கமாக என் பார்வையை திருப்பி விட்டது. “கையெடுத்து கும்புட்டு மனசார வேண்டிக்கடா ஒனக்கு நல்லது நடக்கனும்னு” எனச் சொல்லிவிட்டு கண்களை மூடி முணுமுணுக்க ஆரம்பித்தது.. நானும் என் இரு கைகளையும் கூப்பி கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
அந்த இருட்டு எனக்கு கடவுளைக் காண இரண்டு பாதைகளைக் காட்டியது ஒன்று “அவர்களது வழி” இன்னொன்று “எங்களது வலி”
00
நித்வி
என் பெயர் முத்துபாண்டி. “நித்வி” என்கிற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதுகிறேன். இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறேன்.