1. மீனவனும் மீன் இளவரசியும்

ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு மீனவன் இருந்தான். அவனுக்கு இருந்த சொத்தெல்லாம் ஒரே ஒரு பழைய படகும், தொத்தலான குடிசையும், மனைவியும், குழந்தைகளும்தான். மீனவன் தினமும் மீன் பிடிக்கக் கடலில் போவான். கிடைப்பதை இரண்டு பங்காக்குவான். பெரிய பங்கை சந்தையில் விற்பான். மீதமுள்ள சிறிய பங்கை வீட்டுக்குக் கொண்டு வருவான், சமைத்துச் சாப்பிட.. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆக, அவர்கள் பசியும் வளர்ந்தது. ஆனால் மீனவனால் அவர்கள் பசியைப் போக்க முடியவில்லை.

ஒரு நாள் வழக்கம் போலத் தன்படகில் மீன் பிடிக்கப் போனான் அவன். அதிகாலையிலேயே கடல் மீது போயும், நடுப் பகல் வரை அவனுக்கு எதுவும் கிடைக்க வில்லை. பாவம், ஏழை மீனவனுக்கு என்ன செய்வதென்று தெரிவில்லை. பசித்தது. மனைவி கட்டிக் கொடுத்திருந்த காய்ந்த ரொட்டி நினைவுக்கு வந்தது. ஆனாலும் அதைப் பொடித்து வலைக்குள் போட்டு, வலையைக் கடலுக்குள் இறக்கினான். அதற்காவது ஏதாவது மீன். கிடைக்காதா என்ற நப்பாசை. சிறிது நேரங் கழித்து வலையை இழுத்தபோது அவனுக்குப் பெரிய ஏமாற்றம். எதுவுமே இல்லை. காய்ந்த ரொட்டியையும் இழந்து விட்டான். வேதனையோடு வலையை இப்படியும் அப்படியும் புரட்டினான். ஒரு மூலையில் சின்னதாக ஒரு மீன். ஆனால், அழகாகப் பளபளவென்று தங்கம் போல மின்னியது. உண்மையில் அது தங்க தங்க மீன்தான். வியப்போடு அதை வலையிலிருந்து எடுத்து உள்ளங் கையில் வைத்துப பார்த்தபோது, அந்தத் தங்கமீன் போசிற்று;

“மீனவனே, என்னை மீண்டும் கடலில் வீசு. உன் ரொட்டிக்கு ஆசைப்பட்டு வலையில் வந்து சிக்கிக் கொண்டேன். எனக்கு நீ விடுதலை அளித்தால் உன்னை நான் பணக்காரனாக்குவேன். தினமும் நீ வீசும் வலையில் ஏராளமான மீன்கள் கிடைக்கும்படி செய்வேன். உன் வாழ்நாள் முழுவதும் நீயும் உன் குடும்பமும் சந்தோஷமாக வாழலாம். கடலில் செல்லும் போது உனக்கு ஏதாவது ஆபத்து என்றால் என்னை நினைத்துக்கொள். உடனே உனக்கு உதவ நான் வருவேன் ஏனென்றால், நான் மீன்களின் அரசி”என்றது, அந்தத் தங்க மீன்.

அந்தச் சின்னத் தங்க மீனின் பேச்சில் மீனவனின் மனம் இளகிற்று. அன்று கிடைத்த அந்த ஒரே மீனையும் கடலில் வீசினான். தங்க மீன் கடலில் மறைந்தது. ஆனால் அது தன் வார்த்தையைக் காப்பாற்றியது. மீனவன் தன் வலையை வீசி இழுத்தான். அத்தனை நேரம் ஏதும் கிடைக்காதவனுக்கு இப்போது வலை தாங்காதபடி மீன் கிடைத்தது. அவனால் இழுக்க முடியாத அளவுக்கு அவ்வளவு மீன்! அதன் பிறகு தினமும் அவன் வலை வீசும் போதெல்லாம் கொள்ளை கொள்ளையாக மீன்கள் கிடைத்தன. இவனுடைய மீன்கள் சந்தையில் நல்ல விலை போயின. இவனிடம் மீன்களை வாங்குவதற்காவே அவன் வருகைக்காக ஜனங்கள் காத்திருந்தார்கள். ஒரே வருஷத்தில் அவன் பணக்காரனானான். ஊரின் முக்கிய மனிதனாகவும் மதிக்கப் பட்டான்.

ஆனாலும், அவன் கர்வம் கொள்ளவில்லை. பெரிய படகும் புதிய வலைகளும் வாங்கினானே தவிர, தன் வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. எப்போதும் போல உழைத்தான். செல்வம் வந்து விட்டதற்காக மீன் பிடித் தொழிலை விட்டு விடவில்லை. ஒரு சமயம், கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது புயல் தோன்றியது. பயங்கரமான புயல். கடலலைகள் ஆக்ரோஷமாகப் பொங்கிப் பொங்கித் தென்னை மரம் உயரத்துக்கு எழுந்து குதித்தன. இவன் படகு அந்தக் கோரப்புயலில், சிக்கிக் கொண்டு தத்தளித்தது. அவன் எத்தனையோ புயல்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் அன்று போல ஒரு புயலை, கடலின் கொந்தளிப்பை அவன் கண்டதே இல்லை. இன்றோடு தன் வாழ்க்கை முடிந்தது என்றே முடிவு செய்து விட்டான் அவன். அவன் படகுக்குள் கடல் நீர் புகுந்தது.

அந்த வேதனையான வேளையின் போது அவனுக்குத் தங்க மீனின் நினைவு வந்தது.

மீன்களின் அரசியால் மட்டுமே என்னைக்காப்பாற்ற முடியும் என்று நினைத்துக் கொண்டான். அப்போது, ‘கரேல்’ என்று சீறிக் று குதிக்கும் கடல் அலைகளின் மீது ‘பளீர்’– என்று ஒரு தக தகப்புத் தோன்றியது. மீன்களின் அரசியான அந்தத் தங்க மீன் “மீனவனே, கலங்காதே, நான் உன் னைக்காப்பாற்றுகிறேன்!” என்றாள், தங்க மீன் அரசி. தன் வாலை வேக வேகமாக ஆட்டினாள். அலைகள் ஒதுங்கி ஓடின. மீனவன் படகிலிருந்து தள்ளப்பட்டான். நினைவிழந்தவன், நிறையக் கடல் நீரைக் குடித்தான். ஆனால் கடலுக்குள் மூழ்கிய சிறிது நேரத்தில் பூமியில் நடப்பது போல நடக்க முடிந்தது, அவனால். ஆழ் கடலின் அடியில் அதன் படுகையில் மீன் அரசியின் பின்னால் நடந்து கொண்டிருந்தான் அந்த மீனவன். தரையெல்லாம் தங்கப்பாளங்களால் நிரப்பபட்டிருந்தன. வித விகமான வைரக் கற்களால் கட்டப்பட்டிருந்த வீடுகள் தக தகத்துக் கொண்டிருந்தன. அவன் சட்டைப் பையிலும் மடியிலும் நவ ரத்தினக் கற்கள் தானாக வந்து நிரம்பின. மேல் துண்டை ஏந்தினான். தூக்க முடியாத அளவுக்கு வைரமும்,வைடூரியமும், மரகதமும், கோமேதகமும், ரத்தினங்களும் அதில் வந்த கொட்டின.

தங்க மீன் அரசி கூறினாள் “என் ராஜ்யத்தின் தலை நகர் இது. விரும்பினால் உன் வாழ் நாள் முழுவதும் நீ இங்கேயே இருக்கலாம்.”மீனவன் பலமாகத் தலையசைத்தான் ‘முடியாது”என்று. “இங்கேயே தங்கிவிட எனக்கு ஆசை தான், மீனரசி! ஆனால் 6 எனக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்வார்கள்.?”

“உண்மைதான் குடும்பத்திடம் உனக்குள்ள உனக்குள்ள பாசத்தைப் பாராட்டுகிறேன்!”என்ற மீன் அரசி, ஒரு தங்க ஊது குழலை எடுத்து ஊதினாள். உடனே ஒரு டால்பின் இவள் முன் வந்து நின்றது. அதனிடம் கட்டளையிட்டாள்; “இவரை உன் முதுகிலேற்றிக் கொண்டு கடல் மட்டத்துக்கு மேலே போய் ஏதாவது ஒரு மீன் பிடித் துறைக்கருகே விட்டுவா. இவர் இனத்து மீனவர்கள் இவரைக்கண்டு காப்பாற்றிக் கொண்டு போவார்கள்.”

மீனவனுக்கு விடை கொடுக்கு முன் திமிங்கிலத் தோலாலான ஒரு பை நிறையத் தங்கக் காசுகளைப் பரிசாகக்கொடுத்தாள் மீனரசி. “உன் வாழ் நாள் முழுவதும் இந்தத் தங்கக் காசுகள் குறையாது. ஒவ்வொரு முறை நீ செலவு செய்ய இதிலிருந்து காசுகளை எடுக்கும்போதும், உடனே அதே அளவு நாணயங்கள் அதில் தோன்றிவிடும். எடுக்க எடுக்கக் குறையாது.”

மீனவன் மீனரசியிடம் விடை பெற்று, டால்பினின் முதுகிலேறி மேலே வந்தான். அவனை ஒரு பாறையில் விட்டு விட்டு அது கடலில் மறைந்தது. தன் கிராமத்துக்கு வெகு அருகிலேயே தான் இருப்பதை உணர்ந்தான் மீனவன். சீக்கிரமே ஒரு மீன் படகு அப் பக்கமாக வரவே கையசைத்துக் கூப்பிட்டான். படகு அவன் அருகே வந்தது. ஆனால் அதிலிருந்தவர்கள் அவனைக் கண்டதும் பீதியினால் முகம் வெளுத்து நடுங்கினார்கள். அவனை ஆவி என்றுதான் எண்ணினார்கள். ஒரு வருஷத்துக்கு முன்னால் புயலில் சிக்கிக் கடலில் மாண்டுவிட்ட அவனை அங்கு கண்டால் அவர்களுக்குப் பீதி உண்டாகாதா ?

அவர்கள் அதை அவனிடம் கூறிய போது, அந்த வயோதிக மீனவன் கூறினான். “ஒரே ஒரு நாள்தானப்பா ஆகிறது. நேற்றுத் தானே நான் “என்று கூற வந்த அவனுக்குச் சட்டென்று விஷயம் தெளிவாயிற்று. ஆழ் கடலின் அடியில் ஒரு நாள் என்பது ஒரு வருஷமாகும்! மீனவன் கூறியதை முதலில் அவன் ஊரார் நம்பவில்லை. ஆனால் அவன் மடியிலும், சட்டைப் பையிலும், துண்டிலும் நவரத்தினக் கற்களைக் காட்டிய பிறகு, மீனரசி கொடுத்த தங்கக் காசுகளை வாரி வாரி ஊரில் இறைத்த பிறகு தான், அவன் கூறுவது உண்மை என்றும், அவன் ஆவியல்ல உயிரோடிருக்கிறான் என்றும் நம்பினார்கள். அள்ள அள்ளக் குறையாத அந்தத் திமிங்கிலப் பையிலிருந்து தங்கக் காசுகளை அள்ளி அள்ளித் தன் ஊராருக்கெல்லாம் கொடுத்தான். அதன் பிறகு அவன் மீன் பிடிக்கப் போகவில்லை. ஏராளமான செல்வம், சுகத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.

00

2) விறகு வெட்டியும், வெள்ளி மணிகளும்

ஒரு காலத்தில் ஒரு கானகத்தில் ஒரு விறகு வெட்டி வசித்து வந்தான். அவனுக்கு அழகிய இரண்டு பெண்கள். ஒரு நாள் அவன் விறகு வெட்டக் காட்டுக்குப் போயிருந்த போது, ஒரு பெரிய ராட்சதன் அவன் குடிசையில் புகுந்து, அவனுடைய இரண்டு பெண்களையும் தூக்கிப் போய் விட்டான்.

திரும்பி வந்த விறகு வெட்டி, தன் குடிசையில் பெண்களைக் காணாமல் தவித்தான். வேதனையோடு செய்வதறியாது உட்கார்ந்திருந்த போது, ஒரு குடுகுடு கிழவி வந்தாள். அவன் அவளை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. “ரொம்பவும் இடிந்து போய் இருக்கிறாயே. உனக்கு உதவத்தான் வந்தேன்” என்று கூறி ஒரு சுருக்குப் பையை விறகு வெட்டியிடம் நீட்டினாள். கிழவி. ‘ஆபத்து வேளையில் இந்தப் பையில் உள்ள பொருளை எடுத்து வெளியில் வீசு”என்று கூறினாள்.

விறகு வெட்டி தன் பெண்களைத் தேடக் கிளம்பினான். பாட்டி கொடுத்த சுறுக்குப் பையை இடையில் செருகிக் கொண்டு, காட்டில் வெகு தூரம் சுற்றித் தேடிக் களைப்படைந்தவன், ஒரு மரத்தடியில் அமர்ந்தான். பாட்டியின் பையைத் திறந்து பார்த்தான். அதில் இரண்டு வெள்ளி மணிகள் ஜ்வலித்துக் கொண்டிருந்தன. உருண்டையான ஒளிவீசும் அவைகளை மீண்டும் பைக்குள் போட்டு பத்திரபடுத்திக் கொண்டவன் தூங்கலானான்.

திடீரென்று சத்தம் கேட்டுக் கண் விழித்தவனின் முன்னால் பயங்கரமான ஒரு வேட்டைநாய் நின்று கொண்டிருந்தது. அதன் கண்களில் கோப வெறி, வாயைத் திறந்து உறுமியது. சற்று நகர்ந்தாலும் தன் மீது பாய்ந்து குதறிக் கொன்றுவிடும் என்று பயந்த விறகு வெட்டி, சுறுக்குப் பையிலிருந்த வெள்ளி மணியில் ஒன்றை எடுத்து வீசினான். அது பூமியில் விழுந்ததும் மின்னல் போலப் பளீர் என்று ஒளி எழுந்து காடு முழுவதும் பிரகாசித்தது.. வேட்டை நாயைக் காணவில்லை. அது இருந்த இடத்தில் ஒரு வெள்ளைக் குதிரை, வெள்ளியினாலான சேணம் கடிவாளம் அணிந்து கனைத்தப்படி நின்று கொண்டிருந்தது.

விறகு வெட்டிக்கு வியப்பான வியப்பு. குதிரை தன் முன்னங்கால்களை உயர்த்திக் கனைத்துப்பிறகு தரையில் தட்டி ‘கிளம்பு’என்று கூறுவது போலக் கனைத்தது. விறகு வெட்டி வெள்ளைக்குதிரை மீதேறி, தன் குழந்தைகளைத் தேடக் கிளம்பினான். மலைகளையும், புல்வெளிகளையும் கடந்து ஒரு கணவாயை அடைந்தான். மிக ஆழமான அக்கணவாயைக் குதிரையினால் தாண்ட முடியவில்லை. மறுபக்கத்தில் ஒரு பெரிய கோட்டை இருந்தது. ராட்சதன் வசிக்கும் கோட்டை தான் அது.

அக்கோட்டையை அடைய விறகு வெட்டிக்கு வேறு வழி தெரியவில்லை. இரண்டாவது வெள்ளி மணியை எடுத்துக் கணவாயில் போட்டான். அற்புதம் நிகழ்ந்தது. வெள்ளி நூல் இழைகள் தோன்றிக் கணவாயின் குறுக்கே ஒரு பாலத்தை உருவாக்கி விட்டது. சிலந்திவலை பின்னுவது போல அந்த மந்திர வெள்ளி நூலிழைகள் இங்கும் அங்கும் ஒடித் துணி நெய்வது போலப் பாலமாக வேய்ந்து விட்டன.

விறகு வெட்டி, அந்த வெள்ளி நூல் இழைகளால் ஆன பாலத்தின் மீது குதிரையோடு மறுபக்கம் போனான். இரவு கோட்டைக்குள் புகுந்தான். ராட்சதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, தன் குழந்தைகளைத் தேடினான். பாதாளச் சிறையில் அவர்களைக் கண்டு மீட்டு வெளியேறும் போது, ஒரு பெண் கால் இடறிக் கீழே விழுந்தவள் வலி தாங்காமல் கத்தி விட்டாள். அந்தச் சத்தம் கேட்டு ராட்சதன் விழித்துக் கொண்டான். கர்ஜித்தபடி விறகு வெட்டியைத் துரத்தலானான். விறகு வெட்டி தன் இரு பெண்களையும் மந்திரக் குதிரை மீது ஏற்றிக் குதிரையைத் தட்டி விரட்டிவிட்டு அதன் பின்னால் அவன்

ஒடினான். ராட்சதன் விறகு வெட்டியை நெருங்கிக் கொண்டிருந்தான். வெள்ளி நூல் இழைப்பாலத்தைக் கடந்ததும் தன் கோடாரியை எடுத்து அந்தப் பாலத்தைப் பினைத்திருந்த வெள்ளி நூல் கயிற்றை ஒரே வெட்டில் துண்டித்தான். பாலத்தின் நடுவில் வந்து கொண்டிருந்த ராட்சதன் ஆழமான கணவாயில் விழுந்தான் பெருத்த ஒலத்துடன்.

வெள்ளைக் குதிரையில் தன் அழகுப் பெண்களுடன் குடிசையை அடைந்தான் விறகு வெட்டி. அந்த மாயக்குதிரை மறைந்தது. பிறகு அதை யாரும் பார்க்கவே இல்லை.

000

3) அன்பு மகள் -இங்கிலாந்து-மொழிபெயர்ப்பு

முன்னொரு காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் ஒரு பெரிய பிரபு வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று பெண்கள். தனது பெண்களிடம் ரொம்ப அன்பு கொண்டிருந்தார் அவர். இந்தப் பணக்காரப் பிரபு ரொம்பவும் சுயநலக்காரர், கர்வி, எப்போதும் எல்லாரும் தன்னைப் புகழ வேண்டும் என்று விரும்பும் குணமுடையவர்.

ஒரு நாள் தன்னுடைய பெண்களை அழைத்தார். மூன்று பெண்களும் தகப்பனாரை சூழ்ந்து கொண்டு நின்றார்கள். “குழந்தாய், உன் அப்பாவிடம் உனக்கு அன்பு உண்டல்லவா? நீ அவரை எதற்குச் சமமாக நேசிக்கிறாய், சொல்” என்று கேட்டார் தம் மூத்த மகளிடம்.

”ஓ! என் அன்புக்கு ஈடேது, இணையேது அப்பா? நான் உங்களை என் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேனாக்கும்” என்றாள் அவள். பணக்காரருக்குப் பரம திருப்தி. தம் மூத்த மகள் தம்மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்று பூரித்துப் போனார். இரண்டாவது மகளைக் கேட்டார் . அவள், “அப்பா, இந்த உலகத்தில் உள்ள எதற்கும் மேலானதாக உங்களைக் கருதுகிறேன்!” என்றாள். பிரபுவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. இவ்வுலகிலேயே மிக உயர்ந்தவன் தான் தான் என்று கர்வம் பொங்கியது. மூன்றாவது மகளிடம் ”பெண்ணே, என்னிடம் உனக்குள்ள அன்பு எப்படிப்பட்டது?” என்று கேட்டார். மூன்றா வது மகள் உண்மையே பேசுபவள். தன் தமக்கைகளைப் போல பொய்யான புகழுரைகளைக் கூற விரும்பவில்லை. “அப்பா, நான் சுகமாக சந்தோஷமாக வாழ உங்களை நேசிக்கிறேன். நீங்கள் நன்றாக இருந்தால்தானே எனக்கும் நல்வாழ்வு? புதிய இறைச்சி உப்பை எப்படி விரும்புமோ அப்படியே நானும் உங்களை நேசிக்கிறேன்” என்றாள்.

வந்ததே கோபம் பிரபுவுக்கு. தன் சுயநலம் அவருக்குத் தெரியவில்லை. மூன்றாவது பெண் கூறிய உண்மை அவருக்கு உப்பாகக் கரித்தது. ”என்னிடம் உண்மையான அன்பு இல்லாத நீ இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது. போ. வெளியே” என்று கூறிக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவையும் சாத்தி விட்டார்.

பாவம், அந்தப் பெண்! இச்சகம் பேசத் தெரியாததனால் ஏற்பட்ட சங்கடம் இது. உண்மையைக் கூறிய அவளுக்கு இந்தக் கதி. தகப்பனாரால் விரட்டப்பட்ட அவள் நடந்து நடந்து போய்க் கொண்டே இருந்தாள். காடு, மலை, வனம், வனாந்திரம் இப்படி நெடுந் தூரம் அலைந்து திரிந்த பிறகு ஒரு சதுப்பு நிலப் பிரதேசத்துக்கு வந்தாள். அங்கு ஏராளமாக கோரைப் புற்கள் செழித்து வளர்ந்திருந்தன. குளிருக்கு அடக்கமாக அணிந்து கொள்ள அவளிடம் நல்ல போர்வை இல்லை. ஆகவே கோரைப் புற்களைச் சேகரித்து அதை முடைந்து ஒரு மேலங்கியும் தலைக்குக் குல்லாயும் செய்து கொண்டாள். கோரைப்பாய் ஆடையில் அவளைப் பார்க்க வினோதமாக இருந்தது. ஆனால் அதற்காக அவள் வருத்தப்படவில்லை.

சதுப்பு நிலத்தை அடுத்துள்ள ஒரு ராஜ்யத்துக்குப் போனாள். அந்த நாட்டு அரண்மனை அடுப்படியில் ஏதாவது வேலை கிடைக்குமானால் வயிற்றுப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாமே என்று அங்கே போனாள். குற்றேவல் புரிய ஆள் தேவையா? என்று கேட்டாள் அரண்மனைச் சமையற்காரரிடம்.

“யாரும் வேலைக்கு வேண்டாம்” என்றான் சமையல்காரன்.

‘ஐயா, நான் ஓர் அனாதை. எனக்குப் போக இடமில்லை. எனக்கு நீங்கள் ஊதியம் ஏதும் தரவேண்டாம். என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறேன். பசிக்கு மட்டும் மிச்சம் மீதியைக் கொடுத்தால் போதும்” என்று கண்களில் நீர் மல்கக் கெஞ்சினாள் அவள்,

சமையற்காரனுக்கு இரக்கம் ஏற்பட்டது. “சரி, பத்துப் பாத்திரங்களைக் கரி போகத் தேய்த்துக் கொடு. நீர் இறைத்துத் தர வேண்டும். நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரவேண்டும்.” என்று ஒப்பந்தம் செய்து கொண்டான். அவளும் ஒப்புக் கொண்டாள். அவள் பெயரை அவனும் கேட்கவில்லை; அவளும் சொல்லவில்லை. ஆனால் அடுக்களையில் எல்லோரும் அவளைக் ‘கோரைப்புல் ஆடைக்காரி’ என்றே கூப்பிட்டார்கள். அந்தப் பெயரே அவளுக்கு நிலைத்து விட்டது.

அங்கு கொஞ்ச நாள் இப்படி வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் சமையற்காரர்களெல்லாம் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாள். அந்த நாட்டு இளவரசனின் பிறந்த நாளாம். அந்த வைபவத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்களாம். அதற்காகப் பல தேசங்களிலிருந்தும் ராஜகுமாரர்களும், ராஜகுமாரிகளும் வந்து கூடுவார்களாம். விருந்தும் கேளிக்கையும் நாட்டியமுமாக அரண்மனை மூன்று நாட்களுக்கு அமளிப்படும் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து அறிந்து கொண்டாள் ‘கோரைப் புல்லழகி’. சமையலடியில் வேலைகளை முடித்த பிறகு அரண்மனையில் நடக்கும் நடனத்தைக் கண்டு மகிழ அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்பதையும் தெரிந்து கொண்டாள்.

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. அவசர அவசரமாகக் காரியங்களை முடித்து விட்டுத் தங்களை அழகுப் படுத்திக் கொண்டு அரண்மணையில் நடக்கும் அரச குமாரர்களின் நாட்டியத்தைக் காணக் கிளம்பினார்கள் சமையலறைச் சிப்பந்திகள். ஆனால் கோரைப்புல் ஆடைக்காரி தனக்கு ரொம்பக் களைப்பாக இருப்பதாகக் கூறி அவர்களுடன் போகாமல் தங்கி விட்டாள். அந்த ஆடையில் அங்கு செல்வதை விரும்பாததே அவள் போகாததற்குக் காரணம். எல்லோரும் போன பிறகு சதுப்பு நிலக் காட்டுக்குத் தன்னந்தனியாகப் போனாள் அவள். ஆடை தயாரிக்க எங்கு கோரைப் புற்களை வெட்டினாளோ அந்த மேட்டில் போய் உட்கார்ந்து கொண்டு கண்ணீர் வடித்தாள் ஆடையற்ற தன் அவல நிலையை எண்ணியபடி.

அப்போது திடீரென்று அவள் முன்னாலுள்ள மண்மேட்டில் ஒரு பிளவு தோன்றியது. அங்கு ஒரு வழியும் கதவும் கூடத் தெரிந்தன. பளீரென்ற ஓர் ஒளியில் ஒரு தேவதை தோன்றினாள். அவள் கையில் ஒரு வெள்ளி ஆடை பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. பிரமித்துப் பேச்சற்று நின்று கொண்டிருந்த அவளது கோரைப் புல் ஆடையைக் களைந்து அந்த அற்புத வெள்ளியினாலான ஆடையை அணிவித்தாள் தேவதை.

அரண்மனைக்குப் போ. அங்கு நடனமாடும் ராஜகுமாரிகளிடையே நீயும் கலந்து கொண்டு நாட்டியமாடு. ஆனால் நடனம் முடிவதற்கு முன்பாக இங்கு திரும்பி வந்துவிடு…போ …! பயப்படாதே. எல்லாம் நல்லபடி நடக்கும்’ என்று கூறி அனுப்பினாள் தேவதை.

கோரைப்புல் ஆடைக்காரி வெள்ளி ஆடையணிந்து அரண்மனை நடனக் கூடத்தை அடைந்தபோது அத்தனை கண்களும் அவள் மீதே பதிந்தன. அவளைவிடச் சிறப்பான ஆடையணிந்தவரோ, அழகிகளோ அங்கு யாரும் இல்லை. இளவரசன் ஓடி வந்து அவள் கரம் பற்றி அழைத்துப் போனான் தன்னுடன் நடனமாடுவதற்காக. இளவரசனும் வெள்ளி ஆடை அழகியும் சுழன்று சுழன்று ஆடுவதையே எல்லோரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாட்டிய நிகழ்ச்சி முடியும் சமயத்தில் வெள்ளி ஆடை அழகி மெள்ள அங்கிருந்து நழுவினாள். சதுப்பு நிலத்துக்கு வந்தாள். அங்கு தன் கோரைப்புல் ஆடையை அணிந்து கொண்டு மற்றவர்கள் திரும்புமுன் அரண்மனைச் சமையற் கட்டை அடைந்து பூனை போல் ஒரு மூலையில் முடங்கிக் கொண்டாள். தூங்குவதைப் போல் பாவனை செய்தாள்.

மறுநாள் காலை அடுக்களையில் இருந்த எல்லோரும் “கோரைப் புல் ஆடைக்காரியே நீ ரொம்பவும் துரதிருஷ்டக்காரி. நேற்றிரவு நீ வராததனால் ஓர் அற்புதமான அனுபவத்தை இழந்து விட்டாய்” என்றார்கள்.

“அப்படி என்ன அதிசய அனுபவம்?” என்று கேட்டாள் அவள்.

”என்னவா? அங்கு ஒரு ராஜகுமாரி வந்திருந்தாள் பாரு, என்ன அழகு, என்ன அழகு? எந்த நாட்டு ராஜகுமாரியோ தெரியவில்லை. அப்பா அவள் அணிந்து வந்த அந்த வெள்ளி ஆடைதான் எப்படித் தகதகத்தது தெரியுமா? நம் இளவரசர் அவளை பிறரோடு நடனமாட விடவே இல்லை.”

”அப்படியா? அத்தனை அழகான அரசகுமாரியை நான் பார்க்கக் கொடுத்து வைக்க வில்லையே” என்றாள்.

“வருத்தப்படாதே. இன்றும் நாளையும் கூட நடனம் உண்டே. அவள் வந்தாலும் வரலாம். நீயும் பார்க்கலாம்.” என்றார்கள்.

ஆனால் அன்றிரவு நடனக் கோலாகலத்தைக் காண எல்லோரும் கிளம்பியபோது அவள் நேற்றைப் போலவே “நான் வரவில்லை. எனக்குக் களைப்பாக இருக்கிறது” என்று கூறித் தங்கி விட்டாள். எல்லோரும் அரண்மனைக்குப் போனதும் சதுப்பு நிலத்திலிருக்கும் மண் மேட்டினருகே சென்றாள். அவள் எதிர்பார்த்தபடியே அங்கு தேவதை தங்கத்தினாலான தகதகக்கும் ஆடையுடன் காத்திருந்தாள். அவசர அவசரமாக அதை அணிந்து கொண்டு அரண்மனைக்கு ஓடினாள் கோரைப் புல் ஆடை அழகி. அங்கு இளவரசன் அவள் வரவையே எதிர்பார்த்துக் காத்திருந்தான். தங்க ஆடையிலே வந்திருந்த அவள் இளவரசனின் இதயத்திலே தங்கி விட்டாள். அவளோடு நடனமாடிய அவன் அவளைப் பிரிய மனமில்லாதவனாக அவள் மீது காதலானான்.

நடனம் முடியுமுன் அவள் மெள்ள அங் கருந்து விடுபட்டுத் தேவதையிடம் வந்து ஆடையை மாற்றிக் கொண்டு அடுக்களையின் மூலையில் வந்து முடங்கிக் கொண்டாள். மறு நாள் காலையில் அவளிடம் எல்லோரும் தங்க ஆடையில் வந்த அரச குமாரியைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கடைசி நாளான அன்றும் அவர்களுடன் அவள் நடனத்துக்குப் போகவில்லை. இருட்டிய பிறகு தேவதையிடம் போனாள். அவள் கையில் உலகிலுள்ள அழகிய பறவைகளின் இறகுகளை யெல்லாம் திரட்டி உருவாக்கிய வண்ண விசித்திரமான ஆடை இருந்தது. அதை அணிந்து கொண்டு அவள் அரண்மனைக்குப் போனாள். அவளுக்காகவே காத்திருந்த இளவரசன் அவளைக் கண்டதும் மகிழ்ந்துபோனான். நாட்டியமாடும் போது அவள் பெயரைக் கேட்டான். ஊரைக் கேட்டான். ஆனால் எதற்கும் அவள் பதில் கூறவே இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த இளவரசன் தன் அழகிய மோதிரத்தைக் கழற்றி அவள் விரலில் அணிவித்து, ”மறுபடியும் உன்னைக் காணாவிடில் என் உயிர் போய் விடும்” என்றான், அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் இன்று வழக்கத்துக்கு அதிகமான நேரமாகி விட்ட படியால் சதுப்பு நிலத்துக்குப் போய் ஆடை மாற்றிக் கொள்ளப் பொழுதில்லை. அவசர அவசரமாக அதே உடையுடன் தன் இருப்பிடத்துக்கு வந்தவள் அந்த அழகிய ஆடையைக் களைந்து ஓர் இடத்தில் ஒளித்து விட்டு தன் வழக்கமான கோரைப்புல் ஆடையை அணிந்து, படுத்துக் கொண்டு விட்டாள்.

கடைசி நாளன்றும் அவள் வராததைக் கூறி அங்கலாய்த்தார்கள் எல்லோரும். அதன் பிறகு நடன நிகழ்ச்சி கிடையாதாகையால் இளவரசன் மூன்று நாட்களும் தன்னோடு நடனமாடிய அழகியை இனிக் காண முடியாதே என்ற ஏக்கத்தில் உண்ணவில்லை உறங்கவில்லை. ஊர் ஊராக வீரர்களை அனுப்பி அவளைத் தேடக் கட்டளையிட்டான். பயனில்லை. அவளைப் பற்றிய தகவல் கூறுபவர்களுக்குப் பெருந் தொகை தருவதாகப் பறைசாற்றினான். பிரயோசனமில்லை. இதே ஏக்கத்தில் இளவரசன் படுத்த படுக்கையானான்.

உண்ண மறந்து உடல் இளைத்த இளவரசனுக்கு வைத்தியரின் கட்டளைப்படி ஒரு விசேஷமான கஞ்சி தயாரிக்கலானான், பிரதம சமையல்காரன். அப்போது கோரைப் புல் ஆடைக்காரி அவனிடம் அந்தக் கஞ்சியைத் தான் தயாரிப்பதாகக் கூறினாள். முதலில் அவன் அதற்கு மறுத்தாலும் முடிவில் அவள் ‘எந்த நோயாளியும் விரும்பி உண்ணும் வகையில் கஞ்சி தயாரிக்கும் ரகசியம் தனக்குத் தெரியும்’ என்று கூறவே அவளிடம் அந்தப் பணியை ஒப்படைத்தான். கஞ்சி தயாரித்த அவள் அதில் தனக்கு இளவரசன் அணிவித்த மோதிரத்தைக் கழற்றிப் போட்டு அதை அரண்மனைக்கு அனுப்பினாள்.

கஞ்சியைக் குடித்த இளவரசன் அதனடியில் இருந்த மோதிரத்தைக் கண்டதும் துள்ளிக் குதித்து எழுந்திருந்தான். “கூப்பிடு அந்த சமையற்காரனை!” என்று கத்தினான், காவலாளிடம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை நடுங்கிய படியே வந்து நின்றான் சமையல்காரன் “இந்தக் கஞ்சியை தயாரித்தது யார்?’ என்று கேட்டான் இளவரசன்.

“நான்தான்..” என்று குழறினான். உண்மையைக் கூறினால் ஏதாவது விபரீதம் நேருமோ என்ற பயத்தில்.

“பொய் சொல்லுகிறாய். இதை நீ தயாரிக்கவில்லை. உண்மையைக் கூறு. யார் இதைத் தயாரித்தது?” கரிஜித்தான் இளவரசன்.

”வ..வந்து..வந்து.. அடுக்களையில் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவிக் குற்றேவல் புரியும் கோரைப்புல் ஆடைக்காரி என்று ஒரு பெண். ரொம்ப ஏழை, அநாதை.. எந்த நோயையும் குணப்படுத்தும் வகையில் தனக்குக் கஞ்சி தயாரிக்கத் தெரியும் என்று கூறினாள். நான் தெரியாத்தனமாக அவள் பேச்சை நம்பி அவளிடம்…”

“உடனே அழைத்துவா அவளை” என்று ஆணையிட்டான் அரசகுமாரன். கோரைப் புல் ஆடைக்காரியைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். “இந்தக் கஞ்சியை எனக்காக நீ தானே தயாரித்தாய்?” ‘ஆமாம் இளவரசே…’ ‘இந்த மோதிரம் உனக்கு எப்படிக் கிடைத்தது?”

‘இதை எனக்கு யார் அணிவித்தார்களோ அவர்களிடமிருந்து”

“அப்படியானால்… நீ… நீ யார்?”

மெளனமாக அவள் தன் கோரைப் புல் ஆடையை அகற்றினாள். அற்புதமான பறவைகளின் வண்ணச் சிறகுகளினாலான ஆடையுடன் அழகே வடிவாக அவன் முன் நின்றாள். இப்போதும் அவள் தான் யார் என்பதைக் கூறவில்லை. அதனால் இளவரசனின் அன்பும் குறையவில்லை. அவன் ஏக்கம் பறந்தது. உடனே திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நாட்டின் பெரிய பிரபுவான அவளுடைய தகப்பனாருக்கும் திருமண அழைப்புப் போயிற்று. அவள் சமையலறைக்குப் போனாள். தலைமை சமையல்காரரிடம் கல்யாண விருந்தில் எந்தப் பண்டத்துக்கும் உப்பே போடாமல் தயாரிக்குமாறு கூறினாள். “யாராலும் எதையும் சாப்பிட முடியாதே’ என்றான் அவன். ”பரவாயில்லை” என்றாள் அவள்.

“அரசரின் கோபத்துக்கு ஆளானால்?”

‘அதையும் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறிப் போனாள் மணமகள். விருந்து மண்டபத்திலே எல்லோரும் முகம் சுளித்தார்கள். யாரும் எதையும் சாப்பிட முடியாமல் தத்தளித்தார்கள். மணமகளின் தகப்பனாரான அந்த கர்வம் கொண்ட பிரபுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. “ஐயா, ஏன் இப்படி அழுகிறீர்கள்?” என்று கேட்டான் இளவரசன். அவர் அருகே உட்கார்ந்திருந்தான் அவன் தன் மனைவியுடன்.

“எனக்கொரு மகளிருந்தாள். ‘என்னை எப்படி நேசிக்கிறாய்?’ என்று அவளிடம் ஒருநாள் கேட்டேன். அதற்கு அவள் ‘இறைச்சி உப்பை நேசிப்பது போல’ என்றாள். அதன் பொருள் புரியாமல் அவள் என்னை அவமானப்படுத்துவதாக எண்ணி வீட்டை விட்டு விரட்டி விட்டேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அவள் தன்னுடைய மற்ற சகோதரிகளைவிட என்னிடம் அதிக அன்பு பாராட்டினாள் என்று. ருசிக்க உப்பு எத்தனை அவசியம் என்பதை அறிந்த போது அவள் தூய்மையான அன்பின் ஆழத்தையும் உணர முடிகிறது. என் அறிவீனத்தால் அவளை இழந்து விட்டேன். அவள் உயிரோடுகூட இருக்க மாட்டாள்” என்றார். “இல்லையப்பா, உங்கள் மகள் இதோ உயிரோடு இருக்கிறேன்” என்று கூறித் தகப்பனாரின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் மணமகள். ஆணவம் அழிந்த பிரபுவுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி. விருந்திலே எல்லோருக்கும் உப்பு பரிமாறப்பட்டது. உணவும் ருசித்தது.

+++

வி. கிருஷ்ணமூர்த்தி (வாண்டுமாமா) (ஏப்ரல் 21, 1925 – ஜூன் 12, 2014) சிறார் இலக்கிய எழுத்தாளர், ஓவியர். விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைப் பெயர்களில் குழந்தைகளுக்கும், கௌசிகன் எனும் புனைப்பெயரில் பெரியவர்களுக்கும் எழுதியவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

1984-ல் பைகோ பிரசுரத்தால் தொடங்கப்பட்ட பூந்தளிர் இதழுக்கு வாண்டுமாமா ஆசிரியராக பொறுப்பேற்றார். பூந்தளிரில் பல படக்கதைகளை, நீதிக் கதைகளை, அறிவியல் தொழில் நுட்பங்களை, பொது அறிவுச் செய்திகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் எளிய தமிழில், அழகான படங்களுடன் கொடுத்தார்.

சிறார் கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு என அனைத்துத் துறைகளைப் பற்றியும் குழந்தைகளைக் கவரும் வகையில் எழுதியவர் வாண்டுமாமா.

‘பலே பாலு’, ‘சமத்து சாரு’ போன்ற பல்வேறு குணாதியசங்களைக் கொண்ட அவருடைய குழந்தைக் கதாபாத்திரங்கள் சிறார் உலகின் நிரந்தர மனிதர்களாகவே மாறினார்கள். ‘கனவா, நிஜமா?’, ‘ஓநாய்க்கோட்டை’ போன்ற அவரது கதைகள் குறிப்பிடத்தக்கவை. ‘தோன்றியது எப்படி’ (4 பாகங்கள்), ‘மருத்துவம் பிறந்த கதை’, ‘நமது உடலின் மர்மங்கள்’ ஆகியவை வாண்டுமாமா எழுதிய முக்கியமான அபுனைவு நூல்கள் என எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *