வா.மு.கோமு
சுப்பைய்யன் இருபது வருட காலமாக ஹெர்குலஸ் சைக்கிளில்தான் சுத்துப்பட்டு எங்கும் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார். வாழங்கருக்கில் மாகாளியம்மன் கோவிலிலிருந்து தெற்கே கடைசி வீடு அவருடையது. திண்ணை வைத்த ஓட்டுவீடு அது. ஊருக்குள் நான்கைந்து நபர்கள் தான் இன்னமும் ஓட்டுவீட்டினுள் குடித்தனம் செய்கிறார்கள். மற்றெல்லோரும் தார்ஸ் வீடு கட்டி வருடங்கள் சில ஆகியிருந்தது.
வருடம் யாரேனும் ஒருவரோ இருவரோ பழைய வீட்டை டோசர் கொண்டு இடித்துத்தள்ளி நிரவி புதுவீடு கட்டும் பணியை ஆரம்பித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கடனோ உடனோ போட்டு, பார்க்க அந்துசாய் வீடமைத்து வாழ்வதில் நிம்மதி இருக்கிறதுதான் ஒவ்வொருவருக்கும். இப்போதெல்லாம் டைல்ஸ் ஒட்டிய தரைதான் வேண்டுமென்கிறார்கள். சாணிபோட்டு வீட்டை வழித்த காலம் போய்விட்டது கிராமங்களில்கூட.
பெரியவர்கள் டைல்ஸ் பதித்த வீட்டினுள் பத்திரமாய் கால் வைத்து நடக்க பழகிக்கொண்டு இருக்கிறார்கள். பாத்ரூமிலும் டைல்ஸ் என்பதால் வழுக்கி விழுந்து இடுப்பை முறித்துக்கொண்டு கட்டிலிலும் கிடக்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் வந்தனவெல்லாம் மனிதர்களுக்கு நன்மைக்கு பதிலாக தீமைகளையே தந்தவண்ணமாக இருக்கிறது.
சுப்பையனுக்கு தன் சம்சாரம் மாராத்தாள் மீது பிரியம் இருக்கிறதோ என்னவோ தன் சைக்கிள் மீது எப்போதும் கொள்ளைக்காதல் கொண்டவர். அவரது சைக்கிள் ரொம்பகாலமாகவே கசமுசவென கலர் கலராய்த்தான் இருக்கும். சீட்கவர் போட்டால் கூட அதில் பாசிமணிகள் தொங்கும். ஹேன்ட்பாரில் மணிபெல் இருந்தாலும் அருகிலேயே பேப்பை வைத்திருப்பார். சக்கரங்களின் கம்பிகளில் முன்பக்கவீலுக்கு பாசிமணிகள் சிவப்பு என்றால் பின்புற சக்கர கம்பிகளுக்கு நீலக்கலராய் இருக்கும்.
லைட் டூமுக்கு கவர், பாருக்கு கவர் போட்டிருந்தால் அதிலும் குஞ்சம் கட்டித்தொங்கும். ’சைக்கிள் பார்க்க ரதம் மாதிரி இருந்தால்தானே இன்னும் நாலு கிலோமீட்டர் சேர்த்தி சந்தோசமா அழுத்தீட்டுப்போலாம்!’ என்பதே அவர் எண்ணம். போக முக்கோணத்தில் சைக்கிளில் காற்றடிக்கும் சின்ன பம்ப் இருக்கும். பஞ்சர் ஒட்டும் சாமான்களான உரைப்புக்கட்டை, சொல்யூசன், வேஸ்ட் டியூப், கத்திரி என்று தகரப்பெட்டியினுள் தயாராய் இருக்கும்.
வாங்கிய புதிதில் சாலையில் பார்ப்போரையெல்லாம் மற்றொருமுறை திரும்பிப்பார்க்க வைத்த சைக்கிள் அது. தினமும் அன்றிலிருந்து இன்றுவரை காலையில் வெளியில் கிளம்புகையில் சைக்கிள் ரிம்மையெல்லாம் எண்ணெய் போட்டுத்துடைத்து வீல்களில் ஆரம்பித்து எண்ணெய் விட்டு, சைக்கிளில் எங்கு சின்ன சத்தம் வந்தாலும் அதே இடத்தில் நிறுத்தி ஆராய்ச்சி செய்து சத்தத்தை சரி செய்துவிட்டுத்தான் கிளம்புவார். உள்ளூரில் அவரது சைக்கிளுக்கு ’ஜம்பு சர்க்கஸ்’ என்ற பெயரிருந்தது.
கடந்த நான்கைந்து வருடங்களாக சில்வரில் மின்னிய கேரியரையும், பெட்டியையும் தூக்கிவிட்டு, நீளமான கேரியரை வைத்து அதில் பெரிய கொட்டுக்கூடையை நிரந்திரமாக இருக்குமாறு இரண்டு மூங்கில் தப்பை கொடுத்து, கயிறு கொண்டு கட்டி வைத்திருக்கிறார். அவரது வியாபாரத்திற்கும் அந்த சைக்கிள் இன்னமும் உதவியது.
பார்ப்போர்களெல்லாம் ’ஒரு டிவிஎஸ் பைக்காவது வாங்கி இந்த வேலையை செய்யலாம்ல மாமா!’ என்றால் `அது எண்ணெய் ஊத்துனாத்தான ஓடும்? இது வருசம் ஒருக்கா டயர் மாத்தினா போதும் மாப்ளெ.. பஞ்சரானா கூட அவத்திக்கே உக்கோந்து ஒட்டீட்டு காத்தடிச்சுட்டு கிளம்பிடுவேன்! எவ்ளோ வசதி இது. இதையுட்டுட்டு பைக்கி வாங்கி ஓட்டி கட்டுபடியாவாது எனக்கு! அப்புறம் வருசம் ஒருக்கா சர்வீசுக்கு உட்டா சொளையா ரெண்டாயிரமாச்சிம் கையில இருக்கணும். அப்புறம் லைசென்சு வாங்கணும். வண்டிக்கி வருசத்திக்கி ஒருக்கா இன்சூரன்ஸ் கட்டணும். வழியில போலீஸ் கைகாட்டி ஒதுங்கச்சொன்னா ஒதுங்கி பதில் சொல்லணும்! என் சைக்கிளை யாரு நிறுத்தி செக் பண்ணுவாங்க?’ என்றே சொல்வார்.
முத்தய்யனுக்கு இப்போது ‘ஆட்டேவாரி’ என்று பெயராகிவிட்டது. காடு தோட்டங்களுக்குச் சென்று ஆடு பிடித்துக்கொண்டு சந்தை சந்தையாய் போய் விற்று வருவது அவரது தொழிலாக மாறிவிட்டது. முன்பாக காட்டு வேலைக்கு மாராத்தாளோடு சோத்துப்போசி தூக்கிக்கொண்டு போனவர்தான். காலம் போகப்போக காட்டுவேலை கிட்டாமல் அரசாங்கம் துவங்கிய சாலைப்பணிக்கு சென்றார். அந்த அட்டையை மாராத்தாளுக்கு கொடுத்துவிட்டு வீட்டுத்திண்ணையில் படுத்து வானத்தை பார்த்து யோசித்தபடி கிடந்தவருக்கு, ஊருக்குள் செய்ய பாக்கியான தொழிலாய் ஆட்டு வியாபாரம் இருப்பதை கண்டறிந்தார்.
கராண்டிபாளையத்திலிருந்து கிணிப்பாளையம் வரை இவருக்கு தெரியாத முகங்களில்லை. அதில் சம்பாதனைக்கு ஆடுமேய்த்து குடும்பம் ஓட்டும் சிலரையும் தெரியுமென்பதால் அவர்களை சந்தித்து பேசினார். ’கறிக்கடைக்காரங்களே தேடிவந்து வேணுங்கற குட்டியை புடிச்சுட்டு காசு குடுத்துட்டு போயிடறாங்க மாப்ளெ!’ என்றார்கள். ‘காசெல்லாம் கட்டேன் ரைச்சா பேசி வாங்கிக்கறீங்களா?’ என்று இவர் கேட்டதற்கு வந்த பதில்தான் தைரியமாக இவரை தொழிலில் இறங்க வைத்தது.
‘எங்க மாப்ளெ.. நாலு குட்டியப்புடிச்சுட்டு போறாங்க.. அவுங்களா பத்து கிலோ வரும்னு மூனாயிரம் ரூவாயை குடுத்துட்டு போயிருவாங்க. அதை வெச்சு அப்பிடியே பொழப்பை ஓட்டீட்டு இருக்குறோம். மழைக்காலம்னா எல்லாப்பாக்கமும் பச்சையா இருக்கும். ஓடியோடி குதியாளம் போட்டுட்டு மேயுதுக. வெய்யக்காலத்துல சமாளிக்கிறதுதான் பெரும்பாடா இருக்குது. ஆசையிருக்குது ஆனை மேல போக அதிர்ஷ்டமிருக்குது ஆடு மேய்க்கன்ற கோப்புல ஓடுது மாப்ளெ!’ என்றார்கள்.
முதலாக கராண்டிபாளையம் சின்னச்சாமியிடம் ரெண்டு ஆட்டைத்தூக்கி கூடைக்குள் நேம்பாய் படுக்கப்போட்டு கயிற்றால் நாலு சுத்தும் போட்டு கட்டிக்கொண்டார். முதலில் மிரண்டு கத்திய ஆடுகள் இரண்டும் கூடைக்குள் வானம் பார்த்துக்கிடக்கவும் ‘என்னமோ நடக்கு.. சத்தம் வச்சா நாம தொலைஞ்சோம்’மென அமைதியானது. திங்கள்கிழமை நாளில் குன்னத்தூர் சந்தைக்கி ஊர் மாகாளியாத்தாவை கும்பிட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தார்.
குட்டி பிடித்தவுடனேயே குட்டிக்காரரிடம் பணம் கொடுக்க இவர் என்ன மடியில் முடிந்தா வைத்திருந்தார்? ‘போயி சந்தையை பார்த்துட்டு நேரா பொழுதுக்குள்ள வர்றேனுங்க!’ என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தார். சந்தையில் கிலோ நானூறு என்கிற வகையில் இரண்டு குட்டிகளும் பதினாலு கிலோ என்று போயிற்று. ஏழுகிலோ குட்டியின் கனமென்ன?வென தூக்கிப்பார்த்து மனக்கணக்கு போட்டுக்கொண்டார்.

நேராக சந்தையிலிருந்து வண்டியை எடுத்தவர் சந்தோசமாய் பேப்பையை அன்று வரவர அடித்து அடித்து, ’பேப்பே! பேப்பே!’ என்றே வந்தார் சாலையில். எதிர்க்கே யாரும் வரவில்லையென்றாலும் ‘ப்ப்பேப்பே’ தான். மாலையில் ரோட்டில் ஆடுகளை மேய்த்தபடி வெத்திலை பாக்கு மென்று கொண்டிருந்த கராண்டிபாளையம் சின்னச்சாமியிடம் வந்து சைக்கிளை நிறுத்தினார் முத்தய்யன்.
“இந்தாங்க உங்களுக்கு ரெண்டாயிரத்தி முன்னூறு ரூவா. எனக்கு ஐநூறு ரூவா. சந்தையில கிலோ நானூறு ரூவாய்க்கி ரெண்டு குட்டியும் போச்சுங்!” என்று நீட்டவும் சின்னச்சாமி சந்தோசமாகிவிட்டார்.
“மாப்ளெ! முக்கி முக்கி இடிச்சவளுக்கு மூனு கொலுக்கட்டெ.. எட்டி எட்டிப்பார்த்தவளுக்கு ஏழு கொலுகட்டைங்கறாப்ல ஆயிருக்குமாட்டிருக்குதா! ரெண்டு குட்டிதான் தூக்கிட்டு போனே.. கையில சொளையா கொண்டாந்து குடுக்குறியே.. அப்ப கறிக்கடைக்காரன் குத்து மதிப்பாத்தான் எனக்கு பணம் குடுத்துட்டு போயிருப்பானாட்ட இருக்குதா! நாளைம்பின்னியும் நீயி நேரா என்கிட்டயே வந்துடு. கறிக்கடைக்காரன் வந்தான்னா சாக்குப்போக்கு சொல்லி தாட்டி உட்டுடறேன். நாலுவாட்டி தாட்டி அனுப்பினா வரமாட்டான்ல!”
“சேரீங், திங்களூர் சந்தைக்கு வியாழக்கெழமை கொண்டுட்டு போறதுக்கு கிணிப்பாளையம் பொன்னான் ரெண்டு குட்டி தர்றதா சொல்லியிருந்தான். உங்க உருப்படிங்க மேயட்டும். பணத்தேவை இருந்தா எப்ப வேணாலும் இதுவழியா வர்றப்ப போறப்பெல்லாம் ஒரெட்டு உங்களை பார்த்து விசாரிச்சிட்டே போறனுங்க!” என்று சொல்லிவிட்டு பேப்பையை அடித்துக்கொண்டு அங்கிருந்து ஊர் நோக்கி கிளம்பினார்.
இப்படித்தான் முத்தய்யன் ஆட்டு வியாபாரத்துக்குள் முதலாக காலடி வைத்தார். இப்போது கிலோ நானூற்றி ஐம்பது என்று சந்தையில் கொடுக்கிறார். போகப்போக வீட்டில் வளரும் சாவலை பிடித்துப்போய் விற்றுவிட்டு வருமாறும் சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள். கட்டைப்பையில் சேவலில் கால்களைக்கட்டி ஹேண்ட்பாரில் தொங்கவைத்துக்கொண்டு செல்வார். வருடங்கள் போகப்போக அவருக்கென்று ஒரு தனி மதிப்பு தொழிலில் வந்து சேர்ந்திருந்தது. ‘ஆட்டேவாரி முத்தய்யன் நியாயமான ஆளப்பா! அஞ்சு பைசா யாரையும் ஏமாத்த மாட்டாரு! ஒரு சொல்லு ஒரே பேச்சு அவருக்கு!’
ஆட்டோட சப்பைத்தொடை, கழுத்து, பல்லு இவைகளைப்பார்த்து கணக்குப்போடும் திறனும் இப்போது அவருக்கு வந்திருந்தது. வளர்ப்பதற்கு வாங்கும் குட்டியின் லட்சணம் எப்படியிருக்க வேண்டும் என்பதை பார்த்தவுடனே சொல்வார். போக ஆட்டுக்கு இவ்ளோ வெய்ட்ல குடல் வரும், தலை இவ்ளோ வெய்ட்ல வரும், தோலு இவ்ளோக்கு போகும், நாலு காலுங்க சேர்ந்து நூறு ரூவா கூட வராது என்று பார்வையாலே கணக்குப்போட்டு பழகியிருந்தார். பார்க்க கொழுக்கொழுன்னு சைனிங்கா இருக்கும் ஆடு சந்தைக்கு போனவுடனேயே இவரைப்பார்த்து ‘மேஏஏ’ என்று ஒலி எழுப்பிவிட்டு வாங்கினவனோடு போய்விடும் போன சுடிக்கே!
இப்போதெல்லாம் ஆடுகளுக்கு ரேசன் அரிசியை ஊற வைத்து தீனி என்று வைத்து விடுகிறார்கள். ரேசன் அரிசி மெல்லும் ஆடுகளை பார்த்ததும் கண்டு கொள்வார். இதை இவரிடம் ஆடு வாங்கும் குன்னத்தூர் கறிக்கடைக்காரன்தான் சொல்லிக்கொடுத்தான். அந்த ஆடுகளை கிலோ முன்னூறு என்றுதான் கணக்கு போட்டு வாங்குவதாகவும் அவனே சொன்னான். விசயத்தை தெரிந்து கொண்டவர் அவனிடம் அன்றிலிருந்து இன்றுவரை செல்வதேயில்லை. என்னதான் ரேசன் அரிசி தின்ற ஆடாயிருந்தாலும் அவன் வாடிக்கையாளர்களுக்கு கிலோ ஏழுநூற்றியைம்பது ரூபாய்க்குத்தானே கொடுக்கிறான். ப்ளடி ஃபூல்!
முத்தய்யனுக்கு தன் பையன் வரதராசன் மீதுதான் கவலையாய் இருந்தது. ஒரே பையன் என்று செல்லம் கொடுத்து வளர்த்திவிட்டாள் மாராத்தாள். கேட்டதெல்லாம் அவனுக்கு எந்தச்சிரமம் இல்லாமல் உடனேயே கிடைத்தது. அவனுக்கு முத்தய்யனின் சிரமங்களை புரிந்துகொள்ளத்தான் நேரமில்லை. ஊருக்குள் பனியன் கம்பெனிக்கு வேன் ஏறிப்போய் இவனுடன் படித்த முருகன் பையன், பொன்னுச்சாமி பையனெல்லாம் மூன்று வருடத்தில் புது பைக் வாங்கி இப்போது வேனில் செல்லாமல் பைக்கில் பறக்கிறார்கள்.
வரதராசன் வேலைக்குப்போய்த்தான் பைக் வாங்கி ஓட்டவேண்டிய அவசியமில்லை என்று நினைத்தவன் மாராத்தாளை தினமும் நச்சியெடுத்து புதுபைக் வாங்கிக்கொண்டான். எல்லாம் சரிதான் என்றாலும் அவன் உள்ளூர் பெரியசாமியோடு சேர்ந்து சரக்கடிப்பது மட்டும் துன்பமாய் இருந்தது. இவரது பரம்பரையில் இத்தனை காலம்வரை யாரும் குடிகாரர்களாக இருந்ததே இல்லை.
குடிப்பதற்கு அவனுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று இவரால் யூகிக்கக்கூட முடியவில்லை. மாராத்தாள் நல்ல விசயங்களுக்கு பணம் கொடுப்பாள் அவனுக்கு. குடிக்க என்றால் கொடுப்பாளா? வேலைக்கு என்று எங்கேனும் ஒருவாரம் செல்வான் வரதராசன். அப்புறம் அவ்வளவுதான். இருபத்தி மூன்று வயதில் வெட்டியாய் ஊர் சுற்றுகிறான் தன் பயல் என்று அவருக்கு ஒரே வருத்தம் தான். அந்த வயதில் வெள்ளிரவெளியில் இவர் காட்டுவேலை மாங்கு மாங்கென செய்து கொண்டிருந்தார் தினமும் ஏழு ரூபாய் கூலிக்கு.
அன்று காலையில் உள்ளூர் சுப்பிரமணி தோட்டத்துக்கு போய் ஆடு பார்த்து வரவேண்டுமென நினைத்திருந்தார் முத்தய்யன். இரண்டு நாட்கள் முன்பே இவரைப்பார்த்து அவன் தோட்டம் வரச்சொல்லியிருந்தான். ஊருக்குள் இருந்த அவனது ஓட்டு வீட்டை இந்திக்காரன்களுக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு தோட்டத்தினுள்ளேயே தார்ஸ் வீடு கட்டிக்கொண்டு போனவன் மூன்று வருடமாய் தோட்டமே கதியாய் தன் அம்மா, மனைவி, பிள்ளைகளோடு கிடக்கிறான்.
முத்தய்யனிடம் ஒருபழக்கம் ஆரம்பத்திலிருந்தே இருந்தது. ஏழெட்டு ஆடுகளை ஒரேமுட்டா பிடிச்சுட்டு போங்க என்றாலும் அப்படி ஒரேநாளில் பிடிக்க மாட்டார். ’ஆட்டோ போட்டு கொண்டுட்டு போலாங்கள்ல சித்தப்பா!’ என்று சுப்பிரமணி முன்பு ஒருமுறை இவரிடம் கூறியிருக்கிறான். ‘ஆட்டோவா? அப்புறம் என் கையில இது எதுக்கு இருக்குது?’ என்று சைக்கிளை காட்டினார் அவனுக்கு. அவருக்கு சந்தைக்கி என்று இரண்டு ஆடுகள் கொண்டுபோவதுதான் பழக்கம். வேண்டுமானால் அடுத்த நாள் கறிக்கடைக்காரனிடம் கொண்டு வருவதாய் பேசிவிட்டு கொண்டுபோய் கொடுத்து வருவார்.
என்னதான் சாப்பிட்டாலும் ஒட்டிய வயிறுடனேயே காட்சியளிக்கும் முத்தய்யன் சந்தைகடையில் விற்கும் டீசர்ட்டைத்தான் அணியும் பழக்கம் வைத்திருந்தார். அதிலும் மேல் பாக்கெட் ஒன்று இருந்தால் தான் நூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்குவார். எடுத்தடிக்கும் சிறுவார்கள் அணியும் கலர் என்றாலும் அவருக்கு அதெல்லாம் கவலையில்லை. பாக்கெட் ஒன்று வேண்டும். மற்றபடி கட்டம் போட்ட லுங்கிதான். அதுவும் மூட்டிய லுங்கி நூறுரூபாய் என்றால் மட்டும் வாங்குவார். இருபது ரூபாய் அதிகம் என்றாலும் ‘நீயே வெச்சுக்கோப்பா!’ என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்.
அப்படித்தான் ஒருமுறை ஃப்ளோரோசெண்ட் பச்சைக்கலரில் டீசர்ட் ஒன்றை திங்களூர் சந்தையில் பாக்கெட் இருந்ததால் வாங்கிக்கொண்டார். அதை அடுத்தநாள் அணிந்தபோது அவர் வீட்டு டைகரே பார்த்து மிரண்டுபோய் குரைக்க ஆரம்பிக்கவும்.. ‘உனக்கும் இதே மாதிரி வேணுமாடா டைகரே? அதான் கேக்கறியா? சரிவுடு.. ஞாயித்துக்கிழமெ குன்னத்தூரு சந்தையில இருக்குதான்னு பாக்குறேன்!’ என்றார். நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு மூஞ்சியை சாய்த்து அவரைப்பார்த்தது. ‘அதான் வாங்கித்தர்றேன்னு சொல்லிட்டன்ல.. என்ன பார்வை வேண்டியிருக்கு?’ என்றதும் அது ரோட்டில் ஆளே யாருமில்லை என்றாலும் ’இப்ப வர்றேன்!’ என்று குரைத்துக்கொண்டு ஓடிப்போயிற்று.
அவருக்கு ரெண்டு நாளாய் ராசனின் பெண் மஞ்சுளா இப்படி யேசு சாமி கும்பிடும் குடும்பத்து பையனை கட்டிக்கொண்ட விஷயம்தான் அதிர்ச்சியாய் உள்ளுக்குள் இருந்தபடியே இருந்தது. ராசனும் இவரும் ஆரம்பகாலத்திலிருந்தே நண்பர்களாய் பழகியவர்கள். ஒன்றாகத்தான் கராண்டிபாளையம் பள்ளிக்கூடத்திற்கு போனார்கள் அப்போது.
ஒன்றாகத்தான் கருக்கங்காட்டு கிணற்றில் சுரப்புரடை கட்டிக்கொண்டு நீச்சல் பழகினார்கள். ஒன்றாகத்தான் எலி வேட்டைக்கி மழைக்காலங்களின் இரவில் ஒண்டிவில்லும் டார்ச்சுமாய் சென்றார்கள். இருவருமே நாலாவது வரைதான் படித்து பெயிலானார்கள். அப்பன்காரர்களிடம் படிக்கப்போகலை எனச்சொல்லி முதுகில் ஒரே நாளில் ஒன்பதுமுறை அடிபட்டார்கள்.
முத்தய்யனுக்கு முன்பாகவே ராசன் ராசாத்தியை கல்யாணம் கட்டிக்கொண்டதால் ‘கல்யாணம் பண்டி என்ன பண்ணுனே? என்ன பண்ணினே?’ என்று கேட்டுக்கொண்டே சுற்றினார் அவர் பின்னால். ஒன்னும் சொல்ல மாட்டாம எப்பப்பாரு சிரிக்கானே? என்று ஒருநாள் ராசாத்தியிடமே அந்தக்கேள்வியை கேட்டுவிட்டார். ‘கல்யாணம் பண்டி ராசன் என்னதான் பண்டுனான் உன்னை? கேட்டா கேட்டா சிரிக்கான்?’ என்றதற்கு ராசாத்தியும் சிரித்துக்கொண்டு ஓடவே ‘என்ன இழவுடா இது?’ என்று நினைத்து அந்தக்கேள்வியை பின்பாக கேட்பதையே விட்டொழித்தார்.
இவருக்கும் மனைவி என்று மாராத்தாள் சீனாபுரத்திலிருந்து வரவும் தான் அவருக்கு விசயம் தெரிந்தது. பார்த்தால் ராசன் இவரிடம் வந்து அதே கேள்வியைக்கேட்டார். ‘கல்யாணம் பண்டி என்ன பண்ணுனே முத்தா?’ என்றதும் இவருக்கு சிரிப்பு அடங்கவில்லை. விட்டால் இவனும்போய் மாராத்தாவிடம் அதே கேள்வியை கேட்டுவிடுவானோ என்று.. சிரிப்பை நிப்பாட்டிவிட்டு. ‘சட்டியும் பானையும் பண்டுனேன்!’ என்று பதிலளித்தார்.
சைக்கிளை துடைத்துக்கொண்டே வாசலில் அமர்ந்திருந்த முத்தய்யனைப்பார்த்து ஆள் வெளியே கிளம்பப்போகிறதென தெரிந்துகொண்ட மாராத்தாள் ஒரு குண்டானில் கம்மஞ்சோற்று உருண்டையை சட்டியினுள்ளிருந்து எடுத்துப்போட்டு அதே புளிச்ச தண்ணீரை அதனுள் ஊற்றி பிசைந்தாள். கொழகொழவென ஆன சமயத்தில் நாலு சின்னவெங்காயம் தொளித்து எடுத்துக்கொண்டுவந்து திண்ணையில் வைத்தாள்.
‘பச்சை மொளவா வேணுங்களா?’ என்றாள். ‘இந்த வெய்யிலுக்கு அதை மென்னு குடிச்சா வயிறெல்லாம் அலரிக்கை புடிச்சுக்கும்ளேய்.. வெங்காயமே போதும்’ என்றவர் சைக்கிளை துடைத்த பனியன் துணியை வீட்டின் தாவாரத்தில் சொறுகிவிட்டு கைகழுவ தண்ணீர் பக்கெட்டை நோக்கிச்சென்றார்.
சோத்தைக்குடித்து முடித்த சுடிக்கு மேலுக்கு டீசர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவர் சைக்கிளில் பேப்பையை ஒருமுறை அடித்துவிட்டு, ‘சுப்பான் தோட்டத்துவரைக்கிம் போயிட்டு வந்துடறேன். இன்னிக்கி உனக்கு ரோட்டு வேலை இருக்குதா?’ என்று வீட்டைப்பார்த்து குரலிட்டார். ‘ஆமாங்கொ! பையன் தூங்கீட்டு இருக்கான். பத்தரைக்காட்டம் தான் எந்திரிப்பான். கதவை சாத்தி நாதாங்கி போட்டுட்டு போறேன்’ என்றாள். ‘சரி’ என்றவர் சைக்கிளை உருட்டிக்கொண்டே ரோட்டுக்கு வந்து ஏறி அழுத்தினார் கிழக்கு நோக்கி மண்பாதையில்.
’வரதராசனாவது பத்தரை மணிக்கி எந்திரிக்கிறதாவது! சொல்றா பாரு பத்தரைக்கி சார் எந்திரிப்பாருன்னு.. தெரியாதா எனக்கு.. பன்னண்டு மணிக்கி எந்திரிச்சி பல்லை புடுங்கீட்டு பன்னண்டரைக்காட்ட அடுப்புல கல்லு வெச்சு ரெண்டு தோசை ஊத்தி திம்பான். அப்புறம் எவனாச்சிம்கூட போனுல ‘அட்றா புட்றா! வெட்றா!’ அப்படின்னு சத்தம்போட்டுட்டு வெளையாண்டுட்டு கெடப்பான். ஒரு மனுசனுக்கு வருசக்கணக்கா போனுல வெளையாடறது சலிக்கவே சலிக்காதா? ராத்திரி ஒருமணி வரைக்கிம் சத்தம் போட்டுட்டே கெடக்கான்’ எப்பத்தான் இதெல்லாம் சோத்துக்காகாதுன்னு தெரிஞ்சிப்பானோ?’ என்று நினைத்தபடியே ராசன் தோட்டம் நோக்கி இட்டாரியில் சைக்கிளை திருப்பினார் முத்தய்யன்.
–இந்த மாதம் ’ஜெய்ரிகி’ பதிப்பகம் வாயிலாக வெளிவரவிருக்கும் நாவலிலிருந்து..
வா.மு.கோமு

