வாழ்வுக்கும் தாழ்வுக்குமான பகடையாட்டம்

இறை நம்பிக்கை, பிரார்த்தனை, ஈகை, நோன்பு, யாத்திரை இவையைந்தும் இஸ்லாம் மதத்தின் ஆதாரக்கால்கள். ஒவ்வொரு இஸ்லாமியனும் இவற்றை தலையாய கடமையாய் மேற்கொள்ள வேண்டுமெனச் சொல்கிறது குரான். ஆனால் அதனை மேற்கொள்ள வேண்டியவர்கள் “மனிதர்கள்” என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் தானே. எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கும்  சுயநலம், கோபம், துரோகம், வெறுப்பு, பேராசை போன்ற துர்குணங்களுக்கும், நற்சிந்தனையை போதிக்கிற கோட்பாடுகளுக்கும் நடக்கும் பகடையாட்டத்தை அடிப்படையாக வைத்து எழுப்பப்பட்டிருக்கிறது கீரனூர் ஜாகீர்ராஜாவின் படைப்புலகம்,

பழனிக்கும் தாராபுரத்திற்கும் இடையே கீரனூர் என்னும் சிற்றூரில் பிறந்த ஜாகீர்ராஜா, பிழைப்பின் பொருட்டு தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு கிடைத்த சிறுபத்திரிக்கைத் தொடர்பின் மூலமாக ”சுந்தரசுகன்” இதழில் எழுதத் துவங்கினார். எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அவர்களின் அறிமுகத்திற்குப் பிறகு ”தளி” அமைப்பின் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார். தீவிர வாசிப்பும், இலக்கியப் பிரக்ஞையும் ப்ரகாஷ் தனக்களித்த வரம் என்று குறிப்பிடும் ஜாகீர்ராஜா, பெரிய பெரிய கற்பனைகளை எழுத நினைத்திருந்த தன்னை ”உன் வாழ்க்கையிலிருந்து எழுது, அதுதான் நவீன இலக்கியம்” என்று நெறிப்படுத்தியவர் தஞ்சை ப்ரகாஷ் தான் என்கிறார்.

கீரனூர் ஜாகீர்ராஜாவின் முதல் சிறுகதைத் தொகுப்பான “செம்பருத்தி பூத்த வீடு” புத்தகத்தை ”அனன்யா” பதிப்பகம் வெளியிட்டது. எழுத்துலகில் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது, மருதா பதிப்பகம் வெளியிட்ட ”மீன்காரத்தெரு” புதினம். தமிழ் இலக்கிய சூழலில் இதுவரை பதிவு செய்யப்படாத பழநி, தாரபுரம் பகுதி முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை முதன்முதலாக எழுத்தில் கொண்டுவந்தவர் ஜாகீர்ராஜா. தமிழ் முஸ்லீம்களின் வாழ்வியல் முறை இன்னும் நவீன இலக்கியத்துக்குள் வந்து சேரவில்லை என்ற ஆதங்கம் ஜாகீர்ராஜாவிற்கு இருக்கிறது. அவர்களுக்கே கூட இன்னும் தாங்கள் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் என்ற மயக்கம் தான் இருக்கின்றதே ஒழிய தாங்களும் தமிழர்கள் தான் என்ற புரிதல் இல்லையோ என்ற ஐயம் கூட தனக்கிருப்பதாக ஜாகீர்ராஜா குறிப்பிட்டு இருக்கிறார்.

தன்னுள் பின்னிப் பிணைந்திருக்கும் பால்ய கால கீரனூரையும், தான் வாழும் தஞ்சாவூரையும், பிழைப்பிற்காக வசிக்கும் சென்னையையும் களங்களாகக் கொண்டன ஜாகீர்ராஜாவின் கதைகள். நபிகளின் தியாகத்தையும், இறையின் பெருங்கருணையையும், தொழுகையின் மேன்மையையும் மட்டுமே பெரும்பாலான இஸ்லாமிய படைப்புகள் பேசி வந்திருக்கின்றன. அவர்களில் எளிய மக்களின் வாழ்வின் துயரங்களைப் பேசிய படைப்புகள் கூட, இறுதியில் அல்லாவின் அளப்பரிய கருணையினால் ஏதேனுமொரு அதிசயம் நடந்து வறியவர்கள் சுபிட்சம் அடைந்ததாகவே முடிகிறது. இஸ்லாமிய சமூகத்திலுள்ள விளிம்பு நிலை மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகள், அவர்களின் சுகதுக்கங்கள், கட்டுப்பாடுகள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி பதிவு செய்கின்ற படைப்புகள் அரிதாகவே வெளிவருகின்றன. தான் சந்தித்த, தான் வாழ்கின்ற சமூகத்தின் அசல் முகத்தை உள்ளிருந்து எழுதுவதில் ஜாகீர்ராஜா முதன்மையானவராக இருக்கிறார். போலிப்பூச்சுகள், வெற்று வர்ணனை, அலங்கார வார்த்தைகள் இவை எதுவுமின்றி தன் எளிய மொழியில் உண்மையைப் பேசுவதாலேயே இவரது எழுத்துகள் வலிமை பெறுகின்றன.

”தேய்பிறை இரவுகளின் கதைகள்” தொகுப்பில் உள்ள கதைகளில், கீரனூரில் ஜாகீர்ராஜா சுதந்திரமாக சுற்றித்திரிந்த பதின்ம வயது நினைவுகளையும், ஆன்ம பலத்துடன் அடைகாக்கும் பறவையாய் ஒரு இடத்தில் நிலை கொன்டிருந்த தஞ்சை வாழ்க்கையையும், சினிமா வாய்ப்பு தேடி சென்னையில் அலைந்து திரிந்த அனுபவங்களையும் புனைவின் சாயலில் படைப்புகளாக மாற்றியுள்ளார். இக்கதைகள் எளிய மனிதர்களின் வாழ்வைப் பேசுபவை. நிஜங்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கக்கூடிய இலக்கிய பிரதிகள். அதனாலேயே இவை சாரம் மிகுந்தவையாக இருக்கின்றன. 

 அரசு வேலையோ, பெருந்தொழிலோ இல்லாத ஒரு இஸ்லாமிய இளைஞன் பொருள் ஈட்டுவதற்கான ஒரே வழி வெளிநாட்டுக்கு பயணம் போதல். அதற்காக ஊராரும், வீட்டாரும் கொடுக்கும் மன அழுத்தத்தால் புழுங்கித் தவிக்கும் ஒரு குடும்பஸ்தனின் மனக்குமுறலை சொல்கிறது “வெம்மை” சிறுகதை. சென்ற இடத்தில் சரியான வேலை அமையாமல் அங்கே அவன் படும் துயரங்களையும், வீட்டுக்கு, கடன் கொடுத்து பயணம் அனுப்பி வைத்தனுக்கு பணம் கொடுக்க முடியாமல் அவன் படும் திண்டாட்டங்களையும், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி சட்டத்துக்கு புறம்பான செயல் செய்ய தலைப்படுவதையும், அதனால் கைதாகி வெளிநாட்டு சிறையில் அடைபடுவதையும் பேசுகிறது “வெம்மை”. ஆனால் அந்த நிலையிலும் வெளியே சரியான உணவும், தண்ணீரும் இன்றி தவித்ததற்கு மாறாக, சிறையில் நேரத்திற்கு நல்ல சாப்பாடு, போதிய தண்ணீர், குளிரூட்டப்பட்ட அறை என்று சகல வசதிகளும் கிடைக்கவும், அந்த சிறையிலே இருந்தால் கூட தேவலாம் என்று நினைக்குமளவுக்கு செல்கிறது அவன் நிலைமை. பதினேழு நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை ஆகி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுபவன், ஏமாற்று வார்த்தைகள் கூறி தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தவனை கொலை செய்யும் பொருட்டு அவனைத் தேடிச் செல்வதாக முடிகிறது கதை.

 உருவ வழிபாட்டை முற்றிலுமாக மறுக்கின்ற சமூகத்தின் நெறிமுறைகளை பயத்துடன் கடைப்பிடிக்கும் எளிய குடும்பம். பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடத்துற இமாம் தங்களுடன் நட்பாக பழகுவதில் பெருமிதம் கொள்கிறது. சமூக பழக்க வழக்கங்களை கறாராகக் கடைப்பிடிக்கும் இமாமின் பிடியில் குடும்பம் மெல்ல அமிழ்கிறது. ஆனாலும் அவருக்கும் மனைவியை இழந்த சோகம் மனதுக்குள் புதைந்திருப்பது அந்தக் குடும்பத்துக்கு மட்டுமே தெரியும். தன் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடமாக,  மனத்துயரங்களுக்கு சிறு வடிகாலாக அவரும் அக்குடும்பத்தைப் பார்க்கிறார். ஒரு கட்டத்தில் இமாமின் இருப்பு எப்பொழுதும் தங்களுடன் தொடர்வதாகவும், அவர் எந்நேரமும் தங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்றும் எண்ணத்துவங்குகின்றனர். அந்த நினைப்பு அவர்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. புகைப்படங்கள் மீது, ஓவியங்கள் மீது உவகை கொண்டிருக்கும் அவர்கள், மதக்கோட்பாட்டின் படி, வீட்டில் எந்தவொரு உருவத்தையும் காட்சிப்படுத்தக்கூடாது என்று அடங்கிப் போகிறார்கள். இறந்து போன மனைவியின் நினைவுகள் மெள்ள மறக்கத் துவங்குவதை உணரும் இமாம், அவளது நினைவை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார். அதற்கு அவளது நிழற்படம் ஒன்று தன்னிடம் இருந்திருந்தால் அவளை, அவளோடு வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே உறைய வைத்திருக்க முடியுமே என்று ஆதங்கம் கொள்வதோடு முடிகிறது கதை. சட்ட திட்டங்களும், மரபார்ந்த நெறிமுறைகளும் வாழ்வை செம்மைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே. அவையே கண்மூடித்தனமாகவும், பயத்தின் காரணமாகவும் காரணமின்றி தொடரப்படும் பொழுது அவை எவ்வாறு கழுத்தை நெருக்கிப் பிடித்து, வாழ்வை பாரமாக்குகின்றன என்று காட்சிப்படுத்தியிருக்கும் கதை “உருவம்”.

கிணற்றில் மூழ்கடிக்கப்பட்டு இறந்து போகும் இளம்பெண், தன்னைக் கொன்றவனை பழி தீர்க்கும் சம்பவத்தை மாய யதார்த்த மொழியில் சொல்லும் கதை ”பௌர்ணமிக்கிணறு”. அந்தப் பெண்ணின் மரணமானது மர்மம் நிறைந்ததாக இருப்பதாக ஊரெங்கும் பேச்சாய் இருக்கும் நிலையில், ஒரு பௌர்ணமி இரவில் அவள் தன்னைக் கொன்றவனின் நினைவுகளை மீட்டெடுத்து, கிணற்று நீரில் நள்ளிரவில் குளிக்கும் ஆசையை துளிர்க்கச் செய்து, அவனை கிணற்றடிக்கு வரவைத்து, இறுதியில் நீரின் அடி ஆழத்தில் அவனை அமிழ்த்தி விடுகிறாள். அல்லது கொலை செய்தவனின் குற்றவுணர்வு அவனை கிணற்றின் நீருக்குள் மூழ்கச்செய்து தற்கொலை செய்து கொல்ல வைக்கிறது.

திருமணம் ஆகாமலே இளமையைத் தொலைத்து விட்டு, திருமணத் தரகு வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணிக்கும், அவளது உதவியாளராக இருக்கும் முதிர்கன்னிக்குமான உறவை சொல்கிறது “குடமுருட்டி ஆற்றின் கரையில்”. ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளைகளின் புகைப்படம் ஆல்பத்தில் இணையும் போதும், தன் புகைப்படத்தை அதனுடன் இணைத்து வைத்து கற்பனை செய்து கொள்ளும் அந்த முதிர்கன்னியின் நினைவுகளையும், ஊரின் ஒதுக்குப்புறமாய் டீக்கடை வைத்திருக்கும் ஜக்காரியாவுடனான தரகுப்பெண்ணின் மெல்லிய நட்பையும் இணை கோடுகளாக வரைந்து செல்கிறது கதை. 

நவீனமயத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் துவண்டு கடைநிலைகளில் தேங்கிப் போய்விடும் கணக்குப்பிள்ளையின் கதையை சொல்கிறது, “ரெட்டை மஸ்தானருகில்”. பாரம்பர்யத்தின் பிம்பத்துடன், பிரம்மிக்கத்தக்க வகையில் வலம் வரும் அவர், கணினி மயமாக்கலின் காரணமாக வேலையிடத்தில் தனது செல்வாக்கை இழக்கிறார். பெரிய ஜவுளிக்கடையில் கணக்குப்பிள்ளையாய் இருந்தவர், பெண்கள் ஆடை பிரிவில் புதிய சேலைகளை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக் காட்டும் கடை சிப்பந்தியாக மாறிப்போகிறார். கம்பீரத்தின் அடையாளமாக இருந்த அவரது மீசை மழிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் மினுக்குடன் இருந்து, இப்பொழுது பொலிவு இழந்து போயிருக்கும் அவரது சட்டைப்பை பேனா போலாகிறது அவரது வாழ்க்கையும்.

 “அடையாளம்” சிறுகதை, சேரியைச் சேர்ந்த, சுள்ளி பொறுக்கி விற்கும் மாரி என்னும் சிறுமிக்கும், அவளது முஸ்லிம் தோழிக்குமான நட்பையும், அதனால் ஏற்படுகின்ற வடுவின் அடையாளத்தையும் பேசுகிறது. கால்வயிறு அரைவயிறு என்று வாழ்ந்து வரும் மாரிக்கு, முப்பது நோன்பு வந்தால் அளவில்லா மகிழ்ச்சியாகிவிடும். தினமும் பள்ளிவாசலில் வயிறாற நோன்புக்கஞ்சி கிடைத்துவிடும். அந்த நினைப்பில் சில சமயங்களில் முப்பது முடிந்த பிறகும் கூட சட்டியை தூக்கிக் கொண்டு பள்ளிவாசல் முன் நின்று காத்திருந்து ஏமாந்து திரும்பிய நிகழ்வுகளும் நடக்கின்றன. ஒரு வருடம், முதல் நாள் நோன்பில் பள்ளிவாசலில் நோன்புக்கஞ்சி குறைவாக தயாரித்தபடியால், நோன்பாளிகள் மட்டும் பெற்றுக்கொள்ளுமாறும், மற்றவர்கள் கலைந்து செல்லுமாறும் அறிவிக்கப்படுகின்றது. நோன்பின் மீது உள்ள ஆர்வத்தால் காலையில் இருந்து பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல் பட்டினியாக இருக்கும் மாரி, இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்புவதாக முடிகிறது கதை. வழமையும், வறுமையும் சூழ பேச்சற்றவர்களின் வலியை உண்மையாக பதிவு செய்திருக்கிறது இக்கதை. 

 வாழ்ந்து தாழ்ந்த பெரிய மனிதரின் கதை “ராஜமீன்”. வெளியூரிலிருந்து விருந்துக்கு வரும் மருமகனுக்கு நல்லது செய்து போட வழியின்றி தவிக்கிறார். மருமகன் என்னென்ன ஏளனங்கள் பேசுவானோ என்று மருகுகிறார். பள்ளிவாசல் குளத்தில் வளர்க்கப்படும் “ராஜமீன்” வடிவில் அவரது மேன்மை குணத்திற்கு சோதனை வருகிறது. குடும்பப்பாரம்பரியம், பண்பாடு,  நெறிமுறை இவை எல்லாம் வாட்டியெடுக்கும் வறுமைக்கு முன்னே சருகாக உதிர்ந்து விடுகின்றன. வறுமை ஒருமனிதனை எந்த அளவுக்கும் பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் என்பதை உணர்த்தும் கதை. 

நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் ஓர் இளம்பெண். அவள் தன்னிடம் ஒரு ரகசியம் இருப்பதாகவும், அதை யாருக்கும் சொல்லப்போவதில்லை என்றும் அறிவிக்கிறாள். முதலில் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் அவளது பெற்றோர், பின் அவள் சொல்லும் ரகசியம் சிலநாட்களில் அப்படியே நடப்பது கண்டு அதிசயிக்கின்றனர். செய்தி மெள்ள ஊருக்குள் பரவ, அனைவரும் அவளை இறைத்தூதராக பாவிக்கத் தொடங்குகின்றனர். அவள் சொல்லும் இறைசெய்திகள் அப்படியே நிகழத்துவங்க அவளது வார்த்தைகளுக்காக ஊர் மக்கள் காத்திருக்கத் துவங்குகின்றனர். அவளது ஓவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் அவளோ எப்பொழுதும் ரகசியங்களைக் காப்பதிலேயே முனைப்பாய் இருக்கிறாள். திருமணம் செய்து கொள்ளப்போகிறவனும் ரகசியங்களை தெரிந்து கொள்ளப் பிரயத்தனப்படுகிறான். மற்றவர்களிடம் மறைப்பது போலத் தன்னிடமும் ரகசியத்தை அவள் சொல்லாதது கண்டு மனம் கொதிப்படைகிறான். இறுதியில் அந்த கோபம் திருமணம் தடையாவது வரை செல்கிறது. ஆனாலும் அவள் தன் ரகசியங்களை அவ்வளவு எளிதாக சொல்வதாக இல்லை. திருமணம் நின்று போனதால் மனம் பேதலித்துப் போகிற அவள், தன் ரகசியத்தை உடைக்கிறாள். சொந்தபந்தங்கள் எல்லாம் கூடப்போகிறார்கள், அவர்கள் விருந்துக்கு ஐம்பது ஆடுகளை ஓட்டுக் கொண்டு வர வேண்டும் என்று ஆண்டகை வந்து தன் கனவில் சொன்னதாக வாக்குரைக்கிறாள். அவளது நடவடிக்கையில் முரண்கள் தெரிய தனியறையில் தனித்து விடப்படுகிறாள். தனியறையில் அடைக்கப்பட்ட மூன்றாம் நாள் காய்ச்சல் கண்டு, தனக்கு நிச்சயக்க்கப்பட்டவனின் பெயரை உளறியபடியே இறந்தும் போகிறாள். அவள் சொன்ன ரகசியம், அவளது மரணம் தான் என்று தாமதமாக உணரும் அவன், அழுது புலம்புவதாக முடிகிறது “அமானுஷி” கதை.

நினைவின் மயக்கங்களை பேசும் கதை “செம்பருத்தி பூத்த வீடு”. பிழைப்பின் பொருட்டு வெளியூருக்குச் சென்று வசித்து விட்டு, அங்கும் வெல்ல முடியாமல் பிறந்த ஊருக்கே திரும்பும் இளைஞன், தன் பள்ளிப்பருவத்து நினைவுகளாய் “செம்பருத்தி பூத்த வீட்டு” சிறுமியை மீளக்காண்கிறான். நினைவின் அடுக்குகளில் பொதிந்து போயிருக்கும் பால்ய கால ரசனைகளையும், மகிழ்ச்சியையும் திரும்பிப் பார்ப்பதாக இருக்கிறது இக்கதை.

கோயில்களில், மசூதிகளில், தேவாலயங்களில் வாசலில் அமர்ந்து யாசகம் பெறுபவர்களை எந்தவித பிரக்ஞையும் இன்றி அன்றாடம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். அப்படி ஒருவரின் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை பதிவு செய்திருக்கும் கதை “சுவடுகள்”. இன்னொரு சிறுகதையான ”ஆகாச ராட்டினம்”, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் மனம் பிறழ்ந்த அண்ணனுக்கு தூக்கு வாளியில் சோறு எடுத்துச் செல்லும் அய்யூப்பின் மனக்கண்களில் அவர்களது பால்யம் விரிவதை சித்தரிக்கிறது. குடை ராட்டினத்தில் அவனும், ஆகாச ராட்டினத்தில் அவனது அண்ணனும் ஆடிய விளையாட்டுகள் அவன் மனதில் பசுமை நினைவுகளை கிளர்த்துவதாக முடிகிறது கதை.

சினிமா ஆசையினால் சொந்த ஊரை விட்டு பெருநகரில் அலைந்து கொண்டிருக்கும் மகனுக்கு அவனது அப்பா எழுதும் கடிதம் “மழை”. படிப்பறிவில்லாவிட்டாலும் பரம்பரையாக காத்து வந்து சொத்தை, நன்கு படித்த தன் பாட்டனும், அப்பனும் எப்படி அழித்தனர் என்பதை விளக்கும் அவர், தன் மகனின் போக்கு பிடிக்காமல் தனது ஆதங்கத்தை கடிதம் முழுமைக்கும் கொட்டித் தீர்க்கிறார். இக்கதையையும், தொகுப்பிலுள்ள இன்னொரு கதையான “பெருநகரக்குறிப்புகள்” இரண்டையும் ஒரே நிகழ்வின் இரண்டு பார்வைகளாக வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. பள்ளிவாசல் கபர்ஸ்தானில் கடைநிலை ஊழியம் செய்யம் சக்கரை முகமதுவின் வாழ்க்கையை சொல்கிறது “ராட்சஸப் பறவையின் சிறகுகள்”. 

இவ்வாறு ஒவ்வொரு கதையில் வரும் மனிதர்கள் அனைவருமே ஒரே தெருவில் அக்கம் பக்கம் வீடுகளில் வசிப்பவர்களாக, உறவினர்களாக, ஒரே மனிதரின் பலவார்ப்புகளாக என்று பலதரப்பட்ட கதை மாந்தர்களை படைத்திருக்கிறார் கீரனூர் ஜாகீர்ராஜா. இக்கதைகள் அதிகம் பேசப்படாத ஒரு மூடாக்கு சமூகத்திற்குள் எளிய மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அதற்கான அவர்களின் பாடுகளையும் உண்மையாக பதிவு செய்திருக்கின்றன. ஜாகீர்ராஜாவின் கதைகளின் ஆன்மா, கீழ் மத்திய வர்க்க மற்றும் விளிம்பு நிலையைச் சேர்ந்த மக்களுடையது. அவர்களின் ஆற்றாமையையும், கோபத்தையும், சலிப்பையும், நம்பிக்கைகளையும், அவநம்பிக்கைகளையும் அவர்களின் இயல்பான மொழியில் பேசுபவை இக்கதைகள். அந்தவகையில் நம்முடனே இருக்கும், ஆனால் நாம் அதிகம் அறியாத மனிதர்களுடன் வாழ்ந்த அனுபவத்தைத் தருகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.

”தேய்பிறை இரவுகளின் கதைகள்” – சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர்: கீரனூர் ஜாகீர்ராஜா

பாரதி புத்தகாலயம்

தரவுகள்:

http://jakirraja.blogspot.in/2011/01/blog-post.html

http://jakirraja.blogspot.in/2012/04/blog-post_04.html

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=962

பாலகுமார் விஜயராமன் (1980)

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர்

சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்துவருகிறார்.  மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இதுவரை 5 அச்சு நூல்களையும், 5 மின்னூல்களையும் எழுதியுள்ளார். பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த இவரது “கடவுளின் பறவைகள்” மொழிபெயர்ப்பு உலகச் சிறுகதைகள் தொகுப்பிற்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான வாசகசாலை விருது 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆலன் கின்ஸ்பெர்க்கின் நெடுங்கவிதை “ஹௌல்” மற்றும் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் “அஞ்சல் நிலையம்” நாவல் பரவலான கவனத்தையும், நேர்மறை விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் பெற்றது. காலச்சுவடு வெளியீடாக 2018ம் ஆண்டு வெளியாகிய இவரது நாவல் “சேவல்களம்” பண்டைய காலம் தொட்டு தமிழர் புறவாழ்வில் முக்கியப் பங்காற்றும் சேவல் சண்டை குறித்த நுட்பங்களைப் பேசுகிறது. கருவுறுதலின் போதான அக அலைச்சல், மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற கருக்களைக் கொண்ட இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு “நஞ்சுக் கொடி” இவ்வாண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *