1.

வெட்டுப்பட வந்த கிடா

,

பையனின் காதுகுத்துக்கு எனச்சொல்லி

கிடாய் ஒன்று வாங்கி விட்டிருந்தேன்.

அது வீட்டு வாசலில் தினமும் விடிகாலையில்

சேவல் கூவுவது போன்றே எங்களை கத்தி எழுப்பிற்று!

ஆட்டுக்குத்தெரியும் போலிருக்கிறது

உள்ளூர் ஆத்தாவின் திருவிழாவுக்கு

வெட்டுப்பட வெளியூரிலிருந்து வந்திருக்கிறோமென!

,

எனக்கென்னவென்றால் திருவிழா அன்று

பொங்கல் வைத்தால் திசை பார்த்து பொங்க வேண்டும்.

காதுகுத்தும் நிகழ்வுக்கு காலம் தாழ்த்தாமல்

உறவுச்சனம் வந்திட வேணும்.

இந்தக்கிடா சீக்கிரமாய் துளுக்கி,

சரியான வெட்டு வாங்கி

துள்ளி அடங்கிடவேண்டும்.

,

மதியம் ஒருமணிக்குள் விருந்துப்பந்தலுக்குள் டேபிள்

சேர்களை வரிசையாய் போட்டு உறவுச்சனத்தை

சாப்பாட்டுக்கு அழைக்கோணும்!

மொட்டையடித்து சந்தனம் காய்ந்து சுற்றும்

பையன் கையில் பணம் குவியவேணும்!

சமையல்கார ஆளுக்கு பாக்கித்தொகையை கொடுக்கோணும்.

,

சாப்பிட்டவர்கள் வெற்றிலை போட்டபடி சேரில் அமர்ந்து

எலும்புக்கொழம்பு சூப்பர்னும்,

பிரயாணில ரெண்டு உப்பு சாஸ்தின்னும்,

பச்சைப்புளி ரசம் டம்ளர்ல வாங்கி

குடிச்சேன்னும் பேசணும்!

,

எல்லோரும் சென்ற அமைதியில் மறைவிடம் தேடியோடி

எலைட்டில் வாங்கிவந்திருந்த சரக்கில்

ஒரு டம்ளர் ஊற்றி

கடக்கென கவிழ்த்துக்கொண்டு காரமாய் பண்ணைக்கோழி

துண்டுகள் இரண்டை வாயில் போட்டு மெல்லோணும்.

மீசை தடவியபடி கொழம்பு அண்டா தட்டம் நகர்த்தி

மூஞ்சுட்டுதா? என பார்க்கோணும்.

கடைசியாய் சாப்பிடும்

உள்ளூர் பெண்களைப்பார்த்து கேனை இளிப்பு

ஒன்று காட்டிவிட்டு மீண்டும் கமுக்கமாய் அடுத்த

டம்ளர் சரக்குக்கு வந்துடோணும்!

,

சித்தங்கூரியத்தில்

’வாசல்ல கட்டி வச்சிருந்த எம்பட ஆடெங்களே?’

’பையனைப்போயி தூக்கியா.. காதுகுத்த போலாம்!’

அப்படின்னு வீட்டு வாசல்ல அலப்பரையப்போடணும்!

அப்பத்தான விருந்து ஊடு கலை கட்டும்!

நாலு சனம் நாலெடத்துல நல்லவிதமா பேசும்!

+++

2.

மழை பெய்கிற சமயத்தில் தான்

குடையைப்பற்றி நினைக்கிறோம்

பனிபெய்யும் சமயத்தில் தான்

குல்லாவைப்பற்றி நினைக்கிறோம்.

உள்ளூர்க்காதலி கல்யாணமாகி

பிள்ளை ஒன்றை பெற்ற பிறகுதான்

‘அப்பாடா!’

என்ற நிம்மதியையும் அடைகிறோம்.

+++

மீதமிருக்கும் சிறகோடு உனக்கென்ன வயிற்றெரிச்சல்?

3.

இரண்டு பிணங்கள் விழுந்த ஊரில் எல்லோருக்கும்

அதிகப்பணிச்சுமை விழுந்துவிடுகிறது!

இரண்டு வீட்டுக்கும் சனம் ஓடிக்கழிக்கணுமே!

பிணப்பாதுகாப்பும் முக்கியமே!

,

இரண்டு பிணங்களும் ஒருசேர சுடுகாடு

பயணப்பட ஆசைகொள்வதாய்

யாரோவொரு கிழவி சோளி உருட்டிச் சொன்னாள்.

சனநடமாட்டம் அதிகமெனில் சாப்பாட்டு இலைகள்

குப்பைமேட்டில் விழுமே என்று ஊர்நாய்களும்

இரண்டு வீட்டுக்கும் ஓடியோடிச்சலித்தன!

,

வடக்கே தலைவைத்து படுத்திருந்த பிணங்கள்

யாருக்கும் எதுவும் தெரிந்துவிடக்கூடாதென

மூச்சுவிட மறந்து கால்நீட்டி மல்லாக்க படுத்திருந்தன.

,

பலூன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த

சிறுசுகளை யாரோ அதட்டவும் அந்த இடமே வெறுமையானது!

சுடுகாடு செல்லும் பாதையில் முட்செடிகள்

குழுமியிருப்பதால் அதை ஒதுக்கிவிட நான்குபேர்

கத்தி தூக்கிப்போனார்கள்!

,

சரக்குக்கு போன ஆள்

சீக்கிரமா வந்துருவானா? என்று பெரியவரொருவர்

விசாரணை போட்டபடி ஊருக்குள் திரிந்தார்.

சின்னம்மா வீட்டு கோழிகள்

‘வாள் வாள்’ என ஒப்பாரி வைத்துக்கொண்டு ஊரைவிட்டு

ஒதுக்குப்புறம் ஓடின!

,

கோடித்துணியும் பொரியும் வாங்கப்போன

உள்ளூர் நாவிதன் உச்சிவெயிலில் ஊர்வந்து சேர்ந்தான்.

பந்தம்பிடிக்க வந்த உள்ளூர் வன்னான் போதைமிகுதியாகி

பாடையில் படுத்துருண்டான்.

எழுப்பிப்போக வந்த

தன் மனையாளின் சீலையை உருவிவீசி

ஊர்மத்தியில் வித்தை காட்டினான்!

,

ஒருவழியாய் ஒருபிணம் சுடுகாடு பிரயாணிக்க

மற்றொரு பிணம் மாலைக்கனம் தாளாமல் புறண்டு படுத்தது!

யாரும் தன் வீட்டினுள் இல்லையென்றதும்

முன்வாசலை எட்டி ஒருபார்வை பார்த்துவிட்டு

பின்வாசல் கதவு வழியே ஊரைத்தாண்டி ஓடியது.

,

சென்ற வழியெங்கிலும் பூக்கள்

சிதறியிருந்ததால் தப்பிப்போன

பிணத்தை தேடி ஊரார் செல்லவில்லை!

என்னவோ பயத்தில்

பொணமாய் கிடந்த பொன்னுச்சாமி பொறந்த ஊரைவிட்டு

ஓடியிருக்கலாமென சனம் பேசிக்கொண்டது!

,

பகல்பொழுது முழுக்கவும் காடுகரையில்

எலி வேட்டையை முடித்துவந்த

பாப்பாயாவின் வீட்டுப்பூனைகள்

ஊரின் அமைதிகண்டு புன்னகைத்தபடி

பாப்பாயா வீட்டின் ஜன்னல்வழி நுழைந்து சுருண்டன!

++

4.

என் அன்பிற்குரிய நண்பர்களே!

நீங்கள் அந்த சிறுஇடைக்காரியை வழியில் சந்தித்தால்

எனைப்பற்றி அவளிடம் சொல்லுங்கள்!

உன் பிரியத்துக்குரிய காதலனை புலி வந்து

வனத்திற்கு கவ்வி இழுத்தோடிப்போனதென்று!

அல்லது உங்களுக்கு எப்படித்தோணுகிறதோ அப்படி

அவளுக்கு நான் இல்லாமல் போன சேதியை

தெரியப்படுத்திடுங்கள்!

,

தவிச்ச வாய்க்கு தண்ணிதராத

தன் தாயிடம் அவள் போய் தகவலை சொல்லிடுவாள்.

அவளோ, குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் புருசனிடம்

நான் மாயமாய் மறைந்த சேதியை சொல்லிடுவாள்!

பின்பாக நல்லநாளும் கிழமையுமாய் குடும்பமாய் அமர்ந்து

சிறுஇடைக்காரியின் குருபலனை சோதித்து குன்னாங்கல்

குட்டையனுக்கு அவளை மணம்செய்விக்கட்டும் அவர்கள்!

இப்படியாக நான் காணாமலான தகவலை நீங்கள்

அவளிடம் சொல்லியபிறகு அந்த சிறுஇடைக்காரியின்

வாழ்வானது பூத்துக்குலுங்கட்டும்!

++

5.

ஒரு ஆட்டுக்குட்டிக்கு தெரிந்திருக்கிறது

சந்தையில் கிலோ ஒன்றுக்கு 900 ரூபாய்

மதிப்புடைய கறித்துண்டுகள் தன்னுடலில் இருப்பதை!

அதனால் அது மகிழ்ச்சியாக துள்ளி விளையாடுகிறது காட்டினுள்.

ஓடியோடி முட்டிமுட்டி பால் அருந்துகிறது தன் தாயிடம்.

மிக வேகமாக பத்து பதினைந்து கிலோ எடையை அடையோனும்..

எஜமானுக்கு விஸ்வாசமாய் இருக்கோணும்..

சீக்கிரமாய் குறுநகர் கறிக்கடை முன்பாக நிற்கோணும்.

ஞாயிறு நாளில் வெட்டுப்பட்டு புனிதத்தை அடையோனும்!

ஒரு ஆட்டுக்குட்டிக்கு தெரிந்திருக்கிறது!

சந்தையில் நல்ல கிராக்கி தனக்கு உண்டென!

++

6.

எல்லா ஊர்களிலும் கோவில்கள்

எல்லா கோவில்களிலும் சாமிகள்!

எல்லை காக்கும் சாமி எல்லா ஊர்களுக்கும்..

ஊர்க்காக்கும் சாமிகள் எல்லா ஊர்களிலும் நடுவாந்திரத்தில்!

ஊரில் உள்ளவர்கள் நிலக்கடலை,சோளம் பயிரிட்டு

முடித்தபின் வானத்தை அன்னார்ந்து பார்த்தும்

ஊர்ச்சாமிக்கு அம்மாவாசை பெளர்ணமி

பூஜை போட்டும் மழை கேட்கிறார்கள்!

ஒருகால் இழந்த உள்ளூர் மொண்டிக்காகம்

கோபுரத்தில் அமர்ந்து கிழக்கே பார்த்து கரைகிறது!

,

நிலக்கடலை, சோளமென பயிரிடுவதை விட தம் காடுகளில்

எல்லோரும் எருக்கலையும் நெருஞ்சியும் பயிரிடலாமென

பரிந்துரைத்தது எல்லைச்சாமி!

உள்ளூர்ச்சாமிக்கு திருவிழா எடுத்தால் எல்லைச்சாமி

முகத்தை திருப்பிக்கொள்கிறது! எப்போதேனும்

சூடம் பற்றவைத்து கும்பிடப்போகிறவர்களிடமெல்லாம்

எருக்கலையும் நெருஞ்சியும் பயிர்செய்ய ஏதுவான நிலம்

இதுவொன்றுதானென்றே குறி சொல்வது

அதற்கு வாடிக்கையாகிவிட்டது! அப்போதும்கூட

அந்த மொண்டிக்காகம் இலைகள் உதிர்ந்துபோன

எலந்தை மரத்திலமர்ந்து கிழக்கு நோக்கி கரைகிறது!

+++

7.

நேற்றுமாலை உன் கணவன் சைக்கிள்

ஓட்டக்கற்றுக்கொண்டிருந்த தருணத்தில் தவறிப்போய்

டிச்சுக்குழியில் பிரயாணித்து கால்மூட்டில்

காயப்படுத்திக்கொண்டான்.

இருந்த பச்சை இலைகளை கசக்கி அவன் காயத்திற்கு

மருந்திட்டு பத்திரமாய் உன் வீட்டுக்கு அவனை அழைத்து

வருகையில் நீ தலைக்கு குளித்து முகத்திற்கு பவுடர் பூசி

முன்பொருகாலத்தில் எனை காதலித்த சமயத்தில்

கவர்ச்சிகரமாய் இருந்தது போன்றே இருந்தாய்!

மீண்டும் என்னுள் காதல் பூக்கும் தருணம் வாய்த்ததெனக்கு!

பாலில்லா வரக்காபி தயாரிப்பதாய் நீ சொல்கையில்

நான் மறுத்தேன். எலுமிச்சை பிழியப்படாத காபி சமீப

காலங்களில் ருசிப்பதில்லை எனக்கு! –

,

உன் கணவன்

இத்தோடு நாற்பதாவதுமுறையாக எனக்கு நன்றி தெரிவித்தான்.

உன் வீட்டிலிருந்து விடைபெற்று நான் தெருவுக்கு வருகையில்

உன் தம்பி தன் டி வி எஸ் ஐம்பதில் வேகமாய் பிரயாணித்து வந்து

டிச்சுக்குழியில் விழுந்து உருண்டான்.

வரக்காபிக்கெல்லாம் நான் அடுத்தவர்களுக்கு உதவுவதை

ஐந்துநிமிடம் முன்பாகத்தான் விட்டொழித்திருந்தேன்!

+++

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *