“பிரளயத்தால் மிரண்ட சாதுவாக மனமானதில் ஒன்றுமே ஓடவில்லை”
-சாது…
-தெனாலி …
-என்னையா அழைத்தீர்கள்.
-உன்னைத்தான்.
-ஏன் இத்தனை வருடங்கள் கழித்து …
-ஏன் உன்னைத்தெரிந்துகொண்டபிறகு எழுப்பக் கூடாதா…தேடக்கூடாதா..?
இல்லை.எனக்கு வேலை முடிந்து ஒய்வும் கிடைத்து வருடங்கள் ஓடிவிட்டன.இனி யாருக்கு நான் தேவை?
-ஓ…தேவை வந்துவிட்டது.
-என்ன தேவை..இன்னும் எனது அகடவிகடங்கள் எதுவும் நிகழ்த்தப்படாமல் வீண்போய்விட்டதா..
-அகடவிகடமா?உம்மை ஒன்று கேட்கலாமா?
-கேளுங்கள்.கேட்பதில் என்ன இருக்கிறது.இருந்தால் தந்துவிட்டுப் போகிறேன்.
-உன் பழைய வரலாற்றிலிருந்து மீளாதே.
-என் இருப்பின் வடிவம் எதுவாக இந்தப் பூலோகத்தில் படிந்துள்ளதோ அதைவிடுத்து வேறொன்றாக எப்படி மீள்வது?
-சாதுரியமாகப் பேசித் தப்பிக்க நினைக்கவேண்டாம்.
-சாதுரியமென்பது நான் அடைந்துவிட்டப் போன பிறவிப்பயன்.
-உன் சாதுரியத்தால் ஒரு கூனன் யானைக் காலால் இடறப்பட்டான் நினைவிருக்கிறதா
-ஆம்.அதிலென்ன.என் உயிரை மாய்த்துக்கொள்ளுமளவிற்கு நான் முட்டாள் இல்லை.சந்தர்ப்பம் கிடைத்தது பயனுற்றேன்.
-உனக்கு உன் உயிர் பெரிதுபோல் கூனனுக்கு அவன் உயிர் பெரிதில்லையா ? உன் தந்திரத்தால் ஒருவன் காரணமேதுமில்லாமல் இறந்தானே?
-இல்லை.
-என்ன யோசனை…முதலில் உனது பழைய வரலாற்றிலிருந்து வெளியே வா…உன்னையும் உன் குற்றத்தையும் கைத்தாங்கலாக அழைத்துச்செல்வோம் யாம்.
-என்னைக் குற்றவாளியாக்கும் சாதுவே நீ யார்.நான் காளியிடம் வரம்பெற்றவன்.அந்தக் காளிக்கே என் விளையாட்டுகளில் நகைப்புண்டு.
-காளி வரம் கொடுத்ததெல்லாம் பழைய கதை.காளியை இப்போது கேட்டால் அல்லவா தெரியும்.
என்ன சொல்ல வருகிறீர்கள்.விகடம் செய்வதென்பது எனது தனித்தன்மை.அதையே செய்தேன்.அதுவே என் வாழ்வின் அடையாளமாக நீண்டு போயிற்று.காலத்தால் அழிவுறாத பெயர் பெற்றவன் நான்.மன்னர் கிருஷ்ணதேவராயரின் அரசவை விகடகவி நான்.
-ஓ
-என் பிழை எதுவென்று தெரியவில்லை.வந்தவழியே அமைதியாகக் கடந்துசெல்லுங்கள் சாதுவே.என் புண்ணியம் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.வரலாற்றை மாற்றுவதற்கும் தோற்கடிப்பதற்கும் உங்களுக்கு ஏன் அவ்வளவு ஈடுபாடு.
-சாது மிரண்டால் காடு கொள்ளாதே.
-கூனனின் மனைவி என்ன ஆனாள் தெரியுமா? அவன் பெற்ற பிள்ளைகள் பற்றியாவது?
-அதிலெல்லாம் எனக்கு ஆர்வமில்லை.அரசரின் தண்டனையிலிருந்து தப்பிக்கக் கிடைத்த வழியில் அவன் வந்தான்.
-சரி அந்த யானை என்ன பாவம் செய்தது?
-சாதுவே …நீங்கள் யானைக்கும் நீதி வேண்டி வந்தீர்களா?ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் வரலாற்றையும் காவியத்தையும் மாற்றியமைப்பதற்கு சாதுக்களால் முடியாது.என் போன்று துணிந்தவர்களாலேயே காவியம் உருவாகிறது.
-நீயும் உன் காவியமும்.ஆக கூனன் பற்றி உன்னால் யோசிக்க முடியாதில்லையா?
-இல்லை.அது முடிந்துபோன ஒருவனின் வாழ்வு.அதைத் தொடர வேண்டிய அவசியமென்ன?
-தெனாலி ஒரு கதை சொல்கிறேன் கேள்.இங்கே இந்த மரத்தின் கீழ் அமரலாமில்லையா?
தாராளமாக அமருங்கள் சாது.நானும் யாருடனாவது பேசி வெகு காலமாகிவிட்டது.இன்னும் எத்தனை வருடங்கள் இந்த மரமாகவே உருவெடுத்து நிற்பேன்.என் வேர்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன.மழை பெய்தால் செந்நிறமாகி அருவருப்பாகத் தெரிகின்றன.இன்று நீங்களாவது என்னருகில் வந்தீர்களே.அருகிலுள்ள எல்லா மரங்களையும் வெட்டிவிட்டார்கள்.வெறிச்சொடிவிட்டது.
-சரி.சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்.உன் தலையை இடறச்செய்வதற்கு மன்னர் ஆணையிட்டபோது ம்ம்…அது போலிச்சாமியார் கதைதானே.அவரைக்கொன்றது தவறில்லை.நியாயம் உன்பக்கமேயென்று அரண்மனை அதிகாரிகள் மன்னரிடம் எடுத்துச்சொன்னார்களே அது நினைவிருக்கிறதா.
-இருக்கிறது.
சரி பிராமணனைக் கொன்றால் சாபம்.வண்ணானைக் கொன்றால் தகுமென்றா நினைக்கிறாய்?
சாது…நீங்கள் உண்மையில் சாது தானே?முதலில் உயிரைக் கொன்றது தவறென்றீர்கள்.இப்போதோ வண்ணானைக் கொன்றது சாபமாகாதா என்கிறீர்கள்?இரண்டுக்கும் வேறுபாடுள்ளதே?
நிச்சயமாக வேறுபாடுள்ளது.என் கேள்வியில் எந்த அபத்தமும் இல்லையே தெனாலிராமா.உன் இன்னொரு கதையில் பார்ப்பனரைக் கொன்ற சாபம் சும்மாவிடாதென்று கூடச் சொல்லியிருக்கிறார்கள்.
-சற்று பொறுங்கள்.நீங்கள் இப்படி இவ்வளவு தூரம் என்னைத் தேடிவந்து விசாரிப்பீர்களென்று தெரியாது.என் விகடம் எதுவும் இதற்குப் பதிலாக பலிக்குமா தெரியவில்லை.யோசித்தே பதில் சொல்கிறேன்.
-தெனாலி …ஏதோ எனக்கு உன்னிடம் கேட்கவேண்டுமென்று தோன்றியதால் …
-சாது நீங்கள் சொல்வது சரிதான்.எனக்குப் பதிலாக கூனனைக் குழியில் இறக்கிவிட்டிருக்கக் கூடாது.இன்னொரு கதையில் பிராமணர்களும் பிராமணனைக் கொன்றால் சாபம் என்றிருக்கக்கூடாது.இரண்டும் வேறு வேறு கதையில் நிகழ்ந்திருக்கக் கூடாது.
-அட ராமா…உன் விளக்கமே விளக்கம்.என்னை என்ன கிருஷ்ணதேவராயரென்றா நினைக்கிறாய் பாராட்டிப் பரிசு தர?
-ஹ்ம்ம்…சரி.ஒரு கதை சொல்வதாகச் சொன்னீர்களே அதையாவது சொல்லுங்கள்.என்னால் நிரூப்பிக்க முயல்கிறதைச் செய்கிறேன்
-உன்னால் தனது கூன் சரியாகுமென்று ஆற்றுமணலில் கழுத்தளவு புதையுண்டு யானைக் காலால் இடறி தலை சின்னாபின்னமாகி இறந்தானே வல்லன்.அவனது நிலைமையைவிடு அவன் பெண்டு பிள்ளைகள் பற்றிக் கேள்வியுற்றாயா பிறகு?
-இல்லை.அதற்கெல்லாம் என் சுயப் பிரதாபங்களில் இடமளிக்கவில்லை.நானும் எனது தப்பித்தலும் மட்டுமே வாழ்நாள் முழுக்கப் பரிசுபெற்று வந்தது.
-கூனனின் மனைவி இதுகாறும் தனது கணவனை ஆற்று நெடுகத் தேடியலைந்துவிட்டு அவனது தலை சிதைந்ததைப் பார்த்து ஓவென்று கதறியழுதாளே…
-இருங்கள் …இதெல்லாம் சுத்தக் கற்பனை.அவனுக்கு மனைவியில்லை.
-உனக்கெப்படித் தெரியும் ராமா?
-ஏன் தெரியாது.அவனைத் தினமும் ஆற்றங்கரையில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
-ஆ..நான் சொல்ல வருவதைக் கேட்க நீ தயாராகயில்லை.
-இல்லவேயில்லை.அவன் யாருமற்ற அனாதை.
-ராமா அவன் வைத்திருக்கும் கழுதைகளே அவனுக்குக் குடும்பமில்லையா.
-ஓ …நன்றாகயிருக்கிறது.அவனுக்கு மனைவியென்ன கழுதையா?
-இருக்கக்கூடாதா.
-கழுதையை விடுங்கள்.எனக்கு இந்தக் கழுதைக் கதையெல்லாம் வேண்டாம்.அவன் யாருமற்றவன்.என் உயிர் போக நேரயிருந்த தருணத்தில் அகப்பட்டான்.மாட்டிவிட்டேன்.இதில் எந்தத் தவறுமில்லை.நான் வேண்டுமானால் அவனது ஆவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
-சாது தான் கொண்டுவந்திருந்த பழமொன்றையெடுத்து உண்ணத் தொடங்கிவிட்டார்.
-ராமா உன்னிடம் பேசிப் பலனில்லை.ஏன் இப்படியொரு தந்திரம் செய்தாய் ?அவன் உயிரும் உன் உயிரும் வேறு வேறா?
-நிச்சயமாக.நான் தந்திரவாதி பிழைத்துக்கொண்டுவிட்டேன்.அவன் வெளுத்ததெல்லாம் பால் என்பானோ என்னவோ… பிழைக்கத் தெரியாதவன்.மறைந்துவிட்டான்.
-ராமா.எனக்கு வேண்டிய பதில் இன்னும் கிடைக்கவில்லையே.
-சாதுவே இவ்வளவு நேரம் பொறுமையாக நீங்கள் சொல்வதைக் கேட்டபடியே வந்தேன்.சொல்லப்போனால் எனக்குத்தான் ஒரு பலனுமில்லை.கழுதை கெட்டது போங்கள்.
-சரி மீண்டும் கேட்கிறேன்.அவன் தலையும் உன் தலையும் வேறு வேறா..ஏதோ ஒரு தலையென்று யானை இடறிற்றே.யானைக்குத் தெரியாதது வாஸ்தவம்.உனக்கு?
-சாதுவே.என் தலையும் அவன் தலையும் வேறு வேறென்பது நான் சொன்னதையெல்லாம் கேட்டு நம்பி மணலுக்குள் இறங்கினானே அதிலிருந்து தெரியவில்லையா?
-நம்பிக்கைத் துரோகம்?
-நிச்சயமாக இல்லை.
-ஒருவகையில் கொலை?
-நிச்சயமாக இல்லை.
-அப்படியானால் தந்திரமே பலித்தது இல்லையா?
-ஆம்.
-தந்திரமே வென்றது .இல்லையா?
-தந்திரம் எங்கிருந்து வந்தது?கழுத்தளவு புதையுண்டு தலை போகும் சமயத்திலா?காளியின் அருளென்று மட்டும் சொல்லாதே.
-காளி என் தந்திரங்களை ஆசிர்வதித்தாளே ஒழிய எனக்கு அவள் கொடுத்த வரத்தால் இது நேரவில்லை.நீங்கள் வரலாற்றைத் தீர வாசித்துவிட்டீர்கள் தானே.
-நிச்சயமாக.சரி சற்று இளைப்பாறுகிறேன்.நீயும் ஓய்வெடு.
-ஐயோ சாது என் வேர்களை நம்பிப் படுத்து ஓய்வெடுக்காதிர்கள்.
-ஏன்?
-வேர்கள் கழுத்தளவு புதையுண்டு தலை மட்டுமே தெரிபவையாக உள்ளன.கவனம்.
-ராமா!


