சுந்தரவனக்காடு மிகப்பெரியதும் மிக அமைதியானதுமாகும். காடு வெளிப்பார்வைக்கு என்றுமே அமைதியாகத்தான் பார்ப்போருக்கு தெரியும். அது அப்படியானதல்ல என்பதை நாம் நெருங்கி உள்ளே பிரயாணித்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

அப்படியான அமைதியான சுந்தரவனத்திற்குள் எப்படியேனும் பிழைத்துக்கொள்ளலாமென நினைத்து நரிக்குடும்பம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த நரிக்குடும்பத்தின் தலைவன் பிரதாப நரியாருக்கு தொழ்குடி தொழிலான கட்டு வைத்தியம் மட்டுமே தெரியும். போக அதற்கு ஒரு நண்டையோ, பெருக்கானையோகூட தனித்து வேட்டையாடி பிடிக்கத்தெரியாது.

அதன் பிள்ளைகள் நால்வரும் இன்று இளமையுடனும், வாலிபவயதின் முதல் படியிலும் நின்றிருந்தனர். பிரதாப நரியாருக்கு மூன்று ஆண்பிள்ளைகள். மூன்றின் பெயரும் முறையே சங்கர், சலீம், சைமன். நான்காவது உருப்படி மோனிஷா. பிரதாப நரியாரின் துணைவியார் பொன்னம்மா. ஆனால் அவளை யாரும் பொன்னம்மா என்று முழுமையாக அழைப்பதில்லை. ’பொன்னூ’ என்று தான் அழைப்பார்கள்.

பொன்னூ மிகத்தந்திரசாலியான அம்மா நரி. காட்டில் கண்ணுக்கு சிக்கும் வேட்டையை எப்படி சூழ்ச்சியாய் வளைத்துப்பிடித்து தங்களுக்கு உணவாக்கிக்கொள்வது என்பதெல்லாம் அத்துபடி. பையன்கள் சங்கர், சலீம், சைமன் மற்றும் மோனிஷா நால்வருக்குமே இன்றைய காலம் வரை உணவை வேட்டையாடிப்பிடிப்பதில் புதிது புதிதான திட்டங்களை அரங்கேற்றும் அம்மாவை முழுமையாக தெரிந்துகொள்ளவே முடியவில்லை. கேட்டால்.. ‘அது அப்பப்போ தோணுறது கண்ணுங்களா!’ என்றே சொல்லும்.

மற்ற வனங்களைப்போன்றே சுந்தரவனத்தை ஆள்வதும் ஒரு சிங்க ராஜா தான். சிங்கராஜாவுக்கு வனத்தினுள் என்றுமே நீதி, நேர்மை முக்கியம். வனத்தின் கடைகோட்டில் அநீதி என்றால் அந்த இடத்தில் அரைமணி நேரத்தில் நின்றிருப்பார். மந்திரியாக சிங்கராஜா ஒரு வயதான கரடியை கூடவே வைத்திருந்தார். கரடியார் சொல்லும் ஆலோசனைகளை அவர் பல காலமாக ஏற்று அதனை வனத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

பிரதாப நரியார் தன் குடும்பத்தார்களுடன் வெகு தொலைவிலிருந்து கால்நடையாகவே பயணித்து சுந்தரவனத்தில் நுழைந்திருந்தார். இப்போதைக்கு நிம்மதியான ஓய்வு தேவையாய் இருந்தது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும். ஆனால் வந்துசேர்ந்திருந்த வனத்தைப்பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாதல்லவா! வெட்டவெளியில் புற்களிடையே படுத்து ஓய்வெடுக்கவும் முடியாது. யானைக்கூட்டமோ அல்லது காட்டெருமைக்கூட்டமோ ஓடிவந்தால் முழுக்குடும்பமுமே மிதிபட்டு சின்னாப்பின்னமாகிவிடுமல்லவா!

பிரதாப நரியாருக்கு சுந்தரவனத்தின் அமைதி புதியதாகவும் பயமாகவும் இருந்தது. இருந்தாலும் பையன்கள் முன்பாக அதை காட்டிக்கொள்ள முடியுமா? அடிக்கடி ‘நான் நலம்’ என்பது போல தொண்டையை ’கர்ர்க் கர்ர்கெ’ன செருமிக்கொண்டார். நேரம் வேறு மாலை நேரமாகையால் சீக்கிரமாக இருள் சூழ்ந்துவிடுமே! தங்களுக்கென்று வளை தோண்டி அதனுள் பதுங்கிக்கொள்ளவும் முடியாது. வனத்தில் ஓநாய்க்கூட்டமிருந்து, அவைகள் மோப்பம் பிடித்து வந்துவிட்டால்? கட்டுவைத்தியர் கதை முடிவதோடல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்கள் கதையும் இந்த வனத்தில் முடிந்துவிடுமே!

எப்படியும் சீக்கிரமேனும் ஒரு சிறிய குகையையேனும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நாலுகால் நடையை துரிதப்படுத்தினார் பிரதாப நரியார். அவரைத்தொடர்ந்து குடும்பத்தார்களும் தங்கள் நடையை துரிதப்படுத்தினர்,

கொஞ்சம் தூரத்தில் பிரதாப நரியாரின் குடும்பம் நரிக்கிழவர் ஒருவரை சந்தித்தது. அந்த நரிக்கிழவர் காய்ந்து போன விறகுகளைப்பொறுக்கி அதனை ஒரு கயிறால் கட்டி தன்னருகில் வைத்துக்கொண்டு, பெரிய மரத்தில் தன் முதுகை சாய்த்தவண்ணம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்,

நரிக்கிழவரின் கண்கள் மூடியிருக்க,, தூக்கமாய் இருக்குமோ? என்று பிரதாப நரியார் அவரை எழுப்பி விசாரிக்க தயக்கம் காட்டினார். ஆனால் பொன்னூ நரி.. ‘யோவ் பெருசு.. என்ன தூக்கமா?’ என்று ஊளையிடவும், திடுக்கிட்டு கண்விழித்தவர் தடுமாறி எழுந்து இவர்களைப்பார்த்து தன் வாலை சுழற்றி, நிலத்தில் முன்கால்களை வைத்து மரியாதை செய்தார். இதைக்கண்ட மோனிஷா நரிக்கு சிரிப்பாணி வந்துவிட்டது. அடுத்தகணமே பொன்னூ அதனைப்பார்த்து முறைக்கவே அமைதியானது மோனிஷா.

“உனக்கு தாத்தா வயசிருக்கும் அவருக்கு.. மரியாதை தெரியாத பிள்ளையாய் வளர்த்தியிருப்பதாய் அவர் நினைக்க மாட்டாரா? சிரிப்பென்ன சிரிப்பு உனக்கு?” என்று பொன்னூ நரி மோனிஷாவிடம் கேட்டது.

“இல்லம்மா.. நாமளே பிழைக்க மாட்டாம பஞ்சம் பிழைக்க இந்தக்காட்டுக்கு வந்திருக்கோம். அந்த நிலமை தெரியாம பெருசு நமக்கு மரியாதை செய்ததை பார்த்து யோசிக்கையில் சிரிப்பாணி வந்து விட்டது! சாரியம்மா!” என்றது மோனிஷா,

“சரி சரி நீ வாயைப்பொத்திக்கொ!’ என்று சொல்லிய பொன்னூ நரி பெரியவரிடம், ‘ஐயா பெரியவரே, நாங்க பல மைல் தூரத்திலிருந்து பல நாட்களுக்குப்பிறகு இந்த வனத்துக்கு வந்து சேர்ந்திருக்கோம். நேரமும் வேறு போய்விட்டது. இன்று ஒரு இரவு உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தங்குமிடத்தில் நாங்களும் தங்கிக்கொள்ள உங்களால் ஏற்பாடு செய்துதர முடியுமுங்களா பெரியவரே!” என்று பொன்னூ அந்த நரிக்கிழவரிடம் கேட்டாள்.

”அப்படியா? நான் கூட திடீர்னு என்னை நீங்க எழுப்பவும்.. பயந்துட்டேன். வயசாயிட்டதால இப்பெல்லாம் பயம் அதிகமாயிடுச்சு எனக்கு. நாட்டுப்புறத்துல மனுசனை மனுசன் அடிச்சு கொன்னுடறானுங்கன்னு ஒரே தகவலா கிடக்கு காட்டுக்குள்ள! அதுமாதிரி நரிக்கூட்டமும் நரியை கடிச்சுக்கொதறி வீசிட்டு போயிருமுன்னு பயந்துட்டேன். கலிகாலத்துல என்னவேணா நடக்குமுல்ல!” என்றார் சுந்தரவன நரிக்கிழவர்.

“அப்படியெல்லாம் இல்லைங்க ஐயா! எங்களுக்கு இடமிருக்கா?”

“இருக்கு.. இத்தாப்பெரிய காட்டுல உங்களுக்கு தங்குறதுக்கு இடமில்லாமையா போயிருச்சு? இப்பிடியே வடக்கே போனீங்கன்னா அஞ்சு நிமிசத்துல ஒரு நரிக்குடும்பம் தங்கியிருக்குற குகை ஒன்னு வரும். அங்க வசந்தன் நரிதான் பன்னாட்டு பண்ணிட்டிருப்பான். அங்கிருந்து மேற்கே திரும்பிப்பார்த்தீங்கன்னா மருதனோட குகையுமிருக்கும். அங்க அவன் பன்னாட்டும் ஜாஸ்த்தியா இருக்கும். ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க தான். ஆனா பொறாமை புடிச்ச பயலுங்க! அவனுங்க யாருன்னு கேட்கறீங்களா? என்னோட பசங்க தான். அவனுங்களுக்கு குடும்பம் ஆனதுமே என்னையும் கிழவியையும் ஓடிப்போங்கன்னு முடுக்கி உட்டுட்டானுங்க!”

“அப்ப நீங்களும் உங்க மனைவியும் தனியாவா இருக்கீங்க?” என்றது மோனிஷா நரி.

“இதென்ன கேள்வி? நாளைக்கே உன்கூட நிக்குற உன்னோட பசங்க ஜோடி சேர்ந்து பிள்ளைகுட்டி பெத்துட்டானுங்கன்னு வச்சுக்கோ.. உன்னையும் உன்னோட புருசனையும் முடுக்கித்தான் உடப்போறானுங்க!”

“யோவ் பெருசு.. நாங்க ஒன்னும் உன்னோட மருதன், வசந்தன் நரியாட்டம் பைத்தியகார பசங்க இல்ல தெரிஞ்சுக்கோ! பெத்தவங்களை கடைசி காலத்துல.. அவங்களால வேட்டையாடி உணவு சாப்பிட முடியாத காலத்துல பெத்தெடுத்த பசங்க தான் காப்பாத்தனும். நீங்க பைத்தியகாரத்தனமா அப்படி அவங்களை வளர்த்திட்டு.. இப்ப குத்தம் சொல்லிட்டு இருக்கீங்களா?” என்றான் சைமன் நரி.

“தம்பி.. உனக்கு வாலிப வயசு! கல்லைத்தின்னாலும் செரிமானம் ஆகுற வயசு! ஓடுற பாம்பை காலால அழுத்திப்பிடிச்சு விளையாடும் வயசு. இன்னிக்கி துடியாய் பலதும் பேசுவாய்”

“சரி சரி பெரியவரே.. உங்ககிட்ட வீண் வாக்குவாதம் செய்யுறதுக்கு நாங்க வரலை. நேரம் போயிட்டு இருக்கு. நாளைக்கு என்னோட பசங்க எங்களை தனியா அனுப்பிட்டாலும் அவங்க நல்லவிதமா பிழைச்சா சரின்னுதான் நாங்க பேசுவோம். உங்களையாட்டம் காட்டுக்குள்ள வர்ற போற விலங்குக கிட்டவெல்லாம் பையனுங்களை பத்தி குற்றம் சொல்லிட்டு இருக்க மாடடோம்! நாங்க கிளம்புறோம்!” என்று பிரதாப நரியார் வடக்கு நோக்கி கிளம்பவும், ‘வர்ட்டா பெர்சு!’ என்று சைமன் ஒரு சல்யூட்டை பெரியவருக்கு வைத்துவிட்டு கிளம்பியது.

“போங்க போங்க! போயிப்பட்டாத்தானே சுந்தரவன காட்டோட மகிமையும் மகத்துவமும் தெரியும்.. ஏண்டா இந்தக்காட்டுக்கு வந்தோம்னு நினைக்கப்போறீங்க பாருங்க!” என்று முனகிக்கொண்டே முதுகை வாகாய் மரத்திற்கு கொடுத்து அங்கேயே மீண்டும் சாய்ந்துகொண்டது அந்த வயதான கிழநரி.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பிரதாப நரியாரின் குடும்பம் வசந்தன் நரிக்குடும்பத்தின் குகைக்கும் முன்னால் நின்றிருந்தன. குகை வாயிலில் சுத்தம் என்றால் என்ன விலை? என்று கேட்குமளவு விலங்குகளின் எலும்புக்குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. குகையினுள் விளக்கு எரிந்துகொண்டிருக்கும் ஒளி மட்டுமே இவர்களுக்குத்தெரிந்தது.

“குகையில யாரு இருக்கீங்க? வசந்தன் நரியார் இருக்காரா? கொஞ்சம் வெளிய வாங்களேன்!” என்று சலீம் நரி குரல் உயர்த்தி குகையினுள் கேட்கும் வண்ணமாக ஊளையிட்டது.

“காட்டு ராசா வரி வசூல் பண்ட ஆள் அனுப்புற நேரம் பாரு.. இருட்டு கட்டுற நேரத்துலயா அடிமையை அனுப்புறது? டேய் அடிமையே.. இங்கிருந்து ஓடிப்போயிரு! போயிட்டு காத்தால மயில் அகவுற நேரத்துலயோ. கிளி கீச்சிடற நேரத்துலயோ, யானை பிளிர்ற நேரத்துலயோ வா!” என்று குகையினுள்ளிருந்து வசந்தன் நரியார் பதில் குரலிட்டார்.

”யாரது வசந்தன் நரியாரா குரல் கொடுப்பது? நாங்கள் வரி வசூல் செய்ய வந்தவர்கள் இல்லை. நாங்கள் உங்களிடம் அடைக்களம் தேடி வந்தவர்கள்” என்று பதில் ஊளையிட்டது கட்டுவைத்தியரான பிரதாப நரியார்.

“அடைக்களம் தேடி வந்தவர்களா?” என்று கேட்டுக்கொண்டே குகையின் வாயிலுக்கு வந்த வசந்தன் நரியாரின் பின்னால் அவரது துணைவியாரும், வாலிப வயதிலிருந்த நான்கு ஆண்பிள்ளை நரிகளும் வந்தனர்.

“வணக்கம்! நாங்கள் தூரவனத்திலிருந்து வந்திருக்கிறோம். வரும்வழியில் உங்கள் ஐயாவை பார்த்தோம். அவர்தான் உங்களைத்தேடி போகச்சொன்னார். வசந்தன் நரியான் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வான் என்றார்.” என்று பிரதாப நரியார் சொன்னார்.

“அந்தக்கிழவனுக்கு வேறு வேலையில்லை போலிருக்கிறது. இப்படி வருவோர் போவோரையெல்லாம் கிட்டே வைத்துக்காப்பாற்ற என்னிடம் என்ன இருக்கிறது?”

“வசந்தன் நரியாரே! நீங்கள் அப்படி சொல்லக்கூடாது. நானொரு கட்டு வைத்தியன். நான் விலங்கினங்களின் எலும்பு முறிவுகளுக்கு கட்டுப்போடுபவன். என் வைத்தியத்தால் பல விலங்குகளின் உடைந்த கால்கள் சீராகியிருக்கின்றன..”

“யோவ் நிறுத்தும் நிறுத்தும்.. உனது வண்டவாள பெருமைகள் எல்லாம் எனக்கெதற்கு? உன் குடும்பத்தின் பசியை போக்க என்னிடம் இப்போது இரை எதுவுமில்லை”

“வசந்தன் நரியாரே.. நாங்கள் இரைக்காக உங்களிடம் வரவில்லை. இன்றைய இரவுப்பொழுதில் தங்கிக்கொள்ள உங்கள் குகையில் ஓரமாய் ஒரு இடத்தை கொடுத்தால் மட்டும் போதும். நாங்கள் விடிகாலையில் வேறிடம் நோக்கி பயணப்பட்டுவிடுவோம்”

“ஓ! இரவில் தங்கி எங்களிடமிருக்கும் அனைத்தையும் ஒரே இரவில் களவாடிச்செல்ல வந்த நரிக்கூட்டமா நீங்கள்? அதுவும் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் நான் உங்களை என் குகையில் தங்கவைக்க வேண்டுமா? விளக்கு இப்போதுதான் குகையில் பற்ற வைத்தோம். இங்கே உங்களுக்கு எந்த வசதியையும் நாங்கள் செய்து கொடுக்க முடியாது. காலம் கலிகாலமாகி வெகு வருடங்களாகிவிட்டது. யாரும் யாரையும் நம்பாத காலம் இது. அதோ மேற்கே குகையில் விளக்கு வெளிச்சம் தெரிகிறதல்லவா.. அது என் கூடப்பிறந்த மருதனின் குகை. அவன் தான் இப்படி வக்கில்லாமல் வந்தவர்களுக்கெல்லாம் தன் குகையில் தங்க வைத்து விருந்து போட்டு உபசரிப்பவன். நீங்கள் அவனிடம் செல்லுங்கள்!” என்று சொல்லிவிட்டு திரும்பிய வசந்தன் தன் மனைவியை பார்த்து, ‘இங்க என்ன வேடிக்கையா காட்டிட்டு நிக்கிறேன் நானு? போங்க எல்லாரும் குகைக்குள்ள..’ என்று அதட்டியபடி ஊளையிட்டுச்சென்றது.

பிரதாப நரியார் மீண்டும் தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு மருதனின் குகை நோக்கிப்பயணப்பட்டு அந்த குகையின் வாசலுக்கு வந்து நின்றது. உள்ளேயிருந்து பச்சை மாமிசக்கறியின் வாசனை இவர்கள் மூக்கைத்துளைத்தது.

“மருதன் சார் குகைக்குள்ள இருக்காரா? கொஞ்சம் வெளிய வாங்க மருதன் சார்!” என்று சங்கர் நரி இப்போது குரல் கொடுத்தது.

“யார்றா அவன்? என்னை சார் மோர்னு கேவலம் பேசுறது? உங்க குடும்பம் பக்கத்து குகைக்காரன்கிட்ட ஊளையிட்டு பேசிட்டு இருந்ததெல்லாம் இங்கேயும் எங்களுக்கு கேட்டுச்சு! அவனொரு ஆளுன்னு பெருசு சொல்லுச்சின்னு நேரா அவன்கிட்ட தான போனீங்க! என்கிட்ட நேர்ல வரலைல்ல.. அப்புறம் நானெதுக்கு உங்களை என் குகையில தங்க வைக்கனும்? என்னை மதிக்காதவீங்க தானே நீங்க எல்லாரும்! சாப்பாட்டு நேரத்துல வந்து எங்களை தொந்தரவு பண்ணாம அப்பிடியே மேற்கே போனீங்கன்னா ஒரு நீரோடை வரும். அங்க தங்குறதுக்கு உங்களுக்கு வசதியான இடங்கள் நிறைய இருக்கு. எந்த விலங்காச்சிம் வந்து தொந்தரவு பண்டுமோன்னு பயப்படவேண்டாம். காலையில முதலைங்க கொட்டாவி போடுற நேரத்துல.. தண்ணிக்கி எல்லா விலங்குகளும் அங்க நீரோடைக்கி வரும். அதுக்குள்ள இடத்தை காலி பண்ணீட்டு உங்க வழியில போயிடுங்க!”

“மருதன் சார்.. நீங்க சொன்ன தகவல்களுக்கு ரொம்ப நன்றி! நாங்க கிளம்புறோம்!” என்று சங்கர் நரி சொல்லிவிட்டு பிரதாப நரியாரின் முகத்தை பார்த்தது. அதற்குள் மேற்கு நோக்கி பொன்னூ நரி கிளம்பிவிட்டது. கால்மணி நேர நடையில் ஓடையில் தண்ணீர் சலசலத்து ஓடும் சத்தம் இவர்களின் காதுகளுக்கு கேட்டது.

வசந்தன் நரிக்கு இந்த மருதன் நரி எவ்வளவோ பரவாயில்லை என்று பொன்னூ நரி நினைத்துக்கொண்டது. நேராக ஓடையை நோக்கிச்சென்ற பொன்னூ நரியின் பின்னால் குடும்பமே சென்றது. பின்பாக ஓடையில் தண்ணீரை குடித்துவிட்டு மேட்டுப்பகுதியில் கிடந்த மணலில் ஒவ்வொன்றாய் தலைசாய்த்தன.

இப்படி அடுத்த விலங்கினத்திற்கு உதவி செய்யக்கூட தயங்கி ஒதுங்கும் இந்த வனத்தின் விலங்கினங்களிடையே நிம்மதியாய் பிழைக்க முடியுமா? இருக்கும் கொஞ்சநஞ்ச நரிக்கூட்டத்தினிடையேயும் இத்தனை பிரிவினைகள் இருக்க வாழ்வது சாத்தியப்படுமா? என்கிற கேள்விகள் பிரதாப நரியாரின் மண்டைக்குள் ஓட ஓடவே அவரும் களைப்பு மிகுதியால் உறங்கிப்போனார்.

அடுத்த நாள் கிளி கீச்சிடும் நேரத்தில் விழித்த பொன்னூ நரி அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த தன் குடும்பத்தார்களை எழுப்பி மேற்கேயே விடிகாலையில் பயணத்தை துவங்கிவிட்டது. அவர்கள் சென்ற பாதையில் கொஞ்சம் தூரத்திலேயே ஒரு ஒற்றை யானையை சந்தித்தனர். அதுவும் இதற்கும் முன்பாக வனத்தில் இவர்களை சந்திக்காததால் ‘யாரிவர்கள்?’ என்பது போல தன் பெரிய காதுகளை அசைத்தபடி யோசித்தது.

“யானையாரே! இந்த வனத்தின் சிங்கராஜாவை நாங்கள் சந்திக்க வேண்டும். நாங்கள் அனைவரும் இந்த வனத்திற்கு புதியவர்கள். அவரை எங்கே சென்று சந்திக்க முடியுமென எங்களுக்கு சொல்வீர்களா?” என்று சலீம் நரி யானையாரின் முன் நின்று விசாரித்தது.

“ஓ! நீங்கள் இந்த வனத்திற்கு புதியவர்களா? அதான் எங்கீமே பார்த்ததில்லையே என்று யோசித்தேன் நானும்கூட.. வனராஜனை சந்திக்க நீங்கள் இன்னும் மேற்கே செல்ல வேண்டும். அதற்கு எப்படியும் உங்களுக்கு அரைமணி நேரம் பிடிக்கும். ஏனென்றால் காலைநேரத்தில் சுறுசுறுப்பாக நடக்காமல் அன்னப்பறவை நடப்பதுபோல நீங்கள் வந்தீர்கள்! கொஞ்சம் விரைவாக சென்றால் அரைமணி நேரம் ஆகாது!”

“நீங்கள் சொன்ன தகவலுக்கு நன்றி யானையாரே! என் தந்தை பிரதாப நரியார் எலும்பு முறிவுகளுக்கு கட்டு வைத்தியம் செய்பவர். வனத்தில் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் எங்களிடம் சொல்லி அனுப்புங்கள் யானையாரே!” என்ற சலீமை பெருமையாக பார்த்தார் பிரதாப நரியார். பெரிய விலங்கினத்திடம் பெரிய மனுசத்தன்மையாய் பேசிய மகன் சலீமை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது அச்சமயத்தில்.

“சரி நீங்கள் சீக்கிரமாய் செல்லுங்கள். ராஜாவின் கூஜாவாய் ஒரு கிழட்டு கரடி ஒன்றிருக்கிறது. வனத்தில் அங்கே நேற்று கலவரம்.. இங்கே பிரச்சனை என்றெல்லாம் சொல்லி ராஜாவை அவர் குகையிலிருந்து கூட்டிப்போய்விடுவான் அந்தக்கரடிக்கிழவன். அவர்கள் குகையிலிருந்து வெளியே கிளம்பும் முன்பாக சென்றுவிடுங்கள்!” என்று சொல்லிவிட்டு யானையார் வடக்குப்பக்கமாய் திரும்பி நடக்கத்துவங்கினார்.

இவர்கள் மீண்டும் மேற்கே விரைவாக பயணிக்க ஆரம்பித்தார்கள். காலைநேர வெய்யில் அவர்கள் முதுகுப்புறமாக சுள்ளென அடித்தது. என்னதான் வேகமாக நடந்து வந்திருந்தாலும் சிங்கராஜாவின் குகை அருகில் வர அரைமணி நேரம் ஆகியிருந்தது.

குகையை ஒட்டியொட்டி நான்கைந்து சிறிய குகைகள் இருந்தன. சிங்கராஜாவின் குகை என்பதற்கு அடையாளமாய் குகையின் மேற்பரப்பில் மஞ்சள் வர்ண பெரிய கொடி ஒன்று பறந்துகொண்டிருந்தது. குகையினுள்ளிருந்து பக்திமயமான புகை மெலிதாய் வெளிவாசலில் வீசிக்கொண்டிருந்தது.

அதன் வாயில் மூடப்பட்டிருக்கவே ராஜா வெளியில் சென்றுவிட்டார் என்று பிரதாப நரியார் யூகித்தார். ஆனாலும் பக்கத்து பக்கத்து சிறிய குகையினுள் விலங்குகளின் நடமாட்டம் இருக்கவே இவர்கள் குடும்பம் அங்கேயே அமர்ந்து ஏதேனும் விலங்கின் முகம் தென்படுமாவென காத்திருந்தனர்.

இரண்டாவது குகையினுள் இருந்து குரங்கு ஒன்றின் குரல் வெளியே கேட்டபடியே இருந்தது. அந்தக்குரங்கு என்னதான் சொல்கிறதென அமைதியாய் அமர்ந்திருந்த சமயத்தில் உன்னிப்பாய் இவர்கள் கேட்கத்துவங்கினர். கேட்கக்கேட்க இடத்தை விட்டு எழுந்து ஓடிவிடத்தான் தோன்றியது.

”இன்னா நைனா.. கேட்னு கீறயா? அப்பாலிக்கா கப்பலு கடுல்ல இருந்து கிளம்புச்சுபா! கப்பலு கடுலு நடுக்காண்ட போயினு இருக்கப்ப.. சொளட்டி சொளட்டி காத்து அடிக்க ஆரம்பிச்சுனுச்சு! காத்துனா காத்து.. யம்மாம் பயங்கரமா வீசுது! காட்டுல கீற மரங்கெல்லாம் நெழத்துல படுத்துனு படுத்துனு நேருக்கா போவுதுக! அப்பாலிக்கா பேயிக மம்மானியா காட்னுள்ளாரா பூந்துக்கினு வாயப்பொளந்துக்கினே பறந்து வருதுங்க! மனுசப்பயலுங்க அல்லாரும் ரோட்டுமேல வாளு வாளுனு கத்திக்கினு ஓடுறாங்க! நம்ம காட்டுலகீற சிங்கங்க எல்லாம் கூடவே புலிங்களெ கூட்னு போயி மனுசங்க ஊட்டுனுள்ளார போயி பெட்டுமேல படுத்து தூங்கினு இருக்குதுங்க! கப்பலு கீதுல கப்பலு.. அது மளாருனு கடுல்லயிருந்து திலும்பிட்டுது! கப்பலுக்குள்ள பேமானி, கஸ்மாலம்னு ஒரே கூச்சலுபா! கப்பலு டெய்வரு நேரா தார்ரோட்டு மேல கப்பல உட்னு போறாரு. நம்ம காட்டுல கீற பூச்சி பொட்டுங்க அமுட்டும் அதெ தாவாங்கட்டெல கைய வெச்சினே கண்ணாமுழி வெளியவர பாத்துனே நின்னுச்சுங்க! அப்பாலிக்க கப்பல நிர்த்தப்போற பெரிய மன்சன் யார்டானு கேக்கியா? நீ கேக்க மாண்டே.. ஒனக்கு ஒரு எய்வும் தெர்யாது. கப்பலெ நிறுத்த நானே மானத்துல இர்ந்து ஏராகப்பல்ல இருந்துனே கிழாற குதிச்சேன்! என்னோட கையில் ரெட்டக்கொழலு டுவாக்கி கீது. தலைக்கி மேல துருக்கி டொப்பி கீது. அப்ப என்னெ நீ பாக்கனுமே..எமுச்சியாரு கண்க்கா தகத்தகனு சொலிக்கேன்பா! துரூவா கடல்ல குதிச்சு கப்பல் எங்கியோ பூடுச்சுனு ரோடுக்கு வந்து சேந்தேன்பா. எல்லா பூச்சி பொட்டுக்களும் நம்மளாண்டெ, ‘போயி அந்தக்கப்பலெ நிறுத்து கேப்டனு’ன்னு கத்துறானுவொ! நானு எப்போ கேப்டனு ஆவுனேன்னு கேக்கியாபா? அதுவொரு கதெ!”

பிரதாப நரிக்குகுடும்பம் காதைப்பொத்திக்கொண்டு அந்த இடத்திலிருந்து தொலைவுக்கு ஓடிப்போய்.. குரங்கின் குரல் கேட்காத இடத்தில் அமர்ந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கின! ‘அடக்கொடுமையே!’

அப்போது அதுவழியே நடந்துவந்த புலியார் இவர்களைப்பார்த்து, ‘யார் நீங்கெல்லாம்?’ என்று உருமிக்கொண்டே கேட்கவும், இவர்கள் விசயத்தை சொன்னார்கள்.

“சிங்கராஜா.. இங்க பக்கத்துலதான் ஒரு பஞ்சாயத்தை முடிச்சு வைக்க போயிருக்காரு. வந்துடுவாரு! ஆமா ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? வாங்க என் குகையிலயாச்சிம் போய் ராஜா வர்ற வரைக்கிம் இருப்பமே!”

“நல்லது புலியாரே! ஆமா அங்கே ஒரு குகையில குரங்கொன்னு கதையாட்டம் என்னமோ சொல்லிட்டே இருக்கே?”

”அதுவா! அது கதைசொல்லி குரங்கு. இந்த வனத்துல நாலு வருஷமா இருக்குது. வெளிநாடெல்லாம் போயி வந்த குரங்காம். அதால கதை சொல்லாம இருக்கவே முடியாது. தூங்குற நேரத்துல கூட அதோட வாயி கதையை சொல்லிட்டேதான் இருக்கும்!”

“அடக்கொடுமையே!”

“ஆமா! ஆரம்பத்துல இந்த வனத்துக்குள்ள வந்த குரங்கு சொல்ற கதைகளை எல்லா விலங்குகளும் ஆர்வமா கேட்டாங்க! ஏன்னா கதை கேட்டு எந்த விலங்குகளுக்கும் பழக்கமே இல்லையே! ஒருவருஷம் கதை கேட்ட விலங்குகள் எல்லாமும் மறுவருஷத்துல அந்த குரங்கை கண்டாலே தலைதெறிக்க ஓட ஆரம்பிச்சிடுச்சுக! அந்த குரங்குக்கும் கதை கேட்க ஆள் இல்லாமப்போயிடுச்சு! இருந்தாலும் அதுக்கெல்லாம் அது கவலைப்படாம பெரிய பெரிய மரங்கள் கிட்ட நின்னு கதை சொல்ல ஆரம்பிச்சிடுச்சு!”

“அடக்கொடுமையே! அப்ப ‘ம்’ கொட்டறது யாரு புலியாரே?”

“அந்த குரங்குக்கு ‘ம்’ கொட்டறதுக்கெல்லாம் ஆள் வேண்டீதே இல்ல. அதுபாட்டுக்கு சொல்லிட்டே இருக்கும். இன்னதுதான் சொல்லுதுன்னு ஒரு வரைமுறையே இருக்காது.”

“அப்ப ராஜா அந்தக்குரங்கை கைது பண்ணி இங்கே குகையில அடைச்சிட்டாரா?” என்றது சைமன் நரி.

“கைதா? அதெல்லாம் இல்ல! ஒருவாட்டி ராஜாவோட குகையில நரியொன்னு நுழைஞ்சு ராஜாவோட உணவை வயிறு ரொம்ப சாப்டுட்டுது. ராஜாவும் மந்திரியும் வர்றதுக்குள்ள முடிச்சுட்டு இப்ப நாம நிக்கிற இடத்துல வந்து நீட்டி படுத்து தூங்கிடுச்சு! திரும்பி வந்த ராஜாகிட்ட உணவு திருடப்பட்ட விசயத்தை மந்திரிக்கரடி சொல்லவும்.. ராஜா ஆட்களை ஏவினாரு! ஏவிய பத்து நிமிசத்துலயே சாப்பிட்டு தூங்கிய நரியை கைது பண்ணி கூட்டியாந்துட்டாங்க காவலர்கள்.”

“அந்த நரியை சிறையில அடைச்சிட்டாரா சிங்கராஜா?” ஆர்வம் மிகுதியில் மோனிஷா நரியும் கேட்டது இப்போது.

“என்ன மிரட்டி கேட்டாலும் ‘நான் உணவை திருடலை’ன்னே அந்த நரி சொல்லிட்டு இருந்துச்சு! கரடி சாட்டையை கொண்டாந்து நாலு ஈடு வெச்சும் அது திருடுனதை ஒத்துக்கலை. அப்பத்தான் படைவீரர்கள்ல நின்ன குதிரையொன்னு ‘ஐடியா’ சொல்லுச்சு!”

“படைவீரர்கள் எல்லாம் நம்ம ராஜாவுக்கு இருக்காங்களா?”

“ஆமா! இப்ப நானும் கூட படைவீரன் தான் நம் ராஜாவுக்கு. அந்தக்குதிரை தான் இந்த குரங்காரை வரவெச்சு கதை சொல்ல வைப்போம்னுச்சு! அதன்படியே ஓடைக்கரையில நின்னுட்டு ஓடையில ஓடுற தண்ணீருக்கு கதை சொல்லிட்டு இருந்த குரங்கை நான் போய் கூட்டி வந்தேன். குரங்கு வந்ததுமே ராஜாவை வணங்கிச்சு! ’என்ன விசயம் ராஜா? எதற்காக என்னை அழைத்து வரச்சொன்னீர்கள்?’ அப்படின்னு மரியாதை குடுத்து கேட்டுச்சு. ராஜாவும் விசயத்தை சொன்னாரு. அதன்படியே பக்கத்து குகைக்குள்ள கூட்டிட்டு போயி அந்த திருட்டு நரிக்கு பயங்கரமான கதை ஒன்னை சொல்ல ஆரம்பிச்சிடுச்சு குரங்கு. முதல்ல என்னமோன்னு கேட்டுட்டு இருந்த திருட்டு நரி.. போகப்போக ஆடிப்போயிடுச்சு! உடனே குகையை விட்டு ஓடியாந்து ராஜா கால்ல விழுந்து, ‘ராசா.. என்னை மன்னிச்சுடுங்க ராசா.. நான் தான் உங்க உணவை திருடி சுத்தமா காலி பண்ணினேன்! அந்தக்குரங்கை முதல்ல கதை சொல்லுறதை நிறுத்தச்சொல்லுங்க ராசா!’ அப்படின்னு குத்தத்தை ஒத்துக்கிச்சு! ராசாவுக்கோ ஒரே அதிசயம். அடிச்சிக்கேட்டும் உண்மையை ஒத்துக்காத நரி கதை கேட்டு ஒத்துக்கிச்சே! அப்படின்னு.”

“அப்புறம் அந்த திருட்டு நரிக்கு ராஜா தண்டனை கொடுத்தாரா புலியாரே?”

“ஆமா! அந்த நரி கையில விசா குடுத்து காட்டைவிட்டு வெளிய முடுக்கி உட்டுட்டாரு!”

“விசாவா?”

“ஆமா! உங்ககிட்ட விசா இல்லையா?”

“எங்ககிட்ட அப்படி எதும் இல்லையே!”

“அப்ப நீங்க நல்லவங்க! வெளிய போன அந்த நரிகிட்ட யாராச்சிம் விசா கேப்பாங்க! அது கையில இருக்குற விசாவை குடுத்துச்சுன்னா.. அந்த வனத்துல இருக்குற விலங்குகள் எல்லாம் உஷார் ஆயிரும். தப்புப்பண்ணி விசா வாங்கிட்டு வந்த நரி இதுன்னு தெரிஞ்சுக்கும்! இதெல்லாம் பெரும் பெரும் வனங்கள்ல இருக்குற நடைமுறை சட்டம்!”

“ஓ! அப்புறம் குரங்குக்கும் படைவீரர் வேலை போட்டு குடுத்துட்டாரு நம் ராஜான்னு சொல்றீங்க! அப்படித்தானே புலியாரே?”

“அதை வேலையின்னு சொல்ல முடியாது! ஆனா குரங்குக்கு பரிசு குடுக்க கரடியாருகிட்ட ராஜா சொன்னப்ப.. அந்தக்குரங்கு பரிசெல்லாம் வேண்டாம் ராஜா.. எனக்கு ஒரு வேலை போட்டுக்குடுங்க! நாள்முழுக்க கதை சொல்லத்தான் எனக்குத்தெரியும்னு சொல்லுச்சு! சரிதான் ஆனா கேட்க ஆள் வேணுமே? அதனால வனத்துல இருந்த காது கேட்காத செவுட்டுக்கரடியை கூட்டி வந்து அந்தக்குகையில உட்கார வச்சுட்டாரு ராஜா! இப்ப ரெண்டு விலங்குகளுக்கும் வெட்டியா உணவுச்செலவு வருது! அதா.. ராஜாவே வந்துட்டு இருக்காரு பாருங்க தூரத்துல!”

“ஆமா! அவரு குதிரை மேல உட்கார்ந்திருக்காரு.. தெரியுது! ஆமா நீங்க எப்படி குரங்கு கதை சொல்றதை கேட்காம அங்கேயே இருக்கீங்க? நாங்க சித்த நேரம் தான் கேட்டு பயந்து இங்க ஓடியாந்துட்டோம்!”

“அதுவா.. குகைக்குள்ள நாங்க போயிட்டம்னா அதோட கதைக்குரல் கேட்காது எங்களுக்கு. அதனால பிரச்சனை இல்ல! சரி வாங்க.. ராஜாவோட குகைக்கே கூட்டிட்டு போறேன் உங்களை!” என்று புலியார் முன்செல்ல இவர்கள் பின்னால் சென்றார்கள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ராஜாவும் மந்திரியும் குகைக்கு வந்து சேர்ந்தனர். வீரர்களான குதிரைகள் சிலவும் குகையினுள் வந்து அமைதி காத்து நின்றன. ராஜா தன் அரியணை சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தார். அருகில் பவ்யமாய் முன் கையை கட்டிக்கொண்டு கிழக்கரடியார் நின்றார். புலியார் சிங்கராஜாவுக்கு பிரதாப நரியாரின் குடும்ப விபரங்களை முழுதுமாக கூறி முடித்தார். அனைத்தையும் கேட்ட சிங்கராஜா இறுதியாக தன் தொண்டையை ‘கர்’ரென சீராக்கிக்கொண்டார்.

“பிரதாபன் நரி இப்படி முன்னால வந்து நில்லு!” என்று சிங்கராஜா அழைத்ததும் பிரதாப நரியார் அவருக்கும் முன்பாக தரையில் விழுந்து எழுந்து நின்றார்.

“உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இந்த வனத்துல தங்குறதுக்கு இடமில்லைன்னு என்கிட்ட கேட்க வந்திருக்கீங்க இல்லையா?”

“ஆமாங்க மகராஜா!”

“கட்டு வைத்தியம்னா என்னான்னு எனக்கு நீ சொல்லு!”

“கால்லயோ இல்ல உடல்லயோ எங்க எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அதை ஒரு வாரத்துல சரிப்படுத்திடுவேனுங்க மகராஜா!”

“அப்ப எனக்கும்தான் முன்னங்கால் மூட்டுக்குள்ள ’பொறக் பொற’க்குனு சத்தம் வர்றாப்ல இருக்குது கொஞ்ச காலமா! ரொம்ப வேகமா ஓடமுடியறதில்லே! முன்னே ரொம்ப வலியா இருந்துது. ஆனா போகப்போக சரியாயிடுச்சு!”

“அதுக்கு கட்டுவைத்தியம் பண்ண வேண்டியதில்லீங்க மகராஜா!”

“ஏன்?”

“அது முறையோட கூடாம.. அது சவுரீத்துக்கு தன்னப்போல கூடீருச்சுங்க மகராஜா! அதனாலதான் அந்த சத்தம் வருது. இப்ப சரிபண்ணனும்னா மறுக்காவும் அதை ஒடச்சித்தான் கட்டு வைத்தியம் பண்ணனும்.”

“அப்ப அது வேண்டாம்! சரி மந்திரியாரே.. இவர்கள் தங்குவதற்கு ஏதேனும் இடம் நம் வனத்தில் உள்ளதா? முன்பாகவே யோசித்து ஒரு இடத்தை மனதில் குறித்து வைத்திருப்பீர்களே! சொல்லுங்கள்!” என்று கரடியாரிடம் வினவினார் சிங்கராஜா.

“வனராஜா.. நான் சிறுவனாய் இருக்கையில் குடும்பத்தினருடன் வாழ்ந்த புளியங்கொட்டை குகை இப்போ சும்மா தான் விலங்கு அரவம் ஏதுமின்றி கிடக்கு. ஆனா அங்க ஒரு பிரச்சனை இருக்கே.. அதனால தான் எந்த விலங்கும் அந்த குகைக்குள்ள காலை வைக்கிறதே இல்லைங்களே வனராஜா!”

“குகைக்குள்ள பிரச்சனையா? இத்தனை நாள் என்னிடம் சொல்லாமல் இருந்தாயா? சொல்!”

“அங்கே என் தாத்தா கரடியார் பேயாக உலவிக்கொண்டிருப்பதாக வதந்தி வனத்துக்குள் பரவியதால் அந்தப்பக்கம் எந்த விலங்குகளுமே இந்தநாள் வரை போவதேயில்லை வனராஜா!”

“என்னது.. பேயா? சுந்தரவனத்தின் ராஜாங்க அனுமதிச்சீட்டு இல்லாமல் ஒரு காக்கா குருவிகூட பறப்பதில்லை என்று உமக்கே தெரியுமே! பேய் எப்படி அனுமதிச்சீட்டு இல்லாமல் குகையில் இருக்கலாம்? கூடாது! கூடவே கூடாது! உன் தாத்தா என்பதால் நீ தங்க வைத்திருக்கிறாய்.. இதை நான் அனுமதிக்க மாட்டேன்!”

“வனராஜா.. அவர் பேய். அவர் புகையாக உலாவுவார்”

“அது எந்தப்புகையாக இருந்தாலும் ராஜாங்க அனுமதிச்சீட்டு அதனிடம் இருக்க வேண்டும். சுந்தரவன சட்டம் ஒரு இருட்டறைன்னு பக்கத்து வனத்தில் ஒரு பேச்சு வரக்கூடாது நாளை! புரிந்ததா?”

“புரிந்தது வனராஜா!”

“சரி, இவர்களை நீ கூட்டிப்போய் அந்த புளியங்கொட்டை குகையில் விட்டுவிட்டு வா!” என்று சிங்கராஜா சொன்னதும் கிழக்கரடியார் பிரதாப நரியாரின் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வனத்தினுள் சென்றார்.

“ராஜாங்க அனுமதிச்சீட்டு அப்படின்னு வனராஜா சொன்னாரே மந்திரியாரே.. எங்களுக்கு எந்த சீட்டும் கொடுக்கலையே!” நடந்து சென்றபடி இருக்கையில் பிரதாப நரியார் கரடியாரிடம் விசாரித்தார்.

“அது உங்களுக்கு இன்னும் இரண்டு நாளில் காவலர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் கட்டு வைத்தியரே! ஆமாம் அந்த புளியங்கொட்டை குகையில் பேய் இருப்பதாக நான் சொன்னதும் நீங்கள் பயப்படவே இல்லையே.. ஏன்?”

“பேயாவது பூதமாவது கரடியாரே.. எங்களுக்கு தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் அவ்வளவுதான். அப்படி நீங்கள் சொன்னதுபோல அங்கே பேய் இருந்தாலும் அது ஒரு ஓரமாக படுத்து தூங்கட்டும். நாங்கள் ஒரு ஓரமாக படுத்துக்கொள்கிறோமே!”

“பேயை கண்ணில் பார்ப்பது வரை நீங்கள் இப்படித்தான் பேசுவீர்கள்!” என்ற கரடியார் பெரியவொரு ஆலமரத்தின் அடியில் நின்று கைவிரலை தூரமாய் நீட்டிக்காட்டினார். அவர் காட்டிய திசையில் இருளடைந்து கிடந்த குகையொன்று தெரிந்தது நரிக்குடும்பத்தாருக்கு.

“அதுதான் புளியங்கொட்டை குகை.. அங்கே பேயாக வசிப்பது என் தாத்தனாக இருந்தாலும் இதற்கும் மேல் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன். நீங்கள் குகை சென்று சேரும் வரை நான் இங்கேயே நிற்கிறேன். பின்பாக நான் கிளம்பிவிடுகிறேன்!”

“சரி மந்திரியாரே.. உங்கள் உதவிக்கு நன்றி. நாங்கள் செல்கிறோம்” என்று பொன்னூ நரி முன்னால் செல்ல மற்ற நரிகள் பின்னால் சென்றன. குகை வாயிலில் கொடிகள் போல பல செடிகள் வளர்ந்து அதன் வாயிலையே மூடியிருந்தன. கொடிகளை அகற்றி குகையின் வாயிலை திறக்கவே அவர்களுக்கு அரைமணி நேரத்திற்கும் மேலாகிற்று. இன்னமும் கரடியார் அதே இடத்தில் நிற்கிறாரா என ஆலமரத்தை பொன்னூ நரி திரும்பி பார்த்தது. அங்கே கரடியார் இல்லை.

பின்பாக பிரதாப நரியார் குடும்பம் குகையினுள் சென்றது. நல்ல விஸ்தாரமான குகை அது. சூரிய வெளிச்சம் உள்ளே நன்றாக அடித்தது. சூரிய வெளிச்சம் குகையினுள் படர்ந்தபோதே குகையினுள் உறங்கிக்கிடந்த கிழட்டு கரடிப்பேய் முனகியது குகை முழுக்க கேட்டது!

“யார்றா உள்ளார சத்தம் குடுக்கறது? யாரா இருந்தாலும் செரி உடனே குகையை உட்டு ஓடிப்போயிறதும்!” என்று பிரதாப நரியார் குரலிட்டார். அவரது குரல் குகையின் சுவர்களில் பட்டு அதனுள்ளேயே சுற்றியது.

கிழட்டுக்கரடிப்பேய் எழுந்து நின்றது. ‘இது என்னோட குகை! நான் பலவருசங்கள் முன்னால கண்டுபிடிச்சது! எனக்கு கோவம் வர்றதுக்குள்ள இங்கிருந்து ஓடிப்போயிருங்க நரிகளா! ஒவ்வொருத்தரையா புடிச்சு பிச்சு வெளிய கழுகுகங்களுக்கு இரையா போட்டுருவேன்”

“எங்கே.. நீ பிச்சு வீசுறதை பார்த்துடறேன்!” என்று சங்கரும் சலீமும் குகைச்சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த இரண்டு மரத்தடிகளை தூக்கிக்கொண்டு கிழட்டு கரடிப்பேயை நோக்கி செல்லவும்… ‘ஐயோ! நான் ஏற்கனவே செத்த கரடி! என்னை தடியால் அடித்து மறுபடியும் கொன்று விடாதீர்கள் நரிகளே! இந்தக்குகைக்கு மறுபுறமும் ஒரு திறப்பு வாயில் இருக்குது! நீங்க இங்க சந்தோசமா இருங்க! நான் மறுதிறப்பு வாசலுக்கு போயி அங்கே படுத்துக்கறேன். உங்களுக்கு எந்த தொந்தரவும் நான் குடுக்க மாட்டேன்!”

“ஒரு குகைக்கு இரண்டு திறப்பா?” என்றான் சலீம் அதனிடம்.

“ஆமாம் குட்டி நரி. இப்ப இந்த வாசல் வழியா ஆபத்து நமக்கு வந்தாலும் நாம வேகமா செயல்பட்டா மறு வாசல் வழியா தப்பிச்சு காட்டுக்குள்ள ஓடிறலாம்!”

“அப்படின்னா ரொம்ப வசதியாப்போச்சு எங்களுக்கு. நீ எந்த திறப்புக்கிட்டயும் தங்கவே வேண்டாம்.. குகையை விட்டு கிளம்பி ஓடிப்போயிரு!”

“சாமி சாமியா இருப்பீங்க நரித்தம்பி.. இந்தக்கிழ வயசுல பேயா வாழுற என்னை நீ முடிக்கி உட்டுட்டா.. இந்தக்காட்டுக்குள்ள போயி நான் என்ன பண்ணுவேன்? உன் கால்ல வேணாலும் நான் உழுறேன். அந்தப்பக்க வாயில்ல ஒரு ஓரமா படுத்துக்கறேன் தம்பி!”

“சரி இன்னும் ஏன் இங்க நிற்கிறே? ஓடு நீ மறுபுறத்துக்கு! எனக்கு திடீர்னு கோவம் வந்தா போட்டுத்தள்ளிடுவேன்!” என்று சலீம் சொன்ன மறு நிமிடமே அந்த கிழட்டுப்பேய் கரும்புகை வடிவில் அவசரமாய் அந்த இடத்திலிருந்து குகையினுள் பறந்தபடி சென்றது.

ஆயிற்று! பிரதாப நரியாரின் குடும்பம் சுந்தரவன ராஜாங்க அனுமதிச்சீட்டு பெற்று ஒருவார காலம் ஓடிப்போயிற்று. மிக மெதுவாக கட்டுவைத்தியர் ஒருவர் நம் வனத்தில் புளியங்கொட்டை குகையில் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார் என வனத்தில் உள்ள விலங்குகளுக்கும் ஓரளவு தகவல் சென்று சேர்ந்துவிட்டது. ஆனாலும் கால் முறிந்து எந்த விலங்கும் கட்டு வைத்தியம் செய்து கொள்ள புளியங்கொட்டை குகைக்கு வரவேயில்லை.

காரணம் என்னவாக இருக்கும்? என யோசித்து அந்தக்குடும்பம் ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி பிள்ளைகள் நால்வரும் வனத்தினுள் சென்று புளியங்கொட்டை குகையில் பேய் இருந்ததாகவும்.. அதை பிரதாப நரியார் தன் சக்தியால் அடக்கி மேல் உலகுக்கு அனுப்பிவிட்டதாகவும் செய்தியை பரப்பினர். செய்தி கூடிய சீக்கிரமே விலங்குகள் வழியே வனம் முழுக்க தீயாய் பரவியது. பின்பாக மான் ஒன்று நொண்டிக்கொண்டே புளியங்கொட்டை குகைக்கு வந்து சேர்ந்தது. அதற்கு பின்னங்காலில் அடிபட்டு மூட்டு விலகியிருந்தது. அதன் பின்னாலேயே நடக்க இயலாத முயல் ஒன்றை தூக்கிக்கொண்டு பெரிய உடும்பு ஒன்று வந்துசேர்ந்தது.

இரண்டு விலங்குகளுக்குமே கட்டு வைத்தியம் நடந்து முடிந்த போது இரவு நெருங்கியிருந்தது. குகை விஸ்தாரமாக இருப்பதால் நோயாளிகள் அங்கேயே படுக்கவைக்கப்பட்டனர். ஒருவாரகாலம் வரை நோயாளிகள் குகையில் தான் தங்கவேண்டும். இந்த நோயாளிகள் வனத்தினுள் நடந்து ஓடினால் தான் கட்டுவைத்தியர் புகழ் வனத்தினுள் பரவும்.

அடுத்த நாள் காலை நேரத்தில் வசந்தன் நரியை தூக்கிக்கொண்டு அவர் பிள்ளைகள் இருவர் கெஸ்சு கெஸ்சு என மூச்சு வாங்கிக்கொண்டு குகைவாயிலில் வந்து நின்றனர். வசந்தன் நரிக்கு முன்னங்கால் முறிந்து வளைந்தே ஆடிக்கொண்டு கிடந்தது. பிரதாப நரி வைத்தியர் தன் வைத்தியத்தை வசந்தன் நரிக்கு ஆரம்பித்து முடித்து குகையில் மற்ற நோயாளிகளின் அருகில் படுக்கவைத்துவிட்டார்.

வசந்தன் நரியாரின் கண்களிலும் அவர் பிள்ளைகளின் கண்களிலும் கண்ணீர் ஆறாய் வழிந்தோடியது. அதைக்கண்ட பொன்னூ நரி..

“ஏன் நீங்கள் மூவரும் அழுகிறீர்கள். நீங்கள் அழுதால் ஏற்கனவே வைத்தியம் செய்து படுத்திருக்கும் மற்ற நோயாளிகளின் மனதும் அதிர்ந்துவிடும். அவர்கள் பயந்துவிடுவார்கள். ஆகவே நீங்கள் அழுகையை முதலில் நிறுத்துங்கள்.”

“நீங்கள் முதன்முதலாக இந்த வனத்தினுள் வந்தபோது எங்கள் குகையில் ஒருஇரவு தங்கிக்கொள்ள அனுமதி கேட்டீர்கள். ஆனால் எங்கள் தந்தையார் மறுத்து உங்களை விரட்டிவிட்டார். ஆனால் இன்று எங்கள் தந்தையாருக்கு அடிபட்டு தூக்கி வந்ததுமே வைத்தியம் செய்து முடித்தீர்கள்.. எங்களை மன்னித்துவிடுங்கள் அம்மா!” என்று இரண்டு பிள்ளைகளும் கும்பிட்டனர்.

“முதலாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. நாங்கள் யாருக்கும் எதிராளிகள் அல்ல. நாங்கள் வைத்தியம் செய்யும் குடும்பம். எங்களுக்கு யார்மீதும் கோபங்கள் இருக்காது. நீங்கள் தான் இந்தவனத்தில் உங்கள் தாத்தா பாட்டியை இறுதிக்காலத்தில் கவனிக்காமல் தனியே அனுப்பிவைத்த உங்கள் தந்தையாரின் சொல்படி நடந்துவருகிறீர்கள். உங்கள் தந்தையும் தாயும் வயதாகிவிட்டால் நிச்சயமாக நீங்களும் அவர்களை தனித்து அனுப்பி விடுவீர்கள்”

“இல்லையம்மா.. அப்படி நாங்கள் எங்கள் தந்தையையும் தாயையும் அனுப்ப மாட்டோம்!”

“சரி, அப்போ தாத்தா பாட்டியை நீங்கள்தானே கவனிக்க வேண்டும்? என்ன பேசாமல் இருக்கிறீர்கள். இதுபோக பக்கத்து குகையில் இருக்கும் உங்களின் தம்பிகள் தங்கைகளுடன் வெட்டியாய் கோபித்துக்கொண்டும், முகத்தை திருப்பிக்கொண்டும் வனத்தில் சுற்றுகிறீர்கள். ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்க்கை எவ்வளவு நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றே தெரியாது அல்லவா! நாளைக்கே ஒரு பன்றியின் கொம்பு பட்டுக்கூட சாவு யாருக்கேனும் வந்துவிடலாம்! ஒரு ஓநாய்க்கூட்டம் தனித்து சிக்கிய நரி ஒன்றை குதறிவிடலாம். நிச்சயமில்லாத வாழ்க்கை இது. இதில் பக்கத்து குகைக்காரனிடம் வெட்டிச்சண்டை, தாத்தா பாட்டி மீது வெட்டியான கோபம்..”

“இல்லையம்மா.. இனிமேல் அப்படி நாங்கள் நடந்துகொள்ள மாட்டோம். நாங்கள் இப்போதே சென்று எங்கள் தாத்தா பாட்டியை சந்தித்து எங்கள் குகைக்கு கூட்டி வந்துவிடுகிறோம்.”

“நல்லது! நல்லவிதமாகவும், மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் இனிமேலேனும் இந்த சுந்தரவனத்தில் வாழுங்கள் பிள்ளைகளே!” என்றார் பொன்னூ நரியம்மா.

+++

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *