அந்தப் பெரிய அடுக்ககத்தில் சிறு குழந்தைகள் விளையாடுவதற்கான ஒரு பூங்கா உண்டு.

பூங்காவின் நடுவில் சறுக்கு மரம், ஊஞ்சல், ராட்டினம், சீ சா பலகை, ஆடு குதிரைகள் போன்றவை அமைக்கப்பட்டு, அதைச் சுற்றி சிறிய நடை பாதை  , அதற்கு அடுத்த சுற்றாக சில பூச்செடிகள் இருந்தன. வெளிச்சுற்றாக சிமெண்ட் பெஞ்சுகள் !

சற்றே வளர்ந்த பிள்ளைகளும் அங்கே தான் விளையாடுவார்கள். அவர்கள் விளையாட கார் பார்க்கிங் பகுதியும், வாகனங்கள் செல்லும் பகுதியும் வசதியாக இருந்தது.

வழக்கம் போல சிறுவர்களும் வந்துவிட்டார்கள். பந்துகள் மட்டைகளுக்கு அனுமதி இல்லை. கண்ணாமூச்சி , சேஸிங் என்று தான் விளையாடுவார்கள்.

“ராபர்ட், நாம கேட்ச் கேட்ச் விளையாடலாம்” என்றான் புனித்.

“ஏய், எங்க மிஸ் ஒரு ஐடியா சொன்னாங்க ! என்ன தெரியுமா.. ?” என்றாள் ஸ்வர்ணா.

“சொன்னா தான தெரியும் ..”என்றான் சுமேஷ்.

“சும்மாயிருடா சுமேஷு ! குட்டியா இருந்துட்டு… என்ன நக்கல் பண்ணற” என்றாள் ஸ்வர்ணா.

அந்த நால்வரில் சுமேஷ் தான் குட்டி ! உயரத்தில், வயதில்  … ஆனால், துடுக்கானவன், ஸ்மார்ட் பாய் !.

“சொல்லு, என்ன ஐடியா ?” ராபர்ட்.

இப்போ நாம யாரையாவது கேட்ச் பிடிச்சா அவங்க அவுட் தான … அவங்களுக்கு ஒரு லைஃப் கொடுக்குறது தான் ஐடியா !”

“போடி, ஒவ்வொருத்தரையும் ரெண்டு தரம் புடிக்கணுமா ? கேட்சரா இருக்கறதே போரு ! “ என்றான் புனித்.

“இருப்பா, சொல்றதைக் கேளு. நாம ஒருத்தர புடிக்கறமா, அவங்க கிட்ட ஒரு ஜி.கே கொஸ்டின் கேக்கணும், அவங்க சரியா பதில் சொல்லிட்டா அவங்களுக்கு ஒரு லைஃப் கொடுக்கணும். பதில் தெரியல்ல , தப்பான பதில் சொன்னா… நோ லைஃப். அவங்க கேட்ச் அவுட்” என்றாள் ஸ்வர்ணா.

 புனித்துக்கு இந்த ஐடியா மிகவும் பிடித்திருந்தது. அவனுக்கு தனக்கு நிறைய கொஸ்டின் ஆன்ஸர்ஸ் தெரியும் என்ற நினைப்பு வேற.

தான் வேண்டாம் என்று சொன்னால், தன்னை முட்டாள் என்று கூப்பிடுவார்களே என நினைத்து, ராபர்ட் பேசாமல் இருந்தான்.

சுமேஷ் மட்டும், “ இல்ல, நீங்க எல்லாம் பெரிய க்ளாஸ். நீங்க கேக்கற கேள்வி எனக்கு எப்படி தெரியும் ?” என்றான்.

“டேய், முதல்ல ட்ரை பண்றா , “ ஸ்வர்ணா.

“நோ, நோ … முடியாது. போங்கு, போங்கு… நா மட்டும் எப்பவும் கேட்சரா இருக்க நீங்க போடற ப்ளான் “ சுமேஷ்.

“ நீ விளையாட்டுக்கே வேணாம் … அங்க போய் அந்த குதிரைலே உட்காந்து ஆடு போ …” புனித்.

” சுமேஷ், நா கூடத்தான் சரியா பதில் சொல்ல முடியாதோன்னு நினைக்குறேன். சும்மா வாடா “ ராபர்ட்.

ஆரம்பமானது யார் முதல் கேட்சர் என்பதைத் தீர்மானிக்கும் படலம்.

“டீக்கடை, பூக்கடை ,சாக்கடை… ” புனித் சத்தமாக கத்த, நால்வரும் கைகளைப் புரட்டி புரட்டி வைத்தனர். 

பழைய சாட் பூட் த்ரீ … எடுத்துள்ள புது அவ்தார் !

புனித் முதலில் வெளியே வந்தாச்சு.

மறுபடியும் ’டீக்கடை, பூக்கடை, சாக்கடை’… போட்ட போது, புனித் “ஹூ காபிஸ் மீ…  இஸ் தி கேட்சர் “ எனக் கத்தினான்.  ஸ்வர்ணா வெளியே வந்து விட்டாள்.

இப்போது ராபர்ட்டும் சுமேஷும் !

“அக்கா எப்படி வெளில போன ?” என்று ஸ்வர்ணாவைக் கேட்டான் சுமேஷ்.

“டீக்கடை, பூக்கடை சொன்ன பிறகு ’சாக்கடை’ சொல்லும் போது புனித் கையை எப்படி வச்சுருக்கானோ அப்படி நாம வைக்கக் கூடாது. அப்ப நாம  வின்னு “ என்றாள் ஸ்வர்ணா.

“ ஓ அதான் ஹூ காபிஸ் மீ இஸ் நாட் தி கேட்சர் அப்படின்னு சொன்னானா?” என்றபடியே, அடுத்த ரவுண்டுக்குத் தயாரானான் சுமேஷ்.

” டீக்கடை, பூக்கடை, சாக்கடை…ஹூ டஸ் நாட் காபீஸ் மீ இஸ் தி கேட்சர் “

சுமேஷ், டக்கென புனித் எப்படி வைக்கிறான் எனப் பார்த்து, அதற்கு மாறாக வைத்தும்… அவன் தான் கேட்சர் என்றாகியது.

சுமேஷ் “நா இல்ல.. புனித் அண்ணா ! நா நீ வைக்கற மாதிரி வைக்காம, மாத்தி தான வச்சேன். நா இல்லண்ணா கேட்சர்… ராபர்ட் தான் ! “

“டேய், நான்  ‘ஹூ டஸ் நாட் காபிஸ் மீ “ ந்னுதான் சொன்னேன்.” புனித்.

அடடா ! ஒரு வார்த்தையில் எப்படிக் குழப்பிக் கொள்கிறார்கள் இந்தச் சிறுவர்கள் !

 எப்போது தான் ஓடியாடி விளையாட ஆரம்பிப்பார்கள். நன்கு விளையாட ஆரம்பிக்கும் முன் இருட்டி விடும் போல் இருக்கிறது.

அதற்குள் புனித் அம்மா அங்கே வந்தாள்.

“ ஆண்ட்டி, ஹூ டஸ் நாட் காபீஸ் மீ ந்னு சொன்னா தப்பு தான ஆண்ட்டி ? “ சுமேஷ்.

”ஆமாம்பா, தப்பு தான், யார் சொன்னா ?”

“புனித் தான் “

“”அம்மா, அது விளையாட்டும்மா ! நாங்க எப்பவும்…”

“விளையாட்டான்னு தப்பு தப்பாப் பேசக் கூடாது புனித்”

“ஹூ டஸ் நாட்” அதுக்கப்புறம் “காபி” அப்படித்தான் வரணும், காபிஸ் வரக்கூடாது” என்று விரிவாக ஆங்கில இலக்கணப் பாடம் எடுக்க ஆரம்பித்தார் புனித்தின் அம்மா.

“எத்தனை தரம் சொல்லி இருக்கேன் உனக்கு,?” என்று புனித்தைக் கடிந்து கொண்டார்.

சுமேஷுக்கு அவர் விளக்கம் அவ்வளவாகப் புரியவில்லை. தன்னை சீட் பண்ணுகிறார்கள் என்பது தான் அவன் கம்பெளெயிண்ட். இருந்தாலும் புனித் அம்மா தன் பக்கம் என்று சந்தோஷமாக இருந்தான்.

இறுதியாக, அவர், “ சரி வா, டைம் ஆயிடுச்சு, வீட்டுக்குப் போகலாம் “ என்று சொல்ல, “அம்மா நா விளையாடவே இல்லம்மா.. ஒரு பத்து நிமிஷம் விளையாடிட்டு வந்துர்றேன்” என்று கெஞ்சினான்.

அனுமதி கிடைத்தது.

“தேங் யூ  ஆண்ட்டி” என்ற படி பிள்ளைகள் நகர்ந்தனர்.

“யாருடா கேட்சர் ?”

“ டீக்கடை, பூக்கடை, சாக்கடை…”

விளையாட்டுக்கடை மீண்டும் !

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *