மகா.இராஜராஜசோழன்

காலம் எல்லாவற்றையும் புதுபித்துக் கொண்டு நகர்கிறது. உணவுகளைத் தேடி காடுகளில் அலைந்த மனித இனம் இன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்து உணவகங்களைத்தேடி அலைகின்றது. வேட்டையாடி மாமிசத்தை உண்டு வாழ்ந்ததின் அடையாளமாகக் கறிக்கடைகள் வீதிக்கு வீதி தோன்றி இருக்கிறது.

“ராவுத்தர் மாமா அரை கிலோ ஆட்டுக்கறி”

”எப்படி வேணும் எலும்போடையா? எலும்பு இல்லாமலா?”

“எலும்பு இல்லாம மாமா… தனிக்கறியா குடுங்க, வறுக்கனும்”

“சரி சரி நான் கொடுத்துடறேன் ; நீ வறு இல்ல கொழம்பு வை ஏதாவது பண்ணு”

“கோவிச்சுக்காத மாமா ” எனச் சொல்லிக் கொண்டே ஸ்கேன் செய்து பணத்தைச் செல்போனிலிருந்து அனுப்பிவிட்டு

“மாமா இங்க பாருங்க பணம் அனுப்பிட்டேன் வந்துட்டு” எனப் பணம் பறிமாற்றம் நடந்ததற்கான அடையாளத்தை ராவுத்தரிடமும் காட்டிவிட்டு அவரின் பக்கத்தில் கறி வெட்டிக்கொண்டி்ருக்கும் இளைஞரிடமும் காட்டி

“பணம் வந்துட்டுப் பார்த்துக்கடா நீயும்” எனச் செல்போனைத் திருப்பி அவரிடமும் காட்டி வந்துட்டுல பாரு” என்றவரிடம் இளைஞர் ஆமாம் வந்துட்டு என்பதைப் போலத் தலை அசைக்கிறார்.

“பேட்டி எம்மில் ரூபாய் நானூறு” என்று பணம் பரிமாற்றத்தைச் சற்றுத் தாமதமாக அறிவிக்கிறது பணப்பரிமாற்றக்கருவி.

கறிக்கடைகாரிடம் பாய் என்பதற்கான எந்த மத அடையாளமும் இல்லை. கடை சுவரில் மெக்காவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. பாய்கள் மட்டும் என்ன மெக்காவிலிருந்தா வந்துவிட்டார்கள்?. தமிழ்தான் தமிழர்தான்.

வாசலில் மூன்று பெரிய கறிவெட்டும் மரத்துண்டுகள் அவற்றின் உயரம் அகலமே ஒரு நாளைக்கு எத்தனை கிலோ கறி விற்கும் என்பதைச் சொல்லும்.

வெட்டப்பட்டுக் கறியாகி மூன்று ஆடுகளின் தலைகள் வளைந்த கூர்மையான கம்பியில் ஆட்டின் காதுகளில் குத்தப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தன.

மூன்று தலைகளில் ஒன்று செம்மறி ஆட்டின் தலை. மூன்று ஆட்டின் தலையின் வாயிலிருந்து நாக்குகள் பிதுங்கி இருந்தன. ஆடுகளின் தலை அறுக்கப்படும் போது ஆடு கதறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க ஆட்டின் நாக்கை வெளியே இழுத்துப் பிடித்து அறுப்பது வழக்கம். அப்படி அறுக்கப்பட்ட பொழுது ஆட்டின் பற்களே அதன் நாக்கை இறுக்கமாகக் கடித்துக் கொண்டே உயிர் விட்டிருக்கின்றன.

பார்க்கவே பாவமாக இருந்தது ஆனால் என்னாலும் இரக்கம் கொள்ளமுடியாது. நானும் எலும்பில்லாத ஆட்டுக் கறி வாங்கதான் கறிக் கடைவாசலில் மகளோடு காத்திருக்கிறேன்.

பள்ளியில் படித்த போது பள்ளிவிட்டதும் மாலையில் ஆடுகளை மேய்த்துப் பட்டியில் அடைத்துவிட்டு ஆட்டுக்குட்டிகளை அதன் தாய் ஆட்டிடம் பாலூட்ட விட்டுக் கூடைகளில் அடைத்துவிட்டு உறங்கப் போன நாட்கள் நிழலாடுகிறது.

மகள் “அப்பா இது என்னப்பா” என்று தேங்காய்ப்பூத்துண்டை மூட்டைக்கட்டித் தொங்க விட்டிருப்பதைப்போல ஆட்டின் இரைப்பையும் குடலும் தொங்குவதைக் கைகாட்டிக் கேட்கிறாள்

“பாப்பா அத தொட்டுப்பாருங்க அதான் ஆட்டுக் குடல் பாப்பா” என்றதும் முதலில் தொடத்தயங்கியவள் மெதுவாக நகழ்ந்து விரலால் தொட்டுப் பார்க்கிறாள்.

“டேய் டேய் தேய்த்துக் கழுவினது போதும் எவ்வளவு தண்ணீய விட்டு அதக் கழுவுவ, போடா எடுத்துட்டு எட்ட போய் ஊதி விளையாடு” என்கிறார் அவன் தந்தை.

அவன் கையில் வெள்ளை பலுன் போல ஒன்றை வைத்து இழுத்து இழுத்துப் பார்த்து ஊத முயற்சிக்கிறான். அது பலுன் போலப் பெரிதாக வடிவம் வரவில்லை என்றாலும் ஓர் அளவு ஒரு சிறிய பலுன் அளவு அவனால் அதை ஊத முடிந்தது

அதனுள் காற்றை நிரப்பி எடுத்து ஓடி வருகிறான் “அப்பா இங்க பாருங்க” என வெள்ளை நிறப் பலூனாக மாறி இருக்கும் ஆட்டின் சிறுநீர்ப் பையைக் காட்டுகிறான்.

நான்கு ஐந்து முறைதான் ஊதி இருப்பான் அது ஓரிடத்தில் ஓட்டை விழுந்து விட்டது.

“அப்பா அப்பா இங்க பாருங்க ம்ம்ம்ம் அப்பா பலூன் ஓட்டையாகிட்டு” அழுது கொண்டே அப்பாவிடம் ஓடி வருகிறான்.

ஆட்டின் தோலை முழுவதும் உரித்துத் தோலைச் சுருட்டி கோணிப்பையில் திணித்துவிட்டு வளைந்த கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டிருந்தார்.

ஆட்டின் குடலின் உள் இருக்கும் சாணத்தை வெளியேற்ற ஆட்டைத் தலை கீழாகத் தொங்கவிட்டு ஆட்டின் ஆசனவாய் வழியாக தண்ணீரை ஆட்டின் குடலுக்குள் செலுத்திச் சுத்தம் செய்வார்கள். அப்படிச் சுத்தம் செய்வதற்கு நீர் ஏற்ற அந்த ஆட்டின் சிறுநீர் பையையே பயன்படுத்துவார்கள்.

ஆட்டின் சிறுநீர்ப்பையை வெளியே எடுத்து நீரை அந்தச் சிறுநீர்ப்பையில் நிறப்பி அதன் வாய்ப்பகுதியை ஆட்டின் ஆசனவாய்க்குள் திணித்து நீர் நிரம்பிய பகுதியை அமுக்க தண்ணீர் ஆட்டின் குடலுக்குள் இறங்கி குடல் நிறைந்த சாணத்தை அந்தத் தண்ணீர் கழுவி சரிப்படுத்தும். அப்படிப் பயன்படுத்தப்பட்ட சிறுநீர்ப்பையைக் குழந்தைகளிடம் விளையாடக் கொடுப்பார்கள்.

அந்தச் சிறுநீர்ப்பைதான் ஊதி விளையாண்டதில் ஓட்டை விழுந்துவிட்டதாக அழுகிறான் கணியன்.

“அழாதடா கணியா… அழதா ஓட்டை விழுந்த காற்றுதான் நிரப்ப முடியது நீர் நிரப்பி விளையாடலாம். அழாத” எனக் கூறிக்கொண்டே அவன் கையிலிருந்த ஆட்டின் சிறுநீர்ப்பையில் நீரை நிரப்பித் தருகிறார்.

கையில் நீரோடு் பையைத்தூக்கி விளையாடத் தொடங்கியவனுக்கு வெள்ளைச்சி நினைவு வந்துவிட்டது.

வீட்டிற்கு எதிரே மைதனம் போல விரிந்துகிடக்கும் தோட்டம்தான் வெள்ளச்சி வளம் வரும் இடம். தலை உயர்த்தி தோட்டத்தைப் பார்க்கிறான் மரங்களும் செடிகளும் கண்ணில் படுகின்றன. வெள்ளச்சி மட்டும் கண்ணில் படவே இல்லை.

“மேஏஏஏஏ மேஏஏஏஏ மேஏஏஏ” என்று ஆடு கத்துவதைப் போல கத்தி அழைத்துப் பார்க்கிறான்.

எப்போதும் அவன் அழைக்கும் சத்தம் கேட்ட உடன் “மேஏஏஏஏ மேஏஏஏ” அதுவும் கத்திக் கொண்டே ஓடிவந்து முன்னங்கால்களைத் தூக்கி அவன் மார்பில் ஊன்றி அவன் கையிலிருந்து நீட்டும் கருவேலங்காயை இலாவகமாக வாயால் வாங்கிச் சாப்பிடும்.

அவன் அதன் தலையைத் தடவி ஆசுவாசப்படுத்தி தானும் மகிழ்வான்.

பலமுறை இவன் அழைத்தும் வெள்ளச்சி வரவே இல்லை. அவன் அழைத்து வெள்ளச்சி வராத நாள் இதுதான். வெள்ளச்சி எங்கெல்லாம் மேய்வாளோ அங்கெல்லாம் சென்று தேடிவிட்டுத் திரும்புகிறான்.

வெள்ளச்சிக்கும் இவனுக்குமான உறவு ஓராண்டுக்கு மேலானது. அவன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அன்று மாலை பள்ளி விட்டு வீடு திரும்பி வந்தபோது வெள்ளச்சி பிறந்திருந்தாள். பால் நிறத்தில் பஞ்சுப்போல முடியோடு உடல் நடுங்க வீட்டு வாசலில் கோணி விரிப்பில் முகத்தை நான்கு கால்களுக்கு இடையே புதைத்துக் கொண்டு படுத்திருந்தது.

அதனைப் பார்த்த அவன் ஏய்ய்ய்ய் என மகிழ்ந்து கத்திக்கொண்டே ஓடி வெள்ளச்சியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பு இன்று நழுவிப் போனதாக உணர்கிறான் அத்தனை அழுகையோடு வீடு நோக்கி வெள்ளச்சியைக்காணாத துயரம் தொண்டையை அடைக்க கத்துக்கிறான். “அப்பா வெள்ளச்சியைக் காணுப்பா அவ எங்கேயோ தொலைஞ்சி போய்ட்டாப்பா”

“நல்ல தோல் கோபால், நல்ல விலை போகும் வித்துட்டு வந்துகூட காசுகொடு இப்போ ஒன்னும் காசுக்கு அவசரம் இல்ல. அதோ சாக்குள்ள இருக்குப்பாரு” எனக் கை நீட்டிக் காட்டுகிறார்.

“சரிங்க முதலாளி வித்துட்டு வந்தே காசு தரேன்”. என்றவர் வெள்ளச்சியின் தோலைத் தூக்கிக்கொண்டு அழுதுகொண்டே ஓடிவருகிற கணியனைக் கடந்துபோகிறார்.

“அப்பாவிடம் ஓடியவன் வெள்ளச்சிய தேடிக்குடுங்கப்பா… வெள்ளச்சி வேணும்”  என்று தேம்பியவனைப் பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறமுள்ள ஆட்டுப்பட்டிக்கு அழைத்துச் செல்கிறார் அப்போதுதான் ஒரு ஆடு குட்டிப் போட்டிருக்கிறது. அதுவும் பால் வெள்ளை நிறத்தில் புசுபுசு என பஞ்சுப்போல முடியோடு இருக்கிறது. அதைப்பார்த்த கணியன் “ஐ ஐஐஐ வெள்ளச்சி்” எனக் கத்திக்கொண்டு ஓடி வெள்ளச்சியைத் தூக்கி அணைத்தும் கொண்டான்.

00

தங்க இறக்கைக் கிளி…

சோழபுரம் ஓர் அழகான மலை ஊர். அந்த ஊரில் வசித்த எல்லோருமே உழவுத் தொழில் செய்து வந்தனர்.

உழவுத் தொழில் செய்து வந்ததால் அவர்களின் வீடுகளுக்குப் பக்கத்திலேயே நிலங்களும் ஆறுjகளும் இருந்தன.

ஊரே எப்போதும் பச்சப்பசேல் எனக் காட்சியளிக்கும். வான் அளவு உயர்ந்த மரங்கள் பூத்துக் காய்த்துப் பழுத்து நிற்கும்.

மரங்களில் பழுத்திருக்கும் பழங்களை உண்ண பல ஊர்களில் இருந்து எல்லாம் பறவைகள் சோழபுரத்திற்கு வரும். அப்படிச் சில நாட்களுக்கு முன்பு வந்த ஒரு பறவை சோழபுரத்திலேயே மிக உயரமான மரத்தைத் தேடிப்போய் கூடு கட்டித் தங்கியிருந்தது.

அந்தப் பறவை அதன் கூட்டில் இரண்டு முட்டைகளை இட்டு இருந்தது.

இப்போது அந்த மரத்தில்  பறவைகள் சாப்பிடப் பழங்களே இல்லை. அந்தப் பறவை தின்ன பழம் தேடி மரத்தைத் தினமும் சுற்றிச் சுற்றி சுற்றிப் பார்த்ததில் கிளையின் உச்சியில் தின்ன முடியாத அளவில் இரண்டு காய்கள் மட்டுமே இருந்தன.

அந்த மரத்தில் பழங்கள் இல்லாததால்  முட்டையிட்டு இருந்த அந்தப் பறவை இரைதேடித் தின்ன பறந்து வேறு மரங்களுக்குச் செல்ல  வேண்டியிருந்தது.

“ஐயோ ! என் முட்டைகளைத் தனியாக விட்டுச் சென்றால் வேறு பறவைகளோ விலங்குகளோ முட்டையைச் சேதப்படுத்திவிடுமே என்ன செய்வது ” எனச் சிந்தித்தது; பயந்தது.

அப்போது அதற்கு ஓர்  எண்ணம் தோன்றிற்று. “வனதேவதைகளே எங்கே இருக்கிறீர்கள். இங்கே வாருங்கள்” என வனத்தேவதைகளை அழைத்தது.

” பறவையே எங்களை ஏன் அழைத்தாய், உனக்கு என்ன உதவி வேண்டும் கேள்” என்றது பறவையின் முன் வந்து நின்ற வனத்தேவதைகள்.

“நான் இரை தேடச் செல்ல வேண்டும் நான் வரும் வரையில் என் முட்டைகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும் ” எனக் கேட்டது பறவை.

பறவையின் வேண்டுகோளை ஏற்றுத் தேவதைகள் பறவையின் முட்டையைக் காவல் காத்துக் கொண்டிருந்தன.

இரை தேடிச் சென்ற பறவை மாலை நேரம்தான் திரும்பி வந்தது. அது வரையில் பசியோடு இருந்த தேவதைகள்

“பறவையே என்ன உணவு கொண்டு வந்தி்ருக்கிறாய் , எங்களுக்கும் பசிக்கிறது” என்றன.

மிகவும் சுவையுள்ள இரண்டு மாம்பழங்களை எடுத்து

“தேவதைகளே அதிசய மாம்பழம் இது. இதனைச் சாப்பிட்டுப் பசி் நீங்கினாலும் தீர்ந்து போகாது; நீங்கள் பசிக்கிற பொழுதெல்லாம் கை நீட்டி மாம்பழமே வா ? என்று அழைத்தால் உங்கள் கைகளில் வந்துவிடும், நீங்களும் உங்கள் உறவினர்களும் இந்த அதிசய மாம்பழத்தை உண்டு பசி் போக்கிக் கொள்ளலாம் ” என்றது.

தேவதைகள் அந்த மாம்பழங்களைக் கையில் வாங்கிக் கொண்டன. தங்க நிறத்தில் மாம்பழம் மின்னியது. இப்படி ஒரு அதிசய மாம்பழத்தைத் தேவதைகள் இப்போதுதான் முதன் முதலில் பார்க்கின்றன.

அதிசய மாம்பழத்தைப் பெற்றுக் கொண்ட தேவதைகள் பறவைக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்துப் பறவைக் கூட்டில் தங்க நிறத்தில் இரண்டு முட்டைகளை வைத்தன.

“பறவையே உன் முட்டையை நீ வரும் வரை காவல் நின்று பார்த்துக் கொண்டோம்; நாங்கள் இனிப் போகலாமா?” எனத் தேவதைகள் கேட்டன.

பறவையும் “தேவதைகளே தங்களின் உதவிக்கு மிக்க நன்றியும் பேரன்பும்” எனக்கூறி வழி அனுப்பி வைத்தது.

பறவை மீண்டும் முட்டை மீது அமர்ந்து அடைகாக்கத் தொடங்கி விட்டது.

சில தினங்களில் “கீச்கீச் கீச்” என முட்டை உடைந்து குஞ்சுகள் கத்தத் தொடங்கிவிட்டன.

பறவைக்கு அத்தனை மகிழ்ச்சி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளால் அணைத்துக்கொண்டது.

வானம் இருள் சூழ்ந்தது மழைத்துளி அங்கு ஒன்றும் இங்கொன்றுமாக வீழ்கிறது. பறவை வான் நோக்கித் தலையைத் தூக்கி தன் வாயைத் திறக்கிறது வானத்திலிருந்து வீழும் மழைத்துளியைப் பிடித்து விழுங்கியது

அது விழுங்கிய மழைத்துளி அத்தனை சுவையானதாக இருந்தது.

தன் இறக்கையை நீக்கி தன் குஞ்சுகளையும் வாய் திறந்து மழைத்துளியைக் குடிக்கச் செய்தது.

முதன் முதலில் மழைத்துளியைக் குடித்த பறவைக்குஞ்சிகள் சிலிர்த்து எழுந்தன. இறக்கைகள் வேகமாக முளைத்தன.

தேவதைகள் வைத்த முட்டையிலிருந்து வெளி வந்த குஞ்சுகள் இரண்டும் மேலெழும்பி வேகமாகப் பறக்கத் தொடங்கிவிட்டன.

மரத்தின் உயரே உயரே போய் பழுக்காமல் இருந்த இரண்டு காய்களையும் கொத்தின, இந்தக் குஞ்சுகள் கொத்திய உடன் பச்சைநிறத்தில் இருந்த அந்தக் காய்கள் பொன் நிறத்தில் மாறிவிட்டன.

இந்தக் குஞ்சுகளின் இறக்கைகளும் தங்கநிறத்தில் மாறிவிட்டன.

தங்க நிற இறக்கை முளைத்த குஞ்சுகள் தங்க இறக்கைக் கிளிகளாக மாறிவிட்டன. இந்தக் கிளிகள் அதிசய கிளிகளாக இருந்தன. எல்லா பறவைகளைவிடவும் வேகமாகவும் உயரமாகவும் பறந்தன.

இந்தத் தங்க இறக்கைக் கிளிகள் கொத்திய எல்லாக் காய்களும் பொன் நிறப் பழங்களாக மாறி  உலக உயிர்களின் பசி போக்குகின்ற பழங்களாக மாறிவிட்டன. அப்போது இருந்து சோழபுரம் வருகின்ற எந்தப் பறவைகளும் உணவு உண்ணாமல் பசியோடு சென்றதில்லை.

000

மகா.இராஜராஜசோழன்

குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி. பிறந்த ஊர் – சிதம்பரநாதபுரம். வட்டம் – சீர்காழி. மாவட்டம் – மயிலாடுதுறை.

இணைய இதழ்களிலும், அச்சிதழ்களிலும் எழுதி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *