இரவு உணவை முடித்த பின் வெளியே வந்தமர்ந்தால் அந்த அரச மரத்தின் வேப்பமரத்தின் இலைகளின் சலசலப்பு ஓசையோடு அடிக்கும் குளிர்ந்த காற்றின் சுகம் வேறு எங்கும் கிடைக்கவே கிடைக்காது. தாராளமாக நூறு பேர் அமரலாம் அந்த இரு மரங்களின் நிழலில். மாலை நேரத்தில் கூடடையும் பறவைகள். இலையுதிர் காலத்தில் தான் கூட்டின் எண்ணிக்கையை தெரியவரும். அரச இலைகளின் அடர்த்தி சூரிய ஒளியை உள்ளே அனுமதிக்காது. முகவரி தெரியாமல் அலைபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் மரங்கள்.     

     சாரதாம்மா அந்த கனமான முடிவை எடுத்த பின்பு, இரண்டு வாரங்களாக பூஜை போடாமல் புது வேட்டி மாற்றாமல் பொழிவு இழந்து காணப்பட்டது அரச மரமும் வேப்ப மரமும். அந்த வழியாக வேலைக்கு செல்லும் ஆட்கள், நல்ல காரியத்தை நோக்கி போகும் ஆட்கள், பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் என அனைவரும் அந்த மரங்களை கடந்து போகும் போது ஒரு நிமிடம் இரு கண்களை மூடி நெஞ்சில் கை வைத்து வணங்கி செல்வார்கள்.

     விடிந்தது வெள்ளிக்கிழமை. தலையோடு குளித்துவிட்டு சாரதாம்மா மரத்திற்கு அருகே சென்று நின்றார். இரு கைகளை கூப்பி மரத்திற்கு முன் நின்று கொண்டு அழுது கொண்டிருந்தார். பின்னர் நெடுஞ்சான்கிடையாக  விழுந்து வணங்கி எழுந்தார். நாளை நடக்கப் போவதை எண்ணியோ அல்லது வழக்கம் போலவோ மரத்தின் கிளைகளின் ஊடே அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது அணிகள்.

                மன்னிச்சிடுமா

                என்ன மன்னிச்சிடுமா

     இதுக்காக நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேனு மனதுக்குள் மரங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

     மரம் என்று பாராமல் சாமியாக பாவித்தார் மரத்தை. கனத்த இதயத்துடன் மரத்திற்கு அருகே சென்றார். இரு சக்கர வண்டியில் ஒருவர் வந்தார். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மரத்தின் அருகே சென்று நின்றார். சாரதாம்மா மரத்தை தொட்டு கும்பிட்டார். பின் தரையோடு படுத்து வணங்கினார். சாரதாம்மாவின் கைகள் நடுங்கியது. நடுங்க நடுங்கவே மரத்தை சுற்றி கட்டி உள்ள வேட்டியை உருவினார். தனது மரம் நிர்வாணமாக நிற்பதாக தோன்றியது சாரதாம்மாவிற்கு. மூன்று குடம் தண்ணீர் எடுத்து மரத்தின் மேல் தன் கை எட்டும் வரை தூக்கி ஊற்றினார். குங்குமமும் திருநீரும் இட்டார் மரத்திற்கு. மரத்திலிருந்து வழிந்து கொண்டிருந்த தண்ணீரால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மரம் அழுவதை போல் தெரிந்திருக்கும்.

                தனது புடவையின் முந்தானையை எடுத்து தன் இரு கண்களையும் துடைத்துக் கொண்டு மரத்தை விட்டு விலகி வந்தார். மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார் வண்டியில் வந்தவர். மரத்தை வெட்டுவதற்கு முன் பணமாக அவர் அருகே சென்று அவரின் கையில் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை கொடுத்தார்.

                பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒருவழியாக நாலாயிரம் ரூபாய்க்கு முடிவாயிற்று. அடுத்த நாள் காலையில சுமார் ஆறரை மணிக்கே, நல்ல வாட்ட சாட்டமா பேண்ட் சட்டைய போட்டுகிட்டு ஒருத்தரும் நாப்பது நாப்பதஞ்சு வயசுல மூணு பேரும் வந்தாங்க. சாரதாம்மா வெளிய வந்தாங்க. உள்ள போய்ட்டு பூஜை சாமான், கற்பூரம், ஊதுபத்தி, ஒரு எலுமிச்சைபழம் எல்லாம் கொண்டு வந்து பேண்ட் சட்ட போட்டவரு கையில கொடுத்தாங்க. பழத்த ரண்டா அறுத்து குங்குமம் தடவி மரத்துக்கு கீழ ரண்டு பக்கமும் வெச்சுட்டு, ஊதுபத்தி பொருத்தி கீழ மண்ணுலேயே சொருகிவிட்டு, கற்பூரத்தை கொழுத்தி எல்லாரும் சாமி கும்புட்டாங்க. சாரதாவின் உதடுகள் முனுமுனுத்துக் கொண்டே கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் உதடுகளை நனைத்தது.

பக்கத்துல இருந்தவங்கலாம் சொன்னாங்க.

                 என்ன இருந்தாலும் பெத்த பிள்ள மாதிரி வளத்தாங்கல்ல அதான் கண்ணீர் வருது. ஜோசியக்காரன் சொன்னதுக்காக பந்தல் போட்டு கல்யாணம் கூட செஞ்சாங்க.

  பின்ன…  என்ன நெனச்ச நீ

                வேப்ப மரமும் அரச மரமும் ஒண்ணா இருந்தா அந்த ரெண்டு மரத்துக்கும் கல்யாணம் பண்ணி நாலு ஏழைபாலைக்கு சோறு போடுங்க நல்லது நடக்கும்னு சொன்னான் ஜோசியக்காரன். அவங்களும் ஜோசியக்காரன் சொன்ன மாதிரியே கல்யாணமும் பண்ணி வச்சாங்கடி.

   ஓ.. அப்படியா அப்ப கண்ணீர் வரலனாதான் தப்புக்கா

   டர், டர்

                டர், டர்

                டர், டர், டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

     மிஷின் போட்ட கூப்பாட்ல என்னடா சத்தம்னு அப்பா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். மரத்தோட உச்சி கொப்புள ஒருத்தர் ஒக்காந்துகிட்டு சின்ன சின்ன கெளைங்கள அறுத்துகிட்டு இருந்தாரு. அக்கம் பக்கத்தில் இருக்கிற சின்ன பிள்ளைங்க எல்லாம் சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்க ஓடி வந்தாங்க. அவர்களை வீட்டுக்கு போங்கனு பக்கத்துல இருந்து பெருசுங்க மிரட்டிகிட்டு இருந்தாங்க. வெளியே இருந்த பெரிய பொம்பளை சொன்னா.

   “அடியே இன்னும் கொஞ்ச நேரத்துல கரண்ட புடுங்கி விட்ருவாங்க அதுக்குள்ள அரைக்கிற எதுனா இருந்தா உடனே அரைச்சு வச்சுக்கோங்கடி”

           அந்த அம்மா சொன்ன கொஞ்ச நேரத்துல எக்ஸெல் வண்டில காக்கி பேண்ட் சட்டை போட்ட ஒரு ஆளு வந்தாரு. அந்த ஆள பார்த்ததும் பொம்பளைங்க எல்லாம் சிட்டா பறந்துட்டாங்க. ஏன்னா அவரு ஈபில இருந்து வந்திருக்கிறார். கிளை அறுக்கும் போது கிளைங்க பக்கத்துல தண்டி கம்பத்தலையோ இல்ல ஒயறுங்க மேலையோ விழுந்தா அவங்களுக்கு தான் வேலை அதிகம்.

                கரண்ட் ஆஃப் ஆயிடுச்சு. ஊரே நிசப்தமானது. அதனால மெஷின் போடுற சத்தம் பூமிய பொலளக்குற மாதிரி இருந்துச்சு.

                மேல இருந்துட்டு சின்ன கிளைங்களா அறுத்துகிட்டு இருந்தாரு சங்கர்.

  கீழ இருந்த ரவி சொல்றாரு

“சங்கர் அண்ணா மடமடனு அறுத்ததுப்போடு நேரம் இல்ல”

   மேல இருந்த ஒவ்வொரு கிளையா அறுத்தறுத்து கீழே போடுறார் சங்கர். கீழ பாத்தா வேப்ப மர இலையாவும் அரச மர இலையாவும்  கெடக்குது. கோமா நிலையில இருக்கிற நோயாளிக்கு மொட்டை அடிக்கிற மாதிரி அரச மரத்துக்கு மொட்டை போட்டுக்கிட்டு இருக்கிறார் சங்கர். கீழ விழுந்த சின்ன சின்ன கிளையை பொறுக்க ஒரு கூட்டம் தீயா பறக்குது. அடுப்பெரிக்காகும்னு எடுத்துட்டு போறாங்க.

                   பெரிய கிளைகள அறுக்க போதுமான அளவு சின்ன கிளைகள அறுத்ததும் இதுநாள் வரை படாத இடத்தில் வெயில் படுகிறது எனது  வீட்டில். மிஷினை நிறுத்தி டீ குடிக்க தயாரானார் சங்கர்.

யாரும் கேட்கவில்லை அனால் அவரே கூறினார் பக்கத்துல.

 “இருபது நிமிஷத்துக்கு ஒரு தடவை மிஷன நிறுத்தணும் இல்லனா பொகஞ்சு போயிடும்”

     அரச மரமும் வேப்ப மரமும் ஒண்ணா இருந்தா அதுக்கு கல்யாணம் பண்ணி வச்சு வாராவாரம் வெள்ளிக்கிழமை பூஜை போடணும்னு ஜோசியக்காரன் சொன்னான். வாராவாரம் புது வேட்டி மாத்தி விடுவாங்க சாரதாம்மா. ரொம்ப வருஷமா மரம் இரண்டும் அந்த இடத்துல இருக்குது. காலப்போக்கில் வேப்பமரத்த அரசமரம் உள்வாங்கி வளர ஆரம்பிச்சிருச்சு. சாமிக்குத்தம் ஆகிடும்னு பயந்துகிட்டு யாருமே மரத்தை வெட்ட முன் வராம இருந்தாங்க. அரச மரம் போதுமான அளவு வேர நிலத்துக்கு கீழ விட்டுட்டு இனிமே மேலன்னு முடிவு எடுத்து மர வேர வெளியே விட ஆரம்பிச்சிருச்சு.

     நாளடைவில் வேர் நல்ல தார் ரோட்ட பொழந்துகிட்டு வெளியே வந்துருச்சு. மரம் இரண்டும் தன்னுடைய அபரிமிதமான வளர்ச்சியை நாளுக்கு நாள் அதிகமாக்கிவிட்டது. ஒரு பெரிய குடை போல ஆகிருச்சு மரம். வேர் வெளியே வந்ததால் வயசானவங்க நடக்க முடியல அந்த வழியா, வண்டியில போனா கூட கொஞ்சம் தடுமாறி தடுமாறி தான் போகணும். ஒரு நாள் ஒரு நிறைமாத கர்ப்பிணி பொண்ணு ஒன்னு நடந்து போச்சு, அந்த வழியா அது போன நேரம் என்னமோ வேரு தடுக்கி கீழ விழுந்துடுச்சு. சாமி புண்ணியத்துல தாய்க்கும் சேய்க்கும் ஒன்னும் ஆகல. மரம் வேணும் தான் ஆனா ஆபத்தான முறையில் மரம் வளர்ந்தது. பேசாம வெட்டிரலாம்னு சாரதாம்மா முடிவு எடுத்தாங்க.

     டீய குடிச்சிட்டு சங்கர் கையில ஒரு கயிறோடு மேலே ஏறினார். கயிற ஒரு பெரிய கிளையிலே கட்டி கயிறு முனைய கீழ போட்டாரு ரவியும் இன்னும் இரண்டு பேரும் முனைய புடிச்சுக்கிட்டாங்க. பெரிய கிளையா அறுக்கும் போது பொத்துனு கீழ விழாம இருக்க கயிறு போட்டு கட்டி பொத்துனாப்புல கீழ இறக்க தான் இந்த யோசன. சங்கர் மரத்த நல்லா மொட்ட போட்டுட்டாரு. ஒரு 15 அடிக்கு தன்னோட கிளை எல்லாம் இழந்துட்டு உருண்டையா நிக்குது, எல்லாரும் என் நிலைமையை  பாருங்கன்னு. கீழ விழுந்த சின்ன கிளைங்களா கொடுவா மூலமா வெட்டி வெட்டி சின்னதா கட்டி வீட்டில் அடுப்பெரிக்க, எடுத்துக்கிட்டு போக வசதி பண்ணிக்கிட்டு இருந்தா ஆராயி கிழவி.

     நான்  மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தேன். ஒரு வெறுமையை உணர்ந்தேன். 15 அடி இருந்த மரத்தை இரண்டு அடி உயரத்துக்கு மட்டும் அறுத்துவிட்டு நாளைக்கு காலையில வந்து மிச்சம் மரத்தை எடுத்து விடரோம்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. போன கரண்ட் வந்துருச்சு. அவங்க போன பின்னாடி வீட்டுக்கு அடுப்பெரிக்க வேண்டும்னு கொஞ்சம் கொஞ்சம் குச்சியா உடைச்சு எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. அந்த ஆராயி கெழவி மட்டும் இரண்டு இளவட்டத்தை கூட்டிட்டு வந்து ஒரு பெரிய கிளையவே இழுத்துட்டு போயிட்டா.

      இதுநாள் வர குடியிருந்த வீடு எங்க காணோம்னு தேடுதுங்க பறவைங்க. பக்கத்துல இருந்த பூவரச மரத்துல குடி மாத்திட்டு போன அணிலுங்க சொல்லுச்சு கவலைப்படாதீங்க சின்ன மரமா இருந்தாலும் இங்க வாங்க ஒண்ணா இருக்கலாம்னு. இரவு ஆகியது. பறவைகளும் அணில்களும் அழுது புலம்பியது. வீட்டிற்கு வந்தேன். மடக்கு கட்டில் ஒன்ன எடுத்துக்கிட்டு வெளியே போட்டேன். தினமும் இரவு வெளியே அந்த அரச மர காத்துல கொஞ்ச நேரம் தூங்குனா தான் எனக்கு தூக்கமே வரும். படுத்தேன் மரம் என்னிடம் பேசியது.

    “இது மார்கழி மாசம். நினைச்சதை சாதிச்சு போட்டிங்களா என் குழந்தைகளை எங்கிட்ட இருந்து பிரிச்சுவுட்டுடீங்க. இப்ப வரப்போகுது  சித்ரா அப்ப புரியும் என் இருப்பு”

    மனசுக்குள் வேதனை அடைந்தேன். புரண்டு புரண்டு படுத்தேன் . தூக்கம் வரவே இல்ல அப்பதான் எனக்கு புரிஞ்சது.

    மரம் அது தன்னை சுத்தி இருக்கிற மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது ஒன்னும் இல்ல. அது உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரித்தானது. சொல்லப்போனால் உலகின் எந்த மூலையிலிருந்தும் வரும் பறவைக்கும் அடைக்கலம் கொடுக்கும். அட்வான்ஸ் வாங்காத வீட்டின் உரிமையாளரே இந்த மரம். வாடகை கொடுக்க வேண்டாம், எத்தனை கூடு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம், எத்தனை உறவினர்களை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம், இறப்பு மட்டும் தான் மரத்திற்கும் பறவைக்கும் உண்டான உறவை முறிக்கக் கூடியது.

                “ஒரு மனிதன் தனது தாயின் மடியில் படுத்து, அந்த தாய் தன் விரல்களை அந்த மனிதனின் தலையின் மயிர்களுக்குள் விரல் விட்டு கோதி கொண்டே, தனது சேலையின் முந்தானையினால் விசிறிவிடும் போது வருமே ஒரு சுகம். அதைவிட நூறு மடங்கு சுகம் ஒரு மரம் ஒரே ஒரு அசைவில் அளித்துவிடும்.

“தாயின் கருவறை போல மரமும் ஒரு கருவறையே மழை நீரால்”

     காலையில் மரம் வெட்டுற ஆளுங்க வந்தாங்க கூடவே புள்டோசர் ஒன்று கூட்டி வந்தாங்க. விறகுகுச்சி கீழ பொறுக்கிட்டு இருந்த ஆளுங்க எல்லாம் திக்காலுக்கு ஒரு பக்கமா சிதறி ஓடுனாங்க. இரண்டு அடி இருந்த மரத்தை ஒரு அடியா குறைச்சு விட்டாங்க. மரத்திற்கு “ஊர்க்கோடி” போடுவது போல் ஊர்மக்கள் கூடிவிட்டார்கள். மரத்தின் நான்கு பக்கமும் புள்டோசர் தனது கோர வாயை வைத்து பறித்தது.

     முதலில் கிழக்கு பக்கம் நோக்கி வளர்ந்து இருந்த வேர்களைத் துண்டித்து அறுத்து எடுத்து தனது பசியை தீர்த்துக்கொண்டது. மரத்தை சுற்றி மூன்றடி ஆழத்திற்கு குழி பறித்தது.பக்கத்தில் இருந்த பூவரசு மரத்தில் இருந்த அணில் பாவமாக அதை பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தை ஒட்டி சுவர் ஒன்று இருக்கும் பழைய இட்லி, சுண்டல், கடலை, சோறு போன்றவை சுவரில் வைக்கப்படும். தன் வீடு பறிபோவதால் சோகத்தில் அணிலுக்காக வைத்த அந்த பழைய இட்லி சேதமாகாமல் அப்படியே இருந்தது.

     புள்டோசர் தனது பலம் வாய்ந்த கையால் வடக்கு தெற்காக மரத்தை இடித்தது. வரமாட்டேன் வரமாட்டேன்னு என்று மரம் பிடியா பிடிச்சுகிச்சு மண்ணோட மண்ணா.கிழக்கு மேக்கையுமா ஒரு இடி இடிச்சது மரத்தை. இப்ப போட்ட ரண்டு அடியில மரம் லேசா மண்ணு விட்டு வெளியே வந்திருச்சு. என்ன கோவம் வந்துச்சோ தெரியல புள்டோசர் தனது ஆக்ரோஷமான கோர பற்கள் உடைய வாயை தூக்கி மரத்திற்கு பின்புறம் வைத்து ஒரு இழு இழுத்தது மரத்தை.

     போயிட்டு வரேன்னு சொல்லிட்டு மண்ணை விட்டு விலகி வந்துருச்சு மரம்.

      அப்பா…. எவ்வளவு பெரிய வேரு. மரத்தின் வேர் இருந்த இடத்தில தாராளமா ஆறு  பேர் படுத்து தூங்கலாம் போல. அப்படியே மரத்தை தூக்கி இடது பக்கமா போட்டுச்சு புள்டோசர்.

     புள்டோசர் தனது பாவத்தை போக்கும் விதமாக பாவமன்னி கேட்டு மண்ணு  தள்ளிடுச்சு அந்த வெற்று குழியில்.

                லாரி ஒன்னு வந்துது. மரத்தைத் தூக்கி அந்த லாரியில் போட்டுச்சு புள்டோசர். பின் பெரிய கெளங்கலையும் தூக்கி லாரியில் போட்டுச்சு. போயிட்டு வரேன் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு மரம் லாரில போயிடுச்சு.

     கூட்டம் கலைந்தது.மேகங்கள் கூடியது. சாரதாம்மாவின் கண்ணீர் துளி தரையில் பட்டு வெடித்தது. மரம் வெட்டும் விஷயம் தெரியாதவர்கள் அந்த வழியே போகும்போது வாயில் கை வைத்து போனார்கள். உச்சுக்கொட்டியும் போனார்கள்.

     அன்று மழை பெய்தது. இயற்கை அழுகிறது என்று எல்லாம் பேசிக்கிட்டாங்க. மரம் இருந்த இடத்தில் குழி இருந்தது. சிறிதாக மழை தண்ணீரால் நிரம்பியது. சின்ன மம்பட்டி வைத்து சாரதாம்மாவும் நானும்  குழியை மூடினோம்.

  இரண்டு நாள்,மூன்று நாள்,பத்து நாள் கழிந்தது. மழையும் பொழிந்தது. மரம் இருந்த சுவடு மறைந்தது. சாதாரண இடமாக மாறியது. அந்த மரத்தின் காற்று இல்லாத இரவை கடக்க அந்த மக்கள் பழகி விட்டார்கள்.

     ஒரு குருவி வந்தது.வழக்கம் போல் இளப்பாரிவிட்டு போகலாம் என நினைத்து மரம் நோக்கி தரை இறங்கியது. மரத்தைக் காணோம்???. தவறான இடத்தில் தரையிறங்கி விட்டோமோ என நினைத்தது. 

                கூவியது….

   சத்தமாக கூவியது. (அழுதது என்றும் எடுத்துக் கொள்ளலாம்) கழுத்தைத் திருப்பி திருப்பி கூவியது.

     அணில்களின் அழுகை சத்தம் கேட்டு கூவிக்கொண்டே பக்கத்தில் இருந்த பூவரச மரத்தை நோக்கி பறந்தது. 

 000

  எனது பெயர் கார்த்திக் வாசன். சேலம் மாவட்டத்தில் GST Practitioner ஆக பணி புரிந்து கொண்டிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே வாசிப்பின் மேல் ஏற்பட்ட சிறு ஆர்வம் என்னை கடந்த 2016 – ல் இருந்து நிரந்தர வாசிப்பாளனாக மாற்றி இருக்கிறது. மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களிலும் நான் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகம் செய்யும் விதமாக அறிமுக கட்டுரைகளையும் பதிவு செய்து  கொண்டிருக்கிறேன். தீவிர வாசகனாக இயங்கி கொண்டே சிறுகதை,கவிதை,சிறார் கதைகள் போன்றவற்றை எழுதி கொண்டிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *