முகூர்த்த நாட்கள் நெருங்குகிற போது எங்களது பக்கத்து வீடு எப்போதும் பரபரப்பாகிவிடும். அவர்களுடைய வீட்டில் உள்ள கைத்தறி ஓசை நாளெல்லாம் ஓயாது இயங்கிக் கொண்டே இருக்கும். வீட்டுப் பெண்களுக்கும் அந்த நாட்களில் வேலை அதிகமாக இருக்கும். முகூர்த்தப் புடவைகளுக்கு டிசைன் போடுவது ஒரு கலை. பெரும்பாலும் ஆண்கள் தான் இதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். பெண்கள் நூலை உலர்த்தவும், நூலில் தூசி எடுக்கவும், சாயம் ஏற்றும் வேலையிலும் ஈடுபடுவார்கள். தறி நெசவில் டிசைன் போடுவதென்பது எளிதல்ல. பல நுணுக்கங்களும், வேலைப்பாடுகளும் பயிற்சிகளும் அதிகம் தேவை. ஜரிகையின் தரத்திற்கும் அதன் வேலைப்பாட்டிற்கும் ஏற்ப புடவையின் விலை நிர்ணயம் செய்யப்படும்.
நெசவு தொழிலைச் சார்ந்தவர்களுக்கு வருமானம் என்பது நிரந்தரம் அல்ல. ஆர்டர்களுக்காக முதலாளிகளை ஏஜெண்டுகளை நம்பி வாழ்கிற நிலை. பட்டு நெசவு உற்பத்தி சங்கங்கள் செயல்பட்டாலும் இன்றைய சூழலில் நெசவு தொழிலாளிகளின் சிக்கல்களை அரசிடம் எடுத்துச் சொல்லும் தீவிர அரசியல் குரல் அற்ற அமைப்பாக இன்று காணப்படுகிறது. காரணம் நெசவு குடும்பத்தின் வலிமையான ஒன்றாக இருந்த “கூட்டுறவு குடும்ப அமைப்பு” முறை சிதைந்து போனது.
காந்தியின் கதர் இயக்கத்தின் போது இச்சமூகம் அரசியலில் தீவிரமாக பங்கேற்றது. சுழல் இராட்டையை இவர்கள் தங்களது அடையாளமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் காந்தி நடத்திய கதர் இயக்கத்துடன் தங்களது குடும்பம், அல்லது தங்கள் முன்னோர்களின் பெருமைகளை நினைவுகொள்வதோடு ஆசுவாசம் தேடிக் கொள்கிறார்கள்.
தமிழ் நாட்டில் நெசவு தொழிலைச் சார்ந்த சமூகத்தினரில் தேவாங்கர் செட்டியார், மற்றும் சௌராஷ்டிரர்கள் முக்கியமானவர்கள். மக்கள் எண்ணிக்கையில் இவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் பரவி வாழ்கிறார்கள். இந்த இரு சமூகத்தினரின் பண்பாட்டு விழுமியங்கள் பிற சமூகங்களில் இருந்து மாறுபட்டது. பெரும்பாலும் பெண் தெய்வ வழிபாடு கொண்டவர்களாக இருக்கின்றனர். தேவாங்கர் செட்டியார் தமிழையும், கன்னட மொழியையும் தாய்மொழியாகக் கொண்டவர்கள், சௌராஷ்டிரர்கள் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். என்றாலும் 10 மற்றும் 11ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மத மோதல்களின் காரணமாக தென்னகம் புகுந்தனர் என வரலாறு சுட்டிக் காட்டுகின்றது.
கன்னடம், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் குடியேறி வாழ்ந்தாலும் அந்த பகுதிகளில் உள்ள பண்பாட்டுடனும், மொழி மற்றும் கலாச்சாரத்துடனும் ஒன்றி வாழவேண்டிய சூழலில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டும், தங்களுக்கு உரிய அடையாளத்தோடும் தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதிலும் சமூக மற்றும் அரசியல் ரீதியாக சில சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேற்கண்ட நெசவு தொழிலை மையப்படுத்தி நவீன இலக்கிய வடிவில் பட்டு நெசவு தொழிலைச் சார்ந்தவர்களின் வாழ்வியலை இலக்கியமாக படைத்தவர்களில் முதன்மையானவர் மணிக்கொடி எழுத்தாளராக அறியப்படும் எம்.வி.வெங்கட்ராம் குறிப்பிடத்தக்கவர்.
அவருடைய நித்திய கன்னி, காதுகள் போன்ற நாவல்கள் புராணத்தின் மீது கட்டமைக்கப்பட்ட புனைவிலக்கியமாக இன்றும் அடையாளப்படுத்தப்படுகின்றன. அவருடைய தீவிர எழுத்தின் தன்மை அவருக்குப் பின்னால் எழுத வந்தவர்களின் எழுத்து நடையில் பாதிப்பை ஏற்படுத்தியதை பாரக்க முடியும்.
மொழிச் சிறுபான்மையினரான சௌராஷ்டிரர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி புனைவிலக்கியமாக அச்சமூகத்தின் சிக்கல்களை “வேள்வித் தீ” நாவலின் மூலம் எம்.வி.வெங்கட்ராம் வெளிப்படுத்த முயன்றுள்ளார்.
நாவலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணன் கும்பகோணத்திற்கு அருகே துவரங்குறிச்சியை வாழ்விடமாகக் கொண்ட சௌராஷ்டிர நெசவு குடும்பத்தில் உள்ள வழக்கப்படி தறிகட்டைக்கு கால் எட்டியதும் எட்டாம் வகுப்போடு படிப்பிலிருந்து விலக்கி தறித் தொழிலுக்கு கொண்டுவரப்படுகிறான். தனது புத்தி கூர்மையாலும் திறமையாலும் தறியில் “சிகிடா” நாடா போடுவதிலிருந்து மெல்ல மெல்ல புடவையின் உடல் பகுதியை நெய்ய கற்றுக் கொள்கிறான். கண்ணனின் திறமை புது ஜரிகைப் பேட்டுகளுக்கு டிசைன் போடுவதில் தெரிகிறது.
குடும்பத்தில் தந்தையின் மறைவுக்குப் பிறகு கண்ணனின் அண்ணன்கள் குடும்பச் சுமையிலிருந்து தங்களை விலக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சொத்துக்களோடும், உடமைகளோடும் பிரிந்து விடுகின்றனர். அவர்களுடன் வாழக்கையை கழிக்க முடியாமல் தடுமாறும் கண்ணனின் தாய்க்கு மருமகளுடன் ஏற்பட்ட பிணக்குகள் சண்டைகள் சச்சரவுகள் சங்கடங்களை ஏற்படுத்த, இச்சூழலில் சொந்த ஊரான துவரங்குறிச்சியை விட்டு கண்ணன் தனது தாயாரோடு கும்பகோணம் நகரப்பகுதிக்குத் தனிக்குடித்தனம் செல்கிறான்.
கண்ணன் வீட்டை விட்டு வெளியேறுகிறபோது ஒரு நாடாவோ கோலோ எதுவும் கையில் கொண்டுவரவில்லை. கும்பகோணத்திற்கு குடியேறும் முன்பே “முழு தறிக்காரனாகி” விட்ட கண்ணன் வாழ்வில் எத்தகைய சூழலையும் சவால்களையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிற பக்குவ நிலைக்கு வந்துவிடுகிறான்.
கூட்டுக் குடும்பத்தை விட்டு வெளியேறிய கண்ணன் தனது தொழிலை ஜவஹர்-அண் கோ விலிருந்து தொடங்கி குறுகிய காலத்தில் புடவைக்கு ஜரிகை போடுவதில் கும்பகோணம் வட்டாரத்தில் புகழ் பெற்றவனாக அறியப்படுகிறான். “எவ்வளவு பெரிய ஜரிகையைப் போட்டாலும் நோட்டமாக” நெய்யும் கண்ணனின் திறமையை கீழத்தெரு ராமசாமி என்கிற பெரிய ஜவுளி உற்பத்தியாளர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சொற்ப கூலிக்கும் கடனுக்கும் நெய்வதிலிருந்தும் விடுபட்டு ஜவஹர் அண் கோ விலிருந்து வெளியே வரும்படியும், ராமச்சந்திர தெருவில் தனக்கு சொந்தமாக இருக்கிற வீட்டையும் அதில் உள்ள இரண்டு தறிமேடைகளையும் ஒப்பந்தத்திற்குத் தருவதாகவும் இலாபத்தில் சேலைக்குப் பத்து ரூபாய் லாபம் என கண்ணனுக்கு வேண்டியவற்றையும் செய்து தருவதாக அழைப்பு விடுக்கிறார்.
இது கண்ணனின் திறமை மீதும் வேலையின் மீதும் இருக்கிற ‘மவுசு’
கண்ணனுக்கு ஒப்பந்தத் தறி கிடைத்ததில் மகிழச்சி. இரண்டு தறி மேடைகளில் ஒன்றில் தானும், மற்றொரு தறிக்கு வேறொரு ஆளையும் போட்டுக் கொண்டால் கொஞ்ச நாளிலே பண கஷ்டமும், அண்ணன்களோடு தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பு உள்ளிட்டவைகளை போக்கிக் கொள்ளலாம் என்கிற கணக்கு. அதன்படி மற்றொரு தறிமேடைக்கு தொழிலும், நாணயமும் தெரிந்த ஆளை தேடிவந்த வேளையில் மற்றொரு நெசவு தொழிலைச் சார்ந்த தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த சாரநாதனின் நட்பு கண்ணனுக்கு கிடைக்கிறது.
சாரநாதன் நெசவு தொழிலில் நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கற்றவனாக இருந்தாலும், ஜவுளி வியாபாரத்தில் பற்று வரவு கணக்குகளில் அனுபவம் உள்ளவன். கணக்கு வழக்குகளில் கண்ணனை விட ‘துல்லியம்’ கடை பிடிப்பவன். இந்த குணநலனே கண்ணனின் எல்லாவித வளர்ச்சிகளுக்கும் முக்கிய காரணிகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
இதை பொதுவாகவே நெசவு தொழில் குடும்பம் மற்றும் சமூகத்தில் நிலவிய ‘கூட்டுறவு’ வெளிப்பாட்டின் விளைவாக பாரக்கலாம். அன்றைய காலத்தில் சில தொழில்களை “கூட்டுக் குடும்பம்” என்கிற கூட்டுறவு அமைப்பின் வழியாக சமூக கட்டமைப்போடு செயல்படுத்தினர். அதில் நெசவு மற்றும் விவசாயம் தொழில்கள் இந்த கூட்டுறவு அமைப்பை தங்கள் குடும்பத்திற்குள் கட்டமைத்திருந்தனர். இந்த முறை அக்குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைக்கு பலம் கூட்டியது.
சாரநாதன் முன்னேற்றக் கழக அபிமானியாகவும், ஸ்டிரைக் போராட்ட காலங்களில் ஜவுளி முதலாளிகளுக்கு எதிராக நெசவாளர்களை அணி திரட்டுகிறவனாகவும் நெசவு தொழிற்சங்கத்திற்கு பிரச்சாரகனாகவும் செயல்படுகிறான்.
சாரநாதனின் இப்போக்கு ஜவுளி முதலாளிக்கு பிடிக்கவில்லை. கண்ணனும் தொழிற்சங்கத்தில் பங்கெடுக்கிறவனாக இருந்தாலும், முதலாளிக்கு சிக்கல்கள் ஏற்படுகிற போது போராட்டங்களில் “நடுநிலை” வகிக்கும் முடிவுக்கு தள்ளப்படுகிறான்.
கண்ணனின் இந்த நிலைப்பாடு சாரநாதனுக்கு உறுத்தலாகவே இருக்கிறது.
ஆனால் கண்ணன் தொழிற்சங்கவாதியாக இருந்தாலும் நெசவு தொழிலின் சந்தை நிலவரமும் சிக்கல்களும் அறிந்திருந்தாலும், முதலாளிகளின் இலாபம் மற்றும் நட்டங்களை புரிந்து கொண்டு சூழலுக்கு ஏற்ப சங்கத்தில் தொழிலாளி வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்கம் என இருதரப்பினரிடமிருந்தும் விலகியே நிற்கிற நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருப்பது நாவலை முதலாளி – தொழிலாளி இடையிலான சிக்கலை பேசும் நாவலாக மாற்றாமல் பிரச்சாரத் தன்மையில் இருந்து விலக்கி கவனத்தோடு முதலாளி மற்றும் தொழிலாளி இடையிலான சிக்கலை நேர்த்தியாக கையாண்டிருப்பதை நாவலின் உரையாடல்கள் மூலம் உணரமுடிகிறது.
“மூலதனம் போட்டு, லாபத்துக்காக தொழில் செய்கிறவர்; அவர் செய்வது நியாயம்.” என்று ஆரம்பத்தில் நினைத்தான். (ப-39)
“ஆயிரம் இருக்கட்டும்; ஆதரவில்லாமல் அலைந்த எனக்கு அடைக்கலம் கொடுத்தவர் அவர்தான். அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது” (ப-39) என்கிற எண்ணமும் கண்ணனின் மனதில் இருக்கவே செய்கிறது.
ஜவுளி தொழில் எப்போதும் சீரான நிலையான வர்த்தகம் கொண்டது இல்லை. ஒரு சீஸன் எதிர்பாராத இலாபத்தையும், மற்றொரு சீஸன் ஜவுளி தொழிலை நட்டத்திற்கும் தள்ளும். தொழிலில் மந்தம், அல்லது இடர் ஏற்படுகிற போது பெரிய முதலாளிகள் தங்களுடைய ஜரிகைகளை அடகு வைத்து தற்காத்துக் கொள்கிற நிலையும் உண்டு. அத்தகைய சூழ்நிலையில் தறியை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் நிலை அவர்களின் குடும்பம் பஞ்சத்திற்கும் வறுமை நிலைக்கும் தள்ளப்படுகிற சூழலில் வாழ்க்கை அவலநிலைக்கும் கீழேதான் என்கிற சூழல்.
“இந்த முதலாளிய நீங்க அளவுக்கு மீறி நம்புறீங்க. பாக்கிப் பேருக்கெல்லாம் பணம் கொடுக்கிறார். உங்களுக்கு மட்டும் ஏன் கொடுக்கல்லே?. நம்ம கையிலே தொழில் இருக்கு. எங்கே போனாலும் பிழைக்கலாம். இந்த முதலாளிக்கு முழுக்குப் போட்டாத்தான் நமக்கு நல்ல காலம்” என சாரநாதன் ஜவுளி முதலாளியான ராமசாமியைப் பற்றிச் சொல்கிற போதும், கண்ணன் முதலாளியின் நிலையையும், அவருடைய நெருக்கடி நிலையையும் புரிந்து கொண்டு சாரநாதனின் கோபத்தை தணிக்கவும் அவனது மனதை தடுமாற்றத்திலிருந்து திசைதிருப்பும் வகையில் தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறான்.
கண்ணன் தன் சொந்த முயற்சியால் உழைப்பால் தான் குடியிருக்கும் வீட்டை குறைந்த விலைக்கே வாங்கிக் கொள்கிறான். தறியும் சொந்தத்திற்கு வந்துவிட்டது. இது அவனுடைய வாழ்நாள் லட்சியம் நிறைவேறுகிற தருணம். அப்போதும் கண்ணனின் மனம் தடுமாறவில்லை. தனக்கிருக்கும் கடமை, பற்று ஆகியவற்றை உணர்ந்தே வந்திருக்கிறான். இச்சூழலில் அவனுடைய மற்றொரு இழப்பு தாயின் மரணம் நிர்கதியான நிலைக்கு அவனை தள்ளிவிடுகிறது.
தனக்குத் துணை தேவை என்ற எண்ணம் கண்ணனுக்கு மேலோங்க கௌசலையுடன் திருமணம் ஏற்பாடாகிறது.
நாவலில் இரண்டு முக்கிய பெண் கதாபாத்திரங்கள் கண்ணனின் மனைவி கௌசலை மற்றும் இளம் வயதில் கணவனை இழந்தவளான கௌசலையின் தோழி ஹேமா.
கௌசலையின் அழகை ஆதூரமாக தனக்கேயுரிய ரசனையோடும், இளமைக்கால ஏக்கத் தவிப்போடும் கண்ணன் ஆள்கிறான். கௌசலை கட்டுப்பெட்டித் தனமாக வளர்க்கபட்ட வெள்ளந்தியான பெண். எதையும் நேர்மறையாக அணுகும் சுபாவம். அதுவே அவளுடைய வாழ்க்கையின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
ஹேமா வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள். திருமணம் நடந்த சில நாட்களிலேயே கணவனை பறிகொடுத்துவிடுகிறாள். அவளுக்கு அன்பும் அரவணைப்பையும் தன்னைப் புரிந்து கொள்கிற கௌசலையிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என எண்ணுகிறாள்.
முக்கிய கதாபாத்திரங்களான கண்ணன்- சாரநாதன். கௌசலை – ஹேமா ஆகிய பாத்திரங்களை இரு பகுப்பாக பதலீடு செய்து பார்க்க முடியும்.
கண்ணனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை புறச் சிக்கல்களோடும், அகச் சிக்கல்களோடும் கொண்டவையாக இரு பிரிவாக அணுக முடியும்.

1. புறமும் புறச் சிக்கல்களும்
கண்ணனின் புறவுலகைச் சூழ்ந்து பயணிக்கும் சாரநாதன், ஜவுளி முதலாளி ராமசாமி.
கண்ணனின் திறமையை நன்கு அறிந்து தன்னுடைய லாபத்துக்காக பயண்படுத்திக் கொள்கிற ராமசாமி “இலாபத்தில்” பங்கு கொடுப்பதில் மோசடிப் பேர்வழி. மேலும் ஜவுளி சந்தையில் போலியை சந்தைக்கு விட்டு கொள்ளை லாபம் பார்க்க தனது அதிகாரத்தைக் கொண்டு சூழ்ச்சி செய்கிற கதாபாத்திரம்.
உழைப்பையும் அதன் மதிப்பையும் நன்கு அறிந்து கொண்ட தொழிற்சங்கவாதியும் பாட்டாளிவர்க்கப் பார்வையுடைய முன்னேற்றக் கழக அநுதாபியான சாரநாதன். கண்ணனின் ஒவ்வொரு படிநிலையான முன்னேற்றத்தின் போதும் பொறாமை கொள்ளவே செய்கிறான்.
கண்ணன் தன் சொந்தத்திற்கு வீட்டை ஏற்படுத்திக் கொள்வது முதல் மழைக்காலத்தில் கண்ணனின் வீட்டு மதில்சுவர் இடிந்து தறிமேடை பாழாகிப் போகிற நெருக்கடியான சூழலில் கண்ணன் இனி மேலே ஏறி வரமுடியாது. என எண்ணுகிறது. மாறாக கண்ணனின் வீழ்ச்சியை அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற துரோகத்தின் மொத்த உருவமாக மாறி நிற்கும் சாரநாதன் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் கண்ணனை விட்டு விலகும் முடிவுக்கு சாரநாதன் வருகிறான். இனி தான் சொந்தத்தில் தறி போட்டுக் கொள்ள இருப்பதாகவும் அதற்கு ஜவுளிகளை கடனுக்கு கொடுக்கும்படியும் சில ஜவுளி முதலாளிகளிடம் கண்ணனைப் பற்றியும் அவனுடைய மோசமான சூழலையும் முதலாளிகளிடம் சொல்லி “உன் பாக்கியைச் சீக்கிரமா வசூல் பண்ணகிக்கோ” என ஜெயராமையரிடம் சாரநாதன் கையாள்கிற உத்தி “துரோகம்”. என்பதாகத் தான் கருதமுடியும்.
இது கண்ணனின் புறவாழ்வுக்குச் சிக்கலாக மாறுகிறது.
2. அகமும் அகச் சிக்கலும்:
கண்ணனின் மனைவி கௌசலை, அவளது தோழி ஹேமா.
இவ்விரு கதாபாத்திரங்களும் கண்ணனின் தனிப்பட்ட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியவைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
தாயை இழந்த கண்ணனுக்கு இல்வாழ்க்கையில் மனைவியின் ஸ்தானத்தில் இருந்து ஒரு ஆணுக்கு எல்லாவிதமாகவும் சரிபாகமாகவும் கலந்துவிட்ட ஒரு பெண்ணாக கௌசலை.
கௌசலையின் வருகைக்குப் பிறகுதான் ஒரு முழு மனிதனாக கண்ணன் வெளிப்படுகிறான். உழைப்பும், திறனும் இருக்கிற கண்ணனுக்கு வாழ்வில் கஷ்ட காலங்களிலும் சரி, மகிழ்ச்சியான காலங்களிலும் சரி அவனுடன் உறுதியான நிலைப்பாட்டுடன் எல்லாவற்றிலும் நிற்கும் பெண்ணாக இருக்கிறாள்.
எதிர்பாரா சுழலில் வாழ்வில் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்ட இளம் விதவையாக நிற்கும் ஹேமா புக்ககத்திலிருந்து வெளியேறி, பிறந்தகத்தின் ஆதரவும் இன்றி மெல்ல மெல்ல சமூகத்தின் மகிழ்வான சூழலையும் விட்டு விலகிச் செல்கிறாள். இந்நிலையில் தனக்கு நட்பு ரீதியில் அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் தருகிற கௌசலையையும், அவளது குழந்தை ராஜியையும் தனது நிழலென தேடிச் செல்கிறாள்.
இது கண்ணனின் அக வாழ்க்கையில் உறவுச் சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது.
தனக்கு உரிமையான கண்ணனை மற்றொரு பெண் அபகரித்துக் கொள்கிற எதிர்பாரா நிகழ்வு ஒன்று நடந்தபின் அந்த அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்க முடியாது போகவே கௌசலை தண்டிப்பதற்காகவே? ( யார் யாரை? ) மரணத்தைத் தேரந்தெடுத்துக்கொள்கிறாள். இது பிறரை தண்டிப்பதற்காக தன்னை மாய்த்துக் கொள்ளகிற சராசரி கோழையின் முடிவாக பார்க்கலாமா?
கட்டுப்பெட்டித் தனமாக வளர்க்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கண்ணனோடு எல்லாவித வாழ்வியல் சிக்கல்களையும் எதிர்கொண்டவளுக்கு கோப உணர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்தும் வழிதெரியாது தேடிக்கொண்ட தீர்வு தான் தற்கொலை.
புறவாழ்விலும் அகவாழ்விலும் ஒருசேர தனது வீழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் சூழல்நிலையில் எத்தகைய சவால்களையும் சமாளித்து நிலைபெற முடியும் என்ற நம்பிக்கையிலிருந்த கண்ணனுக்கு கௌசலையின் மரணம் குற்றவுணர்வை ஏற்படுத்த முடிந்ததே தவிர வேறெந்த பாதிப்பையும் கண்ணனின் மீது ஏற்படுத்த முடியவில்லை. ஹேமாவின் மீதான உடல் பிணைப்பை மறுதலிக்கவும் உணர்ச்சி அலைகளை கட்டுபடுத்தவும் முடியவில்லை.
தான் செய்த தவறின் விளைவாக நிறைமாத மனைவி, குழந்தை மூவரது மரணத்திற்கு காரணம் என உறுத்துவதையும் அதைக் கடக்கும் நிலையறியாது தடுமாறுகிறவனாக இருக்கும் சூழலில் கௌசலையின் இறுதி சடங்குகள் முடிந்த பிறகு கண்ணனை ஆறுதல் படுத்துவதற்கு அவனது வீட்டிற்கு வருகிறாள் ஹேமா. அப்போது, “கௌசலைக்கு நான் ஒரு துரோகமும் நினைக்கல்லே; ராஜியை என் குழந்தையாகத்தான் நினைச்சேன்.” என ஹேமா கூறுகிறாள்.
அப்போது அவன் எதிர்பார்ப்பது எல்லாம் தன் துக்கத்தையும் அழுகையையும் கிடத்துவதற்கு ஆறுதலான ஒரு மடி வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்வுகள் நுட்பமானவை. காதல், காமம், விருப்பு, வெறுப்பு, துரோகம் என அவை செயல்படும் தருணங்கள் சூழல்களைப் பொறுத்து அமைகின்றன. புறவாழ்வு, அகவாழ்விலும் உடலெனும் தூண்டு கருவியாலும், சதையோடு பிணைந்த உணரச்சிகளுக்கும் மனிதன் ஆட்படுகிறான்.
தனிமனிதனுடைய உடலும் உடல்சார் கவர்ச்சிகளும், மனம் வேண்டுகிற விழைவுகளும் உணர்ச்சிகளை “வேள்வித் தீ”யாக நாளும் வளர்க்கின்றன. இதில் தன்னை இழப்பதின் வழியே அதில் தன்னையும் தன் உணர்வுகளையும் ஆகுதியாக்குகிறான். இது படைப்பின் உச்சநிலை.
கும்பகோணத்தை மையமிட்டு தறிநெசவு தொழிலைச் செய்துவரும் கண்ணன் என்கிற தனிமனிதனின் அகப்புற வாழ்வில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுகளின் மூலம் அவனுடைய கனவுகளையும் ஏக்கங்களையும், வெற்றிகளையும் வீழ்ச்சிகளையும் துரோகங்களையும் கூட உணர்வுகளின் இழைகளைக் கொண்டு ஊடுபாவாக தறியில் நெசவு செய்வது போல எம்.வி.வெங்கட்ராம் தனது எழுத்தின் மூலம் சொற்களைக் கொண்டு உணர்வுகளை வேலைப்பாட்டுடன் நெசவு செய்கிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்கிற குடும்ப உறவுச் சிக்கல்களுக்கு பலிகடாவாக வேள்வியில் ஆகுதியாக்கப்டுகிற உணர்வெழுச்சிகளை “வேள்வித் தீ” – தீவிரமாகப் பேசுகிறது.

இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ‘மிருகத்தின் வாடை’ என்கிற கவிதைத்தொகுதி நடுகல் வெளியீடாக சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்துள்ளது.
2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.