அதிகாலை மணி நான்கை சுவர் கடிகாரம் காட்ட, தஹஜ்ஜூத் தொழுதுவிட்டு இரு கைகள் விரித்து பிரார்த்திக்கொண்டிருந்த தீனுல் ஹுதா தமது விரித்த கைகளை முகங்களில் தேய்த்து முத்தமிட்டவாறே தனது தொழுகை பாயிலிருந்து எழுந்தாள்.
பின்னர் அடுப்பங்கரைக்குள் நுழைந்து வெளுத்துப் போன எவர்சில்வர் வாளிக்குள் குடிகொண்டிருந்த முதல்நாள் வாங்கிய நோன்புக் கஞ்சி தமது மேனியில் மெல்லிய ஆடையை போர்த்தி இருந்தது..
அதனை தூக்குவாளிக்குள்ளிருந்து விடுவித்து சிறிது அடிவாங்கி இருந்த அலுமினிய பாத்திரத்துக்குள் இடமாற்றம் செய்து மும்முனைகளில் கொம்பு நீட்டிக் கொண்டிருந்த விறகு அடுப்பின் மும்முனைக் கொம்புகளில் நிற்க வைத்து, அடுப்பின் வயிற்றுக்குள் தீனியாக பொருக்கி வைத்திருந்த சுள்ளி விறகுகளை வைத்து சோடா பாட்டிலுக்குள் அடைபட்டிருந்த நீலநிற மண்ணெண்ணையை இலேசாக தெளித்து,பெட்டிக்குள் படுத்திருந்த தீக்குச்சியை உரசி பற்ற வைத்து சுள்ளி விறகின் மீது வைக்க பன்னெடுங்காலமாக உழன்று கனந்திருக்கும் அவளது இருதயத்தைப் போல் ஜுவாலை மேலெழுப்பி செங்கனலாய் பற்றி எரிந்தது..
தீனுல் ஹுதா சிலவாண்டுகளுக்கு முன்னர் ஒரு எதிர்பாராத சாலை விபத்தில் கணவனைப் பறிகொடுத்து தமது எட்டு வயது மகனுடன் சொச்ச வாழ்வை எதிர்கொள்ள வறுமைப் பிணிக்குள் போராடும் ஒரு போராளியாவாள் .
கணவன் இருந்த வரையில் அப்போதும் வறுமையின் மேற் கோட்டிற்குள் அவர்கள் வாழ்வு சீரான நிலையில் சென்று கொண்டிருந்தாலும் வயிற்றுக்கும் வாய்க்கும் ஒரு குறையுமில்லை,
கணவன் ஆபிதீன் அவளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான், அவளது பாதங்கள் புருஷனின் கரம்பிடித்தே வீட்டின் நிலைக்கதவை தாண்டிச் செல்லும்..
விதியின் விளையாட்டில் விபத்து வந்து கரம்பிடித்த கணவனைக் கூட்டிப்போக தமது வயிற்றில் விளைந்த விளையும் பயிருக்காக தமது பாதங்களை இப்போது தனிமரமாக வீட்டின் நிலைத்தாண்டி எடுத்துவைக்க வேண்டிய நிலையாகி விட்டிருந்தது..
தமது செல்லப் பிள்ளையின் பிஞ்சு உதரத்தின் வயிறு நிரைக்கவும், வாழ்வு செழிக்கவும் பல வீடுகளுக்குச் சென்று பாத்திரம் தேய்க்கவும், துப்பட்டி துணைக்காகவும் சென்று கிடைக்கும் சொச்ச பொருளாதாரத்தில் தம் மகனை படிக்க வைத்தும், உடுக்க வைத்தும் அழகு பார்த்தது மகிழ்ந்தாள்..
இந்த ரமளான் இருபதைக் கடந்து சென்று கொண்டிருக்க, இடையில் சில நாட்கள் தமது உடல்நிலை சுகவீனமானதால் முன்போல் எந்த வீட்டிற்கும் வேலைசெய்ய செல்ல முடியவில்லை.,
கறிவாங்கி சமைக்கவும் காசு தீர்ந்து, இனி பெருநாள் வரும்போதுதான் பித்ராவாக ஏதேனும் சமூக இயக்கங்களால் பொருட்கள் கிடைக்கும்,
ஆனால் இடைப்பட்ட இந்த இறுதி பத்து நாட்களை எப்படி சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு கடத்துவது..
அதுதான் இப்போது சாயுங்கால வேளைகளில் பள்ளிவாசல்களில் கொடுக்கப்படும் நோன்பு கஞ்சியே! இஃப்தார் வேளைகளில் தாயும், பிள்ளையும் உண்டதுபோக எஞ்சியது ஸஹருக்கும் என்றாகிப் போனது..
இன்றும் அப்படித்தான் எடுத்து வைத்திருந்த கஞ்சியை அடுப்பில் வைத்து இளஞ்சூடாக்கிக் கொண்டிருந்தாள் தீனுல் ஹுதா..
கஞ்சி சூடானதும் சிறிய எவர்சில்வர் தட்டைகளுக்குள் ஊற்றி, அதனோடு சிறிது அரைத்து வைத்திருந்த புளி சம்பாளும், மிச்சமிருந்த இரு சமோசாக்களையும் எடுத்து வந்து அயர்ந்து உறங்கும் தனது மகனின் தலையைக் கோதிவிட்டு முன்நெற்றியில் முத்தமிட்டு எழுப்பினாள்..
அன்னையின் ஸ்பரிசம் கண்ட அந்த பிஞ்சு பாலகனின் கண்கள் மெல்லத் திறந்தது..
“கண்ணு…என்னட அப்பாவு முழிச்ச்சிட்டீங்களா? “..
“போய் மூஞ்சி கழுவி, பல்லு வெளக்கிட்டு வர்ரீங்களா? “..
“அம்மா …கஞ்சி எடுத்து வந்திருக்கேன்பா… வாங்க ரெண்டு பேருமா சேந்து சாப்டுலாம்” …
கண்ணை கசக்கி எழுந்த மகன் ஃபைசல் அம்மாவின் கரங்களில் மெல்லிய சூட்டை சுமந்து நின்ற கஞ்சியை பார்த்ததும்.,
கண்களில் ஏமாற்றமுடன் அம்மாவை இறக்கமுடன் பார்த்து..
“இன்னக்கிம் கஞ்சி தானாம்மா” …என ஏக்கமுடன் கேட்டுவிட்டு…
“நான் நோம்பு வெக்கிறேன்லம்மா…, வேற எதனாச்சும் நல்ல சாப்பாடா இருந்தா தாங்களேன் “. என கெஞ்சும் குரலில் கரைந்ததைக் கண்டு ..
பெற்ற தாயின் உடல் பதறியது..
மகனை மார்போடு அணைத்தபடியே!!. விழிகள் நனைய…
“இன்ஷா அல்லாஹ்., வர்ற பெருநாளன்னிக்கி அம்மா உனக்கு பிடிச்ச எல்லாத்தையும் பண்ணித் தறேம்மா” …
“இப்போதக்கி அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்திருக்க இத பிஸ்மி சொல்லி சாப்பிடுவோம் வாங்க ராஜா” … என பாசத் தாயின் இதழ்கள் உரித்த கரிசனக் குரல்களுக்கு கட்டுண்ட அந்த பிஞ்சு இதயம் தமது பற்களை துலக்கச் சென்றது…
அதே நேரம்…
பள்ளிவாசலின் அருகே அமைந்திருக்கும் மண்டபத்தில் தற்போது புதிதாய் முளைத்திருக்கும் ரமளானின் கடைசி பத்து நாட்கள் கூட்டாஞ்சோற்று ஸஹர் பந்தி ஆரம்பமானது..
கேரம் விளையாட்டும், இறகுப்பந்து விளையாட்டும் ஜரூராக விளையாடிவிட்டு ஸஹர் நேரம் வந்ததும் கதைகள் பேசி சிரித்தபடியும், ஒருவருக்கொருவர் நையாண்டி செய்துக் கொண்டு வந்தமர்ந்த வசதியான வீட்டுப் பிள்ளைகளின் வாய்களுக்குள் நன்கு குழைந்த வெள்ளாட்டுக் கறியின் துண்டானது குரல்வளைகளுக்குள் அவர்களது கதைகளுக்கு நடுவே வழுக்கிச் சென்று கொண்டிருந்தது..
கண்களின் எதிரே பளபளக்கும் கறிக் கோப்பைகளுக்குள் கறிக்குருமாவும், பச்சடிகளும் அவர்களது பசியறியா வயிறுகளை நிரப்பக் காத்துக் கிடந்தது..
அங்கே!
அவர்களது வீடுகளில் இவர்களுக்காக செய்யப்பட்டு விதவிதமான பீங்கான்களில் பரத்தி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் நாளை யார் பசியும் ஆற்றப் படாமல் எச்சில் தண்ணீர் சட்டிக்குள் இடம் மாற காத்துக் கிடந்தது..
++
பாகை இறையடியான்
நிலத்தின் பல்வேறு சமூக கலப்புகளுக்குள் கலந்திருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாய், மானுட வம்சத்தின் பல்வேறு நிகழ் கலவைகளை ஒரு கலசத்திற்குள் கடைந்தெடுத்து அதில் என் மொழியாடலில் சொற்கூட்டி, சுவை கலந்து தங்கள் கண்ணுக்குள் பரிமாறி நெஞ்சுக்குள் செரிமானமின்றி நிறைந்து நிற்க படைப்புகளை பரிமாறுகிறேன்.
இயற்பெயர் அப்துல் ரஹ்மான் தந்தை பெயர் பஷீர் அஹமது (ஆசிரியர்) நாகை மாவட்டம் பாக்கம் கோட்டூர் எனும் சிற்றூரில் பிறந்தேன். தமிழ்மேலும், பிறந்த தலத்தின் மேலும் கொண்ட பிரியத்தினால் எனது பெயரை தமிழ்ப் படுத்தியும், எமது ஊரின் பெயரை சுருக்கியும் பாகை. இறையடியான் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களிலும், இதர மின்னிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
எனது சிறுகதைகள், குறுங்கதைகள், கட்டுரைகள் என விகடன் இணையத்தளம் சுமார் 50 க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதிலிபி இணையத்தளம் எனது 100’க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளது. பிரபஞ்சம் முழுக்க பரவி நிற்கும் மானுட சமூகத்தின் படிநிலைகளுக்குள் கலந்து நிற்கும் உணர்வு நிலைகளையும், சங்கதிகளையும் சகல மனிதர்க்கும் கடத்துவதே எனது படைப்புகள்.
பாசாங்குகளற்ற இந்த தமிழ் பசும் நிலத்தின் பகடைகளான மானிட குலத்தில் உலவும் சங்கதிகளும், சங்கேதங்களும், சம்பவங்களென எனது படைப்பில் தழைத்து துளிர்த்து நின்று, இந்த பகடைகளும், அவர்தம் பகடிகளும், மகுடிகளாய் மாறி வாசக நெஞ்சை கட்டுறச் செய்வதோடு, வேரற்ற மற்றும் வேருற்று கிளை பரப்பி நின்றாடும் மானுட சமூக கூட்டுக்குள் அசைந்தாடும் பல்வேறு படிநிலைகளை பேனா முனைக்குள் கடத்த முயலும் சிறு முயற்சியே எனது படைப்புகள்.