ஒரு குருவிகள்

        ——————————–

        கிணற்று விளிம்பில்

        ஒரு குருவி

        நீரின் மிசை

        ஒரு குருவி

        ஒரு குருவிகள்

        ஆச்சர்யத்தோடு

        பார்த்துக் கொண்டன

        ஒரு குருவிகள்

        ஆதுரமாக

        முத்தமிட்டுக் கொண்டன

        ஒரு குருவிகள்

        இசைத்துக் கண்டன

        ஒரு குருவிகள்

        கதைத்துக் கொண்டன

        கடைசியில்

        பிரிய மனமில்லாத

        ஒரு குருவிகள்

        சேர்ந்தே

        சிறகடித்தன

        நாளைய கனவு

        ———————————–

        ஸ்பைரோகைரோ சிதற

        ரானாஹெக்ஸாடாக்டைலாவாக

        குதித்துக் கொண்டிருந்தேன்

        நேற்று

        இன்றோ

        மாஞ்சிஃபெரா இண்டிகாவில்

        கொலம்பா லிவியாவாக

        சிறகு கோதிக் கொண்டிருக்கிறேன்

        ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸாக

        உங்கள் போர்டிகோவின் முன்

        மலர வேண்டும்

        என்பது

        நாளைய கனவு.

Mr. கன்னுக்குட்டி

————————————-

கண்ணதாசனைத் தவிர

வேறு யாரும்

கவிஞன் அல்லன்

என உறுதி மொழிகிற

நண்பருண்டு

எனக்கு

மணி 7:01pmக்கெல்லாம்

அவர் கரங்கள்

நடுங்கத்துவங்கிவிடும்

உலகின்

உயர்ந்த ‘குடி’

எனது ‘குடி’

என்பவர்

Diamond

Black  pearl பானங்களை

ஒதுக்கி

Bacardi lemon தான்

அருந்துவார்

புலி அருந்தினாலும்

ரூ135ஐ அருந்துவதில்லை

அவர் கதையில்

மிடறுகளை

உள்ளிழுக்கும் போது

பதார்த்தங்கள்

இருக்கிறதோ

இல்லையோ

இளையராஜா

பாடல்கள் அவசியம்

குறிப்பாக

அம்மா பாடல்கள்

காதல் சோக கீதங்கள்

தாரை தாரையாக

கண்ணீர் மல்க

சேர்ந்திசைப்பார்

காற்றில்

வயலின்கள்

மீட்டுவார்

போதை

தலைக்கேறிய

கணத்தில்

மணமாகி

இரு குழந்தைகளுக்கு

தாயான

அவரது “புஜ்ஜிமா” வின்

இல்லாத அலைபேசி எண்ணை

இருப்பது போல்

துழாவுவார்

“இப்படி குடித்தால்

ஈரல் கெட்டு விடும்”

என்றால்

மறுமொழியாக

” இப்படி குடிக்காவிட்டால்

இருதயம் கெட்டு விடும் “

என்பவரின்

இஷ்ட கானம்

“தண்ணித்தொட்டி தேடி வந்த

கன்னுக்குட்டி நான்… “

என்பது

குறிப்பிடத்தக்கது

புரோட்டாவின் காதல்

——————————————

சாதா புரோட்டா

ஒரு மதியத்தில்

பிரியாணியை

காதலிப்பதாக

சால்னாவிடம்

தெரிவித்தது

ரகசியத்தை மறைக்கத்தெரியாத

சால்னா

தோசைக்கல்லிடம் சொல்ல

தோசைக்கல் கரண்டியிடம்

பகிர்ந்து கொள்ள

அன்றைய அந்தியில்

சாதா புரோட்டா

கொத்துபுரோட்டாவானது

ஸ்ரீதர் பாரதி

         கவிதை சிறுகதை என தொடர்ச்சியாக இயங்கி வருபவர். மதுரையில் வசித்து வருகிறார்.

        இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்

         1.செவ்வந்திகளை அன்பளிப்பவன்

        2.கருப்பு வெள்ளை கல்வெட்டு

        3.முத்தம் சரணம் கச்சாமி

        4.அப்பாவின் குதிரை

        சிறுகதைத்தொகுப்பு “ஜெயக்கொடி”

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *