கொடைக் காலம்
முளைப்பாரியின் பச்சையமென சொலித்துக் கிடக்கிறது தெய்வத்தின் பீடம்
கொட்டுக்காரர்களின் அடிக்கேற்றபடி உடலசைக்கிறார்கள் ஊர்க்குலவான்கள்
பலிகிடாயைப்பற்றி பலவந்தமாய் இழுத்துப் போகிறான் நேர்ந்து கொண்டவன்
புழுதிகிளப்பி குதியாளம் போடுகின்றன கட்டவிழ்ந்த சேவற்பிசாசுகள்
திசைகளைத் தீப்பற்றச் செய்கிறது பெண்டுகளின் பெருங்குலவை
,
‘அம்மன்
கோயில் கிழக்காலே .. அன்னவயில் மேற்காலே ….” என உச்சஸ்தாயில்
உயிர்பிசைகிறார்
பண்ணைப் புரத்து ராசய்யா
,
பட்டுச்சேலை சரசரக்க
கல்அடுப்பில் பொங்கலிடும் கன்னியொருத்தியின் கடைக்கண் பார்வைக் கிட்டிய
காளையொருவனின் உதடுகள் “ஊதா கலரு ரிப்பன் ” என முணுமுணுக்க
உற்சாகமாய் துவங்குகிறது உலகளந்தாளின் உன்னதக்கொடை.
புலரி
———-
குளிருக்கு இதமாய் கைகளை சிக்கிமுக்கியாக்கி உரசுகிறார்
காதுகள் மறைய உருமாக்கட்டி தேநீர்க்கடைக்கு நடக்கும் நடுவயதுக்குடியானவர்
,
தள்ளாதவயதிலும் தலைநீராடி
ஒற்றைநாமத்தை செங்கீற்றென இட்டுக்கொண்டு நாச்சியார் திருமொழி இசைக்கிறாள் மூதாய்களில் ஒருத்தி
தேர்ந்த சித்திரக்காரனின் லாவகத்தோடு வாசலிட்டக்கோலத்திற்கு பார்த்துப்பார்த்து வண்ணம்தீட்டுகிறாள் வாலைக்குமரி
,
வீரமணி
KJஜேசுதாஸ்
LRஈஸ்வரி
TMசௌந்தர்ராஜன்
சீர்காழி கோவிந்தராஜன்
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்
பக்தியிசை தகடுகளால் திருவையாறாகிறது சிற்றூர்
,
காங்கேயம் காளைக்கு நீச்சல் பழக்கி குளத்தில் முங்கியெழுந்து
சிறுவர் சிறுமிகளின் விருப்பத்திற்கிணங்க கமலம் பறித்துக்கொடுப்பவனின் வதனத்தில் ஒளிர்கிறது மார்கழி
பிராது
————————–
வலப்புறமோ
கண்மாய்மண்
விழுங்கும்
இராட்சஷ
பொக்குளின்
இரைச்சல்
,
இடப்புறமோ
இடைவிடாத
தண்டவாள
இரயில்களின்
தடதடப்பு
,
ஊரார் குறைகளுக்கு
“ம்” கொட்டும்
உறக்கம் கெட்ட
வெயிலுகந்தாள்
,
யாரிடம்
முறையிடுவாள்
தன் உளக்குறையை
0
