அன்பெனும் நாய்க்குட்டி
அன்பெனும்
எனது நாய்க்குட்டியை
என்னுடன்
அழைத்துக்கொண்டு நடக்கிறேன்.
சிறு புன்னகையோடு
சிலர் அதனை கடந்துப் போகிறீர்கள்.
சிலர் பயந்து
விலகி நடக்கிறீர்கள்.
சிலரோ அதன்
வால் பிடித்து இழுக்கிறீர்கள்.
சிலர் ஏளனப் பார்வையோடு
அதனை கடந்து செல்கிறீர்கள்.
சிலர் அதன் மீது
கல்லெறிந்து விளையாடுகிறீர்கள்.
சிலர் பிஸ்கெட் துண்டொன்றை
தூர எறிந்து
அதன் ஆசையைத் தூண்டுகிறீர்கள்.
சிலர் வெறுப்பென்னும்
தங்கள் நாய்களைக் கொண்டு
அதனை பயமுறுத்துகிறீர்கள்.
,
என் நாயோ
சில சமயங்களில் பயந்து
சிறு ஓலமிட்டு பின் வாங்குகிறது.
சிலரைப் பார்த்தால் மட்டும் உறுமி
பெருங்குரலெடுத்து குரைக்கிறது.
புன்னகைத்தவர்களிடம்
ஆசையாய் வாலாட்டுகிறது.
சிலரை உற்சாகத்தில்
பிறாண்டுகிறது.
சிலரிடம் மட்டும்
தன் நாவால்
அவர்கள் முகத்தில்
நக்கிக் கொடுக்கிறது.
சிலரைக் கண்டும்
காணாதது போல்
தனது
எலும்புத் துண்டை
கடித்துக் கொண்டிருக்கிறது.
பல நேரம்
மனிதர்களைப் பற்றி
புரியாமல்
வால் சுருட்டி
தலை கவிழ்ந்து
அமைதியாய்
வீட்டின்
மூலையில் சென்று
படுத்துக் கொள்கிறது.
திறந்த படி இருக்கும்
அதன் கண்களில் பிரதிபலிக்கிறது
ஏக்கத்தின் ஒளி.
00

ஸ்ரீதேவி மோகன் M.A., M.phil.,B.Ed.,
முன்னாள் பத்திரிகையாளர்.
நிராகரித்தலின் கனவு (சிறுகதைத்தொகுப்பு) மற்றும் தமிழ்ப் பெண் படைப்பாளிகள் – நினைவலைகளும் நேர்காணல்களும் (கட்டுரைத்தொகுப்பு) நூல்களின் ஆசிரியர்.

