அமெரிக்காவில் அது ஒரு கோடைக்காலத்தின் ஆரம்பம். இதுவரை வெளியே வர இயலாத மக்களுக்கு திருவிழா ஆரம்பம். குளிர்கால உறைபனியெல்லாம் கறைந்து போய், எல்லாமே பளிச்சென்று தெரிந்தது.
நான் எல்க் குரோவ் கிராமத்து காவல் நிலையத்தில், ஒரு சிறிய அறையில் அமர்ந்திருந்தேன். என்னை விசாரணை செய்தவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் போல் தோற்றமளித்தார். கேமராவின் முன்பு அமர வைத்தார். நான் பேசுவதை ரெக்கார்ட் செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
மிக எளிமையான சற்றே உடைந்த ஆங்கிலத்தில், ‘என்னுடைய பெயர் ஜான். அன்று அந்த சிவப்பு நிற ஃபோர்டு வண்டியை ஓட்டியவர் நீங்கள் தானே?’ என்றார். ‘ஆம்’ என்றேன். ‘நீங்கள் வெளிவரும் போது, அங்கு நின்றிருந்த பச்சை வண்ண ஃபோர்டு காரின் மீது மோதினீர்களா?’ என்றார். ‘ஆம். ரிவர்ஸ் எடுக்கும் போது, தெரியாமல் மோதி விட்டேன்’ என்றேன். ‘ஏன் வண்டியின் ஓனருக்குத் தெரிவிக்கவில்லை?’ என்றார். ‘இடித்ததே தெரியாததால், தெரிவிக்கவில்லை’ என்றேன். ‘விசாரணை முடிந்தது. குற்றத்தை ஒப்புக் கொண்டதால், 75 டாலர் அபராதம் விதிக்கிறேன். சிகாகோவில் உள்ள நீதிமன்றத்தில் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகி, அபராதத்தை கட்ட வேண்டும். சில ஓட்டுநர் டிரெய்னிங் கிளாஸ்களை அட்டெண்ட் செய்ய வேண்டும்’ என்றார். சற்றே சுதந்திரமாக சுவாசித்தேன். பெரிய பாரம் குறைந்தது போலிருந்தது.
எப்படி இங்கு வந்து சேர்ந்தேன் என்பதற்கு முன்பு, லைசென்ஸ் வாங்கிய கதையைப் பார்ப்போம்.
அமெரிக்கா வந்தவுடன் ஹூஸ்டனில் தான் வாசம். இங்கு வந்திறங்கும் அனைவருக்கும் முதல் இரண்டு வேலைகள், ஒன்று எஸ்எஸ்எண் வாங்குதல் மற்றும் இரண்டு கார் ஓட்ட லைசென்ஸ் வாங்குதல்.
நண்பர்கள் மூலம் டிரைவிங் கற்றுக் கொள்ள ஒரு டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்தேன். இங்கும் வட இந்தியர்கள் அதுவும் குஜராத்திகள் அதிகமாக டிரைவிங் கற்றுக் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
குறைந்த பட்சம் ஐந்து பேரை ஏற்றிக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட சாலை வழியாக, ஆளுக்கு ஒரு மைல் தூரம் ஓட்ட விடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு நாற்பது டாலர்கள். பக்கத்தில் அமர்பவருக்கும் ஒரு பிரேக் இருக்கும். இப்படியாக தினமும் ஓட்டிக் கற்றுக் கொண்ட எனக்கு, லைசென்ஸ் கிடைக்கவேயில்லை. முதல் முறை முக்கியமான இடத்தில், பிரேக் பிடிக்காமல் விட்டதால் பெயில். அடுத்த முறை, கண்ணாடிகளைச் சரியாக பார்க்கவில்லை என்பதால் பெயில். இப்படியாக ஹூஸ்டனில் இருக்கும் வரை, லைசென்ஸ் கிடைக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.ஆயிரம் டாலர்கள் நஷ்டம்.
புராஜெக்ட் எதுவும் கிடைக்காததால், வேறு எம்ப்ளாயர் மாற்றிக் கொண்டு, சிகாகோ வந்த பின்னர், இரண்டாம் முறையாக, சரியான இடத்தில் பிரேக் பிடித்து, சைட் மிர்ரர் மற்றும் பிரண்ட் மிர்ரர் சரியாக பார்ப்பது போல நடித்து, ஒரு சுற்றுப் போய் வந்த பின், கடவுள் அருளால், ரிவர்ஸ் பார்க்கிங்கோ இல்லை பேர்ளல் பார்க்கிங் இல்லாமல், நேராக பார்க்கிங் செய்யச் சொன்னதால், ஆப்பிரிக்கன் அமெரிக்க பெண் இன்ஸ்பெக்டர் நீங்கள் பாஸ் என்றதும், காற்றில் பறப்பது போல இருந்தது.
இப்போது மீண்டும் எதற்காக பைன் கட்டச் சொன்னார் என்ற கதைக்கு வருவோம்.
உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து, அறுவை சிகிச்சைக்குப் பின்னர், பாலோ அப் செய்ய, எல்க் குரோவ் கிராமத்தின், அலெக்ஸியன் பிரதர்ஸ் மருத்துவமனை செல்ல வேண்டி இருந்தது. அறை நண்பர் ராஜு ஒரு முறை, ‘எதுக்கு பஸ்ஸில் பயணம் செய்து கஷ்டப்படறீங்க? கார் எடுத்துக் கிட்டுப் போங்க’ என்றார். வரும் கஷ்டங்களை யோசிக்காமல் நானும் சரி என்று சொல்லி, அவரின் ஃபோர்டு காரை எடுத்தேன்.
நாற்பது மைல்களைத் தொட்ட போதே எனக்கு கண்ட்ரோல் இல்லாதது போலிருந்தது. பிரேக் பிடிப்பேனா என்று சந்தேகமாக இருந்தது. இடையில் ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கிற்கு நிற்காமல் சென்றேன். நல்ல வேளையாக டிராஃபிக் மிகவும் குறைவாக இருந்தது. மற்றோரு பெரியவரை முந்தியபடிச் சென்ற போது அவர் கண்களில் பயம். மன்னிப்பு கேட்கும் விதமாக கையை அசைத்துப் பயணத்தைத் தொடர்ந்தேன்.
ஒரு வழியாக எந்த சேதமும் இல்லாமல் மருத்துவமனையை அடைந்தேன். பாலோ அப் என்பதால் விரைவில் முடிந்தது. அதே மாத்திரைகள். மீண்டும் அடுத்த மாதத்தில் ஒரு பாலோ அப்.
வெளியே வந்து பார்த்தால் நிறைய கார்கள் பார்க்கிங்கில். நான் வந்த காரின் இரண்டு புறமும் கார்கள். சாவியைத் திருகியதும் வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கையில் ஏதோ தடுப்பது போன்ற உணர்வு. வண்டி வரவில்லை. திரும்பிப் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை. ஆக்ஸிலேட்டரை அழுத்தி வண்டியை வெளியே எடுத்து, சீரான வேகத்தில் தவறேதும் செய்யாமல் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த நாள் வேலைக்கு வந்து விட்டேன். இந்த சமயத்தில் வர்ஜுனியாவில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
இரண்டு நாட்களில் ராஜுவிடமிருந்து போன் வந்தது. எல்க் குரோவ் கிராமத்து காவல் நிலையத்தில் யாரோ புகார் அளித்திருப்பதாகவும், தான் அங்கு செல்லவேயில்லை என்றும் சொல்ல, எனக்குள் இருக்கும் அரிச்சந்திரன் விழித்துக்கொள்ள, ‘ராஜூ, அன்னக்கி நான் மருத்துவமனைக்கு ஒங்க கார் எடுத்துட்டுப் போயிருந்தன்’ என்றேன். ‘நான் சொல்லிடறேன். வரச்சொன்னா, கொஞ்சம் வந்துட்டுப் போங்க’ என்றார். ‘சரிங்க’ என்று சொல்லிய பிறகுதான், காவல்துறை அதிகாரியின் சந்திப்பும் பைனும்.
கோர்ட்டில் பைன் கட்டச் சொல்லி செய்தி வந்தது. மீண்டும் விடுமுறை. சிகாகோ பயணம். இது எல்லாம் சொந்த செலவில் சூன்யம்.
இந்தப் பயணத்திற்கு முன்பு நான் சேதப்படுத்திய காரின் உரிமையாளர் விவரங்களை ராஜூ விசாரித்து வைத்திருந்தார். அட்டர்னியிடம் விசாரித்ததில், அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட் செய்வது பெஸ்ட் ஆப்ஷன் என்றார். உரிமையாளர் ஒரு இந்தியர். என்னைப் போன்றே வேலை செய்யும் விசாவில் வந்திருந்தார்.
கீறல்களை ஸ்கேன் செய்து அனுப்பி இருந்தார். அந்தளவுக்கு ஆழமான கீறல் எதுவும் இல்லை.
அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். ‘சார், கீறல் அந்தளவுக்கு ஆழமாக இல்ல சார். டிங்கரிங் செஞ்சி பெயிண்ட் பண்ணாப் போதும் சார். எவ்வளவு செலவாகுன்னு சொன்னாக் குடுத்துடறன் சார்’ என்றேன்.
‘மெக்கானிக்குக்கிட்ட ஏற்கனவே காமிச்சிட்டன். கொறஞ்சது அஞ்சாயிரம் டாலர் ஆவும்’ என்றார்.
‘சார், நானும் ஹெச் ஒன் பி விசாவுல தான் இருக்கிறன். இன்னமும் என்னோட ஒய்ப்புக்கு விசா கெடக்கல. ஏகப்பட்ட செலவு. கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க’ என்றேன்.
‘இல்ல சார், அஞ்சாயிரத்துக்குக் கம்மியா முடியாது’ என்று சொல்லி விட, சேமிப்பில் இருந்து அநியாயமாக ஐந்தாயிரம் டாலர்கள் அவுட். மனசெல்லாம் ரணம். இந்தியாவிலிருந்த மனைவியிடம் ஆயிரம் டாலர்கள் என்று பொய் சொன்னேன்.
அடுத்த நாள் காலை சீக்கிரம் ரெடியாகி ஒரு டாக்சி பிடித்து சிகாகோ டவுன்டவுன் சென்றேன்.
மிகச் சிறப்பான கலை நயத்துடன் கூடிய ஒரு கட்டிடத்தில் கோர்ட் இயங்கியது.
இரண்டாம் தளத்திற்கு லிப்ட்டில் சென்றேன். என்னைப் போன்றே பலரும் வந்திருந்தனர். சற்று நேரம் கழித்து, ஜட்ஜ் வந்தார். அவர் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆப்ரிக்க அமெரிக்கப் பெண். மிகவும் பருமனாக தலையில் சாயமடித்திருந்தார். பார்க்க சற்று பயமாக இருந்தது.
மூன்றாம் நபராக எனது பெயர் அழைக்கப் பட்டது.
எழுந்து ஜட்ஜின் முன்பு நின்றேன். மிகவும் நடுக்கமாக இருந்தது. சற்று புரியாத அக்சென்ட்டில், கேள்வி வந்தது. ‘உங்களது பெயர் கண்ணன் விஸ்வகாந்தியா?’ என்றார். ‘ஆம்’ என்றேன். ‘குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என்றார்.’எஸ் மேடம்’ என்றேன். தனது உதவியாளரைப் பார்த்து பாதிக்கப்பட்ட நபர் வந்திருக்கிறாரா? என்று விசாரித்தார். அவர் வரவில்லை என்றதும், ‘கேஸ் டிஸ்மிஸ்’ என்றார். எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகள். பஸ்ஸில் சென்றிருந்தால் இத்தனை அலைச்சலும் செலவுகளும் இருந்திருக்காது. ஆனால் வாழ்க்கை எப்போதும் நமது பிடியில் இருப்பதில்லை அல்லவா?
00
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.