அதிகாரம்….!!!!
***
வண்ண சொற்களை
கொண்டு தினம்
ஒரு வடை சுட்டுகிறார்
பல வண்ணங்களில்
ஆடை உடுத்தும் ஒரு பெரியவர்
ஆமாம்
அவர் எல்லோருக்கும் மூத்தவர்
மூத்தவருக்கு சலித்தவர்கள் அல்ல அவரிடையே இளையோர்கள்
நனைந்த காகித கப்பலை
கொண்டே கரையேற
ஆணையிட்டவர்கள் அவர்கள்
வார்த்தையெனும்
பாதரசம் தடவிய கத்தியை
கொண்டே குரலறுத்து கூறு போடுபவர்கள்
தேசமெங்கும் கொத்து கொத்தாய்
சிதைந்து கிடக்கிறார்கள்
சிம்மாசனத்தை
ஆயிரம் ஐந்நூறுக்குமாய் விற்றவர்கள்
பிறகு வேறு
என்ன செய்து கிழித்திட
போகிறார்கள் எம்மக்கள்
ஆள்காட்டி விரலில்
மைபூசி அவர்களுக்கே
மீண்டும் ஒருமுறை
ஆட்சி அதிகாரத்தை
வழங்குவதை தவிர ,
*
.
*
கனவு ….!!!!
இரவு என்பது
வேறொன்றுமில்லை
உடல் தூங்குவது
உள்ளம் கனவுக்குள்ளிருந்து விழித்திருந்து பார்ப்பது
*
.
ஏழ்மை …..!!!!
எப்பொழுதாவது
ஏற்றப்படும் ஓர் கொடி மரமாய் தான் அசைந்தாடுகிறது பழைய நினைவு
என்ன செய்வது
வக்கற்று போனவனுக்கே
முந்தானையை
விரித்து மூன்று பிள்ளையை பெற்றடுத்தவளின் வீட்டில் தினந்தோறுமாய்
அடுப்பில் எரிகிறது
பசியும் பட்டினியும்
*
ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம், பண்ருட்டி,
புன்னகை இதழ் கொலுசு இதழ் வாசகசாலை இணைய இதழ் ஆதிரை இதழ் புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது ,