நாஞ்சில் நாடன் கவிதைகள்

மனக்கவலை மாற்றல் அரிது!

மழை பொய்த்ததா நோய் பெருத்ததா

கூரை ஒழுகுதா கக்கூஸ் அடைப்பா

கடன் தீருமா கால்வலி நீங்குமா

இரத்தக் கொதிப்பு நீரிழிவு

கபம் பித்தம் வாதம் சூலம் அகலுமா

பிள்ளைகள் கற்று ஆளாகி வருமா

என்பதில் இல்லை எம்மனோர் கவலை!

வான் முகடு வளர்ந்த நாயகன்

நடித்த அமர காவியம்

எண்ணூறு கோடி ஈட்டுமா?

பசிபிக் தீவைக் கிரையம் செய்த

மக்கள் தலைவன் விடுதலை எப்போ?

மட்டைப் பந்துக் களியின் வீரன்

ஒருநாள் மேட்சில் முன்னூறு ரன்

அடிக்க மாட்டானா?

மாநில அரசின் மதுக்கடை விற்பனை

இலட்சம் கோடி எட்டுவதெப்போ?

பருத்தறிவுப் பகலவன் இடுகாட்டு மேட்டில்

தேங்காய் பழம் சாம்பிராணி சூடம்

தேன் நெய்  தேறல் இளநீர் பதநீர்

சாம்பார் வடை கச்சாயம் அரவணை

அஜ்மீர் பிரியாணி சவர்மா கொத்துப் புரோட்டா

எறால் வறுத்து முழுவன் கோழி பொரித்தது

ஆட்டுகால் மாட்டுவால் நண்டு சூப்பு

தொல்காப்பியம் நன்னூல் தண்டியலங்காரம்

திருக்குறள் சிலம்பு மேகலை வைத்து

அழுது தொழுது மண்ணெடுத்து

நெற்றியில் பூசி மார்பினில் தரித்து

விழுந்தெழுந்து திரும்ப வாய்க்குமா?

அடுத்த தேர்தலில் அரசு அமைந்தால்

மண்சோறு தின்பேன் முண்டிதம் செய்வேன்

அலகு குத்துவேன் காவடி எடுப்பேன்

ஆன்மீகப் பெருவெளிக் கிரிவலப் பாதையில்

கோவணம் மட்டும் குறுக்கிக் கட்டி

அங்கப் பிரதட்சனம் செய்வேன்

என்பனவற்றுள் எதைத் தேர்வது?

குலதெய்வக் கோமள நடிகையின்

பேனரில் பறந்த வைன் பிராந்தி விஸ்கி

ஜின் ரம் ஓட்கா  ஃபென்னி ஸாகே

டெக்கீலா பியர் வாற்றுச் சாராயம்

தென்னங்கள் பனங்கள் ஈச்சங்கள்

கூந்தல்பனைக்கள் கற்றாழைக்கள்

இவற்றுள் எது உகந்தது?

என்று…

என்று…

வேண்டி விரும்பித் தோய்ந்து கவன்று

துன்புற்றுக் கிடந்தது

புறநானூற்றுத் தொல்பெரும் பழங்குடி!

000

முறிமருந்து

புலரியில் உயிர்த்துப் பல் தீற்றுமுன்

வாட்ஸ் ஆப் பார்த்தால்

பித்தம் ஏறுது பெருமூளைக்கு

பித்தம் தெளிய மாற்றென்ன மாந்தரே!

சரக்கடிக்கலாம்

உலகக் கோவண சினிமா பார்க்கலாம்

ஒன் டே மேட்சில் ஊறிக் கிடக்கலாம்

மகிமைக்கட்சி ஏதோ ஒன்றின்

மாநாடு ஆர்பாட்டம் பேரணி போனால்

பிரியாணி குவாட்டர் ஐந்நூறு பணம்

அன்பளிப்புப் பெறலாம்!

ஈதொன்றிலும் நாட்டம் இலாதவர்

என்னதான் செய்குவார்?

பித்து மூத்து மயிர் சிக்கி அலையுமுன்

முழுகிப்போய் வேறேதும் முனையலாம்!

திருமூலர் சிவவாக்கியர்

பட்டினத்தடிகள் பத்திரகிரியார்

தாயுமானவர் வள்ளலார்

குணங்குடி மஸ்தான் ஆவுடையக்காள்

எனச் சற்று நேரம் அலைந்தால்

நித்திய நோய்க்கு முறிமருந்து ஆகும்!

000

நாஞ்சில் நாடன்

1989-லிருந்து கோவையில் வசித்து வரும் நாஞ்சில் நாடன் நவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை 6 நாவல்கள், 19 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள்,29 சிறுகதைத் தொகுப்புகள் கொண்டுவந்துள்ளார். கலைமாமணி விருது, சாகித்ய அகாடமி விருது, கனடா நாட்டு இயல் விருது என்பன இவர் பெற்ற சிறப்புகள்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *