தேர்ந்த சதுரங்கக்காரனின் நகர்த்தலைப்போல வானில் நட்சத்திரங்கள் அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. வெளிர்நீலம் பூசப்பட்ட, தரைதளம் மட்டும் கொண்ட அகலியின் வீட்டு மொட்டைமாடியின் மத்தியில் கயிற்றுக்கட்டில் கிடந்தது. கொதியேற்றி ஆறவைக்கப்பட்ட நீர் நிரம்பியிருந்த பித்தளைப் பாத்திரத்தைத் தனது இடையில் இருந்து கட்டிலின் தலைப்பகுதியின் இடது ஓரத்தில் இறக்கிவைத்தவாறு கையில் பற்றியிருந்த டம்ளரை அதன்மீது கவிழ்த்துவைத்தாள். பிறகு மின் விளக்கினை அணைத்தவள் மாடியின் கதவினைத் தாளிட்டு, நிதானமாக நடந்துவந்து கட்டிலில் அமர்ந்து மிக இயல்பாய் தன் உடைகளைக் களைந்து, அப்படியே கட்டிலில் மல்லாந்து சரிந்தாள்.
அவிழ்த்துவிடப்பட்ட மயிர்க்கற்றையை மீறி தன் முதுகுப்புறத்தை அழுத்தும் கட்டிலின் கயிறுகள்மீது தன் உடலை மேலும் பொருத்திக்கொண்டவள் அந்த வலியின் சுகத்தைக் கண்கள் மூடி அனுபவித்திருந்தாள். அவளைத் தொடர்ந்து வந்திருந்த செவலைப் பூனை ஒரு மியாவை வானை நோக்கி எறிந்து படுத்தவாறே தன் வாலினைத் துரத்தித்துரத்தி வேட்டையாடிக் கொண்டிருக்க கருமையில் ஒளியும் சாம்பலும் கலந்து அகன்று கிடக்கும் வானை உற்று நோக்கியபடியிருந்தாள்.
மூன்று புள்ளிகளை உடைய நேர்கோட்டு வடிவில் நீண்டுக்கிடக்கும் நட்சத்திரங்களில் இருமுனைகளில் இருப்பவை, திறந்திருந்த அவள் முலைக் காம்புகளின் மீது ஒட்டியிருக்க, மூன்றாவது அவற்றுக்கு இடையில் அந்தரத்தில் அமைந்திருந்தது. அந்த நட்சத்திரங்களுக்குச் சற்றே மேற்புறத்தில் வளைந்த வொய் வடிவில் நட்சத்திரங்களும் அதற்கு நேர் மேற்புறத்தில் சற்றே அதிக பிரகாசமான ஒரு நட்சத்திரமும் ஒளிர்ந்தபடியிருந்தன. சட்டென நாய்கள் தொடர்ந்தாற்போல் குரைத்திட திடுக்கிட்ட அவளும் பூனையும் ஒரு கணத்திற்குப் பின் தங்கள் இயல்பிற்குத் திரும்பினர்.
இரண்டு கைகளாலும் கட்டிலின் கயிறுகளை இறுகப் பற்றியவள் தன்னைச் சமீப நாட்களாக உறக்கம் அற்றுப்போகச் செய்து வரும் அந்நிகழ்விற்குள் புதையுண்டாள். இதோ இந்தக் கையால்தானே இதே மார்பில் அவளை அணைத்துக்கொண்டோம் என்று எண்ணியபோது அவளின் விழியோரங்களில் கசிந்த நீர் சூடாகக் கீழிறங்கி காதின் மேற்பரப்பை நனைத்தவாறு மயிர்களையும் நனைத்தது.
நான்கரை வயதேயான அந்தக் குழந்தைக்கு இது சாகும் வயதா என்ன? அந்தப் பிஞ்சின் நெடிய உருவும் வயதிற்கு மீறிய தெளிந்த புத்தியும் மழலைச் சிரிப்பும் வெட்கமும், அச்சிறு வயதிலேயே எல்லாவற்றையும் நிதானித்து பார்க்கும் பக்குவமும் என அகலியினுள் அவள் நிரம்பிப்போயிருந்தாள்.
வௌவால் ஒன்று நிழலைப்போல் அவள் தலைக்கு நேராக உயரப் பறந்தது. ’உடல் என்றால் என்ன? உயிர் என்றால் என்ன?’ என்று தன்னைத்தானே வினவியவாறு கண்களை மூடிக்கொள்ள, ’நிறங்கள் தங்களை உருமாற்றியபடி சுழன்றுசுழன்று அவள் இமைகளுள் நிரம்பின.’ சிறிது நேரம் நிறங்களின் போக்கில் இலயித்தவள் கண்களைத் திறந்து வானை நோக்கினாள். அது அதீத அமைதியுடன் இவளை நோக்கியது.
’ஒரு குழந்தை இல்லாமல் போகிறது. அதன் உடல் நம் கையில் உள்ளது எனில் அதன் உயிர் எங்கே? இங்கே உயிர் என்பது எது? உயிருக்குத் தேவை உடலா? உடலுக்குத் தேவை உயிரா என்றால் உடலுக்குத்தான் உயிர் தேவை. அந்த உயிர் என்பது எது? எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது? அனுப்புவது யார் அல்லது எது? மீள எடுத்துக்கொள்வது யார் அல்லது எது?’ என்றவாறு அகலி தன் உடலின்மீது கைகளை வைத்துத் தடவிப் பார்த்துக்கொண்டாள். மூச்சினை நன்றாக உள்ளிழுத்து வெளியிட்டாள். இப்போது மீண்டும் நன்றாக உள்ளிழுத்தவள் மூச்சினை அடக்கிக்கொண்டாள். மனம் வெறுமையில் நிறைந்திருக்க அப்படியே இருந்தவள் இதயத்தின் துடிப்பானது அதிகரிப்பதை உணர்ந்தாள். செவலைப் பூனை இப்போது மாடியின் குறுக்கே ஓடியபடியிருக்க அகலி தன் மூச்சினை விடுவித்து இரைத்துக்கொண்டாள்.
’நான் மூச்சினை அடக்கிக்கொள்ளும்போது அது ஏன் என்னைவிட்டு ஓடவில்லை? மீண்டும் அது என்னுள் வருவதன் தேவை என்ன? மூச்சுதான் உயிர் என்றால் இவ்வுலகம் முழுக்க நிரம்பிக்கிடப்பது அத்தனையும் உயிர்களா? அத்தனையும் உயிர்கள் என்றால் அவற்றுக்கான உடல்களுக்காக இன்றுவரை காத்துக்கொண்டுள்ளனவா? உயிருக்கு உடல்தான் தேவை என்றால் ஓர் உடலைவிட்டு உயிர் தப்பித்தலின் நோக்கம் என்ன? இங்கு தப்பிப்போவது உடலா? உயிரா?’ என மேலும் மேலும் தன்னுள் கேட்டுக்கொண்டாள். நா வறண்டதுபோல் தோன்ற கட்டிலில் இருந்து எழுந்தவள் பாத்திரத்தின் மூடியினை நீக்கி டம்ளரில் வேகவேகமாக மொண்டு வாயோரங்களில் நீர் ஒழுகி உடல் நனையும் வண்ணம் அருந்தினாள். பூனை மதில் மீது நடந்துக்கொண்டிருந்து.
இப்போது அகலி அப்படியே குப்புறப் படுத்துக்கொண்டாள். முலைகள் கயிற்றுக்கட்டிலின் திறப்புகள் வழியே பிதுங்கித்தொங்க கட்டிலின் வெளியே சரிந்திருந்த மயிர்கள் காற்றில் அசைந்திட அதை வேட்டையாடக் குறிபார்த்தபடி தலையினைத் தரையோடு அழுத்தி உடலினைப் பின்னகர்த்தியபடியிருந்தது செவலை. இப்போது மீண்டும் மூச்சடக்கிக் கொண்டவள் ‘இதோ இப்போது இவ்வுடலுக்கு சுவாசம் இல்லை. எனவே இக்கணத்தில் இவ்வுடல் மரணித்துவிட்டதா’ எனக் கேட்டுக்கொண்டாள். இப்போது மீண்டும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவள் ‘மரணம் என்பது எதன் துவக்கம் அல்லது எதன் முடிவு’ என வாய்விட்டு சப்தமாகக் கேட்டாள்.
பாய்ந்து பாய்ந்து தாக்கும் செவலையால் ‘ஆ’ என்றவாறு மயிர்களை மேலே இழுத்துக் கொண்டு மல்லாந்தவள் ‘நட்சத்திரங்களைக் கண்டு உங்களுக்கு உயிர் இல்லையா? என்றாள். உயிர் இல்லாமலா நாங்கள் பளபளக்கிறோம்?’ என்றது சற்றே அருகில் இருந்த நட்சத்திரம் ஒன்று. திடுக்கிட்டவள் உண்மையில் நட்சத்திரமா இப்போது என்னுடன் பேசியது என்றவாறே உற்று நோக்கினாள். எவ்விதச் சலனமும் இன்றி அமைதியாய் இருந்தது வெளி.
காற்றின்மையால் புழுக்கத்தை உணர்ந்தவள் மரங்களைப்பற்றி எண்ணிக்கொண்டாள். ’உயிர் இன்றியா அவை வளர்கின்றன? பூக்கின்றன? காய்க்கின்றன? பிறகேன் அவை வெட்டப்படும்போது எதிர்ப்பதில்லை? நம் கை கால்களை வெட்டினால் உயிர் போவதில்லை. அதேபோல் அவைளுக்கும் கிளைகளை வெட்டினால் உயிர் போவதில்லை. நம் தலையை வெட்டினால் உயிர்போகிறது. அதேபோல் வேரை வெட்டினால் அவைகளுக்கும் உயிர்போகிறது. இங்கு மரணம் என்பது உண்டாவதா அல்லது உண்டாக்கப்படுவதா? உண்டாவதென்றாலும் உண்டாக்கப்படுவதென்றாலும் ஏன்?’ என மீண்டும் மீண்டும் தம்முள் வினவிக்கொண்டாள்.
பூனை மாடியில் காய்ந்து காற்றில் சுழன்று கொண்டிருந்த சறுகினைத் தன் கால்களால் பற்றி உயரத் தூக்கி விளையாடியபடி இருந்தது. இதோ ’இந்தப் பூனைக்கு உயிர் உள்ளது. துள்ளித் திரிகிறது. ஆனால் அந்தச் சருகிற்கு? அது இலையாய் இருந்தபோது பசியதாய் உயிர் உள்ளதாய் இருந்திருந்திருக்கும். உயிர் கடந்ததும் அது தன் இயல்பிழந்துவிட்டது. எனில் உயிரின் நிறம் பசுமையா?’ எனத் தன் பின்னந் தலையைக் கட்டிலின் மேற்பக்க கட்டையில் இடித்துக் கொண்டவாறே யோசித்துக் கொண்டிருந்தாள்.
சற்று தூரத்தில் குத்தவைத்து ஆய் போய் முடித்திருந்த செவலை அதனை மூடுவதற்குத் தன் கால்களால் சிமெண்டைப் பறித்தபடியிருந்தது. ’உயிருள்ளவை தம் கழிவுகளை வெளியேற்றும் அல்லவா? எனில் இந்தத் தாவரங்கள் எப்படி அதனைச் செய்யும்? ஒருவேளை அதன் கழிவுகள் இலைகளா அல்லது பூக்களா அல்லது காய்களா அல்லது கனிகளா எனச் சிந்தித்தாள். அதனால்தான் மானுடரது உயிர் பிரிகையில் கழிவும் உடலிலிருந்து பிரிகிறதா அல்லது ஒவ்வொரு முறை கழிவு வெளியேறும்போதும் அடுத்த உயிர் வந்து இணைகிறதா?’ என்றவாறு தன் தலையைச் சற்று பலமாக மேற்புறக் கட்டையில் மோதிக்கொண்டாள்.
‘நிகழும் மரணத்தின் பின்னர் உடல் மண்ணிற்குப் போகிறது. ஒருவேளை நெருப்பிற்கே போனாலும்கூட எலும்பைத்தவிர எல்லாவற்றையும் தின்றுச் செரிக்கிறது எனில் சாம்பலானாலும் உடல் இறுதியில் மண்ணாகத்தான் ஆகிறது. அந்த மண் தாவரங்களுக்கு வேராகிறது. தாவரங்கள் உயிராகி மானுடர்க்கு சுவாசத்தைத் தருகின்றன. இது ஏதோவோர் சுழற்சிபோல் இல்லையா? நடப்பது நம் இயல்பென்றால் நிற்பது தாவரங்களின் இயல்பாகிறது. நமக்குத் தலை வேரானால் அவைகளுக்கு வேர் தலையாகிறது. இது மானுடர்க்கும் தாவரங்களுக்குமேயான பிணைப்பு மட்டும்தானா? எல்லா உயிர்களுக்கும் உடல் என்று ஒன்று உண்டுதானே? அவையும் சுவாசிக்கின்றன; அவையும் வளர்கின்றன; அவையும் மடிகின்றன அல்லவா! எனில் இங்கு மரணம் என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுவதா? மரணம் ஏன் தேவை? அதன் பெயர் உண்மையில் மரணம்தானா?’ என்றவள் எண்ணிக்கொண்டிருந்தபோது சடாரென கட்டிலின்மீது குதித்த செவலை அகிலின் கன்னத்தில் சிணுங்கியபடி உரசியது.
செவலையை இரு கைகளாலும் பற்றியவள் அப்படியே உயர்த்தி நட்சத்திரங்களுக்கு மத்தியில் வைத்துப்பார்த்தாள். பிறகு தன் நெஞ்சில் அமரவைத்து தலையைத் தடவினாள். அது மிகவும் சுகமான முனகலுடன் அவளைக்கொஞ்ச, அதன் வட்டக்கண்களில் துடிக்கும் இமைகளை ஏறிட்டாள். ஓ! ’இமைகள்தான் உயிர்ப்பின் துடிப்பை வெளிக்காட்டும் சாதனமா? எனில் தாவரங்களின் இமை எது? நட்சத்திரங்களின் இமை எது? கல்லின் இமை எது? மண்ணின் இமை எது?’ என்றாள். செவலை அவளது வாயின் அசைவுகளையும் ஒலிக்கோர்வையையும் கவனித்தவாறு அவளது பிடியிலிருந்து நழுவி ஓடியது.
இந்த உலகமே உடைந்து போவதுபோல், நாய்கள் இப்போது கதறின. அந்தச் சப்தத்தில் சிந்தை துண்டிக்கப்பட்டவள் எழுந்தமர்ந்து தன் மயிர்கற்றையை முன்னால் எடுத்துப்போட்டுகொண்டாள். உடல்மீது கயிற்றால் ஏற்பட்ட தடங்களின் மேடுபள்ளங்களைக் கைகளால் நீவிப் பார்த்தவள் அதில் ஏதோவொரு சுகத்தை அனுபவித்தவளாக எழுந்து நடக்கத்துவங்கினாள்.
நடந்தவள் நின்றாள். அப்படியே மொட்டை மாடியின் தரையில் படுத்தாள். இளம் சூடும் சின்னஞ்சிறு புழுதித் துகள்களும் கற்களும் அவள் மேனியில் பதிந்தன. ஏதேதோ நினைத்தவளாய் ஆகாயத்தைப் பார்த்தவண்ணம் தன் உடலிடம், ’இப்போது நான் இறந்துவிட்டால் என்ன செய்வாய்?’ என்றாள். நட்சத்திரங்கள் பளபளக்கும் தங்கள் உடல் மேலும் பளபளக்குமாறு சிரித்தன. பிறகு, வொய் வடிவ நட்சத்திரத்தின் இடப்பக்க நுனியில் இருந்த நட்சத்திரமானது ‘அந்த உடல் தனக்கான ஓய்வினை நிம்மதியாக அனுபவிக்கும்’ என்றது. அந்தப் பதில் அகலியைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். மீண்டும் சற்றே குரல் கம்ம, ‘அப்படியா உடலே! நட்சத்திரம் சொல்வது உண்மையா? உன்னை அவ்வளவா நான் படுத்திவைக்கிறேன்’ என்றாள். அவளது கைகள் அவளை அறியாமலேயே அவளது உடலைத் தடவிக்கொண்டிருந்தன. உடல் சொல்லும் விடைக்காகக் காத்திருந்தபோது செவலை மொட்டை மாடியின் கட்டையில் உராய்ந்தபடியிருக்கும் வேம்பைக் கண்டது. இது தனக்கான நேரம் என்பதை உணர்ந்த வேம்பு, ‘நீ படுத்தும் பாட்டிற்கு இதே வேறு உடல் என்றால் எப்போதோ கழன்று தொலைதூரம் ஓடியிருக்கும். பாவம் இது அப்படி எதைக் கண்டதோ உன்னிடம்! தொலையாமல் ஒட்டிக்கொண்டுள்ளது’ என்றது. பிறகு, அகலியைப் பார்த்து ‘இப்போதுகூடப் பார் உன் சுயநலத்திற்காக உடலைத் தரையில் கிடத்தியுள்ளாய்’ என்றது. அதனாலென்ன? என்றாள் அகலி. இலைகள் சலசலக்க மென்னகை புரிந்த மரம், ‘உடல் என்பது கவசம் போன்றது. கவசம் என்பதால் அதனைப் பராமரிக்காதுவிட்டால் நைந்துதான் போகும். அதேவேளை கவசம் என்பதால் அளவிற்குமீறி அடித்தாலும் அதே நிலைதான் ஆகும்’ என்றது. நிதானமாய் எழுந்தவள் கட்டிலருகேச் சென்று கட்டம்போட்ட நூலால் ஆன நிறங்கள் வெளுத்த போர்வையை எடுத்து உடல்மீது ஒட்டியிருக்கும் துகள்கள் அகலும் வண்ணம் மேனியின்மீது விசிறிக்கொண்டாள். பிறகு கடந்தமுறை நீர் அருந்திவிட்டு மூடாது வைத்திருந்த பாத்திரத்தை அப்படியே தலைக்கு மேல் உயர்த்தி உடலை நனைக்கும் வண்ணம் வெறிபிடித்தாற்போல் அருந்தினாள். செவலை பாய்ந்துவந்து அவள் கெண்டைக்காலை தன் முன்னங்கால்களால் வளைத்துப்பிடித்து காலின் முன்பக்க எலும்பைப் பொய்க்கடி கடித்து விளையாடத் துவங்கியது.
அகலி களைத்தவளாக அப்படியே கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். முன்னர் பார்த்துப் பேசிய அதே நட்சத்திரம் ஏதோ சொல்லத் துவங்க அருகே இருந்த மற்றொன்று, ‘சற்றுப் பொறு அவள் ஆசுவாசம் கொள்ளட்டும்’ என்றது. ’மரணம் என்பது எனக்கும் என் உடலுக்கும் நடக்கும் போராட்டமா? இந்த உடல் என்னிடம் இல்லாவிட்டால் வேறு எவரிடம் இருக்கும்? என்னில் எனச் சொல்லும்போது அதற்குள் இருக்கும் நானில் உடல் வரவில்லைதான் இல்லையா? இவர்களெல்லாம் சொல்வதுபோல் என்னிடம் மாட்டிக்கொண்டு நீ படாதபாடுதான்படுகிறாய் இல்லையா உடலே?’ என்றாள். கண்ணீர் அவளது கன்னங்களின் வழியே உருண்டு ஆகாயத்து நட்சத்திரங்களைப் பிரதிபலித்தவாறு அவள் மேனியில் படர்ந்து கிடக்கும் சிதறிய நீருடன் சேர்ந்துகொண்டது. செவலை அவளது கால்களைவிடுத்து கட்டிலின் அடியில் வந்தது. அதன் தலை நுழையும் வண்ணமிருந்த பிளவைக் கண்டறிந்து ஒரே தாவலில் முன்னங்கால்களால் பற்றி தலையை உள் நுழைந்து சிறு சிறு முண்டல்களுடன் மேலேறி கயிற்றுப் பின்னலின் மீது சாகசத்துடன் நடைபோடத் துவங்கியது.
’ஓர் உடல் உயிரற்றுக் கிடக்கிறது. அதனைச் சுற்றி வளி நிரம்பி உள்ளது. ஆனால் அது அவ்வுடலுக்கு சுவாசம் ஆவதில்லை எனில் வளியை சுவாசமாக்கும் மையம் எது?’ என்றவாறு வானை நோக்கினாள். நட்சத்திரங்கள் ஒளிர்வதும் நகர்வதுமாக இருக்க, ‘ஒருவகையில் மாறுதல் என்பதன் அடிப்படையே தப்பித்தல்தான் அல்லவா?’ என்ற வினாவை செவலையை நோக்கிக் வினவினாள். அது கட்டிலது கீழோரத்து காலின் மேல்முண்டில் ஒய்யாரமாய் அமர்ந்து தன் முன்னங்கால்களினை நக்கி ஈரப்படுத்தி அதன் மூலமாக தன் முகத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தது. அதையே உற்றுப் பார்த்தவள் கோத்திருந்த தன் கைகளைப் பிரித்தவாறு அதன் கழுத்தை திருகி எறிந்தால் என்ன? என்று எண்ணினாள். பிறகு, அதன் கழுத்தை ஏன் திருக வேண்டும்? நம் கழுத்தை நாமே திருகிக்கொள்வோம்; இதனால் இப்போது என்ன குறைந்துவிடப் போகிறது எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். அவளது மனப்போக்கினைக்கண்டு மரம் ஒருமுறை தன்னைச் சிலிர்த்துக்கொள்ள நட்சத்திரங்களும் பெரும் திடுக்கிடலுடன் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன.
இப்போது நம் புத்திக்கு என்னவாயிற்று எனத் தன்னைத்தானே நொந்தவள், ’உடல், உயிர், மரணம், மாறுதல், தப்பித்தல்’ என்றெல்லாம் முணுமுணுத்தபடி சற்று எட்டி வலதுகையால் செவலையைத் தூக்கி, தன்மடிமீது வைத்து தடவிக்கொடுத்தாள்; அது அதற்கேயுரிய அந்தரங்க ஒலியுடன் உறங்கத்துவங்க, அதன் உடல் தரும் கதகதப்பின் இதத்துடன் கட்டிலின்மீது மல்லாந்துப் படுத்தவள் இமைகளை வெறுமனே மூடிக்கொண்டாள்.
சுஜித் லெனின்
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்றும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதிவருகிறார். 2023 ஜனவரியில் ‘பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமீரும்’ என்னும் தொகுப்பு எதிர்வெளியீடு மூலமாக வந்துள்ளது.