காட்டாற்று வெள்ளத்தில் கரையோரத்தில் படியும் கசடுடன் கூடிய வண்டல் போல் நினைவுகள் மட்டுமே மண்டிக்கிடக்கிறது. பதினாறு வருட காதல் வாழ்வு…

மரணம் மிகப்பெரும் சாபம்.

சில நேரங்களில் நினைப்பேன். காதலர்களாகவே இருந்திருந்தால் எங்கள் வாழ்வு முற்று பெறாமல் நீடித்திருக்குமோ…? அப்படியும் இருந்திருக்கலாம். சமூகத்திற்காக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி… யாரையும் நோகடிக்காமல் காலம் கனியட்டும் என்று பதினாறு வருடங்கள் காத்திருந்தது… அப்படி காத்திருந்ததும் ஒரு குற்றமா…?

ஒருவேளை உற்றாரும் உறவினரும் மனவுறுதிக்கான வாழ்த்துக்களை வாய்மொழியாகவும் வெறுப்புக்களை உள்ளத்தின் வழியாகவும் வெளிப்படுத்தியதன் விளைவா…? அவ்வளவு வலிவு கொண்டவையா எதிர்மறைகள்? எது எப்படியோ வெளியில் தெரியவில்லை என்றாலும் இறுதியில் என் இதயம் நொறுங்கி விட்டது என்பதே உண்மை.

ஹைதராபாத் விமான நிலையம் முழுவதும் இளமையின் முகங்கள். புதுமழையில் பொங்கி பிரவாகிக்கும் நதியின் வண்ணம் போல் அழுத்தமான ஆனந்த தெறிப்புகள். இளமையின் சாயலுக்கு மகிழ்ச்சி மறைபொருளாக ஊட்டமளிக்கிறதா?

காத்திருப்பு வளாகம் முழுவதிலும் விரவியிருக்கும் சாரணர் துருப்புகளின்* கலகலப்பும் உற்சாகமும் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பலமுறை வந்திருந்தாலும் இவ்விடம் இன்றைக்கு மாணவர்களின் களிவெறியால் கூடுதல் அழகில் மிளிர்கிறது. வேதனையின் சுவடுகள் நெருங்காத பருவம்… இது வெறும் எண்ணமா? என்னிடம் இல்லாததையெல்லாம் வெளியில் தேடுகிறேனோ?

ஹைதராபாத் ஜுப்லி ஹில்ஸில் இருக்கும் பல்நோக்கு சிறப்பு உயர்நிலை மருத்துவமனைக்கு பணி நிமித்தமாக புறப்படும் ஒவ்வொரு முறையும் என்னை காதலுடன் வழியனுப்புவான். விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் முதல் அழைப்பு அவனிடமிருந்து தான் வரும்.

 “வெளியே காத்திருக்கேன் ரபலா…”

இனி யார் காத்திருப்பார்கள்? இன்று என்னை வழியனுப்புவதற்கு கூட யாரும் வரவில்லை… யாரேனும் இருந்தால் தானே!

விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு முறையும் கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவே புதுச்சேரி திரும்புவோம். காதலின் நினைவுச் சுருள் போல் வளைந்து செல்லும் சாலை இறந்த காலத்தின் தடயங்களை இறுக்கிப் பிடித்து வைத்துள்ளது. இறந்தகால நினைவுகளுக்கு உயிரூட்ட இன்று சென்னைக்குச் செல்லவும் அவ்வழியைத் தேர்வு செய்திருக்கலாம்… நிகழ்வில் திரைப் போர்த்தும் மயக்கத்தில் முயங்குவதற்கு ஏனோ விருப்பம் எழவில்லை.  புதுச்சேரி இலாசுபேட்டை விமான நிலையத்திலிருந்து நேராக ஹைதராபாத். இன்று பணி நிமித்தமாக ஜுப்லி ஹில்ஸ் செல்லவும் வேண்டியதில்லை. இனியும் என்னால் ஒருவர் இதயத்தை திறக்க முடியுமா? தெரியவில்லை.

இப்பொழுது எதற்கு அந்த சிந்தனை…

ஹைதராபாத் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. டெராடூன் செல்லும் விமானம் கிடைத்து விட்டது. இதோ இன்னும் சற்று நேரத்தில் மேலே உயரப் போகிறது.

மூன்று நபர்கள் அமரக்கூடிய இருக்கையில் நான் மட்டுமே அமர்ந்துள்ளேன். முன்பின் இருக்கையில் கூட யாரும் அமரவில்லை. வேறு யாரேனும் வலிந்துபேசி என் மனதை சற்று திசைத்திருப்பலாம்… இன்றைக்கு தடை சொல்ல மாட்டேன்… அனுமதிப்பேன். ஆனால்… நவநாகரீகத்தின் மெளனக் கவசம் இடைவெளி தூரத்தை ஒவ்வொருத்தரிடமும் நிலைக்க வைத்துள்ளது.

பால் பேதமற்று யாவரையும் கவரும் இளமுறுவலுடன் உடலெங்கும் தளும்பி வழியும் வாழ்வு குறித்த தன்னம்பிக்கையுடன் நெருங்கி வரும் விமானப் பணிப்பெண் இருக்கையுடன் என்னைப் பிணைத்துக் கொள்ளும்படி மென்மையாக அறிவுறுத்துகிறாள். இளமை அழகு ததும்புகிறது… நன்றி கூறும்போது ஆமோதிப்புடன் தனது புன்னகையின் கீற்றைப் பெரிதுப்படுத்துகிறாள். மாம்பிஞ்சு கொலுசை நினைவூட்டும் அழகான பல்வரிசை. ‘அழுத்தமான உதட்டுச் சாயம் உனது அழகை குறைத்து காட்டுகிறது பெண்ணே… ‘ என அவளிடம் கூற நினைத்தேன்.

விமானம் புறப்படுவதற்கு ஆயத்தமானது. விடுபடுவதற்கும் தேவையான சக்தியை பிரயோகிக்க வேண்டும். மெல்ல மெல்ல உயருவதாகத் தெரிந்தாலும் அசாத்தியமான வேகம். வாகனங்கள், மரங்கள், பெரிய கட்டடங்கள், நதிகள்… பூமி மீதிருக்கும் அனைத்தும் சிறியதாகிக் கொண்டே வந்தன.

மேகங்களை ஊடுறுவி பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் நான் மட்டும் தனியொருவளாக பயணம் செய்வதாகத் தோன்றியது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனிமை என்னை நிர்வாணமாக்குவதற்கு முனைகிறது. எதிர்ப்பதில்லை… உடன்படுகிறேன். அதற்கு சிரமமில்லாது தானாகவே இயைந்து எனது ஆடைகளை களைவதற்கும் உதவுகிறேன்.

சிக்கலான பல இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து பலரது உயிரை இயங்க வைத்திருக்கிறேன். இருந்த போதும் எனது காதலனை… ‘காதலன்’ அப்படி சொல்வதில் தவறேதும் இல்லை. மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. ஆம், எங்கள் மணவாழ்விற்கு அல்பாயுசு… ஆகையால் கணவன் என்று சொல்வதைக் காட்டிலும் காதலன் என்று சொல்வதே சரியாக இருக்கும். எனது விருப்பமும் அதுதான்.

“ஒருவேளை காப்பாற்றியும் இருக்கலாம்…! சில சதவீதம் வாய்ப்பாவது இருந்திருக்கும் இல்லையா…”

என்னவொரு முட்டாள்தனம். என்னால் எப்படி எனது கணவன் இல்லை… இல்லை… எனது காதலனின் நெஞ்சகத்தை பிளந்திருக்க முடியும்.?

உலகம் போற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் என்றால் உணர்ச்சிகள் இருக்காதா? மெடிசன், சயின்ஸ், லாஜிக்கல்… எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா… விவாதம் நடத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால் மனம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. குறிப்பாக அப்போதைய நிலையில்…

மனமானது உணர்வுகளோடு புரண்டு கொண்டுதான் வாழ்கிறது. ஒருவேளை எனது உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் கூறுவதைபோல் கையுறைகளையும் உடலங்கியும் முகக்கவசத்தையும் அணிந்து நானே அறுவை சிகிச்சையை செய்திருக்கலாம்.

நீர்ம படிகத்தினுள் உறைந்திருக்கும் மனதின் எதிரொலியால் கவலையில் ஆழ்ந்து இடைவிடாது சலசலத்துக்கொண்டே இருக்கும் மூளைக்கான கவசம் இருந்திருந்தால் கண்களை மூடிக்கொண்டாவது முயன்றிருப்பேன். ஆனால் முடிவு…? அது ஒருவேளை இப்போது போலவே அமைந்திருந்தால்…! மீளமுடியாத குற்ற உணர்ச்சியில் நான் சிதைந்து காணாமல் போயிருப்பேன்.

‘ஆஹா என்னவொரு தந்திரம். தப்பித்தல்… சுயநலம்…’

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஒருவரது முடிவெடுத்தலுக்கான காரணிகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் அப்போதைய சூழலின் அழுத்தத்தையும் யாரால் எடைப் போட்டு கணித்துவிட முடியும்? அழுத்தமாக உதட்டுச்சாயம் பூசும் விமானப் பணிப் பெண்ணாலும் முடியாது. சிரமம்.

எதார்த்தமான ஒரு உண்மையை கூறுவதென்றால் அறுவை சிகிக்சை கூடத்திற்குள் கண்மூடிய நிலையில் அவரை கொண்டு சென்றபோதே நிலைமையை இயல்புக்கு திருப்பிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் முற்றிலுமாக இல்லை என்பதை உணர்ந்தேன்.  அந்த உணர்வை நம்பினேன் அல்லது ஏதோவொன்று நம்பச் செய்தது. உணர்வுகளைத் திரிக்கும் உணர்ச்சிகள் என்னை இறுகக்கட்டி முடமாக்கி விட்டன. சரியோ தவறோ முன்முடிவு தான் தீர்மானிக்கிறது.

மூன்று மணி நேரத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை கூடத்தின் கண்ணாடிக் கதவுகள்  திறக்கப்பட்டன.  சகமருத்துவரும் நண்பருமான பிழைபொறுத்தான்  தனது குழுவுடன் சோர்வு ததும்பும் உடல் மொழியுடன் வெளியேறினார். அவர்கள் முகத்தில் துலக்கமாக எழுதப்பட்டிருந்த மொழியும் எனக்கு நன்கு பரிச்சியமானது தான்.  ஒவ்வொருவரின் முகங்களையும் ஊடுறுவும் முயற்சி தேவையற்றது. முடிவு முன்பே தெரிந்த ஒன்று…

வாசல் முன்னறையில் நின்று கொண்டிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்தேன். மேலே எரிந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கை யாரும் நிறுத்தவில்லை. நண்பர்களின் முகங்கள் கீழே சரிந்தன. எதிர்பார்த்தது தான் நிகழ்ந்ததென மனம் துள்ளுகிறதா? துடிக்கிறதா? தடுமாற்றத்துடன் சுவரில் சாய்ந்து கொண்டேன்.

ஒளிகளும் ஒலிகளும் பிரவேசிக்காத தனி உலகத்திற்குள் மூழ்கினேன். அவர்கள் பேசியது என் காதில் விழாவிட்டாலும் அறிவேன். ‘காப்பாற்ற முடியவில்லை…’ ‘காப்பாற்ற முடியவில்லை…’

ஆம், காப்பாற்ற முடியாது.

எல்லாம் முடிந்தது.

நான் வீறிட்டு கதறி விடுவேன் என்று எதிர்பார்த்தவர்கள் ஒருக்கால் ஏமாந்திருக்கலாம். இதழோரம் கசியும் சிறுமுறுவலை கூர்ந்து நோக்கும் திறன் கொண்டோர் யாரேனும் …? இல்லை… இது மனமாயை.

மனம் இறுகிக் கொண்டிருப்பதை புரிந்துகொள்ளாத எனது உடல் தன்னிச்சையாகக் குலுங்கியது. கலங்காத கண்களுடன் தேம்பினேன். கைகள் மெல்ல நடுக்கமுறுவதையும் கவனிக்க முடிந்தது. கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் ரப்பர் இழை பட்டென்று அறுந்துவிடலாம். மேன்மேலும் அழுத்தி இறுக்கிக் கொண்டே சென்றால் ஒருக்கட்டத்தில் நொறுங்கி சிதறியும் விடலாம். இரண்டு எல்லைகளுக்கும் செல்லாமல் நடுநிலையில் நின்றது…! அன்று எனக்கது வியப்புடன் சற்று பொய்மை பூசிய வெறுப்புபைத் தந்தது.

பல நாட்கள் இரவு முழுவதும் வெளிச்சத்தில் மோதும் அந்துப்பூச்சியாக மாறிவிடுவேன். மறுநாள் பகல் முழுவதும் எனது கைகள் துண்டிக்கப்பட்ட பல்லியின் வாலாக தன்னிஷ்டம் போல் நடுங்கி துடிக்கும். எதிரிகளிடம் தற்காத்துக்கொள்ள பல்லிகள் இழக்கும் வால் போல் என்னிடமுள்ள எதை நான் இழக்க வேண்டும்?  அறுத்தெறிந்தாலும் அதனை மீண்டும் வளர்விக்கும் தனிமையின் ஆதுரத்தை உதறி நகர்வது மட்டுமே சாஸ்வதம்.

வாழ்வின் திட்டங்கள் யாவும் விபத்தில் சரியும்போது இந்த மூளை காயமின்றி தற்காப்புடன் கவனிக்கும் விதம், சிந்திக்கும் விதம், மறுக்கட்டமைப்புக்கு முயலும் வேகம்… அவ்வப்போது அரங்கேறும் அறிவின் கழைக்கூத்தாட்டமும் மீட்சிக்கான திறவுகோலைத் தருகிறது.

“மருத்துவர் ரபலாவிற்கு தெளிவாக செயல்படும் திறன்வாய்ந்த அபாரமான மூளை…” பாராட்டியவர்களுக்கு தெரிந்திருக்காது ஆயிரத்து முந்நூறு கிராம் கொழுப்பு என்றேனும் ஒருநாள் ஒரு கணப்பொழுதில் ஸ்தம்பித்து ஆகிருதியான வாழ்கையின் பிம்பத்தையும் வழுக்க வைத்து சரித்துக் கவிழ்க்கும்.

குளிர்ச்சியான பாராட்டுரைகளுக்கு பின்னால் காத்திருக்கும் தகிக்கும் வெம்மையின் பெரும்பாலை பயணம். இவ்வளவு விரைவில் அதனை எதிர்கொள்ளவும் வேண்டுமா…? தற்சோதனையின் முடிவுகள் ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் ஒரேமாதிரியாக இருந்துவிட்டால் அது தற்சோதனையே அல்ல. இப்படி பலவற்றைக் குறித்தும் ஒவ்வொன்றாக எனக்குள் சிந்தனைகள் உதிரும். அனுபவத்தின் அடையாளங்கள் மட்டுமே அவற்றை திரும்பத் திரும்ப உறுதி செய்கின்றன.

கடலில் நீராடும் தருணத்தில் உற்சாகம் கரைபுரளும். கரையேறியதும் நீராடியதற்கான உப்புத் தடயங்களை நன்னீர் கொண்டு உடனடியாக அகற்றினால் தானே உறுத்தல் இல்லாது உறங்க முடியும். உற்சாகத்தையும் தக்க வைக்க முடியும். எனது நினைவு படிமங்கள் மணல் போல் உள்ளிருந்து உறுத்துகின்றன. இடைநில்லாது உதிர்ந்து கொண்டும் இருக்கின்றன. சில நாட்களில் இதிலிருந்து மீண்டு விடலாம்…

நம்பிக்கையளித்து கொள்வது மட்டுமே வாழ்விற்கான சாத்தியங்களை உருவாக்குகிறது.

ஏன்…? எதற்காக இப்படி நிகழ வேண்டும்? என்பதைவிட எனக்கு மட்டும் இப்படியெல்லாம் ஏன் நடக்க வேண்டும்? பதிலை எதிர்பார்க்காத கேள்வியின் வெறுப்பு படிமம் என் மீதிருந்து எப்பொழுது விலகும்…?

“ஒரு வேளை நீங்கள் அறுவை சிகிச்சை செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்…” எப்பொழுதும் மீண்டும் மீண்டும் ஆறுதல் தருவதற்காக உதிர்க்கப்படும் வார்த்தைகள். ஒருவகையில் வஞ்சப் புகழ்ச்சி. போகும்போது அவர்களின் உதட்டோரம் கசியும் இகழ்ச்சியான புன்னகை. எனது நடுவிரலை அவர்கள் முகத்திற்கு முன்னால் உயர்த்த வேண்டுமென்கிற உந்துதல்… அதைத்தொடர்ந்து என்னுள் மெளனமாக நான் உதிர்க்கும் அந்த இழிவான ஆங்கிலச் சொல்… பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.

“சில சதவீத வாய்ப்பு இருந்திருக்கலாம்…”  தோள்களை குலுக்கிக் கொள்வார்கள்.

சதவீதமும் வாய்ப்பும் உண்மையில்லாத முரண். நான் மாய நம்பிக்கைக்குள் சிக்கப்போவதில்லை. இல்லாதது எதுவோ அதன்மீது வருவது தானே நம்பிக்கை. இருப்பது என்பது இருப்பது மட்டுமே.  அதுவே உண்மை. நம்பிக்கை என்பது மாயை. அது உண்மை கிடையாது. எனக்கு வலது கை இருப்பது உண்மை. அதைவிடுத்து வலது கை இருப்பதாக நான் நம்புவது முட்டாள்தனம். நம்பிக்கைக்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசத்தை நமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மட்டுமே உணர்த்துகிறது.

எனது காதலனுக்கு நெருக்கமான இடம் இமயமலை. நாங்கள் இருவரும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அங்கு செல்வதும் பலநாட்கள் தங்கியிருந்து சுற்றித்திரிவதும் வழக்கம். 

இமயத்தில் அவனை கூர்ந்து கவனித்திருக்கிறேன்… அங்கு அவன் அவனாகவே இருப்பதில்லை. அவனாக இல்லாத தருணங்களில்  நான் மட்டற்ற மகிழ்ச்சியில் மிதந்துள்ளேன். அதுவும் அவனிடமிருந்து அது என்னை முழுமையாக தொற்றிக் கொள்கிறது. பயணங்களை வெறும் சாகசமாக மட்டுமே கருதியிருந்தேன். அவனை பொறுத்தவரை இமயம் வெறும் சாகசத்தை மட்டும் தருவதல்லவே…

என்னவனின் பெளதிக அணுக்கம் அறுபட்டதும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சுவடும் நிரல்நிறையற்று தடுமாற்றம் கண்டது. மேலும் கீழும் இடமும் வலமுமாக நான் காணும் நான் மட்டுமே காணும் தழல் தெறிக்கும் பூச்சிகளின் நினைவுத் தாண்டவம் ஆற்றல் குறைந்து மெல்லவே அடங்கியது. விரைந்து தெளிவடைந்தாலும் அழுத்தத்தின் நிழல்சாயல் உடனடியாக கிளர்த்தும் வேடிக்கை வினோதங்கள் என்னை ஒருசேர திகைக்க வைக்கின்றன.

அவனை திருமணம் செய்து கொள்வதற்கு நான் போராடியதைக் காட்டிலும் அவனது சாம்பலை பெறுவதற்கு… அப்பப்பா அதற்கு கூடவா நான் போராட வேண்டும். சாம்பலாகி குளிர்ந்து போனவனைக்கூட என்னிடம் விட்டுத் தருவதற்கும் அவனது உறவினர்களுக்கு துளியும் விருப்பம் கிடையாது. திருமணம் செய்வதற்கு பொறுமைக் காத்தது போன்று சாம்பலுக்கும் காத்திருப்பேன் என்று நினைத்திருப்பார்கள்.

காதலனாகவும் கணவனாகவும் இருந்தவன். மலையேற்றத்தில் விருப்பமுடையவன். குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் கொண்டவன். ஒவ்வொரு நாளும் கூடிப்புணர்ந்து ஏகாந்தம் உணர்த்தியவன். இப்பொழுது இருப்பின்றி நிச்சலனத்தைப் பிரதிப்பலிக்கிறான்.

என்னருகில் வரும்போதெல்லாம் எனது நாசியில் பிரத்யேகமான அவன் வாசம் உணர்வேன். இறுதிச்சடங்கில் வெண்ணிற லினன் துணி சுற்றப்பட்ட உயிரற்ற உடலில் இருந்து எழும் இரசாயனக் கலவையை மீறி அவனது சுய வாசத்தை என்னால் அன்று சிறிதும் உணர முடியவில்லை. எந்தவொரு இடத்திலும் அந்த வாசம் கசியவில்லை. ஒருமுறை மட்டும் சிறிதளவேனும் எனது நாசி அதனைக் கண்டறிந்து முகர்ந்து விடாதா?

பரிதாபமாகப் பார்த்து கொண்டிருக்கும் கூட்டத்துக்கு நான் என்ன செய்கிறேன் என்று புரிந்துகொள்ள முடியாது.

அவன் உடல் முழுவதையும் தன் முகத்தால் மூர்க்கமாக உரசி புரண்டு ஆய்ந்துக் கொண்டிருப்பவளை அங்கிருந்து அகற்றி ஆற்றுப்படுத்துவதற்காக இழுத்துச் செல்கையில்…

நான் அதற்காக மட்டும் பெருங்குரலெடுத்து அழவில்லை.

விழிப்புடன் கவனிக்கிறேன். ஆம், பெருந்துக்கம் எனக்களித்த சன்மானம் விழிப்பு. அப்பொழுதும் கூட எனது கண்கள் கண்ணீர் துளிகளைக் கசிய விடவில்லை…

காதலனின் சாம்பலுடன் இமயம் நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறேன். போராடி பெற்றேன். அவன் விருப்பம் நிறைவேறட்டும். மகிழ்ந்திரு உயிரே… துகள்களாக உருமாறி இருக்கும் இனியவனின் நினைவுகளை இனி பார்வதி வனத்தில் தூவ வேண்டும். அவை பிரம்ம கமலங்களின் வாசத்தைக் கூட்டும். உனது இறுதி விருப்பத்திற்கு ருசி அளிக்கப்போகிறேன்.

மெதுவாக கண்திறந்து ஜன்னலோரம் திரும்பினேன். உயரத்தில் பறந்தாலும் தூரத்தில் தெரியும் அடர்த்தியான நீலவானம். செவ்வரி விலகும் கீழ்திசையில் பார்த்தேன், பிரமாண்டமான பஞ்சுப்பொதிக்கு பின்னால் உலகம் ஆராவாரத்துடன் இயங்கி கொண்டிருப்பதற்கான எந்தத் தடயமும் தெரியவில்லை.

“மேடம்… சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். விமானம் சற்று நேரத்தில் தரையிறங்கப் போகிறது.” விமானப் பணிப்பெண்ணின் இனிமையானக் குரல் என்னருகே நெருக்கமாக கேட்கிறது. நான் அவளது உருவத்தை பார்க்க முயன்று தோற்றேன்.

***

சாரணர் துருப்பு (ScoutTroop)*; 20-40 வரையிலான சாரணர்களை உள்ளடக்கிய குழு

மஞ்சுநாத்  

புதுச்சேரியைப் பூர்விமாகக் கொண்ட இவர் தற்போது புதுச்சேரி – பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். பள்ளிக் கல்வியை பண்ணுருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையிலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை வரலாற்று அறிவியலும், சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர் கல்வியும் நிறைவு செய்தவர். தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவரது முதல் சிறுகதை தொகுப்பு “குதிரைக்காரனின் புத்தகம் (2021) ” முதல் கட்டுரைத் தொகுப்பு “டால்ஸ்டாயின் மூன்று கண்கள் (2022)” இலக்கிய வாசகர்களின் கவனத்தை பெற்றள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *