கதையின் தலைப்பை யூகித்துக் கொள்ளுங்கள்

ந்த வாசகங்களைப் படித்ததும் அதிர்ச்சியாகி, கிண்டில் புத்தகத்தை ஆஃப் செய்துவிட்டு கண்களை மூடினேன். சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது போல, இலக்கிய ஆர்வம் கொண்ட சில ஊர்களில் என் எழுத்துக்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவித்திருக்கிறார்கள். இப்படி சில பல விருதுகளை என்னுடைய இலக்கிய எழுத்துக்களுக்காக பெற்றிருக்கிறேன். அந்த விருதுகளுக்கு தகுதியுடைய எழுத்துக்கள்தானா என்னுடைய எழுத்துக்கள்? இனிமேலும் சிறுகதைகள், நாவல் எழுத நான் தகுதியான எழுத்தாளர்தானா என்ற கேள்வியை எனக்குள் எழுப்பின அந்த வாசகங்கள்.

தாம்பரத்திலிருந்து ரயில் மெதுவாகப் புறப்பட்டவுடன், அந்த வாசகம் என்னை குலுக்கி விட்டது. கடைசி வரிசையில் நடுநாயகமாக நான் மட்டும் அமர்ந்திருக்க, பெட்டியில் இன்னும் சில பயணிகளும் இருந்தனர். வயிற்றுக்கு இலக்கியம் உணவாகத் தெரிவது கிடையாது. அதனால், ‘எழுத்து என் தொழில்’ என பாரதியார் மாதிரி சொல்லிக் கொள்ள முடிவதில்லை. தி.நகர் பாண்டிபஜாரில் கவரிங் நகைக்கடையில் வேலை செய்து கொண்டே இலக்கியம் படைக்க முடியும் என்பதை இன்றிருந்தால் பாரதியாரிடமே சொல்லியிருப்பேன்.

‘மனித இயல்பை எழுதுவதுதான் என்னுடைய எழுத்தின் மையம்…’

ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் சொன்ன இந்த வாசகங்கள்தான் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்து, குழப்பத்தில் ஆழ்த்தியது. அதைப் படித்த கணத்திலேயே யோசனையில் மூழ்கினேன். இதுவரை நான் வாசித்த இலக்கியங்களில், என் மூலையில் உறைந்து போயிருந்த இலக்கியங்களை ஒவ்வொன்றாக மீட்டிப் பார்த்தேன். நான் நேசித்த இலக்கிய கர்த்தாக்களில் யார், யாரெல்லாம் மனித மனங்களை ஊடுருவிப் பார்த்தவர்கள்?

ரயில் பெட்டியின் இருபுற வாசல்களில் இருந்தும், மார்கழிப் பனியின் குளிர்வாசம் என் முகத்தில் ஓவியம் வரைய கண்களைத் திறந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால், பயணிகள் அதிகம் இல்லை. ரயில் சிந்திப்பதில்லை என்பதால் வேகமெடுத்தது. கிழக்கு திசை வாசலில் காலை வெயில் மஞ்சள் தெளிக்க, மேற்கு திசை வாசலில் கறுப்பு நிற டாலியா பூவின் கருமை படர, மஞ்சள்-கறுப்பு வானத்தை ரயில் கிழித்துக் கொண்டு செல்வது போல நான் கற்பனை செய்து கொண்டேன். என் இலக்கியத் தேடலை இழுத்துச் செல்லும் என்ஜின் ரயில் பயணம்தான்.

நெகிழ்ச்சியான சம்பவங்கள், ஆழமான உரையாடல்கள், அதிரடி திருப்பங்கள், திடீரென வரும் கிளைமேக்ஸ்…என நான் எழுதிய சிறுகதைகளை எழுத்தாளுமை ஆண்டன் செகாவ் அணிவிக்கும் கண்ணாடி கொண்டு பார்க்க முடியுமா? ஒவ்வொரு சிறுகதை எழுதுவதற்கு முன்பும் ஒரு பிசாசு என் கழுத்தை நெறித்துக் கொல்ல முயலும். இந்த முறை ஆண்டன் செகாவ் உருவில் பிசாசு ஒன்று என் சிந்தையைப் பிடித்தாட்டியது. எந்தக் கதையை எழுத செகாவ் உருவேற்றுகிறார்? ரயிலுக்கு வெளியே எதிர்திசையில் பின்னோக்கி ஓடும் வானத்தையே, இமை மூடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சிவாஜி பிறந்தநாள் அக்டோபர் ஒண்ணு…

எம்மார் ராதா பிறந்தநாள் ஏப்ரல் பதினேழு…

எம்ஜியார் பிறந்தநாள் ஜனவரி பதினேழு…

கருணாநிதி பிறந்தநாள் ஜூன் மூணு…”

திடீரென ஒரு கம்பீரமான குரல், ஆகாயத்தில் கரைந்து போன என் பார்வையை வம்படியாக ரயில் பெட்டிக்குள் இழுத்து வந்தது. ஆகர்ஷிக்கும் கனத்த தொனியைக் கேட்டவுடன் பயணிகளும் சத்தம் வந்த திசையில் எட்டிப் பார்த்தனர். நான் அமர்ந்திருந்த பெட்டியின் எதிர்முனையில் இருந்து கத்திக் கொண்டே வந்த அவர், ஒரு யாசகர் போலத் தெரிந்தார். மனப்பிக்கு கொண்டவரைப் போலவும் தெரிந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர் இத்தனை பேருடைய பிறந்த நாட்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா? ஆனால் யாரிடமும் யாசகம் கேட்காமல் பிறந்தநாட்களைக் கூறிக் கொண்டே வந்தார்.

யாசகம் பெறுவதற்கான பாத்திரமோ வேறு எந்தச் சுமையோ அவரிடம் இல்லை. பயணிகள் யாரும் எதுவும் அவருக்கு கொடுக்கவில்லை. அவரை கண்டுகொள்ளாதது மட்டுமல்ல, அவரைப் பார்த்து அருவருப்பாகவும் முகம் சுளிக்கவும் செய்தனர். சிலர் கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டனர்.

எத்தனையோ முகங்கள், இந்த ரயில் பயணத்தில் எனக்கு சினேகிதம். காலையில் வேலைக்குப் போகும் போது, காஸ்ட்லியான உடைகளை நேர்த்தியாக அணிந்து, லெதர் பேக்கில் லேப்டாப்பை வைத்து வேலை செய்து கொண்டே, செல்ஃபோனில் ஆங்கிலத்தில் கட்டளையிடும் கனவான்கள், வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் போது அதே கனவான்கள், ரயில் பெட்டியின் வாசலின் தரையில் அமர்ந்து, குடிபோதையில் குடும்ப உறுப்பினர்களை வசவுகளால் குளிப்பாட்டி உளறிக் கொண்டே வருவதை பார்த்திருக்கிறேன். உடல் திடகாத்திரமான, கண் பார்வையற்ற, உடல் ஊனமுற்ற… இப்படி ஏராளமான யாசகர்களையும், சில்லறை வியாபாரிகளையும், சிறுவர்களை குட்டிக்கரணம் அடிக்க வைத்து பிழைப்பு நடத்தும் பெற்றோர்களையும் பார்த்திருக்கிறேன். இதுவரை யார் மீதும் ஏற்படாத நேச உணர்வு, இந்த யாசகர் மீது திடீரென எனக்கு ஏற்பட்டது. அதற்கு காரணம் அந்தக் குரலும் பிரபலங்களின் பிறந்தநாட்களைக் கூறியதாலும் இருக்கலாம். இருந்தாலும் அவரின் தோற்றம்தான் என் கவனத்தை ஈர்த்தது. நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவரை முழுமையாகப் பார்க்க முடிந்தது.

நெடுநெடுவென வளர்ந்த, நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு. கருத்த முகத்தில் புடைத்து சிவந்த கண்கள். மொட்டையடித்த சில நாட்களுக்குப் பின், தன் விருப்பத்துக்கு ஏற்ப வளர்ந்த கொஞ்சம் முடியுடன் தலை. இதெல்லாம் அவரை ஒரு கோபக்காரரைப் போல காட்டியது. அரைக்கை வெள்ளைச் சட்டை. ஈரத்துடன் தொடைகளில் ஒட்டிப்போயிருந்த வெள்ளை வேஷ்டி. வெள்ளை உடைகள் மஞ்சள் வண்ணத்தை ஏற்கத் தொடங்கியிருந்தன. செருப்பு அணியவில்லை. யாரிடமும் யாசகம் கேட்காமல் அவர் முன்னேறிக் கொண்டே வந்தார். எல்லா பிச்சைக்காரர்களையும் போல இவரும் ஒரு ஆள், அவ்வளவுதான் என்பது போல பிற பயணிகள் வழக்கம் போல மொபைலைத் தழுவித் திளைத்தனர். யாரும் அவரை சட்டை செய்யவில்லை.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் இன்னும் சிலர் ஏற அந்தப் பெட்டியின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பின. மளிகைக் கடையில் முட்டை அடுக்கும் தட்டில் முழுவதுமாக முட்டைகள் வைக்கப்பட்ட பின் தரும் தோற்றத்தை ஒத்திருந்தது நான் அமர்ந்திருந்த பெட்டி. பச்சைக் கலர் ஜுப்பா, கறுப்புக் கலர் தொப்பி, சீராக கத்தரிக்கப்பட்ட தாடி சகிதம் ஒருவர் மட்டும் இடது வாசலில் நின்று கொண்டிருந்தார். இருக்கை இருந்தாலும் அவர் அமருவதை இதற்கு முன்பும் நான் பார்த்ததே இல்லை. கத்தி, அரிவாள் போன்ற கருவிகளை கூர்மைப்படுத்தும் சாணைப் பிடிக்கும் கருவியோடு அவர் இருக்கையில் அமருவது சிரமம் என்பதால் நின்று கொண்டேதான் பயணிப்பார் போல…

“நம்பியார் பிறந்தநாள் மார்ச் ஏழு…

ஜெய்சங்கர் பிறந்தநாள் ஜூலை பண்ணண்டு…

முத்துராமன் பிறந்தநாள் ஜூலை நாழு…

அறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் பதினைஞ்சி…”

சோர்வோ சலிப்போ பிசிறோ இன்றி அவருடைய குரலின் டெசிபல் ஒரே அளவில் இருந்தது. அவர் இருக்கைகளைத் தாண்டி வர வர, பயணிகள் மூக்கைப் பொத்திக் கொண்டு நெளிந்தனர். சாணைப் பிடிக்கும் வியாபாரி அவரின் சட்டைப் பையில் ரூபாய் நோட்டொன்றைத் திணித்தார். அதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் நகர்ந்து கொண்டே இருந்தார் பிறந்தநாட்களைக் கூறிக் கொண்டே…

அரசியல், கலை உலக பிரமுகர்களின் பிறந்தநாட்களை அடுத்தடுத்து சொல்லிக் கொண்டே வந்தார். அவர் கூவும் தேதிகளை கூகுளில் சரிபார்க்க மொபைலை எடுத்தேன். அண்ணா, கருணாநிதி பிறந்தநாட்களை சரியாகச் சொன்னதால், மற்ற தேதிகளும் சரியாகத்தான் இருக்கும் என சமாதானமடைந்தேன். சொல்லியதை அவர் திரும்பச் சொல்லவில்லை. பிரபலங்களின் பிறந்தநாள் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எப்படி இத்தனை தேதிகளையும் நினைவில் வைக்க முடிகிறது… என் நண்பன், ராமானுஜ ஐயங்காரின் மகன் பரத்வாஜ் நினைவுக்கு வந்தான். கல்லூரி நாட்களில் ஏராளமான லேண்ட்லைன் நம்பர்களை மிகச் சரியாகச் சொல்லுவான். பக்தி மயமான பரத்வாஜ் முகத்தை இந்த யாசகரின் முகத்தில் பொருத்தினேன். திடீரென ஓர் உதிப்பு ஏற்பட்டது. இவர் சொன்ன பிரபலங்களில் பெண் பிரபலங்களின் பெயர் இல்லையே… ஏன்? என்ன காரணம்?

ரோபோ மாதிரி பிறந்த நாட்களை கூறிச் செல்லும் வினோத மனிதனைப் பற்றி ஒரு சிறுகதை எழுதலாம் போல… ஆர்வம் எட்டிப்பார்க்க, ஆண்டன் செகாவ் தந்த கண்ணாடியை அணிந்து இவரைப் பார்க்க ஆயத்தமானேன். முதலில் அவருக்கு ஒரு பெயரைச் சூட்ட விரும்பினேன். நடிகர் மோகனின் குரலை நினைவுபடுத்தியதால், இவருக்கு மோகன் என பெயர் வைக்கலாம். வெறும் மோகனா? அவருடைய வயதைத் தோராயமாகக் கணக்கிட்டால் வெற்றியைத் தொட்டு, வாழ்வில் ஏதோ ஒரு திருப்பத்தில் மனம் பிசகியிருக்கலாம் என்றுதான் எனக்குப்பட்டது. அந்த வெற்றி இப்போது இல்லையே… இருந்தாலும் முரண்நகையாக ‘ஜெயம்’ என்ற பெயரை மோகனுக்கு முன்பாகச் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தேன்.

என்ன பிரச்சினையால் இவர் மனநலன் பாதிக்கப்பட்டிருக்கும்? மொட்டை அடித்து முடி வளர்ந்திருக்கிறதென்றால், சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிய பின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லையா? அரசியல், திரைத்துறையைச் சார்ந்தவர்களோடு நெருக்கம் கொண்டவராக இருப்பாரோ அல்லது அவர்களோடு தொடர்புள்ள தொழில் எதுவும் இவர் செய்து வந்திருப்பாரோ? சென்னைவாசிதானா? உச்சரிப்பு, உடை, தோற்றம் – தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இவர் இருப்பார்? ஒவ்வொன்றாக புனைவாக்கி ஒரு சிறுகதைக்கான கருவை மனத்தில் இருத்தினேன்.

அவர் அருகில் வர வர மூத்திர நாற்றம் தாங்க முடியவில்லை. மூச்சைப் பிடித்துக் கொண்டேன். அந்த நாற்றத்தை சுவாசித்தால், மூத்திரத்தையே விழுங்கியது போல, உடல் கூசியது. அவரிடமிருந்துதான் அந்த நாற்றம் வந்ததை உணர்ந்தேன். இன்னும் என் அருகில் அவர் வரவில்லை.

“இந்த மாதிரி பிச்சைக்காரங்ளை ஏன் ட்ரெயின்ல ஏத்துறாங்க? ஆர்பிஎஃப் போலீஸ் என்ன பண்றாங்க? பேஸஞ்சர்சுக்கு கஷ்டமா இருக்குமோல்லியோ…”

என் எதிர் இருக்கையில் இருந்த பெண் கோபமாகக் கத்தினார். மொபைலில் காதுகளைச் சொருகாதவர்களெல்லாம் அந்த பெண்ணை திரும்பிப் பார்த்தனர். ஐம்பதுகளில் இருந்த அவர் பட்டுச் சேலை, மல்லிப்பூ சகிதம் முகூர்த்த நாளை சிறப்பிக்க திருமண நிகழ்வொன்றிற்கு போவது போல தெரிந்தது. வாயைத் திறக்காமலும் மூச்சை விடாமலும் அந்த அம்மாவைப் பார்த்து சின்னதாக இளித்தேன்.

“நான் ட்வீட் போடுறேன், சதர்ன் ரெயில்வேய டேக் பண்ணி…”

சொல்லிக் கொண்டே பின்னால் திரும்பி, ஒரு கையால் மூக்கைப் பொத்திக் கொண்டு, இன்னொரு கையால் மொபைலில் அவரை போட்டோ எடுத்தார். இதையெல்லாம் அந்த யாசகர் கவனிக்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்தும் பிறந்த நாட்களைச் சொல்லிக் கொண்டே எங்களைக் கடந்து அடுத்த பெட்டிக்குச் சென்றார்.

மாம்பலம் நிறுத்தம் வர, இறங்கி மூச்சை இழுத்து விட்டேன். இவ்வளவு நேரமும் கவனம் பெறாமல் போன மொபைலை பதற்றத்தோடு எடுத்து நலம் விசாரிப்பது போல, வாட்ஸ் அப்பை திறந்தேன். ரோஹினி வெங்கட்ராமன் மேடம் கால் பண்ணியிருந்தார். அறிமுகமான புதிதில் வாட்ஸ் அப்பில் காட்டிய அவர் பெயரை அப்படியே பதிவு செய்து வைத்திருந்தேன்.

“மேம் கால் பண்ணியிருந்தீங்க… இன்னிக்கு கடைக்கு வர்ரீங்க தானே…”

“யெஸ் மால்கம் சார், வந்திடுவேன். கன்ஃபர்ம் பண்ணத்தான் கால் பண்ணினேன்…”

ரோஹினி மேடத்தின் குரலைவிட நாய்களின் குரல்தான் பின்னணியில் மிகைத்தது. அபஸ்வரத்தோடு நாய்களின் கச்சேரி அரங்கேறுவதை வைத்து, தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். தன்னோடு பணிபுரியும் பெண்களையும் இன்று கடைக்கு அழைத்து வருவதாக கூறியிருந்தார். அவர்களுக்காக புதுப்புது மாடல்களை பிரத்யேகமாக எடுத்து வைப்பதாக நான் வாக்கு கொடுத்திருந்தேன்.

“கடைக்கு போயிட்டீங்களா சார்…?”

“ஆன் தி வே மேம்”

“ஓகே ஓகே அரவுண்ட் லெவன் தர்ட்டி வி வில்பி தேர்…”

“ஒரு முக்கியமான விஷயம்… உங்க கடைக்கு நான் ஆர்னமெண்ட்ஸ் சப்ளை பண்றது எங்க ஆஃபிஸ்ல யாருக்கும் தெரியாது…”

ரோஹினி மேடத்துக்கு குடும்பத்தில் ஒரு வாழ்க்கை, அலுவலகத்தில் ஒரு வாழ்க்கை, பாண்டி பஜாரில் ஒரு வாழ்க்கை போல… ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு முகம், காகிதம் மாதிரி. ரிசர்வ் பேங்க் அச்சகத்தில் அடித்தால் பணம், தினத்தந்தி அச்சகத்தில் அடித்தால் செய்தி, எதுவுமே அச்சடிக்கவில்லையென்றால் டிஷ்யூ பேப்பர்.

“ஓகே… மேம்… நான் மட்டும் அட்டெண்ட் பண்றேன்… மத்த ஸ்டாஃப்ஸ்லாம் கடைக்கு வர்ர மத்த கஸ்டமர்ஸ அட்டண்ட் பண்ற மாதிரி ஓனர்ட்ட சொல்லிடுறேன்…”

“தேங்ஸ் மால்கம்…”

நகரிலேயே பிரம்மாண்டமான கடை மட்டுமல்ல, பிரபலமான கடையும்கூட நான் வேலை செய்யும் இமிடேஷன் ஜுவல்லரி கடை. தங்க நகைக்கடைகளில் கிடைப்பதை விட அழகழகான டிசைன்களில் தரமான கவரிங் நகைகள் எங்கள் கடையில் கிடைக்கும். பஜாருக்கு  வரும் பெண்கள் எங்கள் கடைக்குள் வராமல் செல்ல மாட்டார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏதாவதொரு நெக்லஸை, செயினை கழுத்தில் மாட்டி, ‘அவ போட்டிருக்கிறத விட இது நல்லா இருக்குலடி…’ என்று சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். எதையும் வாங்குகிறார்களோ இல்லையோ, வந்து, அணிந்து, அழகு பார்த்துவிட்டு அந்தப் பொருட்களை வாங்காவிட்டாலும்கூட மகிழ்ச்சியாக ஆசுவாசமாகிக் கொள்வதை குறும்புடன் நான் வேடிக்கை பார்ப்பதுண்டு.

கடையை நோக்கி நடந்து கொண்டே, ஆண்டன் செகாவ் பார்வைக்குள் இப்போது ரோஹினி மேடத்தை இழுத்து வந்தேன். தாம்பரத்தில்தான் அவருக்கும் வீடு. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கெல்லாம் பெசண்ட்நகர் கடற்கரைக்கு காரில் சென்று, அங்குள்ள நாய்களுக்கு தன் கைகளாலேயே இறைச்சிகளை கொடுப்பது ரோஹினி மேடத்தின் வழக்கம். இதற்காக சனிக்கிழமை இரவே ஆட்டுக்கறி, கோழிக்கறி என விதம்விதமாக வாங்கி வைத்து விடுவார். நாய்களுக்குத்தானே என இறைச்சிக் கழிவுகளை வாங்குவதில்லை.

“நானே நாய்களுக்கு ஊட்டி விடுவது சந்தோசமா மனசுக்கு நிம்மதியா இருக்கும் மால்கம்…” ஒருமுறை என்னிடம் இப்படி கூறும்போது, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது போல தாய்மையால் குழைந்தார்.

செகாவ் தந்த கண்ணாடியை அணிந்து ரோஹினி மேடத்தை பார்க்க காரணம் இல்லாமல் இல்லை. அவர் ரொம்ப கறாரான சைவப் பிரியர். இருந்தாலும் அசைவத்தோடு புழங்கும் அளவுக்கு, நாய்கள் மீது அவர் காட்டும் பாசத்தை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் செகாவ் கண்ணாடிப் பார்வையின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும். எனக்கும் அவருக்குமான தொடர்பை முதலில் சொல்லி விடுகிறேன். ஐந்து ஆண்டு கால நட்பு. நட்பு என்றால் நட்புதான். என் வயதை ஒத்த அவரை நான் மேடம் என்றுதான் அழைக்கிறேன். 40களைத் தாண்டியிருந்தாலும் வயதானவர் போலத்தான் தெரிவார்.

ரோஹினி மேடம் ஐடி நிறுவனமொன்றின் ஹெச்.ஆர். வீட்டுக்காரர் பிரபல வழக்கறிஞர். சொத்து சுகத்துக்கு குறைவில்லை. ஆனாலும் ரோஹினி மேடத்தின் உடையலங்காரம் ரொம்ப சாதாரணமாகத்தான் இருக்கும். சோகத்தின் நிழலிலேயே காலம் தள்ளுவதை அவர் அணியும் உடைகள் காட்டிக் கொடுத்து விடும். அதைவிட அவர் முகத்தில் படிந்திருக்கும் துயரத்தின் சாயலை யாரும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதை மறைக்க, சிரித்து சிரித்துப் பேசுவதை இயல்பாக்கிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் கண்கள் காட்டிக் கொடுத்துவிடுமல்லவா… மனிதர்களிடம்தான் இயல்புக்கு மீறி வலிந்து சிரிக்க முடியும். தனிமையில் அந்தக் கவலை அவரை வாட்டி வதைத்துக் கொண்டேதான் இருந்தது. அந்த வாட்டம் மிகைத்து கண்களிலேயே தங்கி விட்டதால், அவர் கண்கள் எப்போதுமே சிரித்தது கிடையாது.

முதன்முறையாக அவர் எங்கள் கடைக்கு வந்த போது, பாசி மணிகளைக் கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கலைநயமிக்க கழுத்து மாலை செய்திருப்பதாகவும் அதை விற்றுத்தர முடியுமாவென்றும் கேட்டார். வேலை வெட்டியில்லாத இந்த அம்மா நம்மிடம் எதையாவது தள்ளிவிடப் பார்ப்பதாக, அவர் கொண்டு வந்த செயின்களை வேண்டாமென முதலாளி கூறிவிட்டார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர், கடைக்குள் வந்து கவரிங் நகைகளை பார்த்தார். அப்படியே என்னிடம் பேச்சு கொடுத்து தன்னிடம் உள்ள கழுத்து மாலையைக் காட்டினார். அதனுடைய வேலைப்பாடு எனக்கு பிடித்திருந்தது, கஸ்டமர்ஸ் இதை விரும்பி வாங்குவார்கள் என கணக்கு போட்டேன். முதலாளியை சரிக்கட்டி, வாங்கிக் கொள்வதாக உறுதியளித்தேன். எதையோ சாதித்து விட்டது போல, அப்போது அவர் கண்களால் மெலிதாக சிரித்தார். அந்தச் சிரிப்பை அவரிடம் பின்பு நான் எப்போதும் கண்டதில்லை. இப்படித்தான் எனக்கும் ரோஹினி மேடத்துக்குமான நட்பு தொடங்கியது.

வாரா வாரம் ஏதாவது புதுப்புது டிசைன்களில் அணிகலன்களை செய்து கொண்டு வருவார். அவர் கொண்டு வருவது அத்தனையும் நல்ல விலைக்கு விற்றது. எப்படித்தான் இதையெல்லாம் செய்வதற்கு இந்த மேடத்திற்கு நேரம் கிடைக்கிறதோ என முதலாளி அங்கலாய்த்துக் கொண்டார். ஆனால், அதன் ரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். ரகசியம் என்பதை விட சோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நாள் கடையில் வைத்து, என் காதுகளில் மட்டும் விழுவது போல மெதுவான குரலில் சொன்னார்.

“எனக்கு குழந்தை இல்லை மால்கம்… தனிமையில இருக்கும் போது, என்னைய வாட்டும் கவலை தெரியாம இருக்கத்தான், இந்த மாதிரி ரொம்ப மெனக்கெட வேண்டிய பொருட்களை, கவனத்தை செலுத்தி செஞ்சி, கவலையே இல்லாத மாதிரி வாழ்ந்திட்டு வர்ரேன் மால்கம்…”

உள்ளத்தின் ஆழத்தில் கிடந்து அரிக்கும் அந்தச் சோகத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள அவர் தயங்கவில்லை. கடையில் வேறு யாரிடமும் இதைச் சொல்லிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியுமா? என் உள்ளம் கல்லறை மாதிரி. ரகசியம் இங்கு காக்கப்படும் என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

“என்ன மால்கம்… என்னோட இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் சரிதானே…” சொல்லிவிட்டு தொண்டையை அடைத்த பாரத்தை சரி செய்வது போல வழக்கமாக உதிர்க்கும் ஆயத்த சிரிப்பை உதிர்த்தார்.

அதிர்ச்சியில் உறைந்து போய் அவர் முகத்தையே பார்த்தேன். கண்களை மூடி நாடியை இடது பக்கமாக உயர்த்தி, மெலிதாக சிரித்தவாறே கண்களைத் திறந்து, “வாழ்க்கை அப்டியே போகுது…” என்றார். என் மீது ஏதோ ஒரு அபிப்ராயத்தில் குழந்தை இல்லாத குறையை, ரகசியத்தை என்னிடம் சொல்லிவிட்டார். இந்தச் சோகம்தான் ரோஹினி மேடத்தை செகாவ் தந்த கண்ணாடி வழியாகப் பார்க்க என்னைத் தூண்டியது.

கடை திடீரென பரபரப்பானது. 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள். விதம் விதமான உடையலங்காரத்தில் எங்கள் ஷோரூமுக்குள் ஏறியதும் பஜாரில் உள்ள இளவட்டப் பணியாளர்களின் கண்களெல்லாம் எங்கள் கடையை மொய்த்தன.

“இவர்தான் மால்கம்… உங்களுக்கு தேவையானத சார்ட்ட கேளுங்க…”

என்னை அறிமுகப்படுத்திய ரோஹினி மேடம், வெள்ளித் திரையில் கதாநாயகிகளாக நடித்து காணாமல் போய், சின்னத் திரை சீரியல்களில் பந்தாவாக வரும் அழகான வில்லியைப் போல ஆடை அணிந்திருந்தார். வெண்ணிலா ஐஸ் க்ரீம் கலரில் இருக்கும் அவர், நாவல் பழக் கலரில் அணிந்து வந்த சேலை, அவரின் வயதை குறைத்துக் காட்டியது. ஐந்து ஆண்டு கால நட்பில் இன்றுதான் இவ்வளவு அழகாகவும் மகிழ்ச்சியாகவும் அவரைப் பார்த்தேன். அவர் கலகலப்பாக இருக்கும் இந்த நேரத்தில், இத்தனை நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆவலை அவரிடம் வெளிப்படுத்தி விடுவது என முடிவு செய்தேன்.

கடையில் இருந்த புதுப்புது அணிகலன்களை வந்தவர்களுக்கு காண்பித்தேன். வெள்ளியில் செய்யப்பட்டு கோல்ட் கவரிங் பூசிய நகைகள், விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் தங்க நகையைப் போலவே மிண்ணுவதோடு, மற்ற கவரிங் நகைகளைப் போல உடனே  பல்லிளிக்காமல் கொஞ்ச காலம் கூடுதலாக கிடக்கும். அந்த வகை ஆபரணங்களையே வந்த இளம் நங்கையர் அனைவரும் அள்ளினர்.

இளம்பெண்களில் சிலர் ஆர்வமிகுதியில் கண்ணாடி வளையல்களைப் பார்த்ததும் எடுத்து மாட்டி உடைத்தனர். ஒத்த ஒத்த வளையல்களாக அணிந்தால் கண்ணாடி வளையல் உடைந்து விடும். கண்ணாடி வளையல்களை உடையாமல் அணியும் வித்தையை அவர்களின் கைகளைப் பிடித்து வளையல்களை அணிவித்து கற்றுக் கொடுத்தேன். இளம்பெண்களுக்கு வளையல் மாட்டி விட வாய்ப்புக் கிடைக்காத கடை ஊழியர்களின் சாபத்துக்கு ஆளாவதையும் நான் கவனிக்காமல் இல்லை. வந்த அனைவரும் கண்ணாடி வளையல்களை மாட்டிக் கொண்டு, கும்பலாக என்னைச் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர். இளம்பெண்கள் சூழ நிற்க நான் கொஞ்சம் சங்கடப்பட்டுத்தான் போனேன்.

என்னிடம் பேச வாய்ப்பு கிடைத்த எல்லோருமே, ரோஹினி மேடத்தின் சிறப்பம்சத்தைச் சொல்லி ஏதாவதொரு வகையில் அவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தனர். ரோஹினி மேடம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நினைத்துக் கொண்டனர். ரத்ததானம் செய்வது, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது… இப்படி சமூகம் தெரிந்து வைத்திருப்பது முதல், தெரியாத சமூக சேவைகளையும் ரோஹினி மேடம் செய்து வருவதாக புகழ்ந்தனர். எனக்குள் ஆர்வம் அதிகரித்தது. அடுத்த சிறுகதை ரோஹினி மேடத்தை மையமாக வைத்துத்தான் எழுத வேண்டும், அதுவும் முழுக்க முழுக்க உணர்வுகளும், உளவியலும் சார்ந்து எழுத வேண்டும் என முடிவு செய்தேன். அதேசமயம், என் உள்ளத்தை அரித்துக் கொண்டிருப்பதை கேட்டுவிட சாதகமான தருணத்தை எதிர்பார்த்தேன்.

எல்லோரும் வெளிச்சம் மிகுந்த இடத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். உற்சாகமாக நேரம் போக்கியதால், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ரோஹினி மேடத்துக்கு, சேலைக்கு பொருத்தமாக அடர் சிவப்பு வண்ண கண்ணாடி வளையல்களை இரண்டு கைகளிலும் போட்டு விட்டேன். என் அருகில் தனியாக இருந்த அவரிடம் தயக்கத்தை விட்டு கேட்டே விட்டேன்.

“மேடம் நீங்க ஏன் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக்கூடாது?”

“ஆமாப்பா… என் வீட்டுக்காரர்கூட அடிக்கடி கேப்பாரு… நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்… அவரும் இந்தப் பேச்ச இப்ப எடுக்குறதில்ல…”

இதை அவர் சொல்லிய விதம் எனக்கு வியப்பாக இருந்தது. குழந்தை பற்றிய பேச்சில், முதன்முறையாக அவர் முகத்தில் வழக்கமாகக் காணும் துன்பச் சலனத்தை நான் பார்க்கவில்லை.

“ஏன் மேடம்…?’’

“என்ன சாதியோ, என்ன ரத்தமோ… யாருக்குத் தெரியும்… அதனால வேண்டாம்னு சொல்லிட்டேன்…”

படபடவென சொல்லிவிட்டு ஓடிச் சென்று, செல்ஃபி எடுப்பதில் மும்முரமாக இருந்த சக பணியாளர்களோடு ஒட்டிக் கொண்டு வலுக்கட்டாயமாக உதட்டை இழுத்து செயற்கை சிரிப்பை செல்ஃபியாக்கினார். ரோஹினி மேடம் கதையை எழுதுவதென்று தீர்மானித்து அதற்கு ஒரு தலைப்பையும் மனதில் இறுதி செய்தேன். அந்தத் தலைப்பு என்னவாக இருக்குமென நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

•••••

மால்கம்  

இயற்பெயர் குதுப். சுருக்கமாக காஜா குதுப்தீன்.

இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை என்ற கரற்கரை கிராமம் சொந்த ஊர். பொறியியல் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, பதிப்பகம், ஊடகம் என எழுத்து துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து, தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் senior Deputy Editor aaka paNipuriwthu varukiRaar.

‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்ற சிறுகதைத் தொகுப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

‘என் புரட்சி – Bio Fiction’ அமெரிக்க கறுப்பினப் புரட்சியாளர் மால்கம் X- ன் வரலாற்றை இலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மால்கம் X அறிமுகமும் அரசியலும் நூலை எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *