ரெண்டு ஆள் சேர்ந்து கை கோர்த்தாலும் பிடிக்க முடியாத அளவுக்கு அந்த பெரிய மலைவேம்பு மரத்தோடு அடிமரம் படர்ந்திருக்கு. பச்சைப் பசேல்னு கை கையா பசும் இலைகளும் மூக்குத்தி போல ஜொலிக்கும் வெந்நிற பூக்களும் உருண்டையான கரும்பச்சைக் காய்களுமாய் அந்த எடமே ஒரு பசுங்கசப்பு மணம் பரவியிருக்கு. அந்த மரத்தடியில தான் அந்த வனத்துறை எலிமெண்டரி ஸ்கூல் இருக்கு. அப்பவெல்லாம் வனத்துறை கட்டிடங்களுக்கு பச்சை வண்ண பெயிண்ட் தான் அடிப்பாங்க. பாசி படர்ந்த மங்களூர் ஓடுகள் வேய்ந்த கூரையும் பச்சை வண்ண ஆயில் பெயிண்ட் ஒளிரும் சுவர்களும் சிவப்பு சிமெண்ட் பூசிய பெரிய வராண்டாவும் முன்புறம் கொடிக்ககம்பமும் ரொம்ப அழகா இருக்கு. பள்ளிக்கூட முகப்புல பாதி மண்ணுல புதச்சி முக்கோணம் முக்கோணமாக நடப்பட்ட செங்கல்கள் பதிச்ச நடைபாதையத் தாண்டி மரத்து கிட்ட போயி நின்னு அண்ணாந்து பாத்துகிட்டு நிக்கறா லீலி புஷ்பம். அடர்ந்த எலைங்களுக்கு நடுவுல தெரியற வானத்தையும் கப்பு கப்பா பிரிஞ்ச வெந்நிறக் கிளைகளையும் பார்க்க அவளுக்கு எப்பவுமே பிடிக்கும். மரத்தடி முழுக்க பழுப்பு இலைகளும் சருகுகளும் நீள்உருண்டையான மல வேப்பங்காய்களுமா கிடக்கு. அதுல நல்ல காய்ங்களா பாத்து கோலி வெளையாட பொறுக்கிட்டு இருந்தவள “டீ லீலி புஷ்பம் அந்த களுதக்காரிச்சி உன் துணிய போட்டுனு இருக்காடீ வா”ன்னுட்டு புஸ்பாளும் வேங்கிட்டாளும் வந்து கையப் புடிச்சு இளுத்துட்டு போறாங்க. லீலி புஷ்பம் வேகமா போறா.
“அஞ்சாங்கிளாஸ் வரிசையில போயி நில்லுங்க. இங்க என்னா பண்றீங்க?” சில்வர் ஓக் மரத்து கிட்ட போகையில கௌரி டீச்சர் வெரட்டி விடுது. ப்ரேயர் தொடங்கிடுச்சி. வரிசையில போயி பின்னாடி நிக்கறாங்க. “உன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” கரெக்டா இந்த வரி வரும்போது முன்னாடி நின்னு பாடற கீதா டீச்சர் கொரல் நடுங்குது.டெய்லியும் அந்த பாட்டை இப்பிடித்தான் தொண்ட நரம்பு பொடைச்சுகிட்டு அந்த டீச்சர் பாடும். லீலி புஷ்பம் இப்பத்தான் வரிசையில கொஞ்சம் முன்னாடி நிக்கற களுதக்காரி ஷோபாவைப் பாக்கறா. கிறிஸ்மசுக்கு எடுத்த இவளோட புது காபி பொடி கலர் கவுனை போட்டிருக்கா. இவளுக்கு அழுகையா வருது.பிரேயர் முடிஞ்சி எல்லாரும் வகுப்புக்கு லைனில் போவயிலயே புஸ்ஸு, சுமு,மகா எல்லாரும் சோபாவைக் கேக்கறாளுங்க.கிளாசுக்குள்ள வந்ததும் லீலி புஷ்பம் ஏண்டின்னு அவ சட்டையும் புடிக்கறா. மூக்கெல்லாம் செவந்து போயி அவளுக்கு கோவமும் அழுகையும் சேந்து வருது.
ஷோபா சிரிச்சிட்டே எங்க அம்மா தாண்டி போட்டு வுட்டுச்சி. வெள்ளாவிக்கு வர துணிய நாங்க போடுவம்ன்னு சொல்றா.
லீலி புஷ்பத்துக்கு வெக்கமா போயிடுச்சு. இந்த அம்மா ஏன் எல்லாத்துணியையும் இவங்க கிட்ட வெளுக்க போடுதுன்னு நெனைக்கிறா. அந்த ஊருல டோபி வேல பாக்கறது அவங்க குடும்பம் தான்.அவங்க வீட்டுல நெறய கழுதைங்க முன்னங்காலை கயித்துல கட்டிப் போட்டு திரிஞ்சிகிட்டு கெடக்கும்.ஷோபா நெறய நாள் ஸ்கூலுக்கு வராம ஆத்துக்கு கழுதைங்கள ஓட்டிட்டு போவா. அதனால அவள எல்லாருமே களுதக்காரிச்சின்னு தான் கூப்பிட்டாங்க. அப்பவெல்லாம் அது பெரிய தப்பா யாருக்கும் தெரியலை. அவங்க ஸ்கூலுல மொண்டிக்காலன் கருவாயன் பல்லன் குள்ளச்சி ஒச்சக்கண்ணி வண்ணாத்தி குளுவச்சி கீழ்த்தெருச்சி கொறவக்கொட்டாக்காரி செட்டிச்சி பாப்பாத்தியான்னு எல்லாம் சாதாரணமா வாத்தியாருங்க வாத்திச்சிங்க கூட கூப்புவாங்க. இப்ப மாதிரி அதெல்லாம் தப்புன்னு சட்டமெல்லாம் கெடையாது.
லீலி புஷ்பம் புடிச்சு கேட்டதால ஷோபா ஒண்ணுக்கு பெல்லுல வூட்டுக்கு ஓடிட்டா.
அன்னைக்கு சாயங்காலம் லீலி புஷ்பம் அம்மா கிட்ட அழுதுகிட்டே சொல்றா. . “அந்த வண்ணாத்தி வரட்டும் அவள் பிச்சு பேன் பாக்கறேன்”னு தங்கம்மை டீச்சர் சரியான வசவு வையுது.
ரெண்டு நா களுதக்காரிச்சி ஸ்கூலுக்கே வரலை. அப்பறமா சனிக்கெழம காலையில இவங்க வீட்டுக்கு அழுக்குத் துணி எடுக்க வந்தா. அன்னிக்கு லீவுன்றதால சாமும் லீலி புஷ்பமும் வீட்டுக்கு பின்னால ஈர மண்ணுல கொட்டாங்குச்சி வச்சி இட்லி செஞ்சு அவங்கண்ணன் பென்சரு கிட்ட காட்டிட்டு இருந்தாங்க. பென்சருக்கு நடக்க முடியாது. மர பெஞ்சியில் படுத்துகிட்டே இவங்கள பாத்து சிரிச்சிட்டு இருந்தான். களுதக்காரிச்சி வந்து இவங்க கூட சேந்து வேக வேகமா கொட்டாங்குச்சியில மண்ண நெரப்பி கவுத்து குமிழ் குமிழா இட்லி செஞ்சா. தீடீர்னு நெனப்பு வந்து அவ கொணாந்த மூங்க கூடையில இருந்து ரோஸ் கலர் சப்பாத்திக் கள்ளிப்பழங்கள எடுத்தா. கல்லுல தேச்சி முள்ளையெல்லாம் எடுத்துட்டு ரெண்டா பிச்சி இவங்களுக்கு குடுத்தா. இன்னொரு பழத்தை பிச்சி எடுத்து பென்சர் வாயில குடுக்கறா. அவனும் சாப்பிடறான். எல்லார் வாயும் ரோஸ் கலரா இருக்கறத பாத்து அவங்களே சிரிச்சிக்கறாங்க. தங்கம்மை டீச்சர் அப்பத்தான் துணிய எடுத்துனு வருது.
“அடியே அவனக்கு ஏண்டிகுடுத்த”ன்னு ஷோபா மண்டையில ரெண்டு போடுது. அது நல்ல பழங்கா. பென்சருக்கு புடிக்கும்னு சொல்றா. அவன் சிரிக்கிறான். சத்தங்கேட்டு வெளிய வந்த ஐயா கிட்ட லீலி புஷ்பமும் சாமும் அப்பா களுதக்காரிச்சி ரோஸ் பளங்குடுத்தான்னு சொல்றாங்க..
“அப்பிடி யாரையும் செய்யற வேலையச்சொல்லி கூப்பிடக்கூடாது. அவளும் உங்கள மாறி தான, அவ பேரச்சொல்லி கூப்பிடனும்”னு ஐயா சொல்லவும் இவங்க தலையாட்டறாங்க. அவங்கய்யா இப்படித்தான் எல்லாரையும் ஒண்ணா நடத்தனும்னு சொல்வார். அவர் ஜெயகாந்தனோட பிரண்ட். ஜேகே மாதிரியே மீசைக்காரர். அவரை ஜவ்வாது மலைக்கு வரவச்சி கூட்டமெல்லாம் நடத்துனார். நெறய புக் படிப்பார். நான் ஒரு கம்யூனிஸ்ட்னு அடிக்கடி சொல்வார். லீலி புஷ்பத்துக்கு கம்யூனிஸ்ட்னா என்னான்னு தெரியாது. ஆனா அப்பா சொல்வதைப் போல தோழர்னு எல்லாரையும் சொல்லனும்னு ஆசப்பட்டா.
மக்யாநா காலையில சாமும் லீலி புஷ்பமும் ஸ்கூல் பைய மாட்டிகிட்டு கையில சவட்டக்குச்சி ஒண்ண வச்சி வழியில வளர்ந்து கெடக்கற செடிங்கள அடிச்சிகிட்டே ஸ்கூல் போறாங்க. மாட்டாஸ்பத்திரி தாண்டையில எதிர்க்க கழுதைங்கள ஓட்டிட்டு ஷோபா வரா. கழுதைங்க முன்னங்கால எக்கி எக்கி வச்சு போகுதுங்க. ஷோபா கயிறு போட்டு கட்டி ஒரு கழுதக்குட்டிய பிடிச்சிருக்கா. நல்ல சாம்பல் கலருல முடியெல்லாம் பளபளன்னு மினுக்க மருண்ட கண்ணோட அவ்ளோ அழகா அந்தக் கழுதக்குட்டி நடக்குது. சாம் போயி அதத் தொடறான். லீலி புஷ்பம் அவனைப் புடிச்சி இழுக்கறா.
நீ ஏறிக்கிறயான்னு சொல்லிட்டே சாமை தூக்கி களுதக்குட்டி மேல உக்கார வச்சுட்டா ஷோபா. அவன் குதுர ஓட்றாப்புல ஹ்ஹோய் ஹோய்னு ஜாலியா அத வெறட்டுறான். லீலி புஷ்பம் பதறிப்போயி டேய் எறங்குடான்னு கத்தறா. அவனுக்கு அடிபட்டா தங்கம்மை கிட்ட இவளுக்குத் தான் மொத்து உழும். அப்பறம் ஒருவழியா லீலி புஷ்பமும் சாமுவேலும் பள்ளியோடம் போயிட்டாங்க.
அன்னிக்கு மத்யானம் ஸ்கூலுக்கு வந்த ஷோபா இவள மரமல்லி மரத்தடிக்கு கூட்டிட்டு போயி பச்ச கம்பங்கதுரு குடுக்கறா. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சிநேகிதிங்க ஆயிட்டாங்க. இவங்க ஒண்ணா சுத்தறத பாத்து வகுப்புல தாஜூதீன் சுரேசு தொளசி வேங்கட்டா எல்லாருமே ஆச்சரியப்பட்டு கேக்குறாங்க. வழக்கமா லீலி புஷ்பம் போல நல்லா படிக்கிற பசங்க படிக்காத பசங்க கூட சேறமாட்டாங்க. ஷோபாவுக்கு அவ பேரையே சரியா எழுதத் தெரியாது.
ஆனா லீலி புஷ்பத்துக்கு படிப்பைத் தவிர ஒரு எழவும் ஒழுங்கா பண்ணத் தெரியாது. தங்கம்மைக்கு நடக்க முடியாம படுக்கையில் கெடந்த மூத்த மகன் ஸ்பென்சரை விடவும் இவளைப் பத்தின கவலை அதிகம். எங்க போனாலும் எதுலயாவது எடறி விழறா, பேக்லாண்டு கணக்கா எப்ப பாரு கதைபுக் வாசிச்சிகிட்டு வாய் பாத்துட்டு திரியறா, கடைக்கு சில்லற குடுத்தா தொலச்சிட்டு வந்துடறா. நமக்குப்பின்ன இந்தக் கூறுகெட்டவ எப்படித்தான் உலகத்துல பொழைக்கப்போறாளோன்னு பொலம்புவா. இவங்க ஐயா “ ஏ தங்கம் யாரு என்னமா ஆகப்போறாங்கன்னு இப்ப என்னடி தெரியும். அதெல்லாம் ஆண்டவர் விட்டதுன்னு சிரிப்பார். அந்தக் கிறுக்கச்சி தான் இதையெல்லாம் கதையா எழுதப்போறான்னு தங்கம்மைக்குத் தெரியல..
ஷோபாவுக்கு படிப்பு வராதே தவிர மத்த எல்லாத்துலயும் சூரி. அவ பண்ற எல்லாமே லீலி புஷ்பத்துக்கு ஆச்சர்யமாய் தான் இருக்கு.முக்கியமா அவ நெனச்சா பள்ளியோடத்துக்கு லீவ் போடுவா, அப்பறம் ராம் மூர்த்தி சார் வாய்பாடு சொல்லச்சொன்னா ரெண்டாவது பீரியட்லயே வகுப்புல இருந்து ஓடிடுவா. ஊர்ல எந்த வீட்டுக்கும் உரிமையா போயிட்டு வருவா. லீலி புஷ்பத்தோட அப்பாவும் அம்மாவும் அங்கேயே பக்கத்துல ஹைஸ்கூலுல இருக்கறதால இவளால பொய் சொல்லி லீவ் போடவே முடியாது. மத்தியானம் வீட்டுக்கு போயி சாப்பிட்டுட்டு லேட்டா வந்தாலே ராஜேஸ்வரி டீச்சர் தங்கம்மை கிட்ட சொல்லிடும். இவளை வெளையாடவே ரொம்ப தூரம் அனுப்பாது தங்கம்மை.
ஷோபா விரும்புனாத்தான் எதையும் செய்வா. ஒருக்கா இவ சோறு தின்னுட்டு இருந்திருக்கா. அவ அம்மா சின்னு ‘ டீ சோப்பா அப்பறமா அந்த வெள்ளாவிப்பானைக்கு தண்ணி ஊத்திடு’ன்னு சொல்லியிருக்கா. தின்னுட்டு இருந்த மண்கலயத்தை தூக்கி ஆத்தா மூஞ்சுலயே போட்டுட்டு அடித் தேவிடியாக் கெளவி சோறு துன்றப்ப வேல சொல்லுவியாடீன்னு புடிச்சு நாலு சாத்து சாத்தியிருக்கா. அவ அப்பன் அண்ணிக்காரி எல்லாருமே இவகிட்ட வாயி குடுக்க பயப்படுவாங்க.
லீவு நாளுல ஷோபா லீலி புஷ்பத்தை கூட்டிக்கிட்டு காட்டுல மயில்முட்டை, கரண்டிக்காயி நாகபுஷ்ப மரம் எல்லாம் காட்டுவா. ஏரிக்கரையில ஆடுமேய்க்கற சராய் கெழவன் எகிறி பறிக்கற சின்னப்பொண்ணு கெளுவி தூண்டில் போடற ராசாக்கண்ணு எல்லாருமே இவளப்பாத்தா எதாவது கேப்பாங்க. அவங்க எல்லாரையும் மாமா சித்தி ஆசா(ஆயா) சீயான்னு எதாவது மொற சொல்லி கூப்புடுவா. அவங்க கிட்ட மாங்கா வறுத்த அரிசின்னு எதையாவது வாங்கித் தின்னுகிட்டு இவளுக்கும் குடுப்பா. ஷோபா யார்கிட்ட பேசனாலும் இவ என் பிரண்டு புஷ்பம் நெறய புக்கு படிச்சிட்டே இருப்பா. எனுக்கு பனிமலையில ஓடற ஐஸ்கட்டி ஆறு தங்க கலர் மரம் பத்தி எல்லாம் சொல்லி இருக்கா. நாங்க ரெண்டு பேரும் ரஷ்யாவுக்கு போகப்போறோம்னு சொல்லுவா. அவங்க எல்லாருமே ஷோபா சொல்றத நெசமாவே ஆச்சர்யமா கேட்டுட்டு இவ கிட்ட “உங்க அய்யனாட்டம் நெல்லா படி மனா”ன்னு சொல்வாங்க. இவ படிக்கிற புஸ்தகத்தை எல்லாம் பொரட்டி பாத்துட்டு லீலி எனுக்கும் இதுல என்னா இருக்குன்னு சொல்லுடீம்பா. இவளும் கோபல்லத்துல பசு மடக்கன கதை, ஹென்றின்னு ஒரு வெள்ளைக்காரன் பழய வூட்ட இடிச்சு கட்ண கதையெல்லாம் சொல்வா. ஷோபாவுக்கு விஜயகாந்த் படம் மட்டுந்தான் புடிக்கும். இவளுங்க ரெண்டு பேத்துக்கும் விஜய் சிலுக்கு ரெண்டு பேரையும் எப்படியாவது பார்க்கணும்னு ஆசை. ஏன்னா அவங்கதான் இவங்க மாறியே கருப்பா இருந்தாங்க.
அடுத்த வருஷம் இவங்க ஆறாவது ஹை ஸ்கூல் வந்துட்டாங்க. விழுதுகள் நெறஞ்ச பெரிய ஆலமரம், கூம்பு கூம்பா நிக்கற அசோகமரங்க, தங்க கலர்ல பூக்கற சில்வர் ஓக் மரங்க, ரோஸ், வெள்ளை மஞ்சள் பூக்கள் நெறஞ்ச போகன்வில்லா புதர்கள், தங்கமா பூத்துச் சொரியற சரக்கொன்றை மரங்கள் பெரிய பெரிய சீமைவாகை மரங்கள் அழகா புல்லு மொளைச்ச கிரவுண்ட் மேபிளவர் மரங்கள் அப்டின்னு அத்தனை அழகான பள்ளிக்கூடம் எங்கேயுமே இருக்காது. லீலி புஷ்பத்துக்கு அந்த கேம்பசும் புதுப்புது நண்பர்களும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஷோபா இங்கயும் இவகிட்ட உரிமையா பேசறா.
அதனாலயே லீலி புஷ்பத்துக்கு அவளப் புடிக்குது.. அந்த வயசுலயே ஷோபாவுக்கு மூணு காதல்கள் இருந்துச்சு. போஸ்கோ பண்ணையில வேல பாக்கற ஒரு அண்ணன் செகப்பா கண்ணாடி போட்டுகிட்டு ஒசரமா இருப்பாரு. ஷோபா போயி அந்தண்ணன் கிட்ட நின்னு புங்க மரத்து மறைவுல பேசிட்டு வருவா. அப்பறம் வெல்பேர் ஹாஸ்டலில் தங்கி ப்ளஸ் டூ படிக்கிற பிரபு அண்ணன் கிட்ட சாயந்தரமா ஏரிக்கரையில நின்னு பேசிட்டு இருப்பா. அந்த அண்ணனுக்கு ஹெர்பேரியம் ஷீட் ஒட்டறதுக்கு சங்குப்பூ தென்னம்பூ எல்லாம் பிச்சிட்டு வந்து பழைய புக்குல வச்சி கொண்டு போயி குடுப்பா. அப்பறம் இவங்க ஊருல திங்கக்கெழம கூடற சந்தைக்கு பருகூர்ல இருந்த வளையல் ரிப்பன் விக்கற ஒருத்தன் வருவான். அவனப் பாக்கவும் ஷோபா போவா. லீலி புஷ்பத்துக்கு இந்தக் கதைங்கள கேக்க புடிக்கும். ஆனா பயமா இருக்கும். தங்கம்மை காதுல உழுந்தா வெறகு கட்டயாலயே இவள வெளுக்கும்.
ஒரு நா “ ஷோப்பா நீ இத்தன பேரை லவ் பண்ற யாரக் கட்டிக்குவடீன்னு கேட்டா.
அவகொஞ்சங்கூட யோசிக்காம “இவனுங்க எல்லாம் சும்மா பிரண்டுடீ. நானு உங்கண்ணன் பென்சரைத்தான் கட்டிக்கப்போறே”ன்னா.
லீலி புஷ்பத்துக்கு கெதக்குன்னுச்சி. அடிப்பாவின்னு பையறா.
“நெசமாத் தான்டி அவன் நடக்கலன்னாலும் எனுக்கு அவனை ரெம்ப புடிக்கும். நான் கல்யாணம் பண்ணிகிட்டா அவன நல்லா பாத்துக்குவன்டீ. என்னா உங்க அப்பன் அந்த மீசைக்காரரப் பார்த்தா தான் பயமா இருக்கு”
இதுக்கப்புறம் ஷோபாவைப் பாத்தாலே லீலி புஷ்பத்துக்கு கோவம் வருது. அவ வந்தாலே பேசாம திரும்பிக்குவா. ஒரு சனிக்கிழமை காலையில இவங்க வீட்டு பின்னாடி வந்து ஷோபா கூப்பிட்டா. இவ பேசல.
“டீ அஞ்சு தல பாம்பு பாக்கப்போறேன். வோணும்னா வா’’
”போடீ நீ பொய் சொல்ற”
”இல்லடி சாமி சத்தியமா நேத்து பாத்தேன். வா முட்டையிட்டு அய்வம் காத்துனு இருக்கு. காட்டறேன்.’ இவளுக்கு பயமா இருக்கு. ஆனாலும் போறதுக்கு ஆசையா இருக்கு. வாடின்னு கையப்புடிச்சி இழுத்துட்டு போறா. ஏரிக்கரை மேடு பெரிய பெரிய கருப்பு பாறைங்க சுருள் சுருள் கொடியில செகப்பா பூத்திருக்கற மயில் மாணிக்கம் பொதரு எல்லாந்தாண்டி கோமட்டேரி காட்டுக்குள்ள போறாங்க. அங்க ஒசரமா நிக்கற நாகப்பழம் மரத்த காட்டினா ஷோபா.
“அங்க பாரு டீ அந்தக் கெளையோட போங்குல நாகப்பாம்பு படுத்துனு தலையத்தூக்கி யாருன்னா முட்டய எடுக்க வராங்களான்னு பாக்குது”ன்னு மெதுவா சொல்றா. லீலி புஷ்பம் எக்கி எக்கி பாக்கறா. கிளையில எதோ அசையுது. ஆனா பாம்பெல்லாம் தெரியல.
“ஒண்ணும் இல்லையேடி”
“சத்தமா பேசாதடி பாம்புக்கு கேட்டா நம்பள தொரத்தும். ஏண்டி அஞ்சு தலையோட தங்கக்கலர்ல நாகப்பாம்பு ஆடுது உனுக்குத் தெரியலயா”
”இல்லை”
”ஐயையோ வாடீ ஓடிடலாம். பாம்பு நம்பள பாத்துடுச்சி”
மூச்சிறைக்க ஓடையில, ஏ பாம்பு தொரத்துனா வளஞ்சி வளஞ்சி ஓடணும்டின்னா.
அவ கழுத்த புடிச்சு சாவடிக்கனும்னு லீலி புஷ்பம் தொரத்துனா. ஒரு வழியா ஏரிக்கரைக்கு வந்துட்டாங்க. மூச்சு வாங்க வாங்க புல்லு தரையில் குந்திகிட்டே ஷோபா சொல்றா! “ அடீ லீலி புஷ்பம் நீ ஏசப்பா கும்படறவ தான, பொட்டு வைக்கல. அதான் உனுக்கு நாகாத்தா கண்ணுக்கு தெம்படல”
”போடி நாயே. உன்னால தான் எனுக்கு கால்ல ரத்தம் வருது”.
”இல்லடீ.நெசமாவே அஞ்சு தலைய நான் பாத்தேன். எதுக்கும் ராவுல துண்ணூறு பூசிக்கோ. தேடிக்கினு வந்தாலும் வரும்”
இவ, விண்ணரசி மாதாவேன்னு சிலுவ போட்டுக்கறா.
அதுக்கப்புறம் லீலி புஷ்பத்துக்கு பாடம் அதிகமாயிட்டதால இவகூட சுத்த நேரமில்லை. ஷோபா அடிக்கடி லீவு போட்டுட்டு அவ அம்மா கூட துணி வெளுக்கப் போனா. டெஸ்ட் பரீட்சைன்னா மட்டும் ஸ்கூலுக்கு வருவா. தொரை சார், ஏகாம்பரம் வாத்தியார் எல்லாம் இவ வந்தாலே ஏன் லீவு போட்டன்னு அடி வெளுக்கறாங்க. என்ன ஆனாலும் லீலி புஷ்பத்த பாத்து பேசிட்டு போவா. முழு ஆண்டு பரீட்சைக்கு முந்தின நாள் வந்து படிச்சிட்டு இருந்தவ கிட்ட எனக்கு பரிச்சையில ஒண்ணுமே தெரியாதுடீ. நான் எங்க மாமா ஊருக்கு பெங்களூருக்கே போயிடப் போறேன்னு சொன்னா. பரீச்சையெல்லாம் முடிஞ்சு லீவுல இவ வீட்டு பின்னாடி கொய்யா மர்த்துல உக்கார்ந்து புக் படிச்சிட்டு இருந்தப்ப திடீர்னு ஷோபா வந்தா.
“நாளைக்கு நம்பளுக்கு ரிசல்ட் ஒட்டப்போறாங்களாம். நான் பாஸாயிடுவனா?”
”தெரியல ஷோபா. நீதான் பெங்களூர் போறேன்னியே”
கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்துட்டு இருந்தவ இன்னாடி படிக்கிறன்னு கேட்டா. லீலி புஷ்பம் அவளுக்கு கடலுல மீன் தூண்டில் போடப்போன கெழவனுக்கு பெரிய திமிங்கிலம் அம்படற கதைய சொன்னா.
பாதி சொல்லும்போதே நீ நல்லா கதை சொல்ற டீ. மீதிக்கதைய நாளைக்கு கேட்டுக்கறேன். எங்கம்மா ஆத்துக்கு கூப்புட்டிச்சின்னு ஓடிப் போயிட்டா. மறுநாள் இவளும் புஸ்பாவும் ஸ்கூலுக்கு ரிசல்ட் பாக்க போறாங்க. பாதி வழியில வந்த தாஜூதீன் சொல்றான் “ ஏ களுதக்காரிச்சி பெயிலாப் போயிடுச்சி. பாறைக்கெணத்துல உளுந்து செத்துடிச்சி”
லீலி புஷ்பத்துக்கு முதுகுல படீர்னு பயம் பரவுது. பதறுது. வேகமா எல்லார் கூடவும் ஓடறா. இவங்க போகயில கெணத்த சுத்தி கூட்டமா இருக்கு. பாதாளக்கொறடு போட்டு கயித்துல இழுக்கறாங்க. சின்னப் புள்ளைங்க எல்லாம் தூரப்போங்கன்னு யாரோ கத்தறாங்க. பச்ச கலர் ஈரத்துணியோட ஒடம்பு மேல வர்ரத தூரத்துல இருந்து பாக்கறா. ஷோபாவோட ஒரு கையில என்னமோ வச்சு இருக்கமா மூடியிருக்கறது மட்டும் இவளுக்குத் தெரியுது. வீட்டுக்கு வேகமா ஓடி வந்துட்டா. அதுக்கப்பறம் இவ ஒருநாளும் சப்பாத்திக்கள்ளி பழம் பறிக்கல. கெழவன் தூண்டிலுல மாட்டுன திமிங்கலத்துக்கு என்ன ஆச்சுன்னு படிக்கலை. அவங்கண்ணன் ஸ்பென்சருக்கும் கடைசி வரையில கல்யாணமும் ஆகலை.
மோனிகா மாறன்
இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்ட நான் அவ்வப்போது எழுதுவதும் உண்டு.முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் சொல்வனம், பதாகை,வாசகசாலை கணையாழி இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன.கல்கி பொன்விழா குறுநாவல் போட்டி, காக்கை சிறகினிலே குறுநாவல் போட்டி ஆகியவற்றில் பரிசு பெற்றுள்ளேன்.வம்சி பதிப்பக வெளியீடாக 2020ல் எனது நாவல் ஒன்றும் சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளன.வேலூரில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன்.