ரொம்ப காலமாய் அந்த தூண்டில்க்காரன்

குளத்து மேட்டிலேயே தான் அமர்ந்திருப்பதாய்

அருகிலிருந்த கிராமவாசிகள் சொல்கிறார்கள்.

உண்பதற்கு அவன் பச்சைமீன்களையே

பயன்படுத்துவதாய் கூனிக்கிழவியொருத்தி சொல்லிச்சென்றாள்!

அவன் யாரிடமும் பேசுவதேயில்லை என்ற தகவலை

குடிசைவாசியான குப்பன் கூறிப்போனார்.

தூண்டில்க்காரன் யாரென்றும் எந்தவூரென்றும்

யாருக்கும் தெரியாதென தவசிப்பிள்ளை கூறியோடினார்.

தூண்டில்காரனுடைய வாயானது மீன்களைப்போன்றே

அடிக்கடி திறந்து திறந்து மூடுவதாய் உற்றுப்பார்த்து வந்த

ஊமையன் சைகையால் சொல்லியழுதான்.

எனக்கென்னவோ அந்த தூண்டிக்காரன் தன்

தூண்டிலில் கடவுள் சிக்குவாரென நம்பிக்கையாய்

அமர்ந்திருக்கிறானென்றே மனசுக்குப்பட்டது!

ஆற்று வெள்ளத்தில் மீன்களெல்லாம்

கடல் நோக்கி மிக விரைவாய் போட்டியிட்டு

சென்றுகொண்டிருந்தன!

தன் குஞ்சுகளோடு விரைந்து கொண்டிருந்த

தாய் மீனைப்பார்த்து குஞ்சுமீன் கேட்டது.

“எப்பத்தான்மா கடலு வரும்?”

“இன்னுஞ்சித்தங்கூரியத்துல வந்துரும் சாமி!”

“போம்மா! இப்பிடித்தான் நீயி

அப்பலையா புடிச்சு சொல்லிட்டே இருக்கே!

கடலையுங் காணோம்.. கப்பலையுங் காணோம்!

ஒரு மண்ணையுங்காணோம்!”

தூக்கத்திலிருந்து விழித்தெழுகையிலெல்லாம்

தூக்கத்திலேயே போயிருந்தால் எதுவும்

ஞாபகத்திலிருக்காதல்லவா! என்றே தோன்றுகிறது.

இன்றைய தூக்கத்திலிருந்து விழித்தெழவே கூடாதென

ஒவ்வொரு இரவிலும் கட்டிலில் சாய்கையில்

அதீத போதையில் உளறிக்கொட்டுகிறான் அவன்.

அவன் மனைவியோ இரண்டு நாட்கள்

பதட்டப்பட்டு மூன்றாம் நாளிலிருந்து

சிரிக்கத்துவங்கி விட்டாள் இவனைப்பார்த்து!

ஒரு மனிதனின் மரணத்தை

கயிறுகளோ, தண்டவாளங்களோ, விஷமருந்துகளோ

தீர்மானிப்பது சிலசமயங்களில் நடந்தேறிவிடுகிறது!

துக்கம் நடந்த ஊரின் வீதிகளில்

மரணமடைந்தவனின் புகைப்படங்கள்

சாலைகளில் செல்வோரை துக்கம் நிறைந்த

கண்களுடன் பார்க்கிறது!

அடுத்து நானோ?வென பதைபதைத்து

வண்டியை முறுக்குகிறார்கள் மரணமடைந்தவனை

அறியாத ஜனங்கள்!

பட்டாசுகளின் தொடர் வேட்டுச்சத்தம் கேட்டு

கட்டிலிலிருந்து எழுந்தவன் தன் துணையிடம் விசாரித்தான்..

என்னை எரிப்பார்களா? புதைப்பார்களா?

துணைவி மதியநேரமென பார்க்காமல்

சிரிக்கத்துவங்கினாள்!

“தோழர் நாயிக்கி சோறா வெச்சுண்டிருக்கீங்க?

செய்யிங்க செய்யிங்க!”

சாலையில் சென்ற தோழர் எனைப்பார்த்து

சொல்லிப்போனார்.

அவர் என்னிடம் எந்தவித பதிலையும்

எதிர்பாராமல் சூரியனைப்பார்த்தபடி சென்றார்.

என் கையிலோ சோத்துக்குண்டானுமில்லை..

அருகில் வளர்ப்பு நாயுமில்லை.

தோழருக்கு, ‘ஆமாம் தோழர்!’ என்று நான்

சொல்லியிருப்பேனோ? என்பது தான்

சந்தேகமாயிருந்தது! -இருந்தும்

தோழருக்கும் எனக்குமே நாய்களிடம்

கொஞ்சம் பிரியம் ஜாஸ்திதான்!

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். சமீபமாக நடுகல் இதழ் மீண்டும் காலாண்டு இதழாக வெளிவருகிறது. 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத்துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்.. ஆட்டக்காவடி, கள்ளி -2, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *