இடங்களை கலையால் அலங்கரிப்பது போல் காலத்தை இசையால் அலங்கரிக்கிறோம். –

-ஜீன்-மைக்கேல் பாஸ்குயட்

இசையைப் பற்றி நன்கு அறிந்த நண்பர்கள், படைப்பாளிகள், அறிஞர்கள், விமர்சகர்கள், வல்லுனர்கள் என பலரும் உண்டு. இசை நுட்பங்கள், அடுக்குகள். இடையிசை, அமைதி என பலவற்றைப் பற்றியும் அறிவார்ந்த விவாதங்கள் உண்டு. அதுபற்றின பதிவுகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நூல்கள் என பலவும் வந்துள்ளது. இப்பதிவு அம்மாதிரியானது அல்ல. இப்பதிவு ஒரு ரசிகன் தேடி கண்டதும் கேட்டதும் பற்றியது மட்டுமே.

இசையை கேட்பதற்கும் ரசிப்பதற்கும் எந்தவித முன் முடிவுமின்றி திறந்த காதுகளும் , மனதும் இருந்தால் போதுமானது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். அவ்வாறே இசையை அணுகுகிறேன். என்ன ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி, யார் இசைத்தது, பாடியது, எந்த நாடு,மொழி, இனம் என எதையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் கேட்பதே என் வழமை.

தமிழர் வாழ்வியலில் இசை, நடனம் என்பது தினசரி வாழ்வின் ஓர் அங்கமாகவும் இருந்துள்ளது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழி வழியாக கடத்தப்பட்டே வந்துள்ளது என்பது சங்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் அந்த கண்ணி அறுந்திட்டது. சில விதிவிலக்குகளுடன் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு என ஒதுங்கிக் கொண்டது.  அதுமட்டுமின்றி அதன்மீது ஒவ்வாமையும், மரியாதைக்குரியது அல்ல என்றும் ஒரு நிலை ஏற்பட்டு இருந்துள்ளது. தற்போது பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பழைய விஷயங்கள் மீட்டெடுக்கப்படுகின்றன.  அந்த மாற்றம் எதை நோக்கி நகர்ந்துள்ளது?  ஆரோக்கியமாக உள்ளதா? இல்லையா? என்பது தனியாக விவாதிக்க வேண்டியது.

அதேசமயம் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் இன்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சிறுவயதிலேயே ஏதேனும் ஓர் இசைக் கருவியை வாசிக்க கற்றுக் கொள்கின்றனர். எந்தவொரு குடும்ப நிகழ்விலும், சமூக நிகழ்விலும் இசைக் கருவிகளை வாசிப்பதும் , பாடுவதும், குழுவாக நடனமாடுவதும் என அந்த கண்ணி தொடர்கிறது . அவர்களது பாரம்பரியம், கலாச்சாரம், வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வண்ணம் அது நிகழ்த்தப்படுகிறது.

இச்சூழலில் தான் இசையைப் பற்றி அடிச்சுவடே தெரியாத நான் அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒலிக்கும் “அழகென்ற சொல்லுக்கு முருகாவிலும்”, “தாமரை பூவில் வீற்றிருப்பவளே”விலும் மனதை பறிகொடுத்தது.வீட்டின்  படிகட்டில் “டீச்சருடன்” அமர்ந்து நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் வாசித்த “தீராத விளையாட்டுப்பிள்ளையை” ரசித்ததும்.  அவர்கள் அந்த பாடலை கோடிட்டு காட்டியதும்  நினைவில் ஈரமாக உள்ளது.  

தருமபுரி குமாரசாமி பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மேல் பலவகையான கலை நிகழ்ச்சிகள் நடக்கும். கிருபானந்த வாரியார் சொற்பொழிவு, பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், வளையப்பட்டி தவில், மெல்லிசை கச்சேரிகள் என நடக்கும். இரு தினங்கள் 8 மணிக்குமேல் திரைப்பட ஆர்கெஸ்ட்ரா நடக்கும். கூட்டம் அள்ளும். 80 களில் தமிழகத்தில் புகழ் பெற்று இருந்த பல ஆர்கெஸட்ராகளும் இங்கு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

என் மூத்த அண்ணன் உடன் தான் ஆங்கிலப் பாடல்களை கேட்க துவங்கியது. அண்ணனின் ஆங்கில புலமை அரிதானது. அவரது கையைழுத்து அபாரமாக இருக்கும். ஒலிநாடா வராத காலம். டிரான்சிஸ்டரில்  பாட்டு கேட்டுக் கொண்டே அப்பாடல் வரிகளை எழுத்தில் வடித்திடும் அசாத்திய திறமை அவருக்குண்டு. ABBA, BONEY M, Saturday Night Fever, Osibisa எல்லாம் அப்படி கேட்டது தான். அவருக்கு ABBA குழுவினர் பிடித்தவர்கள் என்றால் எனக்கு BONEY M. துல்லியமான இரைச்சலற்ற வகையில் கேட்பதில் கவனமாக இருப்பார். ஒலிநாடாக்கள் வந்தபின் அதற்காக உயர்தர இசை ஒலிப்பான்களை வாங்கி பயப்படுத்தினார்.

ஒலிநாடாக்களில் பதிவு செய்வது என்பது குறைந்த முதலீட்டீலான சிறந்த வியாபாரமாகியது. அதிலும் சில வித்தகர்கள் பலவிதமான சோதனை முயற்சிகள் மேற்கொண்டு பதிவு செய்துதந்தனர். ஆனால் இந்த புதிய புதிய உத்திகளைக் கொண்டு பதிவு செய்தது எல்லாம் திரைப்பட பாடல்களைத்தான்.மேற்கத்திய இசை கிடையாது.  

அப்போது சேலம் சாமுண்டி வணிக வளாகத்தில் ஓர் இளைஞர் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருந்தார். கூடவே தேடிவரும் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் ஒலிநாடாவில் தனித்த ஆங்கில பாடல்களை பதிவு செய்து கொடுப்பார். அதற்கு கட்டணம் அதிகம். எனினும் துல்லியமான பதிவிற்காக தருமபுரியிலிருந்து வந்து பதிவு செய்து கொண்டு செல்வேன். பின்னர் பதிவு செய்யப்பட்ட ஒரிஜனல் ஒலிநாடாக்கள் கிடைத்தன. அப்போது பிரபலமான Beatles-Bob Morley, Jimi Hendrix, Santana எல்லாம் அப்போது அறிமுகமானது.

கருவி இசையின் தேவன் (ஷாஜி வார்த்தையில்) yanni 80களில் இந்தியா வந்திருந்தார். அப்படியே மனதிற்குள்ளும் நுழைந்திட்டார். தொடர்ந்து அவரை கேட்பது என்பது தொடர்கதையானது. முதன்முதலில் CD PLAYER வாங்கியதும் விருப்பமான பாடல்களை சரியான முறையில் பதிவு செய்ய தேடியலைந்தேன். (ஒலிநாடா பதிவு செய்து கொடுத்தவர் தொழிலை விட்டு விட்டார்)

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள சாந்தம் வணிக வளாகத்தில் ஒருவர் நல்லமுறையில் பதிவு செய்கிறார் என அறிந்து அவரிடம் சென்றேன். அவர் yanni, David lanz என இன்னும் பிறரை உயர்தரத்தில் பதிவு செய்து கொடுத்தார்.

இந்த காலகட்டத்தில் கவிஞர். பிரம்மராஜன்  அறிமுகம் கிடைத்தது. அவரது இசையறிவு பற்றி பலர் பதிவு செய்துள்ளனர். அவர்தான் முறையாக இசை கேட்பதை அறிமுகப்படுத்தினார். புதியதாக கேட்க பழகும் ஒருவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட semi classical கருவி இசைக் கோவைகளை கேட்க வைத்தார் அதன்மூலம் முழுமையான classical க்குள் நுழைவதற்கான வழியை காட்டினார். அவரது வீட்டிற்கு எப்போது சென்றாலும் புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தி கேட்க வைப்பார். புதிய தொழில் நுட்பங்களை உடனுக்கு உடன் பயன்படுத்துபவர் . மிகப் பெரிய இசைசேகரம் அவருடையது. Symphony இசையின் ஒழுங்கமைதி அவரது இசை கேட்பில் இருக்கும்.

அவர்  இசையைக் கேட்டபடியே cryons கொண்டு வரைந்து கொண்டிருந்த பெரிய ஓவியத்தை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். பின்னர் அந்த ஓவியத்தை எனக்கே கொடுத்துவிட்டார் 80களின் இறுதியில் பல ஊர்கள்,பல வீடுகள் என மாறியதில் அதை எங்கோ தவற விட்டுவிட்டேன். அது தீராத வருத்தம்.

அவர் Mystic India 1,2, Eagels, Arabian classic, L. Shankarன்SAKTHI, ELEMENTS. N. Rajam, Hariprasad, Ronu Majumdar, Shivakumar Sharma என பலரின் இசைக் கோவைகளையும்  CD களாக  பதிவு செய்து கொடுத்தார். கூடவே சில ஒலிநாடாக்களையும் அளித்தார். இந்துஸ்தானி இசையையும் அவரிடமிருந்துதான் அறிய நேர்ந்தது. அதற்கு முன் எனக்கு தெரிந்தது எல்லாம் பிஸ்மில்லாகானும், பர்வீன்சுல்தானா மட்டும்தான். அவர் பதிவு செய்து கொடுத்த Kishori Amonkar மூலம் வேரொரு உலகம் திறந்தது. அது எனக்கு கிடைத்த நல்லூழ்.

மீட்சி இதழில் வந்த இசை-சில அடிப்படை அணுகல்கள் (பிரம்மராஐன-சுகுமாரன் எழுதியது) கட்டுரைகள் இசையைப் பற்றி அறிந்து கொள்ள பெரிதும் உதவியது

இசையைப் பற்றி பேசும் போது இரு விஷயங்களை குறிப்பிடாமல் போக முடியலை. முதலாவது, விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது மதுரை சோமுவை சந்தித்த நிகழ்வை அழகான கட்டுரையாக கவிஞர் சுகுமாரன்பதிவு செய்து இருப்பார். அதேபோன்ற நிகழ்வு எனக்கும் நிகழ்ந்தது. திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் படிப்பில் சேர தரும்புரி – திருச்சி என அலைந்து கொண்டிருந்த காலம். அப்போது ஒருசமயம் திருச்சி சென்ட்ரல் பேருந்து நிலையம் எதிரில் இருந்த விடுதியில் நண்பருடன் தங்கியிருந்தேன். மாலைநேரம் திடீரென முன்பக்க அறையில் சிறுபரபரப்பு. வெளியே வந்து பார்த்த போது அந்த மாடி அறையில்

K J யேசுதாஸ் அமர்ந்து இருந்தார். சாஸ்தா கோவிலில் நிகழ்ச்சி.  இன்னும் நிகழ்ச்சி துவங்க நேரமிருந்தது. விடுதியின் உரிமையாளர் கோவிலின் முக்கியபுள்ளி என்பதால் இளைப்பாற இங்கே அழைத்து வந்திருந்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏதோ வேலையாக கீழே செல்ல நானும், நண்பனும் அவருடன் தனித்து விடப்பட்டோம் . கிடைத்த வாய்ப்பில் என்ன  பேசினோம் என்பது நினைவில் இல்லை. ஆனால் அக்காலத்தில் எனக்குத் தெரிந்த மலையாளப் பாடல்கள்  செம்மீன்  மற்றும் நெல்லு படப்பாடல்கள் மட்டுமே. அதைமட்டுமே குறிப்பிட்டேன். அவர் சிரித்துக் கொண்டே ஹம் செய்துக் கொண்டு இருந்தார். அவ்வளவுதான். அப்போதும், இப்போதும் அவரின் இந்திப்படப் பாடல்களே எனக்கு உவப்பானவை. அவரின் பாடல்களை கேட்கும்போது எல்லாம் கவிஞர் சுகுமாரின் இந்த கவிதை நினைவில் வரும்.

மழை தேக்கிய இலைகள்

அசைந்து

சொட்டும் ஒளி

கூரையடியில் கொடியில் அமர

அலைக்கழியும் குருவி

காலம்ஒரு கண்ணாடி வெளி

எனக்கு மீந்தன

கண்ணீரும் சிறகுகளும்

(யேசுதாஸுக்கு)

மற்றொன்று திருவையாறு இசைக்கல்லூரிக்கு  ஒரு மதியப் பொழுதில் சென்று இருந்தேன். அங்கிருந்த மாணவ , மாணவிகள் கல்லூரிகளுக் கிடையேயான இசைப் போட்டிகளில் பங்கு பெற வந்ததால் பழக்கம். அப்போது அங்கு பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் வாசித்துக்காட்டிய நாதஸ்வரமும், தவிலும் மறக்க இயலாது. அப்படியே தியாகபிரம்மர் கோவில், அவர் வசித்த இல்லம் எல்லாம் அவர்களுடன் சென்று பார்க்க முடிந்தது.

“திருவையாறு இசைக்கல்லூரிக்குப் பின்புறம் செல்லும் காவேரி ஆற்றின் கிளைப்பிரிவின் கரையை ஒட்டி மட்டும் தண்ணீர் ஓடிய ஒரு மார்ச்மாத மதிய பொழுது ஒன்றில் அந்த மணற்பரப்பில் படுத்துக் கொண்டே கேட்ட அரச மர இலைகளும், நாவல் பழமர இலைகளும், பறவையினங்களும் இசைத்திட்ட அந்த கானம் மனக் காற்றில் என்றும் கரையாது ஒலித்துக் கொண்டேயிருக்கு”. திருச்சி வாசம் மறக்க இயலாத, எதிர்பாராத பல நல்ல விஷயங்களை அளித்தது.

மறைந்த நண்பன் கவிஞன் குவளைக்கண்ணன் நல்ல கர்நாடக ஒலிநாடாக்களை அளித்தான். அவன் மூலமே அரங்கினுள் கச்சேரிகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் சஞ்சய் சுப்பிரமணியண் கச்சேரி(அவன் மூலம்தான் அ. மங்கை இயக்கிய பாரிமகளிர் பற்றிய நாடகம் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது). அதன்பின் மல்லாடி பிரதர்ஸ், சொளம்யா, பாம்பே ஜெயஶ்ரீ, T N கிருஷணன் என தொடர்ந்தது.

ரஷ்ய பியானோ இசை மேதை Stravinsky உட்பட பிற பியானோ மேதைகளின் இசைப் பாடல்கள் கொண்ட ஒலிநாடா கிடைத்தது. அது பியானோ இசையின் மேல் பெரும் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. இன்று அதிகமும் கேட்பது என்பது புல்லாங்குழலும், பியானோவும் தான் என்றாகிட்டது.

விலைசற்றே அதிகம். எனினும் original cd வாங்குவது என்பது என் வழக்கமானது. இப்போது ஒலிநாடாக்கள் பயன்பாட்டில் இல்லை. அதற்காக தூக்கி போட்டுவிடவா முடியும்?? அதேபோல் CD களும். கேட்பதில் இருக்கும் சுகம் music video பார்ப்பதில் இருப்பதில்லை.நம் கற்பனை கட்டுப்படுத்தப்படுகிறது எனத் தோன்றுகிறது

.

இசையை அடிப்படையாக கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள் வந்துள்ளன. அதிகமும் தி.ஜா.எழுதியிருப்பார் . நாதஸ்வர வித்வான் பற்றிய அவருடை நெகிழ்ச்சி சிறுகதையும் , K N செந்திலின் திருமண வீட்டீல் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு இருக்கும்  கலைஞன், அந்த இசையில் தன்னை கரைத்துக் கொள்ளும் எளிய ரசிகனின் மனத்தை சொல்லும் “பரிசு “ சிறுகதையும்  எனக்கு பிடித்தவை. இவ்விரு கதைகளும் நாதஸ்வர இசை பற்றி பேசினாலும் இரண்டும் வெவ்வேறு சூழலில் நிகழ்த்தப்படுவது.

இசைமேதைகள் டைகர் வரதாச்சாரியார்-எம் டி. ராமநாதன் இடையேயான  ஆத்மார்த்தமான குரு சிஷ்ய உறவை விவரித்து பி். ரவிக்குமார் மலையாளத்தில் எழுதியுள்ள கவிதை வடிவிலான நூலை (எம் டி. ராமநாதன்.மொழிபெயர்ப்பு மா.தட்சிணாமூர்த்தி. காலச்சுவடு பதிப்பகம்)  வாசிக்கையில் கண்ணின் ஓரத்தில் நீர்த்துளி திரள்வதை தவிர்க்கவே இயலாது.

திரையிசை என்பது பெருங்கடல். பல சுறாக்களும் திமிங்கலங்களும் உள்ளது. நான் ஓரத்தில் நின்று அலையை வேடிக்கைப் பார்ப்பவன்.

சமீபத்தில் மீண்டும் மீண்டும் கேட்ட திரைப்பட பாடல்கள் என்றால் Memories of March படப்பாடல்களும்( குறிப்பாக பியானோ இசையை பின்னனியாகக் கொண்ட Bahu Manartha),Raincoat படப் பாடல்களும்(Mathura Nagarpati, Akele hum Nadiya kinare ) தான்.

சமீபத்தில் Osibisa குழுவினர் பெங்களூரில் இசை நிகழ்ச்சி நடத்தினர். அவர்களுக்கு பெரும்புகழ் சேர்த்த ரகுபதி ராகவ ராஜாராம் பாடத் துவங்கிய போது நினைவுகள் பின்னோக்கி நகரத் துவங்கிட்டது.

இன்று இணைய வசதி வந்திட்டது. உலகின் எந்தவொரு மூலையிலிருந்தும் இசைக்கும் இசையை கேட்க, ரசிக்க முடிகிறது. இசைக்கென பல இணையதளங்கள் உள்ளன.  பலதரப்பட்ட இசை வகைமைகள் கொட்டிக் கிடக்கிறது. தேர்ந்தெடுத்து கேட்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. துல்லியமான ஒலியை வழங்கும் கையடக்க Music systems, speakers, headphones என வந்திட்டது. இன்றைய இளைய தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள்தான்.


அ.முனவர் கான்

முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *