கலைடாஸ்கோப் கண்ணாடிச் சில்லுகள்.
1.
சிறுவர்கள் கண்களோடு ஒட்டி
களிப்போடு ரசிக்கும் கலைடாஸ் கோப்பில்
உருவை சிறிசுப் பெரிசாய் வண்ணங்காட்டும் உடைந்த கண்ணாடிகள்
பால்ய காலத்தை
சில்லு சில்லுகளாய் உடைத்துக் காட்டுகிறது,
வாழ்க்கையை அறுத்துப் பார்க்கிறேன்
குறுக்கு வெட்டில், அறுங்கோணங்களாக குறுங்கோணங்களாக
பிடிபடாத மாயம் சுழல்கிறது.
2.
சுருளும் கருஞ்சிவப்பு அட்டைப்பூச்சிகள்
உதிரும் மரப்பட்டைகளில்
திசையறியாது ஊர்ந்து கொண்டிருக்கிறது
முன்னும் பின்னுமாய்.
அபத்த வாழ்க்கை மீதான அச்சம்
உடலெங்கும் அட்டைப்பூச்சியாய் ஊர்ந்து வருகிறது.
3.
விட்டெறிந்த கல் குளத்தினாழத்தில்
தங்கிவிட்டது.
பெரியதொரு மலையை ஒளித்து வைத்திருந்தது
அந்தக் கல்
பாரம் தாங்கமுடியாது தனது குளத்து நீரை வற்றிப் போகச் செய்யுமோ
சிறுவர்களின் பாதங்களைத் தொலைத்த அக்குளம். .
சுழன்றபடியிருக்கிறது மாயம்.
அ)
நானொரு கற்பனை உயிரியாக வாழ்கிறேன்.
கூட்டுக் கண்கள், கூரிய நகங்கள் கொண்ட
பெரிய பறக்கும் வேட்டையாடி விலங்கென.
ஆ)
பிண்டி மரத்தினடியில்
பரிநிர்வாண மெய்தியவனின் நிழல்
இ)
அமைதியாக மடக்குநிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
பிக்குவின் மழிகத்தி.
ஈ)
சுழன்றபடியிருக்கிறது மாயம்
இயங்குநிலை, இயக்கமற்ற நிலைக்குச் செல்வதையும்,
இயக்கமற்ற ஒன்று தன்னியல்பாய் இயங்கு நிலைக்குச் செல்வதையும்.
காமத்தைப் போல, மரணத்தைப் போல
பிடிக்குள் அகப்படாத மாயம்.
உ)
கல்லில் செதுக்கப்பட்ட ஆயிரம் புரவிகளும் ஆயிரம் களிறுகளும்
கலிங்கத்துப் பரணியை நிகழ்த்திக் காட்டுகின்றன.
ஊ)
சரிந்து விழும் நிழல்
விமானம்
மரம்
அல்லது ஒரு பெயரறியாத பறவை.
எ)
என்னைச் சமணனெ
வெட்டவெளியில் கழுவேற்றினார்கள்
இன்னும் வலிக்கிறது குதம்.
—
இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.