வயல் நண்டு வாழ்க்கை
ஒருத்தி
நிறைசூல் கண்மாய் முன்
நெடுஞ்சாண்கிடையாய்
விழுந்தெழுந்தாள்
பிள்ளை வரம் வேண்டி
மலையடிவாரப் பச்சையில்
வேய்யப்பட்ட
குருகு கூடுகள்
வசந்த செழிப்பில்
அகலவாய்பட்டு
உருண்டிருந்தது
பெத்தாம்மா கோவில்
முந்தானைத் தொட்டில்
கல்லைச் சுமந்தாடியது
வாய் நிரம்ப
சீம்பால் வாடை
தலை ஈத்துக் குட்டிக்கு
ஊற்றெடுக்கும்
ஆண்பனை அமிர்தம்
பல்கிப்பெருகும் காடு
இயற்கை கருத்தரிப்பில்
இனி உங்களுக்கும்
ஒரு குழந்தை
அங்கே அவள்
ஒரு துளி
உள்ளங்கை நம்பிக்கை
டோக்கன் வரிசையில்
ஆழ்கடல் அமைதி
நவீனப்பட்ட
வயல் நண்டு வாழ்கை
அடுத்த அழைப்பு மணிக்கு
ஆக்டோபஸ் மனமடக்கி
எழுந்தாள்
முற்றம் தெளித்த
முழுநிலா நாளில்
ராணி தேனிக்கு
நள்ளிரவு பிரசவம்
குறிஞ்சியும் பூக்கும்
—
சிவபஞ்சவன்
நிறுவனர் – யாக்கை மகிழ்வரங்கு.
நவீன நாடக இயக்குனர், நடிகர், நாடகப் பயிற்றுநர்.ஊர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம். தற்போது பல்கலைக்கழகத்தில் முதுகலை அரங்கம் மற்றும் திரைப்பட படிப்புகள் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் சிறுகதைகள் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளது.