இடது காலின் குதிகாலுக்கு சற்று மேலிருந்த பட்டாம்பூச்சி டாட்டூவை ஆசையுடன் தடவிக்கொடுத்தாள் வர்ஷினி. அது அவள் விரல் பட்டதும் சிறகடித்து பறப்பது போல வெயிலில் மிளிர்ந்தடங்கியது. அதன் பின் பாடி லோஷன் க்ரீமை இடது உள்ளங்கையில் பிதுக்கி இரு கைகளிலும் தேய்த்துக் கொண்டு இடது முழங்கால் முதல் பாதம் வரை அழுந்தத் தேய்த்துக்கொண்டாள். வழுவழுப்பான அந்தக் க்ரீம் அவளது கால்சதையில் வழுக்கிக்கொண்டு கரைந்து மறைந்தது. பட்டாம்பூச்சி உடலை சிலிர்த்துக்கொண்டது. இந்த லாங் வீக்கெண்டிற்கு எங்கு போவது என யோசித்தபடி சன்னலோர நாற்காலியில் அமர்ந்திருந்தாள். இது ஒரு பிரச்சினை. வார இறுதி நாட்களுடன் மற்றொரு நாள் சேர்ந்து கொள்வது ஆறாவது விரலைப் போல என்றுமே தனக்கு உபயோகமானதாக இல்லை என்பது அவளது மனதில் அடிக்கடி தோன்றும் எண்ணம். திருவான்மியூரில் கடல் பார்த்த அப்பார்ட்மெண்டில் வசிப்பவளுக்கு கடலும் சலித்து விட்டது. அதே கடல்.அதே அலை. அதே வாக்கிங் போகும் மனிதர்கள். இவ்வளவு சீக்கிரம் கடலும் சலித்துப்போகும் என அவள் நினைக்கவேயில்லை. இந்த வீட்டிற்கு வந்த புதிதில் சன்னல் வழியே வீசுகின்ற கடற்காற்றை அதிகம் ரசித்தவளால் இன்று ரசிக்க முடியவில்லை. அப்போது தன் இடது காலின் பின்புறம் உரசிக்கொண்டு வந்து நின்ற ஜூஜூவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள். அதன் தலையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். அது அவளது மடியில் படுத்துக்கொண்டு அவளது ஸ்பரிசத்தை ரசித்தபடியே சன்னல் வழியே தூர வானை பார்த்துக்கொண்டிருந்தது.
இடது கையால் அதன் தலையைத் தடவிக்கொண்டே வலது கையில் அலைபேசியை எடுத்தவள் சன்னல் வழியே தெரியும் நீலக்கடலை ஒளிப்படம் எடுத்தாள். கடல் சலித்துப்போனாலும் யாருமற்ற கடற்கரை போல வசீகரமானதென்பது இவ்வுலகில் வேறெதுவும் இல்லை என அடிக்கடி நினைத்துக்கொள்வாள். எடுத்த ஒளிப்படத்தை ஜூம் செய்து பார்த்தபோது கடலுக்கு முன் ஓர் உருவம் நிற்பது தெரிந்தது. பின்புறத்தை வைத்தே அது யாரென்பதை உணர்ந்துகொண்டாள். அது அர்ஜுன்.
ஜூஜூ அவளது மோவாயை நாவால் நக்கிவிட முயன்றுகொண்டிருந்தது. அர்ஜுன் கடற்கரையிலிருந்து வெளியேறி தன்னுடைய காரில் ஏறும்வரை தொடர்ந்து பார்த்தபடியே இருந்தாள். அதே யானை நிற பென்ஸ். காரின் முன்புற கதவைத் திறந்தபடியே அவனுடன் உள்ளே ஏறினாள் ஜீன்ஸ் அணிந்த யுவதியொருத்தி.
ஜூஜூவை மடியுடன் அணைத்துக்கொண்டு அதன் முடிக்கற்றைகள் தன் கன்னத்தில் பதிய சிறிது நேரம் மெளனித்திருந்தாள். முதன் முதலாய் இந்த வீட்டிற்கு குடிவந்த நாளும் அதன் பிறகான நிகழ்வுகளும் நினைவின் ஆழத்திலிருந்து எழுந்து வந்தது.
“இனி இந்த வீட்டில்தான் இருக்கப்போறோம் வர்ஷி…உனக்கு வீடு பிடிச்சிருக்கில்ல” மகிழ்வுடன் அவளது கண்களைப் பார்த்தபடியே சொன்னான் அர்ஜுன்.
வர்ஷினிக்கு கடல்பார்த்த அந்த வீடும் அதன் விசாலமான அறைகளும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த உடனே பிடித்துப்போயிற்று. நான்கு படுக்கை அறைகள், மிகப்பெரிய வரவேற்பறை, இரண்டு பால்கனி மேலும் அடித்தள நீச்சல்குளம் என சகலமும் இருந்தன அந்த மூவாயிரம் சதுர அடி அபார்ட்மெண்ட்டில். ஒரு வருடத்திற்கு முன் இந்த இரண்டு கோடி ரூபாய் வீடு என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்தது. வாழ்வு எப்போது மாறும் எதனால் மாறும் என்பது தெரிந்துவிடுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது, சட்டென்று தானொரு பெரிய வீட்டின் சொந்தக்காரி என்கிற நினைப்பே வர்ஷினிக்கு மனதெங்கும் மகிழ்ச்சியை படரச் செய்திருந்தது. மலர்ந்த முகத்துடன் அர்ஜுனைப் பார்த்தாள்.
“எனக்கு வீடு பிடிச்சிருக்கான்னு என் கண்ணைப் பார்த்தாலே தெரியுமே அர்ஜுன்”
அர்ஜுன் அவளருகே வந்து அவளது நெற்றிமீது முத்தமிட்டு அணைத்துக்கொண்டான். அந்த வீட்டிற்கு அடுத்த நாளே குடிவந்தார்கள். அர்ஜுன் வேலை பார்க்கும் கார்ப்பரேட் கம்பெனியும், வர்ஷினி வேலை பார்க்கும் வங்கியும் வீட்டிலிருந்து ஏறக்குறைய ஒரே தொலைவிலிருந்தன. இருவருக்கும் காதல் திருமணம் முடிந்து இரண்டு வருடம் கடந்திருந்தன. நான்கு வருடம் உழைத்து நிறைய பணம் சம்பாதித்து, சேமித்த பின்பே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருந்தார்கள். அர்ஜுன் எப்போதும் அதிகப் பணம் சம்பாதிப்பது பற்றியே பேச ஆரம்பித்தான். க்ரிப்டோவிலும், பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து கையைச் சுட்டுக்கொண்டபோதும் அதிகப் பணம் சம்பாதிப்பது பற்றியே அவனது எண்ணம் சுற்றிச் சுற்றி வந்தது.
அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் அவளிடம் பணத்தைப் பற்றி மட்டுமே பேச ஆரம்பித்தவனை முதலில் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தவள் அவனது பெருங்கனவுகளை கேட்டதும் மெல்ல மெல்ல அவளுக்குள்ளும் அதிகப்பணத்தின் மீதான மோகம் தொற்றிக்கொண்டது. லட்சங்களை பார்த்துவிட்டோம் இனி நம் இலக்கு கோடிகள் என இருவரும் இலக்கு வைத்துக்கொண்டார்கள். ஆனாலும் லட்சத்திலிருந்து கோடிக்கு எப்படிச் செல்வது என்பது பிடிபடவில்லை. அதிகப்பணம் சம்பாதிப்பது பற்றி நிறைய புத்தகங்கள் படித்தும், பாட்காஸ்ட்டுகள் கேட்டும் வருமானத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவனது மாதச் சம்பளமான மூன்று லட்சமும் அவளது சம்பளமான ஒரு லட்சமும் மட்டுமே அவர்களது வருமானமாக இருந்தது. இந்தப்பணம் அவர்கள் கனவுப்பணமாக இல்லை என்பது பெரும் மன உளைச்சலையும் தர ஆரம்பித்திருந்தது.
உலகின் பெரும் பணக்காரர்களின் வாழ்வு முறையும் அவர்களது பகட்டான உடையும், காரும் யூடியூபில் திரும்பத் திரும்ப பார்த்தபடியே இருந்தார்கள். அதிகப் பண மோகம் மெல்ல வளர்ந்து அவர்கள் அறியாமலே பெரும் நோயாக மாறியிருந்த சமயத்தில்தான் அர்ஜுனின் வாழ்வில் நுழைந்தான் கென்னடி.
அர்ஜுனின் புதிய மேலாளராக கலிபோர்னியாவில் சேர்ந்த கென்னடி, சென்னை கிளைக்கு புதியதொரு ப்ராஜக்ட் பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொள்ள வந்திருந்தான். ஒரு வாரம் சென்னையின் பிரபலமானதொரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தவனை வாரயிறுதி நாட்களில் மகாபலிபுரத்திற்கு தன் காரில் அழைத்துச் சென்று சுற்றிக்காண்பித்தான் அர்ஜுன். இருவரும் வேலையைத் தவிர்த்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். தனக்கு தென்னிந்திய உணவும் குறிப்பாக வஞ்சிரமீன் ப்ரை பிடிக்கும் என்றான். அர்ஜுன் தன் க்ரிப்டோ முதலீடு பற்றியும் அதில் ஏற்பட்ட நஷ்டம் பற்றியும் சொன்னபோது கென்னடி அதன் நுட்பங்களையும் எந்தவிதத்தில் முதலீடு செய்தால் நிறைய வருவாய் கிடைக்கும் என்பதையும் மிக விரிவாக அர்ஜுனுக்கு சொல்லிக்கொடுத்தான். அதோடு நில்லாமல் பிட்காயின் மூலமாக தான் பல கோடிகள் சம்பாதித்திருப்பதாக சொன்னதும் அர்ஜுனுக்கு புல்லரித்தது.
வஞ்சிரமீன் வறுவல் சமைப்பதில் வர்ஷினியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை எனவும் தன் வீட்டிற்கு இரவு உணவுக்கு வருமாறும் கென்னடியிடம் கோரிக்கை வைத்தான்.
“இஸ் இட்? நிச்சயம் வருகிறேன்… உனக்காக அல்ல வஞ்சிரமீனுக்காக” எனச் சொல்லிவிட்டு கண்ணடித்து சிரித்தான் கென்னடி.
அன்றிரவு கென்னடி அர்ஜுனின் வீட்டிற்குள் நுழைந்தபோது அழகானதொரு கத்திரிப்பூ நிற காட்டன் புடவையில் அவனை வரவேற்று வரவேற்பறையில் அமரச் சொன்னாள் வர்ஷனி. அர்ஜுனும் கென்னடியிடம் பிட்காயின் மூலமாக எப்படி அதிகப்பணம் சம்பாதிப்பது போன்ற ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தான். கென்னடியும் அர்ஜுன் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் மிகப்பொறுமையாக பதிலிட்டுக்கொண்டிருந்தான். அவ்வப்போது அவனது பார்வை வஞ்சிர மீனின் பக்கமாக போய் திரும்பிக்கொண்டிருந்தது. வரவேற்பறையின் ஒருபாகமாக இருந்த சமையலறையில் வஞ்சிர மீன் வறுவலை சமைத்தபடி நின்றிருந்த வர்ஷினியின் பின்னங்கழுத்தில் ஜனித்த வியர்வைத்துளிகள் முதுகில் வழிந்து மரித்துக்கொண்டிருந்தன.
“டின்னர் ரெடி” என்று வர்ஷினி குரல்கொடுத்ததும் பிட்காயினுக்குள்ளிருந்து வெளியே வந்த அர்ஜுன், “லெட்ஸ் ஹேவ் த டின்னர் கென்னடி” என்றவாறு தன் ஆயிரம் கேள்விகளுக்கும் பதிலிட்ட கென்னடியை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றான். அடுத்த அரை மணி நேரமும் உலகின் மிகச்சிறந்த மீன் வறுவல் இதுதான் என முப்பத்து மூன்று முறை சொல்லியபடி வஞ்சிரத்தை மென்று தின்றான் கென்னடி. காரம் சற்று அதிகமாக இருந்ததால் அவனது முகம் சிவப்பாக மாறியிருந்தது. நீலக்கண்கள் மட்டும் அங்குமிங்கும் அலைபாய்ந்தபடியே இருந்தன.
இரவு உணவு முடிந்ததும் “ஐ வில் ட்ராப் யூ கென்னடி” என்றபடி தன் காரில் கென்னடியை ஏறச்சொன்னான் அர்ஜுன். காருக்குள் ஏறுவதற்கு முன் வர்ஷினியிடம் வந்த கென்னடி “தேட் பிஷ் ப்ரை டிசர்வ்ஸ் ய ஹக்” என்றபடி அவளை ஒரு நொடி அணைத்து கையசைத்து “பைபை” என்றபடி காரின் முன் சீட்டில் ஏறி உட்கார்ந்தான். வர்ஷினி கையசைத்தபடி நின்றிருக்க கார் வீட்டு கேட்டைக் கடந்து சென்னையின் இரவுச்சாலைக்குள் நுழைந்து வேகமெடுத்தது.
“நல்லா சாப்டீங்களா கென்னடி? ஏதும் குறை இல்லையே?” காரை ஓட்டியபடியே கேட்டான் அர்ஜுன்.
“அமேசிங் டின்னர் அர்ஜுன், சரி இப்போது பிட்காயினுக்கு வருவோம், நான் சொல்லியபடி இன்வஸ்ட் செய்தால் நீயும் சில மாதங்களிலேயே கோடிகளைத் தொடலாம்”
“நிஜமாகவா கென்னடி… நான் பிட்காயின் அதிகம் என்பதால் மற்ற காயின்களில் இன்வெஸ்ட் செய்திருந்தேன்… பிட்காயின் விலை குறைந்தபோது மற்ற காயின்களின் விலை சரிந்து அதளபாதாளத்திற்கு போனதில் பெரும் நஷ்டம்”
“நீ ஸ்டேபிள் காயின்ஸ் எனப்படும் பிட்காயின் அல்லது எதிரியமில் முதலீடு செய்திருக்க வேண்டும் அர்ஜுன். இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை… பிட்காயினில் மட்டும் முதலீடு செய்தாலே சில வருடங்களில் கோடிகள் உங்களைத் தேடி வரும். இன்றைய நிலவரப்படி என்னிடம் ஏழாயிரம் பிட்காயின்கள் இருக்கின்றன. ஒரு பிட்காயினின் விலை ஐந்தாயிரம் அமெரிக்க டாலர்கள், நீயே கணக்கிட்டுக்கொள்”
ஏழாயிரம் பிட்காயின் என்றதும் அர்ஜுனுக்கு தூக்கிவாரிப்போட்டது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து மில்லியன் அமெரிக்க டாலர்கள். இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு கென்னடி ஏன் கார்பரேட் கம்பெனியில் மேலாளராக சில லட்சங்களுக்கு வேலை செய்கிறான் என்கிற கேள்வி உடனே எழுந்தது. வாய்விட்டு கேட்டும் விட்டான்.
“ஹாஹா பிட்காயின் என் பேஷன்… கார்பரேட்டில் வேலை பார்ப்பது ஜஸ்ட் பார் பன்” சிரித்துக்கொண்டே கென்னடி சொன்னதை அர்ஜுனால் நம்ப முடியவில்லை. சரி இப்போது கென்னடி என்ன வேலை பார்த்தால் நமக்கென்ன? அவனிடமிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிட்காயின் தன்னிடம் இல்லாமல் போனதே என நினைத்தபடியே அமைதியாக காரை ஓட்டினான். சென்னையின் இரவுச் சாலையில் அதிக வாகனங்கள் இல்லை. கார் கென்னடி தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் உள்ளே நுழைந்து நின்றது.
“அர்ஜுன் இரண்டு வழிகளில் நீ கோடிகளைத் தொடலாம். முதலாவது வழியைத்தான் இவ்வளவு நேரம் நாம் பேசிக்கொண்டிருந்தோம். அது நீள் பயணம். அந்த ஏழாயிரம் பிட்காயினை நான் பெறுவதற்கு மிகுந்த உழைப்பும் காலமும் ஆனது. இரண்டாவது வழி மிகச் சுலபமானது. அதற்கு ப்ராட் திங்கிங் மட்டும் இருந்தாலே போதும்” என்றவன் மேலும் தொடராமல் நிறுத்தி அர்ஜுனின் முகத்தில் எழும் குழப்பத்தை ஒரு நிமிடம் ரசித்தான். பின், தொடர்ந்தவன் இரண்டாவது வழியை அர்ஜுனிடம் சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி பிடித்தபாடலொன்றை பாடியபடியே துள்ளல் நடையுடன் விடுதிக்குள் போய்விட்டான்.
அர்ஜுன் காரை நேராக மெரினா கடற்கரைக்கு செலுத்தினான். காரின் ஏசி நான்கில் இருந்தபோதும் அவனுக்கு வியர்த்துக்கொட்டியது. பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இறங்கி கடல் நோக்கிச் சென்றவன் ஷுவை கழற்றி கரையில் வைத்துவிட்டு அலைகள் நனைய வெகு நேரம் கடல்பார்த்தபடியே நின்றிருந்தான்.
கென்னடி வந்து போன பின் அர்ஜுன் தன்னிடம் சரியாக பேசவில்லை என்பதால் பலமுறை அவனிடம் என்னவென்று கேட்டுப்பார்த்தாள் வர்ஷினி. ஒன்றுமில்லை வேலைப்பளு என சமாளித்தவன் இரண்டாம் நாள் மாலை வீடு வந்ததும் களைப்புடன் சோபாவில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன்பாகவே வீடு திரும்பியிருந்தவள் அவனுக்குப் பிடித்த கப் கேக் செய்திருந்தாள். மற்ற நாளாக இருந்திருந்தால் கேக்கின் வாசம் வந்ததும் ஓடிவந்து அவளருகே நின்றபடி எப்போது தயாராகும் என காத்திருப்பவன் அன்று அசையாமல் உட்கார்ந்திருப்பது அவளுக்கு கலக்கத்தைக் கொடுத்தது.
கேக் செய்து ஒரு தட்டில் அவனுக்கு இரண்டும் மற்றொரு தட்டில் தனக்கு ஒன்றுமாக எடுத்துக்கொண்டு வந்தவள் அவன் அருகில் அமர்ந்து தோள் தொட்டாள்.
“அர்ஜுன்…ஏன் எதையோ யோசிச்சுகிட்டே இருக்க… எனக்கென்னவோ வேலை டென்ஷன் மாதிரி தெரியல… என்கிட்ட எதையோ மறைக்கிற… ஆர் யூ ஆல்ரைட்?” அவள் அப்படிக் கேட்டதும் அவள் பக்கமாக திரும்பியவன்,
“வர்ஷி… நாம காதலிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னால… நீ வேற யாரையாவது டேட் பண்ணியிருக்கியா?”
சற்றும் எதிர்பாராத கேள்வியால் குழம்பியவள், “ஒய் திஸ் டாபிக் நவ் அர்ஜுன்?” எனக் கேட்டாள். அவளது முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர ஆரம்பித்திருந்தன.
“ஜஸ்ட் டெல் மீ ஹனி”
“நாம ஏற்கனவே இதைப் பற்றி பேசியிருக்கோம் அர்ஜுன். ஐ வாஸ் இன் லவ் வித் நவீன். உனக்கே தெரியுமே”
சற்று நேரம் எதுவும் பேசாமலிருந்தவன் அவள் கொண்டு வந்திருந்த கப் கேக்கில் ஒன்றை எடுத்து பிய்த்துத் தின்றான்.
“இட்ஸ் வெரி நைஸ் வர்ஷி”
“ஜஸ்ட் கட் த க்ராப் அர்ஜுன். என்ன விஷயமா இருந்தாலும் டெல் மீ ஸ்ட்ரெயிட் பார்வர்ட்… எனக்கு மறைக்கிறது பிடிக்காதுன்னு தெரியுமில்ல?” அவள் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் அழிந்து இப்போது கோபத்தின் ரேகைகள் தென்பட ஆரம்பித்திருந்தன.
“கூல் டவுன் வர்ஷி” என்றவன் அவளது கைகளை தன் கைகளுக்குள் பொதிந்து வைத்துக்கொண்டு தன் மனதிலிருந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தான்.
“புல் ஷிட்” என சத்தமிட்டு கத்தியவள் அவனது கைகளை உதறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள். அவன் எவ்வளவு கதறியும் கதவைத் திறக்க மறுத்துவிட்டாள். ஒரு மணி நேரத்திற்கு பின் வெளியே வந்தவளை கலக்கத்துடன் பார்த்தான் அர்ஜுன். ஆனால் அவளது முகத்தில் இப்போது கோபத்தின் ரேகைகள் மறைந்து தெளிவானதொரு துலக்கம் தென்பட்டது.
அவனருகே வந்தவள் அவனது இடது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அதிர்ந்து நின்றவனிடம் “இரண்டு நாளா என்கிட்ட மறச்சதுக்குதான் இந்த அறை… காரை எடு” என்றாள். இடது கன்னத்தை தடவிக்கொண்டே கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறியவனை கத்திரிப்பூ நிற புடவையுடன் பின் தொடர்ந்தாள் வர்ஷினி.
அந்த நட்சத்திர விடுதியின் முன் கார் நின்றபோது இரவு பதினோரு மணியைத் தொட்டிருந்தது. “டேக் கேர் வர்ஷி” என்றவனை பொருட்படுத்தாமல் கார் கதவை வேகமாக மூடிவிட்டு விடுதியை நோக்கி நடந்தாள். அவள் போவதை பார்த்துக்கொண்டே இருந்தவன் சில நிமிடங்களுக்குப் பிறகு காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அந்த விடுதியின் வரவேற்பறையில் காத்திருந்தான். கையிலிருந்த அலைபேசியில் அவ்வப்போது க்ரிப்டோ செயலியைத் திறந்து பார்த்துக் கொண்டு இருந்தவன் ஒரு மணி நேரம் ஆனதும் வாட்சப்பைத் திறந்து வர்ஷினிக்கு “வெயிட்டிங் 4 யூ டியர்” என்றொரு மெசேஜை அனுப்பி வைத்தான். அது நீலநிற டிக் ஆகாமல் அப்படியே இருந்தது. இரவு மணி ஒன்று முப்பதைக் கடந்ததும் அது நீலநிற டிக்கானது. அவளொரு நடுவிரல் எமோஜியை பதிலாக அனுப்பியிருந்தாள். அதே சமயம் அவனது க்ரிப்டோ வாலட்டிலிருந்து ஓர் அறிவிப்பு எட்டிப்பார்த்தது. அவசரமாக அதைத் தொட்டதும் அவனது க்ரிப்டோ வாலட் பேலன்ஸில் இருபது பிட்காயின்கள் க்ரெடிட் ஆகியிருந்தது தெரிந்தது. உடனே அவனது மனம் அது இந்திய ரூபாய் மதிப்பில் எவ்வளவு என்கிற கணக்கைப் போட்டுப் பார்த்தது. எண்பது லட்ச ரூபாய்க்கும் மேல். “யெஸ்” என அதீத மகிழ்ச்சியில் சற்று சத்தமாகவே கத்தியவனை அந்த விடுதியின் வரவேற்பாளினி வினோதமாக பார்த்தாள்.
“அர்ஜுன் லெட்ஸ் கோ” சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் முன்னால் நின்றிருந்தாள் வர்ஷினி. அவளது முகத்தில் இப்போது பெயரற்ற புதுவித ரேகைகள் படர்ந்திருப்பது போல அவனுக்கு தோன்றியது. எழுந்து பார்க்கிங் நோக்கி அவளுடன் நடக்க ஆரம்பித்தான். அவள் தான் ஆரம்பித்தாள்,
“பிட்காயின் வந்துருச்சுல்ல அர்ஜுன், ஹோப் யூ காட் வாட் யூ வான்டட்” மிதமான குளிர்காற்று வீசிய அந்த மார்கழி மாதத்தில் அவளது குரல் தெளிந்த நீரோடை போலிருந்தது.
“யெஸ் வர்ஷி வந்துருச்சு. இன்னும் கொஞ்ச நாட்கள்ல பிட்காயின் விலை ஏறும்னு கென்னடி சொன்னான். வி வில் பி மில்லியனர்ஸ் சூன்” கண்கள் விரிய பதில் சொன்னவன் தொடர்ந்தான்,
“இந்த இராத்திரிய ஒரு கெட்ட கனவா நெனச்சு..” அவன் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தாள்,
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் அர்ஜுன், ஐம்பது வருசத்துக்கு முன்னால வந்த படத்துல ஹீரோ பேசுறாப்புல பேசாத. திஸ் இஸ் 2019. நீ பேசுறது அசிங்கமா இருக்கு… இன்னொரு அறை வேணுமா?” வார்த்தைகள் தடித்து பொறிந்து தள்ளினாள்.
“ஒகே ஒகே…ஸாரி டியர்… வேற ஏதாவது பேசலாம். ஹவ் வாஸ் ஹீ ஆன் த பெட்?”
“உன்னை விட எவ்வளவோ மேல்” சட்டென்று வந்துவிழுந்தது பதில். சுருக்கென்றது.
“இதுக்கு நீ என்னை இன்னொரு தடவ அறைஞ்சிருக்கலாம் வர்ஷி” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவிரும்பாமல் காரில் ஏறினான். வீடு வரை கனத்த மெளனத்துடனே இருவரும் காரில் உட்கார்ந்திருந்தார்கள். பின்னிரவில் வீட்டிற்கு வந்தவுடன் கென்னடியிடமிருந்து வாட்சப் மெசேஜ் வந்திருப்பதைப் பார்த்தான் அர்ஜுன். மெசேஜைத் திறந்தான் “Thanks for the real fish,Arjun” என்றிருந்தது. அலைபேசியை படுக்கை அருகே இருக்கும் சிறிய மேசையில் வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான். மனதெங்கும் அந்த இருபது பிட்காயின்களும் பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தன. உறக்கம் வராமல் வெகு நேரம் புரண்டவன் விடியத்துவங்கும் போது உறங்க ஆரம்பித்திருந்தான்.
அந்த இரவுக்குப் பின் வேகமாக வாழ்க்கை மாறத் துவங்கியிருந்தது. கென்னடி சொன்னது போலவே பிட்காயின் விலை மடமடவென்று ஏற ஆரம்பித்தது. எண்பது லட்சரூபாய் மதிப்புள்ள பிட்காயின்கள் சில மாதங்களில் நான்கரை கோடி ரூபாயைத் தொட்டது. சில பிட்காயின்களை விற்று திருவான்மியூரில் கடல் பார்த்த அபார்ட்மெண்ட்டை வாங்கினார்கள். யானை நிற பென்ஸ் காரும் வந்து சேர்ந்தது. இருவரும் வேலையை ரிசைன் செய்துவிட்டு புதியதொரு உணவகத்தை அடையாறில் திறந்தார்கள். அதன் வடிவமைப்பிலும் நல்ல தரமான புதிய வகை உணவிலும் அதிகம் அக்கறை எடுத்து கவனம் செலுத்தியதில் சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் பெயர் பெற்றதொரு உணவகமாக அது மாறியிருந்தது. பணவரவும் வேகமெடுத்தது. அப்போதுதான் அர்ஜுனின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டது. அடிக்கடி நண்பர்களுடன் சுற்றுப்பயணம் போக ஆரம்பித்தான்.
முதலில் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தவள் தன்னிடமிருந்து அவன் விலகுவதாக உணர ஆரம்பித்து அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தாள். அவன் அறியாத பொழுதொன்றில் அவனது அலைபேசியை எடுத்துப் பார்த்தபோது ஷில்பா என்கிற பெண்ணுடன் அந்தரங்கமாக அவன் பேசியிருக்கும் வாட்சப் மெசேஜ்களை கண்டு அதிர்ந்தாள். வாட்சப் ஹிஸ்டரியை எடுத்துப் பார்த்தபோது அவர்களது உரையாடல் தன்னை அவன் காதலிப்பதாக சொன்ன நாளுக்கு முன்பிருந்தே இருப்பதை தெரிந்துகொண்டாள். தன்னைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் அதற்கு முன்பிருந்தே வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரிந்ததும் அவளது கோபம் உக்கிரமடைந்தது. எப்படி இத்தனை வருடங்கள் இது தெரியாமல் போனது என தன்னைத் தானே நொந்து கொண்டவள் இனி ஒரு நிமிடம் கூட தன் வாழ்வில் அவனுக்கு இடமில்லை என்பதை முடிவு செய்தாள். அவனது க்ரிப்டோ வாலட் செயலியை திறக்க முயன்றாள். அது அவனது விரலை வைத்தால் மட்டுமே திறப்பேன் என்றது. அன்றிரவே அவன் உறங்கியதும் அந்த க்ரிப்டோ வாலட் செயலிக்குள் அவனது விரலால் அழுத்தி உள்நுழைந்தாள். அங்கே மிச்சமிருந்த பிட்காயின்கள் அனைத்தையும் தன்னுடைய க்ரிப்டோ வாலட் முகவரிக்கு அனுப்பினாள். அன்றிரவு நிம்மதியாய் உறங்கினாள்.
நினைவிலிருந்து மீண்டவள் அர்ஜுனும் ஷில்பாவும் கடகற்கரையை விட்டு ஒன்றாக பென்ஸ் காரில் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
காருக்குள் ஏறிய அர்ஜுன் ஷில்பாவிடம் பேசிக்கொண்டே காரை ரிவர்ஸ் எடுத்தான்.
“லைப்ல நா பண்ணது ரெண்டு தப்பு ஷில்பா. ஒண்ணு வர்ஷி பேர்ல அப்பார்ட்மெண்ட் வாங்கினது. ரெண்டாவது மொத்த பிட்காயினையும் பணமா மாத்தாம அப்படியே வச்சிருந்தது.”
“இட்ஸ் ஆல் ரைட் அர்ஜுன், நானும் பிஷ் ப்ரை நல்லா செய்வேன்னு உனக்குத் தெரியும்… கென்னடிக்குத் தெரியுமா?” சொல்லிவிட்டு சத்தமிட்டு சிரித்தாள்.
“பக்கிங் பிஷ் ப்ரை…ஹாஹா” என்றபடி அவளுடன் சேர்ந்து சிரித்தபடியே காரைச் செலுத்தினான் அர்ஜுன்.
ஒவ்வொரு அலையாக கரைதொட்டு கடலுக்குள் திரும்பிக்கொண்டிருந்தன. ஜூஜூ வர்ஷினியின் பின்னங்காலிலிருக்கும் பட்டாம்பூச்சி டாட்டூவை நாவால் வருடியது. அந்தப் பட்டாம்பூச்சி சன்னல் வழியே வெளியேறி வெளியெங்கும் சிறகடித்துப் பறந்தது.

ராஜேஷ் வைரபாண்டியன்.
ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல்,ஒரு குறுநாவல் மற்றும் ஒரு நாவல் எழுயிருக்கிறார்.
இவரது “வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி’ கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. இவரது குறுநாவல் “வேங்கை வேட்டை” ஸீரோ டிகிரி 2023 இலக்கியப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது.
ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியர்.