சுதாகர் கத்தக் – சிறுகதை உலகம்

காலங்காலமாக செவிவழியாக வழங்கி வந்த நாட்டார் கதைகளை “சிறுகதை” என்னும் இலக்கிய வடிவத்துக்கு முன்னோடியாகச் சொல்லலாம். ஒரு சிறு சம்பவம், அதனை ஒற்றை மனநிலையில் நறுக்குத் தெறித்தாற் போல் விவரிக்கும் பாங்கு, அதிலுள்ள ஒவ்வொரு வாக்கியமும், அந்த சம்பவத்தை கட்டமைக்கக் கூடியதான அமைப்பு, இது தான் ஒரு சிறுகதை என்கிறார் சிறுகதை இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற “எட்கர் ஆலன் போயே”. எல்லாவிதமான சிறுகதைகளுக்கும் சில பொதுத்தன்மைகள் அமையப்பெற்றிருக்கும். கதைக்கான களம், அமைப்பு, பாத்திரங்கள், கரு, யாருடைய பார்வையில் கதை சொல்லப்படுகிறது, தேவையான மொழிநடை ஆகியவை ஒரு சிறுகதைக்குத் தேவையான உட்கூறுகளாகக் கூறலாம்.

தமிழ் சூழலைப் பொறுத்தவரை கடந்த நூறறாண்டில் சிறுகதை இலக்கியத்திற்கான வளர்ச்சி பெருமளவில் நடந்தது என்று சொல்லலாம். அக்ரஹாரத்து வாழ்க்கை முறைகள், அது சார்ந்து மனநிலை, மேலிருந்து பறவைப்பார்வையாய் சமுதாயத்தின் மற்ற அடுக்களில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறையை பதிவு செய்தல் என்றிருந்த இலக்கிய வடிவம், பின் மெள்ள வேறூன்றி வேளான் சமூகத்து கதைகளையும், வேட்டை சமூகத்தின் கதைகளையும் பேசத்துவங்கியது. கரிசல் எழுத்தாளர்களின் வருகையால் அசலான சம்சாரிகளின் வாழ்க்கைப்பாடுகள், அவர்களின் கிராமியம் சார்ந்த மரபும், பண்பாடும் எழுத்தில் பதிவாகத் துவங்கியது. ஆனாலும் சமூகத்தின் விளிம்பு நிலையில் வசிக்கின்ற மக்களின் அசலான வாழ்க்கைமுறை சரிவரப் பதியப்படாமலே இருந்து வந்தது. சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் கடைநிலை மக்களின் வாழ்வியலை பேசிய சில படைப்புகள் கூட, அந்த எழுத்தாளர்களின் இடதுசாரிக் கொள்கைகளுடனும், மார்க்சிய கருத்தியல்களோடும் இணைத்தே பேசப்பட்டன. வர்ணாசிரமத்தால் பலநூறு ஆண்டுகளாக குரல்வளை நெறிக்கப்பட்டு, இருப்பின் அடையாளம் இல்லாதபடிக்கு வாழ்ந்து வருகின்ற பெரும்பான்மையான மக்களின் வாழ்வையும், அவர்களின் துயரங்களையும், மகிழ்ச்சியையும் உரக்கக் கூறக்கூடிய குரல்கள் அவர்களுக்குள்ளிருந்தே வரும் போது, அதன் வீரியம் உண்மையானதாகவும், போலிப்பாசாங்கு அற்றதாகவும் இருக்கும்.

ஜோதிபா பூலே, பீம்ராவ் அம்பேத்கர் ஆகியோர் தலைமையில், 1958ம் ஆண்டு “மகாராஸ்ட்ரா தலித் சாகித்ய சங்கம்” சார்பில் நடைபெற்ற முதல் கருத்தரங்கில், முதன்முதலில் ”தலித் இலக்கியம்” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது. மராத்திய எழுத்தாளரான பாபுராவ் பாகல் 1963ம் ஆண்டு எழுதி வெளியிட்ட முதல் தொகுப்பான “நான் எனது சாதியை மறைத்த போது” சமூகத்தி குரூர முகத்தை படம் பிடித்துக் காட்டியது. ”தலித் சிறுத்தைகள்” அமைப்பை உருவாக்கிய நாம்தே லக்ஷ்மன் தாசல் அவர்களின் எழுத்துக்கள் தலித் இயக்கங்களின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றின. இந்தியா முழுவதும் “நவீன தலித் இலக்கியத்தின்” வளர்ச்சி என்பது புகழ்பெற்ற மராத்திய இலக்கியங்கள் 1990களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் சென்றடைந்ததில் துவங்கியது. தலித் இலக்கியம் தோன்றியதற்கான காரணம் என்பதாக பாகல் அவர்கள் கூறுவது “தலித் இலக்கியம் விரோதத்தை பரப்புவதற்காக உருவானது அல்ல. அது மனித விடுதலையையும், மனிதனின் மகத்துவத்தையும் போற்றுகிறது. எனவே தலித் இலக்கியம், வரலாற்றுத் தேவையும் ஆகிறது. வேதனை, காத்திருப்பு, துக்கம் ஆகியவற்றை மட்டும் பேசுவதல்ல தலித் இலக்கியம். ஒரு புதிய சமுதாயம் மலர்வதற்கான முயற்சியாகவே நாங்கள் தலித் இலக்கியத்தைப் பார்க்கிறோம்” என்பதாகும்.

சமூகத்தில் கொண்டாடப்படும் புனிதங்களையும், அமைப்பு முறைகளையும், படிநிலைகளையும் கேள்விக்கு உட்படுத்துவதே தலித் இலக்கியத்தின் நோக்கம். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தலித்துகளின் போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது. பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தலித் துறவியான கலாவ்வே உயர்சாதியினரைப் பார்த்து இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்.

ஆட்டையும், அழுக்குடைய சிறு மீன்களையும்

திண்பவர்களை உயர்சாதி மக்கள் என்கின்றீர்

நுரை பொங்கும் தூய பாலை

சிவனின் மீது பொழியும்

புனிதமான பசுவை உண்பவர்களை

கீழ்சாதி என்கின்றீர் !

உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்குமான இசை “மனித விடுதலை” என்ற ஒற்றைப் பாடலின் பலதரப்பட்ட மெட்டுக்களாகத் தான் இருக்கும். நான்காம் உலக நாடுகள் எழுச்சி அடையும் போது, அவர்கள் அனைவரிம் இலக்கியமும் “தலித் இலக்கியமாகவே” இருக்கும் என்றே தோன்றுகிறது. மரபார்ந்த சொல்லாடல்கள, சுவாரஸ்யமான நடை, அழகிய வர்ணனைகள் இல்லாமல் யதார்த்ததின் குரூரத்தை அப்பட்டமாய் சொல்கின்ற இவை, வழக்கமான பொதுபுத்தி சார்ந்த இலக்கிய நடைமுறைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம், ஆனால் தலித் இலக்கியம் என்பது காலம்காலமாய் ஒடுக்கப்பட்ட மக்களின் அசலான குரலாக ஒலிக்கிறது.

மிகை உணர்ச்சிக்கும், வர்ணனைகளுக்கும் இடமில்லாத, உள்ளதை உள்ளபடி ஆழமாக விவரிக்கின்ற புனைவுலகம் சுதாகருடையது. சிறு மேஜிக் செய்து பிழைப்பை ஓட்டுபவர்கள், கழைக்கூத்தாடிகள், வீடற்ற பிளாட்பாரவாசிகள், விலைமாதர்கள், தன்னை பெண்ணாக உணர்ந்து வீட்டில் தங்கப்பிடிக்காமல் ஊரை விட்டு ஓடிச்செல்லும் பதின் வயது சிறுவன், பறையடிப்பவர்கள், சூழ்நிலையால் பிச்சைக்காரர்களாக மாறுகிறவர்கள், பூம்பூம் மாட்டுக்காரன், காவல்துறையிடம் அடிபட்டுச் சாகும் உதிரிகள், கிராமத்தை விட்டு புலம்பெயர்ந்து நகரத்து சந்து பொந்துகளில் தஞ்சம் புகுந்தவர்கள், மேளக்காரன், இரவில் வீடுகளில் கன்னம் வைத்துத் திருடும் சிறு திருடர்கள், பனங்கிழங்கு விற்பவர்கள், கிணறு வெட்டுபவர்கள் என சுதாகரின் கதை மாந்தர்கள் அனைவருமே விளிம்பு நிலை மனிதர்கள் தாம். அவர்களின் பாடுகளை, அன்றாட வாழ்வியல்களை எந்தவித ஆர்ப்பாட்டமோ, அழுகையோ அல்லது அறிவுரை வழங்குவது போலோ அன்றி அவர்களின் உடனிருந்து பயணிப்பது போல, யதார்த்தத்துடனும், தத்ரூபமாகவும் காட்சிப்படுத்துகிறார்.

”நட்சத்திரங்களுடன் பேசுபவள்” என்றொரு சிறுகதையில் வரும் தொம்மம்மாவின் அறிமுக சித்தரிப்பே வித்தியாசமானது. நகரத்தின் பிரதான சாலையின் ஓரத்தில் வீழ்ந்து கிடக்கும் அவளை அங்கிருந்த யாருக்கும் தெரியாது. அவள் அவர்களுக்குத் தெரியாத பூ, மரம், பறவை போன்றவற்றை தெரிந்தவள் என்ற குறிப்பே அவளது இயல்பு மற்றும் நகரவாசிகளின் நடைமுறை ஆகியவற்றை ஒன்று சேரச் சொல்லிச் செல்கிறது. கிராமத்தில் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த அவளும் அவளது கணவனான மாடு மேய்க்கும் தொழில் செய்பவனும், குழந்தை இறந்த துக்கம் தாளாமல், அதன் மேலும் அங்கே இருக்கப்பிடிக்காமல் நகரத்திற்கு குடிபுகுகின்றனர். அங்கே அவள் பச்சை குத்துபவளாகவும், அவன் பூம்பூம் மாட்டுக்காரனாகவும் மாறிப்போகின்றனர். இறுதியில், நகரத்தின் கோரப்பற்களால் அவள் சூறையாடப்பட்டு வானில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி செத்துப் போகிறாள்.

ஊர்சாதிக்கார பெரிய வீட்டானோடு சென்று விட்ட மருமகளின் பொருட்டு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட அவமானம் தாங்காமல், மரத்தில் நாண்டு கொண்டு சாகும் மூன்று மாமன்களின் கதை, “மருமகளும் மாமன்மார்களும்”. நெடுநெடுவென்ற வளத்தியும், அகன்ற நெஞ்சும் உள்ள, பத்தாவது வரை படித்த செவத்தான், பள்ளிக்கூடத்தைப் பார்த்த சிறுவயதில் காறித் துப்பிய, அம்மாவாசையில் பிறந்த, திருட்டு குணமுடைய கொடியாளத்தான், சாவு வீட்டில் வாணம் விடும், பிரமாதமாய் பாடை கட்டும் ரிக்கி, இந்த மூன்று பேரும் தான் மாமன்கள். தங்களுக்குப் பிரியமான ஒரே மருமகளான பூமாலையை அவள் விரும்பியவனுடம் அனுப்பிவிட்டு தண்டனை அனுபவித்து இறந்து போகின்றனர்.

காடுகளிடம் நீங்கா விருப்பம் கொண்டிருப்பவள், காடும் அழிந்து மழையும் பொய்த்தபின் ஊர் ஊராக பயணம் செய்து, இறுதியில் பிச்சையெடுக்கும் நிலை ஏற்படுவதை விவரிக்கும் கதை “பயணம்”. பச்சை வாசனை வீசும் விளைநிலங்களில் எப்பொழுதும் சுற்றித் திரிய வேண்டும் என்ற மனம் படைத்தவர்கள், பல்வேறு ஊர்களின் சந்தைகளை வெறுமனே வேடிக்கை பார்த்தபடி கடந்து கொண்டிருந்தனர். மண் எங்கும் விரவிக் கிடக்கும் கால்ரேகைகளின் நெளிவுகளில் அவர்களின் வாழ்வு உருகிக்கிடந்தது. பெரும் நினைப்புக்கும், மகிழ்வுக்கும் மனதின் கண்களை திறந்து வைத்திருப்பவளுக்கு காலம் எதைப் பரிசாகத் தருகிறது என்பதை விவரித்துச் செல்லும் கதை.

காலங்காலமாய், ஊரில் நிகழும் மரணங்களுக்குப் பறையடிக்கும் நொள்ளாரக் கிழவனால் ஈர்க்கப்பட்டு பறையடிக்கும் பதின்ம சிறுவன், அவனுக்காக தோதான மாட்டுத் தோலில் பறை செய்து கொடுக்கும் அப்பா என்று மனக்கண்ணில் விரியும் கதையான “சாபம்”, தன்னை பென்ணாய் உணர்ந்த சிறுவன் உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல் வெளியேறிச் சென்று, பின் சில ஆண்டுகள் சென்று ஊர் திரும்ப நேரும் நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது. இறுதியில் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இருட்டைக் கிழித்து ஓட்டமெடுத்து, மனம் உடல் அனைத்து பேதலிக்க, மேடு ஏற வாட்டமாக குத்துச்செடி கிடைக்கிறதா என துழாவி பிடிமானம் கிடைக்காமல் கையிலிருந்து நழுவுவதாக முடிகிறது கதை.

இப்படி நமது அன்றாட வாழ்க்கையில். கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் மனிதர்களுக்கு உள்ளிருக்கும் அன்பை, துயரை, அவர்களுக்கென இருக்கும் உலகில் ஊடுறுவிச் சென்று படம்படித்துக் காட்டுகிறார் சுதாகர். 1967ம் ஆண்டு, நெய்வேலியில் பிறந்த சுதாகர் கத்தக் அவர்களின் இயற்பெயர் தி.சுதாகர். வங்காளத் திரைத் துறையின் புகழ்பெற்ற இயக்குநரான ரித்விக் கத்தக் தன் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தின் காரணமாக தனது பெயரோடு அவரது பெயரையும் இணைத்துக் கொண்டார். சுதாகரின் முதல் சிறுகதை 1989ல் கணையாழி இதழில் வெளியாகியது. தலித் இலக்கியத்திலும், குழந்தை இலக்கியத்திலும் தீவிர ஆர்வமுடையவர். எண்ணிக்கை அளவில் மிகக் குறைந்த ஆக்கங்களையே வெளியிட்டிருந்தாலும், தனது படைப்புகளின் யதார்த்தத் தன்மையினாலும், ஆழ்ந்த சித்தரிப்புகளாலும் தலித் இலக்கியத்தில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். உயிர்வித்தை, கழைக்கூத்து, மழை, நாட்கள், சாபம், பயணம், வரைவு, நட்சத்திரங்களுடன் பேசுபவள், திருமணஞ்சேரி, மருமகளும் மாமன்மார்களும், மைம்மண், கறுகுதல் ஆகிய பனிரெண்டு சிறுகதைகள் அடங்கிய, அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “கைம்மண்” 2012ல் பார்வைகள் : பதிவுகள் வெளியீடாக வெளியாகியது. தற்பொழுது தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

தலித் மக்கள், வாழ்வில் சகலவிதமான அடிப்படை உரிமைகளையும் இழந்து, சமூகத்தின் பல தளங்களிலும் பகடைகளாக உருட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில், தமிழ் நவீன இலக்கியவாதிகள் முழுமையான கவனத்துடன் தலித் படைப்புகளை மதிப்பீடு செய்தார்களா என்பது சந்தேகத்திற்கிடமானது. சில கூர்மையான விமர்சகர்கள், தலித் படைப்புகள் மீது அக்கறை கொண்டு, தமிழ் தலித் படைப்புகளை, முயற்சிகள் என்று வரையறுத்துக்கூறிய காலகட்டத்தில் தான் நால் சில சிறுகதைகளை எழுதத்தொடங்கினேன் என்று கூறுகிறார் சுதாகர் கத்தக். நவீன இலக்கிய சிறுபத்திரிக்கை வட்டாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சுதாகர், இது வரை மொத்தம் இருபதுக்கும் குறைவான சிறுகதைகளையே எழுதியிருக்கிறார். இருந்தும் தலித் இலக்கியத்தில் மைல்க்கல்லாக இருக்கக்கூடிய சிறப்புடன் அவரது கதைகள் அமைந்திருக்கின்றன. “உனது வாழ்க்கையே உனது அற்புதப் பரிசு” என்று மேற்கோள் காட்டும் மேற்கத்திய கவிஞர்களின் உவமைகள், நூற்றாண்டுகளாக அடிப்படி உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய, தமிழக தலித்துகளுக்குப் பொருந்துமா என்று கேள்வி எழுப்புகிறார். பொதுவாக, இயற்கையை, வாழ்க்கையை, சக மனிதர்களை விதந்தோதும் மேம்போக்கான இலக்கியம் தலித்துகளுக்குப் பொருந்தாது என்பது அவரது வாதம். சமதர்ம நோக்கோடு சமத்துவம் பேசிய இடதுசாரிகளின் மன உணர்ச்சிகளோடு வெளியாகிய படைப்புகள் கூட தலித் இலக்கியத்தின் உள் அலகுகளோடு முற்றிலும் மாறுபட்டவை என்று நம்புகிறார்.

அந்த வகையில் ஒரு தலித் எதை எழுத முடியும் என்ற அவநம்பிக்கையிலேயே தான் எழுத்துவங்கியதாகவும், இன்றும் தன்னுள் அந்த அவநம்பிக்கை தொடர்வதாகவும் குறிப்பிடுகிறார். தனது படைப்புகளுக்கான கதை வடிவம், சொல்முறை ஆகியவற்றை தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரைத் தொடர்ந்து வாசித்து வருவதால் பெற்றதாகவும், எழுத்தின் உட்கரு, மொழியின் லாவகம் ஆகியவற்றை தான் சார்ந்திருக்கின்ற, தான் பார்த்து வளர்ந்த, வாழ்க்கை முறைகளில் இருந்தும் பெற்று எழுதுவதாகவும் கூறுகிறார். உள்ளொளி தரிசனம், அகவயப்பார்வை, நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்று வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள் சிக்காமல், தன் யதார்த்தமான இயல்புத்தன்மையாலும், சமூகத்தைத் தான் நோக்குகிற, சமூகம் தன்னை நோக்குகிற பார்வைகளாலும், கட்டிவைக்கப்பட்டிருக்கிற தனது எல்லைக்குள் ஆடுகிற தனது விளையாட்டு, தனது அல்லல், தனது போதாமை மற்றும் அவற்றையெல்லாம் திமிறி அடிக்கிற தனது உத்வேகம் என்ற அமைவுகளிலேயே தலித் இலக்கியம் உருப்பெறுகிறது என்று திடமாக நம்புகிறார் சுதாகர்.

யதார்த்த எழுத்து என்பது இலக்கியத்திற்கு ஒவ்வாதது என்ற கூச்சல் கேட்கத்துவங்கிய காலத்தில தனது பிரதான ஆயுதமான யதார்த்தத்தை முன்வைத்து தலித் இலக்கியம் எழுச்சி பெறத்துவங்கியது. அதற்கு முன் வெளிவந்த சில தலித் படைப்புகள் கூட இடது சாரி மார்க்சிய சித்தாந்தம் சார்ந்தவைகளாகவும், கலைப்பார்வை கொண்டுவைகளாகவுமே பார்க்கப்பட்டனவேயன்றி ஒதுக்கப்பட்டவர்களின் குரலாக கவனம் பெறவில்லை.

இலக்கியத்தில் கண்ணீரை மட்டுமே சொல்வது கலையாகாது என்ற கருத்துடன் இயங்கும் தென் தமிழகத்து மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்கள் புறங்கையால் ஒதுக்கத் தகுந்தது என்று நம்பும் இளைய தலைமுறையினர் இலக்கியக் களத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் இருப்பதாக உறுதியாகக் கூறுகிறார் சுதாகர். இன்றைய தலித் இலக்கியம், கண்ணீர் இழைகளைக் கொண்டு கலை செய்யும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறதேயொழிய, கண்ணீரை விடுவதாக இல்லை என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். தனக்கு நெருக்கமான உறவினர்களுக்கு நடந்தேறிய விஷயங்கள், அவர்களின் விருப்பு வெறுப்புகள், துயரங்கள், அவர்களின் மகிழ்வான தருணங்கள் ஆகியவற்றை தான் உடனிருந்தும், கேள்விப்பட்டும் அறிந்த தனது அனுபவங்களே தனது படைப்புகளில் உள்ளார்ந்து பிரதிபலிப்பதாகவும் கூறிகிறார் சுதாகர். முழுவதும் தலித்திய சூழலில் தான் வளரக்கூடாது என்று அவரது பெற்றோர்கள் விரும்பியதாகவும், தொழில் நகரமான நெய்வேலியில் பிறந்த வளர்ந்த காரணத்தினால் முழுமையான தலித்திய வாழ்யியல் சூழலில் தான் வளர வில்லை என்றாலும், விடுமுறை பருவங்களில் தன் பெற்றோரின் சொந்த ஊருக்குச் செல்லும் போது, அங்கு தான் பார்த்ததையும், கேட்டதையும், அங்குள்ள தனது உறவினர்களின் வாழ்நிலையையும் கண்ணுற்ற போது தனக்குண்டான மனப்பதிவுகளே தனது கதைப்பிரதேசத்தில் விரிகின்றன என்றும், இலக்கியம் எழுதுபவன் கற்பனையை உதறும் நேரத்தில் கடவுளையும் உதற வேண்டும் என்ற உண்மையைக் கதைகள் எழுதும் போது தான் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

பொதுவாக தலித் இலக்கியத்தின் உட்கட்டமைப்பு, ஆதி நிலம், நாட்டார் கதைகள், தொன்ம தெய்வங்களின் கதைகள், தெளிவற்ற கரடுமுரடான அரசியல், ஆதிக்க சாதிகளின் மீதுள்ள தீராத வெறுப்பு, அதை வெளிப்படுத்த வழியில்லாத எரிச்சல், அவர்களின் மீது திணிக்கப்படும் அறநெறிகள், அதற்கு பதிலடியாக தாங்கள் வைக்கும் ஒழுங்கு மீறல்கள், பொருளாதாரத்தின் கீழ்மை நிலை, அவை பேசுகின்ற விளிம்பு நிலை வாழ்நிலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அடக்கி வைக்கப்படும் எதுவும் ஒருநாள் அத்துமீறி வெடிக்கும் என்பது தான் இயல்பு என்பதையே தான் கண்ட மனிதர்களிடம் பொதிந்து கிடக்கின்றன என்றும் அவற்றை கொஞ்சம் கூட்டிக் குறைத்து அவர்களின் மொழிவழியிலேயே அவர்களை சித்தரிக்க முயல்வதாகவும் சுதாகரின் எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. சமூக உணர்வு, வட்டார வழக்குமுறை, யதார்த்தமான நடை, சமகால அரசியல், கலாச்சார மேம்பாட்டின் மீதான நம்பிக்கை ஆகியற்றை மையக்கண்ணிகளாக சுற்றியே சுதாகரின் படைப்புகள் அமைகின்றன.

தலித்திய சூழ்நிலையில் வளர்ந்தவர்களும் கூட, சமூகத்தில் உயர் நிலை அடைந்த பிறகு தங்களது தலித் அடையாளத்தை மறைக்க முனையும் சமூகச்சூழலே இன்றும் நிலவுகிறது. அதற்காக அவர்களின் முன்னோர்கள் வெறுத்த, அவர்கள் மீது திணிக்கப்பட்ட, தங்களுக்கு ஒவ்வாத அறநிலையையே இன்று வலியச்சென்று மேற்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். விரதமும், பூஜையும், புணஸ்காரங்களும் தங்களை மேலுள்ளவர்களாக நிர்ணயிக்கும் என்று நம்புகின்றனர். அவ்வாறு இருக்கின்ற சூழ்நிலையில், தனது வேர்களின் இயல்நிலையையும், இன்னும் சமூகத்தின் கீழ் நிலைகளில் தவித்துக் கொண்டிருக்கும் சகமனிதனின் அசலான வாழ்க்கை முறையையும்  யதார்த்தமாக எழுத்தில் பதிவு செய்வது சுதாகர் கத்தக்கின் உண்மையான பலம். தலித் படைபாளி என்பவன் எவ்வாறு இருக்க வேண்டுமென்று அவரது வார்த்தைகளிலேயே கூற வேண்டுமென்றால், உறுதியான கொள்கையுடன், சீரிய கலாச்சார தளத்தில், விலைபோகாதவனாக, சமூகத்தை தன் படைப்புகள் மூலம் விமர்சிப்பவனாக இருக்க வேண்டும் தலித் படைப்பாளி. சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் உவப்பானது இல்லை தலித் இலக்கியம். மாறுகால், மாறுகை வாங்கப்பட்ட சந்ததிகளின் குரல் வன்மமாய் எங்கு எதிரொலிக்கிறது. இந்த எதிரொலி உண்டாக்கிய பாதைகளின் வழியே பயணத்தை மேற்கொண்டிருக்கும் தலித் படைப்பாளி தான் சந்திக்க இருக்கும் சவால்களை எதிர்நோக்கியபடியே பயணித்துக் கொண்டிருக்கிறான்என்பதே அவரது எண்ணம். அவரது கதைகளும், அதையே தான் ஆதிமனிதனின் தொன்மையான மொழியில் தொடர்ந்து விடாமல் பேசிக்கொண்டே இருக்கின்றன.

தரவுகள்:

http://literarism.blogspot.in/2013/11/dalit-literature.html

https://en.wikipedia.org/wiki/Dalit_literature

http://vle.du.ac.in/mod/book/print.php?id=6026&chapterid=5273

தலித் இலக்கியம்: எனது அனுபவம், நூல் தொகுப்பு: சுதாகர் கத்தக், IFP, Pondicherry – Vitiyal, Coimbatore, டிசம்பர் 2004

மாற்றுப்பாதை – சுதாகர் கத்தக் – யாழன் ஆதி (http://keetru.com/dalithmurasu/may09/yazhan_aathi_1.php)

“கைம்மண்” – சுதாகர் கத்தக் – வலிகளாலான வாழ்க்கைச் சித்தரிப்பு – பொன்.வாசுதேவன் (http://aganaazhigai.blogspot.in/2013/07/blog-post.html)



dav

பாலகுமார் விஜயராமன் (1980)

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர்

சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்துவருகிறார்.  மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இதுவரை 5 அச்சு நூல்களையும், 5 மின்னூல்களையும் எழுதியுள்ளார். பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த இவரது “கடவுளின் பறவைகள்” மொழிபெயர்ப்பு உலகச் சிறுகதைகள் தொகுப்பிற்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான வாசகசாலை விருது 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆலன் கின்ஸ்பெர்க்கின் நெடுங்கவிதை “ஹௌல்” மற்றும் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் “அஞ்சல் நிலையம்” நாவல் பரவலான கவனத்தையும், நேர்மறை விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் பெற்றது. காலச்சுவடு வெளியீடாக 2018ம் ஆண்டு வெளியாகிய இவரது நாவல் “சேவல்களம்” பண்டைய காலம் தொட்டு தமிழர் புறவாழ்வில் முக்கியப் பங்காற்றும் சேவல் சண்டை குறித்த நுட்பங்களைப் பேசுகிறது. கருவுறுதலின் போதான அக அலைச்சல், மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற கருக்களைக் கொண்ட இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு “நஞ்சுக் கொடி” இவ்வாண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *