ஆகாயப் பெருவிருந்துக்கு சென்ற ஆமை

விலங்குகளின் ராஜ்யத்தில் பஞ்சம் நிலவியபோது, ஆமை மிகவும் கஷ்டப்பட்டது. எங்கு தேடியும் அதற்கு சரியான உணவு கிடைக்கவில்லை. பசியிலும் பட்டினியிலுமாக அதன் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

     மற்ற உயிரினங்களும் கூட அதே போலக் கஷ்டம்தான். ஆனால், பறவைகள் அப்படி கஷ்டப்பட்ட மாதிரியே தெரியவில்லை. அது மட்டுமல்ல; அவை வருடம்தோறும் நடத்தும் பறவைகள் பெருவிருந்தை அந்த வருடமும் – அதுவும் அந்தப் பஞ்ச காலத்தில் – நடத்துவதற்குத் தீர்மானித்திருப்பதை ஆமை அறிந்தது. பறவைகள் பெருவிருந்து ஆகாயத்தில் நடத்தப்படக் கூடியது. அவ் விருந்தில் சுவை மிக்க பல வகையான உணவுகளும் இடம்பெறும். ஆனால், அந்த விருந்தில் பறவைகள் மட்டுமே கலந்துகொள்ள இயலும். அதில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என ஆமைக்கு ஆசை.

     அது ஒவ்வொரு பறவையிடமும் சென்று, ஏதாவது பொய்க் காரணங்களைச் சொல்லிக் கெஞ்சி, ஒவ்வொரு இறகு மட்டும் வாங்கி வந்தது. அந்த இறகுகள் அனைத்தையும் சேர்த்து, தன்னுடைய முதுகில் ஒட்டிக்கொண்டதும் அவை சிறகுகளாயின. இப்போது பார்ப்பதற்கு அது மிக வண்ணமயமான மற்றும் வினோதமான பறவையாகக் காட்சியளித்தது.

     பறவைகள் பெருவிருந்து நாளன்று பறவைகள் யாவும் ஆகாயத்திற்குப் பறந்து சென்றன. அப்போது ஆமையும் அவற்றோடு சேர்ந்து பறந்து சென்றது.

     விருந்தினர் கூடத்திற்கு வந்து சேர்ந்த அந்த வினோதப் பறவையைப் பார்த்த அசல் பறவைகள், “இது போல ஒரு பறவையை இது வரை பார்த்ததே இல்லையே…!?” என்று குழம்பின.

     அவை அதனிடம், “நீ யார்?” என்று கேட்கவே, ஆமை, “நான் அரிய வகைப் பறவை. என்னுடைய பெயர், ‘நாம் அனைவரும்’ என்பதாகும்” என்றது.

     விருந்து ஆரம்பமாயிற்று.

     உணவு மேஜையில் பறவை போல் அமர்ந்திருந்த ஆமை, அசல் பறவைகளைப் பார்த்து, “இந்த விருந்தை சாப்பிடக் கூடியவர்கள் யார்?” என்று கேட்டது.

      “நாம் அனைவரும்!” என்றன பறவைகள்.

     “‘நாம் அனைவரும்’ என்பது என்னுடைய பெயர்தானே! அப்படியானால் இது எனக்கு மட்டும்தான்” என்று சொல்லிவிட்டு, பெருவிருந்தில் உள்ள உணவு வகைகள் யாவற்றையும் ஆமை கபளீகரம் செய்துவிட்டது.

      கோபமுற்ற பறவைகள் ஆமையைச் சூழ்ந்துகொண்டு, கொத்திப் பிடுங்கின. அப்போது அதன் முதுகில் ஒட்டப்பட்டிருந்த இறகுகள் ஒவ்வொன்றாக உதிரவே, அது பறவை அல்ல; ஆமை என்பது வெளிப்பட்டது.

     பறவைகள் ஆமையை இன்னும் தண்டிக்க விரும்பின.

     “இப்போது இறகுகள் இல்லாததால், உன்னால் இனி பூமிக்கு வர இயலாது.  ஆகாயத்திலேயே இருந்து கஷ்டப்படு்” எனக் கூறிவிட்டு அவை யாவும் கிளம்பின.

     அப்போது ஆமை அவைகளிடம் கெஞ்சிக் கூத்தாடி, “எனக்கு நீங்கள் ஒரே ஒரு உதவி மட்டுமாவது செய்யுங்கள்! பூமியில் என் மனைவியிடம் சொல்லி, வீட்டின் முன்பாக மென்மையான பொருள்களைப் போட்டு வைக்கச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டது.

       பூமிக்கு வந்த பறவைகள், ஆமையின் மனைவியிடம், “உன் கணவன், உங்கள் வீட்டைச் சுற்றி கடினமான பொருட்களைப் போட்டு வைக்குமாறு உன்னிடம் சொல்லச் சொன்னான்” என்று மாற்றிச் சொல்லிவிட்டன.

     திருமதி ஆமை என்ன ஏது என்று புரியாமல், வீட்டைச் சுற்றிலும் கடினமான மரத் துண்டுகள், கற்கள், இரும்பு ஆகியவற்றைப் பரப்பி வைத்தாள். திருவாளர் ஆமை, வானத்திலிருந்து பூமியில் உள்ள தன் வீட்டை நோக்கிக் குதித்தார். கற்கள் மற்றும் இரும்பின் மீது விழுந்து, அவருடைய ஓடு சுக்கு நூறாக நொறுங்கிச் சிதறியது.

     “பறவைகளின் பெருவிருந்து உணவு முழுவதையும் ஏமாற்றித் தின்றதற்காக, அப் பறவைகள் என்னைப் பழி வாங்கிவிட்டனவே…!” என்று புலம்பியது ஆமை.

    “பதிலுக்கு அவை உன்னைக் கொத்தித் தின்னாமல் உயிரோடு விட்டதே பெரிய காரியம்” என்று திட்டிய திருமதி ஆமை, அந்த ஓட்டுச் சில்லுகள் அனைத்தையும் பொறுக்கி, பசை போட்டு ஒட்டி, கணவனின் முதுகில் பொருத்தியது.

     ஆமையின் ஓடு ஏன் பாளம் பாளமாக இருக்கிறது என்பதற்கான ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகள் பல உள்ளன. அதில் ஒன்று இது.

(ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதை)

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். இந்த ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *