இன்றைய கவிஞர்களில் முக்கியமான ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தின் கண்டாச்சிபுரம் குறுநில மன்னன் கண்டராதித்தன் பெயரை புனைப் பெயராகக் கொண்டவர்.
கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு இது. நம்பத்தான் முடியவில்லை. மிகச் சிறப்பான மொழி மற்றும் நடை.
இதுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்: சீதமண்டலம், திருச்சாழல்,பாடிகூடாரம். திருச்சாழல் மிகுந்த கவனம் பெற்ற கவிதைத் தொகுப்பு.
மரபின் சாயலும், சந்த நயமும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் விரவி காணப்படுகிறது.
இரண்டு வாரங்களாக இந்த புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தேன். பல கவிதைகளை இரண்டு முறை, மூன்று முறை வாசித்தேன்.
பெரும்பாலான கவிதைகள் நீண்ட கவிதைகள்.
மிகச் சிறப்பான ஓவியம் மற்றும் புத்தக வடிவமைப்பு.
பின்னட்டையில் அசதா:
கட்டற்றதும், வசீகரமுடைதுமான ஒரு கவிமொழியும், மரபின் சாயலுடன் உள்ளார்ந்த லயமும் கொண்டவனவாய் இருக்கும் கண்டராதித்தனது கவிதைகள்.
காதல் கவிதைகள் மற்றோர் தளத்தில். கலாப்ரியாவுக்கு சசிபோல, கண்டராதித்தனுக்கு நித்யா.
முதல் பக்கத்தில், உன் வசீகரத்தைப் போலொரு ஒரு உன்னதம் என் கண்களுக்குக்கில்லை எனத் தொடங்கும் காதல் மழை, தொகுப்பெங்கும் தொடர்கிறது.
எனக்குப் பிடித்த சில கவிதைகள்: நித்யா நிறைந்த அறையில் கவிதையில் இருந்து சில வரிகள்:
‘நித்யா வந்து நிறைந்த
துயரம் வியாபிக்கும்
அறையொன்றில் மட்டுமே
தங்கிவிடுகின்றேன் நான்’
நவீன வாழ்க்கையின் அவசரத்தை விவரிக்கிறது புதன்கிழமை கவிதை:
‘புதன்கிழமைப்பகல்
வெய்யிலில் ஒதுங்கக்கூட நிழலின்றி
அலைந்து திரிவதைக்காட்டிலும் சாவதே மேல் என்றது
எல்லாக் காதலர்கள் போலவே கவிஞரும் காத்திருக்கிறார் ‘சில பொழுதுகள் சிலபடிமங்களுடன் என் இருத்தல்’ கவிதையில்:
முன்போட்ட கூந்தலைப் பின்பக்கம்
போட்டபடி வருவாய் என்று
காத்துக்கொண்டிருக்கின்றேன்
ஒவ்வொரு பெருமழைக் காலத்தின்
அனைத்து மாலைகளிலும்’
மற்றும் ஒரு மிகச் சிறந்த நித்யா கவிதையில் இருந்து சில வரிகள்:
‘கனவுகளில்
கும்மிருட்டில்
சக பெண்மைத் தீண்டலில்
எனத்தேடி சலியாது
கற்பனித்திருப்பேன் நான்
உருக்கொண்டு பிறந்துவிடேன்
ஒரேயொரு முறை எனக்காக
உன்னைச் சூடிய காலம் கவிதையில் எனக்குப் பிடித்த வரிகள்:
என்னை எதிர்கொள்ளும் முகங்களில்
எவளுடைய முகத்தைத் தாங்கி
வசித்துக் கொண்டிருக்கிறாய் நீ’
பிரிவின் துயரம் சொல்லும் ஈமத்தாழி கவிதையில் இருந்து சில வரிகள்:
‘பிரிவின் துயரம் இத்தனை
கொடூரமாயிருக்கும் என்றறிந்திருந்தால்
ஈமத்தாலியிட்டுப் புதைத்திருப்பேன்
உன் பிம்பத்தின் காட்சிகளை’
தொகுப்பிலேயே மிகச் சிறந்த நீள்கவிதை உருவும்-திருவும். மற்றும் ஒரு மிகச் சிறந்த கவிதை வெளிச்சங்கள். கடவுளின் கையாலாகாத்தனத்தை விமர்சிக்கிறது:
‘குச்சிமிட்டாய் சுவைக்காக
அழுதுகொண்டிருக்கிறது குழந்தை
கழுநீர்ப் பானைக்குள் தலைவிட்டுக்
குடிக்கிறது தெருநாய்
மணியோசைக்கு முன்னும் பின்னும்
இருந்துகொண்டிருக்கிறது மரணம்
சாரையும் கருவிழையானும்
இழைய எழுகிறது மகுடியோசை
கல்லறைக்குள்ளிருந்தபடியே வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறார்
திரிபுவனச் சக்கரவர்த்திகள்’
மற்றும் ஒரு சிறப்பான கவிதை அதுவொரு காலம். பால்யகால நினைவுகள் கவிஞனுக்கு எப்போதும் ஸ்பெஷல்:
‘அதுவொரு காலம்
சிறு பிராயமென்பதாக நினைவு
பூக்கள் பற்றிய கவிதை ரசனை:
ஒரேயொரு பூக்கூந்தல் இந்தவீதி
முழுவதையும் அழகாக்கிவிடுகிறது
மற்றும் ஒரு அழகான குறுங்கவிதை:
என்னை என்னிடமிருந்து
எடுத்துக் கொண்டதைப்போலவே
என்னை உன்னிடமிருந்தும்
எடுத்துக்கொள்ள
அனுமதித்திருக்கலாம் நீ’
இன்றைய நவீன வாழ்க்கையை தாங்க முடியாத வீடுகள் இந்த வரிகள் வழியாக:
‘ஆட்கள் நிறைந்த ஊரை விட்டு
வெளியேறிக்கொண்டிருக்கின்றன
வீடுகள் வீதிகள் ஊர்கள்’
மற்றும் ஒரு சிறப்பான கவிதை போதாமை. புலி பதுங்குவது பயத்தால் அல்ல:
‘உன் கிரீடத்தை மீறியும்
தெரிவது கொம்புதான்
என் யாசிப்பின் கோரம்
போதாமைகளால் ஆனதல்ல
விமர்சனத்திற் கப்பாற்பட்டதாக
இருக்க வேண்டுமென்கிறாய்
உன் சொற்கள் யாவும்
வருந்துகிறேன் நண்ப,
முளைவிட்டுக் கொண்டிருக்கும்
கொம்பை நான்
முடிகளால் மூடி
வைத்திருக்கிறேன்’
பல கவிதைகள் எனக்குப் புரியவில்லை. மீள் வாசிப்பில் புரிந்து கொள்ள இயலும் என்று நம்புகிறேன். மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவம்.
-தமிழ்வெளி பதிப்பகம்
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.