சாலையோர திருவிழா விளக்குகள் பின்நோக்கி விரைந்தன . தொலைவில் அதிர்ந்த பகவதியம்மனின் திருவிழாப் பாடல்கள் அவனை நெருங்கிக் கொண்டிருந்தன. சலிப்பான மற்றும் மமதையான முக வெளிப்பாடுகளோடு இரு சக்கரத்தில் நகர்ந்து கொண்டிருந்தான் தேவராஜ்.

தந்தையின்  மரணத்திற்கு பிறகு  வெளியூர் சென்று குடியேறியிருந்தார்கள். அப்போதிலிருந்தே ஊருடன் அவன் தொடர்புகள் குறைந்திருந்தன. ஊரிலும் யாரின் மீதும் பெரிய மதிப்பும் ஒன்றுமில்லை அவனிடம். தன் பால்யகால நண்பர்களின் அழைப்பில் திருவிழா சமயங்களில் மட்டும் ஊருக்குள் வந்து செல்வான்.

அவன் பார்க்க தவிர்க்க நினைக்கும் முகங்களெல்லாம் விழிகளில் நிரம்பின. அவன் கேட்டு அகத்தின் ஆழத்தில் புதையுண்டிருந்த கொடுஞ்சொற்கலெல்லாம் பீரிட்டெழுந்தன.

கோவில் நெருங்கியது. சக்கரத்தின் வேகத்தை கூட்டி கடக்க முயன்ற போது யாரோ தூரத்தில் அழைத்ததைப் போன்றிருந்ததை கண்டும் காணாமலும் முறுக்கி விரைந்தான். வாகனத்தின் புகை மிதந்து பரவி மறைந்தது. வீட்டின்முன் காய்ந்த  தென்னங்கீற்றில் பந்தல்  எழுப்பப்பட்டிருந்தது. நாற்காலிகளில் மனிதர்கள் இல்லாமல் ஆளுக்கொரு திசையில் சிதறி முகம்சுழித்து நின்றிருந்தன . வழியைத் தடுத்த நாற்காலி ஒன்றினை எடுத்து அதன் இணையுடன் நிறுத்திவிட்டு உள்சென்றான்

புதிய சில மனிதர்களும் அவன் முன்பு நன்கறிந்த சில மனிதர்களும் வரிசை  குழையாமல் அமர்ந்து வாழையிலையில் நீர் தெளித்து கொண்டிருந்தார்கள். நீர் துளிகள்  இலையில் வழுக்கியோடி விழுந்து உடைந்து  தரையில் மூழ்கின. நல்ல திருவிழாக் கிடாக்கறியின் குழம்பு வாடை காற்றில் மிதந்து  அறையெங்கும் பரவி கிடந்தது. உள்ளே சமயலறையில் மங்களம் கரண்டியும் கையுமாக நின்றிருந்தாள்.அவனைக் கண்டதும் பூரிப்பொன்று  பெருகிக்கொண்டு வந்தது அவளுக்கு.  மலர்ந்த முகம் கொண்டு ‘வாப்பேன் வா வா என’ கொஞ்சல்  மொழி கொண்டு அழைத்தாள். அடக்கமான புன்னகையோடு அவளிடம் சென்றான்.

‘அம்மா எங்க’ என்றாள்.

‘ராமேஸ்வரம் போய்ட்டாங்க’

‘அவளுக்கு இதே வேல ஊருல நோம்பி வந்துட்டா  எதனா கோயில்ல  போயி  ஒக்காந்துருவா சரி நீ வா’ என்று ஆவலாக அவனை உடன் நிறுத்திக்கொண்டாள். கொதித்துக்கொண்டிருந்த கிடாக்கறியின் குழம்பு சரியான பதத்தில் திரண்டு வந்தது.வெளியே சசியின் குரல் காற்றில்  அணைந்து அணைந்து வந்தது. மிகையான எதிர்பார்ப்புடன் வாசலை பார்த்தான் தேவராஜ். வாசலில் சசி வெடிக்கும் புன்னகையோடு ‘டேய் தேவா’ என கைகளை விரித்தபடி  அவனிடம் வந்தான். ஒரு பெருங்காலத்தின் அன்பு அவன் முகத்தில் ததும்பியது அதனோடு கருணையும் ஒட்டிக்கொண்டிருந்தது.

‘டேய் மாப்ள பசங்கலாம் அங்க இருக்கானுக  நீ வோம் பாட்டுக்கு இங்க வந்துட்ட!  குமாரன் சலிச்சிகிட்டாண்டா கூப்டானாமா நீ திரும்பியே பாக்கலேன்னா’ என கூறி முடிக்காமல் மெல்லிய குரலில் ‘மாப்ள அப்படியே அந்த டம்ளர எடு’ என்றான். மீன் திருடும் பூனை போல டம்ளரை  எடுத்தான் தேவராஜ்.

‘செரி மாப்ள தலைக்கி மேல வேல கெடக்கு கோயிலுதெட்டி போறன் நீ இங்க இரு’ என சாரைப்பாம்பு போல் அங்கிருந்து மறைந்தான். சிலகண அமைதி மங்களம் மெல்ல திரும்பி தணிந்த குரலில் ‘இவன நெனச்சாதான்’ என ஆரம்பிக்க தேவராஜ் வெளியே பார்த்தான்  அனைவரும் வாழையிலையுடன் தியான நிலையில் இருந்தனர். ‘தேவா இவன பாரு நோம்பி வந்தாலே  கருக்கு கருக்குனு  இருக்க வேண்டிருக்கு. அதும்  அந்த  மொடக்கு ரோட்டுல இவன் போறாத பாக்கணுமே! இவன நெனச்சே  எனக்கு இல்லாத நோவுலாம் வந்துரும்.  அன்னைக்கு அப்புடிதான் இவன் அங்க போறத பாத்த மீனு பதறி போய் என்ட சொல்ற யேப்பா  மெதுவா  போலாம்லதான்னு சொன்னே. ரெண்டு நாலு பக்கம் வீட்டுக்கே வரல… ப்ச்… இவன!’ என மனம் சோர்ந்தாள். தோள்மீது  கைவைத்துக் கொண்டான் தேவராஜ். பெருமூச்சொன்று எழுந்தடங்கியது.

சுதாகர் பிளந்த மண்டையோடு தலையில் குருதியொழுக  பிள்ளையார் கோவிலின் படிக்கட்டுகளில் இரவு  முழுவதும் அமர்ந்திருந்து  அதற்கு பின்பும் அவன் சில வருடங்கள் உயிருடன் இருந்தது தேவராஜின் மங்கிய நினைவில் வந்தணைந்து.

அதன் பின் உருவாகிய நிறைய கதைகளில் அவனுக்கு  அவநம்பிக்கைகள் இருந்தாலும் மங்களத்தின் இறந்த தாய் கூறிய இரத்தசோறு அவனிடம் தூசு படியாமல் அப்படியேயிருந்தது.அவ்வூரின்  தெய்வம் பகவதியம்மன் எல்லையில் நிற்பது கருப்பண்ணசாமி.அனைத்து ஜாதிகளிலிருந்தும் ஒரு குடும்பமாவது குறைந்தது அங்கிருக்கும். ஊரின் அமைதியில் எந்த தீங்குமில்லை. ஒருவருக்கொருவர் பெண் கொடுப்பதும் எடுப்பதும் பழகியிருந்தார்கள். நிகழும் சிறுசிறு ஊர் பிரச்சனைகளும் வரப்பு தகராறுகளும் குடும்ப பிரச்சனைகளுமேக்கூட கோவிலின்  சபைக்கு வந்தேறும். இதற்க்கெல்லாம் அவர்கள் அந்த பகவதியம்மனையும் கருப்பண்ண சாமியையும் காரணம் சொல்லி வருடம் ஒரு முறை பகவதியம்மனுக்கு பாலபிஷேகமும் கருப்பண்ணசாமிக்கு முப்பூசையும் காணிக்கையிட்டு வந்தார்கள்.

பன்றி கிடா சேவல் மூன்றும் குத்தப்பட்டு வெட்டப்பட்டு அறுக்கப்பட்டு பூசை தொடங்கும். அப்போது இறக்கிய சூடான  ஆவி எழும்பும் சாதத்தில் மூன்றின் ரத்தமும்  உறைந்திடாமல் பிசையப்பட்டு பகவதியம்மன் கோவிலில்  தொடங்கி ஊர் சுற்றிலும் வீசப்படும். யாரும் ஊர்மக்கள்  இதில் கலந்துகொள்ள மாட்டார்கள். கூடாது. அது வழக்கம். குதிரையில் ஏறி சென்று வீசப்படும் உருண்டைச்சோறுகள் மறுநாள் காலையில் பருக்கை கூட இல்லாமலாகும். கூடியும்   குறையாமலும் ஊர் முழுவதும் சுற்றி வருவதற்கான சாதம் சரியான விகிதத்தில் இருக்கும்.

அப்படியொருமுறை ஊரைச்சுற்றி வருகையில் அப்பூசாரிக்கு வரட்டுப்பசி எடுத்ததாகவும் உயிர் போகும் போன்ற பசியில் ஊரின் எல்லையிலுள்ள சாலையில் அமர்ந்து மீதியிருந்த சாதத்தை  வயிறு முழுக்க  நிரப்பி ஏப்பம் விட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது  காவலுக்கு சென்றிந்த கருப்பண்ணன் பசி தாளாமல் வானளவு உயரம் கொண்ட வெள்ளைக்குதிரையில் சோறு கேட்டு வந்ததாகவும், ஒரு  புழுக்கை சாதத்தையும் விடாமல் சாப்பிட்டு கொண்டிருந்த பூசாரியிடம் சாதம் கேட்டு கதறி அழுததாகவும், சாதம் தர மறுத்த பூசாரியின் முன் கருப்பண்ணன்  மண்டியிட்டு அழுத ஓலம் கேட்டு பூசாரியின் செவிகள்  செவிடாகி அவன் ஊரை விட்டே ஓடி விட்டதாகவும், அன்றிருந்து கருப்பண்ணன் அங்கேயே பசியோடு பூசாரியின் வருகைக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பூசாரியின் பெரும் பசிக்கு காரணம் பகவதியம்மன் தான் என்றும் கூட ஊர் மக்களில் சிலர்  முனுமுனுத்து வந்தார்கள். அன்றிருந்து கருப்பண்ணன் இரத்தம் குடிப்பவனாகவும் பகவதியம்மன் நோய் தீர்ப்பவளுமாக உருவகித்தார்கள்.

‘எல்லாம் உன் அப்பன் செத்த நேரம். ஊரே அடிச்சிக்கிட்டு நாளா மூனா செதறி போச்சி….. எழவு அங்க ஒரு கெடாய வெட்டி வீசுங்கடானா கேக்கறானுகளா’ என சலித்தாள் மங்களம்.

எத்தனையெத்தனை விபத்துகள்! குருதியால் நனைந்து ஊரிய சாலை குருதி போதாத குருதி பசி எத்தனை குடித்தாலும் அடங்காத பசி! சைக்கிள் பழகிய குழந்தை சாலையில் பாம்பின் சிதறிய துண்டு அப்பியிருந்ததை போல் தன் விரலொன்று கிடப்பதை கண்டு அழுத ஓலம் இன்னமும் அவ்வூரின் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. குழந்தை முதியோர் பெண்கள் என அங்கு குருதி சிந்தாதவர்களே அல்ல.  மங்களத்தின் தாய் கூட இறப்பதற்கு  முன் அந்த சாலையில் மண்வாரிவிட்டுதானே மாய்ந்து  போனாள். வெளியாள் ஒருவன் இரவில் கட்டுப்பாட்டையிழந்து  சீறிப் பாய்ந்து  காய்ந்து உடைந்து கூராக நின்றிருந்த வேப்பம் மரத்தில் வயிற்றில் சொறுகி தொங்கியும் உயிரோடு இருந்தது இன்னமும் சுவாரஸ்யம் குறையாமல் பேசப்படுவது

அவ்வனைத்தையும்  எண்ணியபடி வேர்த்துக்கொண்டிருந்தான் தேவராஜ். சட்டென மங்களம் ‘செரி வா  நீ சாப்புடு நா வேற எத எதையோ பேசிட்டு….. சரி உக்காரு’ என இலை விரித்து நீர் விட்டாள். ஆழ்ந்த சிந்தனைகளில் எடை கூடிய கல்போல் அமர்ந்திருந்த தேவராஜ் கைப்பேசியின் அதிர்வில் எடையிழந்தான்.

அழைப்பில் சந்தானம் இருந்தான். அவன் குரலுக்குப் பின்னால் ஆம்புலன்சின் சங்கு முழங்கியது.

‘டேய் தேவா சசி அடிபட்டான்டா! சேலம் பெரியாஸ்பத்திரிக்கு போக சொல்லீட்டாங்க.. அம்மாட்ட சொல்லாத சீக்கிரம் கெளம்பி வாடா பயமா இருக்கு’ என சொற்களை வரிசையாக கொட்டினான். சில நொடி அமைதியின் பின் பிரக்ஞை வந்த தேவராஜ்..

‘டேய் எங்க’ என தீவிரமாக அலறினான்.

‘சேலம் டா’ என விம்மிய குரலில் கரைந்தான் சந்தானம்.

‘டேய் எழவெடுத்த நாயே எங்கடா அடிப்பட்டான்’

மங்களம் பதற்றம் கலந்த அறியாமையின் எல்லையிலிருந்தாள்.

முகம் ஒழுகி நின்றான் தேவராஜ்.

இராமேஸ்வரத்திலிருந்து ஊருக்கு திரும்பும் பேருந்திற்காக காத்திருந்தாள் பார்வதி.

சக்தி

சொந்த ஊர் கொடுமுடி. டிப்ளோமா படித்துவிட்டு பெருந்துறை சிப்காட் பணிபுரிகிறார்.தொடர்ந்து தான் வளர்ந்த பார்த்த வட்டார மனிதர்களின் கதைகளை பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *