சேலத்திலிருந்து வெள்ளாளகுண்டம் செல்லும் 44ம் நம்பர் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். தாத்தா நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். ஆனால் அசைவு ஏதும் இல்லை. எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அவரின் தளர்ந்த கையைப் பிடித்துப் பார்த்தேன். நல்ல வேளை உயிர் இருந்தது. எனக்கு உயிர் வந்தது. நாலு நாளைக்கு முன்பு, திருப்பதிக்கு நானும் தாத்தாவும் கிளம்பும்போது இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராவது நினைத்தோமா என்ன?

இரண்டு வாரங்களுக்கு முன்பு தாத்தாவுக்கு ரயில்வே பாஸ் வந்த போது, அனைவருக்கும் சந்தோஷம். தாத்தாவுடன் ரத்த சம்பந்தமுள்ள  ஒருவர் உடன் பயணிக்கலாம். அதுவும் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யலாம் என்றதும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அண்ணன் மற்றும் தம்பியின் அடத்தையும் தாண்டி, தாத்தாவுடன் பயணம் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனக்கு சற்று பெருமிதமாக இருந்தது. அப்போது நான் மேட்டுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.

பயணம் சேலம் ஜங்ஷனில் இருந்து துவங்கியது. அம்மா புளி சாதம், திண்பண்டங்கள் கொடுத்து அனுப்பி இருந்தார். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. தாத்தாவும் மகிழ்ச்சியாகவே இருந்தார். பயணத்தில் தாத்தா பெரும்பாலும் தூக்கியபடி வந்தார். நான் ஜன்னல் வழியாக விழிவிரிய வேடிக்கை பார்த்தபடியே பயணம் செய்தேன்.முதல் முறையாக ரயில் பயணம் சற்று படபடப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.சமோசா, டீ, காபி, பிரியாணி வந்தபடியே இருந்தது, மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

திருப்பதி வந்து இறங்கியதும், போர்ட்டர்களும், ஆட்டோ ஓட்டுனர்களும் சூழ்ந்து கொண்டது பயமாக இருந்தது. அவர்கள் பேசும் பாஷையும் புரியவில்லை. தாத்தாவுக்கு தெலுங்கு பேச தெரியும் என்று அப்போது தான், எனக்குத் தெரியும்.

திருப்பதி அடிவாரத்தில் உள்ள பேருந்து நிலையம் சென்றடைந்தோம். பேருந்து ஏற மிக நீண்ட வரிசை இருந்தது. ஒரு வழியாக டிக்கெட் எடுத்து, இடம் பிடித்து அமர்ந்தோம்.

திருமலையைப் பேருந்து நெருங்கியதுமே, பக்தர்களின் ‘ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா, கோவிந்தா, கோவிந்தா’ கோஷமும், பாடல்களும் ஒரு வேறு உலகத்திற்கு கூட்டிச் சென்றன. காலையிலேயே வந்து விட்டதால், பக்தர்கள் தங்குமிடத்திற்குச் சென்று, காலைக் கடன்களை முடித்து விட்டு, தேநீர் அருந்தினோம்.

தாத்தா கோவில் குளத்தில் குளித்து விட்டு, சாமி தரிசனம் செய்யலாம் என்று, குளத்திற்கு அழைத்துச் சென்றார்.

தாத்தா ரயில் பாஸுடன், பணமும் வைத்திருந்த கைப்பையையும், வேஷ்டியையும் கழற்றி கரையில் வைத்து விட்டு, துண்டுடன் குளத்தில் இறங்கினார். நானும் ஜட்டியுடன் குளிர்ந்த நீரில் இறங்கினேன். பற்கள் குளிரில் தாளமிட்டன. உடல் நடுங்கியது. குளத்தில் பாசி படர்ந்து, காலை வைத்ததும் வழுக்கியது. ஒரு கணம், குளம் தனது வாய் திறந்து என்னை விழுங்கப் பார்த்தது. நீச்சல் தெரியாத நான், உயிர் பயத்தில், தாத்தாவின் கால்களை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.

தாத்தா முதலில் படிகள் ஏறி, துண்டால் துடைத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து நானும் மேலே வந்து துண்டால் தலை துவட்டிக் கொண்டிருந்த போதுதான், தாத்தாவின் கதறல் கேட்டது. ‘ஐயோ,பையக்காணமே?’. எனக்கு ஒரு கணம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தாத்தா இவ்வாறு வாய்விட்டு அழுது எப்போதும் பார்த்ததில்லை. எனக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்தது. தாத்தாவுடன் சேர்ந்து நானும் அழ ஆரம்பித்தேன். கூட்டம் கூட ஆரம்பித்தது. தமிழ் தெரிந்த பக்தர்கள், ஆளாளுக்கு ஒரு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

 இறுதியில், கோவிலைச் சார்ந்தவர்கள் திருமலைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஓரளவுக்கு தமிழ் தெரிந்த நடுத்தர வயதுடைய தெலுங்கு காவலர் ஒருவர், கம்பிளெயிண்ட் எழுதி வாங்கிக் கொண்டு, டீ வாங்கிக் கொடுத்து விட்டு, ‘சாமி பாத்துட்டு வாங்க, கிடைச்சா கொடுக்கிறேன்’ என்றார்.

பொது தரிசனத்தில், கூண்டில் இரண்டு மணி நேரம் கழித்த பின்னர், கோவிலில் வரிசை நுழைந்தது. அப்போது தான், ஏதோ கெட்ட வாடை வர ஆரம்பித்தது. தாங்க முடியாத நாற்றம், அதுவும் வெகு அருகில்.

வரிசையில் இருந்த ஒருவர் கத்தினார்: பெரியவர் அசிங்கம் பண்ணிட்டாரு. அப்போது தான் பார்த்தேன், தாத்தாவின் கால்களை. நரகல் தாத்தாவின் கால்களிலிருந்து வழிந்து தாரையாகத் தரையில் மஞ்சளாக ஓடிக்கொண்டிருந்தது.

கோவில் ஊழியர்கள் குழுமி விட்டனர். ஆளாளுக்கு தாத்தாவைத் தெலுங்கில் திட்ட ஆரம்பித்தனர்.

ஒருவர் தமிழில், ‘கிழத்துக்குத் தான் அறிவில்ல, பாத்தா படிச்ச பையன் மாதிரி இருக்கிற, உனக்கெங்க போச்சு அறிவு?!’ எனத் திட்ட ஆரம்பிக்க, நான் ஓவென வாய்விட்டு அழ ஆரம்பித்தேன்.

எங்களை இழுத்துக்கொண்டு போய், கோவில் வெளியே தள்ளி, தண்ணீர் இருக்கும் இடத்தில் விட்டு விட்டுச் சென்றனர். அடி பம்ப்பில் தாத்தா சுத்தம் செய்து கொண்டார். அப்போதும் எனக்கு நடுக்கம் குறையவில்லை. கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. மீண்டும் காவல் நிலையத்திற்குச் சென்றோம். எங்களிடம் எழுதி வாங்கியவரைக் காணவில்லை. அங்கேயே அமர்ந்திருந்தோம். அரைமணி நேரம் கழித்து உள்ளே வந்தவர், ‘பையி கெடக்கல. ஊருக்குப் போங்க, ஏதுனா தகவல் கெடச்சா சொல்லி அனுப்பறன்’ என்றார்.

தாத்தா அழ ஆரம்பித்தார். அவரைப் பார்த்து நானும் அழ ஆரம்பித்தேன். தாத்தா சொன்னார்: ‘ஊருக்குப் போறதுக்கு காசு இல்லய்யா. எல்லாம் பையோட போயிடுச்சு’. ‘பெரியவரே, அழுவாத. கொளத்து முக்குல போயி உட்கார்ந்துக்குங்க. யாராவது காசு குடுப்பாங்க, போயிட்டு வாங்க’ என்றார். கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தோம்.

தாத்தாவின் கால்கள் நடுங்கின. அவர் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். காவலர் கூறியபடி, குளத்திற்கு அருகே சென்று அமர்ந்து கொண்டோம்.

வெகு நேரம் கழித்து, ஒரு கும்பல் வருவது தெரிந்தது. நடுவே ஒரு செல்வந்தர் பட்டு வேஷ்டி பட்டு துண்டைப் போர்த்தியபடி, வந்து கொண்டு இருந்தார். எனக்கு அந்த கோவிந்தனே அவர் உருவில் வந்து கொண்டு இருப்பதாகவே தோன்றியது. அவர் அருகில் வந்ததும், தாத்தா அவர் காலடியில் வீழ்ந்தார். ‘அய்யா, பையி களவு போயிடுச்சி அய்யா. ஊருக்குப் போறதுக்குக் காசில்லையா எனக் கதறினார்’. செல்வந்தர் பதறிப்போய், தாத்தாவைக் கதையைப் பிடித்துத் தூக்கினார்.

அருகிலிருந்தவரிடம் ஏதோ சொன்னார். அவர் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை தாத்தாவின் கைகளில் திணித்தார். நாங்கள் கைகூப்பி வணங்கியபடி நின்றிருக்க, கடவுள் போல, அவர் சென்று கொண்டிருந்தார். அவர் கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் எங்களைப் பேருந்தில் ஏற்றி அமர வைத்தார்.

தாங்க முடியாத அமைதியுடன் ஒரு மணி நேரம் கழித்து, அடிவாரத்தை அடைந்து, சேலம் பேருந்து ஏறினோம். விடியலில் சேலம் அடைந்து, டீ குடித்து விட்டு, 44ம் நம்பர் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.

செல்லியம்மன் நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நடக்க ஆரம்பித்தோம். தாத்தாவிடம் பழய வேகம் இல்லை. எனக்கு இன்னும் நடுக்கம் குறையவில்லை.

வீட்டிற்கு வந்ததும், திண்ணையில் சாய்ந்து அமர்ந்த தாத்தா அழ ஆரம்பித்தார். அழுது கொண்டே நடந்ததை அப்பாவிடம் சொல்லி முடித்ததும், அப்பா சொன்னார்: ‘ஆடிக்கிட்டுக் கெளம்பும் போதே எனக்குத் தெரியும் இப்படி ஏதாவது பண்ணுவிங்கன்னு’.

நான் மேலும் சத்தமாக குரலெழுப்பி அழ ஆரம்பித்தேன்.

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *