எம்.கோபாலகிருஷ்ணன் திருப்பூரில் பிறந்து, கோவையில் வசிப்பவர். வணிகவியல் மற்றும் ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
ஆசிரியரின் முதல் நாவல். நம்ப முடியாத அளவுக்கு நேர்த்தியான நாவல்.
சமூக இடம்பெயறும் நாவல்களில் முக்கியமான ஒன்று. அறுபதுகளில் நடந்த ஒரு நாவல். கைத்தறி நெசவு பற்றிய கதை. சாதிய ஏற்றத்தாழ்வு ஊடுபாவாக நெய்யப் பட்ட கதை.
ஒரு நடுத்தர சாதி மற்றொரு நடுத்தர சாதியை அடிமையாக நடத்திய கதை. பவர்லூம் வந்ததால், எல்லோரும் மறந்து போன, கைத்தறி நெசவு பற்றிய மிக நுணுக்கமான தகவல்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன. ராட்டை, பாவு, தறிக்குழி, கஞ்சி போடுதல் எனப் பல தகவல்கள்.
எனது பால்யத்தை நினைவுபடுத்தும் தகவல்கள். எனது தந்தையின் அக்கா, பெரிய அத்தை, அப்போது சேலம் அம்மா பேட்டையில் இருந்த போது, கோடை விடுமுறைக்கு நாங்கள் செல்வது வழக்கம். அம்மா பேட்டையில் கைத்தறி மிகவும் பிரபலமான தருணம். பாவு போடுதல், நூலில் கஞ்சி போடுதல், ராட்டையில் நூல் போடுதல் அனைத்தும் இன்று பார்த்தது போலிருக்கிறது.
இரண்டாவது அத்தியாயத்தில் அம்மனே நெய்த சேலை பற்றிய விவரணைகள், நமக்கு ஒரு அமானுஷ்ய உணர்வைத் தருகிறது. படிக்கும் நாமும் அந்த கிராமத்தில் கதை முழுவதும் கூடவே பயணிக்கிறோம்.
அரிசிச் சோறு வாசனை பற்றிய வர்ணனையும், அதை குழந்தைகளுக்கு வாங்க பலரும் செல்வதும் மனசை பிசையும் பகுதி. பாலுக்குப் பதிலாக கேழ்வரகுக் கூழ் என்பது எவ்வளவு கொடுமை.
சின்னச் சின்ன விஷயங்கள் பெரிதாக, கடைசியில் கொலையில் முடிய, நெசவை நம்பி வாழும் ஒரு சமூகமே திருப்பூர் நோக்கி பிழைப்புக்காக இடம் பெயரும் அவலத்தில் முடிகிறது நாவல்.
உஜ்ஜயினியிலிருந்து தொடங்கி, விஜயநகரத்திலிருந்து கோவை அவினாசியில் தங்கிய ஒரு சமூகம், கைத்தறியைக் கைவிட்டு, கடைசியாக திருப்பூரில் நூல் மில்லில் வேலைக்குச் சேர்கிறது, ஒரு காவிய சோகம்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
ஆசிரியர்: எம்.கோபாலகிருஷ்ணன்
பதிப்பகம்: தமிழினி
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.