ஒரு கண்ணியவானின் சாம்பல் பயணித்த கதை.                                            

“சொர்க்கஞ் சேர்..கைலாசஞ் சேர்..சாமி பாதஞ் சேர்..”  நாவிதனின் வலதுகை , நெடுங்கிடையாக மர பெஞ்சில் படுக்கவைக்கப்பட்டிருந்த இவனுடைய தந்தையாகிய மரித்த உடலின் தலையில், இவனின் இடதுகைப்   புறங்கைவிரல்களை எண்ணெய் சீயக்காய் கிண்ணங்களில் முக்கியெடுத்து, மூன்று முறை தேய்த்துவிட்டது. முகத்தை திருப்பாமல்,  பின்புறமாகவே யாரோ இவனை தோளைப்பிடித்து நடத்திச் சென்று திண்ணையில் அமரவைத்தார்கள்.

குளிப்பாட்டி முடித்து, சடங்கு சம்பிரதாயங்கள் முடிவுற்றபின், பூப்பல்லக்கில் தந்தையின் உடல் வைக்கப்பட்டது. தளர்ந்து மயக்கநிலையிலிருந்த அம்மாவைச் சுற்றிலும் பெண்கள் சூழ்ந்துகொண்டு ஒப்பாரி வைத்தார்கள்.

பூப்பல்லக்கு வண்டி நகரத்தொடங்கியது. அம்மாவும் மற்ற பெண்களும் பின்னாலேயே நடந்துவந்தார்கள். முச்சந்தி வந்தவுடன் அம்மாவும் மற்ற பெண்களும் நின்றுவிட்டார்கள். அவர்களின் அழுகை ஓலமாகப்பின்தொடர, சவ ஊர்வலம் இடுகாட்டை நெருங்கியது.

இடுகாட்டின் தகனமேடையில், விறகுகள் குவியலாக அடுக்கப்பட்டிருந்தன.  மூன்று பழைய பெரிய லாரிடயர்கள் நீளவாக்கில் வைக்கப்பட்டு, அதன்மேல் விறகுகள் அடுக்கப்பட்டன. பிறகு,  அந்த விறகு அடுக்கின் இடைவெளிகளில் மேற்புறமிருந்து, நான்கைந்து கிலோ அளவான அஸ்கா சர்க்கரை கொட்டப்பட்டது. கூடவே, ஐந்துலிட்டர் கேனில் நிறைந்திருந்த பாமாயிலும், மண்ணெண்னெயும் ஊற்றப்பட்டன.

தந்தையின் சடலம், விறகு அடுக்கின்மேல் வைக்கப்பட்டு, இவனும், மற்ற உறவுகளும் வாய்க்கரிசி போட்ட சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தன.  தந்தையின் சடலம்,  பெரிய விறகுக் கட்டைகளாலும்,  சாணவறட்டிகளாலும் நன்றாக மூடப்பட்டது. அதன்மேல் ஈரக் களிமண் பூசப்பட்டது. தலைமாட்டில் ஒன்று, மார்புப் பகுதியில் ஒன்று, கால்மாட்டில் ஒன்று என அந்தப் பூச்சின்மேல் கையளவு ஓட்டைகள் போடப்பட்டன. அந்த ஓட்டைகளில் இன்னும் சில லிட்டர் பாமாயிலும் மண்ணெண்னெயும் ஊற்றப்பட்டன. இறுதியாக,  பெரிய கட்டி கற்பூரங்கள் மூன்று ஓட்டைகளின் அருகிலும் வைக்கப்பட்டன. இவன் கையில் பற்றவைக்கப்பட்ட கொள்ளிக்கட்டை கொடுக்கப்பட்டது. மூன்று கற்பூரக்கட்டிகளையும் இவன் கொள்ளிக்கட்டையால் பற்றவைத்தான். பிறகு அந்தக் கொள்ளியை, தலைமாட்டிலிருந்த ஓட்டைக்குள் திணித்துவிட்டான்.  எல்லோரும் இவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவனின் கீழ் உதடு உட்புறமாக மடிந்து, பெரியதாக ஒரு விம்மல் வெளிப்பட்டது. கண்களிலிருந்து கண்ணீர் எதுவும் வரவில்லை.  தீ,  மளமளவென எரியத்தொடங்கியது. இவன் அங்கிருந்த ஒரு கல்லின்மீது அமர்ந்துகொண்டு, தீ கொழுந்துவிட்டு எரிவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

எரிந்துகொண்டிருக்கும் தீ, இவனுடைய பழைய நினைவுகளை மனத்திரையில் ஓடவிட்டது.

இவனுடைய பதின்வயதில் ஒருநாள்…

பக்கத்துவீட்டுக்காரரான டெய்லரைக் கூப்பிட்டு இவனுடைய அப்பா, ” பாய்..என் பையன், என்வீட்டுக் குட்டை தென்னை மரத்தில் ஏறிவிட்டான்..தெரு முக்கிலிருந்து பார்த்தேன், உயரத்தில் உட்கார்ந்திருக்கிறான்.. நான் வருவதைப் பார்த்துவிட்டால், பயத்தில் அங்கிருந்தே குதித்துவிடுவான்.. நீங்க அங்கே பக்கத்தில் போய், அவனிடம் நைசாகப் பேசி, கீழே இறங்கச் சொல்லுங்க”   என்று சொல்லி, இவனை இறங்கவைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தவுடன் இவனின் சட்டைக்காலரைப் பிடித்து, அடுப்படிக்கு இழுத்துச்சென்றார்.

விறகு அடுப்பில் உலைக்காக  எரிந்துகொண்டிருந்த கொள்ளிக்கட்டையை எடுத்தார். ” டேய்.. எரப்பாணி..இனிமே மரம் ஏறமாட்டேன்னு,  இந்த கொள்ளி மேலே எச்சில் துப்பி சத்தியம் பண்ணுடா..நாயே..” ன்னு இவன் மூஞ்சிக்கு நேராக அந்தக் கொள்ளிக்கட்டையை நீட்டிப்பிடித்தார்.

இவனும் வேறுவழியின்றி, தன் எச்சிலை எரியும் நெருப்பில் துப்பினான். ” மூணு முறை துப்புடா..இனிமேல் மரம் ஏறமாட்டேன்னு சொல்லிக்கிட்டே துப்புடா..” என இவனுடைய  பின்மண்டையில் தட்டினார் இவன் தந்தை. அதேபோலவே செய்தவனை, மறுபடியும் வீட்டினுள் அழைத்துப்போய், ஒரு செம்பு நிறைய தண்ணீரைக்கொடுத்து குடிக்கச் சொன்னார். 

இதையெல்லாம், இவனுடைய தாயும், சகோதரியும் கண்களில் மிரட்சியுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் பார்த்துகொண்டிருந்தார்கள். பேசினால், அந்தக் கோபம் இவர்களிடம் திரும்பிக் கொந்தளிக்கும்.

அடுத்துவந்த வெள்ளிக்கிழமையில், ” ஏப்பா..டேய்..உன் தம்பியையும் கூட்டிட்டு முத்துவிஜயன் கடைக்குப்போ.., ரெண்டுபேருக்கும் பேண்ட் சட்டை தைக்கச்சொல்லி சொல்லியிருக்கேன்.. அளவு குடுத்துட்டு வாங்கடா..டைட்டா தலைகாணி உறை மாதிரி தைக்கவேண்டாம்னு சொல்லிட்டு வா..”  என்றார் இவன் அப்பா.

ஒரு அம்மாவாசை நாளில், பட்டறையை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தான். வெளியே போய்விட்டு திரும்பிய வேகத்தில், இவனிடம், ” ஏண்டா..டேய்..நீ ஒம்பதாவது படிச்சதே போதும்..எனக்கும் வேலைக்கு ஆள் வேணும்..நாளைலேருந்து நீ பள்ளிக்கூடம் போகவேணாம்..தர்மகர்த்தா பட்டறைக்குப்போய் வேலை கத்துக்கோ..ஒழுக்கமா வேலை கத்துக்கிட்டு,  சம்பாதிக்கிற வழியைப்பாரு..” என்றார். இவன் யாரிடம் இதை முறையிடுவதெனத் தெரியாமல் விக்கித்துப்போய் நின்றான்.

ஆனாலும், அவரின் ஆணைப்படியே சிலவாரங்கள்  பள்ளிக்குப்போகாமல், தச்சு வேலைக்கு உதவியாளனாகப் போனான். ஒருஞாயிற்றுக்கிழமை,  வீட்டில் பூரி சாப்பிட்டுவிட்டு, பாட்டியின் சுருக்குப்பையிலிருந்து, முப்பது ரூபாய் எடுத்துக்கொண்டு பஸ் ஏறி ஓடிப்போனான்.

அதற்குப்பிறகு நடந்தவையெல்லாம் வேறொரு தருணத்தில் இவன் சொல்லக்கூடும்.                                                                 

பின்சுழன்ற நினைவுகளிலிருந்து இவன் மீண்டு, மௌனமும், பேச்சுகளும் கலந்த , மயான சூழலுக்குத் திரும்பி வந்தான். எரியும் சிதைக்குள்,  பலம் மிகுந்த பலவீனமும் இணைந்த இவனின் தகப்பனாகிய ஆகிருதி ,  கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து அடங்கும் அந்த நிகழ்வு இவனின் மனதை நிலைகுலைய வைத்தது.

அங்கிருந்து நகரும்போது, மழை தூறலாக விழ ஆரம்பித்தது. மயானத்தின் எரிமேடை தகரக்கூரையின்மேல் பெருத்த மழைத்துளிகள் விழும் சத்தம் இவனைப் பின்தொடர்ந்தது.

அடுத்தநாள் காலை,  பங்காளிகள் மாமன்மச்சான் உறவுமுறைகள் என சிலபேர், வீட்டின்முன் வந்து சேர்ந்தார்கள். இவனும் அவர்களும் சேர்ந்து, மயானத்திற்கு புறப்பட்டுச் சென்றார்கள்.  மயானத்தின் எரிமேடை தகரக்கூரைக்கு அடியில் இவனது தகப்பனாரின் சாம்பல் குவியலாக கிடந்தது. வந்தவர்களில் ஒருவர், பக்கத்தில் முளைத்துக்கிடந்த ஆவாரஞ்செடியிலிருந்து ஒரு தடிமனான குச்சியை ஒடித்துவந்தார்.  அந்தக் குச்சியால் குவிந்திருந்த சாம்பலைக்கிளறினார்.

சாம்பலின் பரவலில் சின்னதும் கொஞ்சம் பெரியதுமான, முற்றிலும் எரிந்து சாம்பலாகாத எலும்புத்துண்டுகள் கிடந்தன.  கூடவே, அவருடைய நெற்றியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயமும் கருத்துப்போய் கிடந்தது.

அவருடைய கண்கள் மூடியிருந்த அமைதியான முகம் இவனுடைய நினைவில் வந்து,  இவன் கண்களை ஈரமாக்கியது.

இவன் அந்த ஒருரூபாய் காசை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். வந்தவர்கள், கொஞ்சம் சாம்பலுடன் அந்தச் சிறிய எலும்புத் துண்டுகளில் ஒன்றிரண்டையும் எடுத்து ஒரு சிறிய மண்சட்டிக்குள் போட்டார்கள். பிறகு அந்த சட்டியை ஒரு வெள்ளைத்துணியால் மூடி, வீட்டுக்கு எடுத்துவந்து, கிணற்றடி தென்னைமரத்தின் அருகில் வைத்து பத்திரப்படுத்தினார்கள்.

ஏழாவது நாள், இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களுக்காக,  உறவுகள் புடைசூழ , காவிரிக் கரைக்கு இவன் அழைத்துச் செல்லப்பட்டான்.  வழக்கமான சடங்குகளுடன் , பத்திரப்படுத்தியிருந்த சாம்பல் , பூஜையில் வைக்கப்பட்டது.

இவனுக்கு மீசை மழிக்கப்பட்டது. இடுப்பில் கட்டிய வேட்டி, பழக்கமின்மையால் அவிழ்ந்துவிட துடிக்கும்போதெல்லாம் இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

ஒரு கட்டத்தில், சட்டியிலிருந்த சாம்பலில் கொஞ்சம் எடுத்து,  அருகில் கிடந்த ஒரு துண்டு காகிதத்தில் பொட்டலமாக்கி, பாறைக்கடியில் மறைவாக வைத்தான்.  பிறகு,  மற்றவர்கள் சொன்னபடி, சாம்பல் சட்டியுடன் காவிரி ஆற்றின் கரையோரத்திலிருந்து, சற்று உள்ளே தண்ணீரில் நடந்துசென்று , சட்டியை தண்ணீரில் கவிழ்த்து மூழ்கவிட்டான். இவனும் தண்ணீரில் மூன்றுமுறை முங்கியெழுந்தான். கரைசேர்ந்தபின்னர் திரும்பிப் பார்த்தான். சாம்பலை கரைத்த எந்த அடையாளமும் இல்லாமல், காவிரி அமைதியாக, நகர்வது தெரியாமல் ஆழத்தில் நகர்ந்துகொண்டிருந்தது.

எல்லோரும் திரும்பலாமென புறப்பட்டபோது, மறைவாக வைத்திருந்த சாம்பல் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு,  சேர்ந்து நடந்தான். வீட்டிற்கு வந்ததும், முன்பே எடுத்துவைத்திருந்த அந்த ஒரு ரூபாய் காசையும், சாம்பல் பொட்டலத்துடன் சேர்த்து பத்திரப்படுத்தினான்.

அந்த சாம்பல் பொட்டலம் நெடுநாட்களாக , பத்திரமாக இவனுடைய பாதுகாப்பில் இருந்தது.

பல மாதங்களுக்குப் பின் ஒரு நாள்,..

கரூர் பேருந்து நிலையத்தில்,  மதுரை செல்லும் பேருந்தின் முன் பக்கத்து இருக்கையில்  இவன் அமர்ந்திருந்தான்.

திடீரென இவனுடைய செல்பேசி ஒலித்தது.

எடுத்துப் பேசினான்.

” யாரு..?

– நான் தான் உங்க  தம்பி பேசுறேன் அண்ணா ..

– எங்கிருந்துப்பா பேசுற ..?

– அப்படியே பின்னாடி திரும்பி பாருங்க ..!

இவனுக்கு பின்புறம் நான்காவது இருக்கையில்,  இவனுடைய சித்தி மகன்,  தம்பி-  கனகு உட்கார்ந்திருந்தான்.

இவன் ஆச்சரியப்பட்டு ” டேய் இங்க வாடா” என்று தம்பியை அழைத்தான் .

தம்பி,  இவனருகில் வந்து உட்கார்ந்து கொண்டான் .

– இங்கே என்னடாபண்றே..?

– நீங்க என்ன பண்றீங்க ..?

– நான் கன்னியாகுமரிக்கு போய்கிட்டு இருக்கேன்..

– ஓ..அப்படியா..! நான் மதுரைக்கு போறேன்.. ஆமா..என்ன திடீர்ப் பயணம் கன்னியாகுமரிக்கு..?

இவன் ஓரிரு நிமிடங்கள் பேசாமல் அமைதியாக இருந்தான் . பிறகு தன் பையில் இருந்து,  தந்தையின் சாம்பல் பொட்டலத்தை எடுத்து தம்பியிடம்  காண்பித்தான் .

– என்ன அண்ணா இது?

– உன் பெரியப்பாவின் அஸ்தி டா ..

கனகு விக்கித்து போய் திகைப்புடன் இவனைப் பார்த்தான் .

பிறகு அவன் அந்தப் பொட்டலத்தை ஒருவித பதட்டத்தோடு கையில் வாங்கினான்.

அந்த சிறிய பொட்டலத்தைப் பிரித்து , இரண்டு விரல்களால் சாம்பலை கொஞ்சம் எடுத்து, தனது நெற்றியில் பூசிக் கொண்டான்.. பொட்டலத்தை திருப்பி இவனிடம் கொடுத்தான் .

– அண்ணா, பெரியப்பா இறந்து இரண்டு நாள் கழித்து தான் எனக்கு தகவல் தெரிந்தது.. நான் அப்போது மதுரையில் இருந்தேன் ..பெரியப்பா சாவுக்கு என்னால் வர முடியவில்லை. சின்ன வயசுல இருந்து பெரியப்பாவுக்கு என் மேல் பிரியம் அதிகம்..அது உங்களுக்கே தெரியும்.. தன்னுடைய சாவுக்கு வராத எனக்கு,  சாம்பல் வடிவத்தில் என் பெரியப்பா தரிசனம் கொடுத்து விட்டார் ..”

என்று சொல்லியபடி, தம்பி கனகு கண்கலங்கினான். இவனுக்கு  என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் .

மதுரை வந்தவுடன் இருவரும் பிரிந்து விட்டார்கள். இவன் கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

இவனுக்கு, தன் தந்தையுடன் கழித்த நாட்களின் நினைவுகள் தொடர்ந்து வந்தன.

கையில் சாட்டையுடன் சர்க்கஸ் சிங்கத்தை ஆட்டி வைக்கும் , சர்க்கஸ்காரனை போலத்தான் இவனுடைய தந்தையும் இவனை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார்.  அவருடைய விருப்பப்படியே எல்லாம் நடந்து கொண்டிருந்தது. குடும்பமே மறுபேச்சு இல்லாமல் அவருடைய சொற்களுக்கு கட்டுப்பட்டு கிடந்தது.

இவனுடைய நினைவு தெரிந்த நாள் முதல்,  அவருடைய இறுதி நாட்கள் வரை, அவர்  இவனுடன் சிரித்துப் பேசி பழகியது இல்லை.  ஆனால்,  எல்லா தகப்பன்களைப் போலவும் இவன் குழந்தையாக இருந்த போது,  இவனையும் அவர் கொஞ்சி இருப்பார் என்று நினைத்துத்தான் தன்னை சமாதானப்படுத்திக்கொள்வான் .

கல்லூரி விடுமுறை நாட்களில் இவன் வீட்டிற்கு வந்த பொழுது, அந்த வயதில் எல்லோரையும் போலவும் , இவனுக்கும் அந்தத் தெருவில் இருந்த ஒரு தாவணிப்  பெண்ணின் மீது காதல் அரும்பியது.

அவள் கோவிலுக்கு போகும் போதும் வெளியில் எங்காவது போகும்போதும் அவள் பின்னாலேயே இவனும் தொடர்வான்.  இது எப்படியோ இவன் தந்தைக்கு தெரிந்து விட்டது.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இவனை தனியாக கூப்பிட்டு,

– ஒழுங்கா படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போய் அப்புறம் எவளையோ கூட்டிட்டு ஓடு ..அதுவரைக்கும் ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாரு ..”

என்று எச்சரித்து அனுப்பினார்.

அதன் பிறகு இவன் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, சகோதரி வீட்டிற்குப் போய் தங்கியிருந்து, மாமாவின் சிபாரிசால் கிடைத்த தற்காலிக அரசு  வேலையில்  சேர்ந்துகொண்டான்.

அங்கேயும் இவனுடைய காதல் லீலைகள் தொடர்ந்தன. அதையும் கேள்விப்பட்டு இவனுடைய தந்தை இவனை எச்சரித்துக் கொண்டே இருந்தார். காலப்போக்கில், அந்தக் காதல்களெல்லாம் பகல் கனவாகவே முடிந்து விட்டன.

அதன் பிறகு நடந்ததை எல்லாம், முன்னரே சொன்னது போல, இவன் இன்னொரு சமயத்தில் சொல்லக்கூடும்.

இரவு 8 மணி அளவில் இவன் கன்னியாகுமரி வந்து சேர்ந்தான்.

ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு,  தங்குவதற்கு ஒரு நல்ல விடுதியைத் தேடிப் போனான். எந்த விடுதியிலும் இவனுக்கு அறை கிடைக்கவே இல்லை.

அதற்கான காரணமும் இவனுக்கு தெரியவும் இல்லை.  ஒரு விடுதியில் மட்டும் அதற்கான காரணத்தை இவன்  தெரிந்து கொண்டான் .

ஒருமணிநேரமாக அலைந்தும், எந்த விடுதியிலும் அறை கிடைக்காத சோர்வுடன் ஒரு டீக்கடை பெஞ்ச்சில் அமர்ந்தான்.

– என்னாங்க சார்..ரூம் வேணுமா..? எல்லா வசதியோடவும் கிடைக்கும்.. ஆனால் கொஞ்சம்    

காஸ்ட்லிதான்..பரவாயில்லையா..? “

இவனை நெருங்கி அமர்ந்துகொண்ட ஒரு தாடிக்காரன் இவன் காதில்மட்டும் விழும்படி ரகசியமாகச் சொன்னான்.

இவன் எந்த பதிலும் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்த்துவிட்டு,  அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

பிறகுதான் தெரிந்தது, தனியாகப் போய் அறை கேட்டால் கிடைக்காது, ஜோடியாகப் போனால்தான், அதுவும் லோக்கல் புரோக்கருடன் போனால் மட்டுமே ரூம் கிடைக்கும் எனத் தெரிந்துகொண்டான்.

சரி, இன்னும் கொஞ்சம் முயற்சித்து பார்க்கலாமே என்ற நப்பாசையுடன் மற்றுமொரு விடுதியின் படியேறினான்.

– வணக்கம் சார்.. ஒரு சிங்கிள் ரூம் கிடைக்குமா..?

ரிசப்ஷனில் இருந்த பெரியவர் இவனை ஏற இறங்கப் பார்த்தார்.

– எந்த ஊரு..? தனியாத்தான் வந்திருக்கீங்களா..?

– சேலம் சார். தனியாத்தான் வந்திருக்கேன்..

– தனியா வந்தா, முன்னபின்ன தெரியாத ஆளுக்கெல்லாம் ரூம் தரமுடியாதுங்க..

– என்ன சார்..எல்லா இடத்திலேயும் இப்படியே சொல்றாங்க..நான் என்னதான் பண்றது..?

– ஆமா சார்.. எவனாச்சும் தனியா வந்து ரூம் எடுத்து தங்கிடுவான்..எங்களோட நேரம் கெட்டுப்போயிருந்தால், ரூம்ல தூக்குப்போட்டு தொங்கிடுவான்.. அப்புறம் நாங்கதான் போலீஸ் டேசனுக்கும் கோர்ட்டுக்கும் அலையணும்.. எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்..? வேற எங்காச்சும் முயற்சி பண்ணுங்க சார்..”

சொல்லிவிட்டு, பெரியவர் ரிஜிஸ்டரைப் புரட்டத்தொடங்கிவிட்டார்.

இவன் அவரை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே நகர முற்பட்டான்.

அவர், இவனை ஏறிட்டுப் பார்த்தார்.

– சரிங்க சார்..ஒண்ணு பண்ணுங்க.. உங்கவீட்டுக்கு ஒரு போன் பண்ணிக் கொடுங்க.. நான் பேசிப்பார்க்கிறேன்..”

என்று சொன்னார்.

இவன் உடனே அதற்குச் சம்மதித்து,  தன் வீட்டிற்கு போன் போட்டுக்கொடுத்தான்.

அவர், இவனைப் பற்றி இவன் வீட்டாரிடம் சுருக்கமாக விபரம் கேட்டுக்கொண்டார். பிறகு,  திருப்தியான புன்னகையுடன்,  ரிஜிஸ்டரை இவன் பக்கம் திருப்பி, அட்ரஸ் விபரம், போன் நெம்பர் எல்லாம் எழுதச்சொன்னார்.

” இந்தாங்க சார்..ரூம் நெம்பர் நூற்றிநாலு.. சாவி  எடுத்துக்குங்க..

என்று அறையின் சாவியை கொடுத்தார்.

நிம்மதி பெருமூச்சுடன்,  சாவியை வாங்கிக்கொண்டு அறைக்கு வந்தான். கதவைத்

தாளிட்டுவிட்டு, பாத்ரூம்போய் களைப்பு தீரக் குளித்தான். உடையை மாற்றிக்கொண்டு, மெத்தைக் கட்டிலில் ஏறி ஹாயாகப் படுத்தான்.

புது இடம்..கடல் காற்று..கூடவே இலவச இணைப்பாக கொசுத்தொல்லை.  பாதி தூக்கம்..பாதி விழிப்புமாக புரண்டுகொண்டிருந்தான். இடையில் எழுந்து வெளியே வந்து வராண்டாவில் இங்குமங்கும் உலாத்தினான். குமரிக்கடல்,அலைகளை வீசி இரவின் அமைதியை கலைத்துக்கொண்டிருந்தது. நடுக்கடலில் ஏதோ வெளிச்சப்புள்ளிகள் ஊர்ந்துகொண்டிருந்தன. உப்புக்காற்றில் உடம்பு பூராவும் நசநசத்தது.

மணி ஒன்றுக்கு மேலிருக்கும்.. பக்கத்து அறையின் கதவு திறந்து, ஒரு பெண் வெளியே வந்தாள். பார்க்க லட்சணமாக, நேர்த்தியாக உடுத்திய சேலை..அந்த இரவு நேரத்திலும்  முகம் பளிச்சிட்டது. நடுத்தரமான வயது..கண்ணை உறுத்தாத உடல்வாகு..!

இவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்.  இவனும் பதிலுக்கு முறுவலித்தான். இருவருக்கும் இடையே ஒரு  வெறுமையான மௌனம் நிலவியது. அவள்தான் மௌனத்தைக் கலைத்தாள்.

“பொள்ளாச்சியிலிருந்து இவ்ளோ தூரம் வந்துட்டோம்..ஆசைப்பட்டு வந்தும் பிரயோஜனமில்லை..அவருக்கு உடம்பு முடியல..நல்லாத் தூங்குறாரு..”

அவளின் குரலில் இனம்புரியாத ஏக்கம் தொனித்தது.

இவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், நடுத்தரமாக புன்னகைத்தான்.

– நான் ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா..? ” அவள் குரலில் லேசான பதட்டம் தெரிந்தது.

“அடடா..அப்படியெல்லாம் இல்லீங்க..என்ன பதில் சொல்றதுன்னு தெரியல..அதான்..” இவனும் பேசிவிட்டான்.

“பரவாயில்லீங்க..சும்மா பேச்சுத்துணையாச்சும் கிடைச்சுதேன்னு ஆறுதலாத்தான் இருக்கு..! ” அவள் சமாதானமாக புன்முறுவல் செய்தாள்.

– நீங்க தனியாகத்தான் வந்தீங்களா?

– ஆமாங்க..

– போர் அடிக்கலியா..?

– நான் வந்ததே இன்னிக்கு லேட் நைட்..தாங்க..

– சாப்பிட்டீங்களா ..?

– ம்..ரெண்டு தோசை..ஒரு டீ..அவ்ளோதான் ..

– ஓ..அது சரி.. நீங்க எந்த ஊரு..?

– சேலம்..

– நாளைக்கும் இங்கே இருப்பீங்களா..?

– தெரியலீங்க..நாளைக்கு மூடு எப்படியோ..அப்படித்தான் ..! 

மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் இவன் மௌனமாக இருந்தான்.

– சரிங்க ..நீங்க தூக்கம் வந்தா போய் தூங்குங்க.. நாளைக்கு முடிஞ்சா எங்களோட வாங்க.. இங்கெல்லாம் சுத்திப் பார்க்கலாம்..!”  அவள்,

பேச்சு முடிந்துவிட்டது போல, அங்கிருந்து நகர்ந்தாள். இவனுக்கு எதையோ வலியப்போய் இழந்தமாதிரி இருந்தது. 

அவள் நகர்ந்தபிறகும் அந்த இடத்தில் அவளது வாசனை மிச்சமிருந்தது.

இவனும் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான். சற்றுநேரத்தில் தூங்கியும் போனான்.

அதிகாலையில்,  அறைக்கு வெளியே பேச்சுக்குரலும் நடமாட்டமும் இவனை எழுப்பிவிட்டன. விடிய இன்னும் நேரமிருந்தது. இவன் அவசரக் குளியல் போட்டுவிட்டு, இடுப்பில் வேட்டியுடன், சட்டையை மாட்டிக்கொண்டு, பால்கனியில் வந்து நின்றான்.

தொடுவானத்திற்கு அப்பால், வானத்தில் மஞ்சளும் சிவப்புமாக ஒளி பரவியிருந்தது. மேகங்கள் இல்லாமல்,  வானம் துடைத்துவிட்டதைப்போல நிர்மலமாக காட்சியளித்தது.

பக்கத்து அறைக்கதவு திறக்கப்படாமல் உள்ளே தாழிடப்பட்டிருந்ததை பார்த்தபோது, இவனுக்குள் ஒருவிதமான ஏமாற்றம் பரவியது.

எல்லோரும் கடற்கரையை நோக்கி விரைந்தவண்ணமிருந்தார்கள். இவனும்,  சாம்பல் பொட்டலத்தை சட்டைப்பையில் எடுத்து வைத்துக்கொண்டு, அறையைப் பூட்டிவிட்டு விடுதியைவிட்டு வெளியே வந்து, கடற்கரையை நோக்கி நடந்தான்.

கடல்,  சின்னச்சின்ன அலைகளை கரைக்கு அனுப்பி,  அதிகாலை நேரத்தை வரவேற்றுக்கொண்டிருந்தது. கும்பல் கும்பலாக மக்கள், சூரிய உதயத்தைப் பார்த்து ரசிக்க கடற்கரை முழுவதும் குழுமியிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் , பலபேர் கடலில் கால்களை நனைத்தபடி, அலைகளின் சீண்டலில் சிலிர்த்துக் கும்மாளமிட்டார்கள்.

இவன், வேட்டியை தழையவிட்டபடி, கடற்கரையிலிருந்து நகர்ந்து, கடலோரமாக உள்ளே முழங்காலளவு நீரில் இறங்கினான்.

கிழக்கே, வானத்தின் விளிம்பில் சிவப்பாக ஒளிவட்டம் தெரிந்தது. அதைப்பார்த்துக்கொண்டே, சட்டைப்பையிலிருந்த சாம்பல் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான்.

பொட்டலத்திலிருந்த சாம்பலைத்தொட்டு,  நெற்றியில் விபூதிக்கீற்றாக தீற்றிக்கொண்டான்.  அலைகளின் தழுவுதலோடு, அப்படியே கால்மடக்கி கீழே அமர்ந்தான். இருகைகளாலும் சாம்பல் பொட்டலத்தை ஏந்திக்கொண்டு, தண்ணீரில் தலையை நனைத்து மூழ்கிக்கொண்டு,  பொட்டலத்திலிருந்த சாம்பலையும் , ஒரு ரூபாய் நாணயத்தையும், கடலுக்குள் கரைத்து நழுவ விட்டான்.

பிறகு, எழுந்துநின்று பார்த்தான். சிவப்பு  ஒளிவட்டம் பெரியதாகி, மஞ்சள் நிறத்துடன் சூரியன் வெளிப்பட்டு, கடலும் சுற்றுப்புறமும் செவ்வண்ணம் கலந்த மஞ்சள் நிறம் பரவியது.

இவனுக்கு உடல் சிலிர்த்தது. இவனையும் அறியாமல்,  கைகளிரண்டையும்  சேர்த்து கூப்பியபடி  சூரியனைப்பார்த்து அசைவற்று நின்றான்.

மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பி, கரையேறினான். கடற்கரை மணலில் கால்பாதங்கள் புதைந்து மேலெழும்ப நடந்து, கரைக்கு வந்துவிட்டான்.

குமரிப் பெருங்கடல், வழக்கம்போல  அலைகளை வீசி,  காற்றில் சாரல் துளிகளை இறைத்துக்கொண்டிருந்தது.

000 

-ரங்கசாமி வெங்கடாசலம் என்ற கண்ணியவானின் நினைவுகளுக்கு சமர்ப்பணம். 

ஆர். வி. ராஜேந்திரன்

சக மனிதர்களையும், அவர்கள் வாழ்க்கையை நேசிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாய் இருக்கும் ஆர் வி.ராஜேந்திரன் நல்ல வாசகர். பிறப்பிடம் காவிரி ஆற்றின் முழுகடைக்கு அருகிலுள்ள கொளத்தூர். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். முன்பாக 2020-ல் ‘கல் மரங்கள் பூத்த காடு’ கவிதைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இது இவரின் முதல் சிறுகதை முயற்சி.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *