என் அம்மாவின் வளரிளம் பருவத்தில், ​​அவளும் அவளுடைய மொத்தக் குடும்பமும் பள்ளிக்கூடத்திலோ, பெரிய முன்பக்க அறையுடைய பண்ணை வீடுகளிலோ நடந்த நடன நிகழ்ச்சிகளுக்குச் செல்வதுண்டு. சிறியவர்கள்முதல் பெரியவர்கள்வரை கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சிகளில் வீட்டிலோ பள்ளியிலோ இருந்த பியானோவை யாராவது வாசிப்பர். வயலினை யாராவது வீட்டில் இருந்து கொண்டு வந்திருப்பார்கள். அந்த நடனங்கள் சிக்கலான வடிவங்களும் நடன அசைவுகளையும் கொண்டிருந்தன. தனித்துவமான சிறப்புடையவராக அறியப்பட்ட ஒரு நபர் (எப்போதுமே அது ஆணாகவே இருக்கும்) உச்சஸ்தாயியில் அனைவரையும் கூப்பிடுவார். அந்தக் குறிப்பிட்ட நடனம் ஒருவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால்தவிர,

விசித்திரமாகவும் அவ நம்பிக்கையுடனும் வாசிக்கப்படும் அதிவேகமான அந்தத் தாளகதியால் அவர்களுக்கு எந்தப் பயனும் இருக்காது. அங்கிருந்த அனைவருமே, தம்முடைய பத்து அல்லது பன்னிரெண்டு வயதிற்குள் அவையனைத்தையும் கற்றுக் கொண்டார்கள்.

திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்குத் தாயாகியிருந்த என் அம்மா அந்த நடன நிகழ்ச்சிகள் நடைபெற்ற கிராமப்புறத்தில் இப்போது வசித்திருந்தால், அவற்றை அனுபவிக்கும் மன நிலையில் இன்னமும் இருந்திருப்பார். பழைய நடன பாணிகளை ஓரளவிற்கு மாற்றி அமைக்கப்பட்ட, தம்பதிகள் ஆடும் அந்த நடனத்தை அவளும் ரசித்திருக்கக்கூடும். ஆனால் அவள் இப்போது ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்தாள். அதாவது நாங்கள் இருந்தோம். எங்களுடைய குடும்பம் ஊருக்கு வெளியே இருந்தது.

என் அம்மாவைவிட  அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட என் அப்பா, தமக்கு விதிக்கப்பட்டவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர். ஆனால் என் அம்மா அப்படியில்லை. ஒரு விவசாயப் பெண்ணின் வாழ்க்கையிலிருந்து பள்ளி ஆசிரியராக உயர்ந்தவருக்குத் தான் விரும்பிய பதவியையோ, நட்பாக இருக்க விரும்பிய நகரத்து நண்பர்களையோ பெற அந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. அவளைப் பொருத்தவரை அவள் தனக்கேற்ற இடத்தில் வசிக்கவில்லை. அவளிடம் போதுமான அளவுக்குப் பணம் இல்லை. அதை ஈட்டுவதற்கு அவளுக்கு வேறெந்த வழியும் இல்லை. ஒரு பெண் புகைபிடிப்பதைப் பார்த்த என் அம்மா  அதுவொரு தரக் குறைவான செயல் என்று வருத்தமுற்றாள். அவள் மிகுந்த தன் முனைப்புடையவளாகவும், அதீத இலக்கண சுத்தமாகப் பேசுபவளாகவும் மற்றவர்களின் கண்களுக்குத் தெரிந்தாள் என்று நினைக்கிறேன். அவள் “எப்போதும் தயாராக”,  “மறுதலிக்கமுடியாதபடி” போன்ற சொற்களைப் பயன்படுத்தினாள். வழக்கமாக அப்படிப் பேசும் விசித்திரமான ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்போல அவள் அதைப் பேசினாலும், உண்மையில் அவள் அவ்வாறு வளரவில்லை. பொதுவாக எல்லோரும் பேசுவதைப் போலத்தான் என் அத்தைகளும் மாமாக்களும் தங்கள் பண்ணைகளில் இருக்கும்போது பேசினார்கள். அவர்களுக்கும்கூட என் அம்மாவை அவ்வளவாகப்  பிடிக்கவில்லை.

முன்பிருந்ததுபோல் இல்லாமல் அனைத்தும் மாறிவிட்டது என்று சிந்திப்பதிலேயே அவள் தன் முழு  நேரத்தையும் செலவழித்தாள் என்று நான் கூறவில்லை. தண்ணீர் பிடித்துவைக்கும் பெரிய தொட்டிகளைக் கஷ்டப்பட்டு  இழுத்துவந்து சமையலறைக்குள் வைக்கவேண்டி இருந்தது, தண்ணீர்ப் பற்றாக்குறை, கோடைக் காலத்தின் பெரும் பகுதியைக் குளிர் காலத்துக்குத் தேவைப்படும் உணவைத் தயாரிப்பதில் செலவழிக்கவேண்டிய நிர்ப்பந்தம்போன்ற காரணங்களால் மற்ற பெண்களைப் போலவே அவளும் ஓய்வின்றி வேலை செய்தாகவேண்டியிருந்தது. 

என்னைப் பற்றி அவளுக்கிருந்த ஏமாற்றத்தை நினைத்துப் பார்க்க நிறைய நேரத்தைச் செலவிடுபவளால், நகரத்தில் இருந்த என் பள்ளியில் இருந்து நல்ல நண்பர்களை, ஏன், எந்த நண்பர்களையுமே ஏன் நான் வீட்டுக்கு அழைத்து வருவதில்லை என்று யோசிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதுபோலவே ஞாயிறுகளில் என் பள்ளியில் நடைபெற்ற பாடல் ஒப்புவித்தல்களில் வழக்கமாகப் பாய்ந்து பங்கேற்கும் நான், அவற்றில் இருந்து ஏன் ஒதுங்கி நின்றேன் என்பதைச் சிந்திக்கவும் அவளுக்கு நேரமில்லை.

என்னுடைய தலைமுடியை அவள் ஒருவித வித்தியாசமான பாணியில் பின்னியிருந்தாள். என் பள்ளியில் படித்த வேறு யாருடைய தலைமுடியும் அவ்வாறு பின்னப்படவில்லை. நான் பள்ளிக்குச் செவ்வதற்கு முன்பிருந்தே இந்தப் பிரச்சினை இருந்தாலும் அதை நான் ஒருவாறு சமாளித்து வந்தேன். அவள் என் தலைமுடியில் பின்னியிருந்த அந்த மோதிர வடிவங்கள், பள்ளியில் இருந்து நான் திரும்பி வரும்போது ஏன் கலைந்து அலங்கோலமாகி இருந்தது என்று நினைப்பதற்கும் அவள்வசம் நேரமில்லை. கவிதை வாசிப்பதில் எனக்கிருந்த அபரிமிதமான நினைவாற்றலை, அதைப் பற்றிப் பெருமையடித்துக்கொள்ளப் பயன்படுத்தாமல், நான் ஏன் வெறுமையாக இருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கவும்கூட அவளுக்கு நேரமின்றிப்போனது.

ஆனால் என்னுடைய மனம்  எப்பொழுதும் குழப்பங்களாலும் சர்ச்சைகளாலும் நிறைந்த ஒன்று அல்ல. பத்து வயதான நான் என் அம்மாவுடன் ஒரு நடன நிகழ்ச்சிக்குச் செல்ல ஆர்வத்துடன் தயாராகி நிற்கிறேன்.

அந்த நடன நிகழ்ச்சி எங்கள் சாலையில் இருந்த முற்றிலும் கண்ணியமான ஆனால் அவ்வளவாகச் செழிப்பான தோற்றமில்லாத வீடுகள் ஒன்றில் நடைபெற்றது. உலோக வார்ப்பாலை ஒன்றில் பணியாற்றிய அந்தப் பெண்ணின் கணவனுக்கு என் தாத்தா வயதிருக்கும் என்ற விஷயத்தைத்தவிர அந்தப் பெரிய மர வீட்டில் வசித்த யாரையும் எனக்குத் தெரியாது.

ஒருவர் தனக்கு எவ்வளவு வயதானாலும் வார்ப்பாலை வேலையைவிடாமல், முடிந்தவரை உழைத்துத் தங்கள் உடல்நிலை பின்னாட்களில் ஒத்துழைக்க முடியாமல்போகும் காலத்திற்கான பணத்தை இப்போதே ஈட்டிச் சேமித்துவைக்க முயற்சிக்கவேண்டி இருக்கிறது. அது ஒரு மிகப் பெரும் பொருளாதார மந்தநிலையின் காலம்  என்று நான் பின்னர் அறிந்துகொண்டபோதும்கூட, வேலை ஏதும் இன்றி முதியோர் ஓய்வூதியத்தை வைத்துமட்டுமே ஒருவர் சமாளிக்கவேண்டும் என்ற நிலையை நான் ஒரு அவமானமாகக் கருதினேன். ஒருவருக்கு வளர்ந்த பிள்ளைகள் இருந்து, அவர்களே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவந்தாலும், தம் பெற்றோரை இத்தகைய நிலையில் அவர்கள் விடுவதை நான் அவமானகரமான ஒன்றாகவே நினைத்தேன்.

அப்போது தோன்றாத சில கேள்விகள் இப்போது என் மனதில் எழுகின்றன.

அந்த வீட்டில் வசித்தவர்கள் ஒரு கொண்டாட்டமாகமட்டுமே இந்த நடன நிகழ்ச்சியை நடத்தினார்களா, அல்லது அதற்கப் பணம் வசூலித்தார்களா? ஒருவேளை அந்த ஆண் வேலை செய்து சம்பாதித்திருந்தாலும்கூட அவர்கள் நெருக்கடியான சூழலில்தான் இருந்திருப்பார்கள். மருத்துவருக்குத் தரப்படவேண்டிய  கட்டணம் இருக்கிறதே!  அது ஒரு குடும்பத்தின்மீது எவ்வளவு பயங்கரமான சுமையாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

அனைவரும் வழக்கமாகச் சொல்கிற ‘பட்டுப் போல் மிருதுவாக’ இருந்த என் தங்கையின் தொண்டையில் கூடுதலாக வளர்ந்திருந்த சதை  அகற்றப்பட்டது. நானும் என் தம்பியும் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் மூச்சுக்குழாய் அழற்சியால் கடுமையாக அவதிப்பட்டதால் மருத்துவரை அழைக்க வேண்டியிருந்தது. மருத்துவர்கள் வருகை என்றாலே அதன் பொருள் நிறைய செலவு என்பதுதான்.

என்னுடைய அப்பா, என் அம்மாவுக்குத் துணையாகப் போகாமல் நான் ஏன் அவளுடன் போகவேண்டியிருந்தது என்பது பற்றி நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் அப்படி ஒரு பெரிய புதிர் இல்லை. என் அம்மாவுக்குப் பிடித்திருந்த நடனம் என் அப்பாவுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அத்துடன் வீட்டில் இருந்த இரண்டு சிறிய குழந்தைகளை யாராவது பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தளவுக்கு எனக்கும் வயதாகவில்லை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கென உள்ள குழந்தைப் பராமரிப்பாளர்கள் யாரையும் என்னுடைய பெற்றோர் நியமித்ததாக எனக்கு நினைவில்லை. அக் காலத்தில் இந்தச் சொல் பொது வெளியில் அறியப்பட்ட ஒன்றா  என்றுகூட எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அதற்குப் பிறகு காலம் மாறி, என் பதின்வயதில் நானே பிறகு அத்தகைய வேலைகளைச் செய்தேன்.

நாங்கள் ஆடைகள் உடுத்தித் தயாரானோம். என் அம்மா நினைவுகூர்ந்த நடனம், நான்கு ஜோடிகள் ஒரு சதுரத்தில் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் நிலையில் நடன அசைவுகள் தொடங்கும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த நாட்டுப்புற நடனம். அதில் அணியப்பட்ட நாகரீகமான நடன ஆடைகளை உங்களால் ஒருபோதும் தொலைக் காட்சியில் காணமுடியாது. எல்லோரும் தங்களால் இயன்றவரை சிறப்பான ஆடைகளை அணிந்திருந்தார்கள்.

நாட்டுப்புற மக்களின் உடையாகக் கருதப்படும் தொங்கலிழைகள், சுருளான கழுத்துப் பட்டைகள் போன்றவற்றை அணிந்து நடன நிகழ்ச்சியில் தோன்றுவது, நிகழ்ச்சி நடத்தியவர்கள் உட்பட அனைவருக்குமே அவமானமாக இருக்கும். மிருதுவான கம்பளி நூலைக்கொண்டு என் அம்மா எனக்காகத் தயாரித்திருந்த  ஆடையை நான் அணிந்திருந்தேன். என் ஸ்கர்ட் இளஞ்சிவப்பிலும், ஆடையின் மேற்பகுதி மஞ்சள் நிறத்திலும் இருந்தது. பின்னொரு சமயம் என் இடப் பக்க மார்பகம் இருக்கப்போகும் இடத்தில் இப்போது ஒரு இளஞ்சிவப்பு இதயம் தைக்கப்பட்டிருந்தது. லேசாக ஈரமாக்கிப் பிறகு சீவிப் பின்னப்பட்ட என் தலைமுடியில், சூப்பில் மிதக்கும் கொழுத்த இறைச்சித் துண்டுகளின் தோற்றத்தோடு  இருந்த மோதிர வடிவங்களை நான் தினமும் பள்ளிக்குச் செல்லும் வழியில்  அகற்றினேன்.

நடன நிகழ்ச்சிக்குச் செல்லும்போது என் தலைமுடியில் அவை இருப்பதை விரும்பாத நான், வேறு யாருடைய தலை அலங்காரமும் அவ்வாறு இல்லை என்று கூறி மறுத்தேன். அவர்கள் யாருக்கும் அந்தளவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று என் அம்மா வேகமாக அதற்கு பதில் சொன்னாள். நான் அதற்குமேல் முறையிட்டுக் கொண்டிருக்காமல் நிகழ்ச்சிக்குக் கிளம்பினேன். நடன நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலும், என் தலை அலங்காரத்திற்காக என்னை அவமானப்படுத்தக்கூடிய என்னுடைய பள்ளி மாணவர்கள் யாரும் அங்கு வரப்போவதில்லை என்பதால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று நான் நினைத்ததும், அதற்கான காரணங்கள்.

 என் அம்மா அணிந்திருந்த கருப்பு வெல்வெட்டால் ஆன, முழங்கைகள் வரை நீண்ட கைப் பகுதிகளும், கழுத்தைச் சுற்றி உயரமான விளிம்புகளும்கொண்ட, அதிகம் பயன்படுத்தியிராததும், அவளிடம் இருந்ததிலேயே மிக அழகானதுமான ஓர் உடை அதுதான். தேவாலயத்திற்கு அணிந்து செல்லமுடியாதபடி மிக நளினமாகவும், ஈமச் சடங்குகளுக்கு அணியப் பொருத்தமற்ற வகையில் மிகக் கொண்டாட்டமானதாகவும் அது இருந்தது. அதில் இருந்த அற்புதமான விஷயம் என்னவென்றால் ரவிக்கை முழுவதும் தைக்கப்பட்டிருந்த பற்பல வண்ணங்கள்கொண்ட தங்க, வெள்ளி மணிகள், அவள் நகர்ந்தாலோ இல்லை, அவளுடைய சுவாசத்திற்கேகூட ஒளிவீசியபடி நிறம் மாறிக்கொண்டிருந்ததுதான்.

அவள் பெரும்பாலும் கருப்பாக இருந்த தன் தலை முடியைப் பின்னி, தலைமீது இறுக்கமான சிறிய கிரீடம் ஒன்றைப் பொருத்தியிருந்தாள். என் அம்மாவைத்தவிர அவள் வேறு யாராக இருந்திருந்தாலும், அவளை ஒரு பேரழகி என்று நான் நினைத்திருப்பேன்.  நான் அவளை அப்படி இருப்பதாகத்தான்  நினைத்தேன். அந்த விசித்திரமான வீட்டிற்குள் நாங்கள் நுழைந்தவுடன், அங்கிருந்த பெண்கள் தங்களிடம் இருப்பதிலேயே மிகச் சிறந்த ஆடையை அணிந்து வந்திருந்ததை நான் பார்த்தபோதும் என் அம்மாவுடைய மிக அழகிய உடையைப்போல வேறு எந்தப் பெண்ணின் ஆடையும் இல்லாததை நான் கவனித்தேன்.

நான் குறிப்பிட்ட அந்த மற்ற பெண்கள் சமையலறையில் இருந்தனர். நாங்கள் அங்கு நின்றபடி பெரிய மேசையில் வைக்கப்பட்டிருந்த பல்வேறுவகையான பொதியப்பங்கள், மாச் சில்லுகள், இனிப்புகள், கேக்குகள் ஆகியவற்றைப் பார்த்தோம். என் அம்மாவும் தான் தயாரித்த சில ஆடம்பரமான உணவுவகைகளை மேசையின்மீது வைத்து, அவை கவனம் பெறவேண்டும் என்பதற்காக  அந்தப் பண்டங்கள் அனைத்துமே எப்படி வாயில் நீர் ஊறும்படி இருக்கின்றன என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளத் தொடங்கினாள்.

அவள் வாயில் நீர் ஊறவைக்கிறது என்றா சொன்னாள்? அவள் என்ன சொல்லியிருந்தாலும் அது சரி என்று எனக்குப் படவில்லை. இலக்கண சுத்தமாகப் பேசினாலும், எப்பொழுதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்பச் சரியாகத் தன் கருத்துகளைக் கூறும் என் அப்பா இப்போது இங்கிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் ஒன்று, அவர் எங்கள் வீட்டில்தான் அவ்வாறு இருந்தாரேதவிர, வெளியில் இருக்கும்போது அவ்வளவு எளிதாக அதைச் செய்துவிடமாட்டார். எவ்விதமான கருத்துப் பரிமாற்றம் நடந்தாலும் அதிலிருந்து நழுவி விடுபவர், கவனத்தைக் கவருமளவிற்குத் தனித்துவமாக எதுவுமே சொல்லக்கூடாது என்பதைப் புரிந்துவைத்திருந்தார். என் அம்மா அதற்கு நேர்மாறாக இருந்தார். அவளைப் பொருத்தவரை எல்லாமே தெளிவாகவும், எதையோ நினைவுபடுத்துவதாகவும் இருந்ததால் அது மற்றவர் கவனத்தை ஈர்க்க அவளுக்கு உதவுவதாக இருந்தது.

இப்போது இந்த நொடி, இங்கு அதுதான் நடக்கிறது. அவளுடன் யாரும் பேசாததற்கு ஈடுகட்டுவது போல் அவள் மகிழ்ச்சியாகச் சிரிப்பது எனக்குக் கேட்டது. எங்கள் மேற்சட்டைகளை எங்கு வைக்கலாம் என்று அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். அவற்றை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் என்றாலும், நாம் விரும்பினால், அவற்றை மாடியில் உள்ள படுக்கையில் கிடத்தலாம் என்று யாரோ பதில் சொன்னார்கள்.

இரண்டு பக்கமும், சுவர்களுக்கு இடையே இருந்த மாடிப் படிக்கட்டுகளின்மீது, மேல் அறையில் இருந்து கசிந்த சிறுவெளிச்சத்தைத் தவிர அது இருட்டாக இருந்தது. என்னை மொட்டைமாடிக்குப் போகச் சொன்ன என்னுடைய அம்மா, ஒரு நிமிடத்தில் தானும் அங்கு வந்து விடுவதாகக் கூறியதால் நான் படியேறிப் போனேன்.

அந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு உண்மையில் பணம் தர வேண்டியிருக்குமா என்று இங்கு ஒரு கேள்வி எழலாம். ஒருவேளை அதை ஏற்பாடு செய்வற்குத்தான் என் அம்மா மாடிக்கு வராமல் கீழ்த் தளத்தில் இருந்திருக்கலாம். இதிலுள்ள இன்னொரு விஷயம், அங்கிருந்த ஆட்கள் நிகழ்வில் கலந்துகொள்ளப் பணமும் தந்து, அந்த குளிர்பானங்களையும் உணவுப் பொருட்களையும் எடுத்துகொண்டும் வந்திருப்பார்களா என்ன? அத்துடன் அங்கிருந்த அத்தனைபேரும் ஏழைகள் எனும்போது, என் நினைவில் இருப்பதுபோல் அந்த உணவுவகைகள் உண்மையில் ஆடம்பரமாகவா இருந்தன?  ஆனால் போர் தொடர்பான சில பணிகளைச் செய்து கிடைத்த பணத்தாலும், படைவீரர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிய பணத்தாலும், தாம் மிகவும் ஏழ்மை நிலையில் இல்லை என்பதாக அவர்கள் உணர்ந்திருக்கலாம். எனக்கு உண்மையில் பத்து வயதாக இருந்திருந்தால், பத்து வயது என்றுதான் நான் நினைக்கிறேன், இத்தகைய மாற்றங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்திருக்கவேண்டும்.

சமையலறையில் இருந்தும் முன்புற அறையில் இருந்தும் மாடிக்குச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள், படுக்கையறையின் அருகே இருந்த படிக்கட்டுகளோடு இணைந்து ஒற்றைத் தொகுப்பாக மாறின. துப்புரவாக இருந்த முன்புறப் படுக்கையறையில் என் மேற்சட்டை, காலணிகள் ஆகியவற்றைக் கழற்றி வைத்தபோது, சமையலறையில் என் அம்மாவின் குரல் ஒலிப்பது அந்த அறையில் இருந்தே எனக்குக் கேட்டது. ஆனால் முன்னறையில் இருந்து இசை ஒலித்ததைக் கேட்டதுமே நான் அதை நோக்கி நடத்தேன்.

அந்த அறையில் இருந்து அத்தனை அறைக் கலன்களும் அகற்றப்பட்டு, ஒரு பியானோமட்டுமே இருந்தது. சலிப்பூட்டுவதாக நான் நினைத்த அடர் பச்சை நிறத் திரைகள் கீழே இழுக்கப்பட்டு ஜன்னல்களை மூடியிருந்தன. ஆனால் அந்த அறையில் இருந்த சூழல் சலிப்பூட்டுவதாக இல்லை. பலர் நடனமாடியபடி, ஒருவரையொருவர் நாகரீகமாகப் பிடித்துக்கொண்டு, நெருக்கமான வட்ட வடிவங்களில் லேசான நடன அசைகளோடு ஆடிக்கொண்டிருந்தனர்.  பள்ளிக் கூடத்தில் படித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள் அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடன பாணியில் நேருக்குநேர் நின்றபடி, சிறிது நேரம்  ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடியும் பிறகு கைகளைவிட்டும் ஜோடியாக நடனமாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்ததும் முகமன் கூறும் விதமாகச் சிரித்ததும், நான் மகிழ்ச்சியில் உருகிப்போனேன். என்னைவிட வயதில் பெரிய எந்தப் பெண்ணும் என்மீது தன் கவனத்தைச் செலுத்தும்போது நான் அப்படித்தான் எப்போதும் உணர்ந்தேன்.

அந்த அறையில் இருந்த, பார்க்கும் எவரையும் ஈர்க்கும்படியான ஒரு பெண் அணிந்திருந்த ஆடை நிச்சயமாக என் அம்மாவின் ஆடையை ஓரங்கட்டக்கூடியது. அவள் என் அம்மாவைவிட மிக வயதானவளாக இருக்கலாம்.  வெண்ணிறமாக இருந்த அவளுடைய தலைமுடி மார்செல்ட் அலைகள் என்று அழைக்கப்பட்ட ஒரு மென்மையான அதிநவீன அமைப்பில் உச்சந்தலைக்கு அருகில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவள் கம்பீரமான தோள்களுடனும் பரந்த இடுப்புப் பகுதியுடனும், பருமனாக இருந்தாள். அவள் அணிந்திருந்த பொன்னிறமும் ஆரஞ்சும் கலந்த மெல்லிய பட்டுடை,  சதுரவடிவில் தாழ்வாக வெட்டப்பட்ட கழுத்துப் பகுதிகொண்ட,  முழங்கால்களை மட்டுமே மறைக்கும் ஸ்கர்ட் வகையிலானது. அந்த உடையின் குட்டையான கைப் பகுதி அவளுடைய கைகளை இறுக்கமாகப் பிடித்திருக்க, கைகளில் இருந்த உபரிச் சதை பன்றிக்கொழுப்புபோலக் கனமாகவும் மென்மையாகவும் வெண்மையாகவும் திரண்டு காட்சியளித்தது.

இது என்னைத் திடுக்கிடச் செய்தது. ஒருவர் வயது முதிர்ந்தவராகவும் அதே சமயம்  பண்பட்டவராகவும், பருமனாக இருந்தாலும் அழகாகவும், பித்தளைபோல் எடுப்பாக இருந்தும் கண்ணியமாகவும் ஒரேசமயத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்பது நான் நினைத்தே பார்த்திராத ஒன்று. என் அம்மா அவளைப் பற்றி அதன் பிறகு குறிப்பிட்டதுபோல ஒருவேளை வேறு யாராவதுகூட அவளை வெட்கக் கேடானவள் என்று குறிப்பிட்டிருக்கலாம். என் அம்மாவின் வழக்கமான பேசுமொழி அதுதான். ஆனால் இணக்கமான சுபாவமுடைய வேறு யாராவதாக இருந்திருந்தால் அவளைக் கம்பீரமானவள் என்று சொல்லியிருக்கக்கூடும். பளீரென்ற நிறங்கொண்ட அந்த நவீன உடையை அணிந்திருந்ததைத் தவிர அவள் அப்படியொன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவளும், அவளுடன் நடனமாடிய ஆணும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடன், தமக்குத் தோன்றிய ஏதோ ஒரு பாணியில், பெரிதாக அக்கறையின்றி நடனமாடியது அவர்களைக் கணவன் மனைவியாகக் காட்டியது.

அவளுடைய பெயர் எனக்குத் தெரியவில்லை. நான் அவளை இதற்கு முன் இங்கு பார்த்ததும் இல்லை. இழிவானவள் என்று அவள் எங்கள் ஊரில் பெயர் பெற்றிருந்தது எனக்குத் தெரியாது. வெளியூர்களில் அவளுடைய சங்கதி என்ன என்பதெல்லாம் எனக்கெப்படித் தெரியும்?

நடந்தவை அனைத்தையும் நினைவில்வைத்துக் கொள்வதற்குப் பதிலாக நான் புனைகதை எழுதுகிறவளாக இருந்தால், நான் எழுதும் கதையில் அந்த உடையை அவளுக்கு நான் ஒருக்காலும் தந்திருக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். அவளுக்குத் தேவையற்ற ஒரு விளம்பரத்தை அது அளித்தது. தினமும் பள்ளிக்குப் போகையிலும் வீடு திரும்புகையிலும்மட்டும் நகரத்தைக் கடக்காமல் ஒருவேளை நான் அங்கேயே வசித்திருந்தால் அவள் ஒரு புகழ்பெற்ற விபச்சாரி என்பதை நான் முன்பே அறிந்திருப்பேன். அந்த ஆரஞ்சு நிற உடையில் இல்லாவிட்டாலும் நிச்சயமாக அதற்கு முன்பே அவளை வேறெங்காவது பார்த்திருப்பேன். அத்துடன் விபச்சாரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், மோசமான பெண் என்று வேண்டுமானால் சொல்லியிருப்பேன். அருவருப்பான, ஆபத்தான, பரபரப்பான ஏதோ ஒன்று அவளோடு சம்பந்தப்பட்டிருப்பது, அது உண்மையில் என்ன என்று அறிந்துகொள்ளும் முன்னரே எனக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அப்படி யாராவது என்னிடம் சொல்ல முயற்சித்திருந்தால், நான் அவர்களை நம்பியிருக்கமாட்டேன் என்று நினைக்கிறேன்.

தம்முடைய உண்மையான இயல்புக்கு மாறானவர்களாக அந்த நகரத்தில் இருந்த பலரைப்போல, அவளும் ஒருத்தி என்று எனக்கு ஒருவேளை  தோன்றியிருக்கலாம். தினம் டவுன் ஹாலின் கதவுகளைத் தேய்த்து மெருகேற்றும் கூன்முதுகுடைய ஆள் ஒருவன், எனக்குத் தெரிந்து அதைத்தவிர வேறு எதுவுமே செய்யவில்லை. உடலில் எந்தக் குறைபாடுமற்ற ஒரு பெண் தனக்குத் தானே உரத்த குரலில் தொடர்ந்து பேசியபடி கண்ணுக்குப் புலப்படாத ஆட்களைத் திட்டுவாள்.

நாட்கள் செல்லச் செல்ல எனக்கு அவளுடைய பெயர் தெரிய வந்திருக்கும் என்பதோடு, நான் நம்ப முடியாத விஷயங்களை எல்லாம் அவள் செய்தது இறுதியில் எனக்கு எப்படியும் தெரியவந்திருக்கும். அவளுடன் நடனமாடிய பெயர் அறியாத அந்த நபர், பில்லியர்ட்ஸ் விளையாட்டு அரங்கின் உரிமையாளர் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, ​​ஒரு நாள் பில்லியர்ட்ஸ் விளையாட்டு அரங்கைக் கடந்து சென்றபோது என்னுடன் வந்த இரண்டு பெண்கள் அதற்குள் போய்ப் பார்க்கத் தைரியமுள்ளதா என்று கேட்டு என்னைத் தூண்டினர். நான் அந்த அரங்கிற்குள் போனபோது அந்த ஆள் அங்கிருப்பதைப் பார்த்தேன்.

முன்பைவிட வழுக்கையும் பருமனும் அதிகமாகியிருந்தது போலவே அவனுடைய உடையும் மேலும் அலங்கோலமாகி இருந்தது. அவன் என்னிடம் எதுவும் பேசியதாக நினைவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. நான் என் நண்பர்களிடம் தெறித்து ஓடினேன். நண்பர்கள் என்று அவர்களைச் சொல்லமுடியாது. அங்கு நடந்ததைப் பற்றி அவர்களிடம் நான் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.

பில்லியர்ட்ஸ் விளையாட்டு அரங்கின் உரிமையாளரை அங்கு பார்த்ததும், கேலிக்குரியது என்று நான் அழைத்திருக்க வாய்ப்பிருந்த அந்த ஆரஞ்சு நிற உடை, உரத்த ஒலியெழுப்பிய அந்தப் பியானோ, ஃபிடில் இசை, மேற்சட்டையுடன் திடீரென்று அங்கு தோன்றிய என் அம்மா, என அந்த நடன நிகழ்ச்சியின் முழுக் காட்சியும், மீண்டும் என் கண்முன்னே தோன்றியது.

அங்கு ஒலித்த இசையின் இடையே எனக்கு விருப்பமற்ற ஒரு தொனியில் அவள் என் பெயரைச் சொல்லி அழைத்தாள். அந்தத் தொனி, ‘நீ இந்த பூமியில் ஜனிப்பதற்கு நான்தான் காரணம்’ என்று அவள் எனக்கு நினைவூட்டுவதுபோல் தோன்றியது.

அவள், “உன் மேற்சட்டை எங்கே?” என்று கேட்டது, நான் அதை ஏதோ  தவறான ஓரிடத்தில் வைத்துவிட்டது போலிருந்தது.

“மாடியில்”

“சரி. நீ போய் அதை எடுத்துக் கொண்டு வா”

அவள் என்னிடம் முதலில் சொன்னதுபோல் அவள் என்னைப் பின்தொடர்ந்து மாடிக்கு வந்திருந்தால் அவளே அதை அங்கு பார்த்திருப்பாள். தன் மேற் சட்டையைக் கழற்றாமல் அதன் பொத்தான்களைமட்டுமே கழற்றிவிட்டு, உணவைப் பற்றிப் பெருமை பேசியபடி நின்றவளின் பார்வை, நடன நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த அறையின்மீது பட்டு, ஆரஞ்சு நிற உடையணிந்திருந்த அந்த நடனக் கலைஞர் யார் என்று அவளுக்குத் தெரியும்வரை, சமையலறையைக் கடந்து அவள் தன்னுடைய காலை வெளியே எடுத்து வைத்திருக்கவே மாட்டாள்.

“தாமதிக்காதே” என்றாள்.

எனக்கு அந்த எண்ணமே இல்லை. படிக்கட்டுகளுக்கான கதவைத் திறந்து படிகளில் ஏறி ஓடியபோது படிக்கட்டுகளின் வளைவில் அமர்ந்திருந்த சிலரால், என்னுடைய ஓட்டம் தடைபட்டது. நான் அப்போது அங்கு வருவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஏதோ தீவிரமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அது வாக்குவாதம் இல்லை, ஆனால் அவசரமான ஏதோவொரு பேச்சுவார்த்தை.

அவர்களில் இருவர், விமானப்படைச் சீருடையில் இருந்த இளைஞர்கள். ஒருவன் மேல்படியில் அமர்ந்திருக்க, இன்னொருவன் தன் முழங்காலின் மீது கையைவைத்தபடி கீழ்ப் படியில் முன்னோக்கிச் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவர்கள் இருவருக்கும் மேல் இருந்த படியில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் இருந்தவன் ஆறுதலாக அவளுடைய காலை மென்மையாக வருடிக் கொண்டிருந்தான். அவள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, அந்தக் குறுகிய படிக்கட்டுகளில் அவள் விழுந்திருக்கலாம். அந்தக் காயத்தின் வலி தாங்காமல் அழுகிறாள் என்று நினைத்தேன்.

அவளுடைய பெயர் பெக்கி. “பெக்கி, பெக்கி” என்று அந்த இளைஞர்கள் வேகமாகவும் மென்மையாகவும் அவளைக் கூப்பிட்டனர்.

அவள் குழந்தைத்தனமான குரலில் பதில் சொன்னது எனக்குப் புரியவில்லை. இது நியாயமே இல்லை எனும் ரீதியில் அவள் ஏதோ குறை கூறிக்கொண்டிருந்தாள். ஏதோவொன்று நியாயமில்லை என்று ஒருவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஆனால் அந்த விஷயத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையற்ற ஒரு குரலில் அவர் அதைச் சொல்வதுபோல அது இருந்தது. அற்பத்தனமானது என்பதே இத்தகைய சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படவேண்டிய மற்றொரு சொல். அது மிக அற்பத்தனமானது. யாரோ ஒருவர் மிக அற்பத்தனமாக அந்த இடத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் வீட்டிற்கு வந்ததும் என் அம்மா, அப்பாவிடம் பேசியதைவைத்து என்ன நடந்தது என்பது எனக்குத் தெரிந்தாலும் என்னால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

பில்லியர்ட்ஸ் அரங்க உரிமையாளரால் ஈர்க்கப்பட்டு திருமதி. ஹட்சிசன் அந்த நடனத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த ஆள்தான் பில்லியர்ட்ஸ் அரங்க உரிமையாளர் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. என் அம்மா அவனை என்ன பெயரிட்டு அழைத்தாள் என்றும் தெரியவில்லை. ஆனால் அவனுடைய நடத்தையால் அவள் சோகமும் திகைப்பும் அடைந்திருந்தாள். நடனம் பற்றிய செய்திகள் பிறகு வெளியேவந்தன. ஆல்பர்ட் துறைமுகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், அதாவது விமானப்படைத் தளத்தில் இருந்த சிலர் நடனத்தில் பங்கேற்க முடிவு செய்திருந்தனர். நிச்சயமாக அது சரியான விஷயமாகத்தான் இருந்திருக்கும். விமானப்படை இளைஞர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை. திருமதி ஹட்சிசன்தான் அவமானத்தை ஏற்படுத்தியது. அடுத்தது அந்தச் சிறுமி.

திருமதி ஹட்சிசன், பாலியல் தொழில் செய்துவந்த பெண்களில் ஒருத்தியைத் தன்னுடன் அந்த நடன நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

என் அப்பா, “ஒருவேளை அவள் ஒரு உல்லாசப் பயணம் போவதாக நினைத்திருக்கலாம். அல்லது  ஒருவேளை நடனமாட விரும்பியிருக்கலாம்” என்றார்.

இதை என் அம்மா கவனித்ததாகவே தெரியவில்லை. அது அவமானகரமானது என்றாள்.  உங்கள் சுற்றுப்புறத்தில் நடைபெற்ற ஒரு கண்ணியமான நடன நிகழ்ச்சியில் நீங்கள் உங்களுடைய நேரத்தைச் செலவழிக்க ஆர்வமாக இருந்தீர்கள். ஆனால் அது முழுதும் பாழாகிவிட்டது.

என்னைவிடப் பெரிய பெண்களின் தோற்றத்தை மதிப்பிடும் ஒரு பழக்கம் எனக்கு இருந்தது. பெக்கி அழகாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவள் அழுததில் ஒருவேளை அவளுடைய ஒப்பனை கலைந்துபோயிருக்கலாம். சில பாபி பின்கள்வைத்துச் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த அவளுடைய தலைமுடி அவிழ்ந்திருந்தது.  அவளுடைய விரல் நகங்கள் நிறப் பூச்சுடன் இருந்தாலும், அவளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தது நன்கு தெரிந்தது. தேவையற்ற சிணுங்கலும், தந்திரமும், எப்போதும் எதாவது குற்றம் சொல்கிற குணமும் கொண்டிருந்த, எனக்கு அறிமுகமாகியிருந்த சில பெரிய பெண்களைவிட, அவள் அப்படியொன்றும் முதிர்ச்சி அடைந்தவளாகத் தெரியவில்லை.

ஆனாலும், அவள் கடினமான ஒரு தருணத்தை ஒருபோதும் சந்திக்கத் தகுதியற்ற ஒருத்திபோலவும், கொஞ்சப்படவும், மகிழ்ச்சியுடன் இருக்கவும் அனைத்து வகையிலும் உரிமையுடையவள் போலவும், அவள்முன் அனைவருடைய தலையும் வணங்கி நிற்கவேண்டும் என்பது போலவும் அந்த இளைஞர்கள் அவளை நடத்தினர்.

அவர்களில் ஒருவன் அவளுக்கு சிகரெட்டை எடுத்துத் தந்தான். என்னைப் பொருத்தவரை அதுவே ஒரு சிறிய பரிசுபோலத்தான். ஏனென்றால் என் அப்பா மட்டுமின்றி எனக்குத் தெரிந்த எல்லாருமே அதைப் புகைத்தனர். ஆனால் பெக்கி வேண்டாம் என்பதாக மறுத்தபடி தலையை அசைத்து, தான் புகைபிடிப்பதில்லை என்று வேதனை படர்ந்த குரலில் கூறினாள். வாயினுள் இட்டு அதக்கும் இனிப்புப் பொருளான ‘கம்’ மை  இன்னொருவன் அவளிடம் கொடுத்தபோது அவள் அதை வாங்கிக்கொண்டாள்.

அங்கு என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரிய வழியே இல்லை. ‘கம்’ மைக் கொடுத்த இளைஞன் தன் சட்டைப் பைக்குள் கைகளைவிட்டுத் துழாவியபோது அங்கு நின்ற என்னைக் கவனித்ததும், “பெக்கி, இங்கு ஒரு சிறுமி மாடிக்குப் போவதற்காக நிற்கிறாள் என்று நினைக்கிறேன்” என்றான்.

இதைக் கேட்டதும் எனக்குத் தன் முகத்தைக் காட்ட விரும்பாதவளாக பெக்கி தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அந்த இடத்தைக் கடந்தபோது வாசனைத் திரவியத்தின் நறுமணம், சிகரெட் வாசம், ஆண்மை நிரம்பிய கம்பளிச் சீருடையிலிருந்த வாடை, கனத்த காலணிகள் வாசம் ஆகியவை கலந்து வீசின‌.

நான் என் மேற்சட்டையை அணிந்தபடி கீழே வந்தபோது அவர்கள் அப்போதும் அங்கேயே இருந்தார்கள். ஆனால் நான் இறங்கிவருவேன் என்று தெரிந்து அவர்கள் என்னை எதிர்பார்த்திருந்ததால் நான் அவர்களைக் கடந்து செல்லும்போது அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். அதே நேரத்தில் பெக்கி சத்தமாக மூக்கை உறுஞ்சியதும் அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த இளைஞன் அவளுடைய காலின் மேற்புறத்தை வருடிவிட்டான். அப்போது அவளுடைய ஸ்கர்ட்டும், கால்களின் மேற்பகுதியில் இருந்து பாதம்வரை நீண்ட காலுறைகளைப் பிணைத்திருந்த பட்டையும் என் கண்ணில்பட்டன.

நீண்ட காலத்திற்கு அந்தக் குரல்கள் என் நினைவில் இருந்தன. அவற்றைப் பற்றி நான் தீவிரமாக யோசித்தேன். பெக்கியின் குரல்களை அல்ல. அந்த இளைஞர்களின் குரல்களை. போரின் ஆரம்பக் கட்டத்தில் ஆல்பர்ட் துறைமுகத்தில் முகாமிட்டிருந்த விமானப்படை வீரர்கள் சிலர் இங்கிலாந்திலிருந்து வெளியேறி, ஜெர்மானியர்களோடு போரிடுவதற்காக அங்கு பயிற்சி மேற்கொண்டிருந்தது எனக்கு இப்போது தெரியவந்தது. பிரிட்டனின் சில பகுதிகளில் இருந்த அந்த   மென்மையான, கவர்ச்சியான உச்சரிப்புதான் ஒருவேளை என்னைக் கவர்ந்ததா என்று நான் யோசித்துப் பார்த்தேன். ஒரு பெண்ணை, அவள் மிக அருமையானவள் என்பதற்காகவும், ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும்சரி ஒருவருக்கு இவ்வளவு மதிப்பளிக்கப்படுவதும், ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் இப்படிப் பேசுவதும், ஒரு பெண் இவ்வாறு நடத்தப்படுவதும் என் வாழ்நாளில் அதுவரை நான் கேட்டிராத, பார்த்திராத ஒன்று என்பதுமட்டும் நிச்சயம் உண்மை. அவளை வந்தடைந்திருக்கிற அந்த இரக்கமற்ற விஷயம் எதுவாக இருந்தாலும், அது ஏதோ ஒரு வகையில் சட்டத்துக்குப் புறம்பானது, ஒரு பாவச் செயல்.

பெக்கி அழுவதற்கான காரணமாக நான் அப்போது எதை நினைத்தேன்? அதைப் பற்றி எனக்கு அப்போது பெரிதாக ஆர்வமில்லை. நானொரு தைரியசாலி இல்லை. பள்ளியிலிருந்து முதல்நாள் வீட்டிற்கு வரும் வழியில் சக மாணவர்களால் கூழாங்கற்களை வீசித் துரத்தி அடிக்கப்பட்டபோது நான் அழுதேன். என் மேசை படுமோசமாக, அசுத்தமாக இருந்ததை அந்த  நகரத்துப் பள்ளியின் ஆசிரியை வகுப்பில் அனைவர் முன்னும் என்னை நிற்க வைத்துச் சொல்லிக் காட்டியபோது நான் அழுதிருக்கிறேன். அந்தப் பிரச்சனை பற்றி ஆசிரியை என் அம்மாவிற்கு ஃபோன் செய்தபோது, ​​என் அம்மா நான் அவளுக்கு நற்பெயர் பெற்றுத் தராததை நினைத்து ஃபோனை வைத்த பிறகு, அழுது கொண்டிருந்தாள். சிலர் இயற்கையாகவே தைரியசாலிகளாகவும்  மற்றவர்கள் கோழைகளாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. பெக்கியிடம் யாரோ  ஏதோ சொல்லியிருப்பார்கள். என்னைப் போல் எதற்கும் கவலைப்படாத சுபாவம் அவளுக்கு இல்லாததால் அவள் மூக்குறிஞ்சியபடி அழுது கொண்டிருந்திருக்கக்கூடும்.

பெக்கி அழுததன் பின்னணியில் அந்த ஆரஞ்சு நிற உடையணிந்த பெண்தான் இருந்திருக்கவேண்டும் என்று நான் நினைத்ததற்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தக் காரணமும் இல்லை. ஆனால் அது அவள் இல்லையென்றால் நிச்சயமாக வேறு ஏதாவது ஒரு பெண்ணாக இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் அது ஒரு ஆணாக இருந்திருந்தால், அங்கிருந்த விமானப்படை இளைஞர்களில் எவனாவது ஒருவன் அப்படிச் செய்தவனை வாயை மூடச் சொல்லியோ, வெளியே இழுத்துப் போட்டு அடித்தோ நிச்சயமாகத் தண்டித்திருப்பான்.

எனக்கு ஆர்வம் இருந்தது பெக்கியின் மீதல்ல, அவளது கண்ணீரின்மீதோ அவளது ஒழுங்கீனமான தோற்றத்தின்மீதுகூட இல்லை. அவள் எனக்கு என்னை அதிகமாக நினைவுபடுத்தினாள். அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தவர்களை நினைத்துத்தான் நான் ஆச்சரியப்பட்டேன்.  அவள் முன் மண்டியிட்டுத் தாங்கள் அவளுடைய அடிமைகள் என்பதாக அவர்கள் எப்படித் தங்களைப் பிரகடனப் படுத்திக்கொண்டனர் என்று தோன்றியது.

அவர்கள் அப்போது என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்? குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பெரிதாக எதுவும் இல்லை. “பரவாயில்லை” என்றுதான் சொன்னார்கள். “பரவாயில்லை, பெக்கி! ” என்றார்கள். “பெக்கி, பரவாயில்லை, பரவாயில்லை” என்று மட்டுமே சொன்னார்கள்.

அவர்களுடைய அந்தக் கருணை, யார் வேண்டுமானாலும் மற்றொருவரிடம் அப்படிக் கருணையுடன் இருக்கமுடியும் என்பதைக் காட்டும்வகையில் இருந்தது.

ஏராளமானோர் கொல்லப்பட வாய்ப்புடைய பணியான குண்டு வீசுவதில் பயிற்சிக்காக எங்களுடைய நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இந்த இளைஞர்கள், கார்ன்வால் அல்லது கென்ட் அல்லது ஹல் அல்லது ஸ்காட்லாந்தின் இயல்பான உச்சரிப்புகளில் எதில் வேண்டுமானாலும் பேசியிருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் ஒருவிதமான ஆசீர்வாதத்தை, அந்தக் கணத்துக்கான ஒரு ஆசீர்வாதத்தை உச்சரிக்காமல் அவர்களால் வாயைத் திறக்கமுடியாது என்று எனக்குத் தோன்றியது. அவர்களுடைய மொத்த எதிர்காலமும் பேரழிவுடன் பிணைக்கப்பட்டிருந்ததாகவோ, அவர்களுடைய இயல்பான வாழ்க்கை ஜன்னலுக்கு வெளியே பறந்துபோய்த் தரையில் அடித்து  நொறுக்கப் பட்டதாகவோ எனக்குத் தோன்றவில்லை. அவளுக்குக் கிடைத்த அந்த ஆசீர்வாதத்தைப் பற்றியே நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அத்தகைய ஒரு ஆசியைப் பெறுகின்ற இடத்தில் நாம் இருப்பது எவ்வளவு அற்புதமானது. அதைப் பெறச் சிறிதும் தகுதியற்றவளான இந்த பெக்கிக்கு அது கிடைக்க எப்படிப்பட்ட விசித்திரமான ஒரு அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்த்திருக்கிறது.

அதன் பிறகு எவ்வளவு நேரம் நான் அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியாது. குளிராகவும் இருளாகவும் இருந்த என் படுக்கையறையில், ஊஞ்சலை அசைத்துக் குழந்தையை உறங்கவைப்பதுபோல என்னை அவர்கள் தூங்கவைத்தனர். நான் நினைத்தபோது என்னால் அவர்களை வரவழைக்கமுடியும். அவர்களுடைய முகங்களையும் குரல்களையும்கூட வரவழைக்கமுடியும். அட! முன்னைவிட இன்னும் அதிகமாக, அவர்களுடைய குரல்கள், தேவையற்ற மூன்றாம் நபரின் மீது இல்லாமல், இப்போது என்னை நோக்கித் திரும்பின. அவர்களுடைய கைகள் ஒல்லியான என் தொடைகளை ஆசீர்வதித்தன. அவர்களுடைய குரல்கள் நானும் அன்பிற்கு தகுதியானவள் என்று எனக்கு உறுதியளித்தன.

அதுவரை பெரிதும் எழுச்சியுறாதிருந்த என் அதீதக் காமக் கற்பனைகளுக்குள் புகுந்த அவர்கள், பிறகு அங்கிருந்து போய் விட்டிருந்தனர். அப்படிப்போன சிலர், பலர், மீண்டும் திரும்பி வரவேயில்லை.

* ஆசிரியர் குறிப்பு:

ஆலிஸ் ஆன் மன்ரோ (1931) ஒரு கனடிய சிறுகதை எழுத்தாளர் ஆவார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மன்ரோவின் படைப்புகள் சிறுகதைகளின் கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, காலத்தை முன்னோக்கியும் பின்னோக்கியும் நகரும்போக்கில் எழுதுவது இவருடைய எழுத்துவகை.

தமிழாக்கம் : கயல் எஸ்

கயல் எஸ்

வேலூர், முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கயல், வணிகவியல், இதழியல், வணிக மேலாண்மையியல் ஆகிய மூன்று துறைகளில் முதுகலைப் படிப்பும், வணிகவியலில் எம்.ஃபில் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொழிலாளர் சட்டங்கள் குறித்த பட்டயப் படிப்பும், தகவல் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.

கல்லூஞ்சல்  (2015) மழைக் குருவி (2016) ஆரண்யம் (2018) ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.


‘பழைய கடவுளரும் புதிய துர்தேவதைகளும்: சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள்’, ‘கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் 2022 ஆம் வருடம் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

One thought on “குரல்கள்-ஆலிஸ் ஆன் மன்ரோ

  1. ஆலிஸ் மன்றோ, கனடாவின் மூத்த எழுத்தாளர். சிறுகதைகள் மட்டுமே எழுதினார். இவருக்கு நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்று பல ஆண்டுகள் முன்பிருந்தே சிபாரிசு செய்தவர்களில் முக்கியமானவர், கனடாவில் வாழும் நமக்கு நன்கு தெரிந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள். அவர் விரும்பியபடியே கடைசியில் நோபல் கிடைத்துவிட்டது மன்றோவுக்கு.

    கிட்டத்தட்ட அ. முத்துலிங்கமோ, எஸ். இராமகிருஷ்ணனனோ எழுதும் சிறுகதைகளின் பாணியிலேயே மன்றோ எழுதியிருப்பது, ‘கயல்’ மொழிபெயர்த்த இந்தக் கதையைப் படித்தபோது எழுந்த முதல் உணர்வு. (வேறு மாதிரிக் கதைகளையும் மன்றோ எழுதியிருக்கக்கூடும். ஆனால் ஆங்கிலத்தில் சிறுகதை படிப்பது மிகவும் அயர்ச்சியான விஷயம் என்பது என் அனுபவம்).

    கயல் அவர்களின் மொழிபெயர்ப்பு உண்மையிலேயே அற்புதம். கதையின் ஜீவனை அனாயாசமாகக் கொண்டுவந்து விடுகிறார். பாராட்டுகள்! – இராய செல்லப்பா (chellappay@gmail.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *