இதயத்தின் அகவெளியை தரிசித்தேன்.
தசையும் நரம்பும் இரத்தமும் நிரம்பிய இதயமா அது? இல்லை… இருளில் ஒளியாகவும் ஒளிக்குள் இருள்செறிவாகவும் மறைந்திருக்கும்.
பெளதீக இதயம் தனது இறுதித்துடிப்பை நிறுத்தும்வரை கடுமையான வலி. Arrhythmia என்பதை சீரற்ற இதயத்துடிப்பு என்றழைப்போம். உச்சத்திலிருந்து படிப்படியாக சரிந்து சட்டென்று இறுதி பெருவெடிப்பு. அபானவாயு வெளியேற்றம் போல்…
நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்கும் காற்று திடீரென வெளியேறுகையில் கிடைக்கும் பூரண விடுதலை. பொருந்தாக் காலணியைக் கழட்டி எறிவதினால் லபிக்கும் சுகம். இறுக்கம் தளர்ந்த இலகுவான ஓய்வுநிலை. அப்படியான ஒரு நிம்மதியை எப்படி எந்த வார்த்தையில் சொன்னாலும் அது இல்பொருள் உவமையாகி விடும். எதிலும் பொருந்தாது, எவருக்கும் புரியாது.
கடும்கோடை வெயிலில் இருசக்கர வாகனத்தில் நெடுஞ்சாலை பயணம். வழியில் ஏதோவொரு இடத்தில் மரத்தின் அடர்நிழல் தரும் குளிர்ச்சி… சிறிது நேரமே என்றாலும் அடாடா அது என்னவொரு இதம். உணர்ந்தவர்களுக்கே அதனருமை புரியும். ஆனால் இங்கு எதுவும் யாரும் ஓய்ந்திருப்பதில்லை.
வாழ்வு என்பது இடைவிடாது நில்லாது இயங்குதல். நிழல்பிடியிலிருந்து விலகி திரும்பவும் வெயில் பரப்பில் பயணமாக வேண்டிய கட்டாயத்தின் எரிச்சல். உன்னதத்தை இழக்கும் வேதனையோடு ஊழ்வினையையும் எதிர்கொள்ளும் நிலை…
நெஞ்சின்மீது மென்மையான மின்தட்டைகளால் ஒத்தியெடுக்கும் உயிர் முத்தத்திற்கான ஏற்பாடுகள் முடக்கிவிடப்பட்டன.
“Electrical cardioversion ரெடியா? செக்இட், செக்இட் சிஸ்டர்… செக்இட்…”
மங்கலாகத் தெரியும் கோளவடிவ முகம். அடடே இவர் எனது மனைவியின் நண்பர்!? மருத்துவர் ஏகாவின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்பியது. அவரது புருவத்திலிருந்து விழப்போகும் துளியை செவிலியர் துடைத்து விடுவதைக் காண்பதற்குள் இருள்வெளியின் காதல் கரங்கள் எனது உயிர்கரத்தை அழுத்துவதும் இறுக்குவதுமாக போக்குக் காட்டியது. அறுவை சிகிச்சைக்கூடம் முழுவதும் பதற்றம்.
தெளிவான செயல்பாடுகள் வழியே பிரவாகமாகும் ஒலி ரூபங்கள் பிரித்தறியாதவாறு தெளிவற்றதெனினும் ஏகாவின் குரலை மட்டும் தனித்து செவிமடுக்கிறேன். அவர் எவ்வொன்றுக்கும் காட்டுக் கூச்சல் போடுகிறவர்… சிரிப்பதற்கு முயற்சித்தேன்.
“…டாக்டர் கோபன்…” எடுத்தெடுப்பில் ஏகாவின் டெசிபல் உயர்ந்தது.
எனது சிரிப்பை பார்த்துவிட்டாரா? தெரியவில்லை… அவரது குரல் தெளிவாகவே பிசிறின்றி கேட்கிறது. சிலநேரம் உதட்டசைவுகளை மட்டும் காண்கிறேன். எனது விழித்திரைகள் மூடியிருப்பினும் சத்தமில்லாபோது இப்படியாகத்தான் நினைத்துக் கொள்கிறேன்… அதில் யாதொரு சிரமும் பொருத்தமின்மையும் கிடையாது.
“ஒருவேளை எஸ் வி டி? (SVT – Supraventricular Tachycardia).”
“இல்லை இல்லை… He is a teetotaler…”
என் காதில் TEE-TOH-tuh-ler… என ஒலிப்பிரிகையடைந்து நீள்கிறது. உண்மையில் இதுவே சரி… நான் உச்சரிப்பு குறித்து கூறுகிறேன்.
மருத்துவர் திரிலோக்கி எனது மனைவியின் நண்பர் என்றாலும் என்னை முழுமையாக அறிந்தவர் ஆகிட முடியாது… இதனிடையே எங்கிருந்தோ தவழ்ந்து வரும் ஸ்ட்ராங் காபியின் நறுமணம் என் நாசிகளுக்குள் நுழைந்து மூளையை மலரச் செய்கிறது.
“இப்பொழுதெல்லாம் ஒழுக்கசீலர்களுக்குத்தான் வண்டிவண்டியாக ஒவ்வாமை வந்து சேர்கிறது.”
ஏகாவின் நகைச்சுவையோ தீர்க்க தரிசனமோ கேட்பாரற்று புறவெளியில் கலந்ததும், விபரீத சுவாசம் உச்சமடைந்தது. சரியாகச் சொன்னால் அந்த நொடியில்… இதயத்தின் அகவெளியை தரிசித்தேன்.
தைத்திரீய உபநிஷத் கூறுகிறது. “அம்ருதோ ஹிரண்மய – அழிவில்லாத பொன்னொளி”. அது… இதயத்தின் உள்வெளியா…? இல்லை… உணரும் உணர்வைக் குறிக்கிறதா?
அகவெளியின் உயர்வு நவிற்சி அம்ருதோ ஹிரண்மய!
ஏன் இருக்கக்கூடாதா? வாழ்வின் கொண்டாட்டம் இரசனையில் தானே இருக்கிறது.
“கோபன்… கோபன்…” கூடவே மார்புக்கூட்டின் மீது தொடரும் மின்சார முத்தம்.
காதுகளில் இரைச்சல். ரீங்காரம்.
இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ஒலிகளற்ற ஆழத்தில் மீண்டும் மூழ்கிப்போகிறேன். ‘சரி சிரமப்படாதே சென்றுவா’ என்று என்னை விட்டுவிடவா போகிறார்கள்… திரும்பவும் மின்சார முத்தம். இம்முறை நிகழ்வுலகிற்கு மீளும் துவக்கத்தில் எஃகு முனைகள் உரசும் கீரிச்சிடல்… எனது உடல் துள்ளியெழுந்தது கட்டில் தொட்டதின் வெளிப்பாடு? இருக்கலாம்.
வலிகளற்ற சுகமான நிலையிலிருந்து electrical cardioversion கைப்பிடித்து அழைத்துவருவதில்லை இழுத்துவருகிறது. உயிர் பிடுங்கும் முத்தத்தின் சுவை இம்முறை அதிதம்.
“கோபன்… கோபன்… கமான் மேன். உன்னோட மனைவி ரபலா கேட்கற கேள்விக்கு நான் பதில் சொல்லணும்ய்யா… அவரசம் காட்டாதே… யெஸ்… யெஸ்… அப்படித்தான் குட். ரிதம் நார்மல்… போதும் போதும் ஈஸி. டாக்டர் சுவாமிநாதன் நீங்க பக்கத்துல இருந்து அப்சர்வ் பண்ணுங்க. மானிட்டர் கவனத்துல இருக்கட்டும். ஒகே…”
“டாக்டர் அடுத்து பதினேழாம் நெம்பர் பேஷண்ட் வெயிட்டிங்… “
“ஒகே. சிஸ்டர் பேஷண்டை ஷிப்ட் பண்ணுங்க. குயிக் குயிக்…”
உயிர் விடுபடுதலின் ஒத்திகை நிறைவுற்றதா… களைப்பாறுதலுக்கு ஓர் இடைவேளை கேட்கிறதா? மென்மையும் நீளமும் உடைய துல்லியமான இதயத் துடிப்போசையின் மந்திர லயம்… ஆஹா… இதுவொரு அற்புதமான தருணம். இப்பொழுது கவனம் செலுத்துவதற்கு இதைவிட வேறென்ன இருக்க முடியும்.
வாழ்வு என்பதற்கு எத்தனை எத்தனை விளக்கங்கள் உருவகித்துக் கொள்கிறார்கள். எதை எதையோ துரத்தும் முடிவில்லாதத் தேடல்கள். உண்மை எது? பொய்மை எது? என்று இறுதி சுவாசத்தின்போது தானே புரிகிறது. முதல் சுவாசம் துவங்கி இறுதி சுவாசம் வரை… இடையில் எத்தனைக்கோடி உள்மூச்சு வெளிமூச்சு விளையாட்டு. கவனமின்றி நுட்பத்துடன் நிகழும் விளையாட்டு…
அழும்போது, சிரிக்கும்போது, கோபப்படும்போது, உண்ணும்போது, உறங்கும்போது புணரும்போது எது நிகழ்ந்தாலும் எப்படியிருந்தாலும் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் இடைவிடாது நிகழ்த்திக் கொள்கிறது. கடைசியில் மரணத்துடன் சல்லாபிக்கும் கணத்திலிருந்தே சுவாசத்தின் உண்மையான மகத்துவம் புரிபடத் துவங்குகிறது. அப்படியும் அது எல்லோருக்குமா? என்றால் இல்லை.
ஓசையால் உருவானது உலகம் என்கிறார்கள். அதை நானறியேன். ஆனால் எனது புறஉலகம் ஓசைகளால் நிறைந்திருப்பதையும் அது இல்லாமல் அதன் வாழ்வானது இயங்காது என்பதை மட்டும் அறிவேன். புறஉலகத்தின் எதிரொலியால் இப்பொழுதும் எனது அகஉலகம் சப்தத்தின் மூலமே உயிர்த்தெழுகிறது.
“ஏஷ சர்வேச்வர ஏஷ சர்வஜ்ஞ ஏஷோ அந்தர்யாம் யேஷ யோனி:
சர்வஸ்ய ப்ரபவாப்யயெள ஹி பூதானம்”
ஆயுர்வேத மருத்துவர் ஆச்சார்யர் நாகேந்தர் ஒரு துரதிருஷ்டக்காரர். மாஹே மருத்துவக்கல்லூரியின் முதல்வராகயிருந்து கடந்த வாரம் பணி ஓய்வுப் பெற்று அவரது பூர்வீகமான புதுச்சேரிக்கு வந்ததும் அவருக்கு கோவிட் பொன்னாடை…
எனது பக்கத்து படுக்கை. சகநோயாளி. நாகேந்தர் ஒருவகையில் நல்ல நண்பரும் கூட. நல்ல நட்புக்கு பலவருடங்கள் தேவையில்லையே. என்னவொன்று எனக்கு நட்பாக வருபவர்கள் எல்லோருக்கும் இருபது வயது கூடுதல்… இது சாபமா? வரமா? என்கிற பட்டிமன்ற விவாதங்களில் கட்டுப்பாடற்று சூது செய்யும் மனம்.
குறிப்பாக பணி பகிர்ந்தளிப்பில் சித்த மருத்துவர்களுக்கு கோவிட் கட்டுப்பாட்டுச் சேவை மையத்தில் பகல் நேரத்தில் வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பு. எனக்கு இரவு பணி. அதுவொன்றும் பிரச்சனையில்லை. கூடுதல் செளகரியம். மனைவியும் மருத்துவர் என்பதால் விதி சதி செய்வதற்கு தோதான நேரத்தை தவறவிடவில்லை. கோவிட் விதிமுறைகளால் ஹைதராபாத்திலிருந்து எனது மனைவியால் இங்கு வரமுடியவில்லை.
அதுவும் தவிர வேறுயாரும் இரவில் பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. கோவிட் ஊரடங்கில் பகலே மயான அமைதி. இரவு? அதனாலென்ன எனக்கு மயானம் பிடிக்கும். இருளும் பிடிக்கும். உனது அகவெளி தரிசனத்தில் நாதம் கேட்பாய்… நாகேந்தர் கூறியது இதைத்தானா?
அனைத்திற்கும் தலைவன். அனைத்தும் அறிபவன். அனைத்து உயிர்களையும் உள்நின்று இயக்குபவன். அனைத்திற்கும் மூலக்காரணன். உயிர்களின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமானவன். எவனோ ஒருவன்?
அவன் யாராயிருந்தால் என்ன? முகமறியாத அந்த எவனோ ஒருவன் மீதுதான் அனைத்தும்… எவ்வளவு எளிதாக நமது சுமைகளிலிருந்து தப்பித்துக்கொள்கிறோம். இது ஞானப்பாதையா? இல்லை தந்திரமா?
கொள்ளிக்கு ஆண்பிள்ளை, நெய் பந்தம் பிடிக்க பேரப்பிள்ளை. மரபுகளின் இரண்டு இச்சைகளையும் பெருந்தொற்று காலம் நிராசை ஆக்கிவிட்டது. வைகறையில் பாட்டி… அந்திப் பொழுதில் அம்மா.
பெற்றவளுக்கும் அவளைப் பெற்றவளுக்கும் வாய்க்கரிசி போடாது அருகேயும் நெருங்க விடாது புதுவிதமான சடங்கு நெறியை யார் வகுத்தார்கள். சமூகத்தின் முகத்தை கிழித்தெறியும் பெருந்தொற்று மரபுகளை உடைத்தெறிய வினோதமான கிளர்ச்சியை நடத்துகிறதா?
முழுவதும் பிளாஸ்டிக் பைக்குள் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் முகம் காட்டாத இருவர்களின் உடல்களையும் தூரத்தில் நின்றபடி பார்த்து கதறினேன்.
“இதற்கிடையே என்னை ஏன் அழைத்துச் செல்லவில்லை…?” மூர்க்கத்துடன் வெளிப்படும் அப்பாவின் கேள்வி விடையறிந்ததா? அறியாததா? அவரது கோபம் நியாயமானது என்றாலும் கொரானா சிகிச்சையில் இருக்கும் அவரை எப்படி உடன் அழைத்துச் செல்வது?
எனது காதலுக்கு செம்முகம் காட்டியவருக்கு கேள்விகள் எழுப்புவதில் எந்தவொரு அசெளகரியமும் இல்லை. அப்படியே இதில் எனக்கும் யாதொரு பழிவாங்குதலும் இல்லை என்கிற புரிதல் அவருக்கும் இருந்திருக்க வேண்டும். பெருந்தொற்று காலம் தனது நடைமுறைகள் வழியாக எல்லோரையும் எதற்காகவோ பழித்தீர்த்துக் கொள்கிறது.
அடுக்கடுக்காய் பலவிதங்களில் நான் ஒருவனே எவ்வளவு அழுத்தங்களை தாங்குவது. முகமறியாத அந்த எவனோ ஒருவன் உதவினால் நன்று…
இரண்டு அக்காக்களும் குடும்பம் குழந்தைகளை விட்டுவிட்டு? உதவிக்கு வந்திருக்கலாம்… பயம் யாரை விட்டது. உலகமே பயந்துதானே கிடைக்கிறது.
“உன் பெயரில் தானே வீடு?”
“ஏன் உங்களுக்கு திருமணத்தின்போது ஆளாளுக்கு நூறு பவுன் தரவில்லையா?”
“உன்னைத்தானே அப்பா மருத்துவம் படிக்க வைத்தார்?”
புதுச்சேரி அரசு மருத்துக்கல்லூரியில் நீட் தேர்வுமுறை அமலாக்கத்திற்கு முன்பான கலந்தாய்வு மூலம் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்த இடம். பெரும்பணம் செலவாகி விடவில்லை. தனியார் கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்காகும் கட்டணம். அவ்வளவுதான் செலவு. பிறகு எனது சுயமுயற்சியால் திறமையால் ஜிப்மரில் பெற்றிட்ட மேற்படிப்பு வாய்ப்பு. குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர். பெரிதாக என்ன செலவாயிற்று… அவர்கள் படிப்புக்கு யாரும் குறுக்கே நிற்கவில்லையே. புரிந்துகொண்டும் என்னோடு சமர் புரியும் அன்பு தமக்கைகள்.
இடைவிடாத விவாதத்தில் சோர்வுதான் கவிகிறது… மற்றவர்களுடன் மட்டுமல்ல. சிலசமயம் என்னுடனும்தான்.
ஒருநாள் சந்தேகத்துடன் மேற்கொண்ட சுயப்பரிசோதனையின் முடிவு பாசிட்டிவ் என்றது. அதிர்ச்சி ஒன்றுமில்லை எதிர்பார்த்ததுதான். உடன்பிறப்புகள் வராததும் நல்லதென்று நினைத்தேன்.
யாருமில்லாத வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதில் மருத்துவமனையில் சேரலாம் கூடவே அப்பாவையும் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் எனது எண்ணம் ஈடேறவில்லை. மருத்துவமனையில் மீண்டுமொருமுறை சோதிக்கும்போது முடிவுகள் கோவிட் இல்லை என்று பதிலளித்தன… எல்லாம் ஒரே குழப்பம்.
வருடத்தில் மூன்று மாதங்கள் இமயம் முழுவதும் சுற்றித் திரிபவனுக்கு சமவெளியில் இதயம் இடறித் தடுமாறுவது ஏன்?
மார்பின் கதிரியக்கப் படம் கோவிட் இல்லை என்று உறுதி செய்தாலும் அது உடனடி இதய அறுவை சிகிச்சைக்கான அபாயத்தின் அறிகுறியை இனம் காட்டியது. நான் பிரச்சனையாக கருதுவது யாதெனில் என் ரபலா இதுவரை வரவில்லை. இன்றிரவு வந்துவிடுவாள் என்று ஏகா கூறியது நினைவிருக்கிறது.
விமான நிலையத்திலிருந்து யார் அவளை இங்கு அழைத்து வருவார்கள்? ரபலா கிழக்கு கடற்கரைச் சாலை வழியே பயணிப்பதில் பெருவிருப்பம் கொண்டவள். இப்பொழுது எவ்விதமான மனநிலையில் இருப்பாள்… விடைபெறுவதற்கு முன் நான் அவளிடம் பேச முடியுமா? நான் ஏன் இவ்விதம் நினைக்கிறேன். என்னால் இதிலிருந்து மீளமுடியாதா…? எல்லாம் முடியப்போகிறதா? இதய அறுவை சிகிச்சையில் ரபலாவின் நிபுணத்துவம் உலகறியுமே… நானுமறிவேன். ஆனாலும் எனது உள்ளுணர்வு…
நைந்துப்போன எனது தோல்துருத்தி சிரமத்துடன் சுருங்கி விரிகிறது. கடிகாரத்தின் மூன்று துடிப்புகளுக்கு இடையில் இதயத்தின் ஒற்றைத் துடிப்போசையை முந்தும் மருத்துவ உபகாரணங்களின் பீப் பீப் ஒலி. அதுவொன்றும் சிதடிபூச்சி ஒலியைப் போல் ரம்மியமானதல்ல. அதுவொரு அபஸ்வரம்… ஆமாம் அபாயஸ்வரம்.
சில்வண்டு என்றும் சிதடிபூச்சி என்றும் அழைக்கப்படும் சுவர்க்கோழிகள் உடலுக்கு அடியில் இருக்கும் தசைகளை உள்ளே – வெளியே விநாடிக்கு நூறுமுறை வரையிலும் சுருக்கி விரிப்பதால் தொடர்ச்சியான ரீங்காரத்தை உருவாக்குகின்றன. இப்பொழுது நானும் ஒருவகையில் சிதடிபூச்சியைப் பிரதிபலிக்கிறேன்…
இமய கானகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிதடிபூச்சிகள் ஒரேநேரத்தில் சேர்ந்திசைக்கும். அவைகளின் அதிர்வலையில் கானகம் முழுவதும் நனைந்திடும், ஆனந்தத்தில் கூத்தாடும். நானும் அதிலிருந்து தப்புவதில்லை. மாறாக இங்கு பெருந்தொற்றால் இதுவரையில் பறிபோன பல்லாயிரம் உயிர்களின் நுட்பமான அதிர்வுகள் என்னை இப்பொழுது சூன்யத்திற்குள் இழுப்பதற்கு முயற்சிக்கின்றன.
எனது இழப்பு ரபலாவின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அவள் வேறு யாரையேனும் மறுமணம் புரிவாளா? இல்லை இல்லை அவள் நிச்சயம் புதுவாழ்வை துவங்க வேண்டும்.
சிதடிபூச்சிகளின் ஆனந்தக் கூக்குரல் தனது இணைக்கான அழைப்பொலி என்றாலும் கூடவே தனது பதினெழு ஆண்டுகால மெளனத்தின் அனுபவங்களையும் சேர்த்தே கட்டுடைக்கின்றன. பெண் சிதடிபூச்சி வெளியிடும் முட்டைகள் யாவும் ஒன்றரை மாதத்தில் பொரிந்து விடுகின்றன. ஆனாலும் தரையில் விழும் இளம் பூச்சிகள் மண்ணுக்குள் நுழைந்து மரத்தின் வேர் முனைகளில் தங்கி தனக்கான உணவை உண்டபடி வெளியே வராமல் கிட்டத்தட்ட 13 -17 ஆண்டுகள் மெளனத்தில் வாழ்கின்றன.
ரபலாவும் நானும் பதினாறு வருடங்கள் காதலித்தோம். கடந்த மூன்று மாதங்கள் மட்டுமே தம்பதிகளாக வலம் வந்தோம். இப்பொழுது மெளனத்துடன் பிரிந்து செல்வது மட்டுமே… ரபலா…
பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மெளனவிரதம் களையும் சிதடிபூச்சிகள் தங்களது சக்திகள் முழுவதையும் திரட்டி ஒரு வாரம் முழுவதும் ஆத்ம கானத்தை இடைவிடாது இசைப்பதில் மும்முரமாகிகின்றன. கூடவே சந்ததிகள் உருவாக்கத்திற்கான செயல்களிலும் வேகமாக ஈடுபடுகின்றன. வாரத்தின் இறுதியில் புகார்கள் இன்றி இறந்தும் போகின்றன.
நான் மெளனத்தில் இருந்து துயிலெழுந்து விட்டேனா? இல்லை, இனிதான் ஆழ்ந்த நிச்சலனத்தின் கதகதப்பிற்குள் மூழ்கப்போகிறனா? எனது இதயம் தனித்தொதுங்கி விஸ்வரூபம் கொள்கிறது. அதில் எனக்கான பதிலை தேடுகிறேன்.
இரைச்சலும் அமைதியும், குழப்பமும் தெளிவும், விழிப்பும் தூக்கமும், பூமிக்கும் ஆகாயத்திற்கும், அங்கும் இங்கும் மாறிமாறி திரும்பிக் கொண்டிருக்கும்போது எனது நாசியோடு இணைக்கப்பட்டிருந்த சிறுகுழல் வழியாக அருவருப்பு ஊட்டும் வாயு உட்சென்றது. என்னை சூழ்ந்திருந்தவர்களின் இருப்பை உணர்ந்தவாறு ரபலாலின் நிர்மால்யமான முகத்தின் இறுதி சுவடுடன் சூன்யமானேன்.
மஞ்சுநாத்
பன்முகத்தன்மை கொண்ட தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
புதுச்சேரியைப் பூர்விமாகக் கொண்ட இவர் தற்போது புதுச்சேரி – பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். பள்ளிக் கல்வியை பண்ணுருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையிலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை வரலாற்று அறிவியலும், சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர் கல்வியும் நிறைவு செய்தவர்.
துடிப்பான ஊர் சுற்றியான இவரது பட்டியலில் இமயமலை சிகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் நீங்காமல் இடம் பெறுகின்றன. பாரம்பரிய தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மருந்து செய்யும் கலையில் திறன் பெற்றவர். தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது முதல் சிறுகதை தொகுப்பு “குதிரைக்காரனின் புத்தகம் (2021) ” முதல் கட்டுரைத் தொகுப்பு “டால்ஸ்டாயின் மூன்று கண்கள் (2022)” [அகநாழிகை வெளியீடு] இலக்கிய வாசகர்களின் கவனத்தை பெற்றள்ளன.